Thursday, December 13, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"கிட்டத்தட்ட 4 மாசம் ஆயிடுச்சு மன்னார், உன்னைப் பார்த்து! என்னை தப்பா நினைச்சுக்காதே!" என்று தயங்கியபடியே சொன்னேன்.

"அட! இன்னாபா நீ! இதுக்கெல்லாம் போயி தப்பா நினைச்சுக்குவானா இந்த மன்னாரு! அப்புறமேல நம்ம பிரெண்ட்சிப்புக்கு இன்னா மருவாதி இருக்கு! நீ இன்னா வேணுமின்னேவா என்னியப் பாக்காம இருந்தே! ஒரு நாவலு, 2 சிறுகதை அப்பிடீன்னு வேலையாதானே இருந்தே! நாங்கூட படிச்சேன் அந்த நாவலை! என்னை மறந்தாலும், ஐயனை மறக்காம ஒவ்வொரு பதிவுலியும் ஒரு குறளு போட்டே பாரு! அங்கேதான் நீ நம்மளை 'டச்'பண்ணிட்டேப்பா! இதுமாரி, கேட்டதை மறக்காம இருக்கே பாரு! அதப் பத்தி கூட வள்ளுவரு ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு! கேக்கிறியா?" என்று என் நண்பன் மயிலை மன்னார் சொன்னவுடன் உற்சாகமாக பேப்பர் பேனாவை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டேன்!

இனி வருவது குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் - 42 "கேள்வி"

"செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை" [411]


"இந்த ஒலகத்துல எத்தினியோ விதமான வழியில துட்டு சம்பாரிச்சு பணக்காரனா ஆயிறலாம். ஆனாக்க, இந்த 'கேக்கறது'ன்ற செல்வம் இருக்கு பாரு.... அதாம்ப்பா... எந்த ஒரு விஷயத்தையும் காதால கேட்டு மனசுல உள்வாங்கிக்கற பாரு....அதைத்தான் செல்வம்னு ஐயன் சொல்றார்ரு இங்க... ! அது எப்பிடீன்றியா? இப்ப, ஒரு விஷயத்தை நீ கண்ணால பாக்கற...அட, ஒரு பேச்சுக்கு நம்ம தலைவர் நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு பாம்பு ஸீன்னு வைச்சுக்குவோமே... அவரு முகபாவம்லாம் காட்டி பிரமாதமா நடிச்சிருப்பாரு. அதையே சவுண்டு இல்லாம ஓட்டறாங்கன்னு வைச்சுக்க... அந்த ஸீனு உனக்கு ரசிக்குமா? அதையே அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டே கேக்கறேன்னு வையி.... தலைவரு மூஞ்சி அப்பிடியே ஒன்னோட மனக்கண்ணு முன்னாடி ஓடும்! எப்பிடி அது? காதால கேட்டு மனசுல உள்வாங்கிகினதால.... இது போல இன்னும் எத்தினியோ சொல்லலாம்! இந்த கேள்விஞானம்ன்ற செல்வந்தான் அல்லா செல்வத்தைக் காட்டியும் ரொம்பப் பெருமையானது! இது எப்பிடின்னு பின்னாடி சொல்லுவாரு பாரு!"

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." [412]

"ஒனக்குப் பிடிச்சது ஒண்ணை நீ கேக்கறேன்னு வையி.... மவனே... பசி தூக்கம் அல்லாத்தியும் மறந்து 'ஆ'ன்னு கேட்டுகிட்டே இருப்பே! இப்பக்கூட பாரேன்! வயக்கமா இங்க வந்தா இன்னா பண்ணுவே நீ! மொதல்ல நாயர் கடையாண்டை நேர போயி 4 மசால்வடையை உள்ளே தள்ளிட்டு, ஒரு கப்பு டீ அடிச்ச பின்னாடிதான் எங்கிட்டவே பேச ஆரம்பிப்பே! நான் சொன்னவுடனே பேப்பர் பேனாவை எடுத்துகிட்டு கிறுக்க ஆரம்பிச்சிட்டேல்ல! அட! ஒரு தமாசுக்கு சொன்னேம்ப்பா! உடனே முறுக்கிக்காத! இப்பிடித்தான் அநேகமா அல்லாருமே இருப்பாங்க! கேக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னாத்தான் சோத்து நெனப்பே வரும்! "

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து." [413]

"இப்ப, இந்த தேவர்கள்னு ஆகாசத்துல இருக்கறவங்களைப் பத்தி சொல்லுவாங்களே, அவங்க இன்னா பண்றாங்க? எங்கியோ தொலைதூரத்துல இருந்தாலுங்கூட, இங்கேருந்து ஓதற மந்திர சத்தத்த சொல்லி நாம அனுப்பற சக்தியை எடுத்துக்கறாங்கன்னு நம்பறோமில்ல.... அது எப்பிடி நடக்குது?.... இந்தக் கேள்வி அறிவு அவங்களுக்கு இருக்கறதாலத்தான்! அப்பிடியாப்பட்ட இந்தக் கேள்வி அறிவுன்ற ஒண்ணு இருக்கற மனுஷங்க கூட, இந்த பூமியில இருந்தாலும், அந்த தேவர்களுக்கு சமமின்னு ஐயன் சொல்றாரு! கேக்கறதால வர்ற அறிவை வைச்சே சூட்சுமமா அல்லாத்தியும் 'டக்கு' 'டக்கு'ன்னு புரிஞ்சுப்பாங்க!"

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாத் துணை" [414]


"வயசாயிப்போன காலத்துல ஒன்னால சரியா பாக்க முடியாம கண்ணு மங்கலாயிடும், பசி அடைச்சுப் போயிரும். நடக்கமுடியாம தளந்து போயிருவே! 'ஒற்கம்'னா 'தளர்ச்சி'ன்னு அர்த்தம்! அப்போ உன்னால ஒண்ணுமே பண்ன முடியாது! ஆனா, நீ செயலா இருக்கறப்பவே, நாலு நல்ல நூலுங்களைப் படிக்கலைன்னாலும், அடுத்தவங்க சொல்லக் கேட்டாவது இருந்தேன்னு வையி... அது ஒனக்கு கைத்தடி மாரி பயன்படுமாம்! சும்மா கண்ணை மூடிக்கிட்டே, எங்கியும் போவாமலியே, உன்னோட அறிவாலியே, நீ நெனைச்சுப் பாத்துகினே சாந்தோசமா இருக்கலாம்! பொளுதும் போவும் ஒனக்கு! அதுனால இப்பலேர்ந்தே நாலு நல்ல விசயங்களைக் கேக்கறதுன்னு ஒரு வளக்கப் படுத்திக்க! இன்னா... வெளங்குதா?"

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." [415]

"அதுக்காவ, எவன் என்ன சொன்னாலும் கேக்கறதுன்னு அர்த்தம் இல்லை. நல்ல குணம் இருக்கறவன், நல்ல நடத்தையா இருக்கறவன் சொல்லாப் பாத்துக் கேக்கணும்! அதைக் கேட்டு நல்லா உள்வாங்கிக்கிட்டியானா, வளுக்கற பூமியில நடக்கறப்ப ஒருகைக்கோலு எப்பிடி நீ வளுக்கி விளாம இருக்க ஒதவுமோ, அப்பிடி அது ஒன்னிய கெட்ட விசயத்துல இருந்து காப்பாத்தும்!"

"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்." [416]


"இங்க ஒரு முக்கியமான மேட்டர் ஐயன் சொல்றாரு! கவனமாக் கேளு! அப்பிடி நீ கேக்கற விசயம் எம்மாம் பெருசுன்றது முக்கியமில்லை! நல்ல கருத்துக்களை மட்டுமே கேக்கணும்! அது தம்மாத்தூண்டு மேட்டரா இருந்தாலும் சரி! அது மாரி கருத்துங்கல்லாம் ஒனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை தேடித்தரும்! புரியுதா?"

"பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்." [417]

"ஒரு ஆளு ரொம்பக் கூர்மையா எந்த ஒரு விசயம்னாலும் ஆராய்ஞ்சு கவனமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கறவனா இருந்தா, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு கருத்தை அவன் தப்பாவே தெரிஞ்சுகிட்டாக்கூட, புத்தியில்லாத, முட்டாத்தனமான சொல்லை சொல்லவே மாட்டான். இதுல ஏதோ தப்பு இருக்கு! அதுனால, இப்பா இதைச் சொல்லி நாம அரைகுறைன்னு காட்டிக்க வேணாம். இன்னும் நல்லா ஆராய்ஞ்சு பாத்திட்டு உண்மை இன்னான்னு தெரிஞ்சதுக்கு பொறவால சொல்லலாம்னு 'கம்'முனு இருந்திருவான்!"

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி." [418]

"நாம இத்தினி சொல்லியும் ஆரும் சரியாக் கேக்க மாட்டேங்கறாங்களேன்னு ஐயனுக்கு கோவம் கோவமா வருது! அடுத்த மூணு குறள்ல போட்டு விளாசுறாரு இவங்களை! இதுவரைக்கும் நான் சொன்னது மாரி நல்ல கருத்துக்களை... அதையெல்லாம் கேட்டதால ஒன் காதே வலிச்சாலும் சரி... இன்னாடா இவன் தொணதொணக்கறானேன்னு ஒன் காது துளைச்சுப் போனாலும் சரி!..... கேக்கலைன்னா, ஒனக்கு காதுன்னு ஒண்ணு இருந்து, அது நல்லாவே கேட்டாலும் கூட, நீ காது கேக்காத செவிடுக்கு சமம்னு ஐயன் கண்டிசனா சொல்லிடறாரு!"

"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது." [419]


எந்த ஒரு விசயத்தையும் நல்லா கேட்டு, அதை சரியா புரிஞ்சு உள்வாங்கி வைச்சுக்கற இந்த கேள்வியறிவுன்ற ஒண்ணு மட்டும் ஒருத்தனுக்கு கிடைக்கலேன்னா, அவனால அடக்கமா, மருவாதியா வணங்கிப் பேச முடியாது!ஏன்னா அவன் அரைகுறை மாரி உளறிக் கொட்டிக்கினே இருப்பான்!"

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்." [420]


"இந்தக் கேள்வியறிவுன்ற ஒண்ணை உணராம,, அதால கிடைக்கற பலனைத் தெரிஞ்சுக்காம, நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பப் பாத்தாலும் நினைச்சுகிட்டு வயித்தை ரொப்பறவங்க இந்த ஒலகத்துல உசிரோட வாழ்ந்தாக்கூட அதனால இன்னா லாபம்னு ஐயன் ரொம்பவே சூடாறாரு!"

"இன்னா ஐயன் சொன்னது விளங்கிச்சா? அதுனால நல்லா படிச்சு, கேட்டு அறிவை விருத்தி பண்ணிக்கோ! கேக்கறது நல்லதா இருக்கட்டும்! அதை மனசுக்குள்ள நல்லா உள்வாங்கிக்கோ! இப்ப முதல் குறளைப் படி! ஏன் இதான் பெரிய செல்வம்னு சொல்றாருன்னு புரியும்!"

"சரி! சரி! நீ சூடாவாதே! இதுவரைக்கு கேட்டது போதும்! 412- ல சொன்னமாரி, இப்போ வயித்துக்கு கொஞ்சம் அனுப்பலாம்! நாயரு சூடா வடை சுட்டிருக்காரு ஒனக்காக ஸ்பெசலா! வா!" என தோள் மீது கை போட்டு அணைத்தபடியே நடந்தான் மயிலை மன்னார்!
********************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP