Saturday, June 24, 2006

" முருகனருள் முன்னிற்கும் -- 1"

" முருகனருள் முன்னிற்கும் -- 1"


வலைப்பூ நண்பர்களே!

இந்தத் தலைப்பில் எவ்வாறு என் அன்பு முருகன் என்னோடு எப்போதும் என் வாழ்க்கையில் "கூடி இருந்து குளிர்வித்தான்" என்பதனைச் சொல்லலாம் என இருக்கிறேன்.

சிறியது, பெரியது என்னும் வேறுபாடெல்லாம் அவனுக்குக் கிடையாது, அதெல்லாம் நமக்குத்தான் என்பதனை உறுதி செய்யும் நிகழ்வுகள் இவை.

இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றே, இதற்கு வித்திட்டது.

இந்தப் பதிவுகளில், உரைநடை, கவிதை இருவகையிலும் கலந்து சொல்லலாம் எனவும் எண்ணியிருக்கிறேன்.

படிப்பதோடு, இதுபோன்ற உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால், மிகவும் மகிழ்வேன்.

இனி, மேற்கொண்டு பீடிகை எதுவும் போடாமல் நிகழ்வுகளுக்குச் செல்வோமா?
_____________________________________________________________________________________


நேற்று வேலைக்கு வழக்கம் போலச் சென்றேன்.

போனவுடன் ஒரு மருத்துவக்குழு கூட்டம் இருந்ததால், அன்றைய 'நாட்பணிகளை' [appointments] கவனிக்க மறந்து போனேன்.

10 மணி அளவில், எனது அறைக்கு வந்தவுடன், செயலர் நினைவு படுத்தினார், இன்று என்னுடன் பணி புரிவோருடன் 11 மணிக்கு வெளியில் மதிய உணவு அருந்த செல்லவேண்டியிருக்கிறது என்று!

அவசர அவசரமாக பாக்கெட்டைத் தடவினால், 'வாலெட்டை' மறந்து வைத்து விட்டு வந்தது தெரிந்தது.

சக மருத்துவர் ஒருவரிடம் ஒரு 20 டாலர் கடன் வாங்கிகொன்டு எப்படியோ மானத்தைக் காப்பாற்றிக் கொண்டேன்!

மறுநாள் திருப்பித் தருகிறேன் என்று வேறு வாகளித்திருந்தேன் அந்த நண்பரிடம்!

திரும்பி வந்து, தற்செயலாக, கணினியில் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது ஒரு உன்மை முகத்தில் அடித்தாற்போல் தெரியவந்தது, கணக்கில் 35 டாலர்களே இருக்கிறது என்பது!

இவ்வளவு குறைவான நிலையில் என் கணக்கு இருந்ததில்லையே எனக் குழம்பினேன்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது, எனது இரு மகளகளும் அவசரத்தேவையெனக் கேட்டுக் கொண்டதால், இரு பெருந்தொகைகளை சில தினங்களுக்கு முன் மாற்றியிருக்கிறேன் என்பது!

சரி, எப்படியாவது, அதிலிருந்து ஒரு 20 டாலரை மட்டும் எடுத்து நண்பருக்குக் கொடுத்துவிடலாம் எனத் தேறுதல் செய்து கொண்டேன்.

இன்று காலை, கிளம்பும் போது, என் மகன் 'அப்பா, ஒரு 20 டாலர் 'gas money'[இதற்கு தமிழ்ச் சொல் என்ன?! குமரன், ஜி.ரா., பொன்ஸ் ப்ளீஸ்]] வேண்டும் என்று கேட்டு வைத்தான்.

இருக்கிற 20 டாலரை அவனுக்குக் கொடுப்பதா, இல்லை வாக்களித்தபடி நண்பருக்குக் கொடுப்பதா என ஒரு போராடம்!

சரி, இரு வருகிறேன், நான் ஏ.டி.எம் மெஷினுக்குச் சென்று வந்து தருகிறேன்' எனச் சொல்லிவிட்டு, வழக்கம் போல, 'முருகா! காப்பாத்து!' என ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தானியங்கிப் பொறி [ATM machine]-க்கு என் வண்டியை எடுத்துச் சென்றேன்.

அந்த சந்தில் திரும்பும் போது, ஒரு வயதான [சுமார் 80 இருக்கும்] ஒரு மூதாட்டி ஒரு வாக்கரைத் [Walker] தள்ளியபடி குறுக்கே கடந்தார்.

அவருக்காக நான் ஒரு முழுமையான நிறுத்தம் செய்த போது, திரும்பி என்னைப் பார்த்து கனிவுடன் சிரித்து, 'மே காட் ப்லெஸ் யூ' எனச் சொல்லிச் சென்றார்.

மனதுக்கு இதமாக இருந்தது.

வங்கி அட்டையை உள்ளே தள்ளி ஒரு 20 டாலரை வெளியில் எடுத்தேன்.

கூடவே அதற்கான ரசீதையும் கக்கியது மெஷின்.

சரி, மீதி 15 டாலர்தானே இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கையுடன் பார்த்த எனக்கு மயக்கம் போடாத குறை!

மீதி இருப்பு நாலாயிரத்துச் சொச்சம் எனக் காட்டிச் சிரித்தது அந்த ரசீது!

எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும், என் சம்பளம் 30-ம் தேதி தானே பதியும், என் மனைவியின் சம்பளமும் 25-ம் தேதிதானே என மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது!

இன்று தேதி 23, வெள்ளிக்கிழமை.

நாளையும், அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள் என்பதால், என் மனைவின் சம்பளம் நேற்று இரவே, 22-ம் தேதி அன்றே பதிந்திருக்கிறது!

பிறகென்ன!

மறுபடியும் அட்டையை நுழைத்து, தெம்பாக ஒரு 200 டாலரை வெளியிலெடுத்து, வீட்டிற்கு வந்து, மகிழ்வுடன் மகனுக்கும் பணத்தைக் கொடுத்து, நண்பரின் கடனையும் திருப்பிக் கொடுத்து,.....

எல்லாம் இனிதே முடிந்தது!

அந்த மூதாட்டி.....!?

அவரது கனிவான ஆசிச் சொற்கள்!?

வேறு யார்?!

என் அப்பன் முருகன் தான் !

"ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாளகணம் புகழ் வேலவனே !"
[கந்தர் அநுபூதி; பாடல் 38]

'கூதாள மலரை அணிந்தோனே!
வேடர்குல வள்ளியின் தலைவனே!
பேய்களும் துதிக்கின்ற வேலவனே!
வீண் பேச்சுக்ளைப் பேசுபவனும்,
நன்மைஒன்றும் அறியாதவனும்,
தீயவனும் ஆகிய அடியேனையும்
ஒரு பொருட்டாக எண்ணி நீ என்னை
ஆட்கொண்ட விதத்தை எப்படி உரைப்பேன்!'

*************************************************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP