Monday, February 11, 2008

"அ.அ. திருப்புகழ்"[24] -- "அமைவுற்றடைய"

"அ.அ. திருப்புகழ்" [24] -- "அமைவுற்றடைய"


மயிலை மன்னார் ஐயனின் "நிலையாமை" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்!

விரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**************************************


.........."பாடல்".........

"அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
**************************************************


........"பொருள்" [பின் பார்த்து முன்!!].........

"இமயத்து மயிற்கு ஒருபக்கம்
அளித்தவருக்கு இசையப் புகல்வோனே"

பிருகுவென்னும் மாமுனிவர்
சிவனொன்றே திருவென நம்பி
திருவுருவாம் உமையவளை
இறையென்று மதியாமல்
சிவனாரை மட்டுமே
வலம்வந்தார் கயிலையில்!


இடம் நீங்கி உமையவளும்
காஞ்சியெனும் திருநகரில்
நால்வேதப் பொருளான
மாவடியில் தவமிருந்து
மணல்வடிவில் உருவமைத்து
சிவனாரை எண்ணியே
தவமிருக்க மறையோனும்
உமையவளை மணமுடித்து
இடப்பாகம் தந்திட்டான்!

பிரணவத்தின் பொருளறியா
நான்முகனின் தலைகுட்டிச்
சிறையிட்ட முருகோனை
வேண்டிட்ட சிவனார்க்கு
குருவாகி இசைவாகப்
பொருள் சொன்னவரே!


"இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரமவேலா"

போர்புரிய வந்திருந்து
எதிர்நின்று தாக்கவரும்
மதியற்ற வீரர்களைக்
கொன்றங்கு கழுகுக்கு
இரையாக அளிக்கின்ற
வீரமுடைய வேலென்னும்
ஆயுதத்தைத் தாங்கிநிற்கும்
வேலாயுதரே!

"சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் புகநாடும்"

எங்கிருந்து பிறந்தாலும்
எவ்வழியில் சென்றாலும்
நதியெல்லாம் வழியோடி
இறுதியிலே அடையுமிடம்
கடல்மடியே என்பது போல்
எவர்மூலம் தோன்றிடினும்
எவருரையால் வளர்ந்திடினும்
சமயங்கள் ஒவ்வொன்றும்
சென்றடையும் முடிவிடமோ
இறைவனது திருவடிகள்!

இதையுணரா வீணர்சிலர்
சமயத்தை முன்னிறுத்தி
வாதங்கள் செய்வதுவும்
வீண்சண்டை புரிவதுவும்!

பயனில்லாச் செயலென்று
அவ்வழியை விலக்கிவிட்டு,
நினைநாடி யான்செய்யும்
தவமொன்று நிறைவாகி
நின் திருவருளில் இனிதாக
யான் புகவும் விரும்புகின்ற,


"சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் பெருமாளே!"


தாமரைபோல் மலர்ந்திருக்கும்
ஆறுமுகம் திருவுருவாய்க்
கொண்டிருக்கும் ஷண்முகரே!

உள்ளமெனும் குகையினிலே
அருளொளியைப் பரப்புபவரே!


குறவள்ளி தனைமணந்து
வருவோரின் வினை தணிக்கும்
தணியென்னும் மலைசேர்ந்து
பெருமையுடன் வீற்றிருக்கும்
தணிகைக் குமார மூர்த்தியே!

பெருமையுடையவரே!


"அமைவுற்று அடையப் பசியுற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு இசையாதே"

["அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு கிசையாதே" ]


பசியால் மிகவாடி வாசல் நின்று
உண்ணுதற்கு ஏதேனும் தருகவென
இரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி
இருப்பதை அவருடன் மனவமைதியுடன்
பகிர்ந்துண்டு வாழும் மனமின்றி,

"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"
["அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"]

இருக்கின்ற பொருள்யாவும்
இருக்கின்ற இளமையினைத்
தக்கவைத்துக் கொள்ளும்
தகமைக்கே வாய்த்ததென
தனக்குள்ளே நினைத்திருந்து
எவருக்கும் கொடுக்காமல்
நல்லோர் சொன்ன நன்னெறியை
நினைவினிலும் கொள்ளாமல்
அதைவிட்டு அகன்றிருந்து
அகங்காரமென்னும் பெருநோயால்
தளர்ச்சி அடையாமலும்,

"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்
சமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்"


உடனிருக்கும் சுற்றத்தாரும்
ஓவெனவே அலறியழவும்
பறைமேள வாத்தியங்கள்
'டமடம'வென முழங்கிடவும்
அரசனிவன் ஆண்டியிவன்
படித்தவன் மூடனிவன்
பணக்காரன் ஏழையிவன்
சற்றுமுன்னரே மணமுடித்த
மாப்பிள்ளையிவன் என்கின்ற
பேதங்கள் ஏதுமின்றி
சமனாக அனைவரையும்
கொண்டு செல்கின்ற தன்மையினால்
"சமன்" என்ற பெயர் படைத்த
கொடுங்கூற்று இயமனும்
இவ்வுயிரைப் பற்றி
நெடுந்தொலைவு கொண்டுபோகின்ற,


"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வுற்று ஒழியக் கடவேனோ"

இளமையானவொரு கணவன்
அழகான அவன் மனைவி
அடை செய்து கொண்டுவாவென
அன்பான கணவன் கேட்க
அரிசியினை ஊறவைத்து
அன்புமனைவியும் அடைசெய்து
வட்டிலிலிட்டு பரிமாறிட
ஆவலுடன் அதையுண்டவன்
இடப்பக்கம் வலிப்பதாகச்
சொல்லிச் சற்றுப் படுத்தான்!
படுத்தவன் மீண்டும் எழவேயில்லை!
இதுவே இவ்வுலக வாழ்வு!

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" [திருமந்திரம்] [148]
[திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா!]

இதுவொன்றே உண்மையென
ஒருபோதும் அறியாது
நிலையற்ற இவ்வுடலை
என்றுமே நிலைத்திருக்கும்
எனக்கருதி இதை வளர்த்து
இதற்கெனவே பாடுபட்டுத்
தளர்ந்திங்கு யான் அழிவது
இது முறையாமோ?

[முறையில்லை! நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா!]
*******************************************************************************

"அருஞ்சொற்பொருள்"


தமர் = தம் மக்கள், சுற்றத்தார்
சமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்
இரணம் = போர்
எற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்
சிலுகை = சண்டை
சடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்
************************************************************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
******************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP