Tuesday, October 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28


முந்தைய பதிவு இங்கே!

26.
"ஒள்ளார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்." [264]

'இந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய சண்டை நடக்கப் போற மாரி ஒரு காட்சி எனக்குத் தெரிஞ்சுதுங்க.' எனச் சொல்லி நடந்ததை மீண்டும்
விவரித்தான் கந்தன்.

'வளக்கமா இது போல குறியெல்லாம் பூசாரி ஐயாவுக்குத்தானே வரும். முன்னப் பின்ன இந்தக் காட்டுக்குப் பளக்கமில்லாத ஒனக்கு வந்ததுதான் எனக்கு
ஆச்சரியமா இருக்கு. அதான் இதை நம்பறதா, வேண்டாமான்னு யோசிக்கறேன்' என்ச் சொல்லி முகவாயைத் தடவினார் தலைவர்.

எனக்கு இந்த உலக ஆத்மாவைப் பத்தித் தெரியும் எனச் சொல்ல நினைத்த கந்தன் வாயை அடக்கிக் கொண்டான்.

'இந்தக் காட்டுல, அதுவும் இந்த முத்துமலைப் பக்கம், இதுவரைக்கும் யாரும் வந்து சண்டையெல்லாம் போட்டதில்ல' எனத் தொடர்ந்தார் முத்துராசா.

'என் கண்ணுல பட்டதை நான் சொன்னேன். நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்' எனச் சொல்லியபடி எழுந்தான் கந்தன்.

ஒரு கையால் அவனை அப்படியே உட்காரும்படி கம்பீரமாக ஒரு சைகை செய்த முத்துராசா, சற்று தணிந்த குரலில் கூடியிருந்த மற்றவர்களுடன் தீவிரமாகப் பேசத் தொடங்கினார்.

கந்தனுக்கு இங்கே வந்ததே தவறோ என ஒரு பயம் பிடித்துக் கொண்டது!

சிறிது நேரத்துக்குப் பின், முத்துராசா அவனை நோக்கிப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

தான் சொன்னது சரிதான் என ஒரு நம்பிக்கை பிறந்தது இப்போது!

முத்துராசா அவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.


'ரொம்ப நாளைக்கு முன்னாடி எங்கேருந்தோ இந்தக் காட்டுக்கு ஒரு சித்தர் வந்தாரு. 'இங்க ஒரு பஞ்சம் வரப் போவுது. உடனே அம்மனுக்கு ஒரு பூசை போடுங்க'ன்னு
சொல்லிட்டு காட்டுக்குள்ள போயிட்டாரு. நாங்களும் உடனே ஒரு குறையும் வைக்காம ஒரு பெரிய பூசை போட்டோம்! ஒரே வருசந்தான். எல்லாம் சரியாயிருச்சு. அதுக்கப்பறம்,இங்க எல்லாமே ஒரு வரைமுறைக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்குது. இந்த எல்லைக்குள்ள எந்த ஒரு கெட்ட காரியமும் நடந்ததில்ல. ஆனா, அதே சமயம், இது மாரி நடக்கற சகுனத்துக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்குன்னும் எங்களுக்குத் தெரியும். காட்டுக்குள்ள நடக்கற எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்கு.
அதே போல, இதுக்கும் எதுவோ ஒரு காரணம் இருக்குன்னு பூசாரி கூட சொல்றாரு.'
எனச் சொல்லிவிட்டு தன் கூட இருந்தவர்களைப் பார்த்து,

'நாளையிலேருந்து, கொஞ்சம் கடுமையாவே நம்ம எல்லைக்குள்ள போக்குவரத்தையெல்லாம் கட்டுப்படுத்துங்க. சந்தேகப்படற மாரி யாராச்சும்
வந்தா, உடனே பிடிச்சுக் கட்டிப் போடுங்க' எனக் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

'இனி நமக்கு இங்கே வேலை இல்லை' எனத் தெரிந்து, கந்தன் மெதுவாக வெளியே வந்தான். நடந்தான்.

நடந்த அனைத்துமே அவனுக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்னியது.

தான் சொல்லியது தவறாகப் போயிருந்தால், தன் நிலைமையே ஆபத்தாயிருக்கும் என நினைத்தபோது, ஒரு பயம் தோன்றியது.

பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது.
.........இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா
நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா
நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு
சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா,
ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு
நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'..........

இப்ப நான் சொன்னதை ராசா நம்பாமப் போயிருந்தா, என் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். அப்படிப் போயிருந்தா, என்ன ஆயிருக்கும்?
ஒண்ணுமில்ல.சாமிக்கு நடக்கப்போறத மாத்தக் கூடாதுன்னு பட்டிருக்கும். அவ்ளோதான். ஆனாக்க, நான் நிம்மதியா போயிருப்பேன்.
வெறுமன ஊருல ஆடு மேச்சுகிட்டிருந்த நான், மதுரைக்கு வந்து, ஒரு பெரிய ஓட்டலையே நிர்வாகம் பண்ணினது,இந்தக் காட்டுக்கு வந்து பொன்னியைப் பாத்தது .... இது போதுமே.... நாளைக்கு செத்துப் போனாக்கூட நான் எதிர்பார்த்ததை விட அதிக்மாவே எனக்கு கடவுள் கொடுத்திருக்காருன்னு நிம்மதியா போயிருவேன்!

சிரிப்பு வந்தது கந்தனுக்கு. அப்படியே ஒரு பாறை மேல் உட்கார்ந்தான்.

திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. இலைகள் பறந்தன. மரங்கள் வேகமாக ஆடின.ஒரு பெரிய புழுதி மண்டலம் கிளம்பி அவன் கண்களை
மறைத்தது. காற்றின் வேகம் தாங்காமல் கந்தன் கண்களை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் பொறுத்து மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

அவன் முன்னே தெரிந்த காட்சி அவனை அப்படியே நடுங்கச் செய்தது!

இடையில் கட்டிய ஒரு காவித்துணியுடனும், ஒரு நீண்ட வெண்ணிற தாடியுடனும், கையில் ஒரு மூங்கில் கம்புடனும் ஒரு ஆறடி உயரமுள்ள
மனிதர் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு வெண்கழுத்துடன் கூடிய கழுகு ஒன்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது!


தன் கையில் இருந்த கம்பை அவன் முகத்துக்கெதிராக நீட்டியபடி, கொஞ்சம் கடுமையான குரலில் அவனைப் பார்த்துக் கத்தினார்!
'யார் இங்கே கழுகுங்களைப் பார்த்து குறி சொன்னது? நீதானா அது?'

கந்தன் ஒரு கணம் அவரது தோற்றத்தைப் பார்த்து நடுங்கினான். அதே நேரம் ஒரு இனம் புரியாத தைரியம் அவனுக்குள் சுரந்தது. இவரிடம்
துணிவாகப் பேசலாம் என ஏதோ ஒன்ரு உள்ளுக்குள் சொல்லியது.

தலையைக் குனிந்தபடியே, பணிவாகச் சொன்னான், ' அது நாந்தாங்க. ஒருவேளை அது உண்மையா இருந்தா இந்த காட்டுவாசிங்களை எல்லாம் காப்பாத்தலாமேன்னு தான்....'.

மூங்கில் கம்பு மெதுவாக இறங்கி அவன் முகவாய்க்கட்டையை நிமிர்த்தியது. வாகா மண்டையில போடறதுகுத்தான் நிமிர்த்தறாரு என நினைத்தான் கந்தன்!

அவன் மனம் ஒரு கணம் பொன்னியை நினைத்தது.
சகுனங்கள் எல்லாம் சரியாத்தான் சொல்லியிருக்கு. இதோ என் எதிரி என்னை இப்போ ஒரே போடா போட்டு என் கதையை முடிக்கப் போறார்.

'எப்பிடி உனக்கு அது தெரிஞ்சுது?' கம்பை அவன் மோவாயில் இருந்து எடுக்காமலே அடுத்த கேள்வி வந்தது.

இப்போதைக்குப் பிழைத்தோம் என்ற துணிவில், 'அதான் அந்தப் பறவைங்க என்கிட்ட சொன்னது மாரி எனக்குப் பட்டுது. இந்தக் காட்டை காப்பாத்துன்னு என்னைப் பாத்து சொன்னது போல எனக்குத் தோணிச்சு. அதன் சொன்னேன்' என்றான் கந்தன்.

'சாமி செய்ய நினைச்சதை மாத்தறதுக்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கு?'

'நீங்க சொல்ற சாமிதான் அவங்களைக் காட்டிச்சு. அந்தக் கழுகுகளையும் காமிச்சுது. அவங்க சொன்னதையும் எனக்குப் புரிய வெச்சுது. எல்லாம் சாமி எழுதின விதிப்படிதான் நடக்குது.' பயத்தில் பூசாரி சொன்னதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னான் கந்தன்.

ஒரு சிறிய புன்னகையுடன் அந்த மனிதர் கம்பை தரையில் ஊன்றியபடியே கந்தனைப் பார்த்துச் சொன்னார், ' எழுதினதை மாத்தறதுக்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. அடுத்த தடவை இது மாதிரி குறி சொல்றப்ப இதை நெனைப்புல வெச்சுக்க.'

'ஒரு சண்டை வரப் போகுதுன்னு மட்டும் தான் நான் பார்த்தேன். அது எப்பிடி முடியும், யாரு ஜெயிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது' எனச் சற்று பயம் கலந்த மரியாதையுடன் சொன்னான் கந்தன்.

வந்த மனிதரின் முகத்தில் ஒரு திருப்தி கலந்த சந்தோஷம் தெரிந்தது கந்தனின் இந்த பதிலால்.

'அது சரி, உன்னைப் போல ஒரு ஆளு இங்க, இந்தக் காட்டுல என்ன பண்றே?' என்று அன்புடன் கேட்டார்.

'நான் என் விதி என்ன சொல்லுதோ, அதைத் தேடிகிட்டு வந்திருக்கேன். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.' என்றான் கந்தன்.

'ஓ, அப்படியா?' எனச் சிரித்தபடியே அவனருகில் சென்று அந்தப் பாறையில் அமர்ந்தார் அந்த மனிதர்.

'நான் உன்னோட தைரியத்தை சோதனை பண்ணத்தான், கம்பை உன் முகத்துமேல வைச்சேன். தைரியம் இருக்கறவனுக்குத்தான் உலகத்தோட ஆத்மாவைப் புரியும்'

கந்தன் அவரை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான். உலக ஆத்மா என்ற சொல் அவனுக்கு ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணியது அவரிடம்!

'இவ்ளோ தூரம் வந்திட்ட அப்புறம், நீ பின் வாங்கக் கூடாது. காடு நல்ல இடம்தான். ஆனா, அதுக்காக இங்கேயே நீ தங்கிடக் கூடாது.
இங்கே ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஒரு சோதனை வரும்,
இன்னும் ஒரு நாளைக்குள்ள. அதையெல்லாம் தாண்டி, நீ உசுரோட இருந்தியானா, என்னை வந்து பாரு. எங்கேன்னு கேக்காத. உனக்கு வேணும்னா, உன்னால என்னைக் கண்டுபிடிக்க முடியும்.... வெள்ளைப்பாறை தாண்டி வந்தியானா.....' எனச் சொல்லியவாறே, பாறையிலிருந்து குதித்தார் அந்த மனிதர்.

விறு விறுவென நடந்து மறைந்தார்!

கழுகு அவர் தோளிலிருந்து கிளம்பித் தெற்கு நோக்கிப் பறந்தது.

கந்தன் சித்தரைப் பார்த்து விட்டதை உணர்ந்தான்!
*********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

முந்தைய பதிவு இங்கே!




25.

"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித்துணை." [635]

காலைப் பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவைச் சாத்தியபடியே வெளியே வந்தார் மாயன் பூசாரி.

கோயில்னா பெருசா ஒண்ணும் இல்லை.திண்ணை வெச்ச ஒரு பெரிய குடிசை. உள்ளே ஒரு மேடை. அதுமேல இரண்டு சாமி சிலைகள்.
பக்கத்தில் முனையில் எலுமிச்சம்பழம் சொருகிய ஒரு அருவாள். பெரிய அகல் விளக்குகள் இருபக்கமும். அவ்வளவுதான்!



நீண்ட உயரத்திலிருந்து பின்புலத்தில், கொல்லியருவி அழகாக விழுந்து கொண்டிருந்தது!

"ஆத்தா!எல்லாரையும் காப்பாத்து!" எனச் சொல்லியவாறே, திண்ணையில் உட்கார்ந்து, மடியில் கட்டியிருந்த ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் மடக்கி வைத்திருந்த புகையிலையை எடுத்து, ஒரு துண்டைக் கிள்ளி வாயில் அடக்கினார்.

காலைப் பூஜை முடிந்து, இனி மதியச் சாப்பாட்டுக்கு நேரம் இருந்தது! பேச்சுத்துணைக்கு எவரும் அகப்படுகின்றார்களா என ஒரு பார்வை விட்டார்.

தூரத்தில் கந்தன் வருவது தெரிந்தது.

'முத்துராசா வூட்டுல நேத்து அந்த வெள்ளைக்காரனோட பாத்த புள்ள தானே இது' எனக் கண்களைச் சுருக்கிக் கொண்டே பார்த்தார்.

வயது எழுபதுக்கு மேல் இருந்தாலும், கட்டுக் குலையாத தேகம். கறுத்த மேனியில் திரளான புஜங்கள். நரைத்த தலையில் அள்ளி முடித்து உயரக் கட்டிய அடர்ந்த சிகை. முறுக்கி விட்ட கட்டு மீசை வெள்ளையாக, அடர்த்தியாக, இந்த வயதிலும்!! மழித்து வழிக்கப்பட்ட தாடை. பார்த்தாலே ஒரு
கம்பீரம் கலந்த மரியாதை தரும் தோற்றம்.

'யாரப்போவ் அது! புதுசா வந்த புள்ளதானே! சித்த இங்க வாங்கய்யா! என்ன இவ்வளோ பரபரப்பா வரீங்க?' என மரியாதையோடு வரவேற்றார் பூசாரி.

'என்னமோ சண்டை வரப்போகுது. எனக்கு அப்படி ஒரு காட்சி தெரிஞ்சுது' என அவரிடம் ஒருவித அவசரத்துடன் சொன்னான் கந்தன்.

'காட்டுக்குள்ள வந்தாலே இப்படிப்பட்ட காட்சியெல்லாம் வரும், புதுசா வர்ற ஆளுங்களுக்கு!' எனச் சிரித்தார் பூசாரி.

'அப்படியில்லீங்க' எனச் சொல்லி தான் கண்ட, காட்சியை விவரித்தான் கந்தன்.

எந்த ஒரு காட்சியும்,... அது ஒரு ஓலையைப் படித்ததாலோ, இல்லை, மேகங்களின் அசைவைக் கணித்தோ, அல்லது, பறவைகளின் போக்கைக் கவனித்தோ,.... உலகில் நடக்கப்போவதைக் காட்டும் என்பதை உணர்ந்த மாயன் அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டார்.

காட்டில், மலையில், தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகும் சாதாரண ஆட்களும் உண்டு; அதையும் தாண்டி, இது போல சில
நிகழ்வுகளைக் கவனித்து, அதன் பொருளை அறியும் மனிதரும் உண்டு. அவர்கள்தான் பூசாரி போன்ற சிலர். காட்டுக்கே ராசான்னு இருக்கறவங்க கூட, இவர்களைக் கேட்காமால் எதுவும் செய்ய மாட்டார்கள்.
கடவுள் எல்லாவற்றையுமே நல்லதாகத்தான் எழுதியிருக்கிறார் என்றாலும், அதனை இது போன்ற சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஒரு தனி
அக்கறை, மதிப்பு, பயம், மரியாதை!

அப்படிப்பட்ட ஒருவராக இந்த மலைக்காட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மாயன் பூசாரி, இந்த விஷயத்தைக் கேட்டதும், சற்று நிமிர்ந்து
உட்கார்ந்தார்.

'என்ன சொல்றே நீ? கொஞ்சம் விவரமாச் சொல்லு' எனச் சற்று பதட்டத்துடன் கேட்டார்.

கந்தன் மீண்டும், தான் இரு கழுகுகள் பறந்ததையும், ஒரு கழுகு மற்றொன்றைத் தாக்கியதையும், அதே சமயம், ஒரு கூட்டம் ஆயுதங்களுடன்
இங்கு வருவது போல ஒரு காட்சி தன் கண் முன்னே தெரிந்ததையும் விவரித்தான்.

மாயன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.


பக்கத்தில் இருந்த ஒரு செடியில் இருந்து, கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கிள்ளி, தன் முன்னே போட்டார்.

'இந்த இலையப் பாத்து, அது எப்படி என் முன்னால விளுந்துதுன்னு பாத்து, என்ன நடக்கப் போவுதுன்னு நான் சொல்லிடுவேன்.
என்ன நடக்கப் போவுதுண்றது என் கையில இல்லை. அது சாமிக்கு மட்டுமே தெரியும். சரியான சமயத்துல, சாமி சொல்லும். எப்பிடி சொல்லும்? அதுக்குத்தான் என்னைப் போல ஆளுங்களை அது அனுப்பியிருக்கு! எங்க மூலமா அது பேசும்!
இப்பத் தெரியுற காட்சிகளை வெச்சு நான் நடக்கப் போறது என்னன்னு சொல்லுறேன். அதான் சூட்சுமம். இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா, ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'

ஒரு சில நிமிடங்கள் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலையை இப்படியும், அப்படியுமாய் ஒரு சில நொடிகள் ஆட்டினார்.

'நீ சொன்னதுல எதுவோ விசயம் இருக்கு. போ! போயி, முத்துராசாவைப் பாரு. அவன்கிட்ட நீ பாத்ததைச் சொல்லுவோம்!' என ஒரு
தீர்மானத்துடன் சொன்னார்.


கூடவே எழுந்தார்!

***************

கந்தனும் பூசாரியும் தலைவரின் வீட்டை அடைந்தனர்.

'ஐயா இருக்காரா?' என வாசலில் நின்ற ஆளைக் கேட்டார் பூசாரி.

'கொஞ்சம் இருங்க' எனச் சொல்லிவிட்டு,உள்ளே போனவன், சற்று நேரத்தில் வந்து,'ஐயா உள்ளே வரச் சொன்னாரு' எனத் தெரிவித்தான்.

உள்ளே போன கந்தன் ஒரு நொடி திகைத்து நின்றான்.

ஒரு தலைவனின் வீடு எப்படி இருக்கும் என இதுவரை கற்பனையில் கூட சிந்தித்திருக்காத அவனுக்கு உள்ளே பார்த்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

பதப்படுத்தப்பட்ட மான் தலைகளும், கொம்புகளுடன் கூடிய காட்டெருமைத் தலைகளும் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன. சந்தனத்தில்
இழைக்கப்பட்ட சிலைகளும், தேக்கினால் செய்யப்பட்ட சிற்பங்களும் அறை முழுதும் பரவிக் கிடந்தன. நல்ல தேக்கினால் செய்யப்பட்ட ஒரு
உயர்ந்த கட்டில் நடுவில் இருத்தப்பட்டு, அதில் முத்துராசா வீற்றிருந்தார். அகில், சந்தன வாசம் அறை முழுதும் மணம் வீசியது.
முத்துராசாவுக்கு பக்கத்தில் இன்னும் சில ஆட்கள் உட்கார்ந்திருந்தனர்.


"இந்தப் பையன் என்னமோ பார்த்தேன்னு சொல்றான்! அது எனக்கும் கொஞ்சம் முக்கியமானதாப் படுது! அவன் வாயாலியே அதைக் கேளுங்க!" எனப் பூசாரி கந்தனை முன்னே தள்ளினார்!

'என்ன விசயம் தம்பி? பூசாரி என்ன சொல்றாரு?' என அன்புடன் கேட்டார் முத்துராசா!
************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Sunday, October 28, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 26

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 26

முந்தைய பதிவு இங்கே!







அத்தியாயம் 24.


"பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்


கண்ணோட்டம் இல்லாத கண். [573]


நினைக்க, நினைக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது கந்தனுக்கு!

சின்னப் பெண்ணா இவள்!

மலைஜாதிப் பெண்ணா இவள்!

விவரம் தெரியாத இளம்பெண் என நினைத்தேனே!

எவ்வளவு தெளிவா, உணர்வில் தைக்கற மாதிரி பேசிவிட்டுப் போய்விட்டாள்!
மகிழ்வுடன் சென்று குளித்துவிட்டு, சாப்பிடப் போனான்.

காத்தான் எங்கோ வெளியில் சென்றிருந்தான்.

சிறுவன் மட்டும் தான் இருந்தான்.

'அக்கா உங்களை உக்காரச் சொல்லிச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு ஆயிருமாம். இப்பிடி உக்காருங்க. நா இதோ வந்திர்றேன்'
எனச் சொல்லி எங்கோ ஓடினான் சிறுவன்.

மலர்ந்த முகத்துடன் பொன்னி சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.

உணவு பரிமாறிக்கொண்டே அவனைப் பார்த்து சொன்னாள், 'எங்க மலைசாதி ஆம்பளைங்கள்லாம் மலைக்குள்ளே போனாங்கன்னா, திரும்பி வர
எவ்வளவு நாளாகும்னு யாராலேயும் சொல்ல முடியாது. எங்களைப் போல பொம்பளைங்களுக்கெல்லாம் இது பளகிப்போன ஒரு விசயம். போனவங்க
எல்லாருமே திரும்பி வருவாங்கன்னு சொல்ல முடியாது. இங்கே இருக்கற மரமாவோ, பாறையாவோ, இல்லை, ஓடையாவோ, அருவியாவோ
இருக்காங்கன்னு நம்பிருவோம். இந்த காட்டோட ஆத்மாவோட, காத்தோட காத்தா ஆயிருவாங்களாம்.
தெய்வாதீனமா, திரும்பி வர்றவங்களைப் பாத்து, நம்ம ஆளும் இதுபோலவே ஒருநாளைக்கி வந்திருவார்னு மத்த பொம்பளைங்கள்லாம் காத்திருப்பாங்க. அதேமாரி, நானும் இருந்திட்டுப் போறேன்.... உனக்காக. சீக்கிரமா கிளம்பி உன் லட்சியத்தைத் தேடிப் பொறப்படு. அதான் நல்லது. இன்னும் கொஞ்சம் பழம்
சாப்பிடு.'
எனச் சொல்லி குடிக்கத் தண்ணீரும் வைத்தாள் பொன்னி.

'கண்டிப்பா திரும்பி வருவேன் பொன்னி! நம்பிக்கையோட காத்திரு.' எனச் சொல்லி அவளை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தன்
குடிசைக்கு வந்தான் கந்தன்.
********************


ராபர்ட் கந்தனைப் பார்த்து, அசடு வழியச் சிரித்தான்! அவனெதிரில் ஒரு அடுப்பு மூட்டியிருந்தது! அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள் ஏதேதோ பச்சிலைகளைப் போட்டுக் காய்ச்சிக் கொண்டிருந்தான்!

'எங்கேய்யா போனே? உன்னைக் காணும்னு எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?' எனக் கோபத்துடன் கேட்டான் கந்தன்.

'அதில்லேப்பா. சித்தரைப் பார்த்தேன் தெரியுமா?' எனச் சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்.

'சித்தரைப் பார்த்தியா? என்ன சொன்னாரு? எப்படி இருந்தாரு? சொல்லு சொல்லு!' என கோபமெல்லாம் மறைந்த ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'நீ படிச்சதை முதல்ல பரிசோதிச்சுப் பாரு. புரியலைன்னா நான் வருவேன்' னு சொல்லிட்டுப் போயிட்டாரு.அப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது.
இதோட செய்முறையெல்லாம் நான் எவ்வளவோ தரம் படிச்சிருக்கேன். ஆனா, ஒரு பயத்துனால, இதுவரைக்கும் இதைப் பண்ணிப் பார்க்கணும்னு தோணவே இல்லை. இப்ப ஆரம்பிச்சுட்டேன்! ஒரு பத்து வருஷத்துக்கு
முன்னாடியே இதைச் செஞ்சிருக்கனும். அதை எனக்குக் காட்டிக்கொடுத்த அவர் நிஜமாவே சித்தர்தான்!' என ஒருவிதப் பரவசத்துடன் தான்
மூட்டிய அடுப்பில் இன்னுமொரு சுள்ளியைப் போட்டான் ராபர்ட்.

'சரிதான், இவனுக்கும் ஒரு வழி கிடைத்து விட்டது போலிருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான். இனி நாம் நம் வழியில் செல்லலாம்' என
முடிவு செய்த கந்தன், சற்று தூரம் நடந்து அங்கிருந்த ஒரு பாறையின் மீது சென்றமர்ந்தான்.

பொன்னியின் முகம் அவன் மனக்கண்ணில் வந்தது. கூடவே ஒரு சொந்தமும் தெரிந்தது.

காதல் வந்தாலே, இப்படி ஒரு உரிமையும் தானே வருமோ என எண்ணினான். சிரிப்பு வந்தது.

திடீரென ஏதோ ஒன்று தன்னைச் சுற்றி நிகழ்வதாக உணர்ந்தான். தலையை நிமிர்த்தி மேலே பார்த்தான்.

இரு கழுகுகள் உயரத்தில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று தொடர்வதாகவும் தெரியவில்லை; அதே சமயம் ஒன்றை விட்டு
ஒன்று பிரிவதாகவும் தெரியவில்லை.

இப்பறவைகள் எதையேனும் எனக்கு உணர்த்துகிறதோ என சிந்தித்தான். சொந்தம் பாராட்டாமல் அன்பு செலுத்துவது எப்படி எனக் காட்டுகிறதோ என
அவைகளையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

இரு பறவைகளில் ஒன்று சட்டென கீழ் நோக்கிப் பாய்ந்து இன்னொரு பறவையைத் தாக்குவது போல் வந்தது. அதே சமயம், ஆயுதங்கள் ஏந்திய
ஒரு கூட்டம் வருவது போல ஒரு காட்சியும் தோன்றி மறைந்தது.
ஒரு கணம் தான் அக்காட்சி தெரிந்தது. ஆனால் மனத்தில் அழுத்தமாகப்
பதிந்துவிட்டது அவனுக்கு.

'இது ஏதோ, நடக்கப் போவதின் அறிகுறி' என நிச்சயமாகப் பட்டது .

'சகுனங்களைக் கவனி' பெரியவரின் குரல் மனதுக்குள் கேட்டது.

தான் கண்டதை எவரிடமாவது சொல்லிவிட வேண்டும் என ஒரு வேகம் பிறந்தது.

விடை பெற்று வந்தபின், மீண்டும் பொன்னியைப் பர்க்க அவன் மனம் துணியவில்லை.

மலைக்கோவிலை நோக்கி நடந்தான்.

[தொடரும்]
****************************


அடுத்த அத்தியாயம்

Read more...

Saturday, October 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

முந்தைய பதிவு இங்கே!


[படம் அனுப்பி உதவிய கோவி.கண்ணனுக்கு நன்றி!]

23.
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். " [1160]

முன்னிருட்டிலேயே எழுந்து கிளம்பி விட்டான் ராபர்ட்.

'கந்தனை நம்பிப் பயனில்லை! அவனுக்கு எனக்கிருக்கும் ஆர்வம் இல்லை. அவன் கவனமெல்லாம் ஏதோ ஒரு புதையலைப் பற்றியே!
இப்போ வேற இவன் அந்தப் பொன்னியைப் பார்க்கிற பார்வையே சரியாயில்லை! ஏதோ லவ் மாதிரி தெரியுது. ஒரு காரியம் பண்றப்ப,
நடுவுல இந்தக் காதலுக்கெல்லாம் இடம் கொடுத்தா எடுத்த காரியத்தை முடிக்க முடியாமப் போயிரும்.
நாம நம்ம வேலையைப் பாக்கணும்'

என முடிவு செய்த ராபர்ட், விடிவதற்கு முன்னரே எழுந்து, பொன்னி சொன்ன வழியில் வேகமாக நடை போட்டான்.

2, 3 மணி நேர நடைக்குப் பின்னர், தான் எங்கோ ஒரு நடுக்காட்டில் போகுமிடம் இன்னதெனத் தெரியாது மாட்டிக் கொண்டதை உணர்ந்தான்!

'தனியாக வந்தது தப்பு. பொன்னி, கந்தனோட வந்திருக்கலாம். இப்போ இந்த நடுக்காட்டுல வந்து சிக்கிக்கிட்டோமே'எனக் கொஞ்சம் அஞ்சினான்.

'என்ன தம்பி! எங்கே போறீங்க?' என்ற குரல் கேட்டு தூக்கிவாரிப் போட்டது போல் திரும்பினான்.

நீண்ட வெண்ணிறத் தாடியுடன், அமைதி தவழும் முகத்துடன், ஒரு பெரியவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தபடி இவனைப் பார்த்தார்.

'இரும்பைப் பொன்னாக்கும் சித்தரைப் பார்ப்பதற்காக வந்தேன். வழி தவறிட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் தயவு பண்ணி, முத்துமலைக்கு போற வழியைச் சொன்னீங்கன்னா நான் திரும்பி கிளம்பின இடத்துக்குப் போயிருவேன்'என்றான் ராபர்ட்.

'ஓ! அங்கேருந்துதான் வர்றீங்களா? சரி! அதிருக்கட்டும். உங்களுக்கு எதுக்கு தங்கத்து மேல ஆசை? எப்படி வந்தது?' என்றார் பெரியவர்.

உற்சாகமானான் ராபர்ட்!

தனக்கு இவர் உதவுவார் என ஒரு நம்பிக்கை பிறந்தது.

'நான் ரொம்ப நாளா இதைப் பத்தி புஸ்தகம்லாம் படிச்சு வரேன். அதுல இதைப் பத்தி விரிவா சொல்லியிருக்கு. இதை விளக்கமா சொல்லக்கூடிய
ஒரு சித்தரைத் தேடிகிட்டு இருக்கேன். அதான் இங்கே வந்திருக்கேன்'

'இதுவரைக்கும் எதையாவது தங்கமா இல்லை வெள்ளியாகவாவது மாற்றி இருக்கிறாயா?' சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவர்.

அவர் ஒருமையில் அழைக்க ஆரம்பித்ததைக் கவனித்த ராபர்ட், சட்டென உஷாராகி,

'இல்லீங்க! என்ன பண்ணனும்னு முறையெல்லாம் படிச்சிருக்கேன். இன்னும் முயற்சி பண்ணலை!' என்றான்.

'முயற்சியே செய்யாம தங்கம் பார்க்க ஆசைப் படறே! ம்ம்! முதல்ல போயி, நீ படிச்சது சரியான்னு பாரு. அதுல சொன்னதை செஞ்சு பாரு!
அப்பறமும் வரலைன்னா, இங்கியே வா! முயற்சியே செய்யாம பெருசா ஆசைப்படறவன் எப்பவுமே எதையுமே அடைஞ்சதில்லை'
என்றார்.

"ஐயா! நீங்கதான் நான் தேடிக்கிட்டு இருக்கற சித்தரா?' என அவர் காலில் விழுந்தான் ராபர்ட்.

'அதைப் பத்தி பிறகு பார்க்கலாம். இப்ப நீ போய் படிச்சதை செய்யத் தொடங்கு. உனக்கு நல்லது நடக்கட்டும்' என ஆசீர்வதித்தார்.

'இதோ இந்த வழியா நேரே போனால் ஒரு ஓடை வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், ஒரு வெள்ளைப்பாறை தெரியும்.
அங்கிருந்து பார்த்தால் நீ முத்துமலைக்குச் செல்ல வேண்டிய பாதை தெரியும்' எனச் சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

மீண்டும் அவரை வணங்கிவிட்டு, ராபர்ட் ஓடையை நோக்கி நடக்கலானான்.
********** ******

கந்தன் குழப்பத்துடன் எழுந்து வெளியே வந்தான்.

ராபர்ட் தன் வழியே சென்றுவிட்டான் எனப் புரிந்தது.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு சிலர் சேர்ந்தாலும், அவரவர் வழி எனத் தெரியும் போது பிரிந்து செல்லத் தயங்க மாட்டார்கள் எனப் புரிந்தது.

அப்படிச் செல்லாதவர்கள் என்றுமே தங்கள் லட்சியத்தை அடையவும் மாட்டார்கள் எனவும் சிந்தித்தான்.

ராபர்ட் செய்தது சரிதான் எனப் பட்டது. இனி நம்ம வழியை நாமதான் பார்த்துக்கணும் என எண்ணினான். சிரிப்பு வந்தது! சிரித்துக் கொண்டே தலை நிமிர்ந்தான்.

பொன்னி எதிரில் வந்து கொண்டிருந்தாள், கையில் ஒரு மண் குடத்தில் நீரேந்தியபடி.

மனதில் ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பிறந்தது கந்தனுக்கு.

'இவ்ளோ சீக்கிரமாவே எளுந்திருவியா?'எனச் சம்பந்தமில்லாமல் கேட்டு, அவளை நிறுத்தினான்.

'ஐய்யே! எளுந்திருக்காமத்தான் தண்ணி கொண்டு வருவாங்களாக்கும்!' எனச் சிரித்தாள் பொன்னி.

அவள் நக்கலடிக்கிறாள் என நினைத்தாலும் கோபம் வரவேயில்லை கந்தனுக்கு.

ஏதோ ஒன்று மனதில் உந்த, அவளைப் பார்த்து துணிச்சலோடு,

'உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். நான் உன்னை விரும்பறேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்!'

பொன்னியின் கையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்தது! நீர் சிதறியது! கந்தன் மேல் தெறித்தது.

தண்ணீர் தன்மேலே பட்டுச் சிதறியதை ஒரு நல்ல சகுனமென நினைத்தான் கந்தன்.

"ஒரு புதையலைத் தேடி நான் ஊரை விட்டுக் கிளம்பினேன். நடுவுல என்னென்னல்லாமோ ஆயிப்போச்சு.இப்போ கீழே நடக்கற கலவரத்தால
இங்கே வந்து மாட்டிகிட்டேன். எதுக்குடா இப்படி ஆச்சுன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது, அது ஒரு பெரிய ஆசீர்வாதம்னு. ஏன்னா,
அதனாலதானே உன்னை நான் பார்க்க முடிஞ்சுது!'

'கலவரம்லாம் சீக்கிரமே முடிஞ்சிரும். நீங்களும் எதுக்காக வந்தீங்களோ, அதைப் பார்க்கப் போயிறலாம்' என்றாள் பொன்னி.

'எங்க மலை ஆளுங்கள்லாம் எப்பவுமே எதுனாச்சையும் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. எங்களைப் போல பொண்ணுங்களுக்கெல்லாம்,
அதுல ரொம்பவே பெருமை' என்றபடியே தன் வீடு நோக்கி செல்லத் துவங்கினாள்.

'கொஞ்சம் நில்லு. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். என் கதையைக் கேளு. அதுக்கப்புறம் நீ உன் முடிவைச் சொல்லிட்டுப் போகலாம்!' என்றபடி அவளை மறித்தான்.

தன் கனவில் தொடங்கி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர் சொன்னது, ஆடுகளை விற்றுவிட்டு மதுரைக்கு வந்தது,
பணத்தைத் தொலைத்தது, அண்ணாச்சியின் தொடர்பு, பின்னர் அவரோடு சேர்ந்து ஓட்டலைப் பெருசா வளர்த்தது, பின்னர்,
திடீரென ஒருநாள் அங்கிருந்து கிளம்பியது, பஸ்ஸில் ராபர்ட்டைப் பார்த்தது, ஒரு கலவரத்தின் காரணம் பஸ் நிற்க, அதனால், ராபர்ட்டோடு
இங்கு வந்து சேர்ந்தது
வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான்.

பொறுமையாக அத்தனையையும் கேட்ட பொன்னி அவனை அன்புடன் பார்த்தாள்.

'உன்னைப் பார்த்த அன்னிக்கே எனக்குள்ளே என்னமோ பட்டுச்சு. இவன் தான் உனக்குன்னு வந்தவன்ற மாரி ஒரு உணர்வு. அதான் நீ சொல்ற
அந்த உலக ஆத்மாவோட குரலோ என்னமோ, எனக்குத் தெரியலை. ஆனா, உன்னோட எனக்கு ஒரு பந்தம் இருக்குன்னு மட்டும் எனக்குப்
புரியுது.ஒருவேளை இந்தமாரி ஒருத்தனுக்காவத்தான் நான் காத்திருந்தேனோ, தெரியலை. நாங்கள்லாம் மலைஜாதிப் பொண்ணுங்க.
எங்களுக்கு சாதி கட்டுப்பாடு இதுல்லாம் கிடையாது. வழக்கமா எங்க ஆளுங்கள்ல ஒருத்தரைத்தான் நாங்க கல்யாணம் பண்ணிப்போம்.
ஆனா, அதுக்காவ, வேற ஆளுங்களைக் கட்டிக்கக்கூடாதுன்னுல்லாம் ஒண்ணும் கிடையாது.நெறையப் பேரு அப்பிடி வேத்தாளைக் கட்டிகிட்டு போயிருக்காங்க. எனக்கு மட்டும் இந்த மலை சாமி என்னமோ ஒரு நல்ல வழியைக் காட்டும்னு ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டே இருந்திச்சு. அது நீதான்னு நான் இப்போ திடமா நம்பறேன்.'

கந்தன் மகிழ்ச்சியுடன் அவள் கையைப் பற்ற முயன்றான்.

பொன்னி தன் கைகளை பின்னுக்குக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'நீ இப்ப உன் லட்சியத்தைத் தெளிவாச் சொல்லிட்டே! சகுனத்து மேல உனக்கு இருக்கற நம்பிக்கையையும் சொன்னே. இப்ப எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. பயமும் இல்லை. அந்த சகுனந்தான் உன்னை என்கிட்ட கொண்டுவந்திருக்கு.நானே உனக்குன்னு ஆனதுக்கப்புறம், எனக்கு என்ன தோணுதுன்னா, நானும் உன்னோட கனவுல ஒரு ஆளு, நீ சொல்ற அந்த விதியில ஒரு சின்ன பகுதின்னு! அதனால, நான் இப்ப சொல்லப்போறது என்னன்னா, கவனமாக் கேளு!... நீ எதுக்காக இங்கே வந்தியோ, அதைத் தொடர்ந்து போ!எத்தனை நாளு ஆனாலும் சரி,..... அதை விடாதே! இங்க இருக்கற மரங்கள் வேணும்னா இல்லாமப் போயிறலாம். ஆனா, காடு இருக்கும். அதே மாரித்தான் நாம ரெண்டு
பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கற அன்பும். எல்லாம் விதிப்படி நடக்கும். நான் உன்னோட விதியில ஒரு பங்குன்னா, நீ ஒரு நாளைக்கு என்கிட்ட நிச்சயமாத் திரும்பி வருவே!அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் உனக்காக!'

பரவசத்துடன், அவள் கையைப் பற்ற மீண்டும் முயற்சித்தான் கந்தன்.

தன் கைகளை இறுக்கமாகக் கட்டியபடி, பொன்னி தன் வீடு நோக்கி, திரும்பிப் பாராமல் நடந்தாள் பொன்னி!

[தொடரும்]
********************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24

முந்தைய பதிவு இங்கே!



22.
"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்." [1093]

துணிச்சலாக அந்தப் பெண் கேட்டவுடன், திடுக்கிட்ட கந்தன் 'ஒண்ணுமில்லே! ஒண்ணுமில்லே!' என்று வெட்கத்துடன் சிரித்தான் .

'கொல்லி மலைல என்ன விசேஷம்? அங்கே சித்தருங்கள்லாம் நடமாடறதா சொல்றாங்களே. அது உண்மையா? அப்படி யாரையாச்சும் நீங்க
பாத்திருக்கீங்களா? அப்படி பாத்திருந்தா, அவர்கிட்ட எங்களை கூட்டிப் போகமுடியுமா?' எனக் கேள்விகளை அடுக்கி, தான் அவளை வைத்த கண்
வாங்காமல் பார்த்த நிகழ்வை மறைக்க முயன்றான்.

'காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் போவணும் அதுக்கு! அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கு. பவுர்ணமிக்குப் பவுர்ணமி அங்கே ஆளுங்க வருவாங்க.
நிறைய சித்தருங்க இருக்கறதாச் சொல்றாங்க. ஆனா, நான் பாத்ததில்லேன்னு நினைக்கறேன்' என்றாள் பொன்னி.

'அப்படீன்னா?' என ஒன்றும் புரியாமல் கேட்டான் ராபர்ட்.

'அதில்ல. ஒரு தடவை ஒருத்தரு நான் போயிட்டிருக்கும் போது என் வழியில வந்தாரு. "நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு நல்லதே நடக்கும்!"னு
சொல்லிட்டு என்னைக் கடந்து போனாரு.திரும்பிப் பாத்தா ஆளைக் காணும்! ஒருவேளை அவருதான் நீங்க சொல்ற சித்தரோ என்னமோ! அதான்
பாத்தேனா இல்லியான்னு தெரியலை; இருக்கலாமோன்னு நினைக்கறேன்னு சொன்னேன்' என்றாள் பொன்னி.

ராபர்ட் சற்று நிலை கொள்ளாமல் தவித்தான். விட்டால் இப்பவே அவரைத் தேடிக்கொண்டு ஓடிவிடுவான் போலத் தோன்றியது.

'அவர் எப்படி இருந்தாரு? எந்தப் பக்கமாப் போனா அவரைப் பார்க்கலாம்?' என ஆவலுடன் கேட்டான்.

'அப்படியெல்லாம் சுலபமா நம்ம பார்வையில பட மாட்டாங்களாம். நானே இவரு ஒருத்தரைத்தான் பார்த்திருக்கேன். கொல்லிமலை போற வழியிலதான் பார்த்தேன்.இப்ப இருட்டிடுச்சு. நாளைக்குக் வழி காட்டறேன்.' என்றபடி உள்ளே சென்றாள் பொன்னி.

போகுமுன் ஒரு பார்வையை கந்தன் பக்கமாய் வீசிவிட்டு !!!

'சரிங்க தம்பிங்களா! நீங்க போய் கைகாலைக் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம். வாங்க, உங்க எடத்தைக் காட்டறேன்' என்று, பக்கத்தில் இருந்த ஒரு
குடிசைப் பக்கமாக அவர்களை அழைத்துச் சென்றான் காத்தான்.

நாலு பக்கங்களிலும் வளைவாகத் தட்டியால் மறைத்து, சில மரங்களால் ஒரு கூடாரம் போல் சிறிதாக, அழகாக இருந்தது அந்த இடம்.

'படலைச் சாத்திகிட்டு படுக்கணும். எல்லாம் ஒரு சாக்கறதைக்குத்தான்! ரெண்டு கம்பிளி வைச்சிருக்கேன். குளிருச்சின்னா அதயே போத்திக்கலாம்' , 'சரி! சீக்கிரமா வந்திருங்க. களைப்பா இருப்பீங்க! எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

கொண்டுவந்த பைகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு, முகம் கழுவிய பின்னர் காத்தனின் குடிசையை நோக்கி நடந்தனர் இருவரும்.

'நாளைக்கு முதல் வேலையா அந்த சித்தரை எப்படியாவது சந்திச்சுறணும்' என்றான் ராபர்ட்.

'அதான் அந்தப் பொண்ணு வழி சொல்றேன்னு சொல்லியிருக்கே. கொஞ்சம் பொறுக்கலாமே' என்றான் கந்தன்.

அவனுக்கு இந்த ராபர்ட் சற்று வேகமாக நடந்தால் என்ன எனத் தோன்றியது!
'நீ வேணுமின்னா, அந்தப் பொண்ணு சொல்ற வரைக்கும் காத்திரு. எனக்கு இது மாதிரி இடங்கள்லாம் பழக்கம்தான். காலையில நான்
போகப் போறேன்' என்றான் ராபர்ட்.

'உன் இஷ்டம்' எனச் சொல்லிவிட்டு, கந்தன் நடந்தான்.

அரை நிலா வெளிச்சத்தில், குடிசைக்கு வெளியே ஒரு தட்டி விரித்து, அதில் உட்கார்ந்தபடியே இவர்களுக்காகக் காத்திருந்தான் காத்தான்.
அவன் அருகில் ஒரு சிறுவன்... பத்து வயதிருக்கலாம்.. குத்த்க்காலிட்டு உட்கார்ந்தபடியே இவர்களை அண்ணாந்து பார்த்தான்..

'வாங்க, இப்படியே உக்காருங்க' என்று சொல்லியபின், 'பொன்னி, அவங்கள்லாம் வந்திட்டாங்க. சாப்பாடு எடுத்து வையி' என ஒரு குரல்
கொடுத்தான்.

'எல்லா வேலையும் அந்தப் பொண்ணுதான் செய்யுமா?' என விசாரித்தான் கந்தன்.

'தாயில்லாப் பொண்ணுங்க. இதோ இவன் பொறந்ததுமே எம்பொஞ்சாதி செத்துப் போயிருச்சு. நாந்தான் அதுக்கபுறம் இன்னொரு கண்ணாலம்
வேண்டாமின்னு இதுங்க ரெண்டையும் வளத்தேன். பொன்னிதான் எல்லா ஒத்தாசையும் செய்யுது. தங்கமான பொண்னு. அதுக்கும் சீக்கிரமே ஒரு
கண்ணாலத்தைப் பண்ணிறணும்.....'

'இப்ப என்ன பேச்சு என்னைப் பத்தி? என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் உன்னைக் கேட்டேனா? சும்மா யார் வந்தாலும் இதைச் சொல்றதே
உன் வேலையாப் போச்சு' என்று செல்லமாகக் கடிந்தபடி பொன்னி வெளியே வந்தாள்.

அவள் கையில் ஒரு கலயமும், ஒரு தட்டும் இருந்தது.

இவள் வந்ததும், சிறுவன் எழுந்து உள்ளே போய், சில மண்பாண்டங்களைக் கொண்டுவந்தான்.

அந்தப் பாண்டங்களில், கலயத்தில் இருந்த கேப்பைக் கஞ்சியை ஊற்றி அவர்கள் முன் வைத்தாள்.

தட்டில் இருந்து வேகவைத்த, வள்ளிக் கிழங்குகளை ஆளுக்கொன்றாக வைத்தவள், கந்தனுக்கு மட்டும் ஏனோ கூடுதலாக ஒன்றை வைத்தாள்.

கந்தனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

பொன்னி அவனைப் பார்த்து புன்னகைத்தது போலத் தோன்றியது.


அவளைப் பார்க்க தைரியமில்லாமல், அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான்.

சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதும் ஒரு காரணம்.

மலையேறி வந்ததுல களைப்பா இருப்பீங்க. போயிப் படுங்க.காலைல பார்க்கலாம்' என விடை கொடுத்தான் காத்தான்.

'கொல்லிமலைக்கு எந்தப் பக்கமாப் போகணும்?' என ராபர்ட் விசாரித்து வைத்துக் கொண்டான்.

குடிசைக்குள் நுழைந்ததும், 'நான் படுக்கப் போறேன்'எனச் சொல்லி, ராபர்ட் ஒரு மூலையில் துண்டை விரித்துப் படுத்தான்.

கந்தனுக்கும் அசதி கண்ணைச் சுழட்ட, சற்று நேரத்தில் அசந்து தூங்கிப் போனான்.

பறவைகளின் சத்தத்தில் காலையில் கண்விழித்த கந்தன் எழுந்தான்.

இருள் பிரிந்து, மெலிதாக வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது.

திரும்பிப் பார்த்தான்.

ராபர்ட் படுத்த இடம் காலியாக இருந்தது!



[தொடரும்]
********************************
அடுத்த அத்தியாயம்

Read more...

Tuesday, October 23, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

முந்தைய பதிவு இங்கே!





அத்தியாயம். 21.


"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்." [1227]



'உங்க தலைவர் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் இருக்காரு!' என கந்தன் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தான்.

'ஆமா தம்பி, எனக்கே ஆச்சரியமாஇருந்திச்சு. அவர் எப்பவுமே இப்படிப் பேசினவரு இல்லை.ரொம்பக் கறாரான ஆளு அவரு. என்னமோ
நாட்டு நடப்புத்தான் அவரை இப்படிப் பேச வெச்சிருக்குன்னு நினைக்கறேன். உங்க நேரம் நல்ல நேரம்னும் நெனைக்கறேன். சரி வாங்க போலாம்'
என்றபடியே நடந்தான் காத்தான்.

'ஆமா, அதென்னா போறப்ப உங்க தலைவரு எதுவோ சொன்னாறே! ஆங்! பொண்ணுங்களோட பேசக்கூடாதுன்னு. அதென்ன சட்டம்?'
என ராபர்ட் சிரித்தபடியே வினவினான்.

'அதுங்களா! எங்க ஊருல இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்குங்க. பெத்தவங்க அல்லது சொந்தக்காரங்க யாரும் இல்லாதப்ப, எந்த ஒரு ஆம்பளையும்,
இன்னோரு பொண்ணோட தனியா பேசக்கூடாது. இதுல, இங்க ரொம்ப கண்டிப்பா இருப்போமுங்க.
நீங்களும் பாத்து நடந்துக்கோங்க' என்றான் காத்தன்.

ராபர்ட் கந்தனைப் பார்த்துச் சிரித்தபடி கண்ணடித்தான்!

'இவருகிட்ட சித்தருங்களைப் பத்திக் கேளு' எனத் தூண்டினான் ராபர்ட்.

'இங்க சித்தருங்க நடமாட்டம் இருக்கறதாப் பேசிக்கறாங்களே. அது உண்மையாங்க?' எனத் தயங்கியபடியே கேட்டான் கந்தன்.

'என்னது? சித்தரா? அப்படீன்னா ஆருங்க? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேனுங்க. எனக்கு அப்படி ஆரையும் தெரியாதுங்க. நான் இப்பல்லாம் அதிகமா வெளியில போறதில்லை. என் பொண்ணை வேணா கேட்டுப் பாக்கறேன். அதுதான் அடிக்கடி கொல்லிமலைப் பக்கமெல்லாம் போயிட்டு வரும்.' என்றான் காத்தான்.

ராபர்ட்டுக்கு சற்று ஏமாற்றம். இருந்தாலும் விடவில்லை.

இதை வேறுவிதமாய் கையாளணும் என நினைத்து, 'அப்போ உங்களுக்கெல்லாம் நோய் நொடின்னா, யாருகிட்ட மருந்து வாங்கி சாப்பிடுவீங்க?'
எனக் கேட்டான்.

'அடே! இவன் எவ்வளவு புத்திசாலி!' என வியந்தான் கந்தன். 'சித்தருங்களுக்கு நோயைக் குணப்படுத்தற சக்தி இருக்குன்றதை எப்படி நாசூக்கா
கேக்கறான்'.

காத்தான் சொன்ன பதில் அவனது மகிழ்ச்சியை உடனே அழித்தது!

'நோவு நொடில்லாம் எங்களுக்கு வராது சாமி. அப்பிடியே வந்தாலும், எங்க குலதெய்வத்துக்கு ஒரு பூசை போட்டு வேண்டிகிட்டா எல்லாம்
சரியாயிடும்! மருந்து மாத்திரைல்லாம் சாப்பிடறதே இல்லை. அம்மை ஊசி போடறேன்னு வந்தவங்கள்ல்லாம் ஓடியே போயிட்டாங்க!'

சொல்லிவிட்டுச் சிரித்தபடியே, தன் குடிசையை அடைந்தான் காத்தான்.

'பொன்னி, கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டுவாம்மா!' எனக் குரல் கொடுத்தான்.

'அவங்கள்லாம் போயிட்டாங்களாப்பா!' எனக் கேட்டபடியே ஒரு அழகிய இளம்பெண் வெளியில் வந்தாள்.

விருந்தாளிகளைப் பார்த்ததும், வெட்கத்துடன் உள்ளே செல்லத் திரும்பியவளை, 'கொஞ்சம் நில்லும்மா!' என்ற தந்தையின் குரல்
தடுத்து நிறுத்தியது.

'இவங்களுக்கு கொல்லிமலையப்பத்தி ஏதோ தெரியணுமாம். நீதான் அடிக்கடி அங்கே போவியே! உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு.'

'என்ன தெரியணுமாம்?' என்றாள் பொன்னி.

அவளை நிமிர்ந்து பார்த்த கந்தனுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது!

அவளது கரிய விழிகளையும், உதட்டோரம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்பது போல் நின்ற இளம் புன்னகையையும், வாளிப்பான உடலையும் பார்த்த நேரத்தில், இந்த உலகத்திற்கே பொதுவான ஒரு உணர்ச்சி அவனுள்ளே சுரந்தது.

அப்படியே அவனை ஒரு இனம்புரியா ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

இது நிகழ்பருக்கு மட்டுமே சட்டெனப் புரியும் ஒரு மொழி!

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது!

பொன்னி இப்போது அந்தப் புன்னகையை தன் ஈர உதடுகளில் தவழவிட்டாள்!
அதுவே ஒரு நல்ல சகுனமாகத் தெரிந்தது கந்தனுக்கு.

தன் வாழ்நாளில் இதுவரை தனக்குத் தெரியாமலேயே தேடிக்கொண்டிருந்த ஒன்று இதுதான் என ஐயமில்லாமல் புரிந்தது!

இந்த நல்ல சகுனமே இனி தன் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றப் போகும் ஒரு தூண்டுகோல் எனவும் நிச்சயமாகப் பட்டது கந்தனுக்கு!

இதற்கு விளக்கங்கள் தேவையில்லை. நீக்கமற நிறைந்திருக்கும், எப்போதுமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம், காலங்களைக்
கடந்து இருப்பது போலவே, இதுவும் எப்போதும் இருந்து வருகிறது.

தன் வாழ்க்கையின், வாழ்நாள் முழுதுக்குமான ஒரே பெண் என்னும் பேருரு இப்போது தன் முன்னே நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான்.

அவளுக்கும் இது புரிந்துவிட்டது எனவும் ஒரு உள்ளுணர்வு அவள் சிரிப்பின் வழியே அவனுக்குச் சொன்னது!

செல்லியோடு பலமுறை பேசியிருந்தபோதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வு இப்போது தன்னுள் பரவியதைத் தெரிந்து மிகவும் சந்தோஷமாக
இருந்தது அவனுக்கு.


......"மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."..........

தங்கமாலை அணிந்த பெரியவர் ஒருவர் அவனிடம் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது!

அந்த சக்திதான் இப்போது இவளை எனக்குக் காட்டியிருக்கிறது! அவளுக்கும் இதைப் புரிய வைத்திருக்கிறது.
காதல் என்னும் ஒரு உணர்வினால் எங்கள் இருவரையும் தொட்டு ஆசீர்வதித்திருக்கிறது !

'எல்லாம் விதிப்படியே நடக்கும்!' அண்ணாச்சி சொன்னது காதில் கேட்டது!

'என்ன அப்படியே வெச்ச கண்ணை வங்காம பாக்கறீங்க! என்ன தெரியணும் உங்களுக்கு கொல்லிமலையைப் பத்தி?' என்ற குறும்புக் குரல்
அவனை இவ்வுலகிற்கு இட்டு வந்தது!

[தொடரும்]
*************************************

"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்." [1227]

அடுத்த அத்தியாயம்

Read more...

Monday, October 22, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 22

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 22

முந்தைய பதிவு இங்கே!






20.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்." [517]

"ஆரது?"

குடிசையிலிருந்து ஒரு ஆள் வெளிப்பட்டான்.

'என்ன வேணும்? எங்கே இவ்ளோ தூரம்? எப்படி வந்தீங்க? காரா, பஸ்ஸா?' என அடுக்கிக் கொண்டே போனான்.

'அதெல்லாம் விவரமா சொல்றோம். முதல்ல, இங்கே எதாவது நல்ல ஓட்டல் இருக்கா? பசிக்குது.' என ராபர்ட் சொல்லவும்,
'ஹோ'வென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான் அந்தக் காட்டுவாசி.

'என்னாது? ஓட்டலா? அதெல்லாம் இங்க கிடையாது சாமியோவ். இங்க இருக்கறதெல்லாம் இந்தக் குடிசைங்களும், அதுல இருக்கற
நாங்களுந்தான். எடம் தெரியாம வந்துட்டீங்க போல. எங்க போகணும் நீங்க? அதை மொதல்ல சொல்லுங்க' எனச் சற்று கண்டிப்புடன் கேட்கவே
கந்தன் கொஞ்சம் பயந்தான்.

ராபர்ட், ஏதோ அனுபவப்பட்டவன் போல, அந்த ஆளை நெருங்கி, 'நாங்க திரும்பிப் போறதுக்காக வரலை. எங்களுக்கு இங்கேதான் ஒரு காரியம்
ஆகணும். இங்க உங்க ஊருல பெரிய ஆளு யாரு? நாங்க அவரைப் பார்க்கணும்.' என அமர்த்தலாகச் சொல்ல,

காட்டுவாசியும், 'அதோ, அங்கே தெரியுதே, அந்த புளியமரம், அதைத்தாண்டி போனீங்கன்னா, ஒரு கோவிலு இருக்கும். அதுக்குப் பக்கத்து
வீட்டுல போயி, முத்துராசான்னு கேளுங்க. வெவரம் சொல்லுவாங்க' எனச் சொல்லித் திரும்ப ஆரம்பித்தான்.

ராபர்ட் விடுவதாயில்லை.

'என்னப்பா! இப்படி சொன்னா எப்படி? நீங்களும் வாங்க! வந்து கொஞ்சம் சொல்லுங்க. குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? உங்க பேரு என்ன?'
என அவனுடன் அன்பாகப் பேசினான்.

'என் பேரு காத்தானுங்க. இருங்க இதோ வாரேன்.' எனச் சொல்லி உள்ளே சென்றவன், சற்று நேரத்தில் வெளியே வந்தான்.

அவன் கையில்,ஒரு சிறு கூடையில் மலைவாழைப் பழங்களும், ஒரு சொம்பில் தண்ணீரும்!

'பாத்தா, சாப்ட்டு ரொம்ப நேரம் ஆனமாரி இருக்கு. இந்தாங்க இதைச் சாப்பிடுங்க' என நீட்டினான்.

இருந்த பச்சிக்கு, தேவாமிர்தமாய் இனித்தன அந்தப் பழங்கள்!

ஆளுக்கு அரை டஜன் பழங்களை உள்ளே தள்ளிவிட்டு, வயிறு முட்ட தண்ணீரைக் குடிப்பதை, அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் காத்தன்.

'சரி, வாங்க போகலாம். இங்கே யார் வந்தாலும் தலைவருக்குத் தெரியாம இருக்கக் கூடாது. ம்ம்... நடங்க.' எனச் சொல்லியபடியே
கிளம்பினான்.

'ஆத்தா! நா தலைவர் வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்' என உள்நோக்கிச் சொல்லிவிட்டு, நடக்க ஆரம்பித்தான்.

உள்ளேயிருந்து 4 கண்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன!
***************

'தொரையப் பாத்தா, அசலாட்டம் இருக்குது. தம்பிக்கு எந்த ஊரு?' திண்ணையில் உட்கார்ந்திருந்த முத்துராசா கேட்டார்.

நல்ல உயரமான தோற்றம். 55 வயசு மதிக்கலாம். முறுக்கிய அடர்த்தியான மீசை முழுதுமாக நரைத்திருந்தது. துண்டை மடித்து தூக்கலாக முண்டாசு கட்டியிருந்ததால், தலைமுடியின் நிலவரம் தெரியவில்லை! நல்ல கறுத்த உறுதியான உடல். ஒரு பெரிய துண்டால் மேலுடம்பைப் போர்த்தியிருந்தார்.

கந்தன் ராபர்ட்டின் பக்கத்தில், ஆனால், சற்றுப் பின்தள்ளி 'இவனே சமாளிச்சுக்கட்டும்' என்பதுபோல் நின்றிருந்தான்.



ராபர்ட்டைக் காட்டி,

'எனக்கு நாகர்கோயில் பக்கம் முட்டம் பக்கத்துல ஒரு கிராமம். இவரு, வெள்ளைக்காரரு. இங்கிலாந்திலேர்ந்து வந்திருக்காரு' என்றான்
கந்தன்.

'என்ன விசயமா இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க? வழக்கமா ஆரும் வராங்கன்னா, காட்டிலாக்கா ஆளுங்க தான் இட்டாருவாங்க. ம்ம்..சொல்லுங்க எனத் தொடர்ந்தார் தலைவர்.

சேலம் போவதற்காக பஸ்ஸில் வந்தது, வழியில் நடந்த கலவரத்தால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு, பின்னர் இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு
இங்கு வந்தது வரைக்கும் ராபர்ட் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்.

'இங்கே பக்கத்துலதான் கொல்லிமலை இருக்குதுன்னு ஒரு பெரியவர் சொன்னாரு. எங்களுக்கும் அதைப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டு இங்கே வந்தோம்.
நீங்கதான் கொஞ்சம் தயவு பண்ணனும்.'

'கொல்லிமலைல என்ன இருக்கு? ஏதோ ஒரு சிவலிங்கம் இருக்குது அங்கே. அரப்பளீஸ்வரர்னு பேரு அவருக்கு! பவுர்ணமிக்கு பவுர்ணமி ஆராரோ வருவாங்க. காட்டிலாக்கா ஆளுங்க துணைக்கு வருவாங்க. மத்த நாள்ல ஆரும் அங்கே போகமாட்டாங்க. இப்போ அதுக்கான நேரங்கூட இல்லியே! நீங்க ஒண்ணு பண்ணுங்க. திரும்பிப் போயிட்டு,
அதிகாரிங்களோட வாங்க, என்ன நா சொல்றது! விளங்கிச்சா?' என்றபடி எழுந்தார் முத்துராசா.

ராபர்ட் விடுவதாயில்லை!

'பவுர்ணமிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்குங்க. அதுவரைக்கும் நாங்களும் இங்கியே தங்கிக்கறோமே. கீழேவேற ஒரே கலவரம்னு பேசிக்கறாங்க. போனாத் திரும்ப வர்றது கஷ்டம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க' எனக் கெஞ்சினான்.

முத்துராசா எழுந்து, வாயில் அடக்கியிருந்த புகையிலையைத் துப்பிவிட்டு, சற்று தள்ளிச் சென்று, அங்கிருந்த காத்தான், இன்னும் 2,3 பேரோடு ஏதோ
தணிந்த குரலில் பேசினார்.

பின்னர், இவர்களைப் பார்த்துத் திரும்பி, ' நீங்க சொல்றதும் சரிதான். கீளே கலவரம் முத்திருச்சாம். போலீசுல்லாம் வந்து சுடறாங்களாம்.
இப்ப நீங்க இறங்கிப் போறதும் ஆபத்துதான். சரி, வந்தது வந்திட்டீங்க. இங்கியே தங்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். சோறுல்லாம் கிடைக்காது.
கப்பங்கிழங்குக் கஞ்சி கிடைக்கும். மத்தபடி இங்க கிடைக்கற பளம், காயில்லாம் இருக்கு. பாலு கூட கிடைக்கும். படுக்கறதுக்கு நான் காத்தானண்டை பேசிட்டேன். அவனுக்குப் பக்கத்துக் குடிசைல நீங்க தங்கிக்கலாம். காசுல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம். நாங்க காசு வாங்கறதில்ல. ஆனா, அவன் செய்யற வேலைக்கு மட்டும் கூடமாட ஒத்தாசையா இருங்க. தனியா எங்கியும் சுத்தக் கூடாது' என்றவர்,

காத்தான் பக்கம் திரும்பி, 'ஏய், சொன்னது கேட்டுச்சில்ல? பத்திரமாப் பாத்துக்க! நீங்க போயிட்டு வாங்க தம்பி! ' என விடை கொடுத்தார்.

கந்தனுக்கு ராபர்ட்டின் திறமையைக் கண்டு ஆச்சரியமாயிருந்தது.

'ரொம்ப நன்றிங்க. இந்த உதவியை நாங்க என்னிக்கும் மறக்க மாட்டோம்' எனச் சொல்லி திரும்பியவர்களை, 'தம்பி, ஒரு விசயம்' என்ற
தலைவரின் குரல் நிறுத்தியது.

'சொல்ல மறந்திட்டேன். இங்கிட்டு இருக்கற பொட்டைப்பிள்ளைங்களோட எந்தப் பேச்சும் வெச்சுக்கிறாதீங்க. அதுல மட்டும் நாங்க ரொம்ப கண்டிப்பா இருப்போம்.
மீறி நடந்திச்சுன்னா....
' எனச் சொல்லியவர்,


சிரித்தபடியே,'உங்களைப் பாத்தா எதுவும் தப்புதண்டா செய்யற ஆளுங்க மாரித் தெரியலை. சரி, எதுனாச்சும் சாப்ட்டீங்களா? காத்தா,
பசியாற கஞ்சி வெச்சுக் குடுறா. நீங்க போயிட்டு வாங்க, தம்பிங்களா!' என விடை கொடுத்தார்.

[தொடரும்]
*****************


அடுத்த அத்தியாயம்

Read more...

Saturday, October 20, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21

முந்தைய பதிவு இங்கே!




19.

"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின். "[119]


புதியதொரு உலகத்தில் பிரவேசித்தது போலத் தோன்றியது கந்தனுக்கு.

அவனது கிராமத்தில் கூட இப்படி அவன் உணர்ந்ததில்லை.

பச்சைப்பசேல் என்ற மரங்களும், அடர்ந்த காடும் அவனுக்கு மனதில் சந்தோஷத்தையும், கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணியது.

கண்ணில் பட்ட வழிப்பாதையைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென ராபர்ட் முன்னே நடக்க, பின்னாலே, கந்தன் அவனைப் பின் தொடர்ந்தான்.

அடர்ந்த காட்டுக்குள் இப்போது அவர்கள் இருவர் மட்டுமே!

அப்படித்தான் பட்டது அவர்கள் இருவருக்கும்.

ஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.

இருட்ட ஆரம்பித்தது.

பாதுகாப்பான ஒரு இடமாகப் பார்த்து, பையில் இருந்த போர்வையை எடுத்து விரித்து, இருவரும் படுத்தார்கள்.

மேலே ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின.

'என்ன, பயமா இருக்கா?' என ராபர்ட் கேட்டான்.

கந்தன் ஒன்றும் பேசவில்லை.

காட்டின் அமைதி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கண்ணுக்குத் தெரியாத மரங்கள் ஆடுவதை அவனால் உணர முடிந்தது.

எங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த
காட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல், ஊர் பேர் தெரியாத எவனுடனோ, அவன் தேடிக்கொண்டிருக்கும் தங்கத்தின் மேல் தானும் ஆசைப்பட்டு, இங்கே இந்த இரவில் அவனோடு ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால், ஒரு பக்கம் சிரிப்பாகவும்,ஒரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.

இந்நேரம், இட்லிக் கடை முடிஞ்சு, சாப்பாட்டு நேரம் ஆரம்பிச்சிருக்கும் ஓட்டல்ல.

அண்ணாச்சி என்ன செய்து கொண்டிருப்பார் என ஒரு கணம் நினைத்தான்.

அடுத்த கணமே, அந்த நினைப்பைத் துடைத்தெறிந்தான்.

'இதெல்லாம் போதும்; இனிமே வேணாம்னுதானே கிளம்பிட்டோம். இப்ப அந்த நினைப்பு எதுக்கு?' எனத் தன்னைக் கடிந்து கொண்டான்.

பஸ் டிரைவர் சொன்னதை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.

'இதோ இந்தக் கணம்தான் நிஜம்.இங்கே நான் இருக்கறதுதான் எனக்கு நடந்துகிட்டு இருக்கற உண்மை. இதை நான் சந்தோஷமா அனுபவிக்கணும்.
நேத்து நடந்ததோ, நாளைக்கு நடக்கப் போறதோ எதைப்பத்தியும் கவலைப் படக் கூடாது.இந்த நிமிஷம், இப்ப, காத்து சுகமா வீசுது. குளிரலை.
பசிக்கு எதையோ சாப்பிட்டாச்சு. நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்'
என எண்ணிக் கொண்டிருந்தவன்.....

அப்படியே உறங்கிப் போனான்.
*******************

"எத்தனை பேரு இந்தப் பக்கமா வந்து போறாங்க!

எல்லோருக்கும் ஒரு ஆசை.


அதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.
யார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.


ஆனா, இன்னிக்கு வர்றவங்கள்ல ஒருத்தனுக்கு என் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கணும்னு உத்தரவாயிருக்கு.

ஆளு யாருன்னு தெரியாது.

ஆனா கண்டு பிடிச்சிருவேன்.

இதையெல்லாம் வாய் மொழியாத்தான் சொல்லிக் கொடுக்கணும். புஸ்தகத்தை வெச்சோ, படம் போட்டுக் காட்டியோ இதைச் சொல்லித் தர முடியாது.

கூடாது!

அது அப்படித்தான்.

இந்த உலகம் எவ்வளவு புனிதமா படைக்கப்பட்டதோ, அதே மாதிரித்தான் இந்த வித்தையும்.

இதை எழுத்தாலேயோ, படத்தாலேயோ சொல்லிப் புரிய வைக்க முடியாது.

படத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.

அவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்!"
மலை உச்சியில், ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த, அந்தச் சித்தர் வாய் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்தார்......

நிலவு பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.
*******************************


பொழுது விடிந்தது.

சூரியன் வந்தது தெரியவில்லை, காட்டின் அடர்த்தியில்.

ஆனால், வனம் வெளுப்பாக இருந்தது. [எ.பி. இல்லை!:)]

காலைக் கடன்களை முடித்துவிட்டு, இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மலையில் ஏறத் துவங்கினர்.

தூரத்தில் இருந்து பார்க்கையில், பசுமையாகத் தெரிந்த மலை, கிட்டச் சென்றதும் கரடு முரடாய் இருந்தது.

அடிவாரத்தில் முட்புதர்களும், பெரிய பாறாங்கற்களும் கிடந்து, சரியான வழி இல்லாமல் மறைத்தது.

ரொம்பப் பழக்கமானவன் போல ராபர்ட் அவற்றுக்கிடையே புகுந்து புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த கந்தன், தானும் அவனுக்குச் சளைத்தவன் இல்லை என்பது போல லாவகமாகக் கூடவே சென்றான்.

'வெயில் ஏற்றதுக்குள்ள உச்சிக்குப் போயிறணும். வா. சீக்கிரமா' எனப் பேசிக்கொண்டே, வழியில் இருந்த சுனையில் நீர் குடித்துவிட்டு,
சொன்னபடியே மலையுச்சியை அடைந்தார்கள்.

வழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.

'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.

அடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.

ஆங்காங்கே சில குடிசைகள்.

'நல்லவேளை; சாப்பாடு கிடைக்கும்னு தோணுது' எனச் சொல்லியபடியே கண்ணில் பட்ட முதல் குடிசையை அடைந்தார்கள்.



[தொடரும்]
*************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20

முந்தைய பதிவு இங்கே!

18.

'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. '[355]



ராபர்ட் தொடர்ந்தான்.

'இவ்வளவு நேரம் நான் சொன்னது எதையும் நீ சரியாக் கவனிக்கலைன்னு புரியுது. நாம கண்டுபிடிக்க மாட்டோம். நம்மளால முடியாது.
அவரா வருவாரு. ஆனா, ஒரு சில அடையாளம் இருக்குதாம். நான் முன்னே சொன்னேனே, அந்த திரவப் பொருள், திடப்பொருள்னு ரெண்டு.
அது இவங்க கிட்ட இருக்குமாம். அந்தக் கஷாயம் மாரி இருக்கறதை குடிச்சுத்தான் இவங்க எப்பவுமே இளமையா இருக்காங்களாம். பல நோய்களுக்கெல்லாம் கூட அது மருந்தாகுமாம்.


அந்தக் கல்லைத்தான் சித்தர் கல்லுன்னு சொல்றதாம். எல்லார்கிட்டயும் அதைப் பாக்க முடியாது. பெரிய பெரிய சித்தருங்க கிட்டத்தான்
இருக்குமாம். அந்தக் கல்லை வெச்சுத் தேய்ச்சா போதுமாம், செம்புல்லாம் கூட தங்கமாயிடும்.' இதெல்லாம் அந்தப்புஸ்தகத்துல போட்டிருக்கு."



'ஆ' வென்று வாயைப் பிளந்து அவன் சொன்னதை அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் கந்தன்.

'நமக்கும் கூட இது கிடைச்சதுன்னா நல்லாயிருக்குமே' என ஒரு சிந்தனை ஓடிற்று.

'அந்தக் கல்லை எப்படி நாம அடையறது?' என்றான்.

'அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்கேன். இந்நேரம் என் ஊருக்குப் பறந்திருப்பேனே!' எனச் சொல்லிச் சிரித்தான் ராபர்ட்.

'எல்லாத்தையும் இந்தப் புஸ்தகங்கள்ல சொல்லியிருக்காங்க. ஆனா, ஒண்ணும் புரியலை. சுலபமா சொல்லியிருந்தா, இத்தனை பாடு
படவேண்டாம்ல'

'இதெல்லாம் எழுதி எத்தனை வருஷம் இருக்கும்? கந்தன்.

'இப்பத்தான் இதெல்லாம் ஒரு புஸ்தகமாவாச்சும் நமக்குக் கிடைக்குது. இதெல்லாம் வாய் வழியா வந்ததாம். எழுதி ரொம்பக் காலம் ஆயிருச்சு'

பேச்சை நிறுத்திவிட்டு, புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் கந்தன்.

ராபர்ட் சுற்றிலும் பார்வையை விட்டான்.

ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாய் பஸ் பயணிகள் பிரிந்து மர நிழல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

உதவி வருவதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.


காவல்துறை வண்டியும் அப்போதே சென்றுவிட்டது!

'இது எந்த இடமுங்க?' பக்கத்தில் இருந்த ஒரு தாடிக்காரரிடம் கேட்டான்.

கையிலிருந்த பீடியைப் புகைத்தபடியே இவனைத் திரும்பிப் பார்த்தார் அவர்.

ஒரு வெள்ளைக்காரன் வந்து தமிழில் பேசுவதைக் கண்டு ஆச்சரியப் பட்டாற்போல் தோன்றவில்லை அவருக்கு.

'வாங்க தம்பி! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க! நீங்க இருக்கற தோரணையைப் பார்த்தா, சாமியாருங்க, சித்தருங்களைத் தேடிகிட்டு வந்த மாரி
இருக்கு. அப்பிடிப் பாத்தா, இது ஒரு காட்டுப் பிரதேசம். நாமக்கல் தாண்டி வந்திருக்கீங்க. தோ, அந்த மலைக்கு அந்தப் பக்கம்லாம் ஒரே காடுதான். கொல்லிமலைன்னு ரொம்பப் பிரபலமான இடம் அங்கே... அந்த மலைக்கு அப்பால இருக்குதாம். ஆரும் ஜாஸ்தி அங்கேல்லாம் போறதில்ல. மலைஜாதி ஆளுங்கதான் அங்கேல்லாம். நெறைய சித்தருங்க இருக்கறதா பேசிக்கறாங்க!'

ராபர்ட் பரவசமானான்.

தாடிக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

'ரொம்ப தேங்ஸுங்க. நல்ல தகவல் சொன்னீங்க! நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? என ஆவலுடன் கேட்டான்.'

தாடிக்காரர் உதட்டைப் பிதுக்கினார்.

'அதெல்லாம் ஆரு பாத்தா? எல்லாம் சொல்லக் கேள்விதான். அங்கே இருக்கற மலைஜாதி ஆளுங்களைக் கேட்டா எதுனாச்சும் தகவல் தெரியலாம்'
என்றவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கந்தனிடம் போனான்.

'நீ சொன்னதும் சரிதான். மனுஷங்களையும், சகுனத்தையும் பார்த்தாக் கூட பாதி விஷயம் தெரிஞ்சிரும் போல~!' என்றபடி
கந்தன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டே,

இந்தப் பக்கமாப் போனா, சித்தருங்களைப் பார்க்கலாமாம். அதோ, அந்தத்
தாடிக்காரர் சொன்னாரு. எனக்கு சேலத்துல ஒண்ணும் வேலை இல்லை. அங்க போனா, இதைப் பத்தி தகவல் கிடைக்கும்னு யாரோ
சொன்னாங்கன்னு வந்தேன். இப்ப, அது கிடைச்சாச்சு. இதுவும் ஒரு சகுனந்தான்! நான் கிளம்பறேன்' என ஆயத்தமானான்.

கந்தன் யோசித்தான்.

புதையலைப் பாக்கப் போகணும்தான். ஆனா, இவன் சொல்ற விஷயமும் நல்லாத்தான் இருக்கு. எல்லா ஊரையும் சுத்திப்பாருன்னு வாத்தியார்
வேற சொல்லியிருக்காரு.

'உன் மனசு என்ன சொல்லுதோ, அதன்படி நட'ன்னு அந்த ராசாவும் சொன்னாரு. இப்ப இவன் மட்டும் தனியாத்தான்
போறான். பஸ்ஸு எப்போ கிளம்பும்னு யாருக்கும் தெரியலை. இங்கேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது? கலவரம்வேற ஜாஸ்தியாவுதுன்னு
இன்ஸ்பெக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு. இங்கேயே இருந்து என்ன நடக்குமோன்னு தெரியாம இருக்கறதைவிட, காட்டுக்குள்ள போனா
நம்க்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும். அதிர்ஷ்டம் இருந்திச்சின்னா, யாராவது சித்தர் பார்வைல கூட மாட்டினாலும் மாட்டலாம்' என்ற
நினைப்புடன்,

'நானும் உன்கூட வரலாமா?'ன்னு கேட்டான்.

ராபர்ட் அவனை வியப்புடன் பார்த்தான்.

'ஒருத்தொருத்தனுக்கும் ஒரு வழி இருக்கு...... அவனவன் விதியைக் கண்டறியன்னு ஒரு பெரியவர் சொன்னாரு என்கிட்ட. உன் வழி வேற;
என் வழி வேறதான். ஆனாக்க, நாம ரெண்டு பேருமே ஒருவிதத்துல, அவங்கவங்க விதியைத் தேடிகிட்டுத்தான் போறோம். இங்க இருக்கற மத்தவங்கள்லாம் அப்படித்தான். ஆளாளுக்கு ஒரு கவலை இருக்கு. இவங்களோட நான் ஒட்ட மாட்டேன். எனக்கு என்னமோ உன்கூட வர்றது நல்லதுன்னு படுது.'

கந்தன் மேலும் பேசவே, மறுப்பேதும் சொல்லாமல்,
'சரி! கிளம்பு!' என்றான் ராபர்ட்.

கண்டக்டரிடம் போய்,' இப்படியே போனா, கொல்லிமலைக்குப் போயிறலாம்னு அந்தத் தாடிக்காரர் சொன்னாரு. எங்க ரெண்டு பேருக்கும் போக வேண்டிய இடமும் அதான். அதனால, நாங்க இப்படியே போயிக்கறோம்' என்றான்.

'கலவரம் அது இதுன்னு பயந்து, இப்படியே கிளம்பறீங்களாக்கும். இதோ இந்த நிமிஷம், நாங்கள்லாம் உசிரோடத்தான் இருக்கோம்.'
என்றபடியே ஒரு ஆப்பிளைக் கடித்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிரைவர் சிரித்தார்.

'இதோ, இந்த ஆப்பிளைக் கடிக்கறப்போ, அதை மட்டும்தான் நான் நினைக்கறேன். பஸ்ஸை ஓட்டறப்ப அது மட்டும்தான் கவனம் இருக்கும்.
ஏன்னா, நான் எப்பவும் நேத்தியை நினைச்சோ, இல்லை நாளைக்கின்னோ வாழறதில்ல. இதோ, இந்த நிமிஷம்தான் நிச்சயம். இந்த நொடியில வாழறப்போ, நீதான் ராஜா! உலகமே உனக்கு சொர்க்கமா இருக்கணும்னா,.... நீ எப்பவும் இதான்,..... இந்த நிமிஷம்தான் சாசுவதம்னு இருக்கணும்.
அதையே நினைச்சுகிட்டு, எங்க போனாலும் நல்லா இருங்கப்பா'
என விடை கொடுத்தார்.

தாடிக்காரரைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை வழியைச் சரியாகக் கேட்டுக் கொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு,
இருவரும் எதிரே தெரிந்த ஒற்றையடிப் பாதை வழியே நடக்கலானார்கள்.

தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.

தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.

உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!!


[தொடரும்]
*************************************


அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

முந்தைய பதிவு இங்கே!

17.
"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்." [540]

முன்னே ஒரு போலீஸ் ஜீப்! கைகளை ஆட்டியபடியே பஸ்ஸை நிறுத்த சைகை செய்தார்!

'இதுக்கு மேல போகமுடியாது. யாரோ சில ஆளுங்க ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்க! மூணு பொண்ணுங்க அதுல எரிஞ்சு செத்துட்டாங்க!
பெரிய கலவரமா இருக்கு. போற வர்ற பஸ் மேலயெல்லாம் கல்லெறியுறாங்க. ஏற்கெனவே 10-15 பஸ்ஸுங்களைத் தாக்கிட்டாங்க. எங்க பாத்தாலும் தீ வைச்சுக் கொளுத்தறாங்க. அது வேற பெரிய மதக் கலவரமா மாறிக்கிட்டு இருக்கு. திரும்பியும் போக முடியாது. எல்லா ஊருக்கும் பரவுது இந்தக் கலவரம்.
நல்ல வேளையா நீங்க இந்தக் காட்டுப் பக்கமா இருக்கீங்க. பஸ்ஸை இப்படியே ஓரம் கட்டி, மறைவா நிறுத்துங்க. கொஞ்ச நேரத்துல
எதுனாச்சும் ஏற்பாடு பண்ணி உங்களையெல்லாம் பத்திரமா அனுப்பி வைக்கிறோம்.' என்றார் காவல் அதிகாரி.

பஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி ஒரு மரத்துக்குப் பின்னால் நிறுத்தப் பட்டது.

கந்தனும், ராபர்ட்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.

'உனக்கு பயமாயிருக்கா?' கந்தன் கேட்டான்.

ராபர்ட் சிரித்தான்.

'பயமிருந்தா இவ்ளோ தூரம் வந்திருப்பேனா? எல்லாத்தையும் ஒரு விதி தீர்மானம் பண்ணுது. என்னுதை என்னன்னு முடிவு பண்ணும் போதே,
அது எங்கே எப்படி நடக்கணும்னும் அது தீர்மானம் பண்ணிடுது. நான் முன்னமேயே சொன்னது மாரி, என் தலையெழுத்தை எழுதினவன் தான்
இந்த உலகத்தோட தலைவிதியையும் எழுதியிருக்கான். அதை நான் நம்பறேன்னா, நான் இங்கே இருக்கறதும் அவன் எழுதினதுதான்.
இதுலேர்ந்து என்ன நடக்கணும்னும் அவன் முடிவு பண்ணிட்டான். இதான் சிததர் சொல்றதும். உலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு. நீ என்ன
விரும்பறியோ, அதையே அதுவும் நடத்தித் தரும்.... நீ தீர்மானமா அதுல நம்பிக்கை வெச்சியேன்னா!


அதோ பாரு, அந்த ஆளு... நீலசட்டை போட்டிருக்கானே, அவந்தான்... செல்ஃபோனை எடுத்து ஆருக்கோ தகவல் அனுப்பறான்.
இந்த அம்மா தன் புள்ளைங்களை பக்கத்துல வெச்சுகிட்டு, அளுவுது. இப்படியே, இங்க இருக்கற ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மனநிலைல
இருக்காங்க. அவங்க அவங்க நினைப்பு போலத்தான், அவங்க விதி நடக்கும்.'

'என்ன சொல்ற நீ? அப்படீன்னா, இங்க இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரி நடக்காதா?'கந்தன் அவன் பேசுவதை மேலும் கேட்கும் ஆவலுடன்,
அவனைத் தூண்டி விடுகிறாற்போல் கேட்டான்.

'கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஒரு சுனாமி வந்துது. ரொம்பப் பேரு செத்துப் போனாங்க. சில பேரு பொளைச்சாங்க. சில பேரு
எங்கியோ போயி அம்மா அப்பாவை இன்னமும் பாக்காம இருக்காங்க. அல்லாருமே சாவக்கூடாதுன்னுதான் நினைச்சிருப்பாங்க. ஆனாக்க,
அவங்க மனசுல அதையும் தாண்டி, அந்த நேரத்துல ஒரு எண்ணம் ஓடியிருக்கும். நாம செத்துருவோம், நம்ம அம்மா அப்பாவைப்
பாக்க மாட்டோமின்னு. அது ஒனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனா, இந்த அடிப்படையில நினைச்சுப் பார்த்தியானா, ஒனக்கு
விளங்கும்.

இப்போ உன் கதையையே எடுத்துக்க. அதான் பஸ்ஸுல சொன்னியே அந்தக் கதைதான்! யாரோ சொன்னாங்கன்னு, இருக்கற ஆடுங்களை
வித்திட்டு, கிளம்பினே! ஆனா, நடுவுல, உன்னை நம்பாம, உன் லட்சியத்துமேல நம்பிக்கை இல்லாம, எவனோ சொன்னதை நம்பி
அவன் பின்னால போயி, பணத்தைப் பறி கொடுத்தே! அப்பால, உன்னைப் பாத்துப் பரிதாபப்பட்ட ஒருத்தருக்காக இன்னென்னவோ செஞ்சே!
முழு மனசோட! அது பலன் கொடுத்துது.
இப்பக்கூட எடுத்துக்கோ! பணத்தை எடுத்துகிட்டு நீ என்ன பண்ணியிருக்கணும்? நேரா மஹாபலிபுரம் போயிருக்கனும்...
ரயில் புடிச்சு. நடுவுல ஒரு ஆசை. இன்னும் கொஞ்சம் ஊரைப் பார்க்கணும்னு! அதைத்தான் நான் சொன்ன அந்த உலக ஆத்மாவும் செய்யுது இப்ப!
இப்ப நீ இந்த நடுக்காட்டுல! பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!'

'இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?' என்றான் கந்தன்.

'சித்தருங்க எழுதின புக்கெல்லாம் படிச்சுத்தான். அதுல என்னன்னமோ பெரிய விஷயமெல்லாம் சூட்சுமமா சொல்லியிருக்காங்க. ஆன்மீக
விஷயத்தோட கூட அபூர்வமான மூலிகைங்க, இன்னும் சில உலோகங்களைப் பத்தியெல்லாம் கூட சொல்லியிருக்காங்க.
செம்பைத் தங்கமாக்கறது எப்படின்னு ஒரு புக்குல வருது. ஒண்ணுமே புரியலை எனக்கு. அதான் யாராச்சும் சித்தரோட பார்வை என் மேல
விழாதா; அவரோட அருளால இதைக் கத்துக்க மாட்டோமான்னு ஒரு ஆசை. அதான் அலையறேன்.... ஊர் ஊரா! இதோ இதெல்லாம் அது
சம்பந்தமான புஸ்தகங்கதான்' என்றவாறு தன் பையைத் திறந்தான்.

பாதி புரியாமலும், பாதி விருப்பமில்லாமலும், கைக்கு வந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஒன்றும் புரியவில்லை!
போகர், இலுப்பைக்குடி ஸ்வர்ணாகர்ஷண வைரவர், எனப் பல பெயர்கள் இருந்தன. ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது அவன் கவனத்தை ஈர்த்தது.

"எந்தவொரு உலோகத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவில் சூடுபடுத்தினால், சில பச்சிலைகளோடு சேர்த்து பதப்படுத்தினால், தன்னிடமுள்ள
தனிப்பட்ட குணங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஒரு இறுதி நிலையை அடைகிறது, இரு பகுதிகளாக. ஒன்று திரவமாகவும்,
மற்றொன்று திடப்பொருளாகவும்!
அப்போது அது இந்த உலக ஆத்மாவுடன் ஒன்றுகிறது.
அதைக் கையில் வைத்திருந்தால், இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும்,நடந்தது, நடப்பது, நடக்கப்போவது இவையனைத்தையுமே
அறிந்து கொள்ளமுடியும்."


'இதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? எனக்கு ஒரு பெரியவர் சொன்னமாதிரி, சுத்தி இருக்கறவங்களையும், ஒரு சில சகுனங்களையும் மட்டுமே
பார்த்தா போறாதா?' தனக்குத் தெரிந்ததை வைத்து ராபர்ட்டிடம் பேச்சுக் கொடுத்தான்.

'எல்லாத்தையுமே ஈசியாக் கத்துக்கலாம்னு நினைக்கறே நீ! சித்துவேலைன்றது அவ்வளவு சுலபமில்லை. ரொம்ப கடினமானது.பல நிலைகளைத்
தாண்டிப் போகணும் அதுக்கு. கரணம் தப்பினா மரணம்ன்ற மாதிரி. ஒவ்வொரு படியிலியும் பல கட்டுப்பாடுகள் இருக்காம். கொஞ்சம் கவனப்பிசகா
இருந்தாக் கூட அவ்வளவுதான். சர்ருன்னு கீழே தள்ளி விட்டுருமாம். குரு என்ன சொல்றாரோ, அதை அப்படியே இம்மி பிசகாம ஃபால்லோ
பண்ணனுமாம்.'


'இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமின்னுதானே பாக்கறே! 12 வருஷமாச்சு நான் இங்க வந்து! யார் யார் பின்னாலியோ போயி, எங்கெங்கியோ
அடிபட்டு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதுனாலியும் ஒரு பிரயோஜனம் இருக்கு. அசல் யாரு, போலி யாருன்னு இப்ப டக்குன்னு
கண்டுப்பிடிச்சுருவேன்!'

'இப்பிடியே சுத்தினப்பத்தான் எனக்கு ஒண்ணு புரிஞ்சுது. எதுல உன் குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்கன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் அடுத்தவனை யூஸ் பண்ணிக்கறான்.
அப்போதான் முழிச்சுகிட்டேன். சரி, இதுவரைக்கும் நமக்குக் கிடைச்ச அறிவை வெச்சுகிட்டு, இனிமே நாமளே தனியாத் தேடணும். நம்ம நேரம் சரியா இருந்தா தானே குரு ஒருத்தர் வருவாரு. நமக்கு வழி காட்டுவாரு.' என்றான் ராபர்ட்.

'அவரை எப்படிக் கண்டுபிடிக்கறது?' அப்பாவியாய்க் கேட்ட கந்தனை சற்று இரக்கத்துடன் பார்த்தான் ராபர்ட்.

[தொடரும்]
******************************


அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, October 17, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18

முந்தைய பதிவு இங்கே!






18.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று


சூழினுந் தான்முந் துறும். " [380]





'டிக்கெட், டிக்கெட்' கண்டக்டரின் குரல் கேட்டது.

'சேலம் போக எவ்ளோ நேரம் ஆகும்?'

'ஆறு மணி நேரம். வழியில ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னா!' கண்டக்டர் சிரித்தார்.

தமாஷான ஆளுதான் போல என நினைத்தான் கந்தன்.

ஒரு வெள்ளரிப் பிஞ்சை எடுத்துக் கடித்தான்.

ராபர்ட்டிடம் ஒன்றை நீட்டினான்.

'தேங்க்ஸ்' என்றபடி வாங்கிய அவனும் அதைச் சுவைக்க ஆரம்பித்தான்.

'சித்தர்னா யாரு?' மீண்டும் வினவினான் கந்தன்.

'சித்தர்கள் எல்லாம் பெரிய ஆளுங்க!தான் யாருன்னு தெரிஞ்சவங்க! ஆனா, தன்னைக் காட்டிக்க மாட்டாங்களாம்.
அவங்களுக்காகத் தோணினா, நம்மகிட்ட வருவாங்க. அதுக்கு நம்மளைத் தயார் பண்ணிக்கணும் நாம.' ராபர்ட் சொன்னான்.

'அவங்க எதுக்கு நமக்குத் தெரியணும்? என்ன பிரயோஜனம் அவங்களால?' அப்பாவியாய்க் கேட்டான்.

'எதுக்குத் தெரியணுமா? என்ன பிரயோஜனமா? நம்ம நேரம் நல்லா இருந்தா, அவங்க நம்மகிட்ட வருவாங்க! அவங்களால எந்தப் பொருளையும்
தங்கமாக் கூட மாத்த முடியும். அதைத் தெரிஞ்சுக்கத்தான் நான் அலையறேன்!' என்றான் ராபர்ட்.

'என்னமோ விஷயமுள்ள ஆளா இருப்பான்னு பார்த்தா, விளங்காத எதையோ சொல்றானே. ஆருக்கு வேணும் இந்த தங்கம் பண்ற வேலையெல்லாம். இவன் கூட பேசாம இருக்கறதே மேலு'

என நினைத்துக் கொண்டு, இருக்கையில் இருந்து எழுந்து, முன்னே சென்றான்.

டிரைவர் அருகில் ஒரு சீட் காலியாயிருந்தது.

அங்கே உட்கார்ந்து கொண்டு, டிரைவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

'சேலம் பெரிய ஊருங்களா?'

'தம்பி இதுக்கு முன்னே போனதில்லியா? பெரிய ஊருதான் தம்பி. ஆன ஊருல ஒரு அதிசயமும் இல்ல. ஊரைச் சுத்தித்தான்!
அதென்னமோ அந்த மண்ணுக்கு ஒரு மகிமை இருக்கு போல. பெரிய பெரிய சித்தருங்கல்லாம் இருந்திருக்காங்க!'

கந்தன் திடுக்கிட்டான்.

'ராபர்ட் சொன்ன சித்தர் பேச்சு வேண்டாமின்னு இங்க வந்தா, இவரும் அதையே சொல்றாறே' என நினைத்தான்.

'உங்களுக்கு சித்தருங்களைப் பத்தி என்ன தெரியும்? நீங்க பார்த்திருக்கீங்களா?' என்றான்.

'அதில்லேப்பா. நான் இன்னும் அதுமாரி ஒருத்தரையும் பார்த்ததில்ல. என் கதையே வேற' என்றவாறே,



எதிரில் வந்த ஒரு சைக்கிள்காரனை 'ஏ! சாவுக்கிராக்கி! பாத்து ஓட்டக் கூடாது' எனச் சொல்லியபடியே வண்டியை ஒடித்துத் திருப்பினார்.

'நல்லாப் படிச்சு பெரிய வேலைல சேரணும்னு தான் இருந்தேன். ஆனா, ஒரு குடும்ப சூழ்நிலை. வேலைக்கு போவணும்னு ஆயிருச்சு.
இந்த வேலைல இப்ப இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். ஆண்டவன் ஒண்ணு சொல்லிக் கொடுத்திருக்கான் எனக்கு.
ஒனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு போச்சுன்னா, எதைப் பத்தியும் நீ கவலைப் படவே வேணாம்.



நம்மகிட்ட இருக்கறது, அது உசிரோ, இல்லை சொத்துபத்தோ, எதுவானாலுன்னாலும் சரி, போயிருமோ, போயிருமோன்னு,
பயந்து பயந்து சாவறோம். நம்ம தலையெழுத்தை எழுதினவந்தான், நாம இருக்கற இந்த உலகத்தோட தலையெழுத்தையும் எழுதியிருக்கான்னு
புரிஞ்சு போச்சுன்னா, இந்த பயத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லேன்னு புரிஞ்சிரும்!'

கந்தன் ஒருவித மரியாதையுடன் டிரைவரைப் பார்த்தான்.

'இவர் சொல்வதுதான் எத்தனை உண்மை! என் விதிதான் எப்படியெல்லாம் மாறிடுச்சு! அதே மாரி, இதுவரைக்கும் நான் பார்த்த உலகமும்தான்
எவ்வளவோ மாறிடுச்சு?


முட்டத்துக்குப் பக்கத்துல இருந்த என் கிராமத்தை மட்டுமே பார்த்துகிட்டு இருந்த நான், இந்த ரெண்டு வருஷத்துக்குள்ள எத்தனை ஊரைப்
பார்த்துட்டேன்! எத்தனை மனுஷங்களைப் பாத்துட்டேன். என்னவெல்லாம் நடந்திருச்சு. நான் மாறின மாரியே இந்த உலகமும்தான் மாறிடுச்சு.
என் விதியை எளுதின மாரியே, என் பணத்தைப் புடுங்கினவன் விதியும், அண்ணாச்சி விதியும், இன்னும் எத்தினியோ பேரோட
விதியுந்தான் மாறிப் போச்சு! இந்தப் பெரிய விஷயத்தை எவ்வளவு சுளுவா சொல்லிட்டாரு' என ஒரு எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ஒன்றும் பேசாமல், எழுந்து தன் இருக்கைக்கு வந்தான்.

ராபர்ட் தூங்கிக் கொண்டிருந்தான்.

பையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

'பாண்டவர்களைக் கொல்ல எண்ணி ஒரு அரக்கு மாளிகையை நிர்மாணித்து, அதில் இவர்களைத் தங்கச் சொல்லி, விதுரரை அனுப்புகிறான்
துரியோதனன்.'


'ஒருத்தனை ஒருத்தன் ஏன் இப்படி அடிச்சுக்கிறானுங்க! அந்தக் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இதே கதைதானா? சே!' என அலுத்துக் கொண்டே புத்தகத்தை மூடினான்.

ஜன்னல் வழியே வெளியில் பார்த்தான்.

காற்று சூடாக வீசியது.

வெக்கையாக இருந்தது.

என்னவோ கெட்டது நடக்கப் போகுது எனத் தோன்றியது, கந்தனுக்கு.

பஸ் சட்டென பிரேக் போட்டு நின்றது!




[தொடரும்]
********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Tuesday, October 16, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

முந்தைய பதிவு இங்கே!




15.


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]


ராபர்ட் பஸ்ஸில் இருந்த அனைவரையும் ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.

'நான் எப்படி! இங்கே! இந்த ஊரில்!

எங்கோ, இங்கிலாந்தில் பிறந்த நான் இப்போது இங்கே!

இந்தியாவில் பணி புரிந்து திரும்பிய என் தந்தை.

சென்னை என்னும் ஊரைப் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்.

யாரோ சித்தர்களாம்.

எல்லாம் தெரியுமாம் அவங்களுக்கு.

யாரோ ஒரு சித்தர், சிவன்மலைன்னு ஒரு ஊருலேர்ந்து வந்தாராம்.

அப்பாவைப் பார்த்ததும், திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.

'நீ எங்க ஆளு! உன் ஆத்மா எங்களுது! ஆனா உடம்பு அந்நியமாயிடுச்சு! நீ போயிடுவே! ஆனா, உன் பையன் இங்கே வருவான்,...
என்னைத் தேடி' அப்படீன்னாராம்.


டாடிக்கு ஒரே ஆச்சரியம்.

ஏன்னா, அப்போ அவருக்கு கல்யாணமே ஆவலை!

3 வருஷம் கழிச்சி இங்கிலாந்து திரும்பினதும்தான் என் மம்மி ஸ்டெல்லாவோட மேரெஜ் ஆச்சு.

அப்புறம்தான் நான் பொறந்தேன்.

கெமிஸ்ட்ரி மேஜர்.

ஆனா, படிப்புல நாட்டமே இல்லை.

கீழைநாட்டு சிந்தனைகள் பற்றி எப்படியோ ஒரு நாட்டம் பிறந்தது.

சகுனம்.... அப்படீன்னு ஒண்ணு என்னை ரொம்பவே பாதிச்சுது.

இந்த உலகத்துக்குன்னு ஒரு பொது மொழி இருக்குன்னு என் மனசு சொல்லிச்சு.

இதைத் தெரிஞ்சு பேசறவங்க இந்தியாவுல, தமிழ்நாட்டுல,
அதுவும் குறிப்பா ஏதோ ஒரு மலைல இருக்கறதா, உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்துது.

ஒரு சித்தரை எப்படியாசும் பாக்கணும்னு ஒரு உந்தல்!

எதையும் தங்கமாக்கலாமாமே அவரால!'

கிளம்பிட்டான்!

சென்னையிலே தங்கி, தமிழ் கத்துகிட்டு, சில பேர்கிட்ட ஏமாந்துபோயி, பல புத்தகங்களை வாங்கிப் படிச்சு, அப்புறம், மதுரை வந்து, அங்கே கொஞ்ச காலம் திரிஞ்சு, அலைஞ்சு, கோவிலில் பார்த்த ஒருவர் 'நீ இப்படிப் போ' என அடையாளம் சொல்ல,இப்போ இந்த பஸ்ஸுல!
----------

எத்தனை தடவை படிச்சாலும், இந்தக் கதை புரியவே மாட்டேங்குது!' சலிப்புடன் உரக்கச் சொன்னான் கந்தன்.

பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் இதைக் கேட்டான்.

'என்ன புரியல?'

'ஒண்ணுமில்ல! இந்தப் புஸ்தகத்தைச் சொன்னேன்'

சொல்லிக் கொண்டே, பையிலிருந்து இரு கற்களை எடுத்து கையில் உருட்டினான்.

ராபர்ட் துள்ளிக் குதித்தான்.... அவைகளைப் பார்த்ததும்!

'கருப்பு வெள்ளைக் கல்லுங்க!!'

கந்தன் சட்டென அவைகளை மீண்டு பைக்குள் போட்டான்.

'ஒரு ராசா எனக்கு அதைக் கொடுத்தாரு!' சற்று வீராப்பாகச் சொன்னான்.

ராபர்ட், சிரித்தபடியே தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்து கையை விரித்தான்.

அவன் கையிலும் இரண்டு கற்கள்.... ஒன்று கருப்பு, ஒன்று வெள்ளை!

'யாருன்னு சொன்னே? ராசா... யூ மீன் கிங்?' என்றான் ராபர்ட்.

'ஒரு ஆடு மேய்க்கறவனுக்கு ராசா வந்து இதைக் கொடுத்தாரான்னு நினைக்கறேல்ல நீ?'

'சேச்சே! அப்படில்லாம் இல்ல! ஆடு மேய்ச்ச ஒருத்தர்தானே பெரிய சித்தரா திருமூலர்னு வந்தாரு.
ஏன், உங்க கண்ணனே ஒரு ஆடு மேய்ச்ச இடையன் தானே!
உன்கிட்ட அவர் பேசினாருன்றதை நான் நம்பறேன்'

ஆச்சரியம் கலந்த குதூகலத்துடன் கந்தன் ராபர்ட்டைப் பார்த்தான்.

'இன்னொண்ணு கூட எனக்குத் தெரியும். உங்க ஊருல சாமி சிலை செய்யணும்னா, ஒண்ணா கருங்கல்லுல, இல்லேன்னா,
சலவைக்கல்லுலதான் செய்வீங்க! கருப்பு இல்லேன்னா வெள்ளைக் கல்லு! அதைத்தான், இந்தப் பெரியவரு ஒரு அடையாளமாச்
சொல்லிருக்காரு.' என்றான் ராபர்ட்.

'இவன் என் பக்கத்துல வந்து உக்காந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என நினைத்தான் கந்தன்.

'இப்ப நீ என் பக்கத்துல உக்காந்திருக்கறது கூட ஒரு நல்ல சகுனம் தான்!' எனக் கூவினான் ராபர்ட்!

'ஐயோ! இதையும் சொல்லிட்டானே!' என களிப்பானான் கந்தன்!

'ஆரு சொன்னாங்க உனக்கு சகுனத்தைப் பத்தி?' என ஆவலுடன் கேட்டான்.

'ஆரு சொல்லணும்? உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான். இந்த உலகத்துக்குன்னே ஒரு பொது மொழி இருக்கு. ஆனா,
எல்லாரும் அதை மறந்திட்டாங்க!
அதைத் தேடத்தான் நான் இங்கே வந்திருக்கேன். உங்க ஊருல இருக்கற சித்தருங்களுக்குத்தான் அது தெரியுமாம்.
அப்படி ஒரு ஆளைத் தேடித்தான் நான் வந்திருக்கேன்.'

'நான் ஒரு புதையலைத் தேடிகிட்டு போயிட்டு இருக்கேன்' சொன்னவுடன் அவசரப்பட்டு உளறிட்டோமே என நாக்கைக் கடித்துக் கொண்டான்.

ராபர்ட் அதைக் கவனித்தாற்போல் காட்டிக் கொள்ளாமல், தலையை நிமிர்த்தி, ஏதோ கனவுலகில் மிதந்தவாறே சொன்னான்!

'ஒரு வகையில பார்த்தா, நானும்தான்!' என்றான்.

'சித்தர்னா யாரு?' கந்தன் வினவினான்.

[தொடரும்]
***********************************




அடுத்த அத்தியாயம்

Read more...

Sunday, October 14, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

முந்தைய பதிவு இங்கே!

14.


"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி


மாசறு காட்சி யவர்க்கு." [352]







எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என ஒரு கணம் நினைத்தான்.

அதற்குள் அந்த ஆள் இவனைக் கடந்து சென்றான்.

சிறிது தூரம் சென்றவன், சட்டென ஒரு பொறி தட்டினாற்போல் திரும்பினான்!

இவன் மீது மோதியவன் தூரத்தில் இருந்து இவனைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தபடியே மறைந்தான்.

'அவனேதான்!' அன்று இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன்!

சட்டென கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்!

கற்கள் தட்டுப் பட்டன!

'இது ஒரு சகுனம்!

எனக்கு இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்னவெனச் சுட்டிக்காட்டும் தருணம்!

இல்லையென்றால், இத்தனை நாளாய் இல்லாமல், இன்று அவன் என் கண்ணில் படுவானேன்?

எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!

இன்று, அதைவிட, அதிகமாகப் பணம் என்னிடம் இருப்பதற்கு இவனே காரணம்!

அன்னிக்கு எனக்கு ஒலகம் தெரியாது.

ஆனா, இன்னிக்கு, அண்ணாச்சி தயவால, கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிஞ்சிருக்கு!

எதையும் சமாளிக்கலாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.

ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?

அப்படீன்னா இவனும் எனக்கு உதவிதான் பண்ணியிருக்கான்.

அப்படிப் பார்த்தா, நான் திரும்பவும் ஊருக்குத் போய், ஆடு மேய்க்கப் போறதுல என்ன லாபம்?

ஒன்னோட கனவை நீ தொடருன்னு சொல்றதுக்காகவே இப்ப இவன் வந்து எம்மேல மோதிட்டுப் போறானோ?'


திடீரென ஒரு புத்துணர்ச்சி பிறந்தது கந்தனுக்குள்!

மனசு சந்தோஷமாகி, லேசாத் துள்ளியது!

'நான் எப்ப வேணும்னாலும் திரும்பவும் ஆடு மேய்க்கப் போலாம். இல்லேன்னா ஒரு ஓட்டல் கூட நடத்த முடியும்! ஆனாக்க,
என்னியப் பர்த்து ஒரு ராசா, மார்ல தங்க மாலை போட்ட ராசா, உனக்குப் புதையல் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு.
இது எல்லாருக்கும் நடக்கற ஒண்ணு இல்லை. எனக்கு நடந்திருக்கு. இப்ப நான், அத்த வுட்டுட்டு, திரும்பவும் ஊரைப் பாக்கப்
போனேன்னா, இதுக்கெல்லம் அர்த்தமே இல்லாமப் போயிரும்.'

ஒரு புது வேகத்துடன் கந்தன் நடை போட்டான்.

'மஹாபலிபுரம் போவணும்.

அதுக்கு முன்னாடி, வாத்தியார் சொன்ன மாரி, பார்க்க வேண்டிய ஊரையெல்லாம் பார்க்கணும்.

இப்பக் கிடைச்ச மாரி, இன்னும் எத்தினியோ அனுபவம் எனக்குக் கிடைக்கும்.

இனிமே அதான் நான் செய்ய வேண்டியது'
என முடிவு செய்தான்.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்!

கண்ணில் பட்ட முதல் பேருந்தில் ஏறினான்.

'தம்பிக்கு எந்த ஊருக்கு டிக்கட்டு?' கண்டக்டர் கேட்டார்.

இந்த பஸ்ஸு எங்கே போவுதோ, அங்கே!' என்றான்.

அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே, சேலத்துக்கு ஒரு டிக்கட் கிழித்தார்.

ஜன்னல் வழியே,' அண்ணே, அண்ணே! எட்டு பிஞ்சு 2 ரூவாண்ணே! வாங்கிக்கங்கண்ணே!' எனக் கூவினான் ஒரு சிறுவன்!


'இவனுக்கு என்ன கனவோ? எதை சாதிக்க வேண்டி, இப்படியெல்லாம் கூவி விற்கிறானோ?' என ஒரு நினைப்பு மனதில் ஓட,
ரெண்டு கட்டு வாங்கிக் கொண்டு ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்து, 'மிச்சத்த நீயே வெச்சுக்கோ' என்றான்.

சிறுவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.

'நீங்க நல்லா இருக்கணும்ண்ணே!' என வாழ்த்தினான்.

பஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக ஒரு வெள்ளைக்காரன் ஏறினான்.

முதுகில் மாட்டியிருந்த தன் பையை மேலே வைத்துவிட்டு, இவன் அருகில் உட்கார்ந்தான்.

'சேலம்தானே போவுது?' என அரைகுறைத் தமிழில் வினவினான்.

கந்தன் அவனை அதிசயமாகப் பார்த்தபடியே, 'ஆம்!' என்றான்.

பஸ் புறப்பட்டது.

[தொடரும்]
*****************************



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15



முந்தைய பதிவு இங்கே!


13.



"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]



இரண்டு மாதம் போனது.

"மீனாட்சி பவன்" என்ற இரண்டு மாடி ஓட்டல் ஜங்ஷனுக்குப் பக்கத்தில் புதிதாக எழுந்தது.

மேல்மாடி ஏ/சி செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.

பெட்டிக்கடை இப்போது பெரிதாக விரிவாக்கப் பட்டு, தினசரிப் பத்திரிக்கைகள், கல்கி, குமுதம், விகடன் குங்குமம் என வாரப்பத்திரிக்கைகள்,
எனப் பெரிதாகியது.

ஓட்டலில் எப்போதும் அலை மோதும் கூட்டம்.

இப்படியே தொடர்ந்தால், இன்னும் ஆறு மாதத்தில் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு, ஊர் திரும்பலாம் என கந்தன் முடிவு செய்தான்.

"உனக்கு என்ன வேண்டுமோ, அது எப்போதும் உனக்குத் தெரிய வேண்டும்" பெரியவரின் வாக்கு கேட்டது!

'இங்கு வந்து ஒரு ஆண்டாகியும் இந்தக் கல்லுங்களைக் கேட்க வேண்டிய நிலைமையே வரலை! ஒருவேளை, ஒத்தைக்காசு செலவில்லாம, நாம்
ஒண்ணுமே பண்ணாம, என்கிட்ட இருந்ததைவிட, ரெட்டைப்பங்கு பணக்காரனா ஊரு திரும்பி, முன்னே இருந்ததைவிட அதிகமா ஆடு மாடுங்களை
வாங்கணும்னுதான் விதி இருந்திருக்கோ என்னமோ!' கந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

'ஏங்க! கோவில்ல அம்மனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஒரு பிரார்த்தனை. ஆரைப் பாக்கணும் அதுக்கு?' பதட்டத்துடன் ஒரு யாத்ரீகர் கேட்டார்.

'அதுக்கென்ன! செஞ்சிருலாம்!' எனக் கந்தன் சொன்னான்.

கடை ஆள் ஒருவனை அழைத்தான். ' ஐயாவைக் கூட்டிகிட்டுப் போயி, அவருக்கு வேணும்ன்றதைச் செஞ்சு கொடு' என அனுப்பிவைத்தான்.

அவர் சந்தோஷமாகத் திரும்பி வந்து கந்தன் கையில் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து, அவனைப் பாராட்டிச் சென்றார்.

'இங்க வர்றவங்களுக்கு நாம் தேவையான வசதி செஞ்சு கொடுக்கணும்.'நம்ம லாட்ஜுக்கு வர்றவங்களுக்கு, திரும்பிப் போறவரைக்கும் எல்லா
வசதியும் செஞ்சு கொடுக்கணும்.' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

2 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை! கந்தன் கண் விழித்தான்.

பெட்டியில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்!

'அம்பது ஆடு வாங்கலாம். பத்து எருமை மாடுகூட வாங்கலாம். அவ்ளோ பணம் சேர்ந்திருக்கு.' என நினைத்தான்.

அண்ணாச்சி எழுந்து வந்து ஒரு பீடி பத்த வைத்தார்.

இவனைப் பார்த்தார்.

'என்ன இன்னிக்கு வெள்ளனவே எளுந்தாச்சு போல! எதுனாச்சும் வேலையா?' என்றார் அன்பாக.

'இன்னிக்கு நான் கிளம்பறேன். ஆடு மாடு வாங்கத் தேவையான பணம் சேந்திருச்சு. நீங்களும் எப்ப வேணும்னாலும் காசிக்குப் போவலாம்.
மாணிக்கம் இப்ப நல்லாவே தேறிட்டான். கடையப் பாத்துக்குவான்' என்றான் கந்தன்.

அண்ணாச்சி ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தார்.

'எனக்கு ஆசி சொல்லி அனுப்புங்க! நீங்க இல்லேன்னா, நான் என்ன பண்ணியிருப்பேன்னே தெரியாது!' எனக் கலங்கினான் கந்தன்.

'நாந்தேன் உனக்கு நன்றி சொல்லணும். என்னையே எனக்குப் புரிய வெச்சவன் நீ! ஒனக்கே தெரியும்... நா காசிக்கெல்லாம்
போவப் போறதில்லன்னு! என் காலம் இங்கியே இந்த மதுரைலதான்! அதேமாரி, நீயும் ஆடு மாடெல்லாம் வாங்கப் போறதில்லைன்னும்
எனக்குத் தெரியும்'
என்றார் அண்ணாச்சி!

'ஆரு சொன்னாங்க உங்களுக்கு?' என ஆச்சரியத்துடன் வினவினான்.

'ம்ம்ம்!...ஒரு ராசா கனவுல வந்து சொன்னாரு' எனச் சிரித்தார் அண்ணாச்சி!

தன் கண்கள் கலங்குவதைக் கந்தன் பாராத வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்!
***********

கந்தன் தன் துணிமணிகளை ஒரு பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

ஒரு மூலையில் கிடந்த பழைய துணிப்பை அவன் கண்களில் பட்டது!

ஆவலோடு அதை எடுத்துப் பிரித்தான்.

உள்ளே ஒரு பழைய வேட்டியும்.... ஒரு கசங்கிய துண்டில் சுற்றி வைத்திருந்த இரண்டு கற்களும்!!!

பெரியவர் கொடுத்த கருப்பு வெள்ளைக் கற்கள்!

இத்தனை நாட்களாய் மறந்தே போயிருந்தான் இந்தக் கற்களை!

'உன் கனவை ஒரு நாளும் மறக்காதே' பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'கனவா? எல்லாம் கனவாவேப் போச்சு! எங்கேருந்து வந்தேனோ, அங்கியே திரும்பவும் போகப் போறேன். இந்தக் கல்லுங்களை
தெருவுல ஆருக்காச்சும் கொடுத்திறணும்' என முடிவெடுத்து மீண்டும் அவைகளை ஒரு முறை பார்த்தான்.

......"நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."....... கிழவர் சொன்னது காதில் கேட்டது.


'ஆமா! உன் ஆடுங்களை வித்து வர்ற பணத்தை ஒர்த்தன் திருடிட்டு போயிருவான். சோறு போட ஒர்த்தன் வருவான். அவனோட சேர்ந்து
நீ பெரிய ஆளா வருவே! முன்னே இருந்த ஆடுங்களை விட இன்னும் அதிகமா வாங்கற அளவுக்குப்
பணம் கிடைக்கும்னு கூடத்தான் அவரு சொல்லலை!' என்று முணுமுணுத்தான்!

'எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி!' என்றபடியே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

அண்ணாச்சியைப் பார்த்தான்.

யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருந்தார்!

அவரைப் பார்த்ததும், ஏனோ பெரியவரின் நினைவு வந்தது கந்தனுக்கு!

........"அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.
அவனுக்கா ஒரே கோவம்!
வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.
சிப்பி உடைஞ்சுது.
உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!
இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!
இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றர் கிழவரின் சொற்கள் மனதில் கேட்டது!

அண்ணாச்சியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியில் வந்தான்.

இன்னுமொரு முறை பார்த்தால், அழுது விடுவொமெனத் தோன்றியது அவனுக்கு.

திரும்பி, மீனாட்சி பவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்!

இதையெல்லாம் விட்டுப் போகிறோமே எனத் துக்கமாக வந்தது!

'இப்ப எங்கே போகப் போறேன்? நான் பொறந்து வளர்ந்த எடத்துக்குத்தானே! மறுபடியும் ஆடு மாடுங்களை மேய்ச்சுகிட்டு!'
ஒரு தீர்மானத்துடன் நடந்தான்.

ஆனால், மனதில் ஒரு திருப்தி இல்லை!

'எதுக்காவ வந்தேனோ, அது நடக்கலை. அண்ணாச்சி காசிக்குப் போகப் போறதில்லைன்ற மாரி, நானும் புதையலைப் பாக்கப் போறதுஇல்லை!'

யோசித்துக் கொண்டே நடந்தவன் மீது எவனோ மோதினான்!!



[தொடரும்]
*******************************


அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, October 10, 2007

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்" -- 14

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 14


முந்தைய பதிவு இங்கே!



12.


"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்." [611]


கிட்டத்தட்ட 15 நாள் ஆகிவிட்டது கந்தன் அங்கு வேலை செய்ய ஆரம்பித்து.

வேலை ஒன்றும் அவ்வளவு கடுமையாயில்லை.

அதேசமயம் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாகவும் இல்லை எனப் பட்டது கந்தனுக்கு.

கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களைத் தவிர, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இங்கு வருவதில்லை என்பதைக் கவனித்தான்.

உள்ளே ஸ்டோர் ரூமில் கிடந்த கரும்பலகையைத் தூசி தட்டி, "இன்றைய ஸ்பெஷல்; டிபன் ரெடி, அளவு சாப்பாடு 10 ரூபாய் மட்டுமே" என
கவர்ச்சிகரமாக எழுதி வெளிவாசலில் போவோர், வருவோர் கண்ணில் படும்படி வைத்தான்.

கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது.

சரக்கு மாஸ்டரிடம் போய், அவருக்கு சில தெக்கத்தி உணவுவகைகளை ருசிகரமாகச் செய்வது எப்படி என தான் தன் தாயிடமிருந்து
கற்றுக் கொண்டு, ஆனால், செய்யமுடியாமல் போன, சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தான்.

"வாசலில் ஒரு சின்ன பெட்டிக்கடை போட்டு, கூல்ட்ரிங்ஸ், மிட்டாய் வகைகள், வாழைப்பழம், பீடி சிகரட், வெத்தலை பாக்கு புகையிலை,
என வைத்து வியாபார செய்தால் கூட்டம் அதிகமா வருமே!" அண்ணாச்சியிடம்.... ஓட்டல்காரரை இப்போதெல்லாம் அப்படித்தான்
அழைக்கிறான் கந்தன்!.....ஒருநாள் இரவு கடை அடைத்துவிட்டு சாப்பிடுகையில் சொன்னான்.

"ரொம்ப செலவளியும் கந்தா அதுக்கெல்லாம். பார்த்துக்க வேற ஆளு போடணும்! இருக்கற நிலைமையில அதெல்லாம் தேவையா?" எனத்
தயங்கினார் அண்ணாச்சி.

'நான் ஆடு மேய்க்க கோயிலாண்டை போகச் சொல்ல, எதுனாச்சும் பாம்பு கடிச்சு சில சமயம் ஆடுங்க ஏதோ ஒண்ணு செத்துக் கூடப் போயிருக்கலாம்
அதுக்காவ, அங்க போகாம இருக்க முடியுமா?. கொஞ்சம் துணிஞ்சுதான் எறங்கணும். ஊர்ல உங்க அக்கா மகன் ஒருத்தன் இருக்கான்.
அவனுக்கு ஒரு வளி பண்ணனும்னு ஆர்கிட்டயோ போனவாரம் சொல்லிகிட்டு இருந்தீங்களே. காதுல விழுந்திச்சு. அவரைக் கொண்டாந்து
வைக்கலாமே'

"அதுக்கில்லப்பா. இப்போ பிசினஸ் கூட கொஞ்சம் பரவாயில்லைதான். இதுவே போறுமோன்னு நினைக்கறேன். இப்படியே ஓடட்டுமே. நீகூட
சீக்கிரமே ஒனக்குத் தேவையான பணத்தை சேர்த்திரலாம். எதுக்கு அதிகமா ஆசைப்படணும்?" என்றார் அண்ணாச்சி.

நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டியதைச் செஞ்சிறணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்காரு! நாம் புதுசா ஒண்னு
செய்யறப்ப, நம்ம வாழ்க்கையும் நமக்கு உதவுமாம்"

கந்தனை வியப்புடன் பார்த்தார் அண்ணாச்சி! 'இவன் சொல்றதுல கூட விசயம் இருக்கு போலிருக்கே!
காத்துள்ளபோதே தூத்திக்கோன்னு
ஆத்தாகூட அடிக்கடி சொல்றது இதான் போல.
இப்ப இவன் வந்தது கூட ஒரு நல்ல சகுனந்தானே. இப்பத்தானே யாவாரம் கொஞ்சம் சூடு
பிடிச்சிருக்கு' என எண்ணியபடியே, அவனைப் பார்த்து,

"ஆமா, நீ எதுக்காவ சென்னைக்குப் போவணும்னு இருந்தே? ஆரு இருக்கா அங்க?" என வினவினார்.

"சும்மாத்தான். சுத்திப் பாக்கலாமேன்னுதான்!" இல்லாத புதையலைத் தேடி, இருந்த ஆடுகளையும், கைப்பணத்தையும் இழந்த அந்த நினைவை
மறக்க வேண்டி, உண்மையைச் சொல்வதைத் தவிர்த்தான் கந்தன்.

'அப்பச்சரி! ரொம்பப் பேருங்க அப்பிடித்தான் சொல்லிகிட்டு போறானுவ' என்று சிரித்தார் அண்ணாச்சி.

'நா ஒண்ணும் அந்த சோமு அண்ணாச்சி மாரி பெரிய மொதலாளி இல்லே! இருக்கற கொஞ்சநஞ்ச காசையும் பொட்டிக்கடைல போட்டு,
நட்டமாகிப் போச்சுன்னா, என்ன பண்றதுன்னுதான் யோசிக்கறேன். இப்ப ஏன் இவ்ளோ குறியா இருக்கே நீ இதுல?' என்றார்.

" எவ்வளவு சீக்கிரமா கொஞ்சம் ஆடு வாங்க பணம் கிடைக்குதோ, அதை நம்ம நேரம் நல்லா இருக்கறப்பவே சேத்துறணும்னு நினைக்கறேன்."

அண்ணாச்சி சற்று நேரம் மௌனமாயிருந்தார். தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"ஆறு வயசுல இந்த ஊருக்கு வந்தேன் நான். கையில காலணா காசு கிடையாது.என்னென்னமோ வேலைல்லாம் செஞ்சு, ஒரு ஓட்டல்ல சேந்து,
அங்கேயே தொழில் கத்துகிட்டு, 20 வருசத்துக்கு முந்தி இந்த ஓட்டலை ஆரம்பிச்சேன். மீனாட்சி அருளால ஏதோ பொளப்பு ஒடிகிட்டிருக்கு.
அவளைக் கேக்காம, அவகிட்ட சொல்லாம நான் எதுவும் செய்யறதில்ல. அவதான் எம்மேல இரக்கப்பட்டு, ஒன்னிய இங்க அனுப்பி
வெச்சிருக்கான்னு நினைக்கறேன். ஏன்னா, ஆரும் இதுக்கு முந்தி இதுமாரி எனக்கு சொன்னதில்லை. எனக்கு கூட ஆசை இருக்கு!
ஒருதரம் காசிக்கு போவணும்னு. எங்க பரம்பரைல ஒருத்தரு அங்கே போயி மடமெல்லாம் கட்டிருக்காராம். அதை ஒருதரம் போயிப் பாக்கணும்னு
எங்க அப்பாரு சொல்லிகிட்டே இருப்பாரு. அவரு சொல்லச் சொல்லி,எனக்கும் மனசுல அந்த ஆசை இருக்கு. ஆனா போக முடியல. கடைய
ஆரு பாத்துப்பாங்க நான் போனா? போனவன்லாம் வந்து சொல்லுவான்...'சுந்தரம், உங்க மடத்துக்கும் போயிட்டு வந்தேன். நல்லா நம்ம
ஊரு சாப்பாடு போட்டாங்க புண்ணியவானுங்கன்னு! கேக்கறப்ப மனசு துடிக்கும். எல்லாம் கனவாவே முடிஞ்சிரும்னு நெனக்கிறேன்.
நானாவது... அங்க போவப் போறதாவுது! அதெல்லாம் ஆவற காரியம்னு தோணல. ஆனா நீ... வாளவேண்டிய புள்ள. நாலு எடம்
பாக்கணும் நீ! என்னிய மாரி இருந்திடக் கூடாது! சரி, சரி! மீனாட்சி சொல்லிட்ட! கடை போட்டுறலாம்! போய்ப் படு" என்றபடியே எழுந்தார்.

சொன்னபடியே பத்து நாளில் ஒரு சின்ன பெட்டிக்கடை வாசலை அலங்கரித்தது.

ஊரில் இருந்து அக்கா மகன் வந்து பெட்டிக்கடையைப் பார்த்துக் கொண்டான்.

ஒரு 10 பேரு எப்பவும் நின்னு, பார்த்துவிட்டு, கடையில் எதையாவது வாங்கினார்கள்.

அப்படியே வாசம் பிடித்து, உள்ளேயும் வந்து சாப்பிட்டார்கள்!

இந்த கடையை இத்தினி நாளு விட்டுட்டோமேன்னு சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

சென்றவர்கள் அடுத்தவருக்கும் சொன்னார்கள்.

அவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டே சந்தோஷமாகச் சென்றார்கள்.

கோவில் பார்க்க வருபவர்களும் கூட்டம் அதிகமா இருக்கே என இந்தக் கடைக்கு வர ஆரம்பித்தார்கள்!

வியாபாரம் சூடு பிடித்தது.

அண்ணாச்சிக்கு கவனிக்கக் கூட நேரமில்லாமல் போனது!

கூட 3 ஆட்களை வேலைக்குச் செர்த்தார்.

'எலே! அண்ணாச்சியக் கவனி! ஐயாவுக்கு என்ன வேணும்? ஏய்! பராக்கு பாத்துகிட்டு நிக்காத! டேபிளை தொடை!'

அதிகாரம் பண்ணவே நேரம் சரியாக இருந்தது.

கந்தனும் அயராது வேலை செய்தான்.

அண்ணாச்சிக்கு பக்கபலமாக இருந்து கடையின் பெரும்பாலான பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டான்.

பெரியவர் கொடுத்த கற்களை மறந்தே போனான்!

புதையல் ஒரு கனவாகவே போனபின்னர், இனி அதற்கு என்ன வேலை இருக்கு எனவோ, என்னவோ!

"கடைக்கு கூட்டம் ஜாஸ்தியா வருது இப்பல்லாம். எடம் பத்தலை. பக்கத்து கடை மூடறாங்களாம். அதையும் வாங்கிப் போட்டு,
நம்ம கடையை கொஞ்சம் பெருசாக்கினா, நெறயப் பேரு வருவாங்க"
மெதுவாக ஒரு நாள், அண்ணாச்சியிடம் ஆரம்பித்தான்.

அவன் வந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது!

"வாங்கலாந்தான்! எடம் பெருசானா அதுக்கேத்த மாரி, நிர்வாகம் பண்ணனும். செலவு இன்னமும் அதிகமாவும். ஆளுங்களும் கூட
வேலைக்கு வைக்கணும். 20-22 வருசமா இப்பிடியே ஓட்டிப் பளகிட்டேன். இப்பம் போயி, இத்தெல்லாம் செய்யணுமான்னு யோசிக்கறன்."

"நல்லதுதானே! காலம் மாற்ரப்ப, நாமளும் மாறலாமே!"

"நான் பாத்துகிட்டு இருக்கறப்பவே எதுத்த கடை சோமு பெரிய ஆளா கிடுகிடுன்னு வளந்து, இன்னிக்கு சோமு அண்ணாச்சி ஆயிட்டான்.
இதேமாரி, இன்னும் எத்தினியோ பேரு. நாந்தேன், நமக்கு எதுக்கு இதெல்லாம்னு பயந்து, பயந்தே, ஒண்ணும் பண்ணாம இருந்திட்டேன்.
இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சலே வந்திருக்கு. அன்னிக்கு ஒன்னிய அந்தக் கேடிப்பய கூட்டிகிட்டு போறப்பவும் அப்பிடித்தேன்.
நமக்கு எதுக்கு வம்புன்னு சும்மா இருந்திட்டேன். ஆனா, அதுகூட எனக்கு நல்லதாத்தான் ஆயிருக்கு... ஒருவகையில! ஒண்ணு மட்டும் நிச்சயம்.
நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்! இருக்கறது போதும்னு இதுவரைக்கும் இருந்திட்டேன்.
இல்லேடா!இதுக்கு மேலியும் ஒனக்கு நான் கொடுக்கப் போறேன்னு அம்மன் சொல்லுறா... ஒன் ரூபத்துல வந்து! இதையும் ஒதுக்கினேன்னா,
நாந்தேன் பெரிய முட்டாள் இந்த ஒலகத்துல. தேடிப் போக வேணாம்னாலும், வர்றத விடறது முட்டாத்தனம்தான்னு எனக்கு நீ புரிய வைக்கற"

அண்ணாச்சி பேசிக் கொண்டே போக, 'நல்லவேளை நான் பேசாததும் நல்லதுக்குத்தான்' என மனதில் நினைத்துக் கொண்டான் கந்தன்.

"வைகைல வர்ற வெள்ளத்த, எவனாலேயும் தடுத்து நிறுத்த முடியாது"ன்னு எங்க அப்பச்சி சொல்லுவாரு. எல்லாம் விதிப்படி நடக்கட்டும்'
என்றவாறு சந்தோஷமாகச் சிரித்தார்.



[தொடரும்]
****************************



அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP