Monday, May 28, 2007

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

"நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு வந்தா, கன்னாபின்னான்னு சொல்றார் அப்படீன்னு போன அதிகாரத்தைப் படிச்சவங்க சொன்னாங்க" என்ற பீடிகையுடன் மன்னாரைச் சீண்டினேன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே! அவரு ஸொன்னதை அப்பிடியே ஸொன்னேன். அவ்ளோதான். நா இன்னா செய்யமுடியும்? ஆனா, அதுக்காவ, ஐயனைக் கொறை சொல்லாதே! உள்ளதை உள்ளபடியே சொல்லணும்னாலும் அதையும் சொல்லுவாரு அவரு. இப்போ அது மாரி, ஒரு அதிகாரம் ஸொல்றேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஒரு பொண்ணோட மனஸு இன்னா பாடு படும்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு ஐயன்! ம்... எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கான அவன் விளக்கமும்!


"அதிகாரம் -- 123" "பொழுது கண்டு இரங்கல்"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்


வேலைநீ வாழி பொழுது. [1221]


"பொளுதெல்லாம் நல்லாத்தான் போகுது. காலைல எளுந்துரிச்சதும், பரபரன்னு வேலை செஞ்சு, அவருக்கு ட்ரெஸ்ஸு எடுத்து வெச்சு, நாஷ்டா பண்ணிப் போட்டு, மத்தியானத்துக்கு சோறு கட்டிக் கொடுத்து, அவரை அனுப்பி வெச்சதுக்கு அப்பொறம், வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு, சாப்ட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, சாயங்காலம் ஆச்சுன்னா, மொகம் களுவி, பொட்டு வெச்சு, பூ வெச்சு, சீவி சிங்காரிச்சுகிட்டு, அவரு வர்ற வளியையே பாத்துகிட்டு நிக்கறப்ப ஒரு தவிப்பு வருதே, அது என் உசிரையே குடிக்கற மாரி இருக்குது.

அதே மாரி, அவனுக்கும், வேலையெல்லாம் முடிச்சிட்டு, எப்போடா பொண்டாட்டியைப் போய் பார்ப்போம்னு துடிப்பான்.

இப்பிடி ரெண்டு பேரையும் இந்தப் பாடு படுத்தற மாலைப்பொளுதே! நீ நல்லா இரு கண்ணு! ஒனக்கு புண்ணியாமாப் போவட்டும்! ஏன் எங்க உசுரை இப்பிடி வாங்கறே நீ?"

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. [1222]

"இன்னும் கோவம் தீரலை இந்தப் பொண்ணுக்கு! இந்தப் பாட்டிலியும் தொடர்ந்து திட்டறா!"

" ஏ மங்கிப் போன மாலைக்காலமே! நீ நல்லா இருடி அம்மா! ஆமா, ஏன் நீ இப்பிடி மங்கிப் போயிருக்கே! பகல்லே எல்லாம் பளபளன்னு இருந்தே! இப்ப 'டல்'லாயிட்டியே! ஒன்னோட ஆளும் எங்காளைப் போல நெஞ்சில ஈரமில்லாத ஆளா? இன்னும் வரலியா? அதான் சாயம் போயி மங்க ஆரம்பிச்சிட்டியோ?"

எனக் கிண்டல் செய்யறா!


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துளிஅரும்பித்

துன்பம் வளர வரும். [1223]

"இன்னும் அவர் வரலை. நான் இங்க வாசல்லியே நிக்கறேன். வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமா நடுங்கிக்கிட்டே ஒளியறமாரி மங்குது.
இது மங்க மங்க, துளித்துளியா என்னோட மனக்கவலை அதிகமாயிட்டே வளருதே!"

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். [1224]

இந்த சாயங்காலப் பொளுது இன்னா மாரி இருக்குன்னு சொல்லுது அந்தப் பொண்ணு இந்தக் குறள்ல. கேட்டுக்கோ!

"6 மணி ஆச்சுது. இந்தப் பொண்ணு நல்லா சிங்காரிச்சுகிட்டு வாசக் கதவாண்டை நிக்குது.
வெய்யிலு சுளீருன்னு அடிக்குது. லேஸா வேர்க்குது. கர்ச்சீப்பை எடுத்து அப்பப்ப துடைச்சுக்குது.
இன்னும் அவரு வரலை.
வெய்யில் கம்மியாகி, மெதுவா இருட்டு பரவ ஆரம்பிக்குது.
இப்பிடி, வெய்யில் கொறைஞ்சு, இருட்டு வர்றது எப்பிடி இருக்குதுன்னா,

தூக்கு தண்டனை இடத்துல கைதி நிக்கறான்.
கொஞ்சங்கொஞ்சமா, தூரத்துல இருந்து அந்த தண்டனையை நிறைவேத்தற ஆளு வர்றப்போ எப்பிடி இருக்குமோ, .....அப்பிடி இருக்குதாம்!"

காலைக்குச் செய்ந்நன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. [1225]

"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். [1226]

"அவரு என்னோட இருந்த வரைக்கும், என்னை விட்டுப் பிரியாம இருந்த வரைக்கும், இந்த சாயங்காலம் அப்படீங்கற ஒண்ணு இம்மாம் தொல்லை பண்ணும்னு எனக்குத் தெரியாமப் போச்சு.
அதே, அவரு இல்லாம இருக்கறப்போ, அல்லாம் புரியுது! "


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். [1227]


மொதப்பாட்டுல சொன்னதையே திரும்பவும் வேற விதமா சொல்லிக் காட்டறாரு இதுல.
"காலைல அவரு கிளம்பிப் போனதுக்கப்புறம், கொஞ்சங்கொஞ்சமா அரும்பு விட்டு, ஆரம்பிச்சு, பகல் பொளுதெல்லாம் வளர்ந்து, சாயங்காலம் ஆச்சுன்னா முளுசா மலர்ந்து என்னை வாட்டுதே இந்த துன்பம்!"


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. [1228]


இப்ப கொஞ்சம் கற்பனை கலந்து சொல்றாரு ஐயன்!
கிராமத்துல இருக்கறவங்களுக்கு, இல்லாட்டி, அங்கே இருந்தவங்களுக்கு இது நல்லாவே புரியும்.


" மாலை நேரம்!
இந்தப் பொண்ணு காத்துகிட்டு நிக்குது.
இன்னும் அவன் வரலை.
அப்போ, தூரத்துல இருந்து ஒரு புல்லாங்குழல் சத்தம் கேக்குது.
மேய்ச்சலுக்குப் போன மாடுங்கல்லாம் வூட்டுக்கு திரும்பற நேரம்.
மாடுங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கறதுக்காவ, மாட்டுக்காரன் புல்லாங்குழலை எடுத்து ஊதறான்.
இது இந்தப் பொண்ணு காதுல விளுது.
ஆஹா! நேரம் ஆயிப்போச்சே! இந்த மாலை அப்படீங்கற கெட்ட பொளுது வர்றதுக்கு தூது சொல்ற மாரி இது இருக்கே" ன்னு ஏங்குது இது.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. [1229]

இப்போ அந்தப் பொண்ணோட கோபம் ஜாஸ்தியாவுது.
வர்ற கோபத்துல, அல்லாருக்கும் சாபம் கொடுக்க ஆரம்பிக்குது! எதுக்காவ?


இந்தப் பொண்ணு சாயந்தரமா வூட்டுக்காரனுக்காவ காத்துகினு நிக்குது.
அவனோ வந்தபாடில்லை இன்னும்!
சாரிசாரியா ஜனங்கல்லாம் அவங்கவங்க வூட்டுக்கு வந்து சேர்றாங்க.

ஒடனே, அந்தந்த வூட்டுக்காரிங்களும் அவங்களுக்கு வக்கணையா சோறாக்கி போடறாங்க!
சிலபேரு வயிறு முக்க துண்றாங்க
இன்னும் சில பேரு சோறு துண்றதுக்கு முந்தி கொஞ்சம் தண்ணி அடிக்கறாங்க.

இது ஒரு கண்ணால அத்தினியையும் பாத்துகினே கீது.

வெய்யில் தீந்து போயி, வெளிச்சம் மங்குது இப்ப.

இவனும் வந்த பாடில்லை.
ஆத்திரமும், துக்கமும் பொத்துகிட்டு வருது இதுக்கு.

"இங்கே நா காஞ்சு கருவாடா நிக்கறேன், அவரு இன்னமும் வரலியேன்னு; இவனுக இன்னாடான்னா தின்னுபுட்டு, குடிச்சுகிட்டு குஷாலா ஆட்டம் போட்டுக்கினு கீறாங்க.

நா எப்பிடி இங்கே அவரைக் காணாம தும்பப்பட்டுக் கீறேனோ, அதேமாரி, இவனுகளும் துண்ணது செரிக்காம, குடிச்சது தலைக்கேறி தும்பப்படட்டும்னு ஒரு சாபம் கொடுக்கறா!"
" என் புத்தியே மயங்கிப் போற மாரி வருது இந்த சாயங்காலம்.
எப்பிடி இங்கே நான் வருத்தப்படறேனோ, அதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கற அல்லாரும் மயங்கி துன்பத்தை அனுபவிக்கட்டும்!"


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். [1230]

இத்தான் டாப்! இந்த வருத்தம் இந்தப் பொண்ணை இன்னா பண்ணுதுங்கறதை கொஞ்சம் ஓவராவே சொல்லிக் காட்டுது இந்தக் குறள்.

" சம்பாரிச்சுகிட்டு வர்றதுக்காவ போனவரு இன்னமும் வராத இந்த சாயங்காலத்துல, இதுவரைக்கு போவாத என்னோட உசிரு, இன்னைக்கு, இப்ப, இந்த நேரத்துல, அவரை நெனைச்சே போயிரும் போல இருக்கே!"

இதுல எதுவுமே ஜாஸ்தியா ஐயன் சொல்லலை.
இது மாரி காதலனுக்காவ, புருசனுக்காவ ஏங்கிகிட்டு இருக்கற அன்பான பொண்ணுங்களைக் கேட்டுப் பாரு.
உண்மை புரியும் ஒனக்கு.

சொன்ன டயத்துக்கு வூட்டுக்கு போகாங்காட்டி, ஒங்க அண்ணி கண்ணைக் கசக்கிகிட்டு இருக்கும்.
சீக்கிரமா டீயைக் குடிச்சுமுடி.
நா வூட்டுக்கு போவணும்" என்று அசடு வழியச் சிரித்தான் மயிலை மன்னார்.

"சரி, சரி, நீ கிளம்பு" என அன்புடன் விடை கொடுத்தேன், என் நண்பனுக்கு!

Read more...

Wednesday, May 23, 2007

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"

மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"

பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்

*******************************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

Monday, May 14, 2007

மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!

மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!


மிக, மிகக் கேவலமான அரசியல் நடத்துபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்!

அவர்களைத் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அரசியல் நடத்தி காங்கிரஸுக்கே பாடம் போதித்தவர்கள் திமுகவினர்.

1967 முதல் நாம் கண்டுவரும் பாடம் இது.

துரதிர்ஷ்டவசமாக நாம் தமிழராய்ப் பிறந்து இதைக் கண்டு வருகிறோம்.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சோனியா காந்தியின் ஆணைக்கிணங்கி, உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு எனப் பெருமை பீற்றிக்கொள்ளும் அரசின் பிரதமர் தன் மனச்சாட்சியை அடகு வைத்து தயாநிதி மாறனின் ராஜிநாமாவைப் பரிந்துரை செய்திருக்கிறார் ஜனாதிபதிக்கு..... ஒரு விளக்கம் கூடக் கேட்காமல்!

தனது மந்திரி ஒருவர் ராஜிநாமா செய்கிறார்.

தனது கட்சிக்கு எதிராக சதி செய்ததாக இந்தத் தாத்தா சொல்கிறார்.
அச்சடித்த உரையைக் கையில் அடக்கியடியபடி தாத்தா வருகிறர்ர்.
தான் நினைத்த முடிவினைத் தவறாது சொல்லித் தளர்கிறார்

தன் துறையில் இதுவரை ஒரு தவறும் செய்யாத அமைச்சரை நீக்க, தன் ஆட்சிக்கு உலை வைக்கக்கூடிய கட்சியின் ஆணைக்கு, பிரதமர் இணங்குகிறார்.

ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கிறார்.

நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை.


தன் பதவியைப் பற்றி மட்டுமே!

அதுவும் சோனியாவின் உத்தரவுக்கிணங்க பாரதப் பிரதமர் ஆடுவது வெட்கத்திலும் வெட்கம்!

மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் முக்கியமில்லை மன்னர்களுக்கு!

ஆம்!

அவர்கள் இந்நாட்டு மன்னர்கள்!

நீங்கள் எந்நாளும் அடிமைகள்தாம்!

பிராமணர், வைசியர், க்ஷத்திரியர், சூத்திரர் என்ற பேதம் அரசியலில் இல்லை!

அதைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும்
அரசியல்வியாதிகளுக்குத்தான் அது!

இன்னமும் ஏமாந்து போகாமல், இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள், எம் தமிழர்களே!

மனம் பிறழ்ந்த மன்மோஹன்சிங்கே!

இனித் தூங்க முடியாது உம்மால்!

Read more...

Thursday, May 10, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"ஸார் வந்தா இவ்விடே இருக்கச் சொல்லி சேட்டன் பறைஞ்சு. ஒரு அவசர ஜோலியா வெளியில் போயிருக்கு. அதுவரையில் கொறச்சு மசால்வடை டீ கழிச்சோ," என அன்புடன் வரவேற்றார் நாயர்.

"என்ன அப்படி அவசர வேலை? ஏதாவது சண்டையா மறுபடியும்?" என பதட்டத்துடன் கேட்டேன், ..........மசால் வடையைக் கடித்தபடிதான்!

"ஞான் எந்து அறியு? எனிக்கி ஒன்னும் தெரியில்லா." என்று சொல்லி வெள்ளந்தியாகச் சிரித்தார் நாயர்.

சற்று நேரம் பொறுத்து, 23C பஸ்சில் இருந்து அசால்ட்டாக வந்திறங்கினான் மயிலை மன்னார்!

"இன்னாப்பா, ரொம்ப நேரம் ஆச்சா வந்து? நாயராண்ட சொல்ட்டுப் போயிருந்தேனே. இன்னா நாயர்! ஒண்ணும் சொல்லலியா நீ தம்பிகிட்ட?" என அதட்டினான் மன்னார்.

"அவரை ஒண்னும் திட்டாதே. நீ ஒரு அவசர வேலையா போயிருக்கறதா வந்தவுடனேயே சொல்லிட்டார்" என சமாதானப்படுத்திவிட்டு என்னவென வினவினேன்.

"ஓ அதுவா! எல்லாம் நம்ம அன்வர் பாஷா இருக்கான்ல. அவன் ஒரு பொண்ணை லவ்ஸு பண்றான். அது இவன் சாதியும் இல்ல. பையனைப் போய் பார்த்திட்டு வரச்சொல்லி அவனோட வாப்பா சொன்னாரு. சரி, இன்னா, ஏதுன்னு விசாரிப்போம்னு போனேன். பையன் ரொம்ப ஷ்ட்ராங்கா இருக்கான். அந்தப் பொண்ணுந்தான் இவன் மேல உசுரா இருக்கு. எனக்கென்னமோ இது முடிஞ்சிரும்னுதான் தோணுது. அவளை இன்னா மாரி வர்ணிக்கிறான் தெரியுமா? நம்ம ஐயன்கூட இப்பிடி எளுதலை!" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தான் மன்னார்.

வள்ளுவர் பெயரைக் கேட்டதும், எனக்கு டக்கென்று ஒரு மின்னல் பளிச்சிட்டது!

"ஆஹா! இன்று ஒரு நல்ல அதிகாரத்திற்குப் பொருள் கிடைக்கப்போகிறது என உள்மனது சொல்லியது.

இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென, "அது கிடக்கட்டும். என்னவோ ஐயன் கூட சொல்லியதில்லைன்னு சொன்னியே, மன்னார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?" என் மெதுவாகக் கேட்டேன்.

"நீ வந்த காரியத்துல குறியா இருப்பியே! சரி, சரி, ஸொல்றேன். 'நலம் புனைந்துரைத்தல்'னு ஒரு அதிகாரம். இந்தக் காதல் வந்திருச்சின்னா, பசங்களுக்கு தலகால் புரியாம பெனாத்துவாங்க! 'மானே, தேனே, மயிலே, குயிலே,....நீதான் நெலா, நீதான் காத்து, ஒன் அளகு இன்னாமாரி இருக்கு தெரியுமா'ன்னு நம்பமுடியாத கதையெல்லாம் வுடுவானுங்க. அது எப்பிடி இருக்குமின்னு ஐயன் கோடி காட்டறாரு இதுல! ம்...ம்.. எளுதிக்கோ" என சொல்ல ஆரம்பித்தான். நடுநடுவே அவனும் சில கமெண்ட்டுகளை அள்ளி விட்டான்!

இனி வருவது மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!


அதிகாரம்-112. "நலம் புனைந்துரைத்தல்"

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். [1111]

"இந்த அனிச்சம்பூ, அனிச்சம்பூன்னு ஒரு பூ இருக்காம். ஆரு பாத்திருக்காங்கன்னு தெரியல. ஆனா, எலக்கியத்துல அல்லா எடத்துலியும் அடிக்கடி வர்ற ஒரு பூ இது! ரொம்ப ரொம்ப மெல்லிசா இருக்குமாம். தொட்டாலே வாடிருமாம்! அவ்ளோ ஏன்? ஒன்னோட மூச்சுக்காத்து அதுல பட்டாலே சுருங்கிப் போயிடுமாம். அத்தப் பாத்து இவன் ஸொல்றான்.

ஏ அனிச்சம்பூவே, நீ நல்லாயிரு! மெல்லிசாவே இருந்துக்க.ஆனா என்னோட ஆளு.. என் காதலி... ரொம்பவே நல்ல குணமான பொண்னு. நான் அத்த உசிருக்கும் மேலேயே காதலிக்கறேன். அவளோட கம்பேர் பண்னினா நீ ஒண்ணும் அத்தினி மெல்லிசுன்னு ஸொல்றதுக்கில்லை!"

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. [1112]

"இப்ப கோடைக்காலம் தானே! ஊட்டில கூட்டம் அலை மோதுதாம். எதுக்கு? அங்கே நடக்கற மலர்க் கண்காட்சியைப் பாக்கத்தான் அம்மாம் கூட்டம். பூவெல்லாம் பார்த்தா மனசுக்குள்ள ஒரு ஆனந்தம் பொங்குது. மனசு குளுமையாவுது. இல்லியா?
அதேபோல இவன் தன்னோட மனசைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கறான்!


"ஏ மனசே! இங்க வந்து கூட்டங்கூட்டமா இந்த பூவையெல்லாம் பார்க்கறப்ப, உடனே நீ, ஆஹா! இப்பிடித்தானே அவளோட கண்ணும் இருக்குனு நெனச்சு மயங்குறியே! இத்தானே வேணான்றது!"

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்டகன் வேய்த்தோ ளவட்கு. [1113]

"இப்ப பாரு வேடிக்கையை! தன்னோட காதலிய வர்ணிக்கறான்! அசந்திடாதே!

அவ தோளு ரெண்டும் மூங்கில் போல தெரண்டு இருக்குமாம். ஆனா ஒடம்பு தளிர் நெறமா இருக்கும்.பல்லைப் பார்த்தியானா முத்து முத்தா இருக்குமாம். அவளை மோந்து பார்த்தா அப்பிடியே இதுவரைக்கும் எங்கியும் வராத, ஆனா இயற்கையான வாசனையா இருக்குமாம். மையி தீட்டின கண்ணுங்கள்லாம் வேல் மாரி கூரா இருக்குமாம்.


இப்பிடி ஒரு பொண்ணை நெனைச்சுப் பாரேன்! ஓடியே பூடுவே! ஆனா, இவன் வாய்க்கு வந்த மாரி வுடறான் கதை!:))"

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. [1114]

இப்ப கண்ணை மட்டும் தனியா ஸொல்றான்!

குவளைப்பூன்னு ஒண்னு இருக்கு. கொளத்தங்கரைலல்லாம் ஜாஸ்தியாப் பார்க்கலாம் இத்தை. ஊதாக்கலர்ல சும்ம ஜிம்முன்னு கண்ணு விரிச்சமாரி சிரிச்சிகிட்டு இருக்கும் இது. வயக்காமா, இந்தப் பாட்டு எளுதறவங்கல்லாம், அளகான பொண்ணுங்களொட கண்ணை இந்தக் குவளைப்பூவுக்கு உதாரணம் காட்டி எளுதுவாங்க!

நம்மாளு இன்னா ஸொல்றான்னா, இவனோட காதலியை இவன் வயக்கமா[வழக்கமாக] இந்த ஆத்தாங்கரை, கொளத்தாங்கரைல தான் பாக்கறது! அப்பிடி அவ வர்றப்ப, இந்த குவளைப்பூவெல்லாம் இவளைப் பார்க்குதாம். அடடா! இவ கண்ணுக்கு முன்னாடி நாமெல்லாம் எந்த மூலைக்கின்னு வெக்கப்பட்டு, அதது தலையைக் கவுத்துகிட்டு, நெலத்தைப் பாக்குதாம்!

நல்ல கூத்துதான் போ!"

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. [1115]

திரும்பவும் அதே அனிச்சம்பூ!


இவனோட லவ்வரு இன்னா பண்ணினாளாம்... ஒரு அனிச்சம்பூவை காம்போட எடுத்து தன் தலையில வெச்சுகிட்டாளாம். அவ்ளோதான்! அத்தோட வெயிட்டு.. அதாம்ப்பா எடை, பாரம்... தாங்காம 'மளுக்'குனு இந்தப் பொண்ணோட இடுப்பு ஒடிஞ்சிருச்சாம்!
நம்ப முடியலே இல்லை? இன்னும் இருக்கு கூத்து.

இவன் இன்னா பண்ணினானாம், ஒடனே, 'இது மாரி ஆயிருச்சே; இனிமே ஒரு அனிச்சம்பூவைக் கூட வுட்டு வைக்கக் கூடாது ஒலகத்துலே'ன்னு அதுக்கு சாவுப்பறை கொட்ட ஆரம்பிக்கறானாம்!"


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். [1116]


"நல்ல பவுர்ணமி ராவு. நிலா தக தகன்னு ஜொலிக்குது. மானம் பூரா, நட்சத்திரங்கல்லாம் மீனு மாரி மின்னுதாம். அதான் அதுக்கெல்லாம் விண்மீனுன்னு பேரு. இவங்க ரெண்டு பேரும் தனியா ஒக்காந்துகினு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ இந்த விண்மீனுங்கல்லாம் நிலா வெளிச்சத்துல இந்தப் பொண்ணொட மொகத்தைப் பாக்குதுங்களாம். நம்ம பக்கத்துல இருந்த நிலா எப்பிடிறா கீளே போச்சுன்னு தெகைச்சுப் போச்சுங்களாம். அப்பிடியே இங்கியும் அங்கியுமா அலையுதுங்களாம்....ஒண்ணும் புரியாம!"

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. [1117]

"அவ்ளோதான்! அதுங்க அலையறதைப் பார்த்ததும், இவனுக்கு ஒரே குஷியாயிடுது! ஒடனே ஒரு வெளக்கம்[விளக்கம்] கொடுக்க ஆரம்பிக்கறான்.


'மானத்துல இருக்கற நிலா தேஞ்சு, வளர்ந்து, தேஞ்சு, வளர்ந்து வருது. ஆனா, இவ மொகத்தைப் பாருங்க. எதுனாச்சும் குறை இருக்கோ? இல்லவே இல்லை!"


எப்பிடிப் போவுது பாரு கதை! இன்னும் இருக்கு அடுத்ததுல!"

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லவையேல்
காதலை வாழி மதி. [1118]

ஏ!நிலாவே! நீயுங்கூட என்னோட காதலி மாதிரி நல்ல வெளிச்சமா வந்தேன்னா, போனாப்போவுதுன்னு நீயும் நல்ல இருக்கேன்னு ஸொல்றென். ஒன்னையும் எனக்குப் பிடிக்கும் அப்போ!"

இவரு நிலாவோட டீல் போடறாரு இப்போ!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர் காணத் தோன்றல் மதி. [1119]


பக்கத்துல பொண்ணு இருக்கற தெகிரியம்! சும்மா பொளந்து கட்டறான் இன்னும்!

"ஏ! சந்திரனே! நீ என்னோட காதலி மாரி இருக்கணும்னா, ஒடனே நீ ஒண்ணு பண்ணனும். ஆர் கண்ணுக்கும் படக்கூடாது. எல்லாரும் பார்க்கற மாரி தெனம் உலா வரக் கூடாது! அப்பதான் நீயும் இவளும் ஒண்ணாவீங்க!"

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். [1120]


"கடைசிலியும் இந்த அனிச்சம்பூவை அவன் மறக்கலை!

இந்த அனிச்சம்பூவும், அன்னப்பட்சியோட மெல்லிசான இறகும், இவ நடந்து வர்ற பதையில இருந்து, இவ பாதத்துல பட்டுச்சின்னா, அப்பிடியே முள்ளு முள்ளா இருக்கற நெருஞ்சிப்பழம் குத்தின மாரி துடிச்சுப் பூடுவாளாம்! அவ்வளோ மெத்து மெத்துன்னு இருக்குமாம் அவ பாதம்!"

"இன்னாத்தை நா ஸொல்றது! கப்ஸா வுடறதுக்கும் ஒரு அளவு வோணாம்? புடிச்சிருக்கு சரி! அதுக்காவ, இன்னா மாரி ஸொல்றான் பாரு தன்னோட காதலியைப் பத்தி!
இப்பிடித்தான் நம்ம அன்வர் பயலும் ஆ, ஊ ன்னு பிலிம் காட்டறான்.
இதெல்லாம் வேலைக்கு ஆவற விசயமில்லை.
சட்டு புட்டுன்னு ரெண்டு பேரும் கொஞ்சம் தரையில எறங்கி வாங்க. வந்து அவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி கண்ணாலம் கட்டிக்கற வளியைப் [வழியை] பாருங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
நீதான் மன்னாரு எங்களுக்கு ஹெல்பு பண்னனும்னு தடார்னு ரெண்டு பேரும் கால்ல வுளுந்துட்டாங்க1
சரி, ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் ஏதும் தப்புத்தண்டா பண்ணாம ஒயுங்கா இருங்கன்னு ஸொல்லிட்டு வந்திருக்கேன்
இன்னா ஆனாலும் அன்வர் பையன் நமக்கு தோஸ்து ஆச்சே!
எப்பிடி வுட்டுர்றது ?
இன்னா நா சொல்றது?"
எனக் கேட்டு வாஞ்சையாகச் சிரித்தான் மயிலை மன்னார்.

"அதுதான் சரி! அப்பிடியே பண்ணுவோம்"னு சொல்லிவிட்டு நானும் விடை பெற்றேன் நண்பனிடமிருந்து..... இதைப் பதிய!

Read more...

Wednesday, May 09, 2007

மண்ணுநீதி!

"மண்ணுநீதி"!





கடல்நீரைக் குழிநிறுத்தி
அதில் சிக்கும் மீன் பிடிக்க
வலைவீசும் மனிதனே!- உன்

உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ

தளை களைந்து தலை நிமிர்ந்து
தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!

Read more...

Friday, May 04, 2007

"முடிவில் ஒரு தொடக்கம்!"

"முடிவில் ஒரு தொடக்கம்!"

பொதுவாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எதுவும் எழுதியதில்லை.

ஆனால், இந்தத் தொடர் என்னை மிகவும் பாதித்தது.

விஜய் தொலைக்காட்சியில், "படிகள்" என்னும் தொடரைப் பார்த்தேன்!

6 நிகழ்வுகளாக இது பிரிக்கப்பட்டு, வந்தது.

அதில் கடைசி நிகழ்ச்சியாக வந்தது, "முடிவில் ஒரு தொடக்கம்" !!

அதைப் பற்றிய ஒரு விமர்சனம் இது!

படியுங்கள்!

முடிந்தால் பாருங்கள்!



வாழ்வில், ஒரு கார்விபத்தில், தன் தவற்றினால் மனைவியையும், தன் உடலின் கீழ்ப்பாகத்தில் உணர்வையும் இழந்த ஒரு முதியவரின் தனிமைச் சோகம்!

யாரையும் அண்டவிடாமல், அருமை மகளையும் கோபித்து ஒதுக்கிவிட்டு பணிப்பெண்களின் உதவியால் காலம் தள்ளும் இவர் வாழ்க்கையில் ஒரு ஈழப் பெண் குறுக்கிடுகிறார், பணிப்பெண்ணாக.

எவரிடமும் எரிந்து விழுந்து, தன் ஆற்றாமையைக் கோபமாக வெளியிட்டு அனைவரையும் துரத்தி அடிக்கும் பெரியவரின் ஜம்பம் இந்தப் பெண்ணின் மீதும் பாய்கிறது.

ஆனால்,.... ஓ! இதென்ன அதிசயம்! இந்தப் பெண் அமைதியாக இவரது ஏசல்களையும், அவமரியாதையையும் சிரித்தபடி தாங்கிக் கொள்கிறாளே!

அது மட்டுமின்றி, அன்புடன், இனிய, தூய தமிழிலும் பேசி இவரை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள்.

இவள் பேசும் அந்தத் தமிழ்.... இன்று முழுதும் கேட்டுக் கோண்டிருக்கலாம்.

மூலையில் கிடந்த, மகளுக்காக ஆசையாய் வாங்கி, இப்போது உபயோகமின்றிக் கிடக்கும் மீன் தொட்டியை நடுவீட்டில் வைத்து, அதில் அழகிய தங்க மீன்களையும் விட்டு அழகு பார்க்கிறாள்!

வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கேட்டவருக்குக் கூடவே அதை வாங்கும் கோப்பையைக் கொண்டுவராததால், கோபத்தில் தரையில் துப்பிய உமிழ்நீரை சாந்தமாய்த் துடைக்கிறாள்.

10 ஆண்டுகளாகப் பார்க்க வராமல், இவர் கோபத்தைக் கண்டு பயந்து வாழும் மகள் குடும்பத்தைப் பெரியவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு அழைக்கிறாள்,... பெரியவர் கூப்பிட்டார் என ஒரு பொய் சொல்லி.!

வந்தவர்கள் அவமானப்பட்டுத் திரும்பும் போது, தன் தவறுதான் இது என வேண்டுகிறாள் அவர்களிடம்.

ஏன் இவர்களைக் கூப்பிட்டாய் எனப் பெரியவர் திட்டிவிட்டு, தன் கண்ணீர்க் கதையை இவளிடம் சொல்லும் போது, ஒரு சலனமுமில்லாமல் இவரைப் பார்க்கிறாள்.

"உனக்கென்ன தெரியும், நீ சின்னப் பெண்தானே! உனக்கு ஒன்றும் புரியாது" என பெரியவர் ஏளனமாய்ப் பேசும் போது, பொங்கி எழாமல், கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட, அமைதியாய், அன்பாய் வழ்ந்த தன் குடும்பம், இராணுவ வீரர்களின் கொடுமையால், தன் கண்ணெதிரே கொலையுண்டதை, மானபங்கப்படுத்தப் பட்ட அவலத்தைச் சொல்லி அழுகிறாள்....... "நானா சின்னப்பெண்? எனக்கா ஒன்றும் புரியாது? என ஒரு வார்த்தை கூடச் சொல்லாமலேயே!

தன் சோகத்தை விடப் பெரியதொரு சோகத்தைத் தாங்கி நிற்கும் இப்பெண்ணைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கும் பெரியவர் மனம் திருந்தி, ஒரு பாசத்துடன் இவளுக்கு ஒரு அன்பளிப்பு வழங்க முயல,
"ஓ! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஐயா! இதை உங்கள் மகளுக்குக் கொடுங்கள்" எனச் சொல்லி மறுக்கிறாள் இப்பெண்!

சொல்ல மறந்தேன்!
இவள் பெயர் ரேணுகா!

"நீங்கள் எனக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், என்னுடன் சற்று வெளியில் வந்து வெளியுலகத்தைப் பாருங்கள் ஐயா!" என ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க...
சரியெனச் சொன்னதும் தனக்கு ஏதோ ஒரு பெரிய பரிசே கிடைத்து விட்டது போல் ஒரு புன்முறுவல் பூக்கிறாளே... அது விலை மதிக்க முடியாத ஒரு காட்சி!

சீவி சிங்கரித்து, பவுடர் பூசி, புதுச்சட்டை மாட்டி, கறுப்புக் கண்ணாடி அணிவித்து, வெளியில் செல்லும் வேளையில், .....மனம் மாறி, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது!
வர மறுக்கிறார்.

சுய பச்சாதாபத்தினால், தன் சொந்தங்கள் யாவையும் இழந்து, ஒதுக்கி வாழும் அவலத்தை மீண்டும் இவர் சொல்ல,, "நீ ஒருத்தி மட்டும் ஏன் என்னை விட்டுப் போகாமல் இருக்கிறாய்?" என இவர் வினவ, அதற்கு அமைதியாய் அவரை ஏறெடுத்துப் பார்த்து,"நீங்கள் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள் ஐயா" எனச் சொல்லும் போது பெரியவர் மட்டுமல்ல.. நாமும் கலங்குகிறோம்.

மறுநாள்... ஞாயிற்றுக்கிழமை.. பெரியவர் மெதுவாகக் கேட்கிறார்.."இன்று வெளியில் கூட்டமாய் இருக்குமோ?' என!

ஏன் என ரேணுகா கேட்க, " வெளியில் போகலாமா? என ஒரு பச்சைக்குழந்தையைப் போல, இவளை எப்படியாவது மகிழ்விக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு பெரியவர் கேட்டவுடன்.....

அவ்வளவுதான்! இந்தப் பெண் காட்டும் முகபாவங்கள் இருக்கின்றனவே... அதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

அதை விடவும் சிறப்பான காட்சி அடுத்து வருவது!

எங்கே இந்தக் கிழம் மீண்டும் மனம் மாறிவிடுமோ என்ற அச்சத்தில், போட்ட பனியனோடு சக்கரவண்டியை நகர்த்தி வீட்டை விட்டு வெளீயில் அவசர அவசரமாகத் தள்ளிச் செல்கிறாள், மலர்ந்த சிரிப்புடன்!

நாமும் சிரிக்கிறோம்.

பெரியவரை ஒரு பார்க்குக்கு அழைத்துச் சென்று, குழந்தைகள் விளையாடும் இடத்தருகே கொண்டு சென்று, அவரை ரசிக்க விட்டுவிட்டு, இந்தப் பெண் தனியாக ஒரு பெஞ்சில் சென்ற அமர்கிறாள்.

இவர் ரசித்துச் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிக்கிறாள்.

மாகோவின் நடிப்பும், இந்தப் பெண்ணின் நடிப்பும் மறக்க முடியாத ஓர் அனுபவம்.
குறிப்பாக ரேணுகாவாக நடித்தவர்!

நவரசத்தையும் பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறார்!

கூடவே இனிய தமிழ் விருந்தும்!


நான் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தொடர் இது!

Read more...

Thursday, May 03, 2007

ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"
[ஜி.ரா. கேட்டது!]

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான

......பாடல்.......

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.

.....பொருள்......

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"

அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!


"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"

மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!

"கருதரு திண்புய சரவண"

எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!

"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"

அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!


"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."


பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!



"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"

கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!

கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!

காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!

மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!

மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்

இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி

"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"


சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்

இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!

அருஞ்சொற்பொருள்:

பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP