Saturday, February 17, 2007

ஆத்திகச் சுடர்!

ஆத்திகச் சுடர்!

இந்தச் சுடரை ஏற்றி வலையுலகில் பரவவிட்டு, இன்று சுடராகிப் போன கல்யாணுக்கு அஞ்சலி செலுத்தி இதனைத் தொடர்கிறேன்.

நண்பர் விடாது கருப்பு சதீஷ் இதை எனனிடம் அனுப்பி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

அவர் சொன்னது போல என் கருத்தை மற்றவரிடம் திணிக்க அல்ல: ஆனால் சொல்லிடவே நான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.

எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.

முடிந்தால் மற்றவரைக் கோபப்பட வைக்க முடியும்; வருத்தப்படவைக்க முடியும்; அவர் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆனால், புரிவது அவரவரிடமே நிகழ முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்...........

' குதிரையை தண்ணீர்த்தொட்டிக்கு கொண்டு செல்லத்தான் நம்மால் முடியும்; குதிரைதான் குடிக்க வேண்டும்.... முடியும்.'

இதனை உணர்ந்து, தம் கருத்துகளை அடுத்தவரைப் பழிக்காமால், அவர் மனதை நோக வைக்காமால் தம் கருத்துச்சுடரை ஒவ்வொருவரும் ஏற்ற வேண்டும், வலைப்பூவிற்கு வருவது ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வைப்பது வலைப்பதிவார்களின் தலையாய பொறுப்பு எனக் கூறி, இனி எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்!!


அதற்குமுன், சிவாராத்திரியை முன்னிட்டு, சில "ஆத்திக" நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், உடனே இந்தச் சுடரைத் தொடர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது என் பதில்!

1)ஆன்மீகத்தினை நீங்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. உலகில் இவ்வளவு இந்துக் கடவுள்கள் இருக்க அதிலும் குறிப்பாக முருகனைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

இது மிகவும் சுலபமான கேள்வி!

நான் பிறந்தது ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பத்தில்! என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது முருகன், வள்ளி, தெய்வானை உருவச்சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்.

பூஜைக்கு வர வேண்டும்; அனைவரும் அருகில் உட்கார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் வற்புறுத்தியதில்லை.

ஆனால், பூஜை முடியும் சமயம், ஒரு மணி அடிப்பார்! யார் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே அதை விட்டுவிட்டு, தட தடவென ஓடி அவரிடமிருந்து விபூதி பெற்றுக் கொள்ள மட்டும் மறந்துவிடக் கூடாது! வராதவருக்கு அன்று தர்ம அடி நிச்சயம்!

நான் ஒரு நாளும் அடி வாங்கியதில்லை! ஏனென்றால், நான் ஒருவன் தான் அவர் பூஜை ஆரம்பித்த முதல் கடைசி வரைக்கும் அவரருகே அமர்ந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவேனே!

ஆம்! அவர் பூஜை செய்யும் அழகும், முருகனை ஆராதிக்கும் பாங்கும் என் மனதைக் கவர்ந்தது. முருகன் என் மனதை ஆட்கொண்டான்! நான் முருகன் அடிமை ஆனேன்!

எல்லாத் தெய்வங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், முருகனே என் சொந்தக் கடவுள்!

ஒரு சின்ன தகவல்!

அந்த முருகன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது! சஷ்டி, கிருத்திகை என பூஜை அவருக்கு கோலாகலாமாய் நடந்து வருகிறது!

2)வலைப்பதிவு உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் போராக இருக்கிறது. முதலில் பார்த்தீர்கள் என்றால் பார்ப்பனர் - திராவிடர் பிரச்னை. அதன்பின் விடாது கருப்பு- விட்டது சிகப்பு போர். அடுத்து பார்த்தீர்கள் என்றால் ஆரிய திரட்டி - திராவிட திரட்டி சண்டை. அடுத்து டோண்டுவின் பன்முகங்களை கொசுபுடுங்கி என்பவர் தோலுரித்தது. இதற்கெல்லாம் குழுமனப்பான்மைதான் காரணம் என்கின்றனர் பலர். ஒற்றுமை என்பது இனி இல்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் முகம் மூடி எழுதும் பதிவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உட்தாரணமாக விட்டது சிகப்பு, முகமூடி, கொசுபுடுங்கி, குசும்பன், இட்லிவடை, வந்தியத்தேவன். இது ஆரோக்கியமான சூழலா?

குழு மனப்பான்மை என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே ஒரு குழுவாய்த்தான் வாழ்கின்றன. ஏன்... மனிதனே முதலில் தனித்தனியாய் இருந்து, பின்னர், ஒரு குழுவாய்ச் சேர்ந்து வாழ வேண்டியகட்டாயம் ஏற்பட்டதாகத்தான் வரலாறு சொல்லுகிறது.


புதிதாய்., முன்பின் தெரியாத,அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு இந்திய முகத்தைப் பார்க்க மாட்டோமா எனத்தான் நான் தேடினேன்.

அதுவே ஒரு தமிழ் முகமாயும் இருந்தபோது, என் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது. இதுதான் மனித இயல்பு.

இதுவே நம் வலைபூவிலும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

இது ஆரோக்கியமான சூழலா, இல்லையா என்பது கேள்வி அல்ல இப்போது.

இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.

அநேகமாக இங்கு எல்லாரும் ஏதோ ஒரு வகையில் 'முகம் மூடி'த்தான் எழுதுகின்றனர். இதில் இவர், அவர் எனப் பிரித்துப் பார்ப்பது தேவையில்லை எனக் கருதுகிறேன்.

சதீஷ் என்ற நீங்கள் 'விடாது கருப்பு' என்றும், சங்கர்குமார் என்ற நான் 'எஸ்கே' என்று எழுதுவதும், முகத்தை மூடி 'பூனை, முருகன்' போட்டுக் கொள்வதும் இது போல ஒன்றே!

இங்கு எல்லாரும் முகமூடிகள் தான்!


3)சென்ற நூற்றாண்டில் திரிக்கப்பட்ட இந்திய வரலாறுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விதிக்கப்பட்ட என்றால் அதன் பொருள் என்ன? படிக்காத உயர்ந்த வகுப்பினர் தலித்துகளைப் பீ அள்ளினால் அது பாவமா?

ஐந்து கேள்விகள்தான் கேட்க வேண்டும் என்பது சுடரின் விதி என்பதால் ஒரு கேள்வியிலேயே மூன்று கேள்விகளைத் "திணித்த" உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!:))

இது மூன்றுக்கும் ஒரு பொதுவான பதிலை அளிக்கவே நான் விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டை விட்டு இன்னும் சற்றித் தள்ளிப் போய் பிந்தைய வரலாற்றைப் பார்த்தால், நாம் எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்திருக்கிறோம்.

அதனைப் பிரதிபலிக்கும் வகையாகவா இன்றையப் பதிவுகள் இருக்கின்றன?

நீங்கள் முந்தையக் கேள்வியில் சொன்னது போல, எங்கு பார்த்தாலும் விருப்பு, வெறுப்பு, குழு, சண்டை... இவைதான்!


திரிக்கப்பட்டவை எல்லா இடங்களிலும், வல்லமை படைத்த எல்லாராலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் மனமே நமக்கு நிலை!
அதன்படி வாழவே நான் முயற்சித்து வருகிறேன்.

"விதிக்கப்பட்ட" என எதை நீங்கள் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த "விதிக்கப்பட்ட" சிலவற்றைச் சொல்லுகிறேன்.
உங்களுக்குப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.

என் பிறப்பு நான் கேட்டு வந்ததிலை என்பதால், அது 'விதிக்கப்பட்டது'.
எவருக்குப் பிறக்க வேண்டும் என்பதும் நான் கேட்டு வராததால், அதுவும் 'விதிக்கப்பட்டது'.
எந்த ஊரில், நாட்டில், மொழியில் பிறக்க வேண்டும் என்பதும் 'விதிக்கப்பட்டதே'... நான் கேட்டு வராததால்!
'குலம்', 'சாதி', 'இனம்' இவையெல்லாமும் நான் உருவாக்காததால், அதில் எதாவது ஒன்றில் நான் வந்து உதித்ததுவும், 'விதிக்கப்பட்டதே'!
இதில் எதுவும், எவரும் குறைவில்லை என்பது என் கருத்து!

இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!


இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே!


மேற்கூறிய இவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பினும், என்னளவில் மட்டுமே, எனக்குள் மட்டுமே இவை பெருமை பெறுகின்றன!
இவற்றை நான் போற்றுகிறேன்......எனக்குள் மட்டுமே....என் வீட்டுக்குள் மட்டுமே.... வெளியில் அல்ல!


இவற்றை வெளியில் பாராட்டும் போது, இதனைக் கொண்டு அடுத்தவரை எடை போட நான் முயலும் போது, நான் இந்தப் பெருமைகளை எல்லாம் இழக்கிறேன் என்பதினை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன் .

எவர் மலத்தையும் எவர் அள்ளுவதும் பாவமில்லை!
அள்ளாமல் விட்டால்தான் பாவம்!
மனித குலமே நாறிப் போகும்!
யாராவது ஒருவர் அள்ளத்தான் வேண்டும்!

இதில் தலித் என்ன, செட்டியார் என்ன, முதலியார் என்ன, நாடார் என்ன, பார்ப்பான் என்ன?
எல்லாம் ஒரே மலம்தான்!


4)தாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமுன் கடவுளை வேண்டுவீர்களா? அல்லது தங்களின் தொழிலின் மீதுள்ள திறமையை முழுவதுமாக நம்புவீர்களா?

என் திறமை இறைவன் எனக்குக் கொடுத்தது! எத்தனையோ மருத்துவர் இங்கிருக்க, எனை நாடி வந்த நோயாளி நலம் பெற வேண்டும் என என் முருகனை வேண்டிக்கொண்டு என் திறமையைக் காட்டுவேன்!

5)பிராமனர்கள் பொதுவாக தமிழை விட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையைத்தான் அதிகமாக வாழ்த்துவதாகவும் பாராட்டுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் வலைப்பதிவர்கள் தமிழில் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தில் வலைபதிய வேண்டியதுதானே? எனக்குத் தெரிந்து தாங்கள் நடுநிலையாளர். நல்ல சிந்தனையாளர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என்று சொன்னார்கள் பெரியவர்கள். தமிழை நீசபாசை என்பவனின் நாவை அறுக்காமல் பல பதிவர்கள் வடமொழியை உயர்த்திப் பேசுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறு எனக் கருதுகிறேன்.

ஒருவருக்குத் தாயை விட தந்தையை அதிகமாகப் பிடிக்கும், அல்லது தந்தையை விட தாயை அதிகம் விரும்புவார்கள். இதனால், அடுத்தவரை இழிவாகக் குறிப்பதாக எண்ணுவது மதியீனம்.

ஸம்ஸ்கிருதத்தை ஒருவர் விரும்புவதால் அதனைக் கொண்டு அவரது தமிழ்ப்பற்றை கேள்வி கேட்ட்பது, தாயைச் சந்தேகிப்பதை ஒக்கும் என நான் கருதுகிறேன்.

'நீசபாஷை என்பது வடமொழி........ 'காட்டுமிராண்டி மொழி' என்பது தமிழ். ....அவ்வளவுதான் இதில்!


இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!

உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன், சுடரின் விதிமுறைகளைப் பார்த்தேன்.. அதில், ஒன்பதாவது விதியாய் இப்படிச் சொல்லி இருக்கிறது!

ஆனால், கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.


இச்சுடரை ஏற்றி, நம் மீது நம்பிக்கை வைத்து, இது மனிதநேயம் மலர வழி வகுக்கும் எனச் சொல்லி மறைந்த அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் இசுசுடரை நம் ஆன்மீகச் செம்மலாம் குமரனுக்கு அனுப்பி மனிதம் வாழ வகை செய்ய வேண்டுமாய்க் கேட்டு அனுப்புகிறேன் இந்த சுடர் .... ஆத்திகச் சுடர்....... எங்கும் பரவட்டும்!

அன்பு குமரனுக்கு என் ஐந்து கேள்விகள்!

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?.

2.. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?


ஆத்திரச் சுடர் அடங்கி, ஆத்திகச் சுடர் ஒளிரட்டும்!
அன்பே சிவம்!

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html
http://www.thenkoodu.com/sudar.php

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP