Tuesday, October 24, 2006

"அ.அ. திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.

"பாடல்"

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------


"பொருள்"
[பின் பார்த்து முன் !]

"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"


சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே

தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,

சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,

நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,

"குஞ்சரி குயம் புயம் பெற"

தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,

"அரக்கரும் மாள, குன்று இடிய"

அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,

"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"


அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,

இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,

பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,

இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,

"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"

தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,

"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."


மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!

"அந்தகன் வரும் தினம் பிறகிட"

எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,

"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"


விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,

"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"

சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,

அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,

மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,

"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"

தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,

"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"

செந்திலை உணர்தல் எங்ஙனம்?

அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!

அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!

ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்

தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!

செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!

"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"

சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்

"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"

நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------


"அருஞ்சொற்பொருள்"

அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
--------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!

----------------------------------------------------------

Read more...

Sunday, October 22, 2006

"எல்லோரும் கொண்டாடுவோம்!"

"எல்லோரும் கொண்டாடுவோம் !"

நல்விரதம் முடிந்து மகிழ்வுடன் கொண்டாடும் அனைவருக்கும்,
இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கும்
என் உளங்கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள் !!

இது தொடர்பாக எனக்கு மிகவும் பிடித்த கவிச்சக்கரவர்த்தியின் "பாவ மன்னிப்பு" படப்பாடலை இங்கு பதிவில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

இதில் ஒரு சிறப்பு பாருங்கள்.

முகமதிய நண்பர்களின் 40 நாள் விரதம் இன்றுடன் முடிகிறது!
சஷ்டி விரதமும், அதைத் தொடர்ந்து ஐயப்பன் விரதமும், அடுத்த இரு மாதங்களுக்கு!
அது முடிந்ததும், கிறித்தவ அன்பர்களின் ஈஸ்டர் நோன்பு மார்ச் முடிய!


விரதங்கள் நம்மைத் தூய்மைப் படுத்தி நல்வழியில் செலுத்தட்டும்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!
----------------------------------------------------------------

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப் படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே

வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்றுபோல் ஒன்றாய்க் கூடி
நன்றாய் வாழுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
[அல்லாவின்]

நூறுவகை பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆடவரும் அத்தனையும்
ஆண்டவரின் பிள்ளையடா

கருப்பில்லே வெளுப்புமில்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை

முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு
ஒன்றாய்க் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
[அல்லாவின்]

ஆடையின்றிப் பிறந்தோமே
ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?

படைத்தவன் சேர்த்துத் தந்தான்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய்க் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்.
-----------------------------------------------------------------

அனைவருக்கும் வாழ்த்துகள்!

Read more...

Thursday, October 19, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'


"இன்னிக்கு கொஞ்சம் அவசர வேலையா, வண்ணாரப்பேட்டை வரைக்கும் போயாவணும். அதுனால சீக்கீரமா நா சொல்றத எளுதிக்கிட்டு எடத்தக் காலி பண்ணு. இப்பவே ஒன் மாமூல் டீ, மசால்வடைல்லாம் முடிச்சிடு!" என்று வரவேற்றான் மயிலை மன்னார்.

"அப்படி என்ன அவசரம் மன்னார்? நீ எப்பவும் பொறுமையான ஆளாச்சே" என்று அவனைக் கேட்டேன்.

"நம்ம மச்சான் ஒர்த்தன் அங்கே கீறாம்ப்பா. ஆரோ இன்னாமோ சொல்ட்டாங்களாம் அவனை! அத்த இன்னோரு பேமானி இவன்ட்ட போட்டு குடுத்துட்டான். செயிலுக்கு போனாலும் கவல இல்ல. ஆங்! அவனை வெட்டிட்டுத்தான் மறுவேலைன்னு கூப்பாடு போட்டுக்கினு இருக்கானாம். நம்ம தங்கச்சி இப்பத்தான் ஃபோன் பண்ணி அளுதிச்சு. அத்தான் இன்னா, ஏதுன்னு ஒரு தபா பாத்துட்டு வந்திர்லாம்னு பொறப்புட்டுகிட்டு இருக்கேன். அட்டோக்கு சொல்லியிருக்கேன். இப்ப வந்துரும். இப்ப நா சொல்லப் போறதும் அத்தைப் பத்தித்தான். ம்ம்ம். சீக்கிரமா எளுது" என்று அவசரப்படுத்தினான் மன்னார்.

அவன் நிலைமை புரிந்து அவன் சொன்னதை அவசர அவசரமாக எழுதிக் கொண்டு வந்து பதிக்கிறேன்.

இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

"அதிகாரம் 16 - பொறையுடைமை"


"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." [151]

நீ பொறந்தது இந்தப் பூமில. நீ வாள்றதும் இங்ஙனேதான்.
இத்த வுட்டா வேற எங்கியும் மனுஷாளே கிடையாதுன்னு வேற ஸொல்றாங்க.
இது பொளந்துச்சுன்னா, மவனே, அவ்ளோதான்!
அல்லாரும் கூண்டோட கைலாசந்தான்.
இது மேலத்தான் வாள்றோம், நடக்கறோம், படுக்கறோம், வூடு கட்றோம், பயிர் பண்றோம், இன்னும் எத்தினி எத்தினியோ பண்றோம்.
அப்படி இத்த வெட்டிக் குளி தோண்ட்றப்பவும் இது மேல நின்னுகிட்டுதான் தோண்ட்றோம்.
அதுக்காவ, அது கோவிச்சுகிட்டு, டமார்னு பொளந்து ஒன்னிய சாச்சுருதா? இல்லேல்ல?
அத்தைப் போலவே, நீயும் ஒன்னிய ஆராச்சும் எதுனாச்சும் தப்பா சொல்ட்டான்னு மானத்துக்கும் பூமிக்குமா குதிக்காம, அத்தப் பொறுத்துப் போவணும்.
வேற எது செஞ்சாலும், செய்யாக்காட்டியும் பர்வால்ல. இந்த பொறுத்துப் போற விசயத்த மட்டும் கருக்கா செஞ்சுறணும். அதனாலத்தான், இதை தலைன்னு சொல்லிருக்காரு நம்ம ஐயன்.

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று." [152]

ஒர்த்தர் ஒனக்கு இன்னா கெடுதல் பண்ணினாலும் அத்தப் பொறுத்துப் போயிறணும்.
அப்டி அவன் சொன்னது செத்துப் போச்சுன்னு நெனைச்சு வுட்டுரணும்.
செத்துப் போனாக்கூட, செத்தவுங்க நெனைப்பு நம்மளை வந்து வாட்டிக்கினு இருக்கும்ல?
அதனால, செத்துப் போச்சு அந்தக் கெடுதில்லாம்னு நெனைக்கறத வுட, அது மாரி காரியங்கள அப்பவே மறந்துறணும்.
அது முந்தி சொன்னத வுட ஒசத்தியானது.

இந்த டைம்ல இன்னோரு விசயமும் சொல்றேன், எளுதிக்கோ.
நம்ம அர்சியல்வாதிங்கல்லாம் 'மறப்போம், மன்னிப்போம்'னு ஒரு டகல் வுட்டுகினு திரியுறாங்களே அது அத்தினியும் பொய்யி.
சும்மா ஊரை ஏமாத்தறதுக்கவ போடற டிகிரி வேலை.
நெசமாலும் மறந்துட்டீன்னா, அப்பறமா இன்னாத்த மன்னிக்கறது?

மெய்யாவே சொல்றாங்கன்னா, மன்னிப்போம், மறப்போம்னு தானே சொல்லணும்?
நா சொல்றது வெளங்குதா?

இது புரியாம நம்ம சனங்க அல்லாம் இவனுக பின்னாடி உசிரக் குடுத்துகிட்டு அலையுது!
இன்னாமோ போ!
சரி, டயம் ஆச்சு; நீ மேல போ!

"இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை." [153]

போன வாரம் நா சொன்னதே இப்பவும் திரும்பி வருது!

இல்லாமப்போறதுலியெ ரொம்ப மோசமானது வர்ற விருந்தாளிங்களை சரியா கவனிக்காம வுடறதுதான்ன்னு சொன்னேன்ல.
அத்தப்போல, ஒன்னாண்டை இருக்கற பலத்துலியே பெரிய பலம் இன்னான்னு கேட்டேன்னு வையி, புத்தியில்லாம ஒர்த்தன் ஒனக்கு பண்ணின கெட்ட சமாச்சாரத்தை அத்தோட மறந்து, நெனப்புலேர்ந்து தூக்கி எறிஞ்சுர்றதுதான்.
இன்மைன்னா ஏளை, ஒண்ணும் இல்லாதவன்னு அர்த்தம்.

" நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். [154]

இப்ப ஒரு கொடம் ரொம்ப தண்ணி இருக்குன்னு வெச்சிப்போம்.
அத்த நீ தூக்கியாற. தம்மு தும்முன்னு ஆட்டிக்கினு நடந்தீன்னா இன்னா ஆவும்? அத்தினி தண்ணியும் கொட்டிப் போயிரும்.
அதே நெதானமா பொறுமையா வந்தேன்னு வையி.
கொடந்தண்ணியும் தளும்பாம இருக்கும். சர்த்தானே நா ஸொல்றது?

நீயும் ஒரு கொடம் மாரி.
ஒங்கிட்ட நீ பாத்து பாத்து சேத்து வெச்ச நல்ல கொணம்லாம் தண்ணி மாரி ரொம்பிக் கெடக்கு. ஆத்தரப்பட்டேன்னா, அத்தெல்லாம் கொட்டிப் போயிரும்.
பொறுமையா இருந்தேன்னா, ஒண்ணும் ஒன்னை வுட்டுப் போவாது.
நல்ல மன்சன்னு பேரெடுப்பே நீ.
வெளங்கிச்சா?

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. [155]

இதுமாரி ஒரு ஆளு ஒனக்கு ஒரு கெட்டது பண்ணிடறான்.
ஒனக்கு கோவம் கோவமா வந்து அவனைப் பளி வாங்கணும்னு நெனைக்கறே, இப்ப என் மச்சான் இருக்கானே அவன் மாரி!

அப்பால இன்னா ஆவும்?
போலீஸ் வந்து இவனைப் புடிச்சிக்கினு போவும்.
நாலு சாத்து சாத்தும். உள்ளே போடும்.
அவன் பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் தெருவுல நிக்கும்.
இந்த ஊரு இன்னா சொல்லும் அவனைப் பத்தி.
புத்தி கெட்ட பய.
அறிவில்லாத ஒரு காரியத்தப் பண்ணிட்டு இப்ப அவஸ்தை படறான் பாருன்னு தானே தூத்தும்?

அதே, அப்படி பண்ணினவனை மன்னிச்சு வுட்டான்னு வையி, இதே ஊரு அப்ப இன்னா சொல்லும் தெர்யுமா?
பெரிய மன்சன்யா அவன்!
தங்கமான கொணம்!
ஆத்தரப்படாம, பொறுமையா இருந்தான் பாரு அப்டீன்னு வாள்த்தும்.

இப்ப இத்த வெச்சுகிட்டு, நாட்ல நடக்கற விசயத்தோட கம்பேர் பண்ணிக் கொயப்பிக்காதே.
அது சட்டம் சம்பந்தப் பட்ட விசயம்.
நீ இன்னா பண்ணனும் அத்த மட்டும் பாரு.
அர்சாங்க வேலைய அவங்க கிட்ட வுடு.
அதுக்குள்ள ஆயிரம் ஓட்டை இருக்கு. அது நமக்கு வோணாம்.
சர்யா?

"ஒறுத்தர்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்." [156]

தப்பு பண்ணவனைத் தண்டிச்சேன்னா அன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்தான் ஒனக்கு குஜிலியா இருக்கும்.
மறுநா பொளுது விடிஞ்சவொடனியே ஒனக்கே 'சீ' ன்னு இருக்கும்.
ஆனாக்காண்டி, மன்னிச்சு வுட்டேன்னா, இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் ஒம் பேரை சொல்லிகினு இருக்குமாம்.
அம்மாம் புகளு வந்து சேரும் ஒனக்கு.

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று." [157]

இன்னோர்த்தன் ஒனக்கு கெட்டதே பண்ணினாக்கூட, அதுக்காக கஸ்டபட்டுகிட்டு, அத்தத்தான் ஐயன் 'நோ நொந்து' ன்னு சொல்லியிருக்காரு, நீயும் தப்பான காரியத்துல பதிலுக்கு செய்யாம இருக்கறது தான் நல்லது. பளிக்குப் பளி, ரத்தத்துக்கு ரத்தம், எனக்கு ரெண்டு கண்ணு போனாலும்பரவாயில்ல, ஒனக்கு ஒரு கண்ணாச்சும் போயிறணும்னு எத்தினி நாளைக்குப்பா சண்டை போட்டுகினே இருக்கறது மாறி மாறி ரெண்டு பேரும்.
ஒர்த்தராவது சும்மா இருக்க ட்ரை பண்ணனும்.
போயி உங்க வலைல இருக்கறவங்களுக்கு ஸொல்லு.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

அப்ப இன்னா ஸொல்றே நீ?
அவன் என்னிய அடிப்பான், அடிச்சுகினே இருப்பான்.
நா சும்மா கன்னத்தைக் காட்டிக்கினு இருக்கணுமான்னு கேக்க வரே இல்ல? எனக்கு தெரியுமே! நீ இப்படி கேப்பேன்னு.
ஒன்னிய அங்கே போயி இன்னும் அடிறான்னு காமிக்கச் சொல்லலை நா. நவரு.
அது மெய்யாலுமே கெட்டதுதான்னு தெரிஞ்சுருச்சில்ல?[மிகுதியான்] அப்பறம் ஏன் அங்கியே போயி குந்திக்கினு அடி வாங்கற?
பொறுமையா இரு.
அவனுக்கு பதில் சொல்றத வுட்டு ஒன் வேலையப் பாரு.
அவனுக்கே அலுத்துப் போயிரும்.
சே! இன்னாத்துக்கு இத்த நா பண்ணிக்கினே இருக்கேன்னு ஒன் பொறுமையைப் பாத்து வுட்ருவான்.
அப்டித்தான் கெலிக்கணும்!
அதான் ஒனக்கு பெருமை! [தகுதியான்]

"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்." [159]

கெட்டவங்க சொல்ற கஸ்மாலப் பேச்சையெல்லாம் பொறுத்துகிட்டு, அதுக்கு போயி பதில் சொல்லாம இருக்காம் பாரு, அவந்தான் நெசமாலுமே அல்லாத்தையும் வுட்ட சாமியாருங்கள வுட சுத்தமானவன்.
அல்லாத்தியும் வுட்டவங்களத்தான் சொல்றேன்!

இங்கே 'இறந்தார்'னு சொல்றது செத்துப் போனவன்ற அர்த்ததுல இல்ல. மனசுல திமிரு, ஆணவம்னு வெச்சிருக்கான் பாரு, அவனைத்தான் சொல்றாரு. அவன்லாம் உசுரோட இருந்தாக்கூட செத்தவனுக்கு சமம்னு நெனைச்சு சொல்லியிருக்காரு.

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்." [160]

அல்லாருக்கும் புடிச்ச சாப்பாட்டைக் கூட தான் வுட்டுட்டு, பளம், பொரின்னு மட்டும் துண்ணுகிட்டு நோம்பு நோக்கறாங்களே அவங்களையெல்லாம் பெரிய மகான்னு சொல்லுவாங்க.

ஆனாக்க, அடுத்தவன் நம்மளைப் பாத்து சொல்ற மோசமான வெசவு அல்லாத்தியும் பொறுத்துகிட்டு கம்முனு இருக்கான் பாரு, அவன் இந்த மகான்கள வுட ரொம்ப பெரிய ஆளுங்க.

"சரி, ஆட்டோ வந்திருச்சு. நா கெளம்பறேன். நாயர்ட சொல்லிட்டேன். மறக்காம டீ சாப்ட்டுட்டு போ! அப்பால பாக்கலாம். நா வந்து தகவல் சொல்றேன்"
என்று அந்த அவசரத்திலும் விருந்தோம்பலை மறக்காமல் செய்துவிட்டு, சிட்டாய்ப் பறந்தான் மயிலை மன்னார்!

அவன் வலியுறுத்திச் சொன்ன இன்னொரு விஷயம்.

இங்கு சொன்னதெல்லாம் தனி மனித ஒழுக்கம் குறித்து மட்டுமே!
பொது நிகழ்வோடு தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அடித்துச் சொல்லிவிட்டுத்தான் போனான்.

Read more...

Monday, October 16, 2006

"அ.அ. திருப்புகழ்" 12 -- "ஓராதொன்றைப்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"


"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"

---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்

தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

---------------------------பொருள்:-----------------------------

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]

"தோரா வென்றி போரா"

போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !

"மன்றல் தோளா"

மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !

"குன்றை தொளையாடீ"

கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!

"சூதாய் எண் திக்கு ஏயா"

நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று

"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"

வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா

"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"

சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!

"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"

அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!

அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!

சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!

"ஓராது ஒன்றைப் பாராது"

ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்

அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்

"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"

அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்

விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று

தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற

விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற

விலை மக்கட் பெண்டிரின்

[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]

"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"

உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,

உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,

"கோடார் செம்பொம் தோளா!"

மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!

"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"

உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே

வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர

தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************

அருஞ்சொற்பொருள்:

ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது

அந்தத்தோடே = அழகுடனே

எட்டா மால் = அளவில்லாத மயக்கம்

கூரா = பொய்யான, விருப்பமில்லாத

அக்கு = எலும்பு

கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற

கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]

தோரா = தோல்வி என்பதே இல்லாது

வென்றி = வெற்றி

போரா = போர் புரிபவனே

மன்றல் = வாசனை வீசும்

பொன்ற = பொருந்தச் செய்ய

சே = எருது

சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்

*************************************************************

வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !

அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Read more...

Saturday, October 14, 2006

காக்கிச்சட்டை குண்டர்கள்

காக்கிச்சட்டை குண்டர்கள்

அரசியலுக்காக ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ள முடியும்.

அவர்களுக்காக உயிரையும் பணையம் வைத்து எது வேண்டுமானாலும் செய்யும் அவர்கள் தொண்டர்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அவர்களிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு அடிதடியிலிறங்கும் ரவுடிகளை அறிய முடியும்.

கண்டும் காணாதது போல் விட்டுவிடும் ஒரு சில கயமைப் போலீஸைத் தெரியும்.

ஆனால்,..........,

தமிழகத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும், வெட்கக்கேடான, காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இன்று அரங்கேறியிருப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கவலைப் பட்டு கூனிக் குறுக வேண்டிய ஒரு நிகழ்வு.

தமிழக வரலாற்றில் இது ஒரு கறுப்பு வெள்ளிகிழைமை என்றால் மிகையில்லை.

பதவி வெறி எந்த அளவிற்கு ஆட்டுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

ஒட்டுமொத்த போலீஸும் இந்த அவமானகரமான நிகழ்வில், கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது, தமிழக போலீஸின் மானம் எங்கே இருக்கிறது என்று அதல பாதாளத்தில் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை.

மாநகர காவல் அதிகாரி இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனே பதவி விலகினால், நாளை அவரது பெண்டு பிள்ளைகள் மதிப்பார்கள் .

செய்வாரா?

சிறையில் இருக்கும் கைதிகள் கூட வெளியில் வந்து ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடச் செய்வதில் போலீஸின் துணை இல்லையென்று மறுக்க முடியுமா?

சென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடி பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும்.

சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனே ராஜிநாமா செய்ய வேண்டும்.

முழுப் பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆளுநர் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உடனடியாக நடந்தவைகளை மத்திய அரசுக்கு, தார்மீக பொறுப்பேற்று, இந்த ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்.

மன் மோஹன் சிங் உடனடியாக இந்த அரசைக் கலைக்க வேண்டும்.

அப்துல் கலாம் என்னும் பெரிய மனிதர் அலங்காரப் பொம்மையாக இல்லாமல், உடனடியாக ஆளுநரை தில்லிக்கு வரக் கட்டளையிட்டு, நடந்ததற்கு முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவையெல்லாம் நடக்க வில்லையெனின்,....

தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் !

"இதெல்லாம் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து, எனக்கு வந்த சில மனக் குமுறல்கள்."

நடந்ததைக் கேள்விப்பட்டு மனது பெரிதும் வருந்துகிறது.

தப்பிக்கும் , மற்றவர் மேல் பழி சுமத்தும் அரசின் போக்கினைக் கண்டு மனம் வெதும்புகிறது.

அனைத்து வலைப்பதிவர்களும் தமிழர் மானம் கருதி ஒரே குரல் கொடுக்க வேண்டும், கட்சி பேதமின்றி என உள்ளம் விரும்புகிறது!

நடக்குமா?

முருகன் அருள் முன்னிற்கும்!

காக்க காக்க கனக வேல் காக்க!

[தயவு செய்து, இப்பதிவைக் கேலி செய்து பின்னூட்டங்கள் இட வேண்டாம். மட்டுறுத்தப் படும்.]

Read more...

Wednesday, October 11, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று சொன்னதால் சற்று அதிகமான ஆர்வத்துடனேயே மன்னாரின் இடம் நோக்கி விரைந்தேன்.

"தெர்யுமே! கரீட்டா வந்துருவேன்னு! அண்ணாத்தையிப் பத்தின்னு சொன்னதும் பறந்தடிச்சுகினு வந்த்ருவேன்னு இப்பத்தான் கபாலி கையில சொல்லிக்கினே இருந்தேன். சொல்லி வாய் மூடல. நீ வந்து குதிக்கறே" என்று சொல்லி பெரிதாக சிரித்தான் மயிலை மன்னார்.

"ஆமாம் மன்னார்! ஒரு வாரம் போனதே தெரியலை. அண்ணி வேற ஊருக்கு போயிருந்தாங்க. அதனால நானும் என் அண்ணாவும் மட்டும்தான். ரொம்ப ஜாலியா இருந்தது. அண்ணியும் இருந்திருந்தா இன்னும் நல்லாவே இருந்திருக்கும். ஆனா, இது போல எங்க அண்ணனை எனக்கு எனக்கே மட்டும்னு கிடைச்சது ஒரு மறக்க முடியாத அனுபவம். ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றேன் நான்.

"இப்ப நீ சந்தோசமா இருக்கேன்ற. சரி, அது எதுனால? நீ போன நேரத்துல உங்கூட மூஞ்சி காட்டாம, இல்ல, சண்டை போட்டுக்கினு இருந்தாரு ஒங்க அண்ணாத்தைன்னு வையி. ஒனக்கு இம்மாம் சந்தோசம் வந்திருக்குமோ? நீ விருந்தாளியாப் போயிருக்கே. ஒன்னை எப்படி ஒபசரிக்கணும்னு ஒங்க அண்ணாத்தைக்குத் தெரிந்சிருக்கு. அதான் சரியான ரூட்டு. இத்தப் பத்தி, இதுமாரி, வந்தவங்களை ஒபசரிக்கறது இம்மாம் முக்கியம்னு நம்ம ஐயன் சொல்லியிருக்காரு. இன்னிக்கு அதான் பாடம். எளுதிக்கோ!" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 9. "விருந்தோம்பல்"

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. " [81]

இப்ப நீ கண்ணாலம் கட்டிக்கினு, பொண்டாட்டி புள்ளைங்களோட சம்பாரிச்சு சொத்து சேத்துக்கினு, குடியும் குடுத்தனமா இருக்கேன்னா அது எதுக்காவ? இன்னும் நாலு நகை வாங்கிப் பொட்டில வெச்சுப் பூட்றதுக்கா? இல்லை ஃபாஷனா ரெண்டு காரு வாங்கி ஊரு சுத்தறதுக்கா? அத்தெல்லாம் வோணான்ல நானு. அத்த வுட முக்கியமா நீ இன்னா பண்ணணும்னா, ஒன்னை மதிச்சு, ஒன் வூடு தேடி வர்றாங்க பாரு விருந்தாளிங்க, அவுங்களை நல்லபடியா கெவனிச்சு, வேண்டியத்தப் பண்ணி அவுங்களை சந்தோசமா பாத்துக்கறதுக்குத்தான் இதெல்லாம்.
இதுல முக்கியமா கெவனிக்க வேண்டியது ஒண்ணு இருக்கு. ரொம்ப கில்லாடியா "இல் வாள்வது எல்லாம்"னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு. நீ ஒர்த்தன் பண்ணா மட்டும் போறாது. மொத்தக் குடும்பமும் இதுல ஒனக்கு ஒதவியா இருக்கணும். அப்போதான் இது சொகப்படும். நீ மட்டும் நல்லா கவனிச்சுகினு , ஒன் பொண்டாட்டி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கினு இல்ல ஒன் புள்ளைங்க மாடிய வுட்டு கீளேயே எறங்கி வராம அவங்களோட பேச்சு கொடுக்காம இருந்துச்சுன்னு வையி, மவனே, அத்தினியும் ஃபணால்தான். அல்லாருமா சேர்ந்து இதுல ஒத்துளைக்கணும்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று." [82]

வந்திருக்கற விருந்தாளி ஹால்ல ஒக்காந்து டீ.வீ பாத்துக்கினு இருக்காங்க. அப்போ உள்ளேர்ந்து ஒரு கொரலு. 'என்னாங்க! ஒங்களத்தானே! ஒரு நிமிசம் இங்க உள்ளே வந்துட்டுப் போங்க'ன்னு ஒன் பொஞ்சாதி கூப்புடுது. நீ இன்னான்னு உள்ளே போறே. 'சூடா கொஞ்சம் கேசரி கெளறியிருக்கேன். ஒங்களுக்கும் பசங்களுக்கும் மட்டும். இங்கியே சாப்புட்டுட்டு போங்க. அவுகளுக்கெல்லம் பத்தாது'ன்றாங்க. நீ இன்னா பண்ணுவே! 'என் செல்லம்! ஒன்னியப் போல ஆரு என்னை கவனிப்பாங்கன்னு' கொஞ்சிட்டு அப்பிடியே லபக்குன்னு முளுங்கிட்டு பூனை மாரி டீவீ பாக்க போயிருவியா? கூடாது. விருந்தாளியா வந்தவங்க வெளில காத்துருக்கையில, நீ மட்டும் துண்றது அது தேவலோவத்து அமிர்தமே ஆனாலும் சாப்டாதே. அத்தவுட நாத்தம் புடிச்ச வேலை வேற ஒண்ணும் இல்லை.

"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. " [83]

இப்பிடி அன்னாடம் ஒங்கிட்ட வர்ற விருந்தாளிங்களை நல்லபடியா கவனிச்சேன்னா, ஒன்னோட வாள்க்கை என்னிக்கும் கெடாம இருக்கும். ஒரு கஸ்டமும் வரது ஒனக்கு. தர்மத்தோட பெருமை அது.

"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்." [84]

சந்தோசமா சிரிச்சுக்கினு வர்ற விருந்தாளியை 'வாங்க வாங்க'ன்னு கூப்ட்டு ஒபசரிக்கறவன் வூட்ல லெச்சுமி சாமி வாயெல்லாம் பல்லா சிரிச்சுக்கினு வந்து ஒக்கார்ந்துருவாளாம். ' செய்யாள்'னா தாமரை மேல இருக்கற லெச்சுமி. நம்ம ஐயன் ஒரு நாத்திகன், சாமி பூதம்லாம் கெடையதுன்னு சொல்றங்களே , அவுங்களுக்கெல்லாம் நான் எடுத்து வுடற பாட்டூ இத்தான். இன்னும் சிலது இருக்கு அத்த அப்பால பாக்கலாம். சரியா. அந்த லெச்சுமி ஒண்ணும் சும்மா உம்முன்னு வராதாம். நல்லா சிரிச்சு, மனசெல்லாம் சந்தோசமா வந்து குந்திக்குவாளாம்!

"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். " [85]

மிச்சில்னா, மீந்ததுலன்னு அர்த்தம். மிசையறதுன்னா சாப்டறது. வந்தவங்களை நல்லா வயிறார சாப்பிடப் பண்ணி, அவுங்கள்லாம் சாப்ட்டு முடிச்சபறம், மீந்ததை ஒரு குடும்பம் சாப்ட்டுச்சுன்னா, அவன் நெலத்துல வெதை போடாமலே பயிர்லாம் விளையுமாம்.
இது கொஞ்சம் அறிவுக்கு பொருந்தாத மாரித்தான், ஓவராத்தான் தோணும். அல்லாம் ஒண்ணுக்கு பத்தா மொளைக்கும்னு வெச்சுக்கணும் நாம. ஒண்ணுமே போடலேன்னாலும் மொளைக்கும்னா, ஒண்ணு போட்டேன்னா? பத்தா மொளைக்கும். ஒனக்கு ஒண்ணு போறுமா? பத்து வோணுமா? மூளை இருந்தா புரிஞ்சுக்கோ!

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு." [86]

வந்தவங்களையெல்லாம் நல்ல ஒபசரிச்சிட்டு, அவுங்கள்லாம் போனதும், கதவ அடைச்சு தாப்பா போட்டுட்டு, ரெஸ்டு எடுக்கப் போவாம, அடுத்தப்பல ஆராச்சும் வர்றாங்களன்னு காத்திருக்கறவனை பாத்து மேலே இருக்கற சாமிங்க எல்லாம் சந்தோசப்படும். ஒன் நேரம் முடிஞ்சு நீ அங்கே போறப்ப, வாய்யா நல்ல மனுசான்னு ஒனக்கு கம்பளம் விரிச்சு வரவேப்பாங்க.
தோ! இப்ப நீ இங்க வந்துருக்கே. எங்கூட பேசிக்கிட்டே 4 மசால்வடையும் டீயும்...... அத்தாம்ப்பா இங்க கெடைக்கும்,....... அத்த துண்ற! அப்பால போயிருவே. சரி இங்கனே நின்னா நமக்கு காசு பூடும்னு, நான் நவுர மாட்டேன். அட்தாப்ல, சிங்காரம் வருவான். அவனும் துண்ணுட்டுப் பூடுவான். என்னிக்காவது காசு கொடுங்கடா பாவிங்களான்னு ஒரு நா கேட்ருப்பேனா? ஒடனே பாக்கெட்டைத் தடவாதே ! ஒன் துட்டை நீயே வெச்சுக்கோ. இப்படித்தானே ஒங்க அண்ணாத்தை கெவனிச்சுக்கிட்டாரு? உண்டா இல்லையா சொல்லு? உண்டா! சரி, சரி அட்த்ததுக்கு போலாம்.

"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்." [87]

இத்த, 'இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை'ன்னு பதம் பிரிக்கணும். அப்ப்டீன்னா இன்ன அர்த்தம்? இதுக்கு இன்னா அளவு பலன் கிடைக்கும்னு சொல்ல ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு பொருளு.
இன்னா சொல்றார்னா, நீ ஒர்த்தருக்கு இன்னா அளவுக்கு பண்றியோ, அத்தப் பொருத்துத்தான் அததோட பலன் ஆயிப் போவும்.சுமாரா கெவனிச்சியா, அதுக்கு ஒரு மாரி, நல்லா கெவனிக்கறியா அதுக்கு இன்னோரு மாரியா புண்ணியம் சேரும்.

"பரிந்தோம்பிப் பற்றேற்றம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தவர். " [88]

வந்து போற விருந்தாளிகளைல்லாம் ஏனோதானோன்னு ஒபசரிச்ச்சு அனுப்பிட்டு, பொட்டியில பணத்தைப் பூட்டி வெச்சு இன்னா ஆவப்போவுது? கட்சீக்காலத்துல, இம்மாம் பணமும் ஒன்னியப் பாத்து சிரிக்கும். இன்னாடா பிரயோசனம் என்னாலன்னு. ஐயோ, இவ்னுக்கு இது செஞ்சிருக்கலாமே அவனை அங்க கூட்டிக்கினு போயிருக்கலாமேன்னு வருத்தப் படறதுதான் மிஞ்சும்.

"உடைமையும் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. " [89]

பணத்தை வெச்சுக்கிட்டு விருந்தாளிங்களுக்கு ஒண்ணும் செய்யாதவன் தான் ஒலகத்துலியே பெரிய ஏளைன்றாரு ஐயன். இது எவன் பண்ற வேலை? புத்தியில்லதவந்தான் பண்ணுவான். இப்பிடி ஒர்த்த்னைப் பார்த்தேன்னா, அவன் ஏளை மட்டுமில்ல, முட்டாளும் கூடன்னு புரிஞ்சுக்கோ.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. " [90]

அனிச்சம்பூன்னு ஒண்ணு இருக்காம். நீயோ நானோ பாத்தது கூட இல்லை. இந்த டயனோசரஸ் மாரி காணாமப் பூடுச்சுன்னு நெனைக்கிறேன். ஐயன் பார்த்திருக்காரு. சொல்றாரு. அந்தப் பூவை மோந்து பார்த்தாலே வாடிப் பூடுமாம்.
அத்தப் போல, உனக்குப் புடிக்கலேங்க்றதுக்காவ, வந்துருக்கற விருந்தாளியப் பார்த்து கேலியா ஒரு லுக்கு வுட்டேன்னு வையி; ஒடனே அவன் மூஞ்சில்லாம் சுருங்கி, ஒடம்பு குன்னிப் பூடுவான்.
அதனால சிரிச்ச மூஞ்சியா அவனை வரவேற்கணும்.

"அவ்ளோதான். இப்ப இதுமாரி ஒனக்கு ஒங்க அண்ணாத்தை வூட்லியும் ஒங்க ராசா, கீதாப்பொண்ணு வூட்லியும் நடக்கக் கொண்டித்தானே இப்ப சிரிச்சுக்கினு இருக்கே நீயி ! அதான்யா பெர்ய மன்சனுக்கு அளகு! ஒரு தேங்ஸ் சொல்லிட்டேல்ல நீ அவங்களுக்கெல்லாம்?" என உரிமையுடன் கேட்டு விட்டு,

"சரி, சரி, நான் மேல 86-ல சொன்னேன்றதுக்காவ ரோஷமா போயிறாத. நாயர்ட சொல்லியாச்சு" என்றவாறு சிரித்தான் மயிலை மன்னார்.

நானும்தான்!

Read more...

Tuesday, October 10, 2006

"அ.அ. திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!

" பாடல்"

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

"பொருள்"

"சந்ததம் பந்தத் தொடராலே"

தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ

சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மூவுலகும் சுற்றிவரும்.

கயிற்றினை அறுத்துவிடின்
கட்டுகளும் விட்டுவிடும்
பசுவென்னும் ஆன்மாவும்
பஞ்ச சங்கிலி அறுந்திடவே
பரமான்வைப் பரவி நிற்கும்.

அது போல,
தொடராக வந்து நிற்கும்
கட்டிங்கே அமைவதினால்,

"சஞ்சலத் துஞ்சித் திரியாதே
"

கட்டுண்ட ஆன்மாவும்
காலா காலமும்
உள்ளம் மடிந்து
துன்பம் அடைந்து
உணர்வு மடிந்து
உழலாமல் இருப்பதற்கு,

"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"

கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.

கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ?

"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"

திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!

"சங்கரன் பங்கில் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே."

உமையொருபாகம் அளித்து மகிழ்கின்ற
சிவசங்கரியின் அருங்குமரா!
செந்திலையும் கண்டியையும்
ஆள்கின்ற கதிர் வேலா,
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை
மணந்திட்ட பெரியோனே!
-------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்

சந்ததம் = தினந்தோறும்
பந்தம் = கட்டு, கட்டுப்பாடு
சஞ்சலம் = துன்பம்
துஞ்சி = அடைந்து
கந்து+அன் = கந்தன்
கந்து = யானையைக் கட்டும் தறி
தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை
சங்கரன் பங்கு = உமை, பார்வதி, சிவனிடம் ஒரு பாகம் பெற்றவள்
சிவை பலா = உமையின் மைந்தன்
------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Read more...

Wednesday, October 04, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" "வான் சிறப்பு"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- "வான் சிறப்பு"

"நான் கொஞ்சம் அவசரமாப் போகணும். சும்மா உன்னைப் பார்த்து நாளாச்சேன்னு வந்தேன்" என்றேன் மயிலை மன்னாரிடம்.

"அதான் கானடால்லாம் போயிட்டு அண்ணாத்தையெல்லாம் பாத்துட்டு வந்தியே! அத்தப் பத்தி ஒங்கூட பேசலாம்னு பாத்தா வந்தவொடனியே ஓடறேன்ரியே! இன்னா சமாச்சாரம்?" என்று முறைத்தான் மன்னார்.

"தப்பா நெனச்சுக்காதே மன்னார். நம்ம சிறில் வந்து ஒரு தலைப்பைக் குடுத்து ஏதாவது எழுதுங்கன்னு சொல்லியிருக்காரு. அதைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும். இன்னொரு நாள் சாவகாசமா வந்து எல்லா விஷயமும் சொல்றேனே" என்று நழுவ முயற்சித்தேன்.

விடுவானா மன்னார்!

அப்டி இன்னா ஒரு தலப்பு? சொல்லு!" என்றான்.

'மழை' என்கிற தலைப்பில் கதையோ கவிதையோ எழுதணுமாம். எனக்கு ஒண்ணும் தோணலை. அதான் இப்படியே கொஞ்சம் பீச் பக்கம் காலார போனா எதனாச்சும் தோணாதா என்று போகிறேன்" என்றேன்.

"ப்பூ! இதுதான் விசயமா? இதுக்கா இப்டி பம்மிக்கினு கெடக்கே நீ?" என்று சற்று ஏளனமாகப் பார்த்துவிட்டு,"அதான் நீ வயக்கமா ஒரு அய்யன் பதிவு போடுவியே அதுலியே போட்றவேண்டியதானே! அத்த வுட்டு இன்னாமோ சொணங்கிக்கினு கீறியே! ஒரு தனி அதிகாரமே நம்ம அய்யன் இத்தப் பத்தி எளுதியிருக்காரு தெர்யுமா?" என்று மிதப்பாகப் பார்த்தான் என்னை.

"அப்படியா! இது நல்ல யோசனையாய் இருக்கே! என்னன்னு சொல்லு கேட்போம்." என்று அவசர அவசரமாக தாளையும் பேனாவையும் எடுத்தேன்.

"ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே இதத்தான் சொல்லியிருக்காரு அய்யன். பேரு வான் சிறப்பு. எளுதிக்கோ. ஒனக்கு ஒண்ணுன்னா நா வுட்ட்ருவேனா கண்ணு" எனச் செல்லமாக சீண்டினான் மயிலை மன்னார்!

இனி வருவது குறளும் அதற்கு அவனது விளக்கமும்.

"அதிகாரம் 2 "வான் சிறப்பு"

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. [11]

இப்போ நீ இருக்கே. நானும் இருக்கேன். ஆனா, நாளைக்கி நீயோ நானோ இருப்போம்னு சொல்ல முடியுமா? முடியாது இல்லியா? ஆனா, இந்த தேவர்னு சொல்றாங்களே , மானத்துல இருக்காங்கன்னு சொல்வாங்களே அவனுங்கல்லாம் ஏதோ அமிர்தம்னு ஒண்ணைக் குடிச்சிருக்காங்களாம். அதனால சாகாம இருப்பாங்களாம். ஆனா, நீயோ, நானோ, இல்லை இந்தா நிக்கறானே கேப்மாரி, கண்ணாயிரம், இன்னும் அல்லாரும் அப்டி இருக்க மாட்டோம். செத்துப் போயிருவோம். ஆனா, இந்த ஒலகம் சாகுமா? சாவாது. ஏன்னா நீ போனா ஒன் புள்ளைங்க, அது மாரி இன்னும் எத்தினியோ பேரு இருந்துகினேதான் இருப்பாங்க. அதனால இந்த ஒலகம் சவறதிக்ல்லை. அது ஏன்னு கேளு. ஏன்னா, மளை எப்பவும் தவறாம பெஞ்சுகினே இருக்கறதாலத்தான் அல்லா உசுரும் வாளூது. அதனால நமக்கெல்லாம் அமிர்தம் எதுன்னா இந்த மளைதான். அப்டீன்னு சொல்றாரு இதுல. அந்த மளைதான் மானத்துலேர்ந்து அமிர்தமாக் கொட்டுதாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை. [12]

இன்னாடா துப்பாக்கின்னு அல்லாம் சொல்றாரேன்னு மயங்காதே. துப்பார்க்குன்னா, சாப்ட்றவனுக்குன்னு அர்த்தம்.
துப்பாய துப்பாக்கின்னா, நல்ல பதார்த்தத்தை உண்டுபண்ணின்னு பொருளு. இன்னா சொல்றார்ன்னா, மளை இல்லாம பயிர் பண்ண முடியாது. சமைக்கறதுக்கும் தண்ணி வோணும். அப்பப்ப விக்கிச்சின்னு வையி, அதுக்கும் இந்த தண்ணிதான் வோணும். அப்டி அல்லாத்துக்குமா இருக்கறதுதான் மளையாம்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. [13]

பெய்ய வேண்டிய நேரத்துல மளை பெய்யலைன்னு வெச்சிக்கோ, மவனே, இன்னாதான் இம்மாம் பெரிய கடல் இந்த பூமியை சுத்தி இருந்தாலும், அவன்/அவன் பசி பட்டினின்னு துடிச்சிப் பூடுவானாம்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். [14]

காலாகாலத்துல மளைங்கற பெரிய பொதையலு பெய்யலேன்னு வெச்சுக்கோ, நிலத்த சாகுபடி பண்ற எவனும் இந்த ஏரு, கலப்பை இத்தெல்லாம் எட்த்துக்கினு வயவெளிக்கு போவமாட்டானாம். மளை இல்லாட்டி இன்னாத்த பயிரு பண்றது? நீயுந்தான் இன்னாத்த சாப்ட்றது?

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [15]

மளை பெய்யலேன்னா அத்தினி பேரும் காலி. ஒரு வருசம் மளை இல்லேன்னு வெச்சுக்கோ, அவ்ளோதான், அவன்அவன் ஐயோ அம்மான்னு துடிச்சிப் போயிருவான். அடுத்த வர்சமே போட்டு ஒரு தாக்கு தாக்கிச்சின்னு வையி, அல்லாரும் ஆகா ஓகோன்னு கூத்தாடுவான். இப்டி ரெண்டையும் செய்யக் கூடியதுதான் இந்த மளையோட பெருமை.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. [16]

மானத்துல மேகம் தெரண்டு 'சோ'ன்னு மளை பெய்யாங்காட்டி, இந்த நெலத்துல ஒரு புல் பூண்டு கூட தல தூக்க முடியாது, தெரிஞ்சுக்கோ!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். [17]

மளை எங்கேர்ந்து வருதுன்றே? கடல் நீரு ஆவியாகி, அது மேகமாயி, திருப்பியும் அந்தக் கடலுக்கே மளையாத் தருது. அப்டி தர்றதுனால்தான் கடல்ல இத்தினி முத்து, பவளம் மீனுன்னு பலதும் நமக்கு கிடைக்குது. அப்டி இல்லைன்னா, கடல்ல இருக்கற செல்வம்லாம் குறைஞ்சு போயிடும்.அய்யன் இதுல ஒரு பெரிய தத்துவம் சொல்லியிருக்காரு.

நம்ம சிவக்குமாரு தம்பி இந்த பொருளாதாரத்தைப் பத்தி ஒரு தொடரு எளுதிக்கினு இருக்காரே, அவருக்கு இது புரியும். சும்மா பணத்த பெட்டிலியே பூட்டி வெச்சா அது எதுக்கும் ஒதவாது. எடுத்து வெளியே வுடணும் அப்போதான் அது ஒண்ணுக்கு பத்தாகும். அது மாரித்தான், கடல் தண்ணியே திருப்பியும் மளையா வந்து ஒண்ணை பத்தாக்குதாம்! புரியுதா?

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. [18]

தை பொறந்தா பொங்கலு, ஆடி மாசம் கூளு ஊத்தறது, பொம்மைக்கொலு வெச்சு ஆடிப் பாடறது, தீவாளி, ரம்ஜான், கிரிஸ்துமஸுன்னு சும்மா மாசா மாசம் கொண்டாடரோமே, நோட்டு புஸ்தவத்த எடுத்துக்கினு டொனேசன் வசூல் பண்ண வந்துருவாங்களே, அது அத்தினியும் நின்னு போயிரும், இந்த மளை பெய்யலீன்னா. அப்புறமா அல்லா சாமிக்கும் வெரும் தட்டுதான். பூசையும் கிடையாது. பண்டிகையும் கிடையாது! அல்லாத்துக்கும் மளைதான் துருப்பு சீட்டு மாரி!

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். [19]

மேல சொன்னேனே அது போல, ரசீது புஸ்தவத்தை எடுத்துக்கினு எவனாவது வந்தான்னா நீயும் நானும் இன்னாத்தை குடுக்கறது, இங்கியே பஞ்சம் அவுத்துப் போட்டுக்கினு ஆடிச்சின்னா? போடா போக்கத்தவனேன்னு வெரட்டி வுட்ருவோமில்ல? மளை பெய்யலேன்னா தானமாவது, தருமமாவாது? ஒண்ணும் கெடையாது. அல்லாம் நின்னு பூடும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. [20]

அவன் எந்த ஊரு ராசாவா இருந்தாலும் சரி, தண்ணி இல்லேன்னா அவன் ஆட்சி காலி. பெரிய அரசியல் தத்துவத்தை சர்வ சாசாதாரணமா அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டே இருக்காரு நம்ம அய்யன். அதேபோல, காவேரி, கொள்ளிடத்துல தண்ணி வந்துக்கினே இருக்கணும்னா, மளைன்னு ஒண்ணு பெஞ்சாத்தான் கண்ணு....... தெரிஞ்சுதா, மளையோட அருமை.

என்று மூச்சு விடாமல் முடித்தான் மன்னார்.

"போ! போயி இத்த ஒங்க சிறில் அண்ணாத்தைகிட்ட நான் குடுத்தேன்னு சொல்லு" என்று சொல்லி, இனிமே நீ எங்கே பீச்சுக்கு போறது? பேசாம நம்ம நாயர் கடை டீ, மசால் வடையைத் துன்னுட்டு வூடு போயி சேரு. அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று நாயரை நோக்கினான் மயிலை மன்னார்.

நாம் வந்த வேலை இவ்வளவு சுளுவாய் முடிந்து விட்டதே என அன்புடன் அவன் தோளில் கை போட்டு, மசால் வடையைச் சுவைக்கலானேன்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP