Monday, February 13, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47” [43]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47”


43.

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே.

தூசு ஆம் மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

‘முன்னாடியே சொன்னேன்ல? இந்த அநுபூதிப் பாட்டுங்கள்லாம் ஒரு கொத்து கொத்தாப் பாடியிருக்கருன்னு! இதுக்கு முந்திவந்த ரெண்டு பாட்டோட இத்தயும் சேத்துப் படிச்சீன்னா, ஒரு ஒத்துமை ஒனக்குப் புரியும்!
அநுபூதின்னா இன்னா? அது எப்பிடி இருக்கும்? அது வந்துச்சின்னா இன்னான்னால்லாம் செய்யும்னு சொல்லிட்டு, இந்தப் பாட்டுல, அருணகிரியாரு, இந்த அநுபூதி எப்பிடி, எதுனால வந்திச்சுன்னு வெளக்கமாச் சொல்றாரு!

இந்தப் பாட்டைப் பார்த்தியானா, ஒரே வரியை ஒடைச்சுப் போட்டு, நாலு வரியுல ஒரு பெரிய உண்மையைச் சொல்றாருன்னு புரியும்! , அதாங்காட்டிக்கு,,

‘தூசாமணியும் துகிலும் புனைவாள் நேசா! முருகா! நினது அன்பருளால் ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’

இதுவரைக்கும், முருகனோட அருள் கிடைக்கணும்னா, நாம எத்தெல்லாம் பண்ணணும்? எத்தெல்லாம் வுடணும்? என்னெல்லாம் செய்யணும்னு வெலாவாரியா சொல்லிக்கினே வந்த அருணகிரியாரு, இனி வரப்போற கடைசி பாட்டுங்கள்ல, நேரா விசயத்துக்கு வராரு!

நிகளம்’னா வெலங்கு! நம்மையெல்லாம் பிடிச்சிருக்கற வெலங்கு! வெ[வி]லங்குன்னா ரெண்டு அர்த்தம்!

ஒண்ணு போலீஸ்காரன் மாட்டற வெலங்கு!
இன்னோண்ணு, மிருகம்!

இந்த ஆசைன்றது க்கீதே, அது இந்த ரெண்டு மாதிரியும் காரியம் பண்ணும்!

நம்மள பூட்டியும் வைக்கும்! மிருகமாவும் ஆக்கிறும்!

இந்த வெலங்கு ஒடைபடணும்! ஒடையணும்!
இது ஒடைஞ்சாத்தான், அநுபூதி பொறக்கும்!

இத்த ரொம்பத் தெளிவாச் சொல்லிடுறாரு இதுல!

‘ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’ன்னு!

சூட்சுமமா இதுக்குள்ள, ஒரு சங்கிதியும் சொல்றாரு!

அநுபூதின்னா அது ஒரு பேசா நிலைன்னு!

அதாவுது, இது வந்திருச்சின்னா, பேச்சு நின்னிறும்!
அதுக்கப்பால, வேற பேச்சே வராது!
அதான், ‘பேசா அநுபூதி!!’.... ஒரு மாதிரியான மோன நிலை!

இத்து இன்னா தானா வந்திருமா?
நீயும், நானும் நெனைச்சவொடனே அப்பிடியே பொறந்திருமா இன்னா?

அதுக்கும் ஒரு அருள் வேணும்!

அதுவும் சாதாரணமான அருளுல்லாம் போறாது!
அன்போட கூடின அருளு வேணும்!

அத்தயும் குடுக்கறவந்தான் குடுக்க முடியும்!

அதான், அவந்தான் முருகன்!

நினது அன்பருளாலத்தான் இந்த வெலங்கை ஒடைக்கணும் முருகான்னு அவர்கிட்டயே வேண்டறாரு அருணையாரு!

இரு, இரு! இப்ப நீ இன்னா கேக்க வரேன்னு புரியுது!
இதுக்கும், மொதவரிக்கும் இன்னா சம்மந்தம்னுதானே கேக்க வரே!?? சொல்றேன்! அவசரப்படாதே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

ரொம்ப ரொம்ப அருமையா இந்த வார்த்தைங்களப் போட்டிருக்காரு அந்த பெரிய மனுசன்!

இதுவரைக்கும் வந்த பாட்டுங்கள்ல அடிக்கடி சொன்ன ஒரு விசயத்துக்கான காரணத்த, இந்தப் பாட்டுல நாயப் [நியாயப்] படுத்தறாரு அருணகிரியாரு!

இச்சா சக்தியான வள்ளியம்மா காலுல சதா சர்வ காலமும் வுளுந்து கெடக்கற முருகான்னு எப்பப் பாத்தாலும் சொல்லிக்கினே வருவாரு இவுரு!

அப்பிடி இன்னா 'ஸ்பெசலு' இந்த வள்ளியம்மான்னு ஒனக்கு ஒரு ‘டவுட்டு’ வரும்! …. வரணும்! அதான் நாயம்!

இந்தப் பாட்டோட மொத வரியுலியே அதுக்குல்லாம் ஒரு ‘ஆன்ஸர்’ குடுத்திடறாரு!

‘தூசா மணியும், தூசா துகிலும் புனைவாள் நேசா! முருகா!’ன்னு!

அந்தம்மா போட்டுக்கினு க்கீற முத்து மாலையும் சரி, உடுத்திக்கினு க்கீற சேலையும் சரி, துளிக்கூட அளு[ழு]க்கே இல்லாத, வெள்ளை வெளேர்னு மின்னுதாம்!

அப்பிடியாப்பட்ட வள்ளியம்மாவோட நேசா! என்னோட முருகா’ன்னு மொத வரியுல கொஞ்சறாரு அருணகிரியாரு!

இன்னாத்துக்காவ இத்தச் சொன்னார்ன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

எனக்குள்ளாற ஆசை இருக்கு முருகா! அத்த,… அந்த வெலங்கை நீதான் அறுக்கணும்னு சும்மானாச்சிக்கும் வேண்டினா மட்டும் போறாது!

அந்த வள்ளியம்மா......., கொறக் குலத்துல பொறந்தாக்கூட,... கொஞ்சங்கூட அளு[ழு]க்கே இல்லாம இருக்கறதாலத்தான், அந்தம்மா காலடியுல நம்ம கந்தன் வுளுந்து கெடக்கறாரு!

அதும்மாரி, நமக்குள்ள எத்தினி ஆசைங்க இருந்தாக்கூட, அதெல்லாம் சுத்தமானதா இருக்கணும்! அப்பத்தான், முருகனும் அத்த ஏத்துக்கினு, ஒனக்கு அருள் பண்ணுவான்றத பூடகமா இந்த வரியுல சொல்லி க்கீறாரு அருணையாரு! இன்னாங்க சாமி நான் சொல்றது?’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

‘இதுக்கப்பறம் நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? இருந்தாக்கூட, சொல்லணும்னு தோண்றது!

‘பொறந்தது’ன்னு சொன்னாரே! அதுலியே, இது தனக்குத்தான் பொறந்ததுன்னு நிஸ்சயமாச் சொல்லிக் காண்பிச்சுட்டார்னு எனக்குப் படறது!

‘காலவழுவமைதி’ன்னு இலக்கணத்துல ஒண்ணு இருக்கு!

‘பிறந்தது’ன்னா இறந்தகாலம்!

ஆனாக்க, இதுல அப்பிடி இல்லாம, இந்தப் ‘பிறந்தது’ன்றது, முக்காலத்துக்கும்,...... இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்னு....... மூணுத்துக்குமே பொருந்தி வரும்!

வந்துது, வந்திருக்கு, வரும்னு எல்லாத்தையுமே சொல்ற அற்புதமான வார்த்தையை அருணகிரிநாதர் ரொம்ப அழகாப் போட்டுருக்கார்! இது 'வழா அமைதி'!!

இன்னொரு ‘சித்தியார்’ பாடல்தான் இப்ப ஞாபகத்துக்கு வருது!

‘விச்சையி னிராகந்தோன்றி வினைவழி போகத்தின்கண்
இச்சையைப் பண்ணிநிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சாஞானக் கிரியைமுன் மருவியான்மா
நிச்சயம் புருடனாகிப் பொதுமையி னிற்பனன்றே.'

இந்த லோக வாழ்வுல நாம எப்பிடி மாட்டிக்கறோம்ன்றதை இந்தப் பாட்டுல சித்தியார் ‘சுபக்கம்’ 56ல ரொம்ப நன்னா சொல்லியிருக்கார்!

‘வித்தை'’ன்னு ஒண்ணு இருக்கு. அதுல ‘அராகம்’ன்ற அவா தோணி, இந்த லோக வாழ்க்கையுல நமக்குல்லாம் ஒரு ஆசையை உண்டு பண்ணும்!

இச்சை, அறிவு, செயல்னு வந்து ஆன்மாவுல பதிக்குமாம்!

இந்தக் ‘காலம், நியதி, கலை, அராகம், வித்தை’ன்ற அஞ்சும் ஆன்மாவோட சேர்றப்ப, அதைப் ‘புருடன்’ன்னு சொல்லுவா!

இந்த ‘புருடன்’றவந்தான் இத்தனை இம்சையும் இங்கே பண்றவன்!

இவந்தான் நமக்கெல்லாம், இந்த பொண்டாட்டி, புருஷன், புள்ளை, பொண்ணு, பேத்தி, பேரன்னு ஒரு விலங்கைப் பூட்டி, நம்மளையெல்லாம் இந்த பந்தத்துல மாட்டி வைச்சு ஆனந்தப் படறான்!

இந்த விலங்கை அவனோட.... அந்தக் கந்தக் கடவுளோட... அன்பும், அருளும் மட்டுமே உடைக்கமுடியும்ன்றதை, ரொம்பவே அருமையா இந்தப் பாட்டுல அருணகிரிநாதர் சொல்லி அருளியிருக்கார்! அதுக்கு நாமளல்லாம் தயாராகறணும்னா, இந்தத் தூய்மைன்ற ஒண்ணு நம்மகிட்டே இருக்கணும்! இதைத்தான் இந்தப் பாட்டுல சொல்லிக் காமிக்கறார்! என்னோட பரிபூர்ணமான நமஸ்காரத்தை அந்த மஹானுபாவனுக்கு சொல்லிக்கறதைத் தவிர வேற என்ன நான் பண்ண முடியும்’ எனக் கண் கலங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘ஓம் சரவணபவ’ எனச் சொல்லமுடியுமே! என்பது போல நாயரின் உச்சாடனம் தொடர்ந்தது!
*****************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP