Friday, February 17, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48” [44]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48”


44.

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே


சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே

‘’இனிமே கொஞ்சம் சீரியஸாக் கவனிக்கணும்! இனி வரப்போறப் பாட்டுங்கள்லாம் ரொம்பவே நுணுக்கமான விசயங்களைச் சொல்ற பாட்டுங்க! இதுவரைக்கும் சொன்ன சங்கதிங்க அத்தனையையும் சேத்துவைச்சு முத்து முத்தா சொல்லிருக்காரு அருணகிரியாரு. கவனமாக் கேளு!’ என்றபடி தொடங்கினான் மயிலை மன்னார்.

அவனே அப்படிச் சொன்னதும், அந்தத் திண்ணையே கொஞ்சம் பரபரப்பானது!

‘நான் முன்னாடியே சொன்னதுபோல, கொத்துக்கொத்தப் பாட்டுங்களை அமைச்சுப் பாடியிருக்காரு இந்த அநுபூதியுல!

அதுலியும், இந்தப் பாட்டு க்கீதே….ரொம்பவே அருமையான பாட்டு!
மொத வரியெ ரொம்ப ரொம்ப அம்சமாப் போட்டுருக்காரு!

‘சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ?’

கேள்வி கேக்கறமாரி, ஒரு கொக்கியைப் போட்டு, அப்பிடியே பூடகமா, தனக்கு இன்னா நடந்திச்சுன்றத சொல்லாமச் சொல்லி நமக்கெல்லாம் புரியவைக்கறாரு இதுல!

இந்த வரிக்கு பலவிதமா அர்த்தம் பண்ணிக்கலாம்! அதுல ஒரு ஒண்ணு ரெண்டை மட்டும் இப்பப் பாக்கலாம்!

மனசைப் பாத்து ஒரு கேள்வி கேட்டு, ‘நீ இதும்மாரி என்னிய கஸ்டப்படுத்தலாமா? ஒனக்கு இன்னாதான் வோணும்? ஏன் இப்பிடில்லாம் இம்சைப் படுத்தறே?’ன்னு கோவிச்சுகிட்டு, அதுக்கப்பறமா, அந்த மனசையே பாத்து, ‘நீ இன்னின்னமாரி நடந்துக்கினா ஒனக்கும், எனக்கும் எம்மாம் பெரிய பரிசு காத்திருக்கு’ன்னு ஆசை காட்டி, கொஞ்சங்கொஞ்சமா அத்தத் தன்னோட வளி[ழி]க்குக் இஸ்த்துக்கினு வந்து, ‘தோ பாரு, நீ கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்தியானா, எனக்கும் ஒனக்கும் இந்த ஆசைன்றதே அத்துப் பூடும், அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளை, குட்டி, சொத்து, சொகம்ன்ற எல்லாத்தும் பின்னாடியும் அலையாம, அந்த முருகன் காலடியுலியே வுளுந்து கெடக்கலாம். அவனாப் பாத்து, நம்ம நெலையக் கண்டு மனசு எ[இ]ளகிப்போயி, நமக்கு அருள் பண்ணுவான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்! தங்கிட்ட வந்தவங்களை அவன் காப்பாத்தாம வுடமாட்டான்னு நைஸு பண்ணி, நைஸு பண்ணி தன்னோட மனசை இம்மாந் தூரத்துக்கு இட்டாந்திட்டாரு!


இதுக்குப் பரிசா அவருக்குக் கெடைச்சது இன்னான்றத இப்பச் சொல்றாரு … இந்தக் கேள்வி மூலமா? நல்லாக் கெவனி!


‘சாடும்’னா அளி[ழி]க்கறதுன்னு பொருளு!

'தனிவேலு'ன்னா, தனக்கு சமமே இல்லாத ஒசந்த வேலுன்னு சொல்லலாம்!

அது எத்த சாடிச்சு?..அளி[ழி]ச்சுது?
சூரனை! அவனோட கூட்ட வந்த அசுரப் படைங்களை!!

அதுவாவா சாடிச்சு?
நம்ம முருகனோட கருணையினால மட்டுமே, எதுத்து வந்த அல்லாரையுமே அந்தத் தனிவேலு அளிச்சுது!

அப்பிடியாப்பட்ட தீரனான கந்தக் கடவுளு. தன்னோட திருப்பாதங்களை எடுத்து, இவரோட தலை மேல வைச்சு ‘இந்தா! இத்த ஒன்னோட தலையுல பூ மாரி வைச்சுக்கோ! சூடிக்கோன்னு தந்தாராம்!

இத்தனியும் சொல்லிட்டு, ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா மாரி, இத்தப் போயி, நான் இன்னான்னு சொல்றதுன்னு அப்பாவியாக் கேக்கறாராம்!

இது ஒரு அர்த்தம்!


இப்ப இத்தயே இன்னோரு விதமாப் பாப்பம்!

‘சரணம்‘னா பெருமையையெல்லாம் சொல்லிப் பாடறதுன்னும் சொல்லலாம்!

நீகூட ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு அடிக்கடி சொல்லிப் பாடுவியே, அதும்மாரின்னு வைச்சுக்க!

வாள்[ழ்]க்கையே வெறுத்துப்போயி, கோபுரத்தும் மேல ஏறி நின்னுக்கினு, அங்கேர்ந்து குதிச்சுச் சாவலாம்னு வுளுந்தவரை, தன்னோட ரெண்டு கையுலியுமாத் தாங்கிக்கினு, இனிமே நீ என்னியப் பத்தி மட்டும் பாடு’ன்னு சொல்லிட்டு, ‘நான் இன்னான்னு பாடுவேன்?ன்னு முளிச்சவருக்கு, ‘முத்தைத்தரு’ன்னு ஒரு அடியும் சரணமா எடுத்துக் குடுத்தாரு நம்ம குமரன்!

அதுக்காப்பல, இவரு வரிசையா பாடிக்கினே முருகன் மேல ஒரு பாமாலையே சூடிட்டாரு!

இப்பிடி ஒரு கருணையை எனக்குப் பண்ணினியே முருகா! இந்தக் கருணையை நான் இன்னான்னு சொல்றது’ன்னு கதற்ரமாரியும் எடுத்துக்கலாம்!

இதுல வர்ற இந்த அடுத்த ரெண்டு வரி க்கீதே, அது சொல்ற பெருமை இன்னான்னு இப்பப் பாக்கலாமா?

‘வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழும் கழலே!’

தன்னோட தலையுல சூடிக்கறதுக்காவ, இந்த முருகன் குடுத்த அந்தக் காலடிங்களைப் பத்தி, அத்தோட பெருமையைப் பத்தி இதுல சொல்ல வராரு அருணகிரியாரு!

‘கமளு[ழு]ம் கள[ழ]லே’ன்னா மணக்கற, வாசனையா க்கீற காலடிங்களே’ன்னு அர்த்தம்!

அது இன்னா மணம்…. அப்பிடியாப்பட்ட வாசனை?

‘வீடு’ன்னு மொத வார்த்தை!
‘மோட்சம், முக்தின்னு அர்த்தம்!
தன்னை வேண்டற அடியாருங்களுக்குல்லாம் முருகனோட ரெண்டு திருவடிங்களும், மோட்சத்தக் குடுக்குது!

அடுத்தாப்பல, ‘சுரர் மாமுடி’!
சூரனால அடிமையாக் கெடந்து கஸ்டப்பட்ட தேவருங்களைல்லாம், விடுதலை பண்ணின முருகனோட காலடியுல, இவங்கள்லாம் போயி, சரணாகதி பண்றாங்க! அவங்க தலை மேலெல்லாம் இவரோட பாதம் படுது! அதுனால, அதுங்களும் மணக்குதாம்!

இப்ப ‘வேதமும்’னு சொல்றாரு!
இந்த விசயத்த இந்த அநுபூதிப் பாட்டுங்கள்ல பல தபா சொல்லிருக்காரு அருணையாரு.

பிரம்மா – சிவன் கதைதான்!

நாலு வேதம் க்கீது! ரிக்கு, யஜுரு, சாமம், அதர்வணம்னு.
அந்த நாலுத்துக்குமே ஆதாரம் ‘ஓம்’முன்ற சொல்லுதான்!
அதுக்கே அர்த்தம் சொன்னவரு முருகன்!

அவரால இப்ப இந்த நாலுத்துக்குமே ஒரு பெருமை வந்திரிச்சாம்!
இந்த நாலு வேதத்துக்குமே ஆதாரமா நிக்கறவருதான் சாமிநாதன்!

நிக்கறாருன்னா, அப்ப அதுங்க மேலெல்லாம் படறது?.... இந்தத் திருவடிங்கதானே!
அதுங்களுக்கும் ஒரு ‘ஸ்பெசல்’ வாசனை வந்துருச்சு!

இப்பக் கடைசியா மிச்சமிருக்கறது, ‘வெங்காடும், புனமும்’!

சூரனை கெலிச்சதுக்காவ, இந்திரன் தானா வந்து, தேவானையம்மாவை, கிரியா சக்தியை,…. இவருக்குக் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

ஆனாக்காண்டிக்கு, வள்ளியம்மா கதை அப்பிடி இல்ல!

இவராத் தேடிப்போயி, காடு, மேடெல்லாம் சுத்தியலைஞ்சு, படாத பாடெல்லாம் பட்டு, கொதிக்கற வெய்யில்ல காட்டுல க்கீற கல்லு, முள்ளு மேலெல்லாம் தன்னோட காலடி நோவ, நடந்தாருன்னு நீ கூட முன்னாடி பாடியிருக்கியே, அதான், இந்த வெங்காடு!

அந்தம்மா காவல் காத்துக்கினு நின்னாங்களே, அந்தத் தெனைப்புனத்துக்கும் போயி, அந்தம்மா குடுத்த ஏச்சுப் பேச்சையெல்லாம் மறுபேச்சுப் பேசாம வாங்கிக்கினாரே, அந்தக் கதையைத்தான், இந்தப் ‘புனம்’ன்ற வார்த்தையுல சொல்லிக்காட்டறாரு!

இச்சாசக்திக்காவ, இவரோட பாதங்கள்லாம் பட்டு, அந்த வெங்காடும், புனமும் இப்பவும் மணக்குதாம்!

இப்பிடியாப்பட்ட பெருமையான முருகனோட சரணங்க ரெண்டும் இவரோட தலையுலியும் பட்டதும், இப்ப அருணகிரியாரோட திருப்புகளு[ழு]ம் மணக்குதுன்றத, இந்த வரியுல சொல்லிப் புரிய வைக்கறாரு.’எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

‘சொல்லுமதோ’ன்னு இவர் சொன்னது ரொம்பவே விசேஷமான பிரயோகம்டா!! “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்”னு சொல்லுவாளே! அதுமாதிரி, அந்த ஆனந்த அனுபவத்தை, இப்போ என்னால விளக்கமாச் சொல்லமுடியலியே’ன்னு திகைச்சுப்போய் நிக்கறார் இந்த ஒரு வார்த்தைல!

அப்பறம், ‘கமழும் கழலே’ன்றதைக்கூட, ‘கழலே கமழும்’ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம்னு தோண்றது’என்றார் சாம்பு சாஸ்திரிகள்!

‘அதான் சொன்னேனே சாமி! இந்தப் பாட்டுக்குப் பலவிதமா அர்த்தம் சொல்லலாம்னு’ எனச் சொல்லி விகல்பமின்றிச் சிரித்தான் மன்னார்.

‘ஆமாண்டா! வேற எந்தச் சிந்தனையும் இல்லாம, நம்ம நாயர் சொல்லிண்டிருக்கானே, அதுமாதிரி, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை மட்டும் விடாம சொல்லிண்டிருதாலே போறுண்டா! அவனோட அருள் தானா வந்துசேரும்’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!

ஓம் சரவணபவ!
**************
[தொடரும்]
தொடர்ந்து படித்து ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP