Friday, March 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]
51. [3]

'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது!

ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வரி மட்டுந்தான் இவரு பாத்தத, பாத்து அனுபவிச்சுத, அனுபவிச்சு ஒணர்ந்ததச் சொல்ற வரி!

‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ன்னு கதர்றாரு.

இந்த ஒருவரிதான் அநுபூதி !

குஹந்தான் கந்தன்!!

அந்தக் கந்தன் குடுத்த அனுபவத்தை, அனுபூதியைச் சொல்றதுதான் மத்த மூணு வார்த்தையும்!

இதைப் புரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் அந்த மொத ரெண்டு வார்த்தைக்குத்தான் போவணும்!

‘உருவாய், அருவாய்!

ஆமா!

‘உருவாய் அருவாய் குருவாய் வருவாய்! அருள்வாய்!’

போதுண்டா இந்த வாள்க்கைன்னு கோபுரத்து உச்சிலேர்ந்து குதிச்சவரைக் கை குடுத்து ஒர்த்தன் தாங்கினான்!

ஆர்ராது, சாவறதுக்குக்கூட வுட மாட்டேன்றானேன்னு ஒரு கோவத்தோடத்தான் அந்த ‘உரு’வைப் பாத்தாரு அருணையாரு!

இந்த உருவைப் பத்தியே பாடிக்கினே இத்த மறந்துட்டு, இந்த உரு இல்லாத ஒரு நெலைக்கு நீ வந்து என்னிய சேருன்னு சொல்றமாரி, ‘சொல்லற, சும்மாயிரு’ன்னு சொல்லிட்டு, அருவமாயிட்டாரு கந்தன்!

கண்ணெதிர்க்கத் தெரிஞ்ச உருவைத் தவற வுட்டுட்டேனேன்னு, கோயில் கோயிலாப் போயி, ஆயிரக்கணக்குலப் பாட்டுப் பாடி, தன்னோட நெலையைச் சொல்லிப் பொலம்பித் திருப்புகளா[ழா]க் கொட்டினாரு அருணகிரியாரு.

அப்பிடியாப்பட்ட ஒரு நேரத்துல கெடைச்சதுதான் இந்த அநுபூதி!

உருவமாத் தெரிஞ்சவரு, அருவமா வந்து,, மலரோட மருவா, மணியோட ஒளியா, கருவோட உசிரா, கெதியோட விதியா இவருக்குள்ளாற குருவா வந்து அருள் பண்ணினப்ப இவருக்குக் கெடைச்ச பரவசந்தான் கந்தன்!’ என்றான் மயிலை மன்னார்.

சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து, ‘அப்ப எதுக்கு குகனேன்னு சொல்லி முடிச்சாரு?’ என நான் வினவினேன்!

‘இத்த நீ கேட்டதுதான் எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு! ‘ என அன்புடன் என் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மன்னார்.

ஏளனமா, அது பாராட்டா எனத் தெரியாமலேயே அவன் அணைப்பில் சிக்குண்டபடியே, முன்பு கேட்ட கேள்வியை அவன்மீது வீசினேன்!

‘குஹன்’னா ஆரு? எத்தினியோ வார்த்தைங்க அவனைப் பத்திச் சொல்றதுக்கு இருக்கக்கொள்ள, இத்தச் சொல்லி ஏன் முடிக்கணும் அருணகிரியாரு? என பதில் கேள்வியை என்னைப் பார்த்தபடியே கேட்டான் மயிலை மன்னார்.

பதில் சொல்ல நான் எத்தனிக்கும் முன்னரே, மீண்டும் தொடர்ந்தான்.

'இருளோன்னு கெடக்குற குகைக்குள்ளார ஒரு வெளிச்சம் வந்தா எப்பிடி இருக்கும்? ரெண்டாவுது பாட்டுலேர்ந்த்து அம்பதாவுது பாட்டு வரைக்கும் அருணகிரியாரு பொலம்பினதெல்லாத்தியும் பாத்தீன்னா, இந்த சொத்து, சொகம், வூடு, பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க, பெருமை, பேரு இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்!

இதுங்க அத்தினியும் மொத்தமா சேர்ந்து ஒண்ணு மேல ஒண்ணா ஒரு போர்வை மாரி அடுக்கடுக்கா போர்த்திக்கினு, உள்ளார க்கீற அந்த வெளிச்சத்தை….. அந்த ஜோதியை மறைக்குதுங்க!

இதெல்லாத்தியும் வெலக்கினா, மனசுன்ற குகைக்குள்ள க்கீற இருட்டெல்லாம் படிப்படியா வெலகி ஒனக்குள்ளாறியே ஒரு பெரிய வெளிச்சம் தெரியவரும்! அந்த வெளிச்சந்தான் குஹன்! அதான் அனுபூதி!’

‘இங்க ‘வருவாய், அருள்வாய்’ன்னு அருணகிரியாரு சொல்றதுல்லாம் ‘வருவியோ, அருள் தருவியோ?ன்னு கேக்கறது இல்லை! நீ வருவே, நிச்சியமாத் தருவே!’ன்ற உத்தரவாதம்! உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால....அந்தக் கந்தக்குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!!’ எனச் சொல்லி, மௌனத்தில் ஆழ்ந்தான் மயிலை மன்னார்!

‘தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் – உன்னைத்
தேடிக் கண்டு கொள்ளலாமே – உள்ளே
தேடிக் கண்டு கொள்ளலாமே’
எனும் பாடல் கபாலி கோயிலின் ஒலிபெருக்கி வழியே வந்து, எங்களையெல்லாம் ஆட்கொண்டது!

ஓம் சரவணபவ’ எனும் மந்திரம் அனைவரின் உதடுகளிருந்தும் கிளம்பிப் பலமாக ஒலித்தது.
************************
பொறுமையோடும், பக்தியோடும் படித்து ஆசி வழங்கிய அனைவருக்கும் கந்தன் நலம் சேர்ப்பான்!
அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஓம் சரவணபவ.
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
*******************************

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே!

[கந்தரநுபூதி நிறைவு.]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP