Saturday, March 28, 2009

”அப்பளம் செய்வது எப்படி?””அப்பளம் செய்வது எப்படி?”

தலைப்பைப் பார்த்ததும், தொடர்ந்து இன்னொரு சமையல் பதிவா என மலைக்க வேண்டாம்!
அதெல்லாம்,சும்மா, அப்பப்ப வரும்!

பகவான் ரமணர் வழக்கம் போல ஒருநாள், ஆஸ்ரமத்தில் இருக்கும் சமையலறைக்குச் சென்றார்.
மதிய உணவுக்காக சமையல் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
ரமணரின் தாய் ஓர் ஓரமாக அமர்ந்து, அப்பளம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
பகவான் அவர்கள் செய்வதையே சற்று நேரம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
திடீரெனக் கடகடவெனச் சிரிக்க ஆரம்பித்தார்!
“என்ன சிரிக்கறே? வந்து கூடமாட கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடாதா” எனத் தாய் கேட்க,
‘அதெல்லாம் முடியாது! நீங்களெல்லாம் உற்சாகமாக இருக்க வேணும்னா ஒரு பாட்டுப் பாடறேனே?’ எனச் சொன்னாராம்!
அதுதான் இந்த “அப்பளப் பாட்டு”!!பல்லவி

அப்பள மிட்டுப் பாரு - அத்தைச்
சாப்பிட்டுன் னாசையைத் தீரு.

அனுபல்லவி

இப்புவி தன்னி லேங்கித் திரியாமற்
சற்போ தசுக சற்குரு வானவர்
செப்பாது சொன்ன தத்துவ மாகிற
வொப்புயர் வில்லா வோர்மொழி யின்படி -- [அப்பள]

சரணங்கள்

தானல்லா வைங்கோச க்ஷேத்ர மிதில்வளர்
தானென்னு மானமாந் தான்ய வுளுந்தை
நானாரென் ஞான விசாரத் திரிகையி
னானல்ல வென்றே யுடைத்துப் பொடித்து -- [அப்பள]

சத்சங்க மாகும் பிரண்டை ரசத்தொடு
சமதம மாகின்ற ஜீரக மிளகுட
னுபரதி யாகுமவ் வுப்போ டுள்ளநல்
வாசனை யாம்பெருங் காயமுஞ் சேர்த்து -- [அப்பள]

கன்னெஞ்சி னானா னென்று கலங்காம
லுண்முக வுலக்கையா லோயா திடித்து
சாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற்
சந்ததஞ் சலிப்பற சந்தோஷ மாகவே -- [அப்பள]

மோனமுத் ரையாகு முடிவில்லாப் பாத்ரத்தில்
ஞானாக்னி யாற்காயு நற்பிரம்ம நெய்யதி
னானது வாகவே நாளும் பொரித்துத்
தானே தானாக புஜிக்கத் தன்மய -- [அப்பள]


பதம் பிரித்து:

பல்லவி

அப்பளம் இட்டுப் பாரு - அத்தைச்
சாப்பிட்டு உன் ஆசையைத் தீரு.

அனுபல்லவி

இப்புவி தன்னில் ஏங்கித் திரியாமல்
சற்போத சுக சற்குரு ஆனவர்
செப்பாது சொன்ன தத்துவம் ஆகிற
ஒப்பு உயர்வில்லா ஓர் மொழியின்படி -- [அப்பள]

சரணங்கள்

தான் அல்லா ஐங்கோச க்ஷேத்ரம் இதில் வளர்
தான் என்னும் ஆனமாம்[ஆன்மா] தான்ய உளுந்தை
நான் ஆர் என்[னும்] ஞான விசாரத் திரிகையில்
நான் அல்ல என்றே உடைத்துப் பொடித்து -- [அப்பள]

சத்சங்கமாகும் பிரண்டை ரசத்தொடு
சமதமம் ஆகின்ற ஜீரக மிளகுடன்
உபரதி ஆகும் அவ் உப்போடு உள்ள நல்
வாசனையாம் பெருங்காயமும் சேர்த்து -- [அப்பள]

கல் நெஞ்சில் நான் நான் என்று கலங்காமல்
உள் முக உலக்கையால் ஓயாது இடித்து
சாந்தமாம் குழவியால் சமமான பலகையில்
சந்ததம் சலிப்பற சந்தோஷ மாகவே -- [அப்பள]

மோன முத்[தி]ரையாகும் முடிவில்லாப் பாத்[தி]ரத்தில்
ஞான அக்னியால் காயு[ம்] நற்பிரம்ம நெய்யதில்
நான் அதுவாகவே நாளும் பொரித்துத்
தானே தானாக புஜிக்கத் தன்மய -- [அப்பள]பதம் பிரித்துப் படித்தால் சற்று எளிதாக விளங்கக் கூடிய இந்தப் பாடலுக்கு
விளக்கம் சொல்லும் தகுதி எனக்கில்லை!

இதற்கிடையில், ரமணாசிரமம் இந்தப் பாடல் குறித்து வெளியிட்டிருக்கும் விளக்கத்தை ஒட்டி
ஒரு சில வரிகள் சொல்ல விழைகிறேன்.


அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!


இவ்வுலகில் பிறந்து அல்லல்பட்டு அலைவதை விடுத்து,
‘நான் அதுவாக இருக்கிறேன்’ என்னும் சொல்லாமொழி சொல்கின்ற
தத்துவத்தின்படி உன் வீட்டிலேயே அப்பளம் இட்டுப் பாரு!

மொழியால் விளங்கவைத்துப் புரியவைக்க முடியாது
ஆன்றோர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து சென்றால்
இந்த வித்தை உனக்கும் விளங்கும்!

அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!


அப்பளம் இட முதல் தேவை உளுந்து!
இதன் மேலிருக்கும் கறுப்புத் தோலை முதலில் நீக்கணும்!

ஐந்து கோசங்களால் நன்றாகக் கொழுத்து வளர்ந்திருக்கும்
உடம்பென்னும் உளுந்தை மூடியிருக்கும்
ஆணவம் என்னும் தோலை நீக்கணும்!
அதற்கு,
கல்லால் ஆன எந்திரத்தில் வைத்து
உளுந்தை நன்றாக இடிக்கணும்!

’நான் யார்?’ என்னும் ஆன்மவிசாரக் கேள்வியை
அறிவுடன் புரிந்து இந்தக் கல்லில் வைத்து அரைத்திட
இடித்துப் பொடித்திடும் வேளையில்
நான் விடுதலை ஆகித் தெளியும்!
மூடியிருக்கும் ஆணவம் விலக கட்டுகள் தளரும்!

அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!


இடித்துப் பொடித்த மாவை இப்போது கலக்கணும்!
பிரண்டைச் சாறுகொண்டு சேர்த்துக் கலக்கணும்!

நன்மக்கள் கூட்டம் என்னும் சத்சங்கம் இப்போது
பிரண்டை ரசமாகி நானுடன் கலக்கச் செய்யணும்!
கலவையில் சேர்க்கணும் ஜீரகம்!
மனக்கட்டுப்பாடு என்னும் ஜீரகம் சேர்க்கணும்!
மிளகைப் பொடி செய்து அடுத்துக் கலக்கணும்!
அலையும் மனதை அடக்கிடும் மிளகுத்தூளைச் சேர்க்கணும்!
கலந்தது தெரியாமல் தன்மயமாகும் உப்பு சேர்க்கணும்!
உலகினில் வாழ்ந்தும் அதனால் அசையா உப்பைச் சேர்க்கணும்!
வாசனைக்காக பெருங்காயம் சேர்க்கணும்!
உலகோடு ஒன்றிவாழ்ந்து தன் வாசனையைச் சேர்க்கணும்!

அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!


கலந்து சேர்த்த இந்த மாவை உரலிலிட்டு
உலக்கையால் மாறி மாறிக் குத்தணும்!

உலகபந்தங்களில் ஆட்படாமல் கல்மனதாகி
‘நான், நான்’ என்னும் உணர்வு நீங்கும்வரை
உலக்கையாக மனதை உள்நிறுத்திக் குத்தணும் !
மனம் இப்போது சஞ்சலங்கள் அடங்கி நிலைபெறும்!
இடித்துக் குத்திய மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கணும்!
ஒரு மரப்பலகையில் வைத்து, அயராது அதனையொரு
குழவியால் உருட்டி வட்டவட்ட அப்பளங்களாக்கணும்!
அமைதி என்னும் சிறுசிறு உருண்டைகளாய்ச் செய்து
பிரஹ்மன் எனும் சமமான பலகையில் இட்டு
சற்றும் உற்சாகம் குன்றாமல் சலிப்பில்லாமல் இட்டு வா!

அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!

இட்டுக் காய்ந்த அப்பளங்கள் இப்போது பொரிக்கத் தயார்!
பொறுமையாக வெயிலில் காய்ந்த அப்பளங்கள் பொரிக்கத் தயார்!
பேசா நிலை என்னும் அநுபூதி சித்திக்கும் வெயிலில்
காய்ந்து நிறைந்த ‘நானும்’ இப்போது பொரிக்கத் தயார்!
அடுப்பை எரியவைத்து ஒரு பாத்திரத்தை வைத்து
நெய்யூற்றி ஒவ்வொன்றாக இட்டு பொரித்துச் சாப்பிடலாம்!

மோன முத்திரை எனும் முடிவில்லாப் பாத்திரத்தை
ஞானம் எனும் நெருப்பில் வைத்து உயரிய பிரம்மம்
எனக் காயும் நெய்யில் இந்த ‘நானை’ இட்டு
தானே அதுவாகத் தினமும் பொரித்து தன்மயமாகிடவே

அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!


****************************************************

Read more...

Friday, March 27, 2009

”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”

”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”


வழக்கம் போல் சமைத்து முடித்து, என் மனைவியும், நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கணினி பக்கம் வந்தேன்!

திடீரென கோவியார் ‘அரட்டையில்’ வந்தார்!

என்றுமில்லாத் திருநாளாக 'இன்னிக்கு என்ன சமையல்?' எனக் கேட்டார்!

‘கொண்டைக்கடலை வற்றல் குழம்பு, வாழைக்காய் கறி, அரிசி அப்பளம், தயிர் சாதம்' என நான் சொல்ல,
'அடடே! விருந்து சமையல் மாதிரி இருக்கே!' எனப் பாராட்டி [கேலி??!!] விட்டு, உடனே ‘இதை எப்படி செய்வது?’ என ஒரு பதிவு போடுங்க எனக் கட்டளையிட்டார்!

இன்னிக்கு என்ன எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்த எனக்கு இது ஒரு உற்சாகத்தைத் தர, இதோ! முதன் முதலாக என்னிடமிருந்து ஒரு சமையல் செய்முறை பதிவு!

செஞ்சு பாருங்க! அட்டகாசமா இருக்கும்!

”கொண்டைக்கடலை வற்றல் குழம்பு”

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கொண்டைக்கடலை ஒன்றரை கப்
வற்றல் மிளகாய் 8 முதல் 10 வரை
வெந்தயம் அரை டீஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு [ஒரு கப் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்]
சிறிய வெங்காயம் 10 [பாதியாக நறுக்கி வைக்கவும்]
நல்லெண்ணை 4 டீஸ்பூன்
காரப்பொடி ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை 10-15 இலைகள்
தண்ணீர் 1 கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் இவற்றைப் போடவும்.
கடுகு வெடித்ததும், மிளகாய் வற்றல், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இவற்றோடு சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, ஊற வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு,
காரப்பொடி, உப்பு இவற்றைப் போட்டு கொதிக்கவைத்து, பிறகு ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி,
நன்றாகக் கொதிக்க விடவும்.
இப்போது மீதமிருக்கும் 2 டீஸ்பூன் எண்ணையை விடவும்.
2 அல்லது மூன்று கொதி ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே சற்று நேரம் வைத்த பின்னர்,
வடித்த சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.

சுட்ட அப்பளம் இதற்கு சூப்பரா இருக்கும்.


வாழைக்காய் கறி:

தேவையான பொருட்கள்:

1 பெரிய வாழைக்காய் [சிறு சிறு துண்டங்களாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்]
நல்லெண்ணை 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
கடலைப் பருப்பு ஒரு டீஸ்பூன்
உப்பு ஒன்றரை டீஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
துறுவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு சில இலைகள்
பெருங்காயம் ஒரு சிமிட்டா


செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகை வெடிக்க விடவும்.
கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றைப் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் புளியைக் கரைத்து, தண்ணீரை முக்கால் பாகம் வடித்துவிட்டு,
மீதித் தண்ணீருடன் இதில் போட்டு,வதக்கவும்.
தண்ணீர் சுண்டியதும், மீதமிருக்கும் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு,
பெருங்காயத்தைக் கரைத்து ஊற்றி, தேங்காய்த் தூளைத் தூவி, 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கிளறு கிளறி பரிமாறலாம்.

அப்பளம் எப்படி சுடறது, தயிர் சாதம் எப்படி பிசையறதுன்னு கேக்காதீங்க மக்களே!


யாராவது செஞ்சு பார்த்து சொல்லுங்க சாமி!:)))

[குறிப்பு: இதில் கூறப்பட்டிருக்கும் அளவு 2 அல்லது மூன்று பேருக்கு சரியாக இருக்கும்.]

Read more...

Wednesday, March 25, 2009

"நீரே நீராய்!!"

"நீரே நீராய்!!"

ஆற்றங்கரையில் ஓர்நாள் அமர்ந்தேன்
நீரது வந்தென் கால்களைத் தொட்டது!

ஒருகை அள்ளி நீரைப் பார்த்தேன்
பார்த்ததும் வியப்பில் நானும் ஆழ்ந்தேன்!

நீரின் கண்களில் நீர்வரக் கண்டேன்
நீரே கண்ணீர் உகுத்தலும் கண்டேன்!

ஏனுன் கண்களில் நீரெனக் கேட்டேன்
நீரும் கண்ணீர்க் கதையினைச் சொன்னது!

என்நிலை எனக்குப் புரியவும் இல்லை
எள்ளிடும் பலரால் என்நிலை நொந்தேன்!

கொள்ளும் குடுவையின் அளவாய் எந்தன்
உள்ளம் மாறிடும் இழிநிலை ஏனோ?

சீராய்ச் செல்லும் என்னைத் தடுத்திட
நூறாயிரம்பேர் இங்கே உண்டு!

இதனால் நானும் கண்ணீர் உகுத்தேன்
நின்னிடம் சொல்லி தேறுதல் கொண்டேன்!

என்றிட்ட நீரை நானும் நோக்கி
ஆறுதல் மொழிகள் ஒருசில சொன்னேன்!

துளியாய்ப் பிறக்கும்! தன்னைக் கூட்டி
ஆறாய்ப் பெருகும்! கடலைச் சேரும்!

பிறப்பிடம் தன்னில் தன்நிலை மீறிட
தானாய் வழிந்து வெளியே ஓடும்!

விடுதலை அடைந்ததும் ஆணவமின்றித்
தன்வழி எதுவெனத் தானே அமைக்கும்!

பெருகிடும் நீரின் பாதையை அமைப்பது
நீரே அன்றி வேறெதும் இல்லை!

நேர்வழி சென்றிட எண்ணமிருந்தும்
தடைகளைக் கண்டு துவளாதோடும்!

வளைந்திட வேண்டின் வளைந்தும் செல்லும்
நேர்வழி கிட்டின் சீராய்ச் செல்லும்!

எவ்வழி சென்றும் இலக்கையே தேடும்
அவ்வழி ஒன்றே தனக்கென நாடும்!

தடைகள் இருந்தால் சற்றே தயங்கும்
தன்னின் வலிமை மேலும் கூட்டும்!

தன்வலி உணர்ந்ததும் சீறிப் பாயும்
தடைகளைத் தாண்டி கடமைகள் ஆற்றும்!

அடங்கிடும் நீரை அறிவிலி என்போர்
அவரே அறியார் நீரின் வலிமை!

தேங்குதல் கூடச் சீறிடத் தானே
தூங்குதல் இதற்கு என்றும் இலையே!

கொள்ளும் அளவையில் குழைந்தே நிற்கும்
ஆயினும் தன்னைக் காட்டியே வழியும்!

அடக்கிட நினைக்கும் பாத்திரம் அறியுமோ
அடங்குதல் இதற்குக் கிடையாதெனவே!

சீர்வழி இதுவெனத் தெரிந்திடும் போது
சீறிடும் இதனை அடக்குவர் எவரோ!

தெளிந்தே ஓடித் தாகம் தீர்க்கும்
குழம்பிடும் நிலையிலும் தன்நிலை உணரும்!

அனைத்தையும் கரைக்கும் ஆற்றலும் உண்டு!
அனைத்துடன் கலக்கும் தெளிவும் உண்டு!

கரைந்தும் கலந்தும், தன்நிலை மாறாத்
தெளிவுடன் மேலே தானே ஒளிரும்!

உலகம் வாழ்ந்திடச் செய்திடும் பண்பும்
உலகையே அழித்திடும் ஆற்றலும் உண்டு!

நீரின் இயல்பு குளிர்மை ஒன்றே
கொதித்திடச் செய்யினும் தண்நிலை திரும்பும்!

நீரின் போக்கை அணைகள் தடுக்கும்
அதனிலும் இதுவே சக்தியாய் மாறும்!

செல்லும் வழியினில் சோலைகள் விரிக்கும்
சொல்லிடும் மொழிகளில் இனிமை கூட்டும்!

மலையினில் வீழ்ந்து அருவியாய்ப் பொழியும்
கரையினுள் தங்கிக் குளமாய்த் திகழும்!

வாழும் உயிர்கள் வாழ்ந்திடச் செய்யும்
தாழும் நிலையிலும் ஊற்றாய்ச் சுரக்கும்!

எவ்வழி செல்லினும் கடலையே நாடும்
அவ்வழி தேடித் தன்பணி செய்யும்!

இதற்கென உணர்வுகள் இதனிலும் உண்டு
அதனைக் காட்டிடும் பண்பும் உண்டு!

நீரை உண்டால் ஆயுள் நிலைக்கும்
நீரே உண்டும் எம்கதை முடிக்கும்!

அடங்குதல் போலத் தெரியும் சிலநாள்
ஆயினும் அடங்குதல் வெளிக்கிடத் தானே!

நீரின் போக்கை நீரே செய்யும்
வேறெவர் இதனை அடக்கிடக் கூடும்!

நீரில் மாசுகள் கலந்திட்ட போதும்
நீரின் புனிதம் கெடுவதும் இல்லை!

நீரின் பெருமை இத்தனை சொன்னேன்
நீரே நீராய்ப் பொலிதலும் கண்டேன்

எனவே நீயும் கலங்கிட வேண்டா
நின்வழி சென்றிடத் தயங்கவும் வேண்டா!

நின்னின் பெருமை நினக்கே சொன்னேன்
மண்ணில் உயர்ந்தது நீரே என்றேன்!

நீரும் என்னைக் கனிவுடன் பார்த்தது
கைவழி நழுவித் தன்னுடன் சேர்ந்தது!

தன்வழி செல்லும் நீரினைப் பார்த்தேன்
களங்கம் இல்லா அதனுடன் கலந்தேன்!

********************************************

Read more...

Sunday, March 22, 2009

"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’

"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’” திருமுருகன் நெறிவழியில் நிலையாகச் சென்று, இவ்வுலக இன்பங்களில் மனம் நாட்டம் கொள்ளாது இருக்க அருள் செய்யப்பா! திருச்செந்தூர் வேலா!”

----- பாடல் -----

தனதன தனதன தனதன தனதன
தன்னத் தனதான

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் றிடுநாயேன்

நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் றடைவேனோ

சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற் சிறுபாலா
திரைகட லிடைவரு மசுரனை வதைசெய்த
செந்திற் பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் பெருமாளே.----- பொருள் -----

[வழக்கம் போல, பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


”சிலையென வடமலை உடையவர்”

முப்புரம் எரித்த நிகழ்வினைச் சொல்லும்
இவ்வரி சொல்லும் கதையினைக் காண்போம்!

முப்பெரும் அசுரர் பிரமனைக் குறித்து
வலியதோர் தவம் பல்லாண்டு செய்தார்

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி
எனுமிவர் தவத்தில் பிரமனும் மகிழ்ந்தார்

வரமொன்று அருளிட அவரும் கேட்டிட
அழியாவரமே வேண்டியிவர் நின்றார்

’சிவனார் தவிர அழியாதவரிங்கு
எவரும் இல்லை ! மற்றது கேள்! ’

எனவே பிரமனும் அசுரர்க்குச் சொல்ல
சற்றே யோசித்த அசுரரும் சொன்னார்:

‘வானுலகம் பூமி, கீழுலகம் மூன்றும்
ஒன்றாய்ச் சேர்ந்த ஓருலகம் வேண்டும்!

பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த
மதில்கள் அதற்குக் காவலாய் வேண்டும்!

எண்ணிய பொழுதினில் எங்கும் சென்றிடும்
வல்லமை அதற்குத் தந்திட வேண்டும்!

சிவனார் கணையன்றி வேறெதுவாலும்
அழித்திட முடியா வரமிங்கு வேண்டும்!’

வரமிதைக் கேட்ட நான்முகன் சிரித்து
அவ்வண்ணம் அருளித் தன்னிடம் சேர்ந்தார்

முப்புரம் அமைந்த செருக்கினால் அசுரரும்
தாங்கிடவொண்ணா கொடுமைகள் செய்தார்

தேவரும் மனிதரும் மனமிக வருந்த
திருமால் எதிர்த்துப் போரிட்டுத் தோற்றார்

சிவனை நினைந்திவர் தவங்கள் புரிய
தேவரை நோக்கி சிவனார் சொன்னார்

‘எம்மின் அடியார் அவரென அறிக
அவரை அழித்தலும் எவராலும் ஆகாது’

இதனையறிந்த திருமால் ஆங்கே
புத்தராய்த் தோன்றி ஆங்கிருந்தோரைப்

பௌத்தராய் மாற்றிட மூவர் மட்டும்
மாயையுள் சிக்கா ஓர்நிலை அறிந்து

மீண்டும் தேவர்கள் சிவனைப் பணிய
முப்புரர் அழித்திடத் தேரொன்று செய்க

என்னும் சிவனின் சொல்லினில் மகிழ்ந்து
தேரொன்று அமைக்க தேவரும் முனைந்தார்.

மந்திரம் கேசரி என்னும் மலைகள் அச்சாக
சூரிய சந்திரர் சக்கரங்களாக
ருதுக்கள் அனைவரும் சந்திகளாக
ஈரேழு லோகங்கள் நிலைகளாக
உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாக
நதிகள் எல்லாம் பறக்கும் கொடிகளாக
மோட்சலோகம் மேல்விரிவாகவும்
நாட்களும் திதிகளும் இடுக்கு மரமாகவும்
எட்டுமலைகளும் தூண்களாகவும்
திசையினைக் காக்கும் எட்டு யானைகள் இடைநிலை தாங்க
ஏழு கடல்களும் திரைச்சீலையாகவும்
ஞான,கன்மேந்திரியங்கள் கலனாகவும்
கலைகளெல்லாம் முனைகளாகவும்
புராண சாத்திரங்கள் மணிகளாகவும்
மருத்துகள் அனைத்தும் படிகளாகவும்

அமைந்ததோர் ரதத்தினைச் சமைத்து
வேதங்கள் நான்கினை குதிரையாய்ப் பூட்டி
நான்முகனாரைச் சாரதியாக்கி
ஓமெனும் பிரணவம் சாட்டையாய்ச் சொடுக்க
தேவநங்கையர் சாமரமிடவும்
தும்புரு நாரதர் இன்னிசை ஒலிக்க
அரம்பையர் எல்லாம் நடனமாடவும்

அழகிய தேரினைச் சிவனார் முன்னே
கொண்டுநிறுத்தி இன்னமும் செய்தார்

மேருமலையினை வில்லாய்க் கொண்டு
நாகராஜனை நாணியாய் வைத்து
பச்சைவண்ணனைப் பாணமாய்ச் செய்து
வாணியை வில்லின் மணியாய்க் கட்டி
தீயின் தேவனை அம்பின் முனையாய்
காற்றின் அரசனை அம்பின் இறகாய்
இத்தனை வண்ணம் செய்தவர் வந்தார்

சிவனார் மகிழ்ந்து தேரினில் ஏற
அச்சு முறிந்து ரதமும் சிதைந்தது!


நாரணர் இடபமாய் முன்னே வரவும்
அதனில் ஏறி சிவனும் சென்று
மேருவில்லினை வளைத்து நாணேற்ற
ஆயுதமின்றி அழித்திடும் வல்லமை
அனைவரும் அறிந்திடத் திருவுளம் கொண்டு
உமையினைப் பார்த்து புன்னகை செய்தார்
முப்புரம் எரிந்து சாம்பலானது

அடியவர் மூவரும் என்றே பரிந்து
அசுரர்க்கு அருளிக் காவலர் ஆக்கினார்!
அனைவரும் மகிழ்ந்து சிவனைப் பணிந்தனர்!
இதுவே ‘சிலையென வடமலை உடையவர்’ திருக்கதை!

”அருளிய செஞ்சொல் சிறுபாலா”

சிவனாரின் கண்ணினின்று பொறியாக வெளிவந்து
அறுமுகனாய் உருவெடுத்த சங்கரன்குமரா!
அழகிய தமிழெனும் மொழியிதன் அரசனாய்
அருளிடச் சிவனார் அருள்செய்த சிறு பாலகனே!

”திரைகடலிடை வரும் அசுரனை வதைசெய்த
செந்தில்தி வேலா”


அழகன் முருகனின் வேலுக்குப் பயந்து
ஆழ்கடல் அடியினில் [மா]மரமாய் ஒளிந்த
சூரபதுமனை வேலால் பிளந்து
சேவலும் மயிலுமாய் அருள் செய்த
செந்தூர் என்னும் திருச்சீரலைவாய்
தலத்தினில் அருளும் வேலாயுதனே!

”வி[ல்]லைநிகர் நுதல் இபமயில்,குறமகளும்
விரும்பிப் புணர்வோனே”


வில்லினைப் போலும் புருவங்கள் உடைய
மயிலென விளங்கு தேவயானியும்
தினைப்புனம் காத்து முருகனை நினைந்து
மனவேடன் தன்னின் மனதைக் கவர்ந்த
வேடர் குலத்துக் குறமகள் வள்ளியும்
விருப்புடன் வந்து நின்னைச் சேர்ந்திட
செயலும்,விருப்பும் கைவரப் பெற்றோனே!
[தெய்வயானை கிரியா சக்தி, வள்ளி இச்சா சக்தி]

”விருது அணி மரகத மயில் வரு[ம்] குமர
விடங்கப் பெருமாளே”

பச்சைவண்ண மரகத மயில்
விருதுகள் பல பெற்றது!
அமரர் தலைவன் முருகனின் வாகனம்!
அதனில் அமர்ந்து அருள்மழை பொழியும்
அழகிய முருகப் பெருமானே!

விடங்கர் என்றால் இன்னுமோர் பொருளுண்டு!
செந்தூர் முதல்வன் திருக்கோலம்
கையிலோர் மலருடன் நின்றிடும் கோலம்!
சூரனை அழித்து, போரினை முடித்து
செந்தூர் திரும்பி சிவனை வணங்கிடக்
கையில் மலருடன் நின்றிட்ட நேரம்
தேவர்கள் வந்து நன்றிகள் சொல்லிட
அவரைப் பார்க்க மலருடன் திரும்ப
அத்திருக்கோலம் தாங்கிய மூர்த்தியாய்
சிலையா நின்றார் என்றொரு வரலாறு!
‘உளிபடாச் சிலையாய்’ நின்றிடும் உருவுக்கு
‘விடங்கன்’ என்றொரு பொருளும் உண்டு!
செந்தூர் முதல்வன் விடங்கப் பெருமான்!
அவரைப் பணிவோம்! அருளைப் பெறுவோம்!


"கொலை மதகரியன ம்ருகமத தன கிரி
கும்பத்தனம் ஆனார்"


குத்தவரும் யானைக்குக் கொம்புகளாயிரு தந்தம்
அதுபோலப் பெண்டிருக்கு விளங்குமிரு முலைகள்!

குத்திவிடும் இருதந்தம் கொலையும் செய்துவிடும்
குத்துமுலை இவையிரண்டும் காமக்கொலை செய்துவிடும்!

மணம்பெறு கஸ்தூரி தன்கொம்பில் தான்கொண்டு
மயக்கிவிடும் மான்கூட்டம் எவரையுமே இங்கு!

மணம்கமழும் கொங்கைகளும் மயக்கிவிடும் எவரையுமே
அதில் விழுந்து முனைவோரை நாளுமே இங்கு!

பொன்மலையாய்த் தோற்றமுறும் பருமுலைகள் கண்டு
கண்பதித்துக் கை கவர்ந்துக் காமுறுவர் இங்கு!

கவிழ்த்துவைத்த கும்பம்போல் விளங்குமிரு முலைகளுமே
அவிழ்த்துவிடும் ஆசைகளை அதை அணைக்கத் துடிப்பவர்க்கே!

இப்படிப்பட்ட அழகிய தனங்களை உடையவராகிய
அழகிய பெண்களின்,

”குமுத அமுத இதழ் பருகி உருகி [மை]மயல்
கொண்டு உற்றிடும் நாயேன்”

அழகிய ஆம்பல் மலரை ஒத்த செவ்விதழ்களிலிருந்து
பெருகிவரும் நீரை அமுதம் எனப் புகழ்ந்து போற்றி

அதனைப்பருகிட ஆவல்கொண்டு காமமயக்கம் தலைக்கேற
மேலும் மேலும் அதனை நாடியேதிரியும் நாய்போன்ற எனது


”நிலையழி கவலைகள் கெட உனது அருள்விழி
நின்று உற்றிடவேதான்”


நிலையான தன்மையே கெடும்படியான
மனக்கவலைகள் வந்தென்னை வாட்டும்போது
அவையெல்லாம் அழியும்படியாக நினது
அருள்விழிப் பார்வையிலேயே நிலைக்கும்படியாகச்செய்து
அதுகாட்டும் வழியினிலே நிலைத்துச் செல்லும்படியான
உறுதியை எனக்கு அளிக்க அருள்புரியவும்


”நினது திருவடி மலர் இணை மனதினில் உற
நின் பற்று அடைவேனோ?”


உன்னுடைய அழகிய திருவடி மலர்கள்
இணையாக நின்று என் மனத்தாமரையில்
பொருந்தி நிற்கின்ற நின் அருளைப் பற்றிப் பெறுவேனோ?

[பெறுமாறு அருள் செய்வாய்! முருகா!]
******************

********* அருஞ்சொற்பொருள் *********

கரி = யானை
ம்ருகமத = கஸ்தூரி வாசனை
தனம் = முலை
கிரி = மலை
குமுதம் = செவ்வல்லி
சிலை = வில், உருவம்
நுதல் = நெற்றி, புருவம்
விடங்கர் = உளி படாத மூர்த்தி
கொடிஞ்சி = தேரின் கூம்பான மேல்பகுதி
*********************

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

******************

Read more...

Friday, March 20, 2009

"உந்தீ பற!" -- 35"உந்தீ பற!" -- 35


'பகவான் ரமணரின் திருவுந்தியார்'


[முந்தைய பதிவு]


"வாழ்த்து"
[திரு. முருகனார் எழுதியது]

[வழக்கம்போல், இந்தப் பாடல்களையும் பதம் பிரித்துத் தந்திருக்கிறேன். படித்தாலே எளிதாகப் புரியும் பாடல்கள் இவை. எனவே விளக்கம் தவிர்த்திருக்கிறேன். நன்றி.]


இருடிக ளெல்லா மிறைவனடியை

வருடி வணங்கின ருந்தீபற

வாழ்த்து முழங்கின ருந்தீபற. [1]


உற்றார்க் குறுதி யுபதேச வுந்தியார்

சொற்ற குருபர நுந்தீபற

சுமங்கள வேங்கடனுந்தீபற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பற்பன்னூ றாயிரம்

பல்லாண்டு பல்லாண்டு முந்தீபற

பார்மிசை வாழ்கவே யுந்தீபற. [3]


இசையெடுப் போருஞ் செவிமடுப் போரும்

வசையறத் தேர்வோரு முந்தீபற

வாழி பலவூழி யுந்தீபற. [4]


கற்கு மவர்களுங் கற்றுணர்ந் தாங்குத்தா

நிற்கு மவர்களு முந்தீபற

நீடூழி வாழியே யுந்தீபற. [5]


இருடிகள் எல்லாம் இறைவன் அடியை

வருடி வணங்கினர் உந்தீ பற

வாழ்த்து முழங்கினர் உந்தீ பற. [1]


உற்றார்க்கு உறுதி உபதேச உந்தியார்

சொற்ற [சொல்லிய] குருபரன் உந்தீ பற

சுமங்கள வேங்கடன் [பகவான் ரமணரின் இயற்பெயர்] உந்தீ பற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பல பன்னூறு ஆயிரம்

பல்லாண்டு பல்லாண்டும் உந்தீ பற

பார்மிசை வாழ்கவே உந்தீபற. [3]


இசையெடுப்போரும் செவிமடுப்போரும்

வசையறத் [குற்றமில்லாமல்] தேர்வோரும் உந்தீ பற

வாழி பல ஊழி உந்தீ பற. [4]


கற்கும் அவர்களும் கற்று உணர்ந்து ஆங்கு தா[ம்]

நிற்கும் அவர்களும் உந்தீ பற

நீடூழி வாழியே உந்தீ பற. [5]

******************************

“நிறைவுரை”

"அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை"'மாரியம்மன் தாலாட்டு' என்னும் தோத்திரப் பாடலில் மேற்கூறிய வரிகள் வரும்.

அதுதான் என் நிலையும்!


இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களை முறையாகப் பயின்றவன் அல்லேன் நான்! அப்படி இருந்தும், இதனை எழுதப் புகுந்தது குருவருளாலேயே !


தெய்வாதீனமாக ரமணரின் பாடல் தொகுப்பு எனக்குக் கிடைக்கப் பெற்றதும், அதில் இந்த குறிப்பிட்ட 'திருவுந்தியார்' என் மனதைத் தொட்டதும் அவனருளாலே!


விமானத்தில் சென்னை செல்லுகையில், இன்னும் சற்று ஆழ்ந்து படிக்க முறபட்டபோது, மனதில் பட்ட கருத்துகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில், எட்டு வரிக் கவிதைகளாக எழுத முற்பட்டேன். [அவையே ஒவ்வொரு பாடலுக்கு அடியிலும் இட்டிருக்கும் 8 வரிகள்!]


சென்னை சென்ற மறுநாளே நான் மிகவும் வணங்கும் இறையன்பரைச் சந்திக்க காண நேர்ந்தபோது, அவர் கூறிய பல கருத்துகள், இந்நூலில் சொல்லியதற்கான மேல்விளக்கம் போல அமைந்தது கண்டு நெகிழ்ந்து போனேன்.


திரும்பி வந்ததும் இதனை அப்படியே போடலாம் என நினைத்து, முதல் பதிவையும் இட்ட நிலையில், எனது நண்பர் ஒருவர் [மங்களூரைச் சேர்ந்தவர் இவர்!] என்னை அழைத்தார்.


அவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அது எனக்குப் பயன்படும் எனத் தான் நினைப்பதாகவும் கூறியதோடு அல்லாமல், அன்று மாலையே என் வீட்டிற்கு வந்து அதைத் தந்துவிட்டும் போனார்.


பகவான் ரமணர் எழுதிய 'உபதேச சாரா' என்னும் வடமொழி நூலின் ஆங்கில உரைவிளக்கம் அது! திரு. தேஜோமயானந்தா அவர்கள் எழுதியது! புரட்டிப் பார்த்தவுடன், முதல் இரு பாடல்களிலேயே புரிந்தது, இது 'உபதேச உந்தியாரின் வடமொழி ஆக்கம்' என!


என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!


குருவருள் தேடிவந்து, நான் எழுத நினைத்ததற்கு ஆசியும், வழிகாட்டலும் அளித்ததாக நம்புகிறேன். இதில் அவர் கருணையின்றி வேறேதும் இல்லை!


அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விளக்கம், கிட்டத்தட்ட நான் எழுதிவைத்திருந்த பாடல்களுடன் ஒத்திருந்தது இன்னொரு ஆச்சரியமான விஷயம்.


முழுத் தெம்புடன் எழுதி முடித்து, இங்கு பதிந்து முடிக்கும் இந்நேரத்தில்,.... சமயத்தில் வந்து அருளிய அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


"மலையளவு நூலறிவு இருப்பினும், கூடவே கடுகளவாவது பயிற்சியும் நிகழ்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்" என நான் வணங்கும் அந்த இறையன்பர் சொன்னதை இந்த நேரத்தில் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு,

இங்கு நான் எழுதியதில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பின், அவற்றுக்கு முழுப் பொறுப்பும் என் அறியாமையே காரணம் எனச் சொல்லி, அனைவரையும் வணங்கி இதனை இத்துடன் முடிக்கிறேன்.


அனைவர்க்கும் பகவான் ரமணரின் திருவருள் சித்திக்க வேண்டுகிறேன்.


நன்றி! வணக்கம்!


"நன்றாக குரு வாழ்க!"


**************************

Read more...

Thursday, March 19, 2009

"உந்தீ பற! “ -- 34

"உந்தீ பற! “ -- 34
‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’


யானற் றியல்வது தேரி னெதுவது
தானற் றவமென்றா னுந்தீபற
தானாம் ரமணேச னுந்தீபற. [30]

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் அற்ற தவம் என்றான் உந்தீ பற
தானாம் ரமணேசன் உந்தீ பற.


தானெனும் ஒன்றினைத் தானே உணர்ந்து
தானும் இல்லா உணர்வினை அடைந்து

எல்லையில்லாப் பெருமகிழ்வதனில்
தானும் ஒன்றாய் இரண்டறக் கலந்து

எல்லாம் எங்கும் எதுவும் இன்பம்
என்னும் நிலையினில் திளைக்கும்

அனுபவம் எதுவென உணர்ந்தவன் சொன்னான்
அவனே ரமணன் எனும் நிலை அறிக.


'திருவுந்தியாரின்' நிறைவுப் பாடலைப் பார்க்கும் முன், இதுவரை அறிந்ததைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போமா?

முதல் மூன்று பாடல்கள் கர்ம யோகம் என்றால் என்ன, அதனை எப்படிச் செய்தல் நலம் என விவரித்தது.

4 முதல் 9 வரையில் பக்தி யோகம் முறையாகப் பயில்வது எப்படி எனச் சொன்னார் பகவான்.

யோகம் செய்வதன் பலனை, பயனை பத்தாவது பாடல் விளக்கியது.

11 முதல் 16 வரையிலான பாடல்கள் அஷ்டாங்க யோகம் பற்றி விரித்துச் சொல்லின.


17 தொடங்கி 29 வரையிலும், ஞான யோகம், ஒரு முறையான பயிற்சியின் மூலம் எப்படி ஒரு தகுந்த குருவின் துணையால் தெளியவரும் என பாடல்களின் மூலம் தெளிவித்தார் பகவான்.


இந்த நிறைவுப் பாடலில், இந்த' சுய தேடல்' எவ்வளவு உயர்வான ஒன்று என்பதனை பகவான் ரமணர் சொல்கிறார்!

--------

இவ்வுலக இன்பங்களை நாம் அடைய வேண்டுமானால், அதற்காக நிறையச் செயல்கள் செய்தாக வேண்டும்.

அதிகப் பயன் வேண்டுமானால், அதிகம் முயற்சி செய்ய வேண்டும் என்பது கண்கூடு.

இதே அளவுகோலை வைத்துத்தான், நாமெல்லாம், பயந்து ஒதுங்குகிறோம்.... இந்தச் சுயதேடலைக் கண்டு!

நீடித்த இன்பம் தரவிருப்பதை அடைய, நீடித்த உழைப்பு தேவையாகிப் போகும் என!

நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவர் அடிக்கடி ஒன்று சொல்வார்! ....

"மலையளவு நூலறிவு வேண்டாம்! கடுகளவு பயிற்சி செய்தால் போதும்! உண்மை உனக்குக் கிட்டும்!"

தன்னைப் பற்றிய தவறான புரிதலே மேலும், மேலும் நம்முள் அறியாமையை வளர்த்து, ஆணவத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

எந்தச் செயலாலும் இந்த அறியாமையைப் போக்கவே முடியாது!

உண்மை இன்பம் வேண்டுமெனின், நமது இயல்பு எதுவெனச் சரியாக நாம் அறிய வேண்டும்.

இந்தச் 'சுய தேடலில்’ கிடைக்கும் அறிவு ஒரு பெரிய தவம் எனச் சொல்கிறார் ரமணர்.

'தவம்' என்றால் என்ன?

புராணங்களிலும், இதிஹாசங்களிலும் நாம் படித்த, கடுமையாக உடல் வருத்தி, முனிவர்கள் பல்லாண்டுகளாகச் செய்த ஒன்றா?

அரை நொடியில் அவர்களது தவமெல்லாம் ஆணவத்தால், அழிந்து போனதையும் படித்திருக்கிறோமே!

கடுமையான தவத்தால் இது கிட்டியது என்பதை மறந்து, ‘தான்’ எனும் நினைவில் இதையெல்லாம் தொலைத்த முனிவர்கள் பலர்!

அப்படியானால் அது ’தவம்’ அல்ல!

இந்தத் 'தவம்' உள்ளில் நிகழும் ஒன்று! உடல் வருந்தச் செய்யும் ஒன்றல்ல!

ஒருமித்த மனத்துடன், 'எது எனக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தருகிறது?' என்னும் கேள்விக்கு விடை தேடிச் செல்லும் இந்த உள்ளில் செய்யும் உடல் வருத்திச் செய்யும் தவத்தை விடவும் மிகவும் சிறந்தது!

”இதுவல்ல நான், இதுவல்ல நான்!” என ஒவ்வொன்றாக நம் சட்டைகள் உரியும்போது, நம் ஆணவம் நம்மை விட்டு விலகுகிறது. அறியாமை அகலுகிறது!

உள்ளொளி தெரியத் தொடங்குகிறது!

இதனை நன்கு உணர்ந்தவர் சொல்லும் போது, இதன் வலிமை நமக்குப் புரிய வருகிறது!

அவர்தாம் பகவான் ரமண மஹரிஷி!

தான் அறிந்த ஒளியை நமக்கெல்லாமும் தர அருள்கொண்டு, இந்த அற்புதமான பாடல் தொகுப்பை அளித்துப் பறக்க விட்டிருக்கிறார்!

எளிதில் படித்துப் பொருள் காணமுடியாத உபனிஷத்துகளின் சாரத்தை அழகு தமிழில் நமக்கெல்லாம் தந்து ஒளிவீசப் பறக்கச் செய்திருக்கிறார்!

அந்த மஹானின் பாத கமலங்களில் விழுந்து பணிந்து நமக்கும் இந்த உண்மை புரியச் செய்ய அவரை வேண்டி, நம் தேடலைத் தொடங்குவோம்!

இந்த 'திருவுந்தியாருக்கு' முகப்புப் பாடல்களை அளித்த திரு. முருகனார், நிறைவாகவும் சில பாடல்களை வைத்திருக்கிறார்!

அவற்றை நாளை பார்த்து, இதனை நிறைவு செய்யலாம்.

நன்றி வணக்கம்!


"எத்தனை எத்தனை மஹான்கள் உண்டோ, அத்தனை அருளாளருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!"

"உந்தீ பற! உந்தீ பற! உள்ளொளி ஒளிர்ந்திட உந்தீ பற!""
******************
[நாளை நிறைவுறும்!]

Read more...

"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!”

"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!”

நானுண்டு என் பதிவுண்டு என சமீப காலமாகத் தனித்திருந்தேன்..... கூட்டுப் புழு போல!

”வந்துன் வண்ணத்தைக் காட்டு!” என
என்னருமை நண்பர் கோவியார் விருதளித்துப் பெருமைப் படுத்தி இருக்கிறார். அவர்க்கு என் முதற்கண் நன்றி! என்னை இப்படி மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று! அதை நன்கே செய்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்!

சரி! என் பங்குக்கு ஏதோ சொல்லி வைக்கிறேன்!


பட்டாம்பூச்சி பறக்கிறது!
வண்ணச் சிறகை விரிக்கிறது!
இங்குமங்குமாய்த் திரிகிறது!
எதனை நமக்குச் சொல்கிறது?

சிறகடித்துப் பறக்கின்ற காலமிங்கு வரும்வரைக்கும்
பிறர்மனதைக் கவருகின்ற பட்டாம்பூச்சியின் வாழ்க்கையிங்கு
குறையிலாது வாழவேண்டின், வருங்காலம் வரும்வரையினில்
பொறுமையாகக் காத்திருத்தலின் அவசியத்தைச் சொல்கிறது!

உனக்கென விதித்தது உனக்கென நிகழும்!
அதுவரை பொறுக்க மனமுண்டா உனக்கு?

புழுவாய்ப் பிறந்து அல்லல் படுவாய்
வழியிலே மிதிபட்டு நீயும் சாவாய்
அதனையும் தாண்டி விடிவொன்று உண்டு
இதனை நடத்தும் இறைவன் அருளால்!

புழுவாய் ஊர்ந்தாய் சிலகாலம்
கிடைத்ததைத் தின்றாய் அப்போது
நாளை நிகழும் நிகழ்ச்சியை அன்றே
இறைவன் உணர்த்தினான் உன்னுள்ளே!

உன்னுள் நிகழ்ந்த சில மாற்றம்
உன்னை ஒளியச் செய்ததங்கு!
உன்னால் இனிமேல் எதுவுமில்லை
சும்மா இருப்பாய் என்றான் இறைவன்!

தன்செயல் இனிமேல் இல்லையென்று
தனக்குள் புரிந்த புழுவதுவும்
இலையினைப் பற்றி நின்றங்கோர்
கூட்டினைக் கட்டியே சுருங்கியது!

கூட்டுப் புழுவினுள் ஓர் அதிர்வு!
தன்னுடல் மாறும் விந்தையினைத்
தானே உணராத் தன்மையினை
இறைவன் பார்த்துச் சிரித்திருந்தான்!

விளைந்தது மாற்றம் புழுவினிலே!
வண்ணம் பிறந்தது உடலினிலே!
இறக்கை முளைத்து உடல் விரிய
கூட்டுப் புழுவும் மாறியதே!

முழுமை இதுவெனப் புரிந்தவுடன்
செழுமை உடலினில் ஏறியதும்
கூட்டினைத் தகர்த்துப் பட்டாம்பூச்சி
விட்டு விடுதலை ஆனதுவே!

கட்டுகள் இங்கே தகர்த்துவிட்டால்
விட்டு விடுதலை மிகச் சுகமே!
பட்டாம்பூச்சி நமக்குணர்த்தும்
பாடம் இதுவே! புரிந்திடுவீர்!

வந்தது எல்லாம் சொந்தமில்லை!
வருவது எதுவும் பந்தமில்லை!
தருபவன் ஒருவன் மேலிருக்கான்!
உறவது அவனே என்றுணர்வோம்!

பட்டாம் பூச்சியாய் வாழ்ந்திருப்போம்
கவலைகள் இன்றிக் களித்திருப்போம்!
வருவதை என்றும் வரவில் வைப்போம்!
சென்றதை மறந்து திரிந்திருப்போம்!

இன்னொரு செய்தியும் சொல்லிடுவேன்
நன்நெறி சொல்லிடும் செய்தியிது!
பட்டாம்பூச்சிகள் தேவதூதர்கள்!
நல்லதைச் சொல்லிடும் இறையின் ஏவல்கள்!

நாளை மாலை சோலை செல்கையில்
பட்டாம்பூச்சி பறக்கக் கண்டால்
மனதில் மகிழ்ச்சி கொண்டிடுவீர்
நல்லதே நடக்கும்! நம்பிடுவீர்!


இப்ப யாரையாவது கூப்பிடணுமாமே! யாரைக் கூப்பிடலாம்?

1. வலையுலகப் பட்டாம்பூச்சி
ஷைலஜா! இந்த மாதம் 18-ம் தேதியன்று மீண்டும் பிறந்தவர்!
இயல், இசை, நாடகம் என அனைத்திலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர்!

2. என்னருமை நண்பர்
சுல்தான்! துபாயில் பணியாற்றுபவர்! அடக்கம் என்பதன் மறுவுருவம்!
அமைதியாகப் பதிவுலகில் இருந்து,அவ்வப்போது எழுதி வருபவர்! இனியவர்!

3.
நிலாரசிகன்! கனவுலகக் கவிஞன்! கதைகளும் எழுதுவார்! பொருள் பொதிந்த வரிகளிலே
ஓராயிரம் செய்தி சொல்லி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்! கற்பனைவளம் மிக்கவர்! பொருத்தமானவர்!

இவர்கள் மூவரையும் அழைக்கிறேன், பட்டாம்பூச்சி பறக்கவிட!

வாய்ப்பளித்த
கோவியாருக்கு மீண்டும் நன்றி!!

பட்டாம் பூச்சியை எப்படி விடுதலை செய்யலாம் ?1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Read more...

Tuesday, March 17, 2009

"உந்தீ பற!" - 33

"உந்தீ பற!" - 33

'பகவான் ரமணரின் திருவுந்தியார்'

[முந்தைய பதிவு]

பந்தவீ டற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீபற
விறைபணி நிற்றலா முந்தீபற. [29]

பந்த வீடு அற்ற பரசுகம் உற்றவாறு
இந்த நிலை நிற்றல் உந்தீ பற
இறைபணி நிற்றலாம் உந்தீ பற.

கட்டுகள் விலகிட அறியாமை விலகும்
அறியாமை விலகிட கட்டுகள் அறுந்துபோம்

உள்ளொளி உணர்ந்திட பெருவெளி தெரியும்
வீடுபேறென்னும் ஓர்நிலை புரியும்

பேரானந்தம் எதுவென உணரும்
சீராளர் எம்மில் சிலரே உண்டு

இதனில் திளைப்பவர் அறியும் சுகமோ
அவரே அறிவார்! அவரை வணங்குவோம்!விடுதலை, முக்தி என்னும் ஒன்றை அடைந்தால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்; அதுவரையிலும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் எனும் ஒரு எண்ணம் நமக்குள் விதைக்கப் பட்டிருக்கிறது.


எனவே, நம் மரணத்திற்குப் பின்னரே இந்த மகிழ்ச்சி, அதாவது சொர்க்கம் என்னும் ஒன்றை அடைந்த பின்னரே, இதெல்லாம் நமக்குக் கிட்டும் எனவும் எண்ணுகிறோம்.

ஆனால், பகவான் ரமணரோ 'இந்த சந்தோஷம் என்பது இங்கேயே கிட்டும்; அப்படி அதை அடைந்தவர்களை அன்றாட வாழ்க்கையிலேயே நம்மால் காணமுடியும்! அவர்கள் வணங்கத் தக்கவர்கள் எனச் சொல்லுகிறார்'
இந்தப் பாடலில்!

விடுதலை என்றாலே சந்தோஷம் என்பதோடு மட்டுமே சம்பந்தப் படுத்தி மயங்குகிறோம் பொதுவாக நாமெல்லாரும்.
ஆனால், நம் இயல்பே மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே எனப் புரிய வரும்போது???

இந்த உலகில் அடையக் கூடிய எந்தப் பொருளினாலும் நீடித்த மகிழ்ச்சி நமக்குக் கிட்டுவதில்லை என முந்தைய பாடல்களில் பார்த்தோம்!
நிலைத்த நீடித்த மகிழ்வே உண்மையான மகிழ்ச்சி என முந்தைய பாடல்[28] சொன்னது.

அப்படியாயின், சாவுக்குப் பின்னரே மகிழ்வு கிட்டும் என எப்படி நம்புகிறோம்?

தன் இயல்பே மகிழ்ச்சி தான் என்னும் போது, இறந்தபின்னரா அதனைத் தேடுவது?

இந்த உலகில் இந்த உடலால் நமக்குக் கிடைத்த சொந்த பந்தங்கள் எல்லாமும் நிலையானவை என்னும் அறியாமை நீங்கும்போது, .... மனம் என்னும் ஒன்றே நம்மை இப்படி அலைக்கழித்தது எனப் புரிய வரும்போது, நிலையான மகிழ்வு என்பது எது எனப் புரிகிறது.

இப்படி எல்லாருக்கும் புரிகிறதா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும்.

இதுதான் எனக்கு விதித்தது என முடங்கிப் போகும் பலரையே நாம் பொதுவாகக் காண்கிறோம்.

இந்தநிலையை நமக்குத் தருவது இந்த உடல் மேல் நமக்கு இருக்கும் ஆசையும், அதைத் தொட்டு நம் மனம் நம்மை அலைக்கழிக்கும் நிலையுமே.

இதைப் புரிந்த ஒரு சிலர் இந்த நிம்மதி, சந்தோஷம் என்பது என்ன என ஆராயப் புகுந்து, இதன் விளைவாக ஒரு குருவின் துணையால் பயிற்சியில் ஈடுபட்டு தன்னை அறிந்து, தன்னை உணர்ந்து, தெளிவு பெறுகிறார்கள்.

இதன் விளைவாக, இருக்கும்போதே மகிழ்வாக இருப்பது எப்படி என்பதற்கு உதாரண புருஷர்களாக, நம் கண் முன்னே நடமாடுகிறார்கள்.

நான் பார்த்திருக்கிறேன்!

இவர்களைப் பார்த்தாலும், இவர்களுடன் பேசினாலும், இவர்களுடன் பழகினாலும், இவர்களைப் பற்றி நினைத்தாலுமே இவர்களது மகிழ்ச்சி அப்படியே நம்மைப் பற்றிக் கொள்ளும்!

அப்படிப்பட்ட மஹான்களை அவர்களது அருளால் மட்டுமே நாம் காண்கிறோம்.

இவர்கள் வணங்கத் தக்கவர்கள்!

இவர்களை எப்படி அடையாளம் காணுவது?

ஒரு நான்கு குணங்களின் மூலம் தெரிய வரும் எனப் பெரியவர்கள் சொல்கின்றனர்!

1. விவேகம்: நிஜத்துக்கும் , நிஜம் இல்லாதவற்றுக்கும் இடையிலான வேறுபாடை அறிந்திருப்பர்.

2. வைராக்யம்: இவ்வுலக, மேலுலக இன்பங்கள் எவற்றுக்கும் ஆசைப்படாத குணமுடையவர்கள்.

3. ஷட் ஸம்பத்தி: ஆறு வகையான செல்வங்களைப் பெற்றிருப்பர்.
[அ] ஸம= மனக்கட்டுப்பாடு
[ஆ] தம= புலன்களின் மீதான கட்டுப்பாடு
[இ] ஸ்ரத்தா= குருவின் மீதும், நன்னூல்களின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.
[ஈ] திதிக்ஷா = பொறுமை
[உ] உபரதி = வெளிப் பகட்டிலிருந்து விலகி நிற்பர்.
[ஊ] ஸமாதனா = எப்போதும் சமநிலையில் இருந்து தன்னில் ஆழ்ந்திருப்பர்.
4. முமுக்ஷுத்வம் = விடுதலையில் எப்போதும் நாட்டமுடையவராயிருப்பர்.

இத்தகைய பிறப்பு பல பிறவிகளில் அடைந்த புண்ணியத்தால் கிடைக்கவரும் ஒருவர், தக்க குருவின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது அருட்பார்வையினால், அறியாமை என்னும் மாயையில் இருந்து சட்டென விடுபடுகிறார்.
இதன் மூலம், பிறப்பு, இறப்பு என்னும் தளையிலிருந்து விடுபடுகிறார்.

சொல்லே சொல்லாகி சொல்லிழந்த சொல்லாத சுகமிதுதான்!

இப்படிப்பட்ட மஹான்கள் எப்போதும் வணங்கத் தக்கவர்!எளிமையான தவம் எது என்பதை அடுத்த பாடலில் சொல்லி பகவான் நிறைவு செய்கிறார்!

“எந்தரோ மஹானுபாவுலு! அந்தரிகு வந்தனமுலு!”
********************
[தொடரும்]

Read more...

Sunday, March 15, 2009

"உந்தீ பற!” - 32

"உந்தீ பற!” - 32

‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின்
னனாதி யனந்தசத் துந்தீபற
வகண்ட சிதானந்த முந்தீபற. [28]

தன் ஆதி இயல் யாது எனத் தான் தெரிகில் பின்
அனாதி அனந்த சத் உந்தீ பற
அகண்ட சிதானந்தம் உந்தீ பற.

‘நான்’ யார் எனத் தேடிடும் யோகியர்
’நானே நான்’ எனப் புரிந்திடும்போது

‘அழிவிலாத பிறப்பே இலாத
நிரந்தரமான அறிவுறும் இன்பமே’

‘நான்’ எனப் புரிந்திடும் யோகியர்
அனைத்தும் கடந்த அனாதி ஆனந்தம்

சத்தியமாக ஒளிர்ந்திடும் நிலையினில்
எல்லையில்லப் பேரானந்தத்தில் திளைப்பர்.


“தன் நிலை உணர்தல்”

இவ்வுலகில் பிறந்த அனைவரும் துன்பங்களில் இருந்து எப்படி விலகுவது என்னும் ஒன்றையே காலை முதல் மாலை வரையிலும் அன்றாடம் சிந்தித்து அதற்கெனவே பாடு படுகிறோம்.

ஆனால், நீடித்த இன்பம் என்னும் ஒன்று கைக்கெட்டாத தூரத்திலேயே எட்டிப் போகிறது என்பதே நாம் உணரும் உண்மை!

இது புரிந்தவர் தான் யார் எனச் சிந்திக்கத் தொடங்கி முறையான ஒரு குருவின் துணையால், பயிற்சியில் ஈடுபட்டு, இதுவரை சொன்னது போன்ற ஒரு நிலையை அடைகின்றனர்.

இந்த நிலையில் விளைவது ஒரு எல்லையில்லா ஆனந்தம்!

இது எப்படி என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

தான் விரும்பும் பொருளை அடைவதால் மகிழ்ச்சி வரும் என மனம் நம்மை அலைக்கழிக்க, அதனைத் தேடியே நம் வாழ்க்கை அமைகிறது.

ஒரு பொருள் கிட்டியதும் அல்லது கிட்டாமல் போகும்போதும் விளைகின்ற சந்தோஷம்/ஏமாற்றம் வெகு விரைவிலேயே நம்மை விட்டு விலகி அடுத்த பொருளின் மீது நம் கவனம் திரும்புகிறது.

இரண்டாம் பாடலில் சொன்னது போல, வினை மேலும் வினைகளைச் செய்யத் தூண்டி, நம்மை மேலும் வினைக்கடலில் ஆழ்த்துகிறது.

இதனால் விளையும் சுகமோ, துக்கமோ அதிக நாள் நீடிப்பதில்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

அப்படியானால், எப்போதும் சுகம் என்ற ஒன்றையே நம் மனம் நாடுகிறது; அதையொட்டியே நம் செயல்பாடுகளும் அமைகின்றன எனபதும் புரிய வரும்.

துக்கம் நாடாத நம் இயல்பு சுகம் என்னும் ஒன்றைத் தேடி அலைகிறது.

ஆனால், இவ்வுலகில் கிடைக்கும் சுகங்கள் நமக்கு நீடித்த மகிழ்வைக் கொடுப்பதில்லை என்பதும் புரிகிறது.

இந்த நீடித்த சுகம் என்ற ஒன்றைத் தேட விழையாமல், சுகம், துக்கம் என்ற இரண்டுக்குள்ளேயே நம் வாழ்வு பெரும்பாலும் அடங்கிப் போய் விடுகிறது....

புலன்களாலும், புத்தியாலும் கிடைக்கும் சுகம் நீடித்த இன்பத்தைத் தருவதில்லை எனப் புரியும் சிலர், இது எங்கே கிடைக்கும் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு தகுந்த குருவின் அருளால், முறையான பயிற்சியில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து, தான் யார் என்கிற அறிவு கிடைக்கப் பெறுகிறார்.

இந்த அறிவின் விளைவால் தெரியவரும் ஒளிவெள்ளத்தில் இதுவரை அதனை மூடியிருந்த அழுக்குகளெல்லாம் மறைந்து, தன்னை உணரும் நிலை கை கூடி வரும்.

இதுவரையிலும் தனது நிலையே இந்த மகிழ்வுதான் என்பது புரிய வரும் போது, இனிப்பான தானே ஏன் இனிப்பு எனக் கருதிய மற்ற பொருட்களின் மீது படிந்து இனிப்பை உணரச் செய்தது ஏனோ என்னும் தெளிவு பிறக்கிறது!

அறியாமை விலகும் போது இது தானாக நிகழ்கிறது!

இதுவே தன்னை உணருதல்!

எந்த ஒரு பொருளும் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை.

இனிப்பு இனிப்புதான், காரம் காரம் தான்! கசப்பு கசப்புதான்!

அதுபோல, ‘நான்’ என்பதும் நீடித்த நிலைத்த இன்பமே!

இதன் இயல்பு என்ன?

1. அவ்யயம்= அழிவற்றது, கெட்டுப் போகாதது.
2. அபவம்= பிறப்பு இறப்பு என்னும் விதிக்கு உட்படாதது.
3. ஆபூர்ணம்= காலம், நேரம், பொருள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. முழுமையானது. முடிவானது. எல்லையற்றது.
4. சித்= பரிபூரண அறிவு
5. சுகம்= முழுமையான உணர்வு அளிக்கும் பேரானந்தம். எதிலும் குறைவற்ற சுகம்.

இதுவே ‘நான்’!

நிலையில்லாத, அழிந்துபோகக் கூடிய பொருட்களினால் வரும் ஆனந்தம் தாற்காலிகமானது.
நிலைத்த, நீடித்த, அழிவில்லாத, முழுமையான அறிவினால் விளையும் உணர்வே தன்னை உணரச் செய்து, எல்லையில்லாப் பேரானந்தம்
கொடுக்கிறது எனப் பகவான் விளக்குகிறார்.


இந்தப் பேரானந்தம் மட்டுமே போதுமா?
இதுதான் விடுதலையா?

அடுத்த பாடல் இதற்கு விளக்கம் சொல்லும்!

குருவருள் அனைவர்க்கும் சித்திக்கட்டும்!
****************************
[தொடரும்]

Read more...

Thursday, March 12, 2009

”உந்தீ பற!” -- 31

”உந்தீ பற!” -- 31


’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

அறிவறி யாமையு மற்ற வறிவே
யறிவாகு முண்மையீ துந்தீபற
வறிவதற் கொன்றிலை யுந்தீபற. [27]

அறிவு அறியாமையும் அற்ற அறிவே
அறிவாகும் உண்மை ஈது உந்தீ பற
அறிவதற்கு ஒன்று இலை உந்தீபற.அறிவன யாவும் அறிவால் கூடும்
அறியாதனவோ பலப்பல ஆகும்


அறிவால் உணரும் அறிவினில் இன்னும்
அறியாதெதுவென அறிவது கடினம்


அறிவும் அறியாமையும் இரண்டும் கடந்த
ஒருநிலை நிட்டையில் கூடிடும் யோகியர்


தன்னை அறிந்திடும் பொருளிதுவென்றே
நிலைத்த அறிவினைத் தெளிந்தே உணர்வர்.


'தன்னிலை உணர்தல்' [Self realization]என்ற சொல்லைப் போலவே, இந்த' தன்னை அறிதல்' [self knowledge]என்ற சொல்லையும் சற்று விளக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பொருளைப் பற்றிய அறிவு புலன்களால்[senses] அறியப்பட்டு, நம் அறிவினால்[intellect] விளங்கிக் கொள்ளப் படுகிறது........ இது அம்மா, இது அப்பா, இது வீடு, எனப் பலவும்.

ஆனால், இவ்வுலகில் நாம் அறியாதன பல இருக்கின்றன.

ஔவை சொன்னது போல 'கற்றது கையளவு; கல்லாதது உலகளவு"!

அப்படித்தான் இந்த 'தன்னை அறிதலும்' நம்மால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.

இதுவரை நாம் அறியாத பல பொருட்களில் இதுவும் ஒன்று எனவும், மற்ற பொருட்களை அறிய முடிவது போல, இதனையும் அறிய முடியும் எனவும் நினைக்கிறோம்.

ஆனா, இது அப்படி அறியப்படும் ஒரு "பொருள்" அல்ல !

நமது புலனறிவுக்குக் கட்டுப்படாத, அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று இந்தத் 'தன்னை அறிதல்' என இதுவரையிலும் பார்த்தோம்.

அப்படியானால், இதனை எப்படி அறிவது என்பதை இப்பாடல் விளக்குகிறது.

சடப் பொருளால் எதனையும் உணர முடியாது என முன்பு பார்த்தோம். புலனறிவு என்பதும் ஒரு சடப் பொருளே எனவும் பார்த்தோம். உடல், உணர்வு, இவற்றால் விளையும் செயல்பாடே இது என முன்னொரு பாடல் விளக்கியது நினைவிருக்கலாம்.

அப்படியென்றால், சடப்பொருளான புலனறிவால் தன்னை அறிய முடியாது என்றாகிறதல்லவா?

புலனறிவால் விளையும் புத்தி ’இது என் மகன்’ எனக் காட்டுகிறது. ஆனால் ’அவனை எப்படிச் சமாளிப்பது?’ என்பது தெரியாமல் திகைக்கிறது! இது கணினி எனத் தெரியும்; ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாது; அப்படியே அதன் இயக்கம் புரிந்தாலும், அதில் ஒரு பிரச்சினை வந்தால் சமாளிப்பது எப்படி எனத் தெரியாது.

இப்படி அறிவும், அறியாமையும் சேர்ந்த ஒன்றே நாம் அறிவது!

"நிலைத்த அறிவு" எனச் சொல்லப்படும் "சித்" இவ்விரண்டுக்கும் ஒளியூட்டுவதால், இவ்விரண்டையும் விட வேறானது. இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டது.

தெளிந்தவர் எப்போதுமே தெளியப்படுவதிலிருந்து வேறுபட்டவர்தானே?

இதென்ன குழப்பம்? அப்படியானால், இந்த 'சித்' [Consciousness]என்பதுதான் 'நான்' என்பதை ஒளிரச் செய்கிறதா?

இல்லை!

இந்தத் தெளிந்த நிலையான அறிவு[Consciousness]தான் 'நான்' [self]!

இந்தத் தெளிவு பிறக்கும் போதே, 'நானும்' தெரிய வருகிறது.

'தன்னை அறிதல்' என்பது, 'நான் எனும் சித்தமே புத்தியை பிற பொருட்களை அறியச் செய்கிறது. தானே தெரியவரும் 'நான்', அறிவு, அறியாமை என்கின்ற இரண்டையுமே எனக்குத் தெரியச் செய்வதால், நான் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறேன் எனப் புரியவரும்.

இப்படிப் புரியும்போது, 'தன்னை அறிதல்' என்பது தானே நிகழ்ந்து, இது ஒன்றும் மற்ற பொருட்களைப் போல் அறியக்கூடியதல்ல என்கின்ற தெளிவும் பிறக்கிறது.

இதுவே இந்தப் பாடலில் ரமணர் வலியுறுத்துவது.

தன்னை அறிந்த பின்னால், அடுத்தது என்ன?
தன்னை உணர்வதுதானே!

நாளை பார்க்கலாம்!
*******************
[தொடரும்]

Read more...

Tuesday, March 10, 2009

"உந்தீ பற!” - 30

"உந்தீ பற!” - 30

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]


தானா யிருத்தலே தன்னை யறிதலாந்
தானிரண் டற்றதா லுந்தீபற
தன்மய நிட்டையீ துந்தீபற. [26]

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டு அற்றதால் உந்தீ பற
தன்மய நிட்டை யீது உந்தீ பற.

காணும் பொருளும் காண்பவன் தானும்
ஒருநிலை என்றே உணர்தல் கூடும்

இருநிலையில்லா ஒருநிலை அறிபவர்
காட்சிப் பொருளும் காணும் தானும்

ஒன்றே என்று உணர்தலில் திளைக்கும்
அந்நிலை அங்கே நிட்டை ஆகும்

அனைத்தும் தானாய்க் காண்பவர் உணரும்
தன்மயம் ஆதல் இதுவே காட்சி!


திடீரென ஒரு ஒளியைக் காணும் நிலை கூடி வரும் நிலையிலும், ஒரு யோகிக்கு ஒருவித மயக்கம் வரலாம்.

தெரியும் காட்சி, பார்க்கும் நான், எனப் பேதம் விளைக்கும் நிலையைத் தவிர்த்து,
காட்சியும் நானே! காண்பவனும் நானே ! இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்னும் ஒருநிலையில் ஆழ்வதே தன்மயமாதல் எனப்படும் யோக நிட்டை ஆகும்.

இந்த மயக்கம் எதனால் வருகிறது?

காண்பவன் 'நான்' எனும் ஒருவன்.

ஆனால் காணும் காட்சிகளோ பல!

நான் எப்படி அவைகளாக இருக்க முடியும்?

அப்படியென்றால், காண்பவன், காட்சிப் பொருள் என இரு நிலைகள் இருக்க வேண்டுமே?

இது பொதுவாக எவருக்குமே எழக்கூடிய நியாயமான கேள்வி.

யோக அறிவினால் ஒளிரும் நிலையைக் கண்டவர் இப்போது சிந்திக்கிறார்.

"நானே அனைத்துமாய் அனைத்துப் பொருட்களிலும் ஒளிரும், சத் - சித் என்னும் நிலை புரிந்தவர், இவ்வித மயக்கத்தில் இருந்து உடனே விடுபடுவார்.
காட்சி என்பதே தன் அறியாமை தன்னை விட்டு நீங்கியதால் விளைந்த ஒன்று எனப் புரிந்தவருக்கு இரண்டு நிலைகளுமே ஒன்றுதான் எனப் புரியவருகிறது.

ஒரு பணக்காரன் கனவில் தான் பிச்சை எடுப்பதாகக் கண்டு அதில் அல்லறும் காட்சிகளில் மனம் நொந்து வருந்துகிறான் .

திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்ததும் கண்டதெல்லாம் ஒரு கனவே எனப் புரிய வருகிறது.

எனவே அவன் இனி வரும் கனவுகளைப் பற்றிக் கவலைப் பட மாட்டான்.

அது போலத்தான், ஒரு யோகியும், காண்பவன், காட்சிப் பொருள் இரண்டும் தானே என அறிந்து, தன்மயமாகி, ஒரு யோக நிட்டையிலேயே இவர் ஆழ்ந்திருப்பார் என பகவான் அருளுகின்றார்.


குருவே துணை!
*****************

[தொடரும்]

Read more...

Saturday, March 07, 2009

”உந்தீ பற!” - 29

”உந்தீ பற!” - 29

”பகவான் ரமணரின் திருவுந்தியார்”

[முந்தைய பதிவு]

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்! [ஆனால், நீளமான பதிவுதான்!:)]

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:

1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!

2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.

3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.

4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.

5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.

6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.

8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].
அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

9. அன்னிய, அன[ன்]னிய பாவம் இரண்டும் இல்லாத சத்பாவத்தில், நானும் இறையும் ஒன்று என்னும் பாவத்தில் திளைத்திருத்தலே பரபத்தி தத்துவம் எனப்படும்.

10. கன்மத்தில் தொடங்கி, பக்தி வயப்பட்டு, யோகநிலையில் ஆழ்ந்து, எல்லாம் நானே என்னும் ஞானம் வருகின்ற பரபத்தி நிலையே யோகஞானம் என்பதாம்.

இந்த இடத்தில், ஒரு மேல்விளக்கமாக, பதஞ்சலி முனிவர் அருளிய 'அஷ்டாங்க யோகம்' என்பதன் நிலைகள் சொல்லப்படுகின்றன.
யமம், நியமம், ஆஸனம்,ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகள் ஒரு சாதகன் பயிலுவான்.

11. பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றினை அடக்கும் முறையை ஒரு குருவின் துணையால் முறையாகக் கற்ற சாதகன், வலையில் சிக்கும் பறவைகள் போல தன் மனத்தையும் இதன் மூலம் ஒடுக்குவான்.

12. சக்தி [இறை, இயற்கை] என்னும் மூலத்திலிருந்து பிரிகின்ற இரு கிளைகளாக, உள்ளத்தால் உணரப்படும் அறிவும், உயிர் எனப்படும் பிராணன் வழியாகச் செய்யப்படும் செயலும் விளங்குகின்றன.

13. மனத்தின் செயல்கள் இரண்டு. உணரப்பட்ட அறிவு, உணர்ச்சிகளினால் விளையும் செயல்பாடு. மூனது ஒடுங்கி [லயம்] மீண்டும் எழும். பின்னது அழிந்துபோகும் [நாசம்].... முறையான பயிற்சிகள் செய்யும் சாதகனுக்கு.

14. பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை முறையாகச் செய்வதன் மூல, உள்ளம் ஒடுங்கி, உள்ளில் இருக்கும் எண்ணங்கள் மறைந்து, உருவம் எதுவுமில்லா ஒரு ஒளி தெரிய வரும்.

15. இப்படிச் செய்யப்பட்ட பயிற்சியின் விளைவாக உள்ளில் இருக்கும் உரு அழிந்த யோகி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

16. எண்ணங்கள் எழுப்பும் மலை போன்ற எண்ண விகாரங்கள் அனைத்தையும் விலக்கி வைத்துப் பார்க்கத் துவங்கும் யோகிக்கு உண்மையின் காட்சி உள்லில் மலரத் துவங்குகிறது.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம் முதல் சமாதி வரை முறையான ஒரு குருவின் துணையுடன் பயிலும் சாதகன்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ண ஓட்டங்களை அமிழ்த்தி, உண்மைப் பொருளை உணரச் செய்து, இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால், செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி, இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே 'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் இப்போது காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

17. மனத்தை மறக்க, அதில் எழுகின்ற உணர்வுகளைத் தாங்கும் மனம் என்ற ஒன்றே இல்லை என உணரும் யோகி தெளிவு பெறுகிறார்.

18.அது எப்படி என்றால், மனம் என ஒன்று தனியாக இல்லை; நமக்குள் எழும் எண்ணங்களே மனம் என ஒன்றாக நான் உணருகிறேன் என்பதே என அறிய வருகிறார்.

19. இது ஒரு புத்தகம்.நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்.நான் உணர்கிறேன்.இந்த உணர்வு மனம் சார்ந்தது. எனவே, நான் என்பது, இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

20. 'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து உள்ளில் தேடி அதனை அழித்திட உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய் அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

21. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்கின்ற மனம் நான் இல்லை என அறிந்து ஞானத் தேடல் இன்னமும் அதிகமாகிறது. எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைத் தேய்த்தவுடன் ஒளி பெறுவது போல! இவ்வுலகில் எனது என நினைக்கும் எதுவுமே நான் இல்லை என்னும் தெளிவு வரும்போது, நான் தெரிய ஆரம்பிக்கிறது.

22. உடல், புலன்களால் வருவதெல்லாம் ’அசத்து’ என்னும் நிலையாத ஒன்றினைக் குறிக்கும். இது ‘சத்து’ என்கின்ற உண்மைப் பொருள் இல்லை.

23. நிலையான ‘சத்’தை அறியும் போது, ‘சித்’ என்னும் தெளிவு பிறக்கிறது. இவை இரண்டும் ஒன்றே என உணர்பவர் யோகிகள்!

24. அனைத்திலும் விரவியிருப்பது ஒன்றே என உணரும் போது அனைவரும் ஈசனே என்னும் தெளிவு பிறக்கிறது.

25. இந்த உணர்வினால், உடலால் வருகின்ற உபாதிகளைத் தொலைக்கும் யோகி இப்போது தானே ஈசன் என உணர்கிறார்! “நான் கடவுள்!” “அஹம் ப்ரஹ்மாஸ்மி!”விரிவான விளக்கங்களுக்கு பதிவுகளை மீண்டும் படித்துப் பார்க்கலாம். அல்லது, தகுந்த குருவின் அருளால் நிகழும்!
******************
“மானஸ பஜரே குரு சரணம்!”
[தொடரும்]

Read more...

Thursday, March 05, 2009

”உந்தீ பற!” -- 28

”உந்தீ பற!” -- 28

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வதா லுந்தீபற. [25]


தன்னை உபாதி விட்டு ஓர்வது தான்
ஈசன் தன்னை உணர்வதாம் உந்தீ பற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற.


இதுதான் ’நான்’ என இதுவரை எம்மை
ஆட்டிப்படைத்த பிடிப்புகள் தளர்ந்திட


உபாதை என்னும் காட்டுகள் அவிழ்ந்திட
தான் என யார் என புரிந்திடல் நிகழும்


தன்னை உணர்வதே 'நானைக்' காட்டிட
தானே ஈசன் என்பதும் விளங்கும்


'நான் கடவுள்' என்பதன் தரிசனம்
தானே நிகழ்வதும் தன்னால் புரியும்.


ஈசனும், ஜீவனும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்கள் எனச் சென்ற பாடலில் சொல்லியிருந்தார் ரமணர்.


தான் அலை என உணராத அறியாமையினால், அலைகள் ஆர்ப்பரித்து அடங்கி, மடங்கி, மீண்டும், மீண்டும் எழுகின்றன என்பதையும் பார்த்தோம்.


இந்த அறியாமையை விடுபவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கிறது.


இந்த 'அலை - கடல்- நீர்' உதாரணத்தைக் கூட ஒருவிதத் தயக்கத்துடனேயே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில், நம்மைப் போல் உணரும் தன்மை கொண்டவை அல்ல இவை.
அலைக்குத் தெரியாது தான் கடலின் ஒரு அங்கம் என.
கடலுக்குத் தெரியாது தானும் நீர் என்பதன் திரிபே என!


ஆனால், முறையான பயிற்சியினை மேற்கொண்டிருக்கும் சாதகனுக்கு [இப்போது யோகி எனும் நிலைக்கு உயர்ந்திருப்பவருக்கு] இது அப்படியே பொருந்தாது.


அலை அடங்குவதில்லை; கடல் ஓய்வதில்லை; நீர் விலகுவதில்லை.
ஆனால் மனிதனால் இதெல்லாமும் முடியும்!


அப்படியென்றால் என்ன செய்யணும் இவர்?


உடலால், மனத்தால் ஏற்படும் உபாதிகளை அறுத்தெறிவது என்றால், உடலை விட்டு விடுவதா? மனத்தை எப்படி அழிப்பது?


இதுபோன்ற கேள்விகள் நமக்கு எழலாம்.... எழும்!


இப்படித்தான் செய்யணும் என வேதாந்தம் சொல்லுவதே இல்லை.


உடலை அழிக்காதே! உடல் தான் நீ என்னும் அறியாமையை அழி!
மனத்தை அழிக்காதே! மனம் கொடுக்கின்ற போதையில் மயங்கித் திரியாதே!
இதுவே அறியாமையை அகற்றும் வழி!


இப்படிச் செய்கையில், இதுவரை நம்மைக் கட்டியிருந்த பந்தங்கள், சொந்தங்கள் எல்லாம் கட்டுத் தெறித்து ஓடும்!


தெளிந்த மனத்தில் ஈசன் மலர்வான்... ஒளியாக!


இது தானே, தன்னிச்சையாய் நிகழும்!


இதுவா... இந்த ஒளியா கடவுள்?


நானென்னவோ கடவுள் என்றால் கையில் வேலோடு அல்லது ஒரு புல்லாங்குழலோடு, முருகனாக, கண்ணனாக, இன்ன பிற தெய்வங்களாக நினைத்தேனே?
அந்த உரு எனக்குக் கிட்டாதா எனக் கேட்டால்... அதுவும் கிட்டும்..... இறையருளால்!


ஆனால், அப்படிக் கிடைக்கின்ற காட்சியை வைத்து, அதுதான் கடவுள் என மயங்காமல், 'நம்மிடம் இருக்கும் உண்மை நிலையத் தெரிந்து கொள்வதே ஆத்ம தரிசனம்.


அழியாத, எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் கலந்த, அறியாமை நீங்கிய அறிவின் தன்னிலைத் தெளிவே ஒளிமயமாக நம்முள் தெரியும் கடவுள்!


ஆம்! "நான் கடவுள்!"


"அஹம் ப்ரஹ்மாஸ்மி!"


இதை இன்னும் சற்று விரிவாக விளக்குகிறார் பகவான், அடுத்த பாடலில்!
திங்களன்று தொடரலாம்!
நாளை.... இதுவரை பார்த்ததின் ஒரு சிறிய விளக்கம்!


நன்றாக குரு வாழ்க!
***************************

[தொடரும்]

Read more...

Wednesday, March 04, 2009

”உந்தீ பற!” -- 27

”உந்தீ பற!” -- 27

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

இருக்கு மியற்கையா லீசசீ வர்க
ளொருபொரு ளேயாவ ருந்தீபற
வுபாதி யுணர்வே றுந்தீபற. [24]

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள்
ஒரு பொருளே ஆவர் உந்தீ பற
உபாதி உணர்வே வேறு உந்தீ பற.


ஈசனின் அருளால் உயிர்த்திடும் உயிர்கள்
உடலதன் மயக்கம் உணர்ந்திடும் போது

தனியென உணரும் நிலையிங்கு வரலாம்
தான் பிறர் எனவே மயக்கம் கொளலாம்

ஒருபொருள் அனைத்த்திலும் விரவியிருக்கும்
ஒருநிலை அறிந்திடின் மயக்கம் விலகும்

உணர்வின் உபாதி பிரித்தெமைக் காட்டும்
ஆயினும் இங்கே அனைவரும் ஈசரே.


நிலையான உண்மை தனியொரு நிலையில் தன்னைக் காட்டிக் கொளும்போது ஜீவன் ஆகிறது.
பொதுவில் தன்னைக் காட்டுகையில் இயற்கை/ஈசன் என ஆகிறது.

எட்டாவது பாடலில், தன்னையும், பரம்பொருளையும் பிரித்துப் பார்க்காமல் பக்தி செய்வது பற்றிச் சொல்லியிருக்கிறது.
எப்படி இரு நிலைகளுக்கிடையில், ஒற்றுமையும், அதே சமயம் வேறுபாடுகளும் இருக்க முடியும்?
இதனை இப்பாடல் விளக்கி சொல்கிறது.

தனித்தனியே இந்த உலக நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்யும் போது, ஜீவனுக்கும், ஈசனுக்கும் இடையே வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், உண்மை நிலையில் வைத்துப் பார்க்கும்போது இவை இரண்டுமே ஒன்றெனப் புரியத் துவங்கும்.

என்னதான் வலுவாக இருந்தலும், இந்த தூல உடம்புக்கு ஒரு முடிவு உண்டு. இப்படி, இந்த உடலுடன் சம்பந்தப்படும் ஜீவன், இதையே நிலையெனக் கருதி, இவ்வுடலால் கிடைக்கும் பயனை ஐம்புலன்களின் வழியே பெறத் தொடங்கி, சற்று ஆணவமும் அடைகிறது.

இயற்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல்,உலகியலோடு ஒன்ற இதற்குத் தெரியாமல், வேற்றுமைகள், ஒற்றுமைகள், பிரிவினைகள், விருப்பு வெறுப்புகள் எனப் பலவற்றாலும் அலைக்கழிக்கப்பட்டு அல்லலுறுகிறது ஜீவன்.
இதையும் தாண்டி ஒரு சில ஜீவன்கள் தம் அறிவைக் கொண்டு இதனுடன் ஒன்றும் போதும், இந்த உலகளாவிய பார்வையை அடைய முடியாமல் போகிறது.

இந்த இரு நிலைகளிலுமே, அழியக்கூடிய ஒன்றினோடு இணைத்துக் கொள்வதால் இவ்வளவுதான் முடிகிறது ஜீவனால்!

இயற்கையின்/ஈசனின் துணையுடனேதானே நாம் இயங்குகிறோம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் இவற்றைப் பெறுவது இந்த இயற்கையிடமிருந்தே!
இதை அதிகம் விளக்கத் தேவையிருக்காது என நினைக்கிறேன்.

இதன்படிப் பார்த்தால், இந்த முழுவுலகின் ஒரு துளியே தான் நாமெல்லாரும் என்பது புரியவரும்.

முன்னர் சொல்லியபடி, முழுமையான ஒரு சமுத்திரத்திலிருந்தே, அலைகள் எழும்பி, தவழ்ந்து பின்னர் மடங்குகின்றன.
ஒவ்வொரு அலைக்கும் ஒரு குறிப்பிட்ட வலு, வேகம் எல்லாம் இருந்தாலும், இந்த அலைகளின் ஆதார சுருதி சமுத்திரமே!

அப்படித்தான், நீர் என்கிற ஒன்று அனைத்துக்குமே ஆதாரமாகிறது.

இதுவே துளியாகிறது, அலையாகிறது, சமுத்திரமாகவும் ஆகிறது.
இதனையொட்டியே 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என வள்ளுவனும் பெருமை பாடிச் சென்றான்.

ஒவ்வொன்றின் தன்மையுடனும் இது சேர்கையில், துளி, அலை, கடல், சமுத்திரம் எனப் பல பெயர்களைப் பெற்றாலும், எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் இதன் ஆதாரம்.

இதுதான் ஜீவன், ஈசன்/இயற்கை என நிறுத்தப் படுகிறது.

அமெரிக்கத் தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட ஒபாமாவுக்கு இருந்தது மற்றவரைப் போலவே ஒரே ஓட்டுதான்!
தேர்தலில் பெற்ற வெற்றியின் விளைவாக, இப்போது அவர் அதிபர் ஆகிவிட்டார்!
ஒரு குடிமகனாக அரசால் ஆளப்பட்டவர், இப்போது அனைவரையும் ஆளும் அதிபர்!
இதுதான் தனியான ஒன்றுக்கும், பொதுவான் முழுமைக்கும் ஆன உதாரணம்!

ஆனால், அதிபருக்கோ...... அனைவரும் ஒன்றே!!!

இந்த நிலையில் கிடைப்பது..... இறைவனின் தரிசனம்!!
நாளை!

“தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே!”
**********************************

[தொடரும்]

Read more...

Tuesday, March 03, 2009

"நான் கடவுள்” என் பார்வையில்!!

"நான் கடவுள்” என் பார்வையில்!!
கதை அவரவர் பார்வையில் இப்போது அனைவருக்குமே தெரியும்!
அதைப் பற்றிப் பேசுவது இனி உசிதமல்ல.
பொதுவாக இது போன்ற படங்கள் அனைவரும் பார்க்கும் முன்னரே
எங்கள ஊருக்கு வந்துவிடும்!
எவரது பாதிப்பும் இல்லாமல், நான் ஒரு பதிவு போடுவது வழக்கம்.
இந்தமுறை அப்படியல்ல.
கோவியார் முதல் அனைவரும் அவரவர் பார்வையில் கதையை அலசியாச்சு.
இது என் பார்வை!

ஏழை,பணக்காரன் என இவ்வுலகில் உண்டு.
ஆண்டான்,அடிமை எனவும் உண்டு.
அனைவருக்கெனவும் ஒரு உலகம் அவரவர்க்கு உண்டு.
அதிலேயே வாழ்பவர்க்கு, இதுதான் இன்றைய வாழ்வில் எனக்கென
விதித்திருக்கிறது எனப் புரிந்தவர்க்கு, இதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல்
வாழ முடிகிறது.
அதை மீறி, எனக்கு ஏன் இதுவென நினைப்பவருக்கு, இருவழிகள் தெரிகின்றன.
எதிர்த்துக் கேட்பது.
இது இல்லாமல் போக வேண்டுவது.

இதில் மூன்று கதைகள்.

தனக்கு இதுவெனத் தெரியாமல், ஒரு வாழ்க்கையில் திணிக்கப்பட்ட ஒருவன்,
அகோரியாகி, பின், அவன் சம்மதத்தைக் கேட்காமலேயே, உலக வாழ்க்கையில் திணிக்கப் படுகிறான்.
நானே கடவுள் என உணர்ந்து, ஒரு கடவுள் என்ன தீர்வு கொடுப்பானோ, அதைத் தர எந்த ஒரு முடிவையும் எடுப்பவன் இவன்!

அவலமாகப் பிறந்த ஒரு நிகழ்வினாலேயே,துவண்டுவிடாமல், இதையே ஒரு மகிழ்வாக ஏற்றுக்கொண்டு, அவலத்தின் நடுவிலும், தமக்கென ஒரு மகிழ்வைப் பார்க்கும் வலுக்காட்டாயப் பிச்சைக்காரர்கள்!

அவலம் இதுதான் எனத் தெரிந்தும், இதுவா என் வாழ்க்கை? இதுதான் என்றால் இதிலிருந்து எனக்கு விடுதலை தா! .... அது என்ன முடிவாக இருந்தாலும் எனக்குச் சம்மதமே என முழுமனத்தோடு அடிபணியும் சிலர்.

இவர்களைச் சுற்றி இக்கதை பயணிக்கிறது.

எவர் தவறு, எவர் சரி என்பது கடவுளுக்குக் கிடையாது.
அவன் படைப்பில் அனைவருமே சரிதான்!

ஆனால், சரி என்கிற நிலையிலிருந்து, ‘ஆணவம்’ தலைக்கேற, அதிகமாக ஆசைப்படும் நிலைக்கு ஒருவன் தன் நிலை பிறழும்போது, அது கடவுளின் கண்ணைத் திறக்கிறது.

‘கடவுள்’ என்பவன் இங்கு நாம் எல்லாருமே!

ஆம்! நாம் ஒவ்வொருவருமே கடவுள் தாம்!
இதை உணர்பவர் சிலர்.
உணராமல், சாமிகளையும், சாமியார்களையும் தேடி அலைபவர் பலர்.

ஆனால், இக்கட்டு என நாம் நினைக்கும் ஒன்று நம்மைத் தாக்கும்போது, கடவுள் என நாம் நினைக்கும் எல்லாருமே செயலற்று, திக்கித்து விழிப்பதுதான் நாம் காணும் உண்மை.

இதுவே சரி, இதுவே போதுமென நினைப்பவருக்கு, வாழ்க்கை எப்படிப் போனாலும், அதுவே சரியாகிப் போகிறது.

அது தமிழகப் பிச்சையாயினும் சரி, மலையாளப் பிச்சையாயினும் சரிதான் இவர்களுக்கு.

இது வேண்டாம்! இதற்காகவா நான் பிறந்தேன்? அப்படிப் பிறந்திருந்தால், இதிலிருந்து விடுதலை கொடு எனக்கு என நினைப்பவர்கள், ஒரு கடவுளைத் தேடுகிறார்கள்.... தானே ஒரு கடவுள் தான் எனப் புரியாமலேயே.

இவர்கள் நினைத்திருந்தால், தெளிவாகச் சிந்தித்திருத்திருந்தால், தானும் கடவுளே என நினைத்திருந்தால், இவர்களே ஒரு முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தார்ப்பார்கள்.

ஆனால், வாழ்க்கையோ, வாழ்க்கையின் சூழலோ, அல்லது நடக்கும் கொடுமைகளோ, இவர்களைத் தானும் ஒரு கடவுளே என உணரவைக்க மறுக்கிறது; அல்லது அவகாசம் கொடுப்பதில்லை.

அப்போது, ஒரு கடவுள் என நினைத்து வணங்குபவரிடம் சென்று முறையிடுகிறார்கள்.

அப்படி இவர்கள் சென்று முறையிடும் அவன் தன்னை உணர்ந்தவனாய் இருந்தால், அதற்கு ஒரு வழி சொல்லுகிறான்.

அல்லது ஒரு வழியைக் காட்டுகிறான்.

அந்த வழியை நம்பிச் செல்லுபவர் ஒரு சிலரே!

அப்படிச் செல்லுகின்ற அந்த ஒரு சிலருக்கு, கடவுள் ஒரு வழி தந்து இந்த வாழ்க்கையில் இருந்து ஒரு நற்கதி அளித்து, முதலில், அவர்களை இதுவரையில் கொடுமைப் படுத்தியவர்களை அழித்துவிட்டுப் பின்னர், அவர்களைக் கரையேற்றுகிறான்.

இதுதான் “நான் கடவுள்”

தேடல் மிகவும் முக்கியம்.
தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கையின் முடிவும் இல்லை.

தன் விருப்பம் இல்லாமலேயே காசிக்கு அனுப்பப்பட்டு, ஒரு அகோரியாகத் தன் வாழ்க்கையை நடத்திய ஒருவன், மீண்டும் தன் விருப்பம் இல்லாமலேயே உலக வாழ்க்கைக்குத் திரும்பவும் வருகிறான்.

இதில் ஒட்ட முடியாமல் போய், பிரம்மத்திலேயே ஆழ்ந்து, அப்படி ஆழ்வதற்கு அவனுக்குக் கற்றுத் தரப்பட்ட ஒரு ஆழ்நிலை மயக்கத்திலேயே தன் வாழ்க்கையை அங்கும் தொடர்கிறான்.இதனை எவரையும் விடவும் நன்கு புரிந்த அவன் தாய், அவனுக்குத் தலை முழுகுகிறாள்.

அவனைச் சூழ்ந்த இந்த நிலையில், ஒரு பிச்சைக்காரக் கூட்டம்.
உடல் ஊனமுற்றவர்களை வைத்து ஒரு தொழில் செய்யும் தாண்டவன்.
அவனுக்குத் தேவையான பிச்சைக்காரர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் மூலம் தானும் பிழைக்கும் முருகன் போன்ற சிலர்!


தன்னால் கொண்டுவரப்பட்டவர்களைக் கண்டு தினம் தினம் சாகும் ஒரு ஏதும் செய்யவியலாக் குற்றவாளி இந்த முருகன். இவர்களுடன் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டு, அவர்களுக்குச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்கும் அறிவிலி இந்த முருகன்.

இந்தக் கூட்டத்தில், விதிவசத்தால்,வந்து சேரும் ஒரு குருட்டுப் பிச்சைக்கார இளம்பெண்.

இவர்களை வைத்துஇதுவரையில் ‘நேர்மையாக’ஒரு பிழைப்பை நடத்தும் தாண்டவன் இப்போது பேராசை வசப்பட்டு ஒரு பிழை செய்கிறான்.
பணத்துக்காக, தன்னிடம் இருப்பவர்களில் சிலரை வேறொரு மாநிலத்துக்கு விற்கிறான்.
பேராசை, மேலும் பேராசைப் படவைத்து, குழந்தைகளிடமிருந்து தொடங்கி, அதிகப் பணத்துக்காக, இப்போது, இந்தப் பெண்ணையும் விற்கிறான்.

முருகனுக்கு இதில் சம்மதமில்லை.
இந்தப் பெண்ணைக் காப்பாற்றவும் வக்கில்லை.
‘கடவுளிடம்’ அனுப்பி வைக்கிறான்.

ஆம! இதுவரையில், நடந்ததெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அவரவர் சந்தோஷத்தை அனுபவிப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கடவுளிடம் இப்போது இந்த வழக்கு வருகிறது.


‘கடவுள்” அநியாயம் செய்பவரைத் தண்டிக்கிறான். சம்ஹாரம் செய்கிறான்!

இந்தப் பெண் இப்போது இவன் முன்னே!
இதுதான் எனக்கு இந்தப் பிறவியில் நிலை என்றால் என்னைக் கடைத்தேற்று எனக் கதறுகிறாள்.

‘கடவுள்’ அவளை உடனேயே அழிக்கிறான்.

கடவுள் அவளை அழித்திருக்க வேண்டியதில்லை!
அவளே அதைச் செய்திருக்க முடியும்..... அவள் தான் யாரென
உணர்ந்திருந்தால்!
அப்படி அவளே அதைச் செய்யாத நிலையில்.... தன்னை அண்டினவரைக் காப்பதே கடவுளின் குணம்!

ஆம்! இங்கு கடவுள் அவளைக் காத்தான்!
அழித்ததாகச் சிலர் சொல்லலாம்.
ஆனால், இங்கு நிகழ்ந்தது ஒரு காத்தலே!

இந்தப் படத்தின் சிறப்பம்சம்.... ஒரு காட்சி கூடத் தேவையில்லாமல் எடுக்கப்பட்டதல்ல.
சண்டைக்காக, நகைச்சுவைக்காக, ஒரு சில ஊர்களில் ஓடணுமே என்பதற்காக, இத்தனைப் பாடல்கள் வேண்டுமே என்பதற்காக ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் கிடையவே கிடையாது.

நடித்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் மிகச் சிறப்பாகத் தத்தம் பங்கைச் செய்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம் எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அப்பழுக்கில்லாத ஒரு உயர்தரப் படம் இது.

இதை ஒரு படம் எனக் கூடச் சொல்ல மாட்டேன்.

உலகத்தரம் வாய்ந்த படம் தமிழில் வரவில்லையே என்பவரின் தாகத்தைத் தீர்க்கவென்றே எடுக்கப்பட்ட அற்புதமான திரைப்படம் இது!

பாலா இதன் மூலம் உலக அரங்கிற்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
அந்தச் சவாலை, அங்கு கொண்டு செல்ல, நாம் அனைவரும் இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழன் இந்தப் படத்தின் தரத்தை எந்தவொரு காழ்ப்புமில்லாமல் பார்த்து, இதனை உலகுக்கு ஒருமித்தமாகப் பறை சாற்ற வேண்டும்!

செய்வார்களா?
செய்ய வேண்டும்!

பாலா என்னும் இயக்குநருக்கு நாம் செய்யும் மரியாதை இதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more...

Monday, March 02, 2009

”உந்தீ பற!” -- 26

”உந்தீ பற!” -- 26

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

உள்ள துணர வுணர்வுவே றின்மையி
னுள்ள துணர்வாகு முந்தீபற
வுணர்வேநா மாயுள முந்தீபற. [23]

உள்ளது உணர உணர்வு வேறின்மையின்
உள்ளது உணர்வாகும் உந்தீ பற
உணர்வே நாமாய் உளம் உந்தீ பற.

இருப்பெனச் சொல்வது அழியாதொன்று
’சத்’தென அதுவும் நிலைத்து இருக்கும்


சத்தை அறிந்திடும் தெளிவு பிறந்தால்
'சித்' என அதையும் சொல்லுவர் பெரியோர்

சத்தும் சித்தும் ஒன்றெனத் தெளிந்து
ஒளிர்வது எதுவென உள்ளில் உணர்ந்து

நான் எனும் ஒன்றைத் தேடிடும் யோகியர்
அறிவதும் இதுவே என்பதை அறிக.

சென்ற பாடலின் விரிவான விளக்கம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கலாம்.

'ஆணவம்' என்பது மாயை எனில், நிலையான சத்தாக இருக்கும் தெளிவுநிலை சித் எனச் சொல்லப்படும்.

அப்படியென்றால், இந்தச் சித்தம் தான் 'சத்' எனச் சொல்லப்படுவதையே எனக்கு உணர்த்துகிறதோ? என.

'நான்' எனச் சொல்லப்படும் ஒன்றில், உடல், புலன்கள் இவற்றாலான ஈடுபாட்டை அழித்துவிட்டேன் என உணர்வது எப்படி?

உடல், புலன், மனம், புத்தி இவையெல்லாவற்றாலும் அறியாமை என்பதால் மறைக்கப்பட்ட ‘உண்மையான நான்’ களிம்பு நீக்கப்பட்ட செம்பு போல, இவையெல்லாம் அகலும்போது, தானாக ஒளிர்கிறது.

ஆம்!

தெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.

அப்படியானால், இந்தத் தெளிவுதானா ‘நான்’ என்னும் நிலையைக் காட்டுகிறது?

‘நான்’ எனபது தானாக ஒளிரும் ஒன்றென்றால், அதை இன்னொன்று ஒளிரச் செய்ய முடியுமோ?

ஒரு விளக்கின் ஒளியைக் கொண்டா சூரியனை உணர முடியும்?

அப்படியெனின், சூரியனா ஒரு விளக்கின் ஒளியைக் காட்டுகிறது?

இல்லை!

ஒளிக்கு இன்னொரு ஒளியின் துணை தேவையில்லை.

ஒளி ஒளிதான்!

நமது அனுபவத்தின் மூலமும், பயிற்சியினாலும் இதுவரையில் நாம் அறிந்தது.... ’நான் என்பது உண்மை’[I am] ’நான் என்பது உண்மை என்பதை நான் அறிவேன்’![I know I am]

இதன்படி பார்த்தால், இவை இரண்டுமே உண்மை என்பது புரியும்!

இரண்டுமே ஒன்றுதான்!
தெளிவான ”சித்”தும் ஒளியே! நிலையான ”சத்”தும் ஒன்றே!

இதை அறிவதே ”நான்!”

இந்த ‘நான்’ எப்படி இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகிறது?

நாளை பார்க்கலாம்!

“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!”
*********************
[தொடரும்]

Read more...

Sunday, March 01, 2009

”உந்தீ பற!” -- 25

”உந்தீ பற!” -- 25

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ்
சடமசத் தானதா லுந்தீபற
சத்தான நானல்ல வுந்தீபற. [22]


உடல் பொறி உள்ளம் உயிர் இருள் எல்லாம்
சடம் அசத்து ஆனதால் உந்தீ பற
சத்தான நான் அல்ல உந்தீ பற.

உடலென அமைவதும், பார்த்தல் கேட்டல்
ருசித்தல் நுகர்தல் தொடுதல் என்னும்

ஐவகை உணர்வும், பிராணன் என்னும்
உள்ளமும், உயிரும், தெளிதல் என்னும்

புத்தியும், அறியாமை என்னும் இருளும்
தன்னால் இயங்கும் பொருளிலை ஆதலின்

அசத்து என்னும் சடப்பொருளாகும்
‘நான்’எனும் நிலைத்த பொருளிவை அல்லவே.


“நான் யார்?” என்கின்ற ஆதாரக் கேள்விக்கான விடையைச் சொல்ல முனைகிறார் பகவான் ரமணர்.

இதற்கு முதல்படியாக, ‘நான்’ என நாமெல்லாம் நினைக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரித்துத் தெளியச் சொல்கிறார்.

நம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போது, முதலில் தான் இன்னார் என நம் பெயரைத் தான் பொதுவாகச் சொல்வோம்.

இது ஒரு வெறும் அடையாளம் மட்டுமே என உடனே புரியும்.

மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இந்த உடலைக் காட்டிக் கொள்ள நான் பயன்படுத்தும் ஒரு கருவி என்பதாலேயே, ‘இவர்களுக்குப் பிறந்தவன் நான், இன்ன பெயர் எனக்கு, எனக்கு இத்தனை வயதாகிறது நான் ஒரு ஆண்/பெண்’ என அடையாளமாகச் சொல்கிறோம்.

இந்த உடலா நான்?

சிறுவயது முதல் இன்றுவரை பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடலா நான் என ஆராய்ந்தால் இது இல்லை எனப் புரியவரும்.

அப்படியென்றால் ஒவ்வொருநிலையையும் கடந்து அழிந்தபோது, ‘நானும்’ அழிந்திருக்க வேண்டுமே! இந்த உடலையும் கடந்த ஒரு ‘நானாக’ நான் இருந்து வந்திருக்கிறேன் எனத் தெளிந்து, ‘நான்’ என்பது இந்த உடல் அல்ல எனும் தெளிவு பிறக்கிறது.

அடுத்து, இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆன ஒன்று. எனவே, இது தானாகச் செயல்படும் திறன் கொண்டதல்ல என்பது புரியவரும்.சடப்பொருள்களான இந்த ஐந்தும், தன்னையும் பிறரையும் அறியும் திறன் கொண்டவை அல்ல. ஆனால், எனக்கோ பொருட்களை இன்னதென்றும், என்னிலிருந்து வேறுபடுத்தியும் அறிய/உணர முடிகிறது. ’நான் தட்டிக்கொண்டிருக்கும் கணினி நான் அல்ல’ என்பது எனக்குத் தெரிகிறது.

ஆனால், இந்த உடல் நானல்ல என்பதை உணரத் தவறுவதாலேயே, நாம் பலவிதத் துன்பங்களுக்கு உள்ளாகிறோம்.

ஐம்புலன்களால் நாம் உணரும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் இவையெல்லாமும் கூட நம்மை சலனப்படுத்துகிறது. பிராணன் எனச் சொல்லப்படும் மூச்சுக்காற்று, புத்தி என்கின்ற தெளிந்த அறிவு, அறியாமை என்கின்ற அஞ்ஞானம் இவையெல்லாமும் கூட இதேவகையில்தான்.

பார்க்கவேண்டியது கண்ணின் தொழில். அது அதனைச் செய்யாதபோது, ‘நான் ஒரு குருடன்’ எனச் சொல்கிறேன். பசியும் தாகமும் உயிரின் தொழில். ‘எனக்குப் பசிக்கிறது’ என அதைச் சொல்கிறேன். ஒரு மருத்துவருக்கு வேண்டிய படிப்பைப் படித்தவுடன் ‘நான் ஒரு வைத்தியன்’ என்கிறேன். அப்படியானால், அதற்கு முன் நான் யாராக இருந்தேன்? அப்போதும் இந்த ‘நான்’ இருந்ததே! அதையும் உடனே இந்த ‘நானுடன்’ தொடர்பு படுத்தி, ‘மருத்துவ அறிவு இல்லாதவனாக இருந்தேன்’ எனச் சொல்கிறேன்.

இப்படி ஒரே சமயத்தில், ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, மருத்துவனாக, எதுவுமே அறியாதவனாக என்னால் இருக்க முடியுமா? அப்படி உணர்வதன் காரணம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெவ்வேறாக உணர்வதே இதன் காரணம்.

ஒரே சமயத்தில் ஒருவனே அரசனாகவும், மந்திரியாகவும், பிச்சைக்காரனாகவும் இருக்க முடியாது.

ஆனால், ஒரு நடிகன் பல்வேறு சமயங்களில் இதுபோன்ற பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியும்.
நடித்து முடிந்ததும் தன் இயல்பு நிலை என்னவென அறிந்து அதனில் தானாகத் திரும்பவும் அவனால் முடியும்.

இப்படி, பல்வேறு நிலைகளில் இருந்தாலும், தனது இயல்பு நிலை என்ன என அறிந்தவன் சலனமின்றி இருப்பான்.

தனது இந்த உடல், ஐம்புலன்கள், உயிர், தெளிவு, அறியாமை இவையெல்லாம் தனக்குத் தெரிந்திருப்பதால் இவையெல்லாம் நிலையில்லாச் சடப் பொருட்கள், இவற்றின் இயக்கம் இதனையும் தாண்டிய ஒன்றால் நிகழ்கிறது எனத் தெளிவு பெற்று அதனைத் தேட முயற்சி செய்கிறான்.

அப்படியென்றால், இந்த ‘நான் எனும் ஆணவம்’ எங்கிருந்து பிறக்கிறது?

உள்ளிருக்கும் நிலையான ஒன்று என நான் நினைக்கும் ஒன்று, மேற்கூறிய ஏதோ ஒன்றுடன் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போது இந்த ஆணவம் பிறக்கிறது.

அதாவது, நிலையான ‘நான்’ என நான் நினைக்கும் ஒன்று, நிலையற்ற சடப்பொருட்களான உடல், ஐம்புலன்கள், பிராணன், புத்தி, அறியாமை என்கிற எவற்றுடனாவது இணையும் போது ‘ஆணவம்’ பிறக்கிறது. [இங்கு சொல்லப்படும் ஆணவம், வேதாந்தத்தில் சொல்லப்படுகின்ற ஆணவம் என முன்னரே சொன்னதை நினைவு கூறவும்!]

இப்போது இன்னொரு கேள்வி உடனே எழுகிறது.

அதெப்படி நிலையான ஒன்றையும், நிலையில்லாத ஒன்றையும் இணைக்க முடியும்?

இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?

இப்படி நிகழமுடியாத ஒரு நிகழ்விலிருந்து பிறக்கும் விளைவே ‘ஆணவம்’ என்பது சற்றுக் குழப்பமாக இருக்கிறதல்லவா?

ரமணர் பதில் சொல்கிறார்!

‘உண்மை’ அறிவு இல்லாத நிலையிலேயே இது சாத்தியமாகும்.
ஒரு கயிற்றைப் பாம்பு என எண்ணிப் பயப்படும்போது, கயிறு பற்றிய நம் அறியாமையே இதற்குக் காரணமாகிப் போகிறது!

இது ஒரு மாயத் தோற்றமே![illusion]

‘உண்மையான நான்’ பற்றிய தெளிவு இல்லாதபோது, நாமாக நினைத்துக் கொண்டிருக்கும் ‘நான்’ ஏற்படுத்துகிற மாயமே ’ஆணவம்’ பிறக்கக் காரணமாகிறது.

‘அசத்து’ எனச் சொல்லப்படும் நிலையில்லாத, தானாக இயங்கமுடியாத பொருட்களை ‘நான்’ என நம்பும் அறியாமையத் தொலைத்து, ‘உண்மையான நான்’ எது எனத் தெளிய முற்படுவதே ‘ஆணவம்’ அழிக்கச் சிறந்த வழி என்கிறார்.

இந்தத் தொடரின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட வழிகளின் மூலம், ஒரு தெளிந்த, தூய்மையான மனத்தின் உதவியால், தக்கதொரு குருவின் துணை கொண்டு, தொடர்ந்த பயிற்சியின் மூலமே இதனை அறிய முடியும்.

நிலையான இதனை அறிவது எங்ஙனம்?
நாளை பார்க்கலாம்!


“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்”
****************************************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP