Wednesday, April 22, 2009

"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்]

"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!][முந்தைய பதிவு]


அடுத்த சில தினங்களில் வந்த செய்தி வருத்தமளிப்பதாக இருந்தது.

காட்டுக்குள்ளே சென்றவரைச் சுற்றி வளைத்து கொத்துக் கொத்தாக அடித்து நொறுக்கி சாகடிப்பதாக செய்திகள் வந்தன.

கவலையுடன் இருந்த மாரியும் அவன் கூட்டமும் ஊரிலேயே பெரிய வக்கீலான ஞானசம்பந்தனைப் போய் சந்தித்துத் தங்கள் சோகக்கதையைக் கூறி அழுதனர்.

அவர்கள் சொல்லச் சொல்ல ஞானசம்பந்தனின் கண்கள் கலங்கின. கொஞ்சம் கோபமும் வந்தது அவருக்கு.

'இத்தனை நாள் நீங்கள்லாம் என்ன செய்துகிட்டிருந்தீங்க. உங்க வேலையைப் பார்த்துகிட்டு நீங்கள்லாம் மட்டும் கூடிக் கூடிப் பேசிகிட்டு அக்கடான்னு இருந்துவிட்டு இப்ப வந்து சொல்றீங்களே! இல்லையில்லை, நாங்க சொல்லிகிட்டுத்தான் இருந்தோம்னு சொல்லப் போறீங்க! ஆனா, இது எத்தனை பேருக்குச் சரியாத் தெரிவிச்சோம்னு ஒரு நிமிஷமாவது நினைச்சுப் பார்த்தீங்களா? சரி, சரி. இப்ப அதைப் பத்திப் பேசி என்ன பிரயோஜனம்? நிலைமை ரொம்பவே முத்திப் போன மாதிரி இருக்கு. இப்பவாவது வந்தீங்களே! என்னால ஆனதை செய்யறேன். கவலைப் படாம போங்க.' எனச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

தன்னுடைய ஜூனியரைக் கூப்பிட்டு ஒரு சில உத்தரவுகள் அவசர அவசரமாகப் போட்டார்.

'இன்னும் நாலு நாளைக்கு வேறெந்தக் கேசும் எங்கிட்ட கொண்டு வர வேணாம். உடனே ஒரு பெட்டிஷன் ரெடி பண்ணு. விஷயத்தை நான் சொல்றேன் எழுதிக்கோ!' எனச் சொல்ல ஆரம்பித்தார்.

சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு கணினியை நோக்கி ஓடினார் அந்த வயதான ஜூனியர்!

தனது நண்பரான ஐ.ஜி.யை செல்ஃபோனில் அழைத்து, விஷயத்தை விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.

'எங்களுக்கும் இப்பத்தான் தகவல் வந்தது. அது ஒரு கட்டுப்பட்டி கிராமம். இந்த நூற்றாண்டிலும் போலீசு உள்ளே போகணும்னா அனுமதி வாங்கிகீட்டுத்தான் போகணும்னு ஒரு கட்டுப்பாடு! உதவி பண்ணலாம்னு போனவங்களைக் கூட அடிச்சு விரட்டிட்டாங்களாம். இப்பத்தான் அவங்க கிட்டேருந்து கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு. சி.எம்.பார்வைக்குக் கொண்டு போகணும்னு நானே இருந்தேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க. பார்க்கலாம். என்னால் ஆனதைச் செய்யறேன்' என ஐ.ஜி. வாக்களித்தார்.

'ரொம்ப நன்றிங்க ஜார்ஜ்! நீங்க மனசு வைச்சால் நிச்சயம் ஒரு வழி பிறக்கும்னு நம்பறேன்' எனச் சொல்லி ஃபோனை வைத்தார் ஞானசம்பந்தன்.

**************************

ஐ.ஜி. உத்தரவுக்கிணங்க ஒரு பெரிய போலீஸ் படை அடுத்த இரண்டு தினங்களில், அந்தக் கிராமத்துக்குள் புகுந்தது.

'ஆரைக் கேட்டு போலீஸ் உள்ளே வந்தது ?' எனக் கேட்டவர்களுக்குக் கிடைத்தது நல்ல தடியடி!

வாண்டையார் கோபமாக வெளியே வந்தார்.

'இப்ப இருக்கற ஐ.ஜி. கொஞ்சம் கண்டிப்பானவருங்க. எங்களால எதுவும் செய்ய முடியலை. இந்தக் கலவரத்தை உடனே ஒடுக்கச் சொல்லி எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. நீங்களா கொஞ்சம் இறங்கி வந்தா நல்லது. இல்லைன்னா நாங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்றார் டி.ஐ.ஜி.

'எங்களையே குத்தம் சொல்லுங்க! ‘ஆன்னா ஊன்னா’ உங்களுக்கு இந்தப் பணக்காரங்களைக் கண்டா ஆவாதுதானே! உடனே சட்டம் அது இதுன்னு எதுனாச்சையும் தூக்கிகிட்டு வந்திருவீங்களே! பொளைக்க வளியில்லாத பயலுவ பண்ணின காரியத்தைத் தட்டிக் கேக்க மாட்டீங்களே' எனப் பொரிந்தார் வாண்டையார்.

'அவங்களைப் பிடிக்கறதுக்கும் ஒரு படை போயிருக்கு வாண்டையாரையா! இப்ப எங்களுக்கு யாரு தப்பு பண்ணினாங்கன்றதை முடிவு பண்ற வேலையில்லை. இங்கே நடக்கிற சண்டை சச்சரவை நிறுத்தணும். அதுக்கப்புறமா ரெண்டுதரப்பும் ஒக்காந்து பேசுங்க. நீங்களும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் ஆகணும் ஐயா! மேல்ஜாதி, கீழ்ஜாதின்னு பேசினா சட்டம் அதைச் சகிச்சுகிட்டு இருக்காது இனிமேல்! அப்புறம் உங்க முடிவு' எனக் கறாராகப் பேசிய டி.ஐ.ஜியைத் திகைப்புடன் பார்த்தார் வாண்டையார்.

'அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? இந்த 2009லியுமா இந்தக் கொடுமையை நாம இன்னமும் பண்ணனும்? அதான் காலங்காலமாப் பண்ணி ஒரு இனத்தையே சாய்ச்சிட்டோமே. போதுமே இது! இத்தோட விட்டிருவோமே. இல்லைன்னா, நானே மொத ஆளா நின்னு கொடி பிடிக்க வேண்டி இருக்கும்' என்ற தன் மகனின் குரலைக் கேட்டதும் இன்னமும் ஆடிப் போனார் வாண்டையார்.

'சார்! நாங்க யார் மேலியும் புகார் கொடுக்கப் போறதில்லை. நீங்க அவங்களைப் பிடிச்சீங்கன்னா அவங்க கிட்டேயும் சொல்லிடுங்க. பழையபடி தைரியமா அவங்க இங்கே எங்களோட வாழலாம். அவங்க சுதந்திரத்தில் நாங்க தலையிட மாட்டோம். அவங்கவங்க வாழ்க்கை முறைப்படி வாழ்ந்திட்டுப் போறோம். இதைத் தெளிவா எடுத்துச் சொல்லுங்க. நடந்தது நடந்ததா இருக்கட்டும். இன்மேலியாவது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்.'என்று சொன்ன சத்யாவைப் பெருமையுடன் பார்த்துப் புன்னகைத்தார் டி.ஐ.ஜி.

'அப்ப நாங்க வந்த வேலை ஈஸியா முடிஞ்சிரும்னு நம்பறேன். என்ன சொல்றீங்க வாண்டையார்? இது மாதிரி ஒரு பையனைப் பெத்ததுக்காகவே நீங்க செஞ்ச தப்பையெல்லாம் கூட விட்டுரலாம் போலிருக்கே' எனச் சொல்லிச் சிரித்தார் டி.ஐ.ஜி. மணவாளன்.

வேறு வழியில்லாமல் வாண்டையாரும் சிரித்தார்!

*****************************

'இதோ பாருங்கப்பா! ரெண்டு பக்கமும் நல்லாக் கேட்டுக்கோங்க! இனிமே யாரும் அடிதடி, சண்டைன்னு போகக் கூடாது!

ரெண்டு பக்கமும் நியாயமும் இருக்கு; தப்பும் இருக்கு! காலங்காலமா பழகிப்போன ஒரு முறையிலியே ஊறிப்போனவர் வாண்டையார். அவர் சரின்னு நினைச்ச சில கட்டுப்பாடுகளை மீற அவரால முடியலை. அதேபோல, எத்தனை நாளைக்குத்தான் இந்த அவலம்னு நீங்க நினைச்சதுலியும் தப்பில்லை. நியாயந்தான் அதுவும்! ஆனால், அதுக்காக நீங்க ரெண்டு பேரும் எடுத்த வழிமுறை அவ்வளவு சரியானதாப் படலை. எனக்குத் தெரியும் நீங்க அதுக்கு ஒரு நியாயம் வைச்சிருப்பீங்கன்னு. ஆனால், வன்முறை,.... அது விரும்பியோ, விரும்பாமலோ,... எப்படிச் செய்தாலும் வன்முறை தவறுதான். அதை ரெண்டு பேருமே பண்ணியிருக்கீங்க. யார் அதிகமாச் செய்தாங்கன்னு பட்டியல் போடத் தேவையில்லை. எப்படிப் பார்த்தாலும் அது தப்புத்தான்!

ஆனால், இப்ப வளர்ந்து வரும் இளைய தலைமுறையைப் பார்க்கறப்ப, நம்பிக்கை வருது. வாண்டையார் ஐயா பையன் சத்யா பேசினதைக் கேட்டப்ப, எனக்கு ரொம்பவுமே பெருமையா இருக்கு. இது மாதிரி சிந்தனைங்கதான் இப்போதையத் தேவை! எத்தனை நாளைக்குத்தான் அடிச்சுகிட்டே இருக்கறது? நாளைக்கு நம்ம பசங்க நம்மளைப் பார்த்து, கேள்வி கேட்கும்போது என்ன சொல்லி இதையெல்லாம் நியாயப் படுத்த முடியும்னு நினைக்கறீங்க. நாம போட்ட சண்டையையேவா அவங்களும் தொடரணும்னு நினைக்கறீங்க? உலகம் வளர்ந்துகிட்டே வர்ற அதே நேரத்துல, ரொம்பவே சுருங்கிகிட்டும் இருக்கு. எவ்வளவோ முன்னேற்றங்கள் எல்லா இடத்துலியும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பசங்க அதையெல்லாம் அனுபவிக்காம, வெட்டிகிட்டும், குத்திகிட்டும் சாகணுமா? சொல்லுங்க! அப்படி ஒரு வழியையா அவங்களுக்கு விட்டுட்டுப் போகப் போறோம்?

சரி, இப்ப சொல்லுங்க, உங்க பசங்கள்ல எத்தனை பேரை இந்தச் சண்டையைத் தொடர, அனுப்ப நீங்க தயாரா இருக்கிங்க? ஒண்ணு ரெண்டு கைதான் உயருது! அப்போ, மத்தவங்க யாரும் தன் பிள்ளையை அனுப்பத் தயாரா இல்லை! சரிதானே! உங்க பிள்ளைங்க சாகக்கூடாது. மத்தவங்க அடிச்சுகிட்டு சாகலாம்னா, அது என்னப்பா நியாயம்? நான் சொல்றது விளங்குதா?

இப்ப நான் சொல்றதைக் கவனமா ரெண்டு பக்கமும் கேளுங்க.

நடந்தது எல்லாம் நடந்து போனதா இருக்கட்டும். இனிமே ஒத்துமையா இருக்கணும். அதுக்காக உங்க ரெண்டு பேரையும் கட்டிக் குலாவச் சொல்லலை. அவங்கவங்க பிழைப்பை அவங்கவங்க பாருங்க. யாரும் எங்கியும் சுதந்திரமாப் போய் வரலாம். தடையே இல்லாம. நினைச்சா அமெரிக்காவுக்குக் கூட அனுப்பலாம்!உங்க வசதிக்குத் தக்க வாழ்க்கையை நீங்களே அமைச்சுக்கலாம். வீணாத் தகராறு பண்ணாம முன்னேறதுக்கான வழியைப் பாருங்க! இதுக்கெல்லாம் சம்மதம்னா சொல்லுங்க. இல்லைன்னா சட்டம் அதுக்குத் தெரிஞ்ச வழியில் என்ன செய்யணுமோ அதைச் செய்யறோம்.'
என ஒரு நீண்ட உரையாற்றி நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்தர் ஞானசம்பந்தன்.

காவல்துறையின் வேண்டுகோளின்படி, சமரசம் செய்துவைக்க அவர் அழைக்கப் பட்டிருந்தார்.

வாண்டையார் மனசில்லாமல் சிரித்தார்.

சுடலை தலையைக் குனிந்தபடி மோவாயைச் சொறிந்தான்.

எங்கும் மௌனம்!

கூட்டத்தில் ஏதோ ஒரு குழந்தை வீறிட்டு அழுதது.

காற்று வீசாமல் மரங்கள் கூட இவர்கள் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பதுபோல் அசைவற்று இருந்தன.

தொண்டையைச் செருகிக் கொண்டு ஒரு இளம்பெண் மாராப்பைச் சரி செய்தபடி எழுந்தாள்.

'ஐயா! நான் பேசலாமுங்களா?' எனச் சற்று பயத்துடன் சன்னமான குரலில் கேட்டாள்.

'சொல்லும்மா! அதுக்குத்தானே நாங்க வந்திருக்கோம். யாருக்கும் பயப்படாம சொல்லு. உன் பெயர் என்ன?' என அன்புடன் அழைத்தார் டி.ஐ.ஜி.

'எம்பேரு சொக்கிங்க! சேரியில இருந்து வரேங்க. நீங்க சொன்னதையெல்லாம் கேட்டேனுங்கோ! போதுங்க இந்தப் பொலம்பல் வாள்க்கை. சோத்துக்கு வளியில்லாம, நோவு நொடிக்குக் கூட எங்கியும் போவ முடியாம, புருசன் பொளைச்சு வருவானா, பையன் உசுரோட இருக்கானான்னு நிச்சயமில்லாம தெனந்தெனம் செத்துகிட்டிருக்கோங்க. எங்களுக்கு மாட மாளிகைல்லாம் வேணாங்க. இருக்க ஒரு எடமும், துண்ண சோறும், மானமா வாள ஒரு ஊரும் இருந்தாப் போறுங்க. எங்க ஒடம்புலியும் வலு இருக்கு. ஒளைச்சு சாப்புடுவோம். எங்களை மனுசங்களா மதிச்சு நடத்தினா மட்டும் அதுவெ பெரிய ஒதவிங்க. எங்களுக்கு வேற ஒண்ணும் வேண்டாம் இந்த ஒதவி மட்டும் பண்ணுங்கையா! நாங்க வேற ஒண்ணும் கேக்கலை' எனக் கதற அரம்பித்தாள்.

'ஆமாங்க! ஆமாங்க! எங்களுக்கு அது மட்டும் போதுங்க' என இன்னும் சிலர் எழுந்து குரல் கொடுத்தார்கள்.

டி.ஐ.ஜி. நெகிழ்ந்து போனார்.

வாண்டையார் கூட மேல்துண்டால் தன் கண்களை ஒற்றிக் கொண்டார்!!

சத்யா ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் சென்று, அவள் அருகில் சென்று, அன்பாகச் சிரித்தான்.

பெரிய வூட்டுப் புள்ள வந்து நம்முடன் சரிசமமாகப் பழகுவதைப் பார்த்த கூட்டம் உற்சாகம் கொண்டது!

'அப்புறம் என்னையா யோசனை? சரிதானே?' எனக் கேட்டார் டி.ஐ.ஜி.

'இனிமே சொல்றதுக்கு என்னங்க இருக்கு. அதான் நமக்கு அடுத்த தலைமுறை கூடிப் பேசி சொல்லிட்டாங்களே! நீங்க சொல்றதுக்கு கட்டுப் படறோம். மொதல்ல கொஞ்ச நாளு கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக சரியாயிடும். நடந்ததையெல்லாம் நெனைச்சா வெக்கமாத்தான் இருக்கு' என்றார் வாண்டையார்.... கம்மிய குரலில்.

தன் கண்களையே நம்பமுடியாமல் சத்யா பெருமையுடன் தந்தையைப் பார்த்தான்.

சுடலையும் திடுக்கிட்டு, ஒருவித ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து வணங்கினான்.

'ஐயா! நாங்களும் தெரியாத்தனமா தப்பு செஞ்சிருக்கோம். அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க' என தழுதழுத்தான்.

'நல்லது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல எனக்கு சந்தோஷமே! இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்க இந்த ஊருக்கு வெளியுல இருப்போம். ஒண்ணும் அசம்பாவிதம் நடக்காம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நல்லபடியா இருங்க.' என்றபடி எழுந்தார் டி.ஐ.ஜி.

கூடவே ஞானசம்பந்தனும் எழுந்தார். சத்யாவிடம் நேராகச் சென்று அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்!

'உன்னுடைய உறுதியான முடிவினால்தான் இது நடக்க முடிந்தது. உனக்குத்தான் நன்றி சொல்லணும்' என்றார். சத்யா பணிவுடன் சிரித்தான்.

'நீயுந்தாம்மா!உன்னோட பேச்சும் ரொம்ப உருக்கமா இருந்தது' என சொக்கியைப் பார்த்துச் சிரித்தார்

'இன்னைக்கு ராத்திரி உங்க எல்லாருக்கும் நம்ம வீட்டில்தான் விருந்து. எல்லாரும் வந்திரணும்! அட! சன்னாசி, சுடலை நீங்களும் தான்ப்பா. உங்க ஆளுங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வந்திருங்க' என அன்பாக வேண்டுகோள் விடுத்தார் வாண்டையார்.

'அட! என்னையா எங்களைப் போயி அளைச்சுகிட்டு! என்ன வேலை செய்யணுமோ சொல்லுங்க! நாங்க செய்யறோம்.' என முன் வந்தான் சுடலை.

மாலைத் தென்றல் இதமாக வீசியது!

மரங்கள் 'ஓம்'ஓம்!' என்பது போல் அசைந்தன!


****** நிறைந்தது********

இது கதை அல்ல! என் கனவு எனச் சொல்லலாம்! இலங்கையிலும் இப்படி ஒரு மனமாற்றம் அனைவரிடத்திலும் வந்தால் நன்றாக இ
ருக்குமே என வேண்டுகிறேன்.... என் முருகனிடம்!!
நல்லது நடக்கட்டும்!
படித்த அனைவருக்கும் என் நன்றி!
***************************************

Read more...

Tuesday, April 21, 2009

"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்]

"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]

[முந்தைய பதிவு]

அன்றிரவுதான் அந்தப் பயங்கரம் நடந்தது!

நள்ளிரவு தாண்டிய கொஞ்ச நேரத்தில், சேரிக் குடிசைகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

அலறிக் கொண்டு வெளியில் வந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது ஒரு கூட்டம்.

பெண்கள் கதறக் கதற ஒரு ஓரமாக அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

சின்னஞ்சிறுசுகளும் தப்பவில்லை இந்தக் கொடூரத்திலிருந்து.

எல்லாம் ஒரு சில மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

விடிந்ததும் அந்த இடம் ஒரு மயானம் போலக் காட்சியளித்தது.

தப்பிப் பிழைத்தவர்கள், வலியினால் முனகிக் கொண்டிருந்தார்கள்.

மானம் மறைக்கக் கூடத் துணியில்லாமல் மரத்துக்குப் பின்னால் நின்ற பெண்கள் விசும்பி அழுது கொண்டிருந்தனர்.

மலைப்பகுதியில் தங்கியிருந்து கருக்கலில் சேரிக்குத் திரும்பிய சுடலையைக் கண்டதும், சன்னாசி ஆவேசமானான்.

அவன் தோள் மீது தன் துண்டைப் போட்டு முறுக்கி, 'இப்ப சந்தோசமாடா உங்களுக்கெல்லாம். மானமா கஞ்சியோ கூளோ குடிச்சுகிட்டு எங்க பொளைப்பைப் பாத்துகிட்டிருந்தோம். இன்னாமோ புரட்சி பண்றேன்னிட்டு இப்பிடிப் பண்ணீட்டீங்களேடா பாவிப் பசங்களா! இனிமே நாங்க எங்க போறது?' எனக் கதறினான்.

அமைதியாக அனைத்தையும் கவனித்த சுடலை நிதானமாக சன்னாசியைப் பார்த்தான்.

'இனிமே நீங்க இங்க இருக்கறது சரியில்ல. நேத்து ராத்திரி கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டோம். இனிமே இது நடக்காது. போலீசுகிட்ட போயி உபயோகமில்ல. அவங்க நமக்கு சாதகமா என்னிக்குமே இருந்ததில்ல. இப்ப நான் ஒரு முடிவு சொல்றேன். கேட்டுக்கோங்க. எங்கூட வரலாம்னு நினைக்கறவங்க வாங்க. நான் பாதுகாப்பு தர்றேன். இங்கியே இருக்கறதுன்னாலும் சரி. வாண்டையாரைப் பகைச்சுக்காம இருங்க. அது முடியாதவங்க, இந்த சேரியில இருக்க வேண்டாம். வேற எங்கியாவது போயிப் பொளைச்சுக்கோங்க. எல்லாம் சரியானதுக்கப்புறமா வந்துக்கலாம். சீக்கிரமே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிரலாம்.' எனச் சொல்லி காயமடைந்தவர்களைக் கவனிக்கச் சென்றான் சுடலை.

அவனைத் தொடர்ந்து ஒரு கூட்டம் சேரத் தொடங்கியது.

அவர்களை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தான் சுடலை.

எஞ்சியிருந்த கூட்டம் இருப்பதை ஒழுங்கு செய்ய முனைந்தது.


*******************


அடுத்த சில நாட்கள் சம்பவம் ஏதுமில்லாமல் கழிந்தன.

'சுடலை எங்கே இருக்கான்னு ஆருக்காச்சும் தெரியுமாலே!?' என வினவினார் வாண்டையார்.

'தெரியலீங்க! அந்த மலைக்காட்டுக்குள்ளதான் எங்கியோ இருக்காங்கன்னு தெரியுது. ஆனா, அந்தப் பக்கமே போக முடியலீங்க' என்றார் கணக்குப்பிள்ளை.

'சரி. எதுக்கும் நீ நம்ம பக்கத்து ஊர்க்காரனுக்கும் சொல்லிவிடு. அவனும் கூடமாட இருந்தா காரியம் சுளுவா முடிஞ்சிரும்' எனச் சொல்லி விஷமமாகச் சிரித்தார் வாண்டையார்.

சட்டெனப் புரிந்துகொண்ட கணக்குப் பிள்ளை,'அட! அது கூட நல்ல யோசனைதானுங்க ஐயா! அவங்க மேலியும் கை வைச்சிருக்கானுங்கன்னு சொல்லிக்கறாங்க. அதுனால அவிங்களும் கோவமாத்தான் இருக்காங்க' எனச் சிரித்தார்.

'இதெல்லாம் தெரியாமலா நான் சொல்லுறேன். நீ விரசலா ஆளனுப்பு அவங்களுக்கு' என எழுந்தார்.

கணக்குப் பிள்ளை கிளம்பினார்.

******************

கணக்குப் பிள்ளை வரவில்லை.

அவர் பிணம்தான் வந்தது.

'நிறுத்தாவிட்டால் அடுத்தது நீதான்!' என ஒரு கடிதம் மார்பில் செருகப்பட்டு!

துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

வாண்டையாருக்கு லேசாக உதறல் கண்டது.

'போலீசுக்குச் சொல்லி விடலாமுங்களா? அவிங்க வந்தா ஈசியா புடிச்சிருவாங்க' என்றவர் பக்கம் திரும்பி எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

நிறைய விஷயம் நடந்திருச்சு. தப்புத்தண்டா நாமளும் நிறையப் பண்ணியிருக்கோம். இப்பப் போயி அவங்களைக் கூப்பிட்டா ஆதியிலேருந்து குடைவாங்க. நம்ம குட்டெல்லாம் வெளிப்பட்டிரும். அதுனால, இப்ப வேண்டாம்.' பார்க்கலாம். பக்கத்து ஊர்க்காரனும் வந்திட்டா சீக்கிரமா முடிச்சிரலாம். அப்புறம் பிரச்சினை ஒண்ணுமில்லை' எனத் தெம்பாகச் சொன்னார்.

**********************

'அடுத்த ஊர்க்காரனும் சேர்ந்துகிட்டானாமில்ல! இப்ப என்ன பண்றது? நடந்ததையெல்லாம் விவரமா போலீசுக்குத் தெரியப் படுத்தணும் . அப்பத்தான் ஒரு நல்ல வளி பொறக்கும். இப்ப யாரு அதைச் செய்யறது' எனக் கேட்டான் பாளையம்.

நம்ம சனங்க சிலபேரு வெளியூருக்குப் போயிருக்காங்கல்ல. அவிங்ககிட்ட தகவல் சொல்லி அனுப்பணும். அவிங்கதான் இதை எப்பிடியாவது போலீசுக்குத் தெரியப் படுத்தணும்' எனத் தீர்மானமாகச் சொன்னான் சுடலை.

அதைச் செயல்படுத்த இருவர் கிளம்பிச் சென்றார்கள்.

சற்று நேரத்தில் அந்த இடத்துக்கு அருகில் ஒரு நாட்டு வெடிகுண்டு வந்து வெடித்தது!

'இனிமே இங்க தங்கி இருக்கறது ஆபத்து. பொண்டு புள்ளைங்கள்லாம் திரும்பிப் போயிடுறீங்களா? ஏன்னா, அதை வைச்சு ஆராச்சும் தப்பாப் பேசிறக் கூடாதுன்னு பாக்கறேன்' எனக் கவலையுடன் கேட்டான் சுடலை.

உங்க கூட வந்தாச்சு. அது ஊருக்கெல்லாம் தெரியும் இப்ப. அங்க போனா என்ன நடக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அந்தக் கொடுமையை அனுபவிக்கறதுக்கு, உங்க கூட செத்தாலும் சாவத் தயார் நாங்க. நாங்க போறதா இல்லை. நாங்க உங்க கூட இருக்கறது தொல்லைதான் உங்களுக்குன்னு தெரியும். ஆனா எங்களுக்கும் வேற போக்கிடம் எங்கே? இங்கியே இருந்திடறோம்.' எனச் சொன்ன அவர்களை ஒரு மதிப்புடன் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான் சுடலை.

'சரி, அப்ப எல்லாரும் ஒண்ணா வாங்க. பிரிஞ்சிராதீங்க. வளி தப்பிட்டா கஷ்டம்' எனச் சொல்லி இன்னும் ஆழ்காட்டுக்குள் ஊடுருவினான் சுடலை.

குண்டுவெடிச் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

**********************

'ஈனப் பொளைப்பாப் போச்சே நம்ம நிலைமை' என்றான் மாரி.

'என்ன சொல்ல வர்றே?' என எதிர்க் கேள்வி போட்டான் காத்தமுத்து.

வழக்கமாகச் சந்தித்துக் கொள்ளும் அந்த டீக்கடையில்தான் அவர்கள் கூடியிருந்தார்கள்.

'என்னத்தைச் சொல்றது. சேரியில இருக்க முடியாம அடிச்சுத் தொரத்தினாங்க. வேற இடத்துக்குப் போயி பொளைச்சுக்கோங்கன்னு சுடலை சொன்னதைக் கேட்டு இங்க வந்து கஞ்சிக்கு ஏதோ வளி பண்ணிகிட்டு கொளந்தை குட்டிங்களக் காப்பாத்திகிட்டு இருக்கோம். ஆனா, மனசு முளுக்க அங்கியேதான் கெடந்து அல்லாடுது. சேரியில இருக்கறவங்க நல்லா இருக்காங்களா இல்லியான்னும் தெரியல. காட்டுக்குள்ள போனவங்க கதி இன்னான்னும் தெரியல. அங்கேருந்து வர்ற சேதிங்களும் சொகமா இல்ல. தோ, நம்ம கருப்பனும், வெள்ளையனும் அங்கேருந்து வந்து சொன்ன சேதிய எல்லாரும் கேட்டீங்கதானே' என்றான் மாரி.

'ஆமா, அதுக்கென்ன பண்ணச் சொல்றே இப்ப. நீயும் நானும் வேணுமின்னா அங்கே போயி அவங்களுக்கு எதுனாச்சும் ஒத்தாசை பண்ணலாம்னா, அதுனால இன்னா லாபம்? நாமளும் அவிங்களோட செத்துத்தான் போவோம். இல்லைன்னா அடிபடுவோம். நம்ம புள்ளைங்க வருமா? இல்ல, அனுப்பித்தான் வைப்போமா? அவிங்கள்லாம் இங்கியே பளகிட்டாங்க. அங்க திரும்பவும் சேரிக்கே போக சம்மதிப்பாங்களா? இங்க ஏதோ ஒரு வளி பண்ணிட்டோம். அதுவே நெலைச்சு இருக்குதான்னு பாடுபடணுமே தவிர இருக்கறதை கெடுத்துகிடணுமா?' என்றான் இசக்கி.

'இப்ப இன்னா நாயம் சொல்றே நீ? அதுக்காக நம்ம சனம் அப்பிடியே அளிஞ்சு போகட்டும்னு விட்டுரலாமா? அது தப்பில்லியா' என்றான் கருப்பன் கோபமாக.

'அப்பிடி ஆரு சொன்னாங்க? அவிங்கள அப்பிடியே விட்டுருவோமா? எதுனாச்சும் பண்ணத்தான் வேணும்' என கருப்பனை சாந்தப் படுத்தினான் காத்தமுத்து.

'சரி, ஆகவேண்டியதப் பாப்பம். இந்த விசயம் இன்னும் ஊர்ரு ஒலகத்துக்கெல்லாம் சரியாத் தெரியல. அப்பிடியே அரைகுறையாத் தெரிஞ்சவனும் ஏதோ நம்ம மேலதான் முளுத் தப்பும்ன்ற மாரி பேசறான். அதுக்கு எதுனாச்சும் வளி பண்ணனும். எப்பிடி செய்யலாம்னு சொல்லுங்க' என்றான் மாரி.

'மொதல்ல இது போலீசுக்குத் தெரியணும். கேக்க ஆளில்லைன்னுதான் வாண்டையான் ரொம்பவே துள்றான். அவிங்க போனாக்க நெலமை சீராகும்னு படுது. அதான் சுடலையும் சொல்லி வுட்டிருக்கான். மொதல்ல இந்த சண்டையை நிப்பாட்டிட்டு, ரெண்டு பக்க சனமும் இன்னா சொல்றாங்கன்னு கேட்டு, ஒரு தீர்வு வரணும். அப்பத்தான் அங்க இருக்கறவங்களுக்கு நிம்மதி. நமக்குந்தான்' என்றான் வெள்ளையன்.

'அதுக்கு அந்த வாண்டையாரு சம்மதிக்கணுமே! அப்பத்தானே நடக்கும். அவரு அவ்வளோ சுளுவா விட்டுக் குடுத்த்ருவாரா?' எனக் கேட்டான் இசக்கி.

'ஆமா, சொல்ல வைக்கணும். அதுக்குத்தான் போலீசு வேணும்ன்றது. எத்தினி நாளைக்குத்தான் அடிமையாவே நம்ம சனம் இருந்து அளியறது? நாம ஒண்ணும் அவிங்க நெலத்தக் குடுன்னு கேக்கலியே. எங்களையும் மான்மா பொளைக்க வுடுங்கடான்னுதானே கேக்கறோம். நம்மள அடிமையா நடத்தாம செய்யற வேலைக்கு காசை ஒளுங்க கொடுத்து, நம்மளையும் சமமா நடத்தினா நாம ஏன் குத்தம் சொல்லப் போறோம். நம்ம புள்ளைங்க நல்லாப் படிக்கணும். நம்ம வளக்கத்தை வுடாம இருக்கறதுக்கு அனுமதிக்கணும். வேற இன்னா வோணும் நமக்கு. அதுக்கப்புறம் அவனவன் பாடு. பொளைக்கறதும், வாள்றதும். இன்னா நான் சொல்றது!' என்றான் மாரி.

'சரிப்பா. இப்ப இதை ஆரு, எப்பிடி செய்யறது?' எனக் கேட்டான் வெள்ளையன்.

'வேற ஆரு? நாமதான் செய்யணும். நம்ம சேரி சனத்துக்கு இதுக்கு வளியே இல்லை. சுடலை சொன்னான்னா அது இப்ப எடுபடாது. நாமதான் இங்க வந்து மானமா எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போவாம இருக்கோம். ஊருக்குள்ளியும் நமக்கு ஒரு நல்ல பேரு இருக்கு. அத வைச்சுத்தான் நாம் செய்யணும். மொதல்ல ஒரு நல்ல வக்கீலாப் பாப்பம். நாம நேரடியா சொன்னா நம்புவாங்களோ மாட்டாங்களோ' என மாரி சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.

********************************

[நாளை வசந்தம் வரும்!??]

Read more...

Monday, April 20, 2009

"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்]

"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]


[முந்தைய பதிவு]

மறுநாள், அந்த அநியாயம் நடந்தது!

கீழே விழுந்து மண்டையில் அடிபட்ட செல்லாயி குழந்தையை அவசரமாக அடுத்த ஊரிலிருக்கும் ஆசுபத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டி......,

லுங்கியை மடிச்சுக் கட்டிக் கொண்டு, வாயில் ஒரு பீடியைப் பிடித்தபடி, சைக்கிளில் சுடலை செல்ல, அவன் பின்னே பாளையமும் இன்னும் சில பேரும் சட்டையணிந்து மேட்டுத் தெருவைக் கடந்து செல்ல, ஊர்சனம் வியந்து பார்த்தது.

'எலே! ஆர்லே அது?' என்ற அதட்டலான குரலைக் கேட்டு, சைக்கிளை பிரேக் போட்டு அழுத்தி, செருப்பணிந்த ஒற்றைக் காலைத் தரையில் வைத்தபடியே, 'நாந்தானுங்க சுடலை. அர்ஜெண்டா ஆசுபத்திருக்கு போவ வேண்டியிருக்கு. கொளந்தைக்கு அடிபட்டு ரெத்தம் கொட்டுது. வந்து சொல்றேனுங்க' என தன் வாயிலிருந்த பீடி எச்சிலைத் துப்பியபடியே சொல்லிவிட்டு சைக்கிளை அழுத்தினான் சுடலை!

மேலே செல்ல முடியாதபடி வலுவான சில முரட்டுக் கரங்கள் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளைச் சாய்க்க, குழந்தையுடன் கீழே சரிந்தான் சுடலை.

குழந்தையை அணைத்துப் பிடித்தபடி, அதற்கு ஒன்றும் ஆகாமல் பார்த்துக்கொண்டு, அருகிலிருந்த பாளையத்தின் கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு, தன்னைச் சாய்த்தவர்களை நோக்கிப் பய்ந்தான்.

'கையில குழந்தையைப் பாத்தீங்கதானே! அறிவில்லை ஒங்களுக்கு? அதுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா, ஒங்கப்பனாட குடுப்பான்?' என்றபடி, தன்னைச் சாய்த்தவனை அறைந்தான்.

அவ்வளவுதான்!

கூட வந்தவர்களும் அடிதடியில் சேர்ந்துகொள்ள, சற்று நேரத்தில் ஒரு ரணகளமாய் மாறியது அந்த இடம்.

திபு திபுவென அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லம் வந்து சேர்ந்து கொள்ள, சுடலை கூட்டத்தாரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஓட ஆரம்பித்தார்கள்.

'வுடாதீங்கடா அவனுவளை. புடிச்சுக் கட்டுங்கடா என வாண்டையாரின் குரல் ஓங்கி ஒலிக்க, தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டார்கள்.

'என்னங்கடா? மீசை மொளைச்சுட்டா பெரிய .....ன்னு நெனைச்சுக்கிட்டியளோ? நாய்ப் பயலுவளா! எங்க தெருவுல, அதுவும் சட்டை செருப்போட, சைக்கிள்ல வர்றதுக்கு எம்மாந் தெகிரியண்டா உங்களுக்கு. இனிமே இப்பிடிச் செய்யாம இருக்கறதுக்கு அவனுக தலையை மொட்டையடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சாட்டையால ஆளுக்கு இருவது அடி கொடுத்து அனுப்புங்கடா! அப்பத்தான் புத்தி வரும்' என உறுமிவிட்டு, சுடலை முகத்தில் காறித் துப்பிவிட்டு அவன் கன்னத்தில் பளாரென அறைந்தார் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வாண்டையார்.

*******************


'சொன்னாக் கேக்கறீங்களா! இப்ப பாரு, அடிபட்டு, அவமானப்பட்டு வந்து நிக்கறதை. நாமெல்லாம் பாவப்பட்ட சனங்க பசங்களா! அவங்களோடல்லாம் போட்டி போட்டு செயிக்க முடியாது. இப்பிடியே அளிஞ்சு போறதுதான் நமக்கு விதிச்சிருக்கு. இப்பவாச்சும் புத்தியோட பொளைக்கப் பாருங்க. அவங்களோட வம்பு இனிமேலாச்சும் வைச்சுக்காதீங்க' என்றான் சன்னாசி, மலைத்தேனை எடுத்து அவர்கள் உடலில் தடவிவிட்ட படியே.

'நீ வாயை மூடு பெருசு!' எனச் சீறினான் சுடலை. 'வுட மாட்டேன். இத்த இத்தோட வுடமாட்டேன். நா இன்னா தப்பு செஞ்சேன்? அரை டிராயரைப் போட்டுகிட்டு ஆசுபத்திரிக்குப் போனா ஒர்த்தனும் மதிக்க மாட்டான்னுதானே சட்டை, செருப்பு போட்டுகிட்டுக் கிளம்பினேன்? அவசரமாப் போவணும்னுதானே ரெத்தம் வளிஞ்சுகிட்டிருந்த அந்தக் கொளந்தையை எடுத்துகிட்டு சைக்கிள்ல அந்த வளியாப் போனேன்? அது தப்பா? அதுக்கு இம்மாந் தண்டனையா? இதுல நீ வேற நாயம் சொல்லிகிட்டு! சும்மாக் கிட!'

'அதுக்கில்லேப்பா'.... எனத் தொடர்ந்தவனை ஒரு கை காட்டி நிறுத்தினான் சுடலை.

'இன்னா செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இதுக்கெல்லாம் ஒரு விடிவு பொறக்கணும். பொறக்கும்' என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தபடியே வெளியே நடந்தான் சன்னாசி.

'இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு அண்ணாத்த! செஞ்சிருவோம். எனக்கும் ரெத்தம்லாம் துடிக்குது' என்றான் பாளையம்.

'சொல்றேன்! நாளையிலேர்ந்து நாம யாரும் வயல்ல வேலை செய்யப் போகப் போறதில்ல. போற பெருசுங்க போவட்டும். அவிங்கல்லாம் அப்பிடியே வளந்துட்டாங்க. நாம சொன்னா கேக்க மாட்டாங்க. வாண்டையார்கிட்ட போட்டுக் கொடுத்தாலும் கொடுத்துருவானுங்க. அதுனால, இது நம்மளோட மட்டும் இருக்கட்டும். அது மட்டுமில்ல. இனிமே அந்த ஆளுங்க யாரும் இந்தப் பக்கமே வர வுடாத மாரி ஒண்ணு செய்யணும். இந்தப் பக்கம் வர்றதுன்னால அவனுங்கல்லாம் நடுங்கணும். அதுக்கும் ஒரு வளி வைச்சிருக்கேன். சொல்றேன் கேளுங்க' என்றபடி தனது திட்டத்தை அவர்களிடம் விவரிக்கத் தொடங்கினான் சுடலை.

********************

'என்னலே! உங்க ஆளுங்கள்லாம் ஒளுங்கா வேலைக்கு வர்றதில்லியாமே? அதுவுமில்லாம ரவுடித்தனம் பண்ணிகிட்டு அலையுறனுவளாமே? எங்க ஆளுங்க நடக்கற பக்கத்துல கல்லு வந்து விளுதாம். வைக்கப்போருங்க தீப்பிடிச்சு எரியுதாம். நேத்து கண்மாயைக் கூட ஆரோ உடைச்சிட்டாங்களாம். இதெல்லாம் உங்க ஆளுங்க வேலையா? என்ன? கொஞ்சம் ஜாஸ்தியாவே துள்ளறானுவளோ? ஒட்ட நறுக்கிப் புடுவேன் நறுக்கி. சொல்லி வையி'

மீசையை முறுக்கியபடியே எதிரில் கைகட்டிக் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்த சன்னாசியிடம் மிரட்டினார் வாண்டையார்.

'ஐயையோ! அப்பிடில்லாம் தப்புத் தண்டாவுக்குப் போகாதுங்க எங்க சனம். வேற ஆரோ செய்யற வேலையா இருக்குஞ் சாமி.'

'எலே! நான் என்ன சும்மாவா உன்னைக் குசலம் விசாரிக்கவா கூப்பிட்டேன். எல்லாம் எனக்குத் தகவல் வந்துகிட்டுத்தான் இருக்கு. அன்னிக்கு மொட்டையடிச்சு அனுப்பியும் புத்தி வரலை போலிருக்கு அந்தப் பயலுவளுக்கு. இதுக்கும்மேல எதுனாச்சும் நடந்திச்சின்னா நான் மனுஷனா இருக்கமாட்டேன். ஆமா. நீ போ! போயி, அவஙகிட்ட சொல்லு. இந்த வாண்டையான் கை ஒண்ணும் பூப் பறிச்சுகிட்டு இருக்காதுன்னு' என அவனை விரட்டினார்.

'கும்புடறேஞ்சாமி! வரேஞ்சாமி!' என அவசர அவசரமாக நகர்ந்தன் சன்னாசி.

அவன் அகன்றதும், பக்கத்திலிருந்த கணக்குப் பிள்ளை, 'இதை இப்படியே விட்டா அவஙளுக்கு நம்ம மேல ஒரு பயம் இல்லாமப் போயிறும். அடக்கணுங்க' எனக் குழைந்தார்.

'ஆமாமாம். நீ போய், நம்ம ஆளுங்களை இங்க வரச் சொன்னேன்னு சொல்லு' எனச் சொல்லி ஒரு குரூரப் புன்னகை பூத்தார் வாண்டையார்.

அன்றிரவுதான் அந்தப் பயங்கரம் நடந்தது!
****************
[தொடரும்]

Read more...

Sunday, April 19, 2009

"வா வா வசந்தமே!" [ஒரு கிராமத்து அத்தியாயம்!]


"வா வா வசந்தமே!" -- 1

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]
[இது ஒரு குறுந்தொடர்! இதைப் படிக்கையில் வேறு ஏதாவது உங்கள் நினைவுக்கு வரும் என நான் எண்ணுகிறேன். அப்படி வந்தால் அது மகிழ்ச்சியே! இறுதியில் என் கருத்தைச் சொல்கிறேன்!]


அமைதியான அழகான சிறு கிராமம் எனக் கதைகளில் வர்ணிப்பதைப் போலத்தான் அந்தக் கிராமமும் இருந்தது.

இயற்கை வளங்கள் நிரம்பியிருக்க, வயல்களும், வரப்புமாய், ஏரிகளும் குளங்களுமாய், கனி தரும் மரங்களுமாய் பூத்துத்தான் குலுங்கியது.

ராஜபாண்டி வாண்டையார்தான் ஊரிலேயே பெரிய பண்ணையார்!

முக்கால்வாசி நிலங்கள் அவருக்குத்தான் சொந்தம்.

அவரது சாதி சனங்களே அங்கு அதிகமாகவும் இருந்தனர்.

எல்லா கிராமங்களின் சாபக்கேடு போல, ஊருக்கு சற்று தள்ளி, சேரியில் அடிமை சனங்களின் அவலம்.

வாண்டையார் சொல்லே வேதவாக்கு.

அவரை மீறி ஒரு வார்த்தை பேசக்கூட அதிகாரம் எவனுக்கும் இல்லை.

அவர் வீசியெறியும் நெல்லுக்கும், காசுக்கும் அடிபணிந்தே இந்த சனங்களும் வாழவேண்டியிருந்தது ஒரு சமூகக் கொடுமை.

எதிர்த்துப் பேச திராணி இல்லாமல் கூனிக் குறுகிக் குமுறிக் கொண்டிருந்தது சேரி சனம்.

சுடலையும் அவர்களில் ஒருவன் தான்.

ஆனால், வித்தியாசமானவன்.

நம்ம சனங்க மட்டும் அடிமையாவே இருக்கணுமான்னு மனதுக்குள் புழுங்கி, அவ்வப்போது சில பெருசுகளிடமும் தன் ஆத்திரத்தைக் கொட்டுவான்.

'உங்களுக்கெல்லாம் மூளையே மழுங்கிப் போச்சு பெருசுங்களா! அவரு வேணுமின்னா இந்த ஊருலியே பெரிய பணக்காரரா இருக்கலாம். இருந்திட்டுப் போவட்டும். அதுக்காவ, நம்மளையெல்லாம் இப்பிடி நடத்தணும்னு இன்னா கணக்கு? அவங்களுக்குள்ள ஓடுற ரெத்தந்தானே நமக்குள்ளியும் ஓடுது? அந்தத் தெரு வளியா நடந்து போவக்கூடாது, அப்பிடியே போணும்னாலும் செருப்பைக் களட்டிக் கக்கத்துல வைச்சுகிட்டுத்தான் போவணும். சட்டை போட்டு நடக்கக் கூடாது. தலையைக் குனிஞ்சுகிட்டுத்தான் பதில் பேசணும். இன்னாங்கடா நாயம் இது? ஒரு நாளு இல்லாட்டி ஒரு நாளு நான் கேக்கத்தான் போறேன்' என்றவனை வருத்ததோடும், ஒருவித அச்சத்துடனும் பார்த்தாங்க பெருசுங்க.

சன்னாசி தான் முதலில் பேசினான். அவன் தான் கொஞ்சம் அதிக வயசானவன்.

தொண்டையைச் செருமிக் கொண்டே கையிலிருந்த சுருட்டை ஒரு இழுப்பு இழுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

'இப்ப இன்னா ஆயிப் போச்சு ஒனக்கு? மூளை கீளை மளுங்கிடுச்சா? அவுகல்லாம் எத்தினி பெரிய மனுசங்க! காலங்காலமா இப்பிடித்தானே வாள்ந்துகிட்டு பொளைப்பை ஓட்டிகிட்டிருக்கோம்? அந்த மவராசன் ஏதோ அப்பப்ப பார்த்துக் குடுக்கறதால நம்ம வண்டி ஓடுது. அத்தையும் கெடுத்துருவே போலிருக்கே நீ? எதுத்துக் கேட்டா இன்னா நடக்கும் தெரியுமா? கட்டி வைச்சு ஒதைப்பாங்க. ஊரை விட்டே தொரத்திருவாங்க. ஏன்? தலையையே சீவினாக்கூட சீவிடுவாங்க. அவங்க பலம் அப்பிடி. நாமள்ளாம் பாவப்பட்ட சனங்க. இது இப்பிடித்தான்னு தலையில எளுதிட்டான் மேல இருக்கறவன். பேசாம போடறதைப் பொறுக்கிகிட்டுப் போறதை விட்டு, இன்னாமோ அடாவடியாப் பேசுறியே! நீ பண்றதால நம்ம அல்லார் பொளைப்புமே சீரளிஞ்சிரும். நெனைப்புல வைச்சுக்க' எனச் சற்றுக் கண்டிப்புடனேயே சொன்னார்.

'ஆமா! நீங்க வேற எப்பிடிப் பேசுவீங்க. காலாகாலமா அவன் செருப்பை நக்கி நக்கி, அடிமைப் புத்தி ஒடம்புல ரொம்பவே ஊறிப் போச்சு உங்களுக்கெல்லாம்! உங்ககிட்ட போயி நாயம் கேக்க வந்த என்னைச் சொல்லணும்' என உறுமினான் சுடலை.

'என்னல, பேச்சு ரொம்பவே நீளுது. நாவை அடக்கிப் பேசு ராஸ்கோல்' எனச் சீறினான் சன்னாசி.

வயது எழுபதைத் தாண்டியும், கறுத்த அந்த தேகத்தின் வலு இன்னும் குறையாமலேதான் இருந்தார்.

'இப்ப அண்ணன் இன்னா சொல்லிட்டாருன்னு இப்பிடிக் கூவுறே பெருசு நீ? அவரு சொன்னதுல இன்னா தப்பு? அவனுக சோறு மட்டுமா போடறாங்க. அப்பப்ப நமக்குப் புள்ளைங்களும் கெடுக்கறானுவளே! நம்ம பொண்ணுங்க எத்தினி பேரை சீரளிச்சிருக்கானுவ. அதை கேக்க நாதியில்ல. இவரை அடக்க வந்திடுவீங்களே!' என முன்னுக்கு வந்தான் பாளையம். அவன் பின்னாலே அவனை ஆமோதிப்பது போல இன்னும் சில இளைஞர் கூட்டம்.

'இவங்ககிட்டப் போயி இதையெல்லாம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை அண்ணே! நீங்க வாங்க. நாம எதுனாச்சும் செய்யணும் இதுக்கு' என சுடலையைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தார்கள்.

'ம்ம்ம்! நா பாக்காத கூத்தா? இவனுக வயசுல எனக்குந்தான் இந்த ரோசம் இருந்திச்சு.எல்லாம் போகப் போக சரியாயிரும். கொஞ்சம் அடிபட்டதும் புத்தி வரும்' எனத் தன் சுருட்டைத் தொடர்ந்தான் சன்னாசி.

மறுநாள், அந்த அநியாயம் நடந்தது!
********************


[தொடரும்]

Read more...

Thursday, April 09, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 24. "குறிப்பறிதல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 24. "குறிப்பறிதல்"
"டேய் மாரி! இன்னா அங்க நின்னுகிட்டு பம்மிகிட்டிருக்கே! சரி, சரி, போயி, அண்ணிகையில நான் சொன்னேனு ஒரு ஐயாயிரம் ரூவா வாங்கிக்க! பலூன் வாங்கக் கொடுக்கச் சொன்னாருன்னு சொல்லு. ஒளுங்கா தங்கச்சி நிச்சயார்த்தத்தி நடத்தி முடி! இன்னா பாக்கற! அல்லாம் எனக்குத் தெரியும்!
சந்தோசமாப் போய்வா! நானும், அண்ணியும் வருவோம் கண்டிப்பா!" என்றதும் மலர்ந்த முகத்துடன் விரைந்தோடிய மாரியைப் பார்த்தபடியே ஆச்சரியமாக மன்னாரைப் பார்த்தேன்!

"இன்னா? இப்ப ஒனக்கு இன்னா பிரச்சினை? இதெல்லாம் எப்படி எனக்குத் தெரியும்னுதானே? இதுக்குப் பேருதான் குறிப்பறிதல்னு சொல்லுவாங்க! போன வாரம் நம்ம கபாலியாண்டை இவன் புலம்பிட்டிருந்தது காதுல வுளுந்தது.
'தங்கச்சிக்கு நிச்சயார்த்தம் வைச்சிருக்கேன். அண்ணங்கிட்ட எப்பிடிக் கேக்கறதுன்னு தெரியலைன்னு சொல்லிகிட்டிருந்தான். இப்ப வந்ததிலேருந்து மேலுங் கீளுமாப் பாக்கறானே தவிர ஒரு வார்த்தையும் பேசலை! அதான் அப்பிடிச் சொன்னேன்! ஒர்த்தன் கண்ணைப் பார்த்தே ஆரு, இன்னான்னு சொல்லிறலாம், தெரியுமா? இதைப் பத்தி நம்ம ஐயன் கூட ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. கேக்கறியா? எனக்கும் இப்ப வேலை ஒண்ணுமில்லை! நாயரே! ஷ்ட்ராங்கா ரெண்டு டீயும், நாலு மசால் வடையும் அனுப்பி வையுப்பா!"
எனச் சொல்லி என்னை அன்புடன் பார்த்தான் மயிலை மன்னார்!

'அட! இதையும் புரிஞ்சுகிட்டானே! நாம குறள் விளக்கம் எழுதி மாசக்கணக்கா ஆச்சே!’ன்னு சந்தோஷத்துடன், 'கரும்பு தின்னக் கூலியா' என நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!அதிகாரம் - 71 "குறிப்பறிதல்"

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்


மாறாநீர் வையக்கு அணி. [701]

எதுத்தாப்புல நிக்கறவன் ஒண்ணுமே பேசலைன்னாலும், அவன் மனசுல இன்னா நினைச்சுக்கினு இருக்கன்றத ‘டக்’குன்னு கண்டுபுடிக்கறவன், எப்பவும் கடல் சுத்தியிருக்கற இந்த ஒலகத்துக்கே ஒரு நகை போலன்னு ஐயன்
சொல்றாரு.

இதுல ஏன் நகையை ஒதாரணமா சொன்னாருன்னுதானே கேக்க வறே? இரு, இரு! சொல்றேன்!

எங்க பார்த்தாலும் தண்ணி! அதாம்ப்பா கடலு! அதுக்கு நடுவுல தம்மாத்தூண்டுக்கு நெலம் இருக்கு.
அதுக்குள்ள இம்மாங் கூட்டமா நாமல்லாம் இருக்கோம்! அவனவனுக்கு ஆயிரம் நெனைப்பு! அடுத்தவன் இன்னா நெனைக்கறான்னே தெரியாம, அல்லாடுதுங்க சனமெல்லாம்! இதுக்கு நடுவுல இத்த நல்லாப் புரிஞ்சுக்கறவன் தனிச்சு நிக்கறான்னு சொல்றதுக்கு, இந்த இடத்துல நாம ஒடம்புல போடற நகையை ஒதாரணமா சொல்றாரு! ஏன்னா, அதானே ஒரு ஆளைப் பார்க்ககொள்ள, கண்ணுல பளீருன்னு படுது! அதை வைச்சுத்தானே ஒரு ஆளையே எடை போடறோம்! இன்னா, வெளங்குதா?


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். [702]

போன குறள்ல நகைன்னு சொன்னாரா? இதுல அதுக்கும் மேல ஒரு படி போயி, அவன் தெய்வத்துக்கே சமம்ன்றாரு ஐயன்! கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாம், அடுத்தவன் மனசுல நெனைக்கறதை குறிப்பறியவனை
தெய்வத்துக்கு ஈடுன்னு வைச்சுக்கோன்றாரு இதுல!

ஏன்? தெய்வந்தான் இது மாரி, நாம நெனைக்கறதையெல்லாம் புரிஞ்சுகிட்டு, ’கொடுக்கறதா, வேண்டாமா, இல்லை, இவன் நெனைக்கறதை நிறைவேத்தலாமா, வேண்டாமா’ன்னு முடிவு பண்ணுது! நீ நினைக்கறதைப்
புரிஞ்சுகிட்டேன்றதாலியே, அத்த செஞ்சிரும்னு கியாரண்டி கிடையாது! தெரியுமில்ல!:))

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். [703]

இப்ப எனக்கு இந்த மாரி அடுத்தவன் நெனைக்கறதைப் புரிஞ்சுக்க முடியலைன்னு வைச்சுக்க! ஆனா, அந்த அறிவு ஒங்கிட்ட இருக்குதுன்னு எனக்குத் தெரியவருது... அட! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேம்ப்பா!
அதான் ஒனக்குக் கிடையாதுன்னு தெரியுமே! ஒரு ஒதாரணத்துக்கு வைச்சுப்போம்! சரியா....இப்ப நான் இன்னா பண்ணனும்னு ஐயன் சொல்றாரு இங்க! ஒன்னிய என்னோட கூட்டு சேர்த்துக்கணுமாம் நான்! அதுக்கு
விலையா நீ என் கையைக் கேக்கிறியா? சரின்னு வெட்டிக் கொடுத்தாவது ஒன்னைச் சேர்த்துக்கணுங்கறாரு!
ஒரு ராசா எப்படியாப்பட்ட மந்திரியைத் தன்னோட வைச்சுக்கணும்னு சொல்றதுக்காவ, ”அமைச்சியல்”ல இத்த எளுதியிருக்காருன்னாலும், இப்ப, இந்தக் காலத்துக்குக் கூட இது ரொம்பவே பொருத்தமாயிருக்கும்!

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு. [704]


ஒனக்கு இருக்கற கையி,காலு, கண்ணு,மூக்குதான் எனக்கும் இருந்தாலும், இந்த குறிப்பறியதுன்ற கொணம் மட்டும் எங்கிட்ட இல்லாங்காட்டி, நீ என்னை விட ஒசந்தவன்றாரு ஐயன். அவ்ளோ முக்கியமாம் இந்த அறிவு!

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண். [705]

ஒடம்பு ஒண்ணா இருக்கறதைப் பத்தி சொன்னவரு, இப்போ குறிப்பா ஒரு ’பார்ட்’டைப் பத்திச் சொல்ல வராரு!
இந்தக் குறிப்பறியதுக்குத் தேவையானது கண்ணு! அது பாக்கற பார்வையிலியே இன்னா சாமாச்சாரம்னு கண்டுக்கலாம்! அதுனால, இந்தக் கண்ணால அப்பிடி இன்னா, ஏது விசயம்னு புரிஞ்சுக்க முடியலைன்னா,
ஒனக்கு ரெண்டு கண்ணுங்க ஒம் மூஞ்சியில இருந்தும் பிரயோசனம் இல்லைன்றாரு!

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம். [706]

ஏன் கண்ணைப் பத்தி அப்பிடி சொன்னாருன்னு ஒனக்கு டவுட்டு வருதில்ல? 2009-ல கேனத்தனமா நீ இப்பிடி நெனைப்பேன்னு அப்பவே அவரு குறிப்பறிஞ்சிட்டாரு!![சிரிக்கிறான்!]

கண்ணு எங்கே இருக்கு? மொகத்துல தானே? அதான் அடுத்தாபல,இந்தக் குறளை வைச்சாரு!
இப்ப, கண்ணாடி முன்னாடி போயி நிக்கறே நீ! அது இன்னா காட்டும்? ஒம் மொகரையைத்தானே?
அதே போலத்தான் ஒருத்தன் மனசுக்குள்ள இன்னா நெனைச்சுகினு இருக்கான்றத, அவன் மொகமே காட்டிக் கொடுத்திருமாம்!
அதுக்குத்தான் நம்ம கண்ணால, அவன் மொகத்தைப் பார்த்து, கண்டுக்கணும்!
இந்தக் குறள்லேர்ந்து ஒனக்கு இன்னும் இன்னாத் தெரியுது, சொல்லு? வள்ளுவர் காலத்துல கண்ணாடி இல்லை!
அதான் பளிங்குன்னு சொல்லியிருக்காரு! வெளங்குதா? [மேலும் சிரிக்கிறான்!]

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும். [707]

மொகம் ஏன் அவ்ளோ முக்கியம்னு இன்னும் கொஞ்சம் சொல்றாரு இதுல!
இப்ப, ஒனக்கு ஒடம்புல ஒரு காயம்! வலிக்குது! இன்னா பண்றே நீ? மொகத்தை அஸ்டகோணலா வைச்சுகிட்டு, ஐயோ, அம்மா, அப்பா!ன்னு கத்தறே! இது வெளியில இருக்கற வலியினால வருது!
நீயே ரொம்ப சந்தோசப் படற மாரி, ஒரு விசயம் கேக்கறே! ஒடனே இன்னா பண்றே? மூஞ்சி அப்பிடியே பூவாட்டமா மலருது! பல்லெல்லாம் காட்டி சிரிக்கறே! மனசு வருத்தப் படற மாரி கேட்டாக்க,... அதே மூஞ்சி இப்ப அளுது வடியுது!
இப்பிடி, மனசுல நாம இன்னா நெனைக்கறோமோ, அத்தயெல்லாம் அப்பிடியே காட்டற அறிவு இந்த மொகத்துக்கு மட்டுமே ஜாஸ்தியா இருக்குன்றதாலதான் இதுக்கு இத்தினிப் பெருமை!


முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின். [708]


இப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்திரிச்சுன்னு வைச்சுக்க! இன்னார்கிட்டப் போய் நின்னாக் கரியம் கெலிக்கும்னு நெனைச்சு அவர் வூட்டாண்ண்டை போய் நிக்கறே! ஒம் மொகத்தைப் பர்த்ததுமே, ’இன்னாடா! இன்னா சமாச்சாரம்! எதுனாச்சும் பிரச்சினையா? அந்த மேக்காண்டை வயலுக்குத் தண்னி வோணுமா? சரி, சரி, போய் கணக்குப்புள்ளையைப் பாரு. நாஞ்சொன்னேன்னு சொல்லு! அல்லாம் சரியாப் பூடும்’னு சொல்றாரு! ஒனக்கா ஆச்சரியமா இருக்கு! ’நான் ஒண்ணுமே சொல்லைலியே! இவருக்கு எப்பிடி அத்தினியும் தெரிஞ்சுது’ன்னு வாயைப் பொளக்கறே! அதான் ஆருக்கு இன்னா தேவைன்னு அவரோட குறிப்பறிஞ்சு சொல்ற சாமர்த்தியம்!
அப்படியாப்பட்ட மனுசங்க முன்னாடி நிக்கறதே போதும், அதுலியே ஒன்னோட கஸ்டம்லாம் விடிஞ்சிரும்னு சொல்றாரு ஐயன்!


பகைமையும் மேன்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். [709]

ஏற்கெனெவே சொன்னதைத்தான் இதுலியும் திரும்பவும் வந்து சொல்றாரு. அதான் அவரு டெக்னிக்குன்னு நான் முந்தியே ஒங்கையுல சொல்லிருக்கேன்ல!

ஒருத்தனோட கண்ணை மட்டுமே பார்த்து, இவன் நம்மளோட சேக்காளியா இல்லை எதிரியான்னு கண்டுபிடிச்சிருவானாம் இந்த வகை தெரிஞ்ச ஆளு!

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற. [710]

ஒரு பெருசுகிட்ட போய் பலான விசயம் சொல்லலாம்னு போறே! சொல்லவும் ஆரம்பிக்கறேன்னு வையி! அப்பிடி சொல்றபோ, அந்தப் பெருசோட கண்ணையே பார்க்கச் சொல்றாரு ஐயன்!

நீ சொல்ற விசயம் அவருக்கு ஏத்ததா இல்லியான்னு அந்தக் கண்ணுங்களைப் பார்த்தே நீ உஷாராயிரலாம்! பிடிச்சிருக்கா, மேல போ! இல்லையா, அப்பிடியே ஜகா வாங்கிக்க! ஒன்தலை தப்பிக்கும்!

இதை ஒரு ராசாகிட்ட பேசறப்ப, ஒரு மந்திரி செய்ய வேண்டிய காரியம்னு இதுல சொன்னாலும், இப்ப இருக்கற தலைங்களுக்கும் இது நல்லாவே பொருந்துதா இல்லையா சொல்லு!' எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.

எழுதி முடித்து, டீ, வடை எல்லாம் சாப்பிட்ட பின்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்த இருந்த மன்னார், திடீரென என் பக்கம் திரும்பி, 'நீ இன்னும் கெளம்பிலியா? ஓஓ! ஒனக்கு இன்னும் ஒரு டவுட்டு இருக்குல்ல?' என்றதும் இரண்டாம் முறையாக மீண்டும் அதிர்ந்து போனேன்!

'அட! இவம்பாட்டுக்கு, பலூன் வாங்கன்னு சொல்லி அக்காகிட்ட பணம் வாங்கிகன்னு மாரிகிட்ட சொல்ட்டானே. இதை வைச்சு எவனாச்சும் அண்ணியை ஏமாத்திட்டா இன்னா பண்றதுன்னுதானே யோசிக்கறே?
அதெல்லாம் ’சீக்ரெட்’ வார்த்தைப்பா! ஒரு நாலைஞ்சு வார்த்தை காலையிலியே சொல்லிட்டு வந்திருவேன் ஒங்க
அண்ணி கையுல! அத்த வைச்சு அவ புரிஞ்சுப்பா. இன்னிக்கு சொன்னது நாளைக்குக் கிடையாது! இப்ப தீர்ந்திச்சில்ல டவுட்டெல்லாம்! கெளம்பு! கெளம்பு!' என விரட்டினான், சிரித்துக் கொண்டே!


குறிப்பறிந்து சொல்லும் ’மயிலை மன்னாரை நண்பனாக அடைந்தது எவ்வளவு பெரிய அணிகலன் எனக்கு!’ என வியந்துகொண்டே அருகில் வந்த ஆட்டோவில் ஏறினேன்!

****************************

வள்ளுவர் புகழ் வாழ்க!

Read more...

Wednesday, April 08, 2009

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"
குடமுழுக்கில் குளிர்கின்றாய்! - அங்கே
எரிதணலில் சாகின்றார்
இதுவுனக்கு முறையாமோ - இன்னும்
ஏனிந்த மௌனனமம்மா?

சுதந்திரமே கேட்டிருந்தார் - பல
கொடுமைகளைத் தாங்கிநின்றார்
இன்றங்கே மடிகின்றார் - இன்னும்
பாராமுகம் ஏனம்மா?

கோபுரங்கள் நீ காண - அவரோ
இடமின்றித் துடிக்கின்றார்
கொடுமையிதைக் கண்டபின்னும் - உனக்கு
கோபமிங்கு ஏனம்மா?

நீயங்கு சிரித்திருக்க - அடியே
யாமிங்கு வேகின்றோம்
அடுதுயரை நீக்காமல் - அடியுனக்கு
எம்மேல் ஏனித்தனை வெறுப்போ?

புதுவண்ணப் பூச்சுடனே நின்
கோவிலிங்கே மிளிர்ந்திருக்க
எதுவென்று தெரியாமல் - அங்கே
தவிப்பவரைப் பாரம்மா!

அழகான மணவாளன் -உடன்
அறிவான பிள்ளைரெண்டு
ஆனந்தமாய் நீயிருக்க - நாங்கள்
அழுவதுவும் கேட்கிலையோ?

நின்வண்ணம் கண்டிடத்தான் - இங்குனக்கு
எத்தனைபேர் பாதுகாப்பு
நாதியின்றிச் சாவோரை - நீயின்னும்
பாராததும் ஏனம்மா?

அலங்கரம் கொண்டிங்கு - நீயின்று
அழகாக ஜொலிக்கின்றாய்
அகம்பாவம் கொண்டவரால் - உன்மக்கள்
அழிகின்றார் பாரம்மா!

கதியில்லை வழியில்லை - இனியிங்கு
கடைத்தேறக் களமில்லை
எனவிங்கு ஓயமாட்டோம் - நீ
வாராமல் விடமாட்டோம்!

கொண்டாட்டம் போதுமடி - இப்போதே
எழுந்திங்கு வந்திடடி
இப்படிக்கு நீயிருந்தால் - அடியே!
இனியுன்னை விடமாட்டோம்!

குளித்தது போதுமடி - தாயே!
அழித்துவிடு பகைவர்களை
களித்தது போதுமடி - எழுந்துநீ
எம்வாழ்வில் மலர்ச்சி கொடு!

அடிமைகளாய் வாழ்ந்திடவோ - அடியே
நீயெம்மைப் பிறப்பித்தாய்
இதுவுந்தன் திருவுளமோ - மீனாளே!
சொல்லடி நீ சிவசக்தி!

எமதுரிமை எமக்குவேண்டும் - அது
இன்றே நீ தரவேண்டும்
இனிமேலும் மௌனித்தால் - என் தாயே
உனை யாம் அங்கு வந்து பார்க்கின்றோம்!:(((

Read more...

Tuesday, April 07, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3 [61 - 91]

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3 [61 - 91]

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’
[பகுதி-2]

நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே
சுத்தபரி பூரணியே சுந்தரியே - அத்தருடன்

வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே
வேதாந்தி யேகமல மெல்லியலே - நாதாந்த

மாயேச் சுவரியே மங்கையே மாமறைக்குந்
தாயாகி நின்ற சரஸ்வதியே - காயாய்ப்

பழுத்த பழமாய்ப் பழத்திரதத் தானாய்
முழுத்தபரா னந்த முதலாய் - எழுத்துமுதல்

ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்
வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்

அங்கங்குந் தானாய் அமர்ந்தவளே ஆதியந்தம்
எங்கெங்குந் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்

அஞ்சுகமே தேனே யணங்கே யமுதமொழிக்
கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்

கன்னி திரிசூலி கபாலி சிவகாமி
மன்னு கவுரி மகமாயி - பொன்னின் மலர்த்

தாளி சதுரி சவுந்தரிமுக் கண்ணுடைய
காளி பகவதி கங்காளி - தூளியாத்

தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி
அக்கினிகை யீர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ் [70]

வீரசக்தி மேருவினை வில்லா வளைத்தவொரு
பராசக்தி வேதப் பராசக்தி - தாரணிகள்

கொண்டகா ரிச்சிக்குங் குந்தளத்தி மாமதனன்
சண்டைக்கா ரிச்சி சகலத்தி - துண்டமதிச்

செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி - அஞ்சனத்தி

முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ் நகைச்சி
பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை

அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி
செக்க ரிளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி

ஓலைக் குழைச்சி உபதேசக் குண்டலச்சி
மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்

அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி
முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்

ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி
நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான

பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி
கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம

வேடிச்சி நல்லதொரு மீனவனுக் கன்றுமுடி
சூடிச்சி கொக்கிறகு சூடிச்சி - நாடிச்சீர் [80]

பாதந் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்
வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை

பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்
ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே ஏடெதிரே

ஏற்றுவித்து முன்சமணர் எண்ணா யிரர்கழுவில்
வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே - நாற்றிசையும்

கொண்டாடப் பெற்றதொரு கோமளமே சாமளையே
தண்டா மரைத்திருவே தையலே - மண்டலங்கள்

எங்குமொத்து நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை
அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க

ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை
வெளியே பரப்பிரம வித்தையே - அளிசேரும்

கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்
தைந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தன் இடர்

அல்லல்வினை யெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்லசவு பாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்

ஆசுமது ரஞ்சித்ர வித்தார மென்றறிஞர்
பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு - நேசமுடன்

தந்தென்னை யாட்கொண்டு சற்குருவாய் என் அகத்தில்
வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்

நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண்.
[91]
*************************
“மீனாட்சியம்மை கலிவெண்பா” நிறைந்தது!

யாவினும் நலம் சூழ்க!
*******************************


அருஞ்சொற்பொருள்:

61-நித்திலம்-முத்து; நின்மலம்-குற்றமற்றவள்; பரிபூரணி-எங்கும் நிறைந்தவள்; அத்தர்-தலைவர்.

62. வாதாடும்-வாதிக்கும்; தர்க்கம் செய்யும்; மந்த்ர ரூபி-மந்திரங்களையே வடிவாகக் கொண்டவள்; வேதாந்தி-வேத முடிவிலுள்ளவள்; நாதாந்த-நாத தத்துவத்தின் முடிவிடமாய்.

63. மாயேஸ்வரி-பெரிய நாயகி.

64. ரசம்-சுவை; முழுத்த-நிறைந்த; பரானந்தம்-சிவானந்தம்; முதல்-அடிப்படை; எழுத்துமுதல்-முதல் எழுத்தான அகரம் போன்றவள்.

65. அவ் உவர்-அந்தந்த மதத்தினர்; வெவ்வேறு-வேறுபட்ட தெய்வங்கள்; விகற்பம்-மாறுபட்ட புன்சிறு தெய்வங்கள்.

66. திங்கள்-சந்திரன்; நுதல்-நெற்றி.

67.அஞ்சுகம்-அழகிய சிறந்த கிளி; அணங்கு-தெய்வப் பெண்; சிஞ்சுகம்-கோவைக் கனி போன்ற சிவந்த வாயையுடையவள்; பிஞ்சுமதி-பிறைச் சந்திரன்; கொஞ்சு-பிரியமாகப் பாடவல்ல.

68. கன்னி-என்றும் இளமையானவள்; திரிசூலி-முத்தலை சூலமுடையவள்; கபாலி-மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவள்.

69. தாளி-கால்களையுடையவள்; சதுரி-சாமர்த்தியம் வாய்ந்தவள்; பகவதி-சிறந்த பிராட்டி; கங்காளி-எலும்பு மாலை அணிந்தவள்; தூளியா-தூளாகும்படி.

70. தத்துவத்தி-தத்துவங்களின் முடிவிடமாக உடையவள்; தற்பரத்தி-தானாகத் தோன்றிய மேன்மை பொருந்திய தனக்கு ஒப்பில்லாதவள்; ஈர்ந்த-அகப்படுத்திய.

71. பராசக்தி-மேலான ஆற்றல் பொருந்தியவள்; தாரணி-பூமி.

72. கார்-மேகம்; குந்தளத்தி-கருமையான கூந்தலையுடையவள்; சண்டை காரிச்சி- எதிர்த்துப் போரிடும் காமரூபம் பொருந்தியவள்; சகலத்தி-எல்லா தன்மைகளையும் தன்னிடம் இயல்பாய்ப் பெற்றவள்; துண்டமதி-பிறைச் சந்திரன்.

73. கஞ்சுளிச்சி-சட்டை அணிந்தவள்; கங்கணத்தி-நாகமாகிய காப்பை அணிந்தவள்; பஞ்ச சத்தி- ஐந்து சக்திகளாகவும் உள்ளவள்;கொந்தளத்தி-சிறந்த சூழலை உடையவள்; பைம்பணத்தி-பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவள்; அஞ்சணத்தி-மை பூசப் பெற்ற கண்ணை உடையவள்.

74. முத்து வடம்-முத்து மாலை; கொங்கை-தனம்; நகைச்சி-சிரிப்பினை உடையவள்; பத்தர்-அடியார்கள்; நெஞ்சகத்தி-மனத்தில் இருப்பவள்;பார் இடத்தி-பூமியை இருப்பிடமாக உடையவள்.

75. அக்குவடம்-சங்கு மாலை; வளர்த்தி-வளர்த்தவள்; செக்கர்-சிவந்த; பிறைச்சி-சந்திரனைத் தரித்தவள்.

76. ஓலை-காதணி; குழைச்சி-குண்டலத்தை உடையவள்; குண்டலச்சி-ஆகாய வழியே செல்லும் தன்மை வாய்ந்தவள்; மாலை-சிறந்தமங்கல மாலை; ஞாலம்-பூமி.

77. அக்கரத்தி-மந்திர எழுத்தே உருவகமாக உடையவள்; பொக்கணத்தி-திருநீற்றுப் பையை உடையவள்; அண்டம்-வானுலகம்; பகிர் அண்டம்-வானுலகின் வேறான பல உலகங்கள்; முக்கணத்தி-சத்துவ, ராஜஸ,தமோ குணங்களை உடையவள்; நிட்களத்தி-உருவமில்லாதவள்;குற்றமில்லாதவள்; மோட்சத்தி முத்தி தருபவள்.

78. ஏகாக் கரத்தி-ஓம் என்னும் பிரணவ ரூபமாயிருப்பவள்; நீங்காத கையை உடையவள் எனவும் வரும்; நாகாதி பூண்ட-நாகம், எலும்பு முதலியவற்றை ஆபரணங்களாக அணிந்த; நாதத்தி-வீர முழக்கம் செய்பவள்; வாகு-அழகு.

79. பரிமளம்-வாசனை; அணைத்தி-படுக்கையாக உடையவள்; கற்பாந்தந்தரத்தி- ஊழிக் காலத்தின்இறுதியிலும் இருப்பவள்.

80. வேடிச்சி-வேடுவர் குலப் பெண்; மீனவன் -சோமசுந்தரக் கடவுள் [பாண்டியன்]; சூடிச்சி-சூட்டியவள்; நாடி-தேடி.

81. வேதன் -பிரமன்; பங்கயம்-விஷ்ணுவின் உந்திக் கமலம்; வித்தகத்தி-மேலான தன்மை உடையவள்.

82. பாடகத்தி-பாடகம் என்கிற காலணி அணிந்தவள்; கீதம்-இசைப் பாடல்; ப்ரபந்தத்தி-நூல்களுக்குத் தலைவி;ஆடகத்தி-கால் மாறி ஆடியவள்; ஆதி-ஆதி சக்தியாய் அமைந்தவள்.

83. மறை வித்தகி-வேத விழுப் பொருள்.

84. கோமளம்-பேரழகு; யாமனை-காளி;தாமரைத் திரு-தாமரை போன்ற முகமுடைய பார்வதி; தையல்-பேரழகு வாய்ந்த பெண்.

85. நின்று-நிலை பெற்று; துங்க-தூய்மையான.

86. ஓதிமம்-அன்னம் போன்ற நடையுடையவள்; உண்மை வெளி-சத்து ஆகாயமாய் இருப்பவள்; பரப் பிரமம்-மேலான பொருள்; வித்து-அடிப்படையாய் இருப்பவள்; அளி-வண்டு.

87. கொந்து-கொத்துப் போன்று திரண்ட; அளகம்-கூந்தல்; பந்திக் குயில்-வரிசையான குயில்கள் கூவுவது போன்ற இனிமையான குரலை உடையவள்; ஐந்தரு-அரி சந்தனம், கற்பகம்,சந்தானம், பாரிஜாதம்,மந்தாரம் என்னும் தேவலோகத்திலுள்ள சிறந்த ஐவகை மரங்கள்; மூவருக்கும்-மும்மூர்த்திகளுக்கும்.

88. இடர்-சிறு துன்பம்; அல்லல்-பெருந் துன்பம்; வினை-பிறப்புக்கு ஏதுவாய நல்வினை, தீவினை; அஞ்சல்-பயப்படாதே; சவுபாக்கியம்-சிறந்த பேறுகள்; வல்லபம்-ஆற்றல்.

89. ஆசு-உடனே பாடப் பெறும் பாடல்; மதுரம்-இன்னிசைப் பாடல்; சித்திரம்-ஓவியத்தில் பொருந்தும்படியாகப்பாடப் பெறும் பாடல்; வித்தாரம்-விளக்கமாகப் பாடும் பாடல்; பெருவாக்கு-சிறந்த புகழ் வார்த்தைகள்.


90. அகம்-மனம்; புத்திமதி-பேரறிவு; சந்ததம்-எப்போதும்.

91. நீயே-நீ ஒருத்தியே; நின்று-நிலையாக; இரட்சி-பாதுகாப்பாயாக; சரணம்-பாதம்; சரண்-அடைக்கலம்.
**********************
[மேற்சொன்ன அருஞ்சொற்பொருள் விளக்கம் சென்னை, பச்சையப்பன் கல்லூரிப் பள்ளித் தலைமைத் தமிழ் ஆசிரியர், வித்துவான், அம்பை, இரா. சங்கரனார் எழுதியது.]


யாவர்க்கும் பொதுவாகி எல்லார்க்கும் நலமளிப்பவள் மீனாட்சியம்மை என்னும் பொருள் இதனைப் படிப்பவர்க்கு எளிதில் விளங்கும்!

அனைத்து உயிரிடத்தும் அன்பு பூண்டு, நல்லனவே நினைத்து அனைவரும் அருள்பெற அம்மையை வேண்டுகிறேன்.

இந்த அரும் பெரும் நூலான ‘மீனாட்சியம்மை கலிவெண்பா’வை இங்கு இட அருளிய அன்னைக்கு வந்தனம் சொல்லி முடிக்கிறேன்.


யாவினும் நலம் சூழ்க!

முருகனருள் முன்னிற்கும்!


+++++++++++++++++++

Read more...

Monday, April 06, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’

Add Image
[பகுதி-1]

[இந்தப் பகுதியில் வரும் பண்ணழகும், சொல்லழகும், பொருளழகும் அம்மையை நம் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தும்! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் இதில் சுருங்கச் சொல்லி விளங்கியிருக்கும்! படித்து இன்புறுவோம்!]


நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை

ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்

இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த

மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்

உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்

பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்

ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்

போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய

பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத

அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்

வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்

கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி

தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்

காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி

பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி

சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி

பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா

அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்

செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு

மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற

சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத

தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்

சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்

தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]

*******************************
[அருள்கூர்ந்து பொருள் விளக்கமும் படிக்க வேண்டுகிறேன். பல அரிய செய்திகள் விளங்கும். நன்றி.]


அருஞ்சொற்பொருள்:


31. நிட்களம்-குற்றமற்ற தன்மை; வெளி-சிதாகாசம்; உத்தமி-சிறந்த இலக்கணமுடையவள்; பத்தி-வரிசை.

32. ஒளி- சுடர்; அந்தரம்-ஞானாகாசம்; ரூபம்-வடிவு; விளை பொருள்-உண்டாகும் உயிர்ச்சத்து; மேகம்-மழை; வாகு-அழகு.

33. இடை- இடைகலை, இடதுபக்க நாசி மூச்சுக்காற்று; பிங்கலை- வலதுபக்க நாசியில் வரும் மூச்சுக்காற்று; கடை- இறுதியானது; சுழிமுனை-இடைகலையும், பிங்கலையும் சேரும் இடம்; கால்-காற்று; மடல்-இதழ்கள்; அவிழ்ந்த-மலர்ந்த.

34. மூலாதாரம்- ஆறு ஆதாரங்களில் முதன்மையானது, மும் மண்டலம்- சூரிய, சந்திர, அக்கினி எனும் 3 மண்டலங்கள்; கடந்து- சென்று; மேல் ஆதாரம்-உச்சி இடத்துக்கும் மேல்நிலை; ஊறல்- சுரக்கும்[அமுதம்].

35. எண்-நினைத்தல்; அரிய-முடியாத.

36. மெய்ஞ்ஞானம்-உண்மை அறிவு; அஞ்ஞானம்-அறியாமை; பைந்நாகம்-படத்தைப் பெற்ற பாம்பு.

37. பாங்கு-முறை; ஆண்டி-பிச்சாண்டி.

38. கூத்தாடிச்சி- கூத்தாடியின் பெண்பால்; அம்மனை- ஏழாங்காய் ஆட்டம்; பந்தாடிச்சி-பந்தாட்டம் ஆடுபவள்; மால்-விஷ்ணு.

39. வினை-நல்வினை, தீவினை இரண்டும்; அஞ்சல்-பயப்படாதே; தோற்றுதல்-தரிசனம் தருதல்; துடி-உடுக்கை; இடைச்சி-இடுப்பை உடையவள்; ஏத்து-துதித்தல்.

40. நிறத்தி-நிறம் உடையவள்; கச்சு-இரவிக்கை; பொரு-முட்டுகின்ற; முலைச்சி-தனங்களை உடையவள்; வளைச்சி-வளையல்களை அணிந்தவள்; கொச்சை-மழலைப் பேச்சு.

41. மலையரையன் - மலை அரசன் மலையத்வஜன். மலைச்சி- குறிஞ்சி நிலப் பெண்; கலைச்சி- பல கலைகளையும் அறிந்தவள், சிறந்த ஆடைகளை அணிந்தவள்;மேகலை என்னும் ஒட்டியாணத்தை அணிந்தவள்[[மே]கலைச்சி என்பது முதற் குறைந்து வந்தது]; நிலை- உண்மைத் தன்மை; நிலைச்சி- நிலை பெற்றுள்ளவள்;அலையாத-அசையாத.

42.நடைச்சி-நடையை உடையவள்; மறைச்சி- வேதங்களால் புகழ்ந்து கூறப்படுபவள், வேதங்களுக்குள் மறைந்து காணப்பெறும் உட்பொருளாய் இருப்பவள்; ஆண்டிச்சி-எல்லாவற்றையும்ஆளும் தகுதி பெற்றவள்; கன்னல்-கரும்பு; மொழிச்சி-இனிய சொற்களை உடையவள்; கருணைச்சி- உயிர்களிடம் இரக்கம் உள்ளவள்.

43.வாய்ச்சி- இன்சொல்லுடையவள்; சடைச்சி-சடையை உடையவள்; மங்கைச்சி-இளம்பெண்; பேய்ச்சி- பேய்களால் சூழப் பெற்றவள்;அச்சம் தரத் தக்கவள்; இளமுலைச்சி- பிறரால் சுவைக்கப் பெறாத இளமையான தனங்களை உடையவள்; பேதைச்சி-ஒன்றும் அறியாப் பருவத்தை உடையவள்.

44. மொழிச்சி- சொற்களை உடையவள்; வெளிச்சி-வெட்டவெளியை இருப்பிடமாகக் கொண்டவள்; வஞ்சம் அற்ற வெளிப்படையான குணமுடையவள்; வெளி இடைச்சி- வெட்டவெளியின் நடுவே தோன்றாது இருப்பவள்; அண்ணுபுரம்- நெருங்கிய முப்புரம்; படைச்சி-நகை[சிரிப்பு] என்னும் போர்க்கருவியை உடையவள்; நண்னில்-எளிதில் அடையமுடியாத; அரும்-விலையுயர்ந்த.

45. கொப்பு-மேல் காதில் அணியும் கொப்பு என்னும் அணி; குழைச்சி-கீழ்க் காதில் அணியும் குழை என்னும் நகையணியை உடையவள்; பொரு-போன்ற, வென்ற; விழிச்சி-கண்களை உடையவள்; அப்பு-[கங்கை]நீர்; சிவாகமச்சி- சைவ ஆகமத்தின் தலைவி; மெய்ப்பு ஆம்- உண்மை ஆகிய.

46. கருப்பு-கரும்பாகிய; சிலைச்சி-வில்லை உடையவள்; கலைச்சி-கலைகளின் தலைவி; வலைச்சி-மீனவர் குலத்தில் பிறந்த உமை.;மருப்பு-யானைக்கொம்பு; மவுனத்தி-மோன நிலையில் இருக்கும் பரமேஸ்வரி; பொருப்பு-[இமய]மலை.

47. தாமம்-மாலை; சமர்த்தி-சாமர்த்தியமானவள்; தருமத்தி- அறம் வளர்த்த அரசி; நாமம்-புகழ் வாய்ந்த; சிவபுரத்தி-மதுரையைத் தன்இருப்பிடமாக உடையவள்; நாரணத்தி- நாராயணன் தங்கையான வைஷ்ணவி; தே-தெய்வீகத் தன்மை.

48. காரணத்தி-எல்லாவற்றுக்கும் மூல காரணமாயுள்ளவள்; கணத்தி-கூட்டமாக இருப்பவள்; வாரணத்தி-பெண்யானை போன்ற நடையையுள்ளவள்; மாரணத்தி-அனைத்துக்கும் இறுதி தரக் கூடிய வல்லமையுள்ளவள்; [ஆரணத்தி எனப் பிரித்து வேதங்களுக்குத் தலைவியானவள் எனவும் பொருள் கொள்ளலாம்; பூரணத்தி-எங்கும், எதிலும் நிறைந்தவள்.

49. பரிபுரத்தி-பரிபுரம் என்னும் சிலம்பினை அணிந்தவள்; பங்கயத்தி-அடியார்களின் இதய கமலத்தில் அமர்ந்திருப்பவள்; செங்கரத்தி-செம்மை வாய்ந்த கைத்தலங்களை உடையவள்; சொப்பனத்தி-கனவிலும் வந்து அருள் சுரப்பவள்; பாதிமதி- அரைச் சந்திரன்.[பறைச் சந்திரன் எனவும் கொள்ளலாம்]

50. துய்ய-தூய்மையான; காரனி-உலகின் மூல காரணமாக உள்ள தலைவி.

51. சேணிச்சி-நிலையாதார்க்கு எட்டாத தூரத்தில் இருப்பவள்;[ஆடை நெய்யும் குலத்தில் பிறந்தவள், சொர்க்கத்தை விரும்பும் அடியார்க்கு கொடுத்து அருள்பவள் எனவும் கொள்ளலாம்];ஊணிச்சி- நல்ல உணவை விரும்புபவள், உண்டவள்; பாணிச்சி-செங்கரங்களை உடையவள்;விறகு விற்ற படலத்தில் பாணனாக வந்த சிவனின் தலைவி].

52. பாசம்-பாசக் கயிறு; அங்குசம்- யானையை அடக்கப் பயன்படும் ஈட்டி; பரத்தி-மேலான பிராட்டி, பரதர் குலத்தில் பிறந்த பெண்; பருப்பதத்தி-மலை நாட்டில் பிறந்தவள்; மேலான பதத்தைத் தர வல்லவள்; காசாம் பூ- நீலோத்பல மலர்.

53. அம்பரத்தி- குற்றமற்ற சேலையை உடுத்தியவள்; ஆகாயத்தை உருவாக உடையவள்; ஐம்புலத்தி-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களின் ஆதாரமாயிருப்பவள்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களின் தலைவி; ஒரு-ஒப்பற்ற;உம்பர்-தேவர்; உத்தமத்தி-மேலான இலக்கணங்களையுடைய செல்வி.

54. செட்டிச்சி-செட்டி குலப்பெண்; ஒட்டச்சி-மண் வேலை செய்பவள் [சிவனார் மண் சுமந்த படலம் அறிக.] பூதி-திருநீறு; உத்தளத்தி-உடல் முழுதும் பூசியிருப்பவள்.

55. மின் -மின்னலைப் போன்ற பிரகாசம் உடையவள்; விளக்கு-அஞ்ஞான இருளைப் போக்கும் பிரகாசம்போன்றவள்; சீவ ரத்தினம்-ஐந்தலை நாகத்தின் மணி போன்ற; பொன் -அழகிய இலக்குமி.

56. பணி-ஆபரணங்கள் அணிந்தவள்; ஆணிக் கனகம்- பொன்னால் ஆன ஆபரணம்; மாண்-சிறப்பு.

57. சிங்காரம்-அலங்காரம்; சிலை-மலை; கங்காளர்-எலும்பு மாலை அணிந்த சிவபிரான்; மங்காத-ஒளி குறையாத.

58. கொழுந்து-இளந்தளிர் போன்றவள்; திரு-தெய்வத்தன்மை நிறைந்தவள்; ஐவர்-பிரமன். விஷ்ணு,உருத்திரன், மகேஸ்வரன்,சதாசிவன் எனும் 5 கடவுளர்.தாய்-ஆதி சக்தி;மெய்யர்-உண்மை அடியார்கள்.

59. சிவானந்தி- சிவானுபவம் பெற்றொளிரும் பிராட்டி; மூர்த்தி-தலைவி.

60. தாயகம்-பிறப்பிடம்; தாவரம்-நிலைபொருள்; சங்கமம்-இயங்கு பொருள்; சுடர் மூன்று-தீபச் சுடர்கள் மூன்று[சூரிய,சந்திர,அக்கினி];சங்கமம்-நுண்ணிய பொருள்; வேய்-மூங்கில்.

******************************

[நாளை நிறைவுறும்]

Read more...

Sunday, April 05, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’அருள்மிகு மீனாக்ஷி அம்மன் ஆலயக் கும்பாபிஷேகத்தை ஒட்டி பதிவுகள் எழுதலாமா என எண்ணினேன்.
சில ஆண்டுகளுக்கு முன், என் இல்லத்திற்கு வருகை தந்த ஒரு பெரியவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்து இதைப் படித்து வரச் சொன்னார். தொடர்ந்து படிக்காமல் அவ்வப்போது மட்டுமே படித்து வந்தேன்.

மிகச் சிறந்த முருக பக்தரான ”திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள்” இயற்றிய இந்த “மீனாட்சியம்மை கலிவெண்பா” மிகவும் அருமையான ஒரு நூல்! மீனாட்சி அம்மனின் பக்தராக இருந்து, அன்னையின் தரிசனம் பெற்று, அவளால் தொட்டெழுப்பப்பட்டு, அவள் ஆணையின் பேரில், சுயம்பு மூர்த்தியான முருகப் பெருமானுக்கு திருப்போரூரில் ஆலயம் எழுப்பிய மகான் இவர்!

91 கண்னிகள் கொண்ட இந்தத் துதி, முதல் வரியில் தொடங்கி, 182-ம் வரியில்தான் நிறைகிறது! அற்புதமான சொல்லாடல்களும், ஆழமான கருத்துகளும் கொண்ட இந்த நூல் அன்னையின் அடியவர் அனைவராலும் படிக்கப் படவேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை! அதிகம் அறிமுகமில்லாத இந்த அரிய நூலை பதிவேற்ற வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா! அவளருளால் இன்று நிறைவேறியது!

அன்னையை இவர் துதிக்கும் அழகை, நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு நாளைக்கு 30 கண்ணிகள் எனத் தொடர்ந்து 3 நாட்களுக்கு இது வரும்! பாடல் விளக்கம் என இல்லாமல், சில சொற்களின் பொருள் மட்டும்
இறுதியில் வரும்.
அனைவரும் படித்துத் துதித்து, அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் பெற வேண்டுகிறேன்!"மீனாட்சியம்மை கலிவெண்பா”

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’

“காப்பு”

அங்கையற்கும் மாற்கும் அரியபெரு மான்இடஞ்சேர்
அங்கையற்கண் ணம்மைக் கணியவே - அங்கயத்தின்
மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா
நாமுகந்து பாடுவோம் நன்கு.

”கலிவெண்பா”

சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்

வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே

அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்

வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா

மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி

மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே

அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்
எட்டெட்டுந் தானாய் இருந்தவளே - முட்டஎங்கும்

அவ்வெழுத்தாய் நின்ற அரும்பொருளே ஆரணங்கே
உவ்வெழுத்தாய் நின்றதொரு உண்மையே - எவ்வெழுத்துந்

தானாகி நின்றதொரு தற்பரையே யெவ்வுயிர்க்கும்
ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்

படியளக்க மால்பார் பதினான்கும் ஒக்க
அடியவரை யீடேற்றும் அன்னாய் - முடிவிலா [10]

ஓங்காரத் துட்பொருளே உற்றநவ கோணத்தில்
ரீங்காரந் தன்னில் இருப்பவளே - பாங்கான

முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே மூவிரண்டாஞ்
சட்கோணத் துள்ளிருக்குஞ் சக்தியே - மிக்கபுகழ்

எண்ணிரண்டாங் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்
பண்ணிசைந்த பாட்டின் பழம்பொருளே - விண்ணுலகின்

மேற்பட்டங் கூடுருவி மேலாகி நின்றதொரு
நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற

பஞ்ச கோணத்திருந்த பைங்கிளியே பார்முழுதுந்
தஞ்சமது வாகிநின்ற தையலே - செஞ்சொல்மறைச்

சொல்லே பொருளே சுவையே அறுசுவையே
எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை

எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்
உறும் பொருளாய் அங்கங் குணர்வாய்ப் - பெறும்பயனாய்

ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்
கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பஞ்ச வர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற

ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்
வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாய் [20]

கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற
பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு

சோத்திரத்திற் சத்தமாய்த் தொக்கிற் பரிசமாய்
நேத்திரத்திற் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்

மெத்திரத மாய்மூக்கின் மேவுகந்த மாய்ப்பிறவாய்
மத்தபிர மத்த வயிரவியாய்ச் - சுத்த

துரியமதாய்ப் பின்னுந் துரியாதீ தத்தின்
அரிய சிலம் பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்

நாடுதனிற் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்
ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்

களங்கமற வேதான் கரும்புருவந் தன்னிற்
பளிங் கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே

கண்ணிரண்டி னுள்ளே கருணைத் திருவடிவாய்ப்
புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த

நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்
ஓசைவிந்து நாதாந்தத் துட்பொருளாய் - நேசமுடன்

அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்
பஞ்சபூ தம்மான பைங்கிளியே - கஞ்சமலர்ப்

பாத மிரண்டாகிப் பச்சைநிறந் தானாகி
ஆதிமுத லாகிநின்ற அம்பரமே - தீதிலா [30]
****************************************


அருஞ்சொற்பொருள்:

காப்பு: அயன்-பிரமன்; மால்-விஷ்ணு; இடம்-இடப்பாகம்; கயல்-ஒருவகை மீன்; கயம்-யானை; கோமான் -தலைவன்; உகந்து-விரும்பி.

கலிவெண்பா- கண்ணி:

1. சீர்-அழகு,சிறப்பு; தெள்ளமுதே, சேயிழையே என்பன அம்மையை விளிக்கும் விளிகள்; கார்-கருமை.

2. ஆதி-முதன்மை வாய்ந்த; பராபரை-சிவசக்தி.

3. அண்டர்-தேவர்; அணங்கு-தெய்வமகள்; திரை-அலைகளுடன் கூடிய கடல்.

4. மாறாமல்-இடைவிடாமல்; சிந்தை-மனம்; அந்தம்-முடிவு.

5. மாயோன் -விஷ்ணு; இணையவல்லி- தங்கையான வல்லிக்கொடி போன்றவள்; மயிலோன் -முருகன்; சங்கரி-நன்மை செய்பவள்.

6. பொன் அம் கிரி- பொன் போலப் பிரகாசிக்கும் மலை.

7. அட்டம்-எட்டு; குலம்-கூட்டம்; வெற்பு-மலை; அமர்ந்தவள்-விரும்பியவள்; எட்டெட்டும்-அறுபத்து நான்கு கலைகளுமாய்; முட்ட-நிறைந்து.

8.’அ’ எழுத்தாய்- எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையான ‘அ’ போல உயிர்களுக்கெல்லாம் முதன்மையைப் பெற்று; ‘உ’ எழுத்தாய்-’உ’ என்கிற சக்தி எழுத்தாகி.
‘அ’வைச் சிவ எழுத்தென்றும், ‘உ’வைச் சக்தி எழுத்தென்றும் கூறல் மரபு. நிறை-நிலை பெற்ற; எவ்வெழுத்தும்-எல்லா மொழிகளிலுமுள்ள எல்லா எழுத்துக்களும்.

9. தற்பரை- தானாய்த் தோன்றிய தலைவி; [சுயம்பு]; ஊன் -உடல்; கோன் -தலைவன்.

10. படி-பூமி; மால்-திருமால்; பார்-உலகம்; ஈடேற்றும்-வாழ்விக்கும்; முடிவு-அழிவு.

11. ஓங்காரம்-ஓம் என்னும் பிரணவ மந்திரம்; நவகோணச் சக்கரம் என்னும் இயந்திரத்தில் ரீங்காரம் என்னும் பீஜ எழுத்தின் மந்திரப் பொருளாய் இருப்பவள் உமை.
[’ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’அபிராமி அந்தாதி]; பாங்கு-பகுதி.

12. முக்கோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருப்பவள் உமாதேவி. மூவிரண்டு- ஆறு; ஆறுகோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருக்கும் மீனாட்சியம்மை.

13. எண்ணிரண்டு-பதினாறு; கோடு-இயந்திரத்தின் எல்லைக்கோடு; இருப்பவள்-அக் கோணத்துள் பொருளாயிருப்பவள்; பண்-இசை; பழம் பொருள்-பழைமையான அர்த்தமாயிருப்பவள்.

14. மேற்பட்டு-மேலாக; ஊடுருவி-கழித்துச் சென்ற. 43 கோணங்கள் அமைந்த இயந்திரத்தின் தலைவி மீனாட்சியம்மையார்.

15. பஞ்சகோணம்- ஐந்து கோண இயந்திரங்கள்.

16. மறைச்சொல்- வேத மந்திரம்; கலை-ஒன்பது வகையான மெய்ப்படு; அறு சுவை- ஆறு வகையான உணவுச் சுவைகள்.

17. தலை-முதல்; எண் இல்-கணக்கற்ற; உறும் பொருள்-பொருந்தும் உடல்; பயன் -ஆற்றல்.

18. ஆறாறு தத்துவமாய்-முப்பத்தாறு தத்துவங்களால்; ஐயிரண்டு-பத்து; கூறு-அவ்வயுப் பகுதி; கூட்டம்-தொகுதி; பேறு-சிறந்த பயன்.

19. அஞ்செழுத்து-பஞ்சாக்கரம் என்னும் ‘நமசிவய’மந்திரம்; எட்டெழுத்து-’ஓம் நமோ நாராயணாய’என்னும் மந்திரம்; ஐம்பத்தோர் அக்கரமாய்- 51 எழுத்து வடிவமாயிருப்பவள்; பஞ்சவர்ணம்-5 நிறங்கள்; பஞ்ச தேவதை-5 சக்திகள்; வஞ்சம்-கபடம்.

20. ஆறாதாரம்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள் நம் உடலில் உண்டு என யோக சாத்திரக் கூற்று.
ஐயைந்தாய்-25 தத்துவங்களாய்; ஐம்மூன்று-5+3=8 அட்டமூர்த்தி; வீறு-மிகு பலம்; சக்கரம்-யந்திரம்; மிந்பிரகாசம்.

21. கருவி-ஐம்புலன்கள்; கரணம்-பூதங்கள்; ஆதி-முதலிய பிற தத்துவங்கள்; கைகலந்து-கூடி; பிரிவாய்-சுத்த, அசுத்தம்,பிரகிருதி எனப் பிரிவுபட்டு.

22. சோத்திரம்-செவி; தொக்கு-உடம்பு; பரிசம்- ஸ்பரிசம், தொடுவுணர்வு; நேத்திரம்-புறக் கண்; நாத்தலன் -நாக்கு என்கிற இடம்.

23. இரதம்-சுவை; கந்தம்-வாசனை; மத்த-இன்பம்; பிரமத்த-வீரம் பொருந்திய; வயிரவி-அச்சம் தருபவள்.

24. துரியமதாய்-சாக்கிரம், சொப்பனம், சுமுத்திக்கு மேலான துரிய நிலையில் உள்ளவளாய்; துரியாதீதம்-முன் சொன்ன நான்கு நிலைகளுக்கும் மேற்பட்ட நிலை.

25. இரந்து-பிச்சையேற்று; பவுரி- ஒருவகைக் கூத்து; தொந்தம்-இருவரும் கலந்து; பார்ப்பதி-பார்வதி.

26. பளிங்கு-நிறமற்ற கண்ணாடி; பரம்-பராசக்தி.

27. கருணை-இரக்கம்; வடிவு-அழகிய பெண்; பூவை-நாகணவாய்ப்பறவை போன்றவள்; பந்செம்மை.

28. தீபம்-சுடர்; உள் பொருள்- உள் இருக்கும் சக்தி.

29. அஞ்சுமுகம்- ஈசானம் முதலிய 5 முகங்கள்; அகண்ட-பிரிவின்றி; பைங்கிளி- பசுமையான கிளி போன்ற உமையவள்; கஞ்ச மலர்-தாமரைப் பூ.

30. பச்சை நிறம்- மரகதம்; ஆதி முதல்-தனி முதன்மை; அம்பரமே-வானவெளி உருவாய் நின்ற தாயே.
******************************

[நாளை வரும்]

Read more...

”அயன்” - திரை விமரிசனம்.

”அயன்” - திரை விமரிசனம்.
போரடிக்காத மசாலா ஆக்‌ஷன் படம்!

போகணும்னு அவசியமில்லை!

போனீங்கன்னா உங்க காசு ‘வேஸ்ட்’ இல்லை!

கொடுத்த காசுக்கு எல்லாவிதத்திலும் திருப்தி அளிக்கும்படிபடம் எடுத்திருக்காங்க!

நடிப்புன்னு ஒண்ணும் இல்லை!

சூரியா ஸ்மார்ட்டா இருக்காரு!

தமன்னா செம தூள்! தெலுங்கில் கொடி கட்டிப் பறப்பதன் காரணம் புரியுது!

ஜகன் நகைச்சுவைக்கு நல்ல வரவு! டைமிங் ரொம்ப நல்லா இருக்கு!

வில்லன் ஓக்கே!

ஹாரிஸின் இசை கேட்கும்போது நல்லா இருக்கு!

ஆக்‌ஷன் காட்சிகள் செம பரபரப்பு!

ஒளிப்பதிவு மிகவும் சிறப்பா இருக்கு!

டைரக்‌ஷனில் புது உத்தியாக ‘ஃப்ளாஷ்-பேக்’ பயன்படுத்தி இருப்பது திரும்பத் திரும்ப வருவதால், போகப் போக அலுப்பு!

கதை ?????????

இந்தியாவில் நடக்கும் பித்தலாட்டங்கள் பற்றிய விலாவாரியான காட்சிகள் வெளிநாட்டினர்க்கு இணையாக நாமும் இதில் முன்னேறியதைக் காட்டுகிறது!

மொத்தத்தில்,>>>>>>>>>>>>>

அயன்....... பார்த்தாலும், பார்க்கலைன்னாலும் பயன் ஒண்ணும் இல்லை! தப்பும் இல்லை!!!!!

சொல்ல மறந்தேனே! எனக்குப் பிடிச்சுது படம்! போனதுல வருத்தமில்லை!:))

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP