Sunday, February 24, 2008

"அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"

"அ.அ. திருப்புகழ்" 25 -- "செகமாயையுற்று"



இந்த வாரம் சுவாமிமலைத் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் போடலாம் என் எண்ணி புரட்டினேன். இந்தப் பாடல் கண்ணில் பட்டது. இதன் பொருள் என்னை ஒரு தனிப்பட்ட முறையில் கவர்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத என் தோழி ஒருவருக்கு சென்ற ஆண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை" எனும் பதிகத்தை தினந்தோறும் ஓதுமாறு ஆலோசனை சொல்லியிருந்தேன். இவர் ஒரு சில உடற்கோளாறுகளால் கருத்தரிக்க இயலாத நிலையில் இருந்தார். செயற்கை விந்துப் பரிமாற்றம் கூட இருமுறை பயனளிக்காமல் போயிற்று. நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம். முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை என் தோழிக்குக் காணிக்கையாக்கி நல்ல முறையில் பிரசவம் நடந்தேற வேண்டி இங்கு அளிக்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!


********** பாடல் ***********

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்


தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி


மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி


மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா


தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே


தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!
************************************************************


********* பொருள் *********
[பின் பார்த்து முன்!!]

"முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா"
["முகமாயம் இட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா"]

அழகினுக்கு ஒரு முகமென்றால் அது
கிழவனுக்கும் பழிப்பு காட்டிய முகமொன்றே!
வேடனாய் வந்தவனைப் பார்த்து ஒதுக்கியவள்
விருத்தனாய் வந்தவன் ஆனையை அழைத்திடினும்
வேலனை மனத்தினின்று விடாது நின்றவள்
தினைப்புனத்தைக் காக்கையிலும் திறனாக நின்றவள்
முகவழகு விஞ்சிய வள்ளிக் குறமாதிவள்!
கொண்டவொரு தவத்தினை விடாது கொண்டவள்
வடிவழகில் மயங்கிய வேலனும் மனமகிழ்ந்தான்
குறமாதின் தனங்களிலே தஞ்சம் அடைந்தான்!
யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு
அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!

"முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா"
[முதுமா மறைக்குள் ஒரு மாபொருட்கு
உள்மொழியே உரைத்த குருநாதா]


முன்னைப் பழைமக்கும் பழைமையான
எல்லாச் சிறப்பும் பொருந்தியதான
வேதமுரைக்கும் பல்வேறு பொருட்களுக்கும்
முந்தையப் பொருளான பிரணவத்தின்
உட்பொருளைத் தந்தைக்கே குருவாகி
எம்பிரான் வாய்புதைத்து கைகட்டி நிற்க
அரும்பொருள் அருளிய குருநாதா!


"தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே"
[தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே]


கோபுரத்தின் மீதிருந்து குதித்திட்ட அருணையாரை
தன்கைமீது தாங்கிவந்து உயிர்காத்து அருள்செய்து
'சொல்லற சும்மாயிரு'என உபதேசம் செய்தது அருணையிலே!
அருட்காட்சி தந்ததுவோ மயிலாடும் விராலிமலையில்!
தடையேதுமில்லாமல் நினது அருட்பாதம் தந்து
அன்புடனே உய்வித்ததுவோ ஏரகத்தில்!
தந்தைக்கு உபதேசித்த திருத்தலமாம் சுவாமிமலையில்
தனியாக அமர்ந்திருந்து அருள்சுரக்கும் முருகோனே!

"தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே"
[தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே]

என்றும் வற்றாது நீர் வழங்கும்
செல்லுமிடமெல்லாம் மரங்களை வளர்த்துவரும்
விரிவான கரையெடுத்து விரைவாக வருவதினால்
கா விரி 'காவிரி' எனும் தனித்தமிழ் பெயர்பெற்ற
ஆற்றின் வடகரையில் விளங்கியிருக்கும்
சுவாமிமலை எனும் திருத்தலத்தில் இருந்து
சூரனுடன் போர் முடிக்க திருவுளம் கொண்டு
சக்திவேல் ஆயுதம் எடுத்த பெருமைக்குரியவனே!


"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்"
[செகமாயை உற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி]


உலகமாயையெனும் ஆளுகையில் அகப்பட்டு
காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில்
ஆசை மனைவிக்கு நான் அளித்த
கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து


"தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி"
[தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி]


பத்துத் திங்கள் முடியும் போது
முத்துப் பிள்ளையாய் அழகுடனே
நித்திலமாம் இப்பூவுலகில் நன்கு
ஒரு உருவாய் நீ வந்து
அழகுடன் நீ தோன்றி


"மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி"
[மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி]


என் மகவு என்கின்ற ஆவல்
என்னுள் உந்திவர ஆசையுடன்
உனை உச்சி மோந்து
அன்புடன் கண்களில் ஒற்றியும்
ஆசை மிகவேறி அப்படியே அள்ளிக்கொண்டு
முகத்தோடு முகம் சேர்த்து மகிழ்ந்தும்
என் திரண்ட புயங்களில் நீ உறவுகொண்டும்


"மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்"
[மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்]


என் மடி மேல் அமர்நது
என்னுடன் மிகவுமே விளையாடி
நாள்தோறும் நின்றன் மணிவாயினால்
எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!
**************************************************


"சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ என் மகனாய் வந்து எனக்கொரு முத்தம் தர வேண்டும்!"
****************************************************************************************************

அருஞ்சொற்பொருள்::

தெச மாதம் = பத்து மாதம்
திரமாய் = திரம் ஆய் = நன்றாக
ஆநநம் = முகத்தோடு முகம்
முக மாயம் இட்ட = முக அழகு மிகவும் படைத்த
நீதா = நீதிபதி
முது மா மறை = பழைமையான வேதம்
ஒரு பொருட்கு உள் மொழி = எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமான பிரணவம்
தகையாது = தடை எதுவும் இல்லாமல்
ஏரகம் = சுவாமிமலை
பாரிசம் = புறம், பக்கம்
சமர் = போர்
***************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
*****************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP