Friday, April 13, 2007

அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!


அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!

அழகென்றால் குமரனே
அவனழைத்தான் என்னையே
அழைத்ததும் தெரிந்தது
அடுத்தவர் சொல்லித்தான்!

குமரன் அழைப்பு இப்படித்தான் வரும்
ஆரவாரமாக வருவதில்லை
அழைப்பதும் புரிவதில்லை
அறிந்துகொண்டால் அமைதி வரும்

அவனழைப்பை நாடி இங்கு
ஆவலுடன் எதிர்பார்த்து
அனுதினமும் காத்திருத்தல்
அதுவே முதலழகு!

நாம் பிறந்தது நம்மால் அல்ல!நம்மைப் பிறப்பித்தவர் வேறு எவரோ!அவர்கள் மகிழ்வுக்காக ஒரு சில ஆண்டுகள்! அவர்களே தெரிந்தெடுத்தோ, அல்லது நாமே தேர்ந்தெடுத்தோ நமக்கு ஒரு வாழ்வு அமைகிறது. இதுதான் நம் வாழ்வு! இது சிறப்பதும், சிறுப்பதும் இனி என் கையில்! இது சிறக்க என்னால் ஆன அத்தனையும் செய்வது....செய்தது... அடுத்த அழகு!

எனக்குத் தெரிந்தது இந்த ஒரு வாழ்வு மட்டுமே! இந்த உலகம் எனக்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. எனக்காக மட்டுமே!
இதை இப்போது அனுபவிக்கவில்லையென்றால் எப்போது அனுபவிப்பது!
மனதுக்குச் சரியென பட்ட அனைத்தையும், அடுத்தவருக்குக் கூடிய மட்டும் அதிகமாகத் தொந்தரவு கொடுக்காமல், நம்மால் இன்பம் இல்லாவிட்டாலும் துன்பம் வராதபடி பார்த்துக் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்!
பார்க்க முடிந்த மனதுக்கு இதமான அனைத்து இடங்களையும் பார்த்து விட வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படாமல்! கூட வர எவர் விருப்பப்பட்டாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு!
அதில் இருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!
அத்தனை உலகும் வண்ணக் களஞ்சியம்!"

இதுவே மூன்றாம் அழகு!
இதில் இருக்க எனக்கும் ஒரு துளி இடத்தை கொடுத்த சாயி ......!உனக்கு நன்றி!

கண் நிறைந்த மனையாள் அழகு!
கருத்தொருமித்த காதல் அழகு!
களங்கமில்லாக் குழந்தை அழகு!
கைகொடுக்கும் நண்பர் அழகு!
கபடமில்லா உறவழகு!
காலமெல்லாம் இதையளிக்கும்
கந்தனவன் மிக அழகு!
இதுவே என் நான்காம் அழகு!

"அத்தெல்லாம் சர்தாம்ப்பா! நம்மளை விட்டுட்டுட்டியே! கூடமாட எப்பவும் உங்கூட இருக்கறது நாந்தானே! ஒனக்கு எதுனாச்சும் ஒண்ணுன்னா ஒடனே வர்றது ஆரு? ஐயனைக் கூட்டிக்கிட்டு ஒனக்கு ஒதவி பண்றதுக்கு ஓடி வர்றதுக்கு என்னிய வுட்டா ஆரு இங்கே! ஒனக்கு இம்ம்புட்டு எளுதறதுக்கு ஒதவி பண்றது ஒலகத்துலியே மொத மொதலா வந்த தமிழ்தாங்கறத மறந்துறாத! நீயே என்கிட்ட எத்தினி வாட்டி சொல்லியிருக்கே! தமிழும், தமிழ்நாடும்தான் ஒனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு! அதனால கடசியா சொன்னாலும் இதான் ஒனக்கு ரொம்பவும் அழகானதுன்னு ஒன் சார்புல சொல்லிக்கறேன்"
என்கிறான் என் இனிய நண்பன் மயிலை மன்னார்!

ஷைலஜா, அன்புத்தோழி, மற்றும் என் இனிய நண்பர் ............சென்ற முறையே என்னைடம் உரிமையாக அன்புடன் கோபித்துக் கொண்ட...... சதீஷையும் அழைக்கிறேன் ... அழகு பற்றித் தொடர!

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP