Thursday, February 10, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

கந்தரநுபூதி: 6

'சரி! முதல் அஞ்சு பாட்டுக்குச் சொல்லிட்டே! இப்ப அடுத்த பாட்டைப் படிக்கவா?' என்றேன்.

மன்னாரை இரண்டு நாட்களுக்குப் பின் பார்த்து, மீண்டும் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில், நால்வரும் கூடியிருந்தோம்!

'அதுல சொன்னதுல்லாம் நல்லாப் புரிஞ்சிருந்திச்சுன்னா, இப்ப வரபோற பாட்டு ஈஸியாப் புரியும்! எங்கே. அத்தப் படி, கேப்போம்!' என்றான் மன்னார்!

நேரத்தை வீணாக்காமல் படித்தேன்!

மகமா யைகளைந் திடவல் லபிரான்
முகமா றுமொழிந் துமொழிந் திலனே
அகமா டைமடந் தையரென் றயருஞ்
செகமா யையுணின் றுதயங் குவதே.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே.

முருகனைப் பாத்துட்டாரு! கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட்டாரு! ஆனந்தத்துல கூத்தாடினாரு! அவரைக் கட்டித் தொல்லைப் படுத்துற ரெண்டு வெலங்கையும் களட்டச் சொல்லிக் கெஞ்சினாரா? இப்ப, இத்தினியும் ஆனதுக்கப்பாலியும், மறுபடியும் பொலம்பறாரு!
இன்னான்னு?

நீ இன்னாருன்னுக் கண்டுக்கினேன்! நீயே எதுக்க வந்து, 'பேச்சையெல்லாம் வுட்டுட்டு சும்மா இருடா!'ன்னு சொன்னதியும் கேட்டேன்! ஆனாக்க, இன்னும் எனக்கு புத்தி வரலியே! அகம்னா வூடு, மாடுன்னா செல்வம்; மடந்தையர்னா பொண்ணுங்க!


இப்பிடி,இந்த வூடு, சொத்து, சொகம், அளகான பொண்ணுங்கன்னு இன்னான்னமோ மாயையுல சிக்கிக்கினு இன்னமும் அல்லாடறேனே! இதுங்கல்லாம் என்னியப் போட்டுப் பொரட்டிப் பொரட்டி எடுக்குதுங்களே! அதுலேர்ந்து வெளியே வர்றதுக்கான வளி[ழி] தெரியாமத் திண்டாடித் தெருவுல நிக்கறேனே! வுடணும்னுதான் மனசு நெனைக்குது! ஆனா, அடுத்த செகண்டே ஒரு சபலம் வந்து தட்டுது! இன்னாத்துக்காவ இத்தயெல்லாம் வுடணும்னு இன்னோரு மனசு கேக்குது! அதானே! இன்னாத்துக்குன்னு இன்னொரு கொரலு சவுண்டு வுடுது! இன்னா பண்றதுன்னே தெரியாம இப்பிடித் தத்தளிக்கிறேனேன்னு மருகறாரு!

இன்னான்னமோ மாயையெல்லாம் சும்மா பொசுக்குன்னு தம்மாத்தூண்டு நேரத்துல 'ப்பூ'ன்னு ஊதித் தள்ளற சாமியே எதுருல வந்து சொன்னாக்கூடக் கேக்காத சென்மமாப் பூட்டேனேன்னு கதறுறாரு!

அதுவும் சும்மாவா சொன்னாரு? ஒரு வாயி இல்ல; ரெண்டு வாயி இல்ல! ஆறு மொவத்துலேர்ந்தும் ஆறு வாயால அமுதமாச் சொன்னாரு! அப்பவும் கேக்க மாட்டேங்குதே இந்த மனசுன்னு கண்ணால தண்ணி வுடறாரு!

நேத்து கூட ஃபோன்ல எனக்குப் படிச்சுக் காமிச்சியே! மாணிக்கவாசகரு சொன்னத எளுதியிருக்கர்னு சொன்னியே... அதும்மாரி, ஒன்னிய நல்லா ஆசைதீரப் பாத்ததுக்கப்பாலியும், நீ ஆறுமுகமா வந்து சொன்னதக் கேட்டதுக்கப்புறமும் எனக்குப் புத்தி வரலியே.... அது இன்னா சொன்னே? ஆங்!... புன்மை... அந்தப் புன்மை என்னிய வுட்டுப் போவலியேன்னு உருகுறாரு!

எதுக்காவ இந்த எடத்துல ஆறுமுகமேன்னு சொன்னாருன்னு கெவனி !
இப்ப, ஒனக்கு இருக்கற ரெண்டு கண்ணால நீ என்னியப் பாக்க முடியுது... நான் எதுத்தாப்புல க்கீறதால!


அதுவே பின்னாடியும் ஒரு மொகம்! அதுல ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அப்ப பின்னாலியும் பாக்க முடியும்!
ஆனாக்காண்டிக்கு, சைடுல பாக்க முடியாது ஒன்னால!


சரி நாலு பக்கமும் நாலு தலை...ரெண்டு ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அதுங்கூட அல்லாத்தியும் பாத்திரும்னு சொல்ல முடியாது!

ஆனா, ஆறு கோணத்துலியும் ஆரு மொகம்;;; அதுல ஒண்ணொண்னுலியும் தலா ரெண்டு ரெண்டு கண்ணு!
கணக்கு படிச்சவங்களைக் கேட்டியானா சொல்லுவாங்க....... அப்ப, மொகத்தத் திருப்பாமலியே அல்லாத்தியும் பாத்துற முடியும்! தலைக்கும் மேலே கூட பாக்க முடியும்!
அப்படிப் பாக்கறப்ப, எந்தப் பக்கத்துலேந்து மாயை வந்தாலும் நம்மளால பாக்க முடியும்!

நமக்குத்தான் அப்பிடி இல்லியே!
ஆனா முருகனுக்கு மட்டுந்தான்ஆறு மொகம், பன்னெண்டு கண்ணு!
அதுனால அவரைக் கூப்புட்டு காவலா வரச் சொல்றாரு!
யப்பா! முருகா! ஆறுமுகனே! நீதான் இந்த மாயைலேந்து என்னியக் காப்பத்தணும்னு கூப்புடறாரு!

அப்பிடி அவரே வந்து, 'தோ, பாரு! ஜாக்கிரதியா இரு'ன்னு காபந்து பண்ணினாக்கூட, தன்னோட ஆறு வாயாலியும் சொன்னாக்கூடக் கேக்க மாட்டாம, இத்தயெல்லாம் விட்டொளிக்காம, ரெண்டு பக்கமும் எரியுற குச்சிக்கு நடுவுல சிக்கிக்கின எறும்பு மாரி, இந்தப் பக்கமும் போகமுடியாம, அந்தப் பக்கமும் போகமுடியாம, இப்பிடி கெடந்து தவிக்கறேனேன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

இதுல நீ இன்னொண்ணக் கெவனிக்கணும்!

ரெண்டே ரெண்டு பேராலத்தான் இப்பிடி நேரடியா, தெகிரியமாச் சொல்லமுடியும்!


ஒண்ணு,... நெசமாவே இப்பிடி அனுபவிக்கற ஒரு ஆளால, தான் பாத்து அனுபவிச்சதெல்லாம் , இப்பிடி தன்னோட நடத்தையால மறைஞ்சு போச்சே'ன்னு அங்க மாணிக்கவாசகர் திருவாசகத்துல உருகுறாரே அதும்மாரி ஆளால!

ரெண்டாவதா,.... ஞானம் கெடச்சதுனால, தான் வேற, நீ, நானுல்லாம் வேறன்னு பிரிச்சுப் பாக்ககூட முடியாம, இந்த ஒலகத்துல க்கீற அத்தினியியுமே தானாப் பாக்கற ஆளால!


மத்தவங்க கெடந்து அல்லாடுறதக் கூட தன்னோடதா எடுத்துக்கினு, 'வாடின பயிரைப் பாத்தப்பால்லாம் நானும் வாடினேன்'ன்னு அளுதாரே ராமலிங்க சாமியாரு.. அதும்மாரி பாக்கறவங்க!

இந்த ரெண்டு பேருங்கதான் இப்பிடி எத்தயும் மறைக்காம, உண்மையைப் பேசுவாங்க!
அவங்களால மட்டுந்தான் இப்பிடில்லாம் அளமுடியும்! நாம அளுவுறதுல்லாம், 'இத்தக் குடு! அத்தக் குடு'ன்னு கேக்கறதுக்கு மட்டுந்தான்!

இருக்கற ஒவ்வொரு செகண்டுலியும், 'எனக்கு ஒன்னோட தெரிசனத்த நீ எப்பவுமே எனக்குக் காட்டுறமாரி, என்னிய இருக்கச் செய்யுப்பா'ன்னு அளுவுறதுதான் நெசமான அளுகை!
மத்ததுல்லாம் சும்மா ...டுபாக்கூரு சமாச்சாரம்!' எனச் சற்று உணர்ச்சியுடன் சொன்னான் மயிலை மன்னார்!
இன்னவெனச் சொல்லவியலாத ஒரு மௌனம் அங்கே நிலவியது!
மன்னார் எங்களைப் பார்த்து லேசாகச் சிரித்தான்!
***********
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP