Thursday, February 07, 2008

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]




காசினியில் வாழ்கின்ற கற்றோரும் மற்றவரும் கைதொழுது மெய்தொட்டு
பூசனைகள் செய்கின்ற புனிதநீரில்தான் குளித்து பூமலரால் அருச்சித்து
பாசமுடன் பரிவாக அவர்செய்யும் அபிஷேக ஆராதனை ஏற்கின்ற
காசிநகர் மேவிநிற்கும் விசாலாக்ஷி புகழ்பாட கணபதியே காப்பு.


பார்புகழும் பாரதத்தில் எத்தனையோ க்ஷேத்திரங்கள்
க்ஷேத்திரங்கள் அத்தனையும் தூயவரின் உறைவிடங்கள்
உறைவிடங்கள் ஒவ்வொன்றும் சொல்லும்கதை ஆயிரங்கள்
ஆயிரம்தான் சொன்னாலும் தாயிவளைப் போலாமோ! [1]

காசியெனும் நகரினிலே வீற்றிருக்கும் பேரரசி
பேரரசி வடிவழகில் புரிந்துவரும் இவள்மாட்சி
மாட்சிமையின் மகிமையிலே மாதரசி தேனாட்சி
ஆட்சியிவள் அருமையினை சொல்லுவதும் எளிதாமோ! [2]

இன்பத்தை அள்ளிவிடும் காமாட்சி திருக்கண்கள்
கண்களே மீன்போலத் திறந்தருளும் மீனாட்சி
மீனாட்சி காமாட்சி கண்களையும் விஞ்சுகின்ற
இன்றுபூத்த மலர்போலும் அன்னையிவள் கண்களுமே! [3]



தம்பாவம் கரைத்திடவே காசிக்குச் சென்றிடுவார்
இடும்பாவம் அத்தனையும் வாங்கிடுவாள் கங்கையளும்
கங்கையவள் தாங்குதற்கு தாயிவளே காரணமாம்
காரணமே பூரணமாய் நிறைந்ததிலோர் வியப்புண்டோ! [4]

கண்களிலே அன்புதேக்கிக் கனிவோடு வந்திருந்தாள்
இருந்தவளும் விஸ்வநாதன் அன்பினிலே மயங்கிவிட்டாள்
விட்டகுறை தொட்டகுறை இறையோடு இணைந்தவளை
அவளை மணமுடித்து தன்னோடு இருத்திட்டானே! [5]

ஆதிசிவன் அவதாரம் சங்கரரும் காசி வந்தார்
வந்தவரைப் பின்தொடர்ந்து சீடர்களும் சூழ்ந்திருந்தார்
'இரு! இவரைச் சோதிக்கலாம்! எனவெண்ணிச் சிவனும்
சண்டாளன் வேடமிட்டு முன்னாலே தோன்றி நின்றான்! [6]

சண்டாளன் உருவினிலே சிவனாரும் முன்வரவே
வந்தவனைப் பின்தொடர்ந்தாள் அவனுடைய நாயகியும்
நாயகிபின் நாயொன்று கூடவரும் காட்சிவந்த
வரவதனைப் பார்த்திட்ட சங்கரரும் திகைத்திட்டார்! [7]



'தள்ளிப்போ! சண்டாளா! என்றவனைத் தூற்றிநின்றார்
நின்றவனும் நகைப்போடு சங்கரரைக் கேட்டிட்டார்
"கேள்மகனே! எவனைத்தள்ளச் சொல்லுகின்றாய்?'
சொன்னதனைக் கேட்டவரும் மெய்வழியை உணர்ந்தாரே! [8]

"என்னிலுள்ள ஒன்றுதானே உன்னிலுமே உள்ள அது!"
"அதைவிடுத்து நான்சென்றால் உன்னிலது உயர்பெறுமோ?"
பெரும் பொருளைப் புரிந்தவரும் பணிந்தங்கே பாடிநின்றார்.
நின்றவரும் பாடியதே மனீஷாபஞ்சகம் எனும்துதிகள்! [9]

சண்டாளன் மனமகிழ்ந்து சங்கரனாய் மாறிநின்றான்
நின்றவனின் அருகினிலே விசாலாக்ஷி கூடிநின்றாள்
நின்றவளும் மகிழ்வோடு அங்கேயே குடிகொண்டாள்
கொண்டவொரு கோலத்துடன் காசியிலே அருளுகின்றாள்! [10]

அனைவர்க்கும் அருளிடவே அழகாகக் கோயில் கொண்டாள்
கொண்டதிருக் கோலத்தை அடியேனால் சொல்லப்போமோ
ஓமென்னும் ரூபத்தில் வடிவாக சமைந்திருந்தாள்
இருந்தவளின் கோலத்தை முடிந்தவரை சொல்லுகின்றேன்! [11]



இடக்கரத்தில் கனகத்தால் அமைந்தவொரு பாத்திரமும்
பாத்திரத்தில் நிறைந்திருக்கும் சுவையான பாயசமும்
பாயசத்தை அள்ளவொரு கரண்டியும் வலக்கரத்தில்
வலதிடது கரங்களாலே அள்ளித்தரும் திருவடிவம்! [12]

பட்டாடை புனைந்திருப்பாள் சிற்றாடை உடுத்திடுவாள்
உடுத்துகின்ற தேவதைகளும் உடன்வரவே அருளிடுவாள்
அருளமுதம் தனையிங்கு தந்திடவே சிரிக்கின்றாள்
சிரிப்பெல்லாம் முகத்தினிலே தேக்கியிவள் பொலிகின்றாள் [13]

விரிவான பார்வையினால் வந்தவர்க்கு அருள்கின்றாள்
அருட்பார்வை அதனாலே அகிலமெல்லாம் ஆளுகின்றாள்
ஆளுகின்ற கருணையினால் அருளமுது படைக்கின்றாள்
படைப்பதையே தொழிலாக அன்பரையும் காக்கின்றாள்! [14]

காஞ்சியிலே காமகோடி காமாட்சி அருளுகின்றாள்
அருளொளியை வீசும்மீனாள் தென்பாண்டிநாட்டினிலே
நாட்டிலுள்ளோர் நாடிவரும் விசாலாட்சி காசியிலே
காசிநகர் வீற்றிருக்கும் கங்கையிவள் அன்னபூரணி [15]

கண்விரித்து கங்கைக்கரை மீதிவளும் அருள்கின்றாள்
அருளமுதை வந்தவர்க்கு வாரிவாரி வழங்குகின்றாள்
வழங்குவதில் இவளுக்கோர் ஈடிங்கு என்அன்னை
அன்னையிவள் இருப்பதாலே அகிலமுமே வாழுதம்மா! [16]

பாவங்கள் தீர்ந்துவிடும் பாவையிவள் கண்பட்டால்
பட்டதெல்லாம் பறந்துவிடும் அன்னையிவள் அருள்சுரந்தால்
சுரக்கின்ற அருட்கருணை விழியதிலே பொழிந்திருக்கும்
பொழிகின்ற தாயவளைப் போற்றிடவோ மொழியுமில்லை! [17]

இத்தரையில் இவள்போல எங்குமொரு தெய்வமில்லை
இல்லையென வருவோர்க்கு ஈயாதது ஒன்றுமில்லை
ஒன்றினிலே ஒன்றாக ஒன்றியிவள் நின்றிடுவாள்
இடுகின்ற அமுதத்தால் இன்னல்களைப் போக்கிடுவாள்! [18]

என்னவளை என்தாயை இன்பமுடன் பாடிவந்தேன்
வந்தவரை அரவணைத்து வழிகாட்டி நடத்திடுவாள்
நடமாடும் தெய்வமிவள் நமைக்காக்க நிற்கின்றாள்
நின்றதிருக் கோலமதில் உள்ளமெலாம் பறிகொடுத்தேன்! [19]

மூவுலகும் ஆளுகின்ற ஆதிசிவன் தேவியிவள்
இவளருளால் விளைகின்ற பேரின்பம் பலகோடி
கோடிசுகம் தந்திடுவாள் நாடுகின்ற அன்பருக்கு
அன்பருக்கு இப்போதே இன்பமழை பொழிந்திடம்மா ! [20]

காமாட்சி மீனாட்சி காசிவிசா லாட்சிபோற்றி!
போற்றுபவர்க்குப் படியளக்கும் அன்னபூரணி அடிபோற்றி!
போற்றியிதைப் படிப்பவரின் பாவம்போக்கும் கழல் போற்றி!
போற்றியுனைப் பாடிடுவேன் விசாலாட்சி போற்றி போற்றி!! [21]

விசாலாட்சி என்னும்பெயர் கொண்டவளும் தாயிவளே
இவளன்றோ சிவனுக்கே அமுதளித்த அன்னபூரணி
பூரணமாய்ப் பொலிகின்றாள் இருவுருவில் காசியிலே
காசியிலே நின்றமர்ந்து காக்கின்றாள் காசினியை! [22]




காசிவாழ் விசாலாக்ஷி கழலடிகள் சரணம்!
**************************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP