Saturday, June 28, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.

எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.

இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.

நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.

15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய விட்டுவிட்டேன்!

'உங்க வீட்டுல 15 பேருக்குத்தான் சாப்பாடு சமைச்சிருக்கீங்க! ஆனா, ஒரு 20 பேரு சாப்பிட வந்திட்டாங்க! சாப்பாடு இல்லை! போடான்னு அவங்களைத் திருப்பி அனுப்பிடுவீங்களா?' என்றாராம் காமராசர்!

கல்லூரி முதல்வர் திகைத்தார்!

'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' எனச் சொல்லி, கல்வியமைச்சரைக் கலந்து ஆலோசித்து, அதன் பின்னே மாலை நேரக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் செய்தி.

இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வை நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான தமிழ்மணப் பதிவர், தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னார்கள்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வின் மகன் மருத்துவ சீட் கிடைக்க விண்ணப்பிக்கிறான்.

கூடவே, தேசபக்தரும் தமிழக முதல்வரின் நண்பருமான, தன் தாத்தாவைப் போய் கேட்கிறான் பேரன்.

தாத்தாவும் பாசத்தின் காரணமாய்ப் பேரனைக் கூட்டிக் கொண்டு காமராசரைப் பார்க்கப் போகிறார்.

ஒரு அரை மணி நேரம் பேசிய பின், ரெட்டியார் கிளம்புகிறார்.

காமராசர் சிரித்தபடியே, 'என்ன ரெட்டியார், வந்த விஷயத்தைப் பேசாமலியே கிளம்பறீங்க போல!' என்கிறார்.

'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.

அப்படி இருந்ததாம் அந்தக் காலத்தில்.!!!

Read more...

Tuesday, June 24, 2008

"தமிழன்னை தந்த செல்வம்"

"தமிழன்னை தந்த செல்வம்"



செட்டிநாட்டிலே பிறந்தான் செந்தமிழும் இவன் கற்றான்
நெக்குருகும் பாட்டமைத்து நாட்டிலே உலவவிட்டான்
எப்படியிவன் வாய்மொழியில் இத்தனையும் வருகுதென்று
கேட்டவரை ரசித்தவரை எல்லாரையும் வியக்க வைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

சொன்னபடி கேட்கும் தேன்மொழிகள் பிறந்துவிடும்
சின்னக் குழந்தைக்கும் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணன் வரம் தந்து இங்கு வந்த கண்ணதாசன்
அன்னைத்தமிழுக்கு மாறாத அழகு சேர்த்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

கையசைவில் கருத்து வரும் கண்ணசைவில் பாக்கள் வரும்
இம்மென்னும் முன்னாலே எத்தனையோ சந்தம் வரும்
பாடாத பொருளில்லை இவன் பேசாத கருவில்லை
ஒவ்வொன்றும் மனம் களிக்கும் சந்தமிகு தமிழ்ப்பாட்டு
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

சோகத்தைப் பிழிந்தெடுப்பான் சுகராகமும் பாடிடுவான்
ஏக்கத்தைத் தவிர்க்கின்ற வீரமிகு பாடல் தந்தான்
காதலர்கள் மகிழ்ந்திடவே களங்கள் பல அமைத்திருந்தான்
வாழ்வதற்குத் தேவையான தத்துவங்கள் சொல்லிவைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

இருந்தவரை அரசனானான் இறந்தபின்னும் பேசப்பட்டான்
வீற்றிருந்த அரியாசனம் நிரப்புதற்கோர் ஆளில்லை
மன்னுபுகழ் உள்ளளவும் மகராசன் பேரிருக்கும்
சின்னஞ்சிறு பிள்ளைகளும் இவன்பெயரைச் சொல்லி நிற்கும்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

[இன்று ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள். என் பங்குக்கு ஒரு எளிய அஞ்சலி!]

Read more...

Sunday, June 22, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு!"

"இதுதாண்டா தமிழ்நாடு!"



இன்று நான் கேட்ட ஒரு செய்தி!

நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்

கிடைக்கவில்லை!

தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!

அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!

தனக்கா சீட் இல்லை?

குமுறுகிறான்.

தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.

தந்தை முதல்வரிடம் சென்று செய்தியைச் சொல்கிறார்.

விவரத்தைக் கேட்ட முதல்வர், கல்லூரி முதல்வருக்கு தொலை பேசுகிறார்.

முதல்வரிடமிருந்தே அழைப்பு வந்ததைக் கேட்ட முதல்வர் பதறுகிறார்.

'இல்லை ஐயா! 15 இடங்கள்தான் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாணவன் பதினாறம் இடத்தில்... அதான்...' எனப் பணிவாகத் தெரிவிக்கிறர்.

கல்வி அமைச்சருக்கு அடுத்த தொலைபேசி.

அவரும் 15 இடங்கள்தான் என உறுதிப் படுத்துகிறார்.

இதனால் நல்ல திறமையான மாணவர்கள் வீணாக்கப்படுகிறார்களே, என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.

மாலை நேரக் கல்வித் திட்டம் பிறக்கிறது.

இவர்களையும் அரவணைத்துக் கொள்ள, இடங்களின் ஒதுக்கீடு இப்போது முப்பதாக உயர்கிறது.

எம்.எல்.ஏ. ஐ அழைக்கிறார்.

'சீட்டு இப்போ முப்பதா அதிகப் படுத்தியாச்சு. ஒன் பையன் பதினாறுன்னு நினைச்சு சீட்டு உறுதின்னு நெனைச்சுக்காத. விண்ணப்பிக்கச் சொல்லு. முப்பதுக்குள்ள வந்தா கிடைக்கும். சரியா!' என்கிறார்.

தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு!

Read more...

Sunday, June 15, 2008

தந்தையென்னும் ஓர் தெய்வம்!

"தந்தையென்னும் ஓர் தெய்வம்"!

தந்தையென்னும் ஓர் தெய்வம்
தரணியிலே எனக்கெனவே
இங்குவந்து என்னையாண்ட
கதையினையே சொல்லிடுவேன்

என்னுயிரைக் கருவாக
என்னன்னை சுமந்திடவே
வித்தாகத் தந்தானிவன்
இவன்பெருமை என்சொல்வேன்

கனிவொன்றே காட்டியென்னைத்
தாயவளும் வளர்த்தாலும்
கொடுமையான உலகிதினிலே
வாழும்வழி சொன்னவனிவன்

கைப்பிடித்து கூட்டியெனைக்
கடைத்தெருவில் பஞ்சுமிட்டாய்
வாங்கித்தந்த அந்தநாளை
நினைவுகூர்ந்து இன்புறுவேன்

அரிச்சுவடி சொல்லித்தந்து
அகரமெலாம் படித்திடவே
அறிவான கல்விதந்து
அரவணைத்த ஆசானிவன்

தன்தொழிலைத் தொடர்ந்திடவே
தன்மக்களில் ஒருவராயினும்
வருவாரோ வெனநினைத்தும்
அவரவரை ஆதரித்தான்

மருத்துவத்தில் இவர்போல
யான்வரவே வேண்டுமெனக்
கால்கடுக்க இவன் நடந்த
காட்சியினை மறப்பேனோ

மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை

இறுதிநிலைப் படிப்புநிலை
இங்கிவனோ மாரடைப்பில்
என்மடியில் சாய்ந்தபடி
உயிர்விட்டான் என்னவனும்

வாழ்ந்திட்ட நாட்களையே
மகிழ்வுடனே நினைவுறுவேன்
அன்பொன்றே காட்டிநின்ற
மன்னவனை எண்ணுகிறேன்

தன்மகனை அன்றொருநாள்
வேறெவரோ குறைசொன்ன
சேதிகேட்டுப் பொங்கியெழுந்து
சண்டையிட்ட நிகழ்வினிது

வேற்றூரில் பணிசெய்யப்
போனாலும் மறக்காமல்
எனையணைத்து முத்தமிட்டு
சென்றிட்ட நாளினிது

எதிர்வருவோர் யாரென்றே
தெரியாது ஓர்நாளில்
வேகமாக ஓடிவந்து
தந்தைமேலே மோதிவிட்டேன்

அடிப்பாயோ எனும்பயத்தில்
நீர்வழிய அழுதுவிட்டேன்
'பார்த்துப்போடா' எனச்சொல்லி
சிரித்தபடி நீ நகர்ந்தாய்

நீமறைந்து நாளாச்சு
நினைவின்னும் அகலவில்லை
நினையெண்ணா நாளொன்றும்
இதுவரையில் எனக்கில்லை

போதனைகள் புகட்டியதில்லை
புத்திமதிகள் சொன்னதில்லை
அன்பொன்றே காட்டிநின்றாய்
அதையின்னும் மறக்கவில்லை

ஒற்றையாகப் பிறந்தாலும்
பலரையுமே நீயணைத்தாய்
பாசமென்பது என்னவென்றே
நீ காட்டித்தான் யானறிந்தேன்

நின்புகழை யான்போற்ற
செய்வதென்று ஒன்றுண்டு
அன்பென்னும் ஓர்பொருளை
அனுதினமும் காட்டுவதே

தந்தையர் தினத்தன்று
தந்தையே நினக்காக
யானிங்கு செய்வதுவும்
அன்புடனே வாழ்வதுவே!

அன்பே சிவம்!
அன்பே என் தந்தை!


அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!

Read more...

Friday, June 13, 2008

தசாவதாரம் - விமரிசனம்

தசாவதாரம் - விமரிசனம்



அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரிச்சு, அரங்கத்துக்கு.
இரவு எட்டேகாலுக்குப் படம்னு சொன்னாங்க. எட்டேமுக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாங்க.
சுமார் 300 பேர் அமரக்கூடிய அரங்கத்தில், ஒரு 30 - 40 சீட்தான் காலியாயிருந்திருக்கும்.
டிக்கட் விலை வழக்கமான 15 டாலர்தான்!

ஏத்திவிட்டு, ஏத்திவிட்டு, வரிசையா ஊத்திகிட்ட கமல் படங்களைப் பார்த்து ஏமாந்து போனதால, இந்தப் படத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன்.
சொல்லப்போனா, இது வெற்றியடையணும்னு கூட நினைச்சேன் .

படம் தொடங்கி, கமல் பேரு வந்ததும் வழக்கம்போல விசில் சத்தம்!

மொத சீனே, ஒரு ஏரியல் ஷாட்! அப்படியே சென்னையை, ஒரு விமானம் தரையிறங்கறப்போ எப்படி இருக்கும்னு காட்டறாங்க! ரொம்ப நல்லா இருந்திச்சு
தொடர்ந்து நேரு அரங்கத்துல, கலைஞர், பிரதமர், அமெரிக்க அதிபர் இவங்களுக்கு மத்தியில, உலகநாயகன், இந்த உலகத்தையே ஒரு பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தினதுக்காக விருது வாங்கறாரு.

அப்படியே ஒரு ஃப்ளாஷ் பேக்!

சோழர் காலத்துக்கு.....
வேறு மதங்கள் இல்லாததுனால, எப்படியும் சண்டை போட்டே ஆவணும்னு இருக்கற மனுசன், சிவனா, பெருமாளான்னு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்களாம். சிதம்பரத்துல இருந்த ரங்கநாதர் சிலையை, சோழ மன்னன் தூக்கிக் கடல்ல போட ஆளனுப்பறான்.
ராமானுஜதாசன்ற ஒரு வைஷ்ணவர் [க- 1]இதைத் தடுக்க முயற்சி பண்ணி, தோத்துப் போயி, அவரும் பெருமாளோட கடலுக்குள்ள போயிடறாரு. அவ்ளோதான். இதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுருது.

ஆனா, காட்சியோட பிரம்மாண்டம் அப்படியே ஆளை உலுக்கிடுது. சரி, ஒரு நல்ல வேட்டை இருக்குன்னு நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

அப்படியே நேரா 2004 அமெரிக்காவுக்கு வர்றோம்.
கமல் இப்ப ஒரு உயிரியல் நுட்பொருள் விஞ்ஞானி. கோவிந்தராஜன்னு பேரு [க- 2] உலகத்தையே அழிக்கக்கூடிய ஒரு வைரஸ் கிருமியை ஒரு இத்துனூண்டு டப்பால போட்டு அடைச்சு வைச்சிருக்காரு. இவருக்கு ஒரு பாஸ்... திருட்டாளு அவரு. இதை வேற எவனுக்கோ வித்துறணும்னு திட்டம் போடறாரு.

அப்போத்தான், நம்ம புஷ்ஷு.. அதாங்க அமெரிக்க அதிபரு.. [க- 3] அவரு டிவியில வந்து, அமெரிக்காவைக் காப்பாத்த நாமளும் இதுபோல ஆயுதம் வைச்சுக்கணும்னு சொல்றாரு. திருட்டு பாஸ் ஒரு ப்ளான் போட, நம்ம கோவிந்தராசு அதை முறியடிச்சு, வைரஸை லவுட்டிகிட்டு, தன்னோட நண்பன் வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிறாரு.......

இப்ப கதையை எதுக்கு சொல்றே? படத்தைப் பத்திச் சொல்லுன்னு தானே அடிக்க வர்றீங்க! இதோ பிடிங்க.

முதல் 15 நிமிஷம் ஒரு மாபெரும் சரித்திரப்படத்தைப் பார்க்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் ஹே ராம் வாசனை அடிச்சாலும் கூட.

கமலோட 10 அவதாரத்துல,[ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், புஷ், அமெரிக்க ஆர்னால்ட், ஜப்பானிய அண்ணன், அவ்தார் சிங்,பாட்டி, பல்ராம் நாயுடு, பூவராகன், காலிஃபுல்லா] மனசுல நிக்கறது ரெண்டே ரெண்டு பேர்தான்.
பல்ராம் நாயுடு, பூவராகன்.

இத்தனை ரோலையும் இவரே செஞ்சிருக்கணுமான்னு மனசுல பட்டுகிட்டே இருந்திச்சு.

இதைப் பிரகாஷ்ராஜ் நல்லாப் பண்ணியிருப்பாரே, இதை நாஸர் பிச்சு ஒதறியிருப்பாரே, ஒரு லக்ஷ்மியோ, சுகுமாரியோ இதைப் பண்ணியிருக்கலாமேன்னு தோணிச்சு.

இவ்வளவு கஷ்டப்பட்டு, என்ன பிரமாதமாகச் செய்துவிட்டார்னு பார்த்தா, மனசுல ஒரு வெறுமைதான் மிஞ்சியது.

செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.

முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்து ஒரு அரை மணிக்கு வரும் காட்சிகள் தெளிவாகப் புரியவைக்க இயக்குநர் தவறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து வருகின்ற துரத்தல் காட்சிகள், ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதை ஒத்துக் கொண்டாலும், இதை அவர்களே இன்னமும் நல்லாச் செய்வாங்களே என்ற எண்ணமே மிஞ்சுகிறது.

ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல. நம்மவர் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது என்பதைக் கமலும் கூட உணர்ந்துகொள்ளாதது நம் துரதிர்ஷ்டமே!

ஒரு 'சேஸ்' கதையில் இத்தனை பாத்திரங்கள் வருகிறார்கள். இவை அத்தனையையும் ஒருவரே செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்கு கமல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் எனவே நான் கருதுகிறேன்.

நவராத்திரியில் நடிகர் திலகம் நடித்ததற்கும், தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

அசினின் பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவர் 'பெருமாளே' எனச் சொல்லும்போதெல்லாம் ஓங்கி அறையலாமா என எரிச்சலே வருகிறது.

பலராம் நாயுடு பாத்திரத்தில் கமல் கலக்கியிருக்கிறார். அதுகூட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாலையாவை நினைவூட்டுகிறது. இருந்தாலும் சுகமாக ரசிக்கலாம்.

பூவராகன் பாத்திரம், நன்றாகவே செய்திருந்தாலும், கதைக்குத் தேவையே இல்லாத ஒன்றாக ஒட்டாமல், தனிக்கதையாகப் போய்விடுவது பெரிய சோகம். கபிலனின் கவிதை வரிகள் இதம்!

இசை மிகப் பெரிய ஏமாற்றம். மல்லிகா ஷெராவத் பாடும் பாடலின் ஒரு குறிப்பிட்ட வரிகளைக் கேட்கும் போதெல்லாம்,
"எந்தத் தொழில் செய்தாலென்ன, செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே" என்னும் 'தேவுடா தேவுடா' பாடல் நினைவில் வந்து தொலைக்கிறது.

பின்னணி இசை தேவி பிரசாத். காட்சிகளுக்குத் தக்கவாறு ஒலியெழுப்பி விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். அசத்தி இருக்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கமல் மிகவும் உழைத்திருக்கிறார்; கஷ்டப்பட்டிருக்கிறார்; கடைசியில் வரும், 'உலக்க நாயகனே' பாடலின் போது இதை வேறு காட்டி நம்மையும் கஷ்டப்படுத்துகிறார் ரவிக்குமார்! இவ்வளவு தடிமனான தோலை முகத்தில் மறைத்தபின் என்ன முகபாவம் அதிலிருந்து கமலால் காட்டமுடியும்? ஏதோ வெளுத்த பிரேதத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.[கமல் ரசிகர்கள் மன்னிக்க!]

காமிரா பிரமாதம். ஒவ்வொரு கோணமும் மனுஷன் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். சுனாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் "கமல்" எனப் போட்டிருக்கிறது. பல இடங்களில் கிரேஸி மோஹனின் கைவண்ணம் தெரிகிறது.

அந்தக் கடைசி வசனம், 'நான் எப்ப கடவுள் இல்லைன்னு சொன்னேன்' எனச் சொல்லி நிறுத்திவிட்டு, '.... இருந்தா நல்லா இருக்கும்னு தானே சொல்றேன்' என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்வது தூள்!

பெருமாள் சிலையைப் பந்தாடியிருப்பது ஒருசிலருக்கு உவப்பாயிருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம். ஆனால், அது அவரது கொள்கை வெளிப்பாடு என்பதால் கண்டுக்காம விட்டுறலாம். புஷ் பாத்திரத்தைக் கோமாளியாகச் சித்தரிப்பதும் அவ்வகைப் பட்டதே!

தனக்காகப் படம் எடுக்கட்டும் கமல்! அது அவரது உரிமை! அதற்காக நம்மையெல்லாம் இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன்.
அவர் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தினால், கைப்பணத்தை இப்படிக் கரியாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அவரிடம் இருக்கும் திறமைக்கு, அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
நல்ல கதையம்சம் உள்ளஒரு எளிமையான படம்!
சொன்னாலும் சொல்லலைன்னாலும் இதுதான் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடமிருந்து விரும்புவது.

இடைவேளைக்குப் பின் தியேட்டரில் இருந்த நிசப்தம் இதைத்தான் சொல்லியது.

வெளியே வரும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!

Read more...

Monday, June 09, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

//மறப்பினும் ஒத்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்
இந்த குறளின் பொருள் என்ன? இதில் சொல்லப்படும் 'பிறப்பொழுக்கம்' என்பது என்ன?ஜாதி கட்டுமானமா? ஆம் என்றால் வள்ளுவர் வருணாசிரமத்தை ஆதரித்து குறள் எழுதினாரா?//


செல்வன் கேட்ட இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு, மயிலை மன்னாரிடம் போனேன்.

இதையும் காட்டினேன்.

படித்தான். நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பீடியை வலித்தான். சற்று நேரம் பொறுத்து 'கடகட'வெனச் சிரித்தான்..... கண்களில் நீர் வழியச் சிரித்தான்!!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விநோதமாக அவனைப் பார்த்தேன்.

அவன் இப்படி நடந்துகொண்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை.

"மன்னார்! உனக்கு ஒண்ணும் ஆகலியே! நல்லாத்தானே இருக்கே?" என ஒருவிதப் பயத்துடன் கேட்டேன்.

சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை ஒருவித சோகத்துடன் பார்த்தான்.

"ஐயன் கொறளு எளுதி ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிருச்சு. ஆனா, இதுவரைக்கு அல்லாரும் சும்மா மேம்புல்லை மேயற மாரி, தனக்கு வோணும்ன்றத மாட்டுந்தான் பாக்கறாங்காளே ஒளிய, அவரு சொல்ல வந்த கருத்து இன்னான்னு, சிந்திச்சுப் பாக்கவே இல்ல. அத்த வுடு! ஒரு கருத்துக்கு பத்து கொறளுன்னு எளுதியிருக்காரு. எதுனாச்சும் ஒரு அதிகாரத்த மட்டும் எடுத்துகிட்டு. அதுல இன்னா சொல்ல வராருன்னு பாக்கறாங்களான்னா, அதுவும் இல்ல. அது மட்டுமா? அவரு சொன்னத தனக்கு ஏத்தமாரி அர்த்தம் சொல்றதுன்னு ஆரம்பிச்சு, இப்ப தனக்கு ஏத்தாப்பல, கொறள மாத்தக் கூட தயங்காம செய்யறாங்க. இப்பிடியே போனா இது எங்கே போயி முடியுமின்னு ஆராலியும் சொல்ல முடியாது.

ஒன்னோட தோஸ்த்துன்னு சொல்லுவியே, அதான் ஒங்க செல்வன், அவரு தெரிஞ்சு செஞ்சாரோ, தெரியாமச் செஞ்சாரோ, எனக்குத் தெரியல. ஆனா, ரொம்ப நாளா நான் மனசுல நெனைச்சுகிட்டு இருந்த ஒரு விசயத்தச் சொல்றதுக்கு நல்லாவே ஒதவி பண்ணியிருக்காரு. அதுக்குன்னே அவரு இப்ப எனக்கும் தோஸ்த்தாயிட்டாரு!" என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஏற்கெனவே சென்னை வெயிலின் கொடுமை தாங்காமல் தவித்த எனக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது.

"என்ன சொல்றே மன்னார்? நான் இந்தக் குறளை எடுத்துக் கொண்டு உன்னிடம் வந்திருக்கவே கூடாது என நினைக்கிறேன். சரி, நான் வர்றேன். அப்புறமாப் பார்க்கலாம்" என எழுந்தேன்.

ஒரு வலுவான கை என்னை அழுத்தி உட்கார வைத்தது. பதட்டத்துடன் திரும்பினேன். நிஜமாகவே மன்னாரின் முகத்தில் கோபக்கனல் வீசியது. அதிர்ந்து போய் உட்கார்ந்தேன்.

"இப்ப நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே! ஒன் தோஸ்த்து செல்வன் சொன்ன இந்தக் கொறளு ஒண்ணு போதும்! நான் சொல்ல வேண்டியதுக்கு. இதுல சில பலான பலான விசயம்லாம் வரும். ஆனா, அது,.... அது இல்ல! நான் சொல்லச் சொல்ல ஒனக்குப் புரியும்.

ஒரு சாதாரணமான சொல்லு. அதுக்கான அர்த்தமே வேற. ஆனா, நாளாவட்டத்துல, அதுக்கு வேறொற அர்த்தம் ரொம்பவே பாப்புலராயிடுது. இப்ப அந்த சொல்லை சொல்றதே தப்புன்னு ஒரு அபிப்பிராயம் வந்திருது! நீ ஒரு பெரிய தமிள்........ ஆங்...... அது இன்னா?.... ஆங்... அதான்... அறிஞன்.... பெரிய தமிள் அறிவாளி!... நீ இத்தப் படிக்கறே! இதுக்கு அப்பிடியே பொருள் சொல்ல முடியாம பம்முறே! ஏன்னா இப்ப அது ஒரு 'கெட்ட வார்த்தை'! "நான் ஆரு? எனிக்கு இன்னா பேரு? இப்பப் போயி இதுக்கு நான் அர்த்தம் சொன்னா ஊரு ஒலகம் என்னைப் பத்தி இன்னா சொல்லும். போயும் போயும் ஒரு வள்ளுவனுக்காவ, நான் என்னோட இமேஜைக் கெடுத்துக்கறதா"ன்னு நெனைக்கறான். கொஞ்சம் ரோசனை பண்றான்.

இப்பத்தான் அவனுக்கு அவனோட ஆத்தா நெனைப்பு வருது! அதாம்ப்பா! நீங்கள்லாம் அடிக்கடி சொல்லிகிட்டுத் திரியுறீங்களே.. அந்தத் தமிளன்னை... அவள தொணைக்கு இளுத்துக்கறான்! அவ கொடுத்த பாலுல வளந்த பய.. இப்ப அவளையே சந்திக்கு இளுத்து, கொறள்ல ஒரு சொல்லை இப்பிடியும் அப்பிடியுமா மாத்தறான். ஆமாம்ப்பா.. ஐயன் எளுதின கொறளையே மாத்தறான். இதுக்கு மத்த ஆளுங்களையும் கூடச் சேத்துக்கறான்..... பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கூப்பிடறான். அவங்களும் வந்து, 'ஐயா சொல்றதுதான் சரி; ஐயன் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்'னு ஜால்ரா போடறாங்க. இப்ப ஐயன் எளுதினது மறைஞ்சுபோய், ஒரு புதுக் கொறளு,....... அதுக்குப் புதுப் புது அர்த்தம்ல்லாம் வந்து... இதான் ஐயன் கொறளுன்னு ஆகிப்போயிடுது! இதான் நடக்குது இப்ப!" என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

"மன்னார்! உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு நீ இப்பிடியெல்லாம் பேசறே?" என அதட்டினேன் நான்.

மன்னார் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது.

நான் பதறிப் போனேன்!

"சொல்லு மன்னார். நீ என்ன சொல்லணுமோ சொல்லு. நான் கேட்டுக்கறேன். அதுக்காக நீ இப்படியெல்லாம் பேசாதே" என அவனை வேண்டினேன்.

"ஓத்து" என்றான் மன்னார்.

ஒரே அதிர்ச்சி எனக்கு! மன்னாரா,...... என் மயிலை மன்னாரா.... இப்படியெல்லாம் பேசுவது என நடுங்கினேன்.

"என்ன சொல்றே மன்னார்?' என்றேன்.

"ஒத்து" என்றான் மன்னார்.

'ஓ! 'ஒத்து'ன்றியா? இப்ப நான் எதை ஒத்துக்கணும்? இல்லை.... எங்கே ஒத்திப் போகணும்?' எனச் சிரித்தேன்.

மீண்டும் "ஓத்து" என்றான் மன்னார்.

'இது கெட்ட வார்த்தை மன்னார்!! ரவுடின்னாலும், நீ இப்படியெல்லாம் என்கிட்ட பேசமாட்டியே! இப்ப என் இப்படியெல்லாம் பேசறே' என நான் வினவினேன்.

'இப்பத்தான் இது கெட்ட வார்த்தை. ஆனா, எங்க ஐயன் காலத்துல இது கெட்ட வார்த்தை இல்லை. இதுக்கு இன்னா அர்த்தம் தெரியுமா? 'ஓத்து'ன்னா 'வேதம்லாம் படிக்கற பாடசாலை' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்.

ஏதோ சொல்ல வருகிறான் என உஷாரான நான், 'ம்ம். அப்புறம்?' என அவனைத் தூண்டினேன்.

'ஒரு பொஸ்தகத்தைப் படிக்கறே. படிச்சு முடிச்சிட்டு தூக்கிப் போட்டுடறே! அதுக்குப் பேரு படிப்பு. இப்ப ரொம்பப் பேரு. படிக்கறது ஒண்ணு; ....... பி.ஏ., எம்.ஏ.ன்னு என்னமோ படிக்கறாங்க,..... ஆனா. பண்றது இன்னாமோ பெஞ்சு தொடைக்கற வேலை. ஆனாக்காண்டி, ஒரு சமாச்சாரத்தை நல்லாப் படிக்கணும்னா இன்னா பண்ணனும்? திரும்பத் திரும்பப் படிக்கணும். அதுக்கு 'ஓதறது'ன்னு பேரு.

அந்தக் காலத்துல... அதாம்ப்பா... ஒரு ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்தி, .....இந்த வேதம்னு சொல்லுவாங்களே, அதைப் படிக்கறவங்க அல்லாரும், சொல்றவன் வாயைப் பார்த்துகிட்டே,..... அவன் ஒதடு அசைஞ்சு அதுலேர்ந்து வர்ற வார்த்தையைக் கேட்டுகிட்டே .....திருப்பித் திருப்பிச் சொல்லியே கத்துக்குவாங்க. அதாவது, திரும்பத் திரும்ப ஓதியே கத்துக்குவாங்க. அவங்களுக்கு பார்ப்பான்னு பேரு.

இதுவரைக்கும் புரிஞ்சுதா?

இப்ப இவங்க சொல்றதுக்கு 'ஓதுதல்'னு பேரு. இப்பிடி 'ஓத்து'கிட்டு... அதாம்ப்பா ... ஓதியே கத்துகிட்டவங்க..... மறந்தாக் கூட மறுபடியும் இன்னொருத்தன் வாயைப் "பார்த்து", அவன் சொல்றதைக் கேட்டு, கத்துக்கிட முடியும். அவந்தான் "பார்ப்பான்"

ஆனாக்காண்டிக்கும், நீ எந்தப் பிறப்புல பிறந்திருந்தாக்கூட, ஒளுக்கம் தவறி நடந்தியானா, ...நீ பொறந்த பொறப்பு எம்மாம் பெரிய பொறப்புன்னு ஊரு ஒலகம் சொன்னாலுங்கூட,..... இனிமே ஒனக்கு மருவாதி கிடையாது!

இதான் ஐயன் சொன்னது.

இன்னா முளிக்கறே? செல்வன் சொன்னது இது இல்லியேன்னா? அதான் நான் இம்மா நேரம் கூவினேனே!

செல்வன் சொன்னது ஐயன் கொறள் இல்லே!
இப்ப அவரு இன்னா சொன்னாரு?

"மறப்பினும் த்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்"

இது இல்லே ஐயன் எளுதினது.


"மறப்பினும் த்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்[புஒ]ழுக்கம் குன்றக் கெடும்"

இதான் ஐயன் சொன்னது!


ஐயன் சொன்னப்ப 'ஓத்து'ன்றதுக்கு இருந்த அர்த்தம் வேற.
இப்ப அதுக்கு இருக்கற அர்த்தம் வேற!

இப்ப அது ஒரு கெட்ட வார்த்தை! நீ கூட பதறினியே! மன்னாரா இதெல்லாம் சொல்றான்னு..... அதுமாரியான கெட்ட வார்த்தை!

ஒங்க தமிள் அறிவாளிங்கல்லாம் அதை ஐயன் வாயிலேர்ந்து வந்துதுன்னு சொல்ல வுட்டுடுவாங்களா? இப்ப, இவங்க தானே தமிளைக் காப்பாத்த அவதாரம் எடுத்து வந்திருக்காங்க! ஐயன் மேல ஒரு பளி விள வுட்டுருவாங்களா? "ஓத்து"ன்றத 'ஒத்து'ன்னு மாத்தி, இதான் ஐயன் சொன்னதுன்னு, ஒரு புதுக் கொறளை வுட்டுட்டாங்க. இதை மதுரை திட்டமும் ஏத்துகிட்டதுதான் பெரிய சோகம்!" எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மன்னார்-

அவனது சோகம் என்னை இப்போது முழுமையாகத் தாக்கியது.

"நீ சொல்லுவது என்னவெனப் புரிகிறது மன்னார்!' என அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தேன்.

"இது மட்டுமில்ல சங்கரு! 'பிறப்பு, ........ஒழுக்கம் குன்றக் கெடும்'னு ஐயன் சொன்னத, 'பிறப்பொழுக்கம்'னு பதம் பிரிச்சு, ஒன்னோட தோஸ்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாரு, அதான் என்னிய இம்மாந் தூரம் பேச வைச்சது. அதப்பத்தி இன்னோரு நாளு சொல்றேன். ஐயனைக் கொறை சொல்றத வுட்டு, அவர் சொன்னதைப் புரிஞ்சுக்கப் பாருங்கப்பா'' எனச் சொல்லிச் சமாதானமானான் மயிலை மன்னார்.

நான் நாயரைப் பார்த்துக் கண்ணடித்தேன்.

உடனே, இரு தட்டுகளில் மசால் வடையை வைத்து எங்கள் பக்கம் நீட்டினார் நாயர்.

'இன்னிக்கு டீ வேணாம். ரெண்டு நன்னாரி ஷர்பத்' என அதட்டலாகச் சொன்னேன் நான்.

"இம்மாந்நேரம் கேட்டுட்டு இப்பிடி சொல்றியே! இருக்கறத மாத்தாதே. நாயர்! டீயே போடுப்பா" என்றான் மயிலை மன்னார்!

வெட்கித் தலை குனிந்தேன் நான்!

Read more...

Sunday, June 01, 2008

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

விண்ணைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்!

விடைபெற்றுச் சென்ற என் குட்டிராணி திரும்பவும் வருகிறாளா என அண்ணாந்து பார்த்திருந்தேன்.

வழக்கமான ஆற்றங்கரையோரம்தான்!

மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில், அந்தச் சிற்றாறு 'சலசல'வென ஓடிக்கொண்டிருந்தது.

என் கால்களும் அதில் நனைந்து கொண்டுதானிருந்தன!

இலைகளும் சருகுகளும், மலர்களும் சென்றுகொண்டுதான் இருந்தன!

மரங்கள் என் பார்வையை சற்று மறைத்தன.

அதையும் மீறி, வானம் வசப்பட்டது!

மரக்கிளை ஒன்றில் ஒரு குரங்கு!

தன் கையால் ஒரு கிளையைப் பிடித்தபடி குரங்கு இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே...... சட்டென....... தன் பிடியை விட்டது!

இப்போது அது அந்தரத்தில்!

அடடா! என்ன ஆகப் போகிறது இந்தக் குரங்குக்கு!

எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், இலக்கும் இல்லாமல், தான் பற்றியிருந்த பிடியையும் விட்டுவிட்டதே!

என்ன ஆகும் இதற்கு!

இப்படி ஒரு துயர நிகழ்ச்சியைக் காணவா நான் இங்கே இருந்தது!

இதைப் படிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் கூட ஆகவில்லை!

அந்தரத்தில் தவழ்ந்த அந்தக் குரங்கு, கீழே.... கீழே... கீழே விழுந்த வேகத்தில் ஒரு கிளையை வெகு லாவகமாகப் பற்றியது!

ஒற்றைக்கையில் பற்றிய வேகத்தில் ஒரு ஆட்டம் போட்டு, சட்டென ஒரு குட்டிக்கரணம் போட்டு, அதன் மீது ஏறி ஓடியது!

இப்போது அது ஒரு பத்திரமான இடத்தில்!

எனக்கும் மூச்சு வந்தது!

மகிழ்ச்சியுடன் சிரித்து, கைகளைத் தட்டினேன்!

"குரங்கு... குரங்கின் திடீர்த் தாவல்.....!"

இந்தக் காட்சியின் பொருள் என்ன? இது சொல்ல வந்த கருத்து என்ன? என என் 'குரங்கு' மனம் எண்ணத் தொடங்கியது!

திடீரென மனதில் ஒரு மின்னல்!

ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

குரங்கு..... நாம் எல்லாரும்!

அதன் தாவல்...... 'போதுமடா சாமி!' என விட்டு விடுதலையாக எண்ணுகின்ற நிலை!

ஆனால்,
'எனக்கும் மேல் ஒருவன் இருக்கிறான்; அவன் எம்மைக் காப்பான்!' என்ற நம்பிக்கையுடன், இலக்கு ஒன்றைக் குறிவைத்து, மனதுக்கும் தெரியாமல் தன்னைப் பிணைத்திருக்கும் பிடிப்பை விட்டுத் தாவுகிறது இந்த ஆத்மா!

இந்த நினைவைக் கொடுத்தது யார்?
எவரால் இது நிகழ்கிறது?

'என்னை நம்பி உன் பிடிப்புகளை நீ விடு! யான் உன்னைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பேன்!' என இறைவன் எத்தனையோ இறைதூதர்கள் மூலம் சொல்லிய சொல் என் நினைவைத் தாக்கியது!

விடுவோமா நாம்?
விடுகிறோமா நாம்?

அநேகமாக இதைச் செய்வதில்லை!

ஏன்?
அந்தக் குரங்கு விட்டதே!
அடுத்து எதைப் பிடிப்போம் என்ற நினைப்பைக் கவனத்தில் கொள்ளாமல் தன்னை விடுத்தது அந்தக் குரங்கு என நினைப்பது நம் மனம்!

ஆனால், இதுவரை தான் பிடித்திருந்ததை முற்றிலுமாக விடுத்து, 'நீயே கதி' என ஒரு இலக்கை நோக்கியே அது தாவியது என்பதை உணர இந்த மனத்துக்குத் தெரியவில்லை!

'தவறு செய்து விட்டாயே' என அந்தக் குரங்கைப் பற்றி அவசரப்பட்டு நினைத்தது போலவே, எந்த ஒரு செயலையும் நாம் செய்யும் முன்னும், பின்னும், நம்மைப் பழித்து அது வருத்தும்!

மனம் என்னும் ஒன்றின் பிடிப்பில் மிகவுமே ஆழ்ந்திருப்பதால்தான், இந்த 'விடுதலை' நிகழ மறுக்கிறது!

விட்டு விடுதலை ஆனாலும், இந்த ஆத்மா இறை நம்பிக்கையோடு விட்டு விடுதலை ஆனாலும், ........இந்த மனம் உன்னை இன்னமும் இறுகத்தான் பிடித்திருக்கும்!
எதனை விட்டாலும், உன்னால் இந்த மனத்தின் பிடிப்பை மட்டும் விடவே முடியாது!
கூடவே வரும்!

அது மட்டுமல்ல! உன்னை வருத்தியும் அலைக்கழிக்கும்!

பிறவியும் தொடரும்!
இறையின் வேலை....... இன்னமும் தொடரும்!
......இந்த மனத்தை நாம் விடும் நாள் வரை!
எப்படி இதை விடுவது?

யோசித்துக் கொண்டே எழுந்து நடந்தேன்!

குரங்கு ஒன்று ஒரு கிளையை விட்டுப் பாய்ந்து இன்னொரு கிளையைப் பிடித்தது!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP