"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12
முந்தைய பதிவு இங்கே!10.
"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்." [427]
"சிதம்பரத்து ராசாவின் ஆசீர்வாதம் இன்னமும் என்கிட்ட இருக்கா?" என எண்ணிக்கொண்டே பைக்குள் கை விட்டு ஒரு கல்லை எடுத்தான்.
'கருப்புக் கல்!' ஆமாம்!
'புதையல் எனக்குக் கிடைக்குமா?'
மீண்டும் கைகளை விட்டுத் துழாவினான்.
இரண்டு கற்களுமே அவன் கையில் அகப்பட்டு, வந்தன!
......'அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......
நான் தீர்மானம் இன்னமும் செய்யாமல், கல்லை நம்பியது தவறு என அவனுக்குப் பட்டது.
'புதையலைத் தேடிகிட்டுப் போகணுமா, வேண்டாமா, இல்லை ஊருக்குத் திரும்பணுமா?' இது நான் எடுக்க வேண்டிய முடிவு. சகுனங்களை இதில் நம்பக்கூடாது' எனஅவனுக்குத் தோன்றியது.
'பெரியவர் இன்னமும் தன் கூடவேதான் இருக்கிறார் என இந்தக் கற்கள் சொல்லியிருக்கின்றன. அதுவே பெரிய தெம்பு! இனிமே நாமதான் ஒரு முடிவு எடுக்கணும்' என மனதில் தீர்மானித்துக் கொண்டு கற்களை மீண்டும் பத்திரப் படுத்தினான்,பைக்குள்.
.......'பல இடத்துக்கும் போகப் பாரு.' வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்தது!
'அவர் சொன்ன மாரியே நான் இப்ப ஊரை விட்டு மதுரை வரைக்கும் வந்திட்டேன்.இப்ப எல்லாத்தியும் தொலைச்சிட்டாலும், என்னோட லட்சியம் இன்னமும் என்கூடத்தான் இருக்கு. அது இன்னும் தொலையலை.இனிமே, புதையலை அடையறதுதான் என் லட்சியம்.'
அப்படியே அந்த பெஞ்சில் படுத்து உறங்கிப் போனான் கந்தன்.
********
யாரோ அவனை உலுக்கிய வேகத்தில் விழித்தன் கந்தன்.
'எலே! வாங்கடே போலாம்!' பழக்க தோஷத்தில் அவன் வாய் முணுமுணுத்தது.
சுற்று முற்றும் பார்த்தான்.
ஆடுகளைக் காணவில்லை!
தான் இருப்பது மதுரை ஜங்ஷன் பெஞ்ச் என்பதை உணர்ந்தான்.
ஒரு நொடி துக்கமாயிருந்தது.
அடுத்த நொடியே சந்தோஷமாகவும் இருந்தது.
'அதுங்களுக்கு தீனி வைக்க வேணாம். தண்ணி காட்ட வேணாம்.எந்த ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லாம, புதையலை மட்டுமே தேடிகிட்டு நான் போவலாம்.கையில ஒரு பைசா இல்லை.
ஆனாக்க, நம்பிக்கை மட்டும் இருக்கு!'
எழுந்து வெளியே வந்தான்.
மாலை நேரம்.
ஜங்ஷனுக்கு வெளியே கடைகள் களை கட்ட ஆரம்பித்திருந்தன.
வரிசை வரிசையாக ஜவுளிக்கடைகளும், பலகாரக் கடைகளும், பலவிதமான பொருட்களை வைத்துப் பரப்பிய நடைபாதைக் கடைகளும், ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போவது போல குறுக்கும் நெடுக்குமாக நடந்த மனிதர்களும், வாகனங்களும், மணக்கும் மல்லிகைப் பூவுமாக ஒரே பரபரப்பாக இருந்தது.
முட்டத்துக்கும் மதுரைக்கும் இடையேதான் எவ்வளவு வேறுபாடுகள்!
பேச்சுவழக்கிலிருந்து, உடை வரை எல்லாமே மாறியிருந்தது.
இந்த 'லே' அவனை மிகவுமே குழப்பியது.
பேசுவதிலும் கூட ஒரு வேகம் அவனை பயமுறுத்தியது.
நடந்து செல்லும் போதே பலவற்றையும் கவனித்துக் கொண்டே வந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
இங்கே வந்தாச்சு.
இனிமே திரும்பப் போறதில்ல.
பெரியவர் சொன்ன சகுனம்னு எதுனாச்சும் இருந்தா, அது இங்கேதான், இந்த ஊர்லதான் எனக்குக் கிடைக்கப் போவுது.
பொறுமையா கவனிக்கணும் நான்.
ஏனோ அவனுக்கு தன் ஆடுகளின் ஞாபகம் வந்தது.
'மே' என்ற ஒரு வார்த்தையைத் தவிர அதுங்க ஒண்ணுமே பேசலைன்னாலும், தங்களோட தேவைகளை, ஆசைகளை, அன்பை,இன்னும் என்னவெல்லாமோ அவைகள் காட்டியது மனதில் பாரமாக அழுத்தியது.
அதையே நான் புரிஞ்சுகிட்டு அதுங்களைப் பார்த்துகிட்டேன்னா,இதெல்லாம் புரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமே இல்லை.
....."ஒனக்கு இருக்கற மாதிரியே இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.கூடவே துக்கம்,பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!".
பெரியவர் சொன்னது பலமாகக் கேட்டது!
"என்னங்க தம்பி, வண்டியை தவறவிட்டுட்டீங்களா?"
கேட்ட குரலாயிருக்கிறதே எனக் கந்தன் திரும்பினான்!
[தொடரும்]
***********
அடுத்த அத்தியாயம்