Friday, March 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]
51. [3]

'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது!

ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வரி மட்டுந்தான் இவரு பாத்தத, பாத்து அனுபவிச்சுத, அனுபவிச்சு ஒணர்ந்ததச் சொல்ற வரி!

‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ன்னு கதர்றாரு.

இந்த ஒருவரிதான் அநுபூதி !

குஹந்தான் கந்தன்!!

அந்தக் கந்தன் குடுத்த அனுபவத்தை, அனுபூதியைச் சொல்றதுதான் மத்த மூணு வார்த்தையும்!

இதைப் புரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் அந்த மொத ரெண்டு வார்த்தைக்குத்தான் போவணும்!

‘உருவாய், அருவாய்!

ஆமா!

‘உருவாய் அருவாய் குருவாய் வருவாய்! அருள்வாய்!’

போதுண்டா இந்த வாள்க்கைன்னு கோபுரத்து உச்சிலேர்ந்து குதிச்சவரைக் கை குடுத்து ஒர்த்தன் தாங்கினான்!

ஆர்ராது, சாவறதுக்குக்கூட வுட மாட்டேன்றானேன்னு ஒரு கோவத்தோடத்தான் அந்த ‘உரு’வைப் பாத்தாரு அருணையாரு!

இந்த உருவைப் பத்தியே பாடிக்கினே இத்த மறந்துட்டு, இந்த உரு இல்லாத ஒரு நெலைக்கு நீ வந்து என்னிய சேருன்னு சொல்றமாரி, ‘சொல்லற, சும்மாயிரு’ன்னு சொல்லிட்டு, அருவமாயிட்டாரு கந்தன்!

கண்ணெதிர்க்கத் தெரிஞ்ச உருவைத் தவற வுட்டுட்டேனேன்னு, கோயில் கோயிலாப் போயி, ஆயிரக்கணக்குலப் பாட்டுப் பாடி, தன்னோட நெலையைச் சொல்லிப் பொலம்பித் திருப்புகளா[ழா]க் கொட்டினாரு அருணகிரியாரு.

அப்பிடியாப்பட்ட ஒரு நேரத்துல கெடைச்சதுதான் இந்த அநுபூதி!

உருவமாத் தெரிஞ்சவரு, அருவமா வந்து,, மலரோட மருவா, மணியோட ஒளியா, கருவோட உசிரா, கெதியோட விதியா இவருக்குள்ளாற குருவா வந்து அருள் பண்ணினப்ப இவருக்குக் கெடைச்ச பரவசந்தான் கந்தன்!’ என்றான் மயிலை மன்னார்.

சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து, ‘அப்ப எதுக்கு குகனேன்னு சொல்லி முடிச்சாரு?’ என நான் வினவினேன்!

‘இத்த நீ கேட்டதுதான் எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு! ‘ என அன்புடன் என் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மன்னார்.

ஏளனமா, அது பாராட்டா எனத் தெரியாமலேயே அவன் அணைப்பில் சிக்குண்டபடியே, முன்பு கேட்ட கேள்வியை அவன்மீது வீசினேன்!

‘குஹன்’னா ஆரு? எத்தினியோ வார்த்தைங்க அவனைப் பத்திச் சொல்றதுக்கு இருக்கக்கொள்ள, இத்தச் சொல்லி ஏன் முடிக்கணும் அருணகிரியாரு? என பதில் கேள்வியை என்னைப் பார்த்தபடியே கேட்டான் மயிலை மன்னார்.

பதில் சொல்ல நான் எத்தனிக்கும் முன்னரே, மீண்டும் தொடர்ந்தான்.

'இருளோன்னு கெடக்குற குகைக்குள்ளார ஒரு வெளிச்சம் வந்தா எப்பிடி இருக்கும்? ரெண்டாவுது பாட்டுலேர்ந்த்து அம்பதாவுது பாட்டு வரைக்கும் அருணகிரியாரு பொலம்பினதெல்லாத்தியும் பாத்தீன்னா, இந்த சொத்து, சொகம், வூடு, பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க, பெருமை, பேரு இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்!

இதுங்க அத்தினியும் மொத்தமா சேர்ந்து ஒண்ணு மேல ஒண்ணா ஒரு போர்வை மாரி அடுக்கடுக்கா போர்த்திக்கினு, உள்ளார க்கீற அந்த வெளிச்சத்தை….. அந்த ஜோதியை மறைக்குதுங்க!

இதெல்லாத்தியும் வெலக்கினா, மனசுன்ற குகைக்குள்ள க்கீற இருட்டெல்லாம் படிப்படியா வெலகி ஒனக்குள்ளாறியே ஒரு பெரிய வெளிச்சம் தெரியவரும்! அந்த வெளிச்சந்தான் குஹன்! அதான் அனுபூதி!’

‘இங்க ‘வருவாய், அருள்வாய்’ன்னு அருணகிரியாரு சொல்றதுல்லாம் ‘வருவியோ, அருள் தருவியோ?ன்னு கேக்கறது இல்லை! நீ வருவே, நிச்சியமாத் தருவே!’ன்ற உத்தரவாதம்! உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால....அந்தக் கந்தக்குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!!’ எனச் சொல்லி, மௌனத்தில் ஆழ்ந்தான் மயிலை மன்னார்!

‘தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் – உன்னைத்
தேடிக் கண்டு கொள்ளலாமே – உள்ளே
தேடிக் கண்டு கொள்ளலாமே’
எனும் பாடல் கபாலி கோயிலின் ஒலிபெருக்கி வழியே வந்து, எங்களையெல்லாம் ஆட்கொண்டது!

ஓம் சரவணபவ’ எனும் மந்திரம் அனைவரின் உதடுகளிருந்தும் கிளம்பிப் பலமாக ஒலித்தது.
************************
பொறுமையோடும், பக்தியோடும் படித்து ஆசி வழங்கிய அனைவருக்கும் கந்தன் நலம் சேர்ப்பான்!
அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஓம் சரவணபவ.
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
*******************************

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே!

[கந்தரநுபூதி நிறைவு.]

Read more...

Wednesday, March 21, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

51. [2]

‘கரீட்டாத்தான் பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கே நீ’ என என்னைப் பார்த்துச் சொன்னபடியே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

உருவாத் தெரியுற ஒண்ணுதான் உருவமே இல்லாத அருவமா மாறும்! இப்ப மொதல்ல முருகன்னா இவந்தான்னு நீ நெனைச்சுக்கினு தியானம் பண்றேன்னு வையி! ஒரு சமயத்துல, அந்த உருவமே அளிஞ்சுபோயி, ஒண்ணுமே இல்லாமப் பூடும்! நீயும், முருகனும் ஒண்ணாக் கலந்திருவே! இல்லாங்காட்டிக்கும், இவந்தான் நாம பாத்த அந்த உருவம்ன்ற நெனைப்பே ஒனக்கு இல்லாமப் போயிரும்! அப்ப, அந்த டயத்துல, உரு எது? அரு எது?ன்னு ஒனக்கே புரியாத ஒரு நெலை ஒனக்குள்ள வந்து முட்டிக்கும்,

அதாங்காட்டிக்கு, திருவருளே குருவா வரும். எதுத்தாப்புல நிக்கற குருவே ஒனக்கு திருவருளாத் தெரியும்!~
இந்த நெலைதான் அநுபூதி!

இத்தப் புரிய வைக்கறதுக்குத்தான் இத்தினி ஒதாரணமும் சொல்லிப் படுத்துறாரு அருணகிரியாரு!

ஏன்னா, அவுருக்குப் புரிஞ்சிருச்சு!

குருவா எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!
குருவா வந்தவனே திருவாவும் தெரியுறான்!

குருவா?, திருவா? உருவா? அருவா?ன்னு புரிஞ்சும் புரியாமலும் ஒரு நெலையுல ஒரு செகண்டு தத்தளிக்கறாரு அருணகிரியாரு!

ஆனாக்கண்டிக்கு, ஒடனே முருகன் தெளிய வைச்சிர்றாரு. .
அநுபூதின்னா இன்னான்னு புரிஞ்சிருது இவுருக்கு!

மத்தவங்களைப் போல இல்லாம, ஏதோ நமக்குக் கிடைச்சுதேன்னு அனுபவிச்சிட்டுப் போயிடற மனசு வரலை அவுருக்கு!

இந்த நிமிசத்த, இந்த அனுபவத்தை, அப்பிடியே சொல்லிறணுமேன்னு துடிக்கறாரு அந்தப் பெரியவுரு!
அதான் இப்பிடி வார்த்தையா வந்து வுளுது!

இதுக்குத்தான் ஒதாரணமா பலதும் சொல்லிக் காட்டுறாரு!

எப்பிடி ஒரு பூவுலேர்ந்து வர்ற மணம், ….. வாசனையைப் பிரிச்சு ஒணர முடியாதோ, அப்பிடித்தான், இந்த உருவும், அருவும்னு சொல்றாரு.

சரி, இது ஒனக்குப் புரியலைன்னு வைச்சுக்கோ… ஏன்னா, சில பூவுங்க அளகா இருக்கும், ஆனாக்காண்டிக்கு, வாசம் இல்லாம இருக்கும். சிலதுல செம வாசனை வரும் ஆனா, அளகா இருக்காது!

அதுக்காவத்தான், அடுத்தப்புல அந்த மணி, ஒளி ஒதாரணத்தக் காட்றாரு!
அது சரி, எத்தினிப் பேருக்கு மணியப் பத்தித் தெரியும்னு ஒரு நெனைப்பு ஒடனியே அவருக்குள்ளாறத் தோணுது!

ரொம்ப ஏளைபாளைங்க இந்த பொன்னு, மணி இத்தெல்லாம் பாத்திருங்க மாட்டாங்கள்ல! அதான் அவரோட கருணை உள்ளம்.!
எப்பிடியாச்சும் சொல்லி அல்லாருக்கும் வெளங்கவைச்சிறணும் இந்த நிமிசத்தைன்னு தவிக்கறாரு!

இதெல்லாம் ஒரு கனவு மாரி!
ஒரே ஒரு செகண்டுதான் தங்கும் !
அந்த நொடியைப் பிடிச்சுக்கணும்!
அத்த வுட்டா, அப்பாலிக்கா அது எப்பிடி இருந்திச்சுன்ற நெனைப்புக் கூட தங்காது!

அந்த செகெண்டை, அந்த அனுபவத்தை, அந்த அனுபூதியை சொல்லத் தவிக்குற ஒரு மனசோட வெளிப்பாடுதான் இந்தக் கடைசிப் பாட்டு!

அத்த நெனைப்புல வைச்சுக்கினு இந்தப் பாட்டைப் படிச்சா, அத்தினியும் கொஞ்சமாவது புரியலாம் .

அத்த வுடு! இப்ப அதுக்காவ இன்னா சொல்ல வராருன்னு பாப்பம்.

சாமின்னு ஒண்ணு இருக்குன்னு நம்பாதவனும் இருப்பான்.
பூ இருக்கற பக்கமே போகாதவனும் இருப்பான்.
பொன்னு, மணியைப் பாக்காத ஆளுங்களும்கூட இருப்பாங்களே! அவங்களுக்குல்லாம் இன்னாத்தச் சொல்லி இத்தப் புரிய வைக்கறதுன்னு நெனைக்கறாரு!

அது ஒண்ணுதான் அவுருக்கு இப்ப நெனைப்பு முச்சூடும்!
‘டக்’குன்னு ஒரு நெனைப்பு தோணுது அவுருக்கு!

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு ஒதாரணத்தக் காட்டிப் பாடறாரு.

முட்டை சாப்படறவன்லேர்ந்து, முளு சைவமா க்கீற அல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணைச் சொல்லிப் புரியவைக்கப் பாக்கறாரு!

அதான் அந்த ‘கருவாய், உயிராய்!

கருவிலேர்ந்துதான் உசிரு வருது......... உசிரு வந்தாத்தான் கருவுக்கே மதிப்பு.!
அப்பிடியாப்பட்ட ஒண்ணுதாண்டா இதுன்னு கூவுறாரு!

சரி, அதுவும் புரியலைன்னா, இன்னொண்ணும் சொல்றேன்னு ‘கெதியாய், விதியாய்'னு சொல்லிக் காட்றாரு.

சாமியை நம்பாதவங்கூட, கெதியையும், விதியையும் நம்புவான்றதப் புரிஞ்சவரு அருணகிரியாரு.

இப்ப மொதல்லேர்ந்து பாரு.

உருவாய்னு ஆரம்பிச்சு, விதியாய்னு முடிக்கறாரு!

நம்பறவன், நம்பாதவன், இருக்குன்னு சொல்றவன், இல்லைன்னு சொல்றவன்னு அத்தினிப் பேருக்குமே இந்த அனுபவத்தைச் சொல்லிறணும்னு தவிக்கற அவரோட நல்ல மனசு ஒனக்குப் புரிய வரும்!

அதெல்லாம் சர்த்தான்! இத்தினியும் சொல்லிட்டு, இன்னும் அந்தக் கடைசி வரிக்கு வரலியேன்னுதானே பாக்கறே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'ஆமாம் மன்னார்!' என ஆவலுடன் எல்லார் குரல்களும் ஒருசேர ஒலித்தன!

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**************
தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, March 19, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

51. [1]

ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியுடன், அனைவருமே மயிலை மன்னாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றுதான் கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு அவன் பொருள் சொல்லப் போகிறான் என்பதால்!


அதைப் பற்றிய ஒரு சிந்தனையும் தன்னிடத்தில் இல்லாதவன்போல மன்னார் பேசத் தொடங்கினான்.


‘இன்னா நாயர்! இன்னிக்குக் கடையுல வியாபாரம் எப்படி? வடையெல்லாம் நல்லாப் போச்சா?’ என்றதும், இதுவரைக்கும் எங்களிலேயே சற்று நிதானமாகக் காட்டிக் கொண்டிருந்த நாயரே கொஞ்சம் அசந்துதான் போனான்.


‘இப்போ எந்துக்கு இந்த விசாரம்?’ எனக் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான் நாயர்.


‘அதுக்கில்ல நாயர்! இன்னால்லாம் போட்டு, கலந்து, அத்த சரியா எண்ணையுல போட்டு, பதமா வேகவைச்சு போணி பண்ணினு க்கீறே நீ தெனமும்! என்னியப் போல ஆளுங்க ஒங்கடைக்கு வந்து, இன்னாமோ அசால்ட்டா, ஒரு வடையை எடுத்து, அத்தப் பிச்சுப் பாத்து, கடிச்சுட்டு, இது நொள்ளை, அது சொத்தைன்னோ, இல்லாங்காட்டிக்கு, ‘ஆகா, இன்னாமாப் பண்ணிக்கீறே நைனா’ன்னோ சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டுப் பூட்றோம்.


ஆனாக்காண்டிக்கு, இந்த ஒரு வடையைப் பண்றதுக்கு நீ இன்னா சிரமப் பட்டிருப்பே’ன்னு ஒரு செகண்டாவுது நெனைச்சிருப்போமா?


அட, அத்த வுடு! ஒன்னியே எடுத்துக்கோ? பருப்பை ஊற வைச்சு, பதமா உப்பைப் போட்டு, நாலு மொளகாயைத் தாளிச்சு அதுல கலந்து, இன்னும் அதுக்கு வோணும்ன்ற ஜாமானைல்லாம் போட்டு, நல்லா மாவாட்டி, எண்ணைய சூடாக்கி, இன்னா ஒரு பக்குவமா கொஞ்சங்கூட அலுப்பில்லாம பொரட்டிப் பொரட்டி யெடுத்து எங்களுக்கு நல்ல இருக்கணுமேன்னு ஒரு நெனைப்போட நித்தமும் நீ வடை சுட்டுத் தர்றே! ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப்பானா? அதான் கேட்டேன்’ என வெள்ளந்தியாகக் கேட்டான் மயிலை மன்னார்.


அடுத்த கணம் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாய், நாயர் எழுந்து நின்று, தன் மேல்துண்டை இடுப்பில் கட்டியபடியே, மன்னாரின் முன் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தான்.


எல்லாரும் ஒரு கணம் பதறித்தான் போனோம்.


இதையெல்லாம் கவனியாதவன்போல, மன்னார் என்னைப் பார்த்து,


‘இன்னைக்குத்தான் கந்தரநுபூதியுல கடைசிப் பாட்டைப் படிக்கப் போறோமில்ல. டேய், சங்கரு! அந்தப் பாட்டைப் படி’ என்றான், சலனமில்லாமல்.


ஒன்றுமே புரியாமல், ஆனால் ஏதோ புரியப் போகிறது என்னும் உணர்வோடு அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்துப் பாடலைப் படித்தேன்.

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே.

மயிலை மன்னார் அதைப் பிரித்துப் படித்துச் சொன்னான்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

‘ரெண்டு ரெண்டு வார்த்தையாப் பிரிச்சுப் படிச்சியானா, அதாங்காட்டிக்கு, ‘உருவாய், அருவாய்’ உளதாய் இலதாயி';ன்னு பாத்தீன்னா ஒரு அர்த்தம் புரியும் ஒனக்கு! அத்த மொதல்ல சொல்றேன்! ஏன்னா, அதான் அல்லாரும் சொல்றது.' எனத் தொடங்கினான் மன்னார்.


இருக்கறது, இல்லாதுது, ஒண்ணுனால வர்ற ஒண்ணு, ஒண்ணுத்தப் பத்தி தொடர்ந்து வர்ற ஒண்ணுன்னு சும்மா சகட்டுமேனிக்கு பூந்து வெள்ளாடிருக்காரு இதுலன்னு புரியும்!


இத்தான் சாமின்னு காட்றமாரி ஒரு உருவமாவும் வருவாரு.


இதுல்லாம் இல்ல, இதுக்கும் மேல அருவமா க்கீறவந்தான் இவன்னு சொல்றமாரியும் இருப்பாரு.


இருக்கானா, இல்ல, இல்லாதவனா இவன்னும் நெனைக்க வைப்பாரு.


அது எப்பிடீன்னா, எங்கேருந்தோ ஒரு வாசனை கெளம்பி, ஒன்னோட மூக்கைத் தொளைக்குது! அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது! ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக்கறே! அந்த வாசத்துல கெறங்கிப் போறே! இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல! ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம்! அதான் 'மருவாய், மலராய்'! ஆச்சா! இப்ப அடுத்தாப்புல பாப்பம்!


ரெத்தினமாலை ஒண்ணு ஒங்கையுல கெடைக்குது! அட! அதுக்கென்ன நீ இப்பிடி மலைச்சுப் போயி என்னியப் பாக்குற? நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது! ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம்! இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை! ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது! அதுவும் எதுனாலன்னா, அது ஒண்ணொண்ணுலேர்ந்தும் வர்ற ஒளியால!


இப்ப நீ சொல்லு! ஒளியால அளகா? மணியால அளகான்னு? எதுக்கு எது ஆதாரம்? ஒன்னால சொல்ல முடியாது! அப்பிடித்தான் மயங்கறாரு அருணகிரியாரு! மணியா? ஒளியா?ன்னு தெரியுலியே முருகான்னு!


அடுத்தாப்புல வர்ற வார்த்தையைக் கெவனி!


‘கருவாய், உயிராய்!’


கருவால பெருமையா? அதுக்கு வர்ற உயிரால பெருமையா?


கருன்னு ஒண்ணு இல்லாங்காட்டிக்கு அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வர முடியுமா?
இல்ல, உசிருன்னு ஒண்ணு வராம கருவால இன்னாதான் பிரயோசனம்?
இதுல்லாம அது இல்ல! அது வராட்டி இது ஒபயோகமேயில்லை!
அதான் சூட்சுமம்!


இப்ப அடுத்த ரெண்டு வார்த்தை!


‘கதியாய் விதியாய்’


ஒனக்குன்னு விதிச்ச ஒரு கெதியாலத்தான் நீ பொறக்கறே! ஆனா, நீ பொறந்ததுமே, ஒனக்குன்னு விதிச்ச விதி ஒன்னிய வந்து ஒட்டிக்குது!


கெதியில்லாம விதியில்ல! விதி க்கீறதுன்றதுலாலியேத்தான் கெதி ஒன்னியை இங்க பொறக்க வைக்குது! கெதியால விதியா? இல்லாங்காட்டிக்கு, விதின்ற ஒண்ணால கெதி இங்க ஒன்னியத் தள்ளிச்சா?’ எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

“ஓ! அப்போ இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றே’ எனச் சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மன்னார் முகத்தைப் பார்த்தேன்!


‘தான் இவ்வளவு நேரமா, இவ்வளவு நாட்களாகச் சொன்னது ஒன்றும் பெரிதாக வீண்போகவில்லை’ எனும் தெம்புடன் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தான் மயிலை மன்னார்!


இன்னும் தொடரும் எனும் நம்பிக்கையுடன் மன்னாரை ஆவலுடன் நோக்கினேன்.

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

[இன்னும் இரு பதிவுகளாக இந்தப் பாடலின் விளக்கம் தொடரும். தினம் ஒரு பதிவாக வரும்.]

Read more...

Friday, March 16, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55 [50]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55


50.

‘பணமோ, நல்ல குணமோ வர்றது பெருசில்லை. அதைத் தக்க வைச்சுக்கணும். அதில்லேன்னா ஒண்ணும் பிரயோஜனப்படாது' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.


'இப்ப எதுக்காக இப்படிச் சொல்றீங்க' என்றேன் அவரைப் பார்த்து.


'இல்லேடா அம்பி. ஏதோ பகவானோட அருளால காலம் ஏதோ சொஸ்தமா ஓடிண்டு இருக்கு. இப்பப்போய் அதைக் கெடுத்துக்கலாமோ? அதிகமா காசு பணம் வேண்டாம். இருக்கறதை காபந்து பண்ணிண்டா போறாதோ? எப்பவோ யாருக்கோ கொடுத்த பணம் இப்ப தெய்வாதீனமாத் திரும்பி வந்திருக்கு. அதுக்கு ஒரு செலவு சொல்றா இவ! வேண்டாம்னா கேக்கவா போறா! எல்லாம் மாயையோட விளையாட்டு!' என்று அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.


அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னார் அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.


'ஒங்களுக்கு மட்டுமா நடக்குது சாமி! அன்னி தொட்டு இன்னிய வரைக்கும் இதே கதைதானே நடக்குது! அந்த மாயை தொடங்கிவைச்ச வெளையாட்டுதானே அவங்க கொலத்தியே நாசம் பண்ணி சாச்சுது' என்ற மன்னார்,
'அடுத்த பாட்டைப் படி' என்றான்.


பதில் பேசாமல் பாடலைப் படித்தேன்.

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

'இதை இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

மதி கெட்டு அறவாடி மயங்கி

'ஒரு காரியம் எப்பிடித் தப்பிப் போவுதுன்றத, படிப்படியா, ஒரு பச்சக்கொளந்தைக்குக்கூடப் புரியுறமாரி சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


புத்தி கெட்டுப் போயி, அடடா! இப்பிடி அறிவுகெட்டத்தனமா நடந்துக்கினோமேன்னு அதுக்காவ ரொம்பவே வருத்தப்பட்டுப் பொலம்பி, இப்ப இன்னா பண்ணினா இந்தப் பித்தம் தீரும்னு நெனைச்சு நெனைச்சு, ஒண்ணும் வளி[ழி] புரியாம மயங்கித் திரிஞ்சு நிக்கற நெலை ஒண்ணு வரும்!


நாம இன்னா தப்பு பண்ணினோம்? எப்பப் பண்ணினோம்?னு கூடத் தெரியாத வேகத்துல அல்லாமே நடந்து முடிஞ்சிரும்!
செல்வாக்கா இருந்த நெலைமை மாறி, திடீர்னு பாத்தா, ஒண்ணுமே இல்லாத ஒரு நெலையுல வந்து அல்லாடுவோம்.
இதைத்தான் 'மதிகெட்டு, அற வாடி மயங்கி'ன்னு சொல்றாரு.


'அற'ன்னா ரொம்பவே ஜாஸ்தியான்னு அர்த்தம்.


இதுனால இன்னா ஆவுதுன்றத அடுத்தாப்புல சொல்றாரு.

'அறக்கதி கெட்டு, அவமே கெடக் கடவேனோ'

நல்லது பண்றதால வர்ற நல்ல கெதியைத்தான் 'அறக்கதி'ன்றாரு.
'அவமே'ன்னா ஒண்ணுத்தும் ஒபயோகமில்லாம வீணாப் போறது.
இப்பிடி இருக்கற நல்லதும் இல்லாமப்போயி, நான் கெட்டுஅளி[ழி]ஞ்சு போயிருவேனோன்னு பொலம்பறாரு.


இப்ப இன்னா ஆச்சு இவுருக்கு?

இதுவரைக்கும் நடுநடுவுல இப்பிடி அப்பப்ப பொலம்பினாரு . சரி, ஒத்துக்கலாம் அதைன்னா, இப்ப, கடைசிப் பாட்டாண்டை வந்து எதுக்காவ இவ்ளோ கதர்றாரு?

அநுபூதின்னா இன்னா, அதுக்கு இன்னான்னா பண்ணணும்னு சொல்லி, அது எப்பிடி இருக்கும்ன்ற வரைக்கும் சொன்னவர் ஏன் இப்பிடிப் பயப்படறாரு!?
கொளப்பமா க்கீதில்ல?


அதான் இதுல ரொம்பவே முக்கியம்!


கெடைக்காதது கெடைக்கறது பெரிசில்ல! அது கெடைச்சதும், ஒடனே கூடவே ஓடிவர்ற மயக்கத்தை நெருங்கவிடாமப் பாத்துக்கறதுதான் அத்த வுடவும் பெரிய சமாச்சாரம்.


இப்ப 'லாட்டிரி'ல ஒனக்கு ஒரு பத்து லட்சம் கெடைக்குதுன்னு வையி. நீ கொஞ்சங்கூட எதிர்பாக்காதது அது! வரணும்னு நெனைச்சுத்தான் வாங்கினே. ஆனா, 'ப்ரைஸு' விளுமான்றது தெரியாது. அப்பிடிக் கெடைச்சதுமே கூடவே ஒரு மெதப்பு தானா வந்து தொத்திக்கும்.


முருகா! எனக்கு அருள் பண்ணுப்பான்னு நீ கெஞ்சினதுல்லாம் சுத்தமா மறைஞ்சுபோயிட்டு, இன்னாமோ ஒன்னோட 'லக்'காலத்தான் இது கெடைச்சதுன்ற தெனாவெட்டு தானா வரும். அதான் இந்த மாயை பண்ற வேலை! அதோட வலையுல விளாமத் தப்பிக்கணும்!


அத்தத்தான் அருணையாரு இப்ப செய்யுறாரு!


அநுபூதின்ற 'லாட்டிரி ப்ரைஸ்' எனக்குக் கெடைச்சதுக்கு நீதான் காரணம்ன்றத மறந்திட்டு, நான் எதுனாச்சும் அறிவுகெட்டத்தனமா நடந்து கெடைச்சதியும் கோட்டை விட்டுருவேனோன்னு எனக்கு பயம்மா க்கீது முருகா!ன்னு அவருகிட்டயே மன்னாடறாரு.


இத்தச் சொல்றதுக்காவ அவரு போட்ட அடுத்த ரெண்டு வரிங்கதான் இதுல ரொம்பவே விசேசம்!' என்றான் மன்னார்.

அடுத்து என்ன சொல்லப் போகிறானோ எனும் எதிர்பார்ப்பு கூடுதலாக, அவன் முகத்தையே எங்கள் மூவரது கண்களும் பார்த்துக் கொண்டிருந்தன.

மூணு பேரு சொல்லி, முருகனைக் கூப்புடறாரு! ஒண்ணொண்னாப் பாப்பம்.

'நதி புத்திர'

சிவனோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவருதான் நம்ம கந்தன்!

இந்த ஒலகத்துக்கே கெதிமோட்சம் தர்றதுக்காவவும், தேவருங்களோட கொறையைத் தீக்கறதுக்காவவும் வந்த வள்ளலுதான் இந்த முருகன்!


இவரைத் தாங்கிக்க முடியுமான்னு டெஸ்ட்டு பண்றதுக்காவ, ஆருக்காகப் பொறந்தாரோ, அந்த தேவருங்கள்ல ரெண்டு பேரான வாயு, அக்கினி பகவானாண்டை குடுக்கறாரு.
அவங்களால அத்தத் தாங்க முடியல!


அவங்க கொண்டுபோயி, தேவமகளான கெங்கையம்மாவாண்டை குடுக்கறாங்க.
அவங்களாலியும் இத்தத் தாங்கிக்க முடியாம வறண்டே போயிடறாங்க.


இப்பிடிக் கெடைச்ச பொருளை அவங்களால காப்பாத்திக்க முடியாமத்தான், சரவணப் பொய்கையுல வந்து வுளுந்தாரு முருகன்!


கெங்கையம்மா இட்டாந்து போட்டதால, இவருக்கு இந்தப் பேரு! நதி புத்திரன்னு!


ஆச்சா! இப்ப அடுத்ததப் பாக்கலாம்.

'ஞான சுக அதிப'

ஒடம்பாலியோ, அறிவுனாலியோ வர்ற சொகத்தக் காட்டியும், ஞானத்தால கெடைக்கற சொகத்துக்கு எல்லையே கெடையாது. அதான் நெலையான சொகம். மத்ததுல்லாம் வந்த வேகத்துலியே போயிறும்.


இந்த ஞானத்தால வர்ற சொகத்தைக் குடுக்கறவந்தான் கந்தன்! அவந்தான் இதுக்கெல்லாம் சொந்தக்காரன்.


இப்ப அருணகிரியாருக்கு இப்பிடிக் கெடைச்ச இந்த அநுபூதின்ற சொகத்தைக் குடுத்த மொதலாளியை ஆசையா 'ஞான சுகாதிபா'ன்னு கூப்பிடறாரு.

ஞான சுகாதிப - 'ஞானனே! சுகாதிபனே!'ன்னும் சொல்லலாமோன்னு படறதுடா' என்றார் சாஸ்திரிகள்.

ஆமாம். அப்படியும் சொல்லலாந்தான். ஆனாக்காண்டிக்கு, மத்த சுகங்களைத் தர்றதுக்கு நெறையவே சாமிங்க க்கீறாங்க. ஆனா, இந்த ஞானத்தால வர்ற பெரிய சுகத்தைத் தர்றதுக்கு நீ ஒருத்தன் தாம்ப்பா என் கண்ணுல படுதுன்னு அருணையாரு சொல்றமாரி எனக்குப் பட்டுது. அதான் அப்பிடிச் சொன்னேன்.' என்ற மன்னார் மேலே தொடர்ந்தான்.

கடைசியா வர்றது, 'அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே'!

ஆரிந்தத் 'திதி'?

சூரனோட ஆத்தா. மாயைன்னு பேரு! பேரைக் கெவனி... மாயை! கசியப முனிவர்னு ஒர்த்தரு. அவரை மயக்கி அவர் மூலமாப் பெத்த பசங்கதான் சூரனும், தாரகனும், சிங்கமுகனும்.


இந்த மாயையோட வலையுல வுளுந்ததால, கசியபரோட தவம் அளிஞ்சுது!


இந்தம்மா குடுத்த கெட்ட போதனையால மதி கெட்டு, மயங்கிப்போயி, தனக்குக் கெடைச்ச வரத்தால வந்த சொகம் அத்தினியும் போறமாரி அளிஞ்சுபோனாங்க திதி புத்திரங்க! அதான் சூரனும் அவனோட தம்பிங்களும்! அல்லாம் மாயை பண்ற வேலை! அப்பிடியாப்பட்ட திதியோட புள்ளைங்களோட அகம்பாவத்தை வேறோட அறுத்த வீரந்தான் நம்ம முருகன்!


இப்பிடி மூணுவிதமாக் கூபிட்டு, ஞானத்துக்கே அதிபனான கந்தங்கிட்ட வேண்டிக் கேட்டுக்கறாரு அருணகிரியாரு!

கூலி குடுக்கற மொதலாளிகிட்டியே முளுப் பொறுப்பியும் நம்பிக்கையாக் குடுக்கறாரு!

குடுக்கறவன் ஆருன்றது புரிஞ்சதால!

அதான் கந்தனோட கருணை' என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் மயிலை மன்னார்!

'அவனையே சரணாகதி அடையறதை இதைவிடவுமா சிறப்பாச் சொல்லிட முடியும்? அருணகிரியாரோட கருணையே கருணை! என்னமா இந்த லோகம் க்ஷேமமா இருக்கறதுக்காக இப்பிடியொரு அற்புதமான வேதத்தை நமக்குப் புரியறமாதிரி பிழிஞ்சு கொடுத்திருக்கார்! புரியறவாளுக்குப் புரியும்' எனக் கைகூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!


'ஓம் சரவணபவ' எனும்மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது!
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Sunday, March 11, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54 [49]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54
49.


தன்னந் தனிநின் றதுதான் அறிய


இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ


மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே.

தன்னந் தனி நின்றது தான் அறிய


இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே.

‘நேத்து இன்னாமோ சொன்னியே நீ? ‘எங்கியோ திருவள்ளுவர் சிலையாண்டை நின்னுக்கினுக்கீறேன். ஒன்னை எங்க காணலியேன்னு பொலம்பினியே.. நெனைப்பு க்கீதா?

அந்த செகண்டுல ஒன்னிய சுத்தி ஒரு நூறு பேரு இப்பிடியும் அப்பிடியுமா போய்க்கினு இருந்திருப்பாங்க! ஆனாக்காண்டியும்,, அப்ப ஒம் மனசு, கண்ணு ரெண்டுமே என்னிய மட்டுந்தான் தேடிக்கினு இருந்துது!

அதுனாலத்தான் அப்பிடி ஒரு வார்த்தை ஒங்கிட்டேர்ந்து வந்திச்சு!

அந்த நேரத்துல, ஒன்னியப் பாத்து ஒர்த்தர் இன்னா சார், ஆரைத் தேடுறேன்னு கேட்டிருந்தாக்கூட, அதுக்கு நீ இன்னா ஒரு பதில் சொல்லியிருந்தாக்கூட, அது ஒனக்கும் புரிஞ்சிருக்காது… கேக்கறவனுக்கும் வெளங்கியிருக்காது!

ஏன்னா, நீ தேடறது இன்னான்னு அவனுக்குத் தெரியாது. நீ சொல்றது இன்னான்னு அவனுக்கும் புரிஞ்சிருக்காது.

இதான் இன்னைக்கு நாம அல்லாரும் பாக்கறது, கேக்கறது, புரியறது!

இன்னா, நான் சொல்றது வெளங்கிச்சா?’ என்றான் மயிலை மன்னார்!

அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமலையே, ‘நீ சொல்வது என்னவென எனக்குப் புரியலியே மன்னார்!’ என்றேன் பரிதாபமாக.

‘ம்க்கும்.. ஒனக்கு என்னிக்குத்தான் புரிஞ்சுது, இன்னிக்குப் புரியறதுக்கு’ என நொடித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

‘இப்ப நீங்க வேறயா?’ என்பதுபோல அவரை முறைத்தேன்.

இதான், இதான்…. இந்த மொறைப்புதான் ஆவாதுன்றது. அவுரு சொன்னது கரீட்டு! நான் இப்ப இன்னா சொல்லப்போறேன்னு மட்டும் கேளு! அத்தான் நல்லது. ‘எனச் சொல்லிவிட்டு என்னை அன்புடன் தட்டிக் கொடுத்தான் மன்னார்.

‘கிட்டத்தட்ட அல்லாத்தியும்,…… அநுபூதின்னா இன்னா?..... அது கெடைக்கணும்னா இன்னா பண்ணணும்?..... எதையெல்லாம் வுடணும்?...... எதைத் தேடிப் போவணும்?.....னு இதுவரைக்குமா ஒரு நாப்பத்தெட்டுப் பாட்டாச் சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப ‘டகால்’னு ரூட்டை மாத்திப் பாடறாரு!

நான் ஒனக்கு இதை இன்னான்னு சொல்லிப் புரியவைப்பேன்’னு சொல்றாரு! அதான் இதுல க்கீற சூட்சுமம்!

இதுவரிக்கும் சொன்ன அத்தினியயும் நீ பண்ணினியான்னா, ஒனக்கு ஒரு உண்மை தெரியவரலாம். அது இன்னான்னு ஒனக்கு மட்டுமே புரியும்! அந்த நெலையுல ஒனக்கு இன்னாமாரி ஒரு அனுபவம்…. அதான் அநுபூதி…….கெடைச்சுதுன்றத ஒன்னியத் தவர வேற ஆராலியும் புரிஞ்சுக்க முடியாது! ஒன்னாலியும் வேற ஆருக்குமே சொல்லவும் முடியாது! அதும்மாரி ஒரு நெலையுலதான் இப்ப நான் க்கீறேன்! என்னால எப்பிடிரா அத்த ஒனக்கு சொல்லிப் புரிய வைக்கறது?’ன்னு அங்கலாய்க்கறாரு!

அதான் இந்த மொத ரெண்டு வரியும்.

“தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”

கந்தன் இவருக்கு சொன்ன அத்தினியையும் இவர் பண்ணிட்டு, நிமிந்து பாக்கறாரு!

என்னோடதுன்றத வுட்டாரு!

நாந்தான் அல்லாமும்ன்றதியும் வுட்டாரு!

சுத்துப் பத்து அல்லாமே செத்துப்போச்சுன்னும் புரிஞ்சுக்கினாரு!

நாந்தான் நீன்ற நெனப்பும் மறந்து போச்சு இப்ப!

நீதான் என்னோட முருகன்ற நெனைப்புகூட அத்துப் போச்சு!

இப்ப அவுரு மெதக்கற நெலையே அவுருக்குத் தெரியலை!

இப்பிடியாப்பட்ட ஒரு நெலையுல, …. அது சொகமா, உணர்வா….நெனைப்பா..ன்னு எதுவுமே தெரியாத ஒரு எடத்துல அத்த இன்னான்னு சொல்லி வேற ஒர்த்தருக்கு என்னால புரியவைக்க முடியும்?னு சொல்றாரு! ஏன்னா, அந்தமாரி ஒரு செகண்டுலதான், "முப்பத்தாறயும்" வுட்டுப் பிரிஞ்சு தன்னந்தனியா நிக்கற அந்த ஒரு நொடியுலத்தான்,….. குருநாதனான கந்தன் வந்து ஆன்மாவுக்குள்ள ஒக்காந்திருவான்! அப்பிடி அவன் வந்ததுக்கப்பால அத்தப் பத்தி ஆருதான் இன்னான்னு சொல்ல முடியும்?

இப்ப இதுக்கு அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னு பாப்பம்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

ஒரு பெரிய சஸ்பென்ஸில் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே எனத் திடுக்கிட்டு ஒரு அதிர்ச்சியுடன் அவனை நோக்கினேன் நான்!

நாயரோ இதைப் பற்றியெல்லாம் கவலையே படாதவன்போல, கண்களை மூடிக் கிடந்தான்!

அவன் வாய் ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை விடாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது!

சாம்பு சாஸ்திரிகளோ ஒரு அர்த்தபுஷ்டியுடன் மன்னார் முகத்தைப் பார்த்தார்!

மன்னார் தொடர்ந்தான்!

“மின்னும் கதிர்வேல் விகிர்தா”ன்னு கூப்பிடுறாரு.

கதிர் வேல்னா இன்னான்னு தெரியுமில்ல? சூரியனோட வெளிச்சம் போல மின்ற வேலு!

சூரியனை நேராப் பாக்க முடியுமா? அதோட வெளிச்சம் கண்ணைக் கூசும்! அதும்மாரி கண்ணைப் பறிக்கற வேலு. அதுலியும் இத்த மின்னும் கதிர் வேலுன்னு சொல்றாரு. முருகன் கையுல இருக்கறப்ப, அந்தக் கையி அசையக்கொள்ள, அந்த வேலு இப்பிடியும் அப்பிடியுமாத் திரும்பறச்ச, அத்தோட வெளிச்சம் இன்னும் பிரகாசமா க்கீதாம்!

எதுனால அப்பிடித் திரும்புதுன்னா, அவங்கவங்களுக்கு வேணும்ன்றமாரி முருகனோட வடிவம் மாறி, மாறித் தெரியுது. தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, அவங்களுக்கு சந்தோசம் குடுக்கறதுக்காவ, கந்தன் வெவ்வேற வடிவம் எடுக்கறாரு. விகிர்தன்னா அதான் அர்த்தம்.

இந்த ‘மின்னும் கதிர்வேல் விகிர்தன்’ எதுக்காவ இப்பிடி பலவிதமா வேசம் கட்றார்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியான கஸ்டம், தும்பம்! அததுக்குத் தக்கமாரி, ஒவ்வொரு விதமா வராரு முருகன். கின்னம்னா, தும்[ன்]பம்னு அர்த்தம்.

மனுஷாளுக்கு வர்ற கஸ்டத்தயெல்லாம் அததுக்குத் தகுந்தமாரி தீர்த்து வைச்சு, கிருபை பண்றதத்தான், ‘கின்னம் களையும் கிருபை சூள்[ழ்] சுடரே’ன்னு பாடுறாரு அருணையாரு.

இதுல இன்னா விசேசம்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியா வந்து கிருபை பண்றாரா, அதுனால இதான் முருகன், இப்பிடித்தான் வருவான்னு ஆராலியுமே சொல்லிக் காட்ட முடியாமப் போயிறுது!

எப்பிடி அநுபூதி நெலைன்னா இன்னான்னு அருணகிரிநாதரால சொல்ல முடியாமப்போயி தவிக்கறாரோ, அப்பிடித்தான் இந்த விகிர்தனோட கிருபையும்! எப்பிடி சொல்றதுன்னே புரியாம வந்து அருள் பண்ணறான்!’ என முடித்தான் மயிலை மன்னார்.

இன்னவெனச் சொல்லமுடியாத மௌனம் அங்கே நிலவியது!
******************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, March 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53 [48]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53


48.

'என்னடா இது கஷ்டகாலம்? இந்தப் 'பவர்-கட்'டுக்கு ஒரு விடிவே வராதா? இப்பிடி இருளோன்னு இருக்கே!' என அலுத்தபடி வந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.

'அதுனாலென்ன சாமி? கொறையே படாதீங்க. அப்பிடியே அந்த அரிக்கேன் லைட்டை இப்பிடி நடுவுல கொணாந்து வையுங்க. இருளெல்லாம் ஓடியேப் பூடும். வெளிச்சந்தானே நமக்கு வேணும். வெட்ட வேண்டியத மட்டும் வெட்டிட்டு, இந்தப் 'பவரை' நாம 'கட்' பண்ணாம இருந்தாப் போறும்' எனச் சொல்லி என்னைப் பார்க்க, அவன் முகத்தில் தோன்றிய குறும்புச் சிரிப்பைக் கவனித்த நான், உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறுவே லவனே.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

மொத வரியுலியே ரொம்ப அசால்ட்டா சொல்லிக் காட்றாரு நம்ம அருணையாரு.

அறிவு…. இதான் நாம அறிஞ்ச அறிவுன்னு நெனைக்கற ஒண்ணை,.... இந்த ஒலகுல நமக்குன்னு வந்த ஒறவுகளை…. இனிமே இதெல்லாம் வேணாம்னு புரிஞ்சுக்கற நெலை வர்றது ரொம்பவே கஸ்டமான சமாச்சாரம்.

இதெல்லாம் ஒரு பொய்யான மாயை…. இந்த ஒலகம், அத்தால வந்த அம்மா, அப்பா, பொண்ணு, புள்ளை, பொண்டாட்டி, சொத்து, சொகம், …. இதுங்கல்லாம் குடுக்கற கஸ்ட நஸ்டம், ஆனந்தம் ……. அல்லாமே நமக்கு சொந்தமானதில்ல… இதெல்லாம் வெறும் பொய்யிதான்னு புரிஞ்சுக்கறதுக்கு வர்ற நெலையுலியும்கூட, அப்பப்ப, சில சங்கதிங்க வந்து ஒரு கொடைச்சல் குடுக்கும். அப்பவும் கலங்காம நிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான தெம்பு வரணும். அப்பிடி இருக்கறவங்க ரொம்பவே கம்மி.

திரும்பத் திரும்ப இந்தப் பாட்டுங்கள்ல அருணகிரியாரு சொல்ற சமாச்சாரம் ஒண்ணே ஒண்ணுதான்!

கும்புடற சாமியோட அருளில்லாம, இதெல்லாம் நடக்கறதுக்கு ‘சான்ஸே’ இல்லைன்றதத்தான் கண்டிசனா சொல்லிக் காட்றாரு.


அதான் இந்த மொத ரெண்டு வரியும் சொல்லுது.

"அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ?"

அறிவுன்ற ஒண்ணு அத்துப் போயிறணும்ன்ற அறிஞ்சுக்கற அறிவாளிங்களுக்குத் தொணையா பிரியாம எப்பவும் கூட நிக்கற பெரிய சாமி நீதானேய்யான்னு கெஞ்சிக் கதற்ராரு இதுல!

எப்ப தொணையா நிப்பாரு தெரியுமா?

‘நான் ‘என்னுது’ன்’ற அகம்பாவம் அத்துப் போவணும். அல்லாமே நீதான் சாமின்ற தெளிவு வரணும்.
அதத்தான் அடுத்த வரியுல இன்னும் தெளிவா சொல்றாரு.

"செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே!"

‘செறிவு’ன்னா இன்னா?
 
பந்தபாசத்தால, இந்த ஒலகத்துல வந்து சேர்ற ஒறவுங்க.
இவங்களால வர்ற ஒரு ஆணவம் க்கீதே, அதுதான், ஒரு பெரிய இருட்டா வந்து மறைக்குது.

இந்த இருட்டு வெலகணும்னா, அதுக்கு ஒரு மூணு முக்கியமான சாமாச்சாரத்த வுடணும்.

காமம், கோவம், மயக்கம்னு மூணு!

ஒரு பொருளு மேல ஆசை வருது. அது கிடைக்கணுமேன்னு கோவம் கெளம்புது. கெடைச்சதும், அதும்மேல ஒரு மயக்கம்.

இப்பிடி மூணும் ச்சும்மா சுத்திச் சுத்தி அடிக்குதுங்க…….வெளிச்சத்தப் பாக்கவுடாம.

அப்பிடி இந்த மூணையும் ஜெயிச்சவங்கதான் ஞானிங்க!

‘ஆமாண்டா. சீவபோதம் நீங்கினா, சிவபோதம் வந்து ஒக்காரும்னு சொல்லுவாளே, அதாண்டா இது. அத்வைதம்!!!’ எனப் பரவசமாய்ச் சொன்னார் சாம்பு சாஸ்திரிகள்.

‘அதேதாங்க. அப்பிடி சிவபோதமா வந்து நிக்கறவந்தான் கந்தன். அந்தக் கந்தனைத்தான் ‘பிறிவொண்ணு அற நின்ன பிரான் நீதானே’......."வேற எதுவுமே வேணாம். என்னியக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அதுவே போறும்னு, ....இந்த அரிக்கேன் லைட்டு மாரி...... வந்து நின்ன என் தெய்வமே!" ன்னு கொண்டாடறாரு அருணையாரு’ எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஓம் சரவணபவ.
**************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP