Thursday, December 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]

                                                                     உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]
39.
[முதல் பகுதியையும் படிக்கவும்!]

 
மாவேழ் சனனங் கெடமா யைவிடா



மூவே டணையென் றுமுடிந் திடுமோ


கோவே குறமின் கொடிதோள் புணரும்


தேவே சிவசங் கரதே சிகனே.


அடுத்த இரு வரிகளுக்கு மன்னார் என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாயரும் கண்களைத் திறந்து பார்த்தான். சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. மயிலை மன்னார் சொல்லத் தொடங்கினான்.

'இப்ப ஒனக்கு கொஞ்சம் துட்டு வேணும்னு வையி. நீ ஆருகிட்ட போவே? துட்டு இருக்கறவங்கிட்ட போவே! ஆனாக்காண்டிக்கு, துட்டு வைச்சுக்கினு க்கீறவன்லாம் குடுத்துருவானா?


இன்னா, ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு, அப்பறமா வா, பாக்கலாம்னு சொல்லிருவான் மனசில்லாதவன். அவங்கையுல துட்டு இருந்தும் ஒண்ணும் 'யூஸ்' இல்ல!


அதுனால நீ இன்னா பண்ணுவே? துட்டு மட்டும் வைச்சிருந்தாப் போறாது. குடுக்கற மனசும் க்கீறவனாப் பாத்து போவே.


அதுவும் பத்தாம, அவனோட கொணம் தெரிஞ்சு அந்த டயத்துக்காப் போவணும்! அப்பத்தான் காரியம் கெலிக்கும். இன்னா? சர்த்தானே நான் சொல்றது.' என்றான்.


நான் ஆமாம், ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினேன்.


வெறும் துட்டு சமாச்சாரத்துக்கே இத்தினி பாக்கணும்னா, இப்ப அருணகிரியாரு கேக்கற சமாச்சாரத்துக்கு இன்னால்லாம் தோணும் அவருக்கு!


பொறவியே இனிமே கூடாதாம்! இந்த மூணு விதமான ஆசையும் தொலையணுமாம்!


இத்தக் கேக்கப் போறச்சே, ஆரு இதுக்குத் தோதானா ஆளுன்னு பாக்கறாரு.


சரி, பொறவிதானே வேணாம்னு சொன்னே. அதுக்கென்ன இனிமே நீ பூமியுல பொறக்கமாட்டே! அதுக்குப் பதிலா என்னோட ஒலகத்துக்கு வந்து குந்திக்கன்னு சொல்ற சாமியை இவர் தேடலை!

எந்த சாமிக்கு எல்லா ஒலகமும் கட்டுப்படுதுன்னு சுத்துமுத்தும் பாக்கறாரு.


எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!

'ஆகா! இவர்தானே அல்லா ஒலகத்துக்கும் தலைவன்'னு புரியுது!

கைலாஸம், வைகுண்டம், சத்தியலோகம், சக்திபீடம்னு நாலு ஊருங்க இருக்கு. அததுக்கு ஒரு சாமி தெய்வமா நின்னு அந்தந்த ஊருங்களைப் பாதுகாக்குது.

ஆனாக்க, இந்த முருகனோட பெருமையே தனி!


ஒனக்குக் கூட நெனைப்பிருக்குமே! ஓம்முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியலைன்னு, பிரம்மாவைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டு இவரு இன்னா பண்ணினாருன்னு!

அல்லாத் தொளி[ழி]லையும் இவர் ஒர்த்தரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, அப்பிடியே செஞ்சும் காட்டினாரு!

இதெல்லாம் நெனைப்புல வரவும், மொதல் வார்த்தையைப் போட்டுக் கூப்பிடறாரு!

'கோவே'ன்னு!


'கோ'ன்ன ரொம்பப் பெரிய ராசான்னு அர்த்தம். இல்லியா சாமி?' என சாஸ்திரிகளைப் பார்த்ததும், உடனே புரிந்த சாம்பு சாஸ்திரிகள்,


'இதைப்பத்தி, 'திருமுருகாற்றுப்படை'ங்கற அற்புதமான நூலுல நக்கீரர் ரொம்ப அழகாச் சொல்றார்.


" நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலை இய
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை" ன்னு.


கிட்டத்தட்ட இப்ப நீ சொன்ன அதே குணத்தைத்தான் கந்தஸ்வாமிக்குச் சொல்லி அழகு பார்க்கறார் நக்கீரர்' என்றார்.

ஒரு திருப்தி கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்துவிட்டு மேலே தொடங்கலானான் மன்னார்.


'ஆச்சா? இப்ப மொத வார்த்தை கிடைச்சாச்சு! அல்லா ஒலகமும் இவருக்கு வசப்படுதுன்னு புரிஞ்சுபோச்சு!

இப்ப நேரம் எப்பிடின்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணகிரி.
எப்பவுமே ஒர்த்தர் ரொம்ப சந்தோஷமா க்கீற நேரத்துல போய்க் கேட்டா, அநேகமா அந்தக் காரியம் பள[ழ]மாயிரும்.

அப்பிடி இந்தக் குமரனுக்கு எந்த நேரம் நல்ல நேரம்னு நெனைச்சுப் பாக்கறாரு.
அடுத்த வரி பொறக்குது!

'குறமின் கொடி தோள் புணரும் தேவே'ன்னு கூப்பிடறாரு.


வள்ளியம்மாவோட இடுப்பு ரொம்பச் சின்னதா ஒரு மின்னல்கொடி போல இருக்குமாம். அந்த அம்மாவோட இவரு க்கீற நேரமெல்லாமே சந்தோசமான நேரந்தான். அதுனால, இந்த வார்த்தையைச் சொன்னதும், அந்தக் 'கோ'வுக்கு, 'தே'வுக்கு... ரொம்பவே சந்தோசமாப் பூடுது!


கடசியா, ஒரு சொல்லு வைக்கறாரு 'சிவசங்கர தேசிகனே'ன்னு!

முன்னாடி சொன்ன பிரம்மா கதையோட முடிவு ஒனக்குத் தெரியுந்தானே! அவரை விட்டுருப்பான்னு நைனா கபாலி வந்து கேக்கக்கொள்ள, அப்பிடீன்னா அதுக்கு பொருள் சொல்லு நைனான்னு இவரு பர்த்திக்குக் கேக்க, 'ஒனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுன்னு கபாலி கேக்க, 'ஆங்! அதெல்லாம் ஒளுங்கா ஒரு வாத்தியார்கிட்டக் கேக்கறமாரி பணிவாக் கேக்கணும்'னு முருகன் சொல்ல, அப்பிடிச் சொன்னதுதான் அந்த ஒபதேசம்!


அதுனாலத்தான் இவரு சிவசங்கர தேசிகன்.
தேசிகன்னா குருன்னு அர்த்தம்.


இந்த வார்த்தை எதுக்காவப் போட்டருன்னா, ஆருக்குமே தெரியாததுல்லாம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும் முருகா! அதுனால, இந்த பொறப்பும், மூணு ஆசைங்களும் எப்ப முடியும்ன்றதையும் கொஞ்சம் பாத்துச் சொல்லு கண்ணு'ன்னு நைஸாக் கேக்கறாரு!


நான் மொதல்லியே சொன்னமாரி, ஆரு கையுல அல்லாமே க்கீதோ, ஆருக்கு குடுக்கற மனசு க்கீதோ, அவர்கையுல நேரம் பாத்துக் கேட்டா, கேட்டதுக்கு மேலியே கிடைச்சிரும்!


இந்த மூணு ஆசைங்களுக்கும் கீளே சொன்ன மூணு பேருங்களுக்கும்ங்கூட ஒரு பொருத்தம் க்கீது!


அல்லா ஒலகத்துக்கும் ராசா... மண்ணு
வள்ளியம்மாவைக் கண்ணாலம் கட்டிக்கினவரு....பொண்ணு
ரொம்பவே மதிப்பான தங்கத்தைப் போல, ரொம்பப் பெரிய விசயத்தைத் தெரிஞ்சு வைச்சிருக்கவரு,... பொன்னு!


இப்பிடியும் அர்த்தம் பண்ணிக்கினு இந்தப் பாட்டை ரொம்பவே ரசிக்கலாம்.

ஆகக்கூடி, நேரம் காலம் பாக்காம, எப்பவும் இவனோட பேரைச் சொல்லிக்கினே இரு! அதான் இதுக்கெல்லாம் ஒரே வளி[ழி]ன்னு இந்தப் பாட்டு மூலமா, அருணையாரு நமக்கெல்லாம் அருள் பண்றாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று ஒரு சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!

மீண்டும் இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன்!


மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


'ஓம் சரவணபவ' தொடரலாயிற்று!

**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, December 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]

                                                                         உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]
39.

இன்னைக்குச் சொல்லப்போற பாட்டு ரொம்பவே ஒசத்தியானது! படிக்க ரொம்பவே சுளுவா இருக்கும். ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ள ரொம்பப் பெரிய விசயம் க்கீது! அதனால, இதுக்குச் சொல்றப்ப, நம்ம சாமியும் அப்பப்ப வந்து சொல்லணும்னு கேட்டுக்கறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மயிலை மன்னார்!

'என்னடா சொல்றே! நீ சொல்றதுக்கு மேலே நான் என்ன சொல்லப் போறேன்? சரி, என்னமோ சொல்றே! விஷயம் இல்லாமலா சொல்லுவே? பார்க்கலாம்' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

'இன்னா முளி[ழி]க்கறே? போவப் போவப் புரியும்! நீ பாட்டைப் படி! அதானே ஒனக்கான வேலை' என என்னைப் பார்த்தான் மன்னார்.

பதிலொன்றும் பேசாமல், ஒரு ஆவலுடன் அடுத்த பாடலைப் படித்தேன்.

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


[மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.]

'மாவேழ் சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

'மாவேழ் சனனம்'னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு.
அதென்ன மாவேள்[ழ்] சனனம்?

ஏளு[ழு] சென்மம்னு கேள்விப்பட்டிருக்கோம்!
மா....வேளு[ழு]?

'மா'ன்னா பெருசுன்னு சொல்லுவாங்க!
அப்ப, இது பெரிய ஏளு[ழு]ன்னு அர்த்தமாவுது.

அப்படீன்னா இன்னா?
ஏளும் ஏளும் பதினாலா?
இல்லைன்னா, ஏளேளு நாப்பத்தொம்பதா?
இன்னா ஐயரே? இன்னா சொல்றீங்க? என சாஸ்திரிகளைப் பார்த்தான் மன்னார்.

'நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் மன்னார்! இந்த ஏழுங்கறது ரொம்பவே பெரிய விஷயம்! ரிக் வேதத்துல இது பத்தி ரொம்பவே ஒசத்தியா சொல்லியிருக்கு.

பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3], ன்னு.. இந்த ஏழு ரொம்பப் பெரிய சமாச்சாரம்.

அதே மாதிரிதான் இந்த ஏழு பிறவிங்கறதும்!

இது ஏழா, ஈரேழா, இல்லைன்னா ஏழேழு நாப்பத்தொம்பதான்னு நீ கேக்கறமாதிரியே ஒரு கேள்வி வரும்.


எல்லாமே சரின்னாலும் இதுக்கெல்லாம் தெளிவா ஒரு விடையை நம்ம மாணிக்கவாசகர் கொடுத்திருக்கார்!

இந்தப் பிறவின்னா என்ன? அது எத்தனை வகைப்படும்னு ரொம்ப அழகா, எளிசா சொல்லியிருக்கார்!
திருவாசகத்துல ஒரு வரி இப்படி வருது.

"புல்லாகி,பூடாய்,புழுவாய்,மரமாகி,பல் விருகமாகி,பறவையாய்,பாம்பாகி,
கல்லாய்,மனிதராய்,பேயாய்,கணங்களாய்,வல்லசுராகி,முனிவராய்,தேவராய்,செல்லா நின்ற இப்பிறப்பில்எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்!"

ஒண்ணொண்னா கூட்டிப் பாரு! மொத்தம் பதினாலு வரும்! இதான் ஏழேழு!
இதுல மீனைப் பத்திச் சொல்லலியேன்னு ஒரு சந்தேகம் வரும். பல் விருகம்னு சொல்றப்பவே இதெல்லாமும் வந்துடும்னு சொல்லாம சொல்லியிருக்கார் அந்த மஹா ப்ரபு!

இந்த ஈரேழைத்தாம் நாம மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!
அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து, எப்பவோ முக்தி அடையறோம்.
எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!

நம்ப சம்பந்தர் இருக்காறே, அவர் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏழு பிறவிகளுக்குள்ளியும் நிறைய யோனி பேதங்கள் இருக்குன்னு சொல்றார்.

'உரை சேரு எண்பத்து நான்கு
நூறாயிரமாம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்த வற்றின்
உயிர்க்கு யிராய் அங்கங்கே நின்றான்'னு ஒரு பாட்டு பாடறார்.


இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா, இந்தப் பிறவிகள் எத்தனை, அதுக்குள்ளே எத்தனை பிரிவுன்னு யாராலயும் சொல்லவே முடியாது. இதான் நான் சொல்ல வர்றது' என்றார் சாஸ்திரிகள்.

சட்டென்று உற்சாகமானான் மன்னார்!

'நல்லாச் சொன்னீங்க சாமி! இதையேதான் நம்ம ஐயனும் சொல்லியிருக்காரு!

62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!

'எழு பிறப்பும் தீயவை வேண்டா'
'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'
'எழுமையும் ஏமாப்புடைத்து'
'எழுமையும் நான் புக்கழுத்தும் அன்று' ன்னு இந்தப் பொறப்புங்களப் பத்திச் சொல்றாரு.

ஆக மொத்தம் எப்பிடிப் பாத்தாலும், இந்த ஏளோ[ழோ]ட கூட்டணி நம்மள ரொம்பவே படுத்துதுன்னு புரியுதில்ல. அவ்ளோ கொடுமை இந்தப் பொறப்புன்றது!

இந்தச் செனனந்தான் ஒளி[ழி]யணும்னு கேக்கறாரு மொதல் வார்த்தையுல !

அடுத்தாப்பல வர்றது இன்னும் பெருசு! அதுக்கும் சாமிதான் தயவு பண்ணணும்' எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் மன்னார்.

'மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

மூ வேடணை'ன்னா இன்னான்னு பாப்பம் மொதல்ல!

நேரடியா தமிள்[ழ்]ல பாத்தா, ஒருவேளை வேதனைன்றதைத்தான், அப்பப்ப மாத்திப் போடறமாரி போட்டுட்டாரோன்னு தோணும்!

அப்பிடியே பாக்கலாம் இப்ப.
அதென்ன மூணு வேதனை?

ஒலகத்துல நம்மளைப் படுத்தறது இந்த மூணு விதமான ஆசைங்கதான்
மண்ணாசை, பொண்ணாசை, பொன்னாசைன்ற இந்த மூணுந்தான் இந்த வேதனைங்க!

இதெல்லாம் எதுனால வருது?
எல்லாம் ஒரு மாயைன்னு புரியாததால.

ஆசை வர்றதே ஒரு மாயையாலத்தானே? என்ன சாமி சொல்றீங்க' என சாஸ்திரிகளைத் தூண்டினான் மயிலை மன்னார்!

அதைப் புரிந்துகொண்ட சாம்பு சாஸ்திரிகளும் சற்றும் சளைக்காமல் பேசலானார்.

'நீ சொன்னதும் ஒருவிதத்துல சரின்னாலும், இதுல ஒண்ணும் தப்பா சொல்லலை அருணகிரியார்.

இப்போ, 'நஷ்டம்', 'கஷ்டம்'ங்கறதை 'நட்டம்', 'கட்டம்'னு சொல்றாளோன்னோ? அதேமாதிரிதான், 'ஏஷணா'ன்னு ஒரு சம்ஸ்க்ருத வார்த்தை, இங்கே 'ஏடணை'ன்னு கொஞ்சம் உருமாறி வந்திருக்கு.

ஏஷணான்னா ஆசைன்னு அர்த்தம்.

மத்தபடி நீ சொன்ன அந்த மூணு ஆசையும் அதேதான்!
ம்ம்ம்... மேலே நீயே சொல்லு!' என மௌனமானார் சாம்பு சாஸ்திரிகள்!

'இந்த சென்மன்றது முடியணும்னா, இந்த மூணு ஆசைங்களையும் நாம விடணும். அப்பத்தான் இது தொலையும்!

இல்லைன்னா ஏளு[ழு], ஏளேளு,ன்னு தொடர்ந்துக்கினே இருக்கும்!
இதெல்லாம் எப்போ முடியும் முருகான்னு கதர்றாரு.

இதை ஏன் முருகனைப் பார்த்துக் கேக்கறாருன்றதுக்குத்தான் அடுத்த ரெண்டு வரியும்!' என நிறுத்தினான் மன்னார்!

சரி, இது கொஞ்சம் நீளமாத்தான் போவப்போவுது' என நினைத்தபடியே நாயரைப் பார்த்தேன்.

'இது எனக்கு அப்பவே தெரியும்' என்பதுபோல், அவன் 'ஓம் சரவணபவ' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்!
******

[இன்னும் வரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, December 15, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39

                                                                உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39
38.
[சென்ற பதிவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. பாடல் வரிசையை மாற்றிப் போட்டுவிட்டேன். எனவே 38-ம் பதிவைப் படித்துவிட்டு, இந்த 39-ஐப் படிக்கவும். சிரமத்துக்கு மன்னிக்கவும். முமு!]

 
வழக்கமாக அமரும் ஐயர் வீட்டுத் திண்ணையில் இன்று புதிதாக இன்னுமொருவன் அமர்ந்திருந்தான். மயிலை மன்னார் சஹஜமாக அவனது தோளின் மேல் கைபோட்டிருந்தான்!


எனக்கும், நாயருக்கும் அவனை முன்னமேயே தெரியுமென்பதால், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். சாம்பு சாஸ்திரிகள் மட்டும் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தார்.


அவரது ஆவலைப் புரிந்த நான், மேலும் அவரை வருத்தவிடாமல், 'என்ன மன்னார்! நம்ம கோபாலையும் இன்னைக்குக் கூட்டிட்டு வந்திருக்கே போல!' எனச் சிரித்தபடியே கேட்டேன்.


சட்டென்று விஷயம் புரிந்து சாஸ்திரிகளின் முகமும் மலர்ந்தது!


'அட! பின்ன இன்னாபா! நம்ம தோஸ்த்துன்னா அப்பிடியே விட்டுருவோமா? இன்னா தப்பு பண்னினாலும் அதுக்குன்னு சீ, போடான்னு தள்ளிருவோமா இன்னா?நம்மாளு என்னிக்குமே நம்மாளுதான்! அதுக்குத்தான் இன்னைக்கு இங்கன அவனையும் இட்டாந்தேன். அது மட்டுமில்ல! இன்னைக்கு சொல்லப்போற பாட்டை அவனும் கேக்கணுன்னுந்தான்! எங்க? பாட்டைப் படி!' என என்னைப் பார்க்க, நான் படிக்கலானேன்.

ஆதா ளியையொன் றறியே னையறத்
தீதா ளியையாண் டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

' ஒரு பெரிய சமாச்சாரத்தை அப்பிடியே அசால்ட்டாச் சொல்லிடறாரு இந்த மொத ரெண்டு வரியுல!

'ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ'ன்னு அளு[ழு]து பொலம்பறாரு.

'ஆதாளி'ன்னா இன்னா?


மனக்கலக்கம் ஜாஸ்தியா இருக்கறவனுக்கு இந்தப் பேரு.


எதுனால மனக்கலக்கம் வருது?


இப்ப ஒரு பிரச்சினை ஒண்ணு ஒர்த்தனுக்கு வருதுன்னு வையி! இன்னா பண்றதுன்னு ஒண்ணுமே தெரியலைன்ற வெவரம் அவனோட அடிவயித்தப் பெசையறப்ப, 'அடடா! இன்னாடா இது வம்பாப் போச்சு! நமக்கு ஒண்ணுமே தெரியலியே! எப்பிடி இப்ப சமாளிக்கப்போறோம்ன்ற நெனைப்பு வர்றப்ப வர்றதுதான் இந்த மயக்கம். அதான் ஆதாளி.


ஆச்சா? இப்ப ஆதாளி, ஒன்று அறியேன்னு தன்னை ரெண்டு விதமாச் சொல்லிட்டாரு.


அப்பாலிக்கா, அறத் தீதாளின்னு வேற சொல்லிக்கறாரு.


ஆதாளி ஒனக்குப் புரிஞ்சுதுனால, இந்தத் 'தீதாளி'ன்னா இன்னான்னு ஒருமாரி குன்ஸாப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.


' தீதாளி'ன்னா கெட்டது பண்றவன்னு அர்த்தம்.

சாதாரணமா கெட்டது பண்ணினாக்கூட, சரி, இது அவன் கொணம்னு பொறுத்துக்கலாம்.


ஆனாக்காண்டிக்கு, நல்ல விசயத்துக்கு, தர்மத்துக்கு கெடுதி பண்றவன் க்கீறானே, அவன் ரொம்பவே மோசமானவன்.


அதைத்தான் 'அறத் தீதாளி'ன்னு சேர்த்து சொல்றாரு.


இப்பியாப்பட்ட என்னை 'நீ பண்ணினதெல்லாம் போறும்'னு கருணை பண்ணி ஒன்னோட சேர்த்துக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்லிப் பாடறதுன்னு கண்ணால தண்னி வுடறாரு அருணகிரியாரு.
இதுக்கு அப்பால ஒரு ரெண்டு வரி போட்டிருக்காரு பாரு,... அதான் ரொம்பவே பிரமாதம்!

கூதாள கிராத குலிக்கு இறைவா; வேதாள கணம் புகழ் வேலவனே.

'கூதாள' ப்பூன்னு ஒரு பூ க்கீது. சாதாரணமா காட்டுல ஆருமே பாக்காத இடத்துல இது பூத்திருக்கும். வாசனையும் ஒண்ணும் அப்பிடி ரொம்பவும் கிடையாது!


இந்தப் பூவை எடுத்து தலையுல வைச்சுக்கற கூட்டம் ஒண்ணு க்கீது!
அவங்கதான் அந்தக் காட்டுலியே வேட்டையாடுற வேடருங்க!


கொன்னு குவிக்கறதே இவங்க தொளி[ழி]லுன்றதால, இவங்களுக்கு 'கிராதர்'னும் ஒரு பேரு உண்டு.


அந்தக் கொலத்துல பொறந்த வள்ளியம்மையைக் கட்டிக்கிட்டதால அந்தக் கூட்டத்துக்கே இவரு தலீவராகிப் போறாரு.


அதான் 'கூதாள கிராத குலத்துக்கு இறைவன்'... நம்ம கந்தன்!


இவருக்குன்னு ஒரு பெரிய படை க்கீது!
அதுல ஆராருடா சிப்பாயிங்கன்னு பார்த்தியான ஒரே வேடிக்கையா இருக்கும்!
இந்தப் பேய்க் கூட்டங்கதான் இதுல பெரிய பெரிய சிப்பாயிங்க!
அவங்களைத்தான் 'வேதாள கணம்'னு சொல்றாரு.


இவங்கள்லாம் புகளு[ழு]ற வேலவனேன்னு கொண்டாடறாரு!


இங்கதான் கொஞ்சம் கவனிக்கணும்!
எதுக்காவ இவங்களையெல்லாம் இந்த இடத்துல கொணாந்து வைச்சுப் பாடறாரு?
இவங்கள்லாம் ஆரு?


கொஞ்சங்கூட மதிப்பே இல்லாத காட்டுப் பூவை எடுத்து வைச்சுக்கினு கண்டவங்களைக் கொல்றவங்க ஒரு பக்கம்!
அவங்களுக்கு இவரு சாமி!


செத்துப் போனதுக்கப்பறமும் போவ[க]வேண்டிய இடத்துக்குப் போவாம, இன்னமும் பேயா அலையுற கூட்டந்தான் இவருக்கு 'ஆர்மி'!
இவங்கள்லாம் இவரைக் கொண்டாடறாங்க!




இதுலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?


நீ இன்னாத்தான் கெட்டவனாயிருந்தாக்காண்டியும், தன்னோட ஆளுங்கன்னு முருகன் நெனைச்சுட்டான்னா, அவங்களைக் கைவிடவே மாட்டான் அந்தக் கருணைக் கடலு! அதான் அவன் கொணம்!

திட்டினவங்களைக் கூட நல்லா வாள[ழ] வைக்கற தெய்வம் அவன்!

இதும்மாரிப் பண்ணினவங்களைக் கூட நீ நல்லா நடத்தினப்ப, என்னைப் போல, ஒண்ணுமறியா ஆதாளியை, அறத் தீதாளியை நீ பெரிய மனசு பண்ணி, ஒனக்கு அடிமையா வைச்சுக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்றது!'ன்னு மெய்சிலிர்க்கறாரு அருணையாரு!' என்று சொல்லி நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் சகா கோவா[பா]லை அன்புடன் பார்த்தான்!

'அண்ணே!' எனச் சொல்லி மேலே வார்த்தை வராமல் தழுதழுத்தான் கோபால்.


இந்தக் காட்சியைப் பாத்து, தன் மேல் துண்டால் தன் கண்களைத் துடைத்தபடியே, சாம்பு சாஸ்திரிகள், 'இதைக் கேட்டதும் எனக்கு ஒரு ரெண்டு வரி சொல்லணும்னு தோணறது' என ஆரம்பித்தார்.

இந்த 'ஆண்டது செப்புமதோ'ன்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கென்னமோ சட்டுன்னு திருவாசகத்துல மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் பாடினதுதான் ஞாபகத்துக்கு வந்தது!


'திருக்கோத்தும்பி'ல ஒரு வரி வரும்!


'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி'ன்னு!


இதுல வர்ற கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒரு வேடந்தான்! ஆனாலும் அவரோட அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த சர்வேச்வரன் என்னமா அவர் செஞ்சதையெல்லாம் தாங்கிண்டார்னு நினைக்கறச்சே, அவருக்கு பொறந்தவர், அதுவும் நேரடியா அவரோட நெற்றிக்கண்ணுலேர்ந்து பொறந்த இந்த கந்தஸ்வாமி இப்படி அருட்கடாக்ஷம் பண்றதுல என்ன ஆச்சரியம்! நாம் மட்டும் அவரை எப்பவும் ஸ்தோத்ரம் பண்ணிண்டு இருந்தா எல்லா மங்களத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார்னு சொல்லணுமோ!' என்றார் சாஸ்திரிகள்!

'நல்லா சொன்னே சாமி' என்று சிலாகித்தான் மயிலை மன்னார்.


நாயரின் 'ஓம் சரவணபவ' தொடர்ந்து கொண்டிருந்தது!
***************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38
37.

'ஒரு கூட்டத்துல ஒர்த்தனா இருக்கணும்னா, மொதல்ல அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியணும். அது இல்லேன்னா எந்தப் பிரயோசனமும் இல்லை' என உரக்கக் கூறியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினான் மயிலை மன்னார்.



'இப்ப என்ன ஆயிடுத்துன்னு நீ இந்தக் கூப்பாடு போடறே?' என உரிமையுடன் அதட்டினார் சாம்பு சாஸ்திரிகள்.



இந்தக் கோவாலுப் பயலைத்தான் சொல்றேன். நம்ம கூட்டத்துலதான் இருந்தான். தாயா புள்ளையாப் பள[ழ]கினோம். இப்ப இன்னாடான்னா, தெனாவெட்டாப் பேசறான். கையுல நாலு காசு பார்த்துட்டான்னா, அதுக்காவ மரியாதையில்லாமப் பேசறதா இன்னா? அகங்காரம் தொலைஞ்சாத்தான் உருப்புடுவான். அதான் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பாட்டு கூட அத்தத்தான் சொல்லப் போவுது. என்றான் மன்னார்.


பதிலொன்றும் சொல்லாமல் பாட்டைப் படித்தேன்.

கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே


கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


" மனனே! கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்!"

'மனசைப் பாத்து ஒரு கோரிக்கை வைக்கறாரு.


இதுவரைக்கும் நீ இன்னான்னாமோல்லாம் பண்ணிட்டே! அதுனால ஒனக்கும் எனக்கும் படா பேஜாராகித்தான் போயிருக்கு. உருப்படியா ஒண்ணும் நடக்கலை. தொந்தரவு மேலத் தொந்தரவா வந்து இப்பிடி சிரிப்பா சிரிக்கறோம். நீ பண்ணின காரியத்தால,.... சரி, சரி... நானுந்தான் சேர்ந்து செஞ்சேன்....இல்லேங்கலை.... நாம பண்னின காரியத்தால, நமக்குன்னு சொல்லிக்க ஒரு நாலு பேரு கூட இல்லை இப்ப!


நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? இனிமேங்காட்டிக்கும், நமக்குன்னு நல்லவங்க கூட்டம் வேணும். அதுக்கு நாம போயி முருகனோட அடியாருங்க கூட்டத்துல இருக்கறவங்க காலடியுல விள[ழ]ணும்.

ஆரு இந்த முருகன்னு கேக்கறியா?


அது மாயக் குகை, மந்திர மலை, கொஞ்சம் பாத்து கவனமாப் போங்கப்பான்னு, படிச்சு, படிச்சு சொன்னவருதான் இந்த முருகன்.


ஆருக்கு சொன்னாரா?


சூரனோட சண்டைக்குப் போகங்காட்டி, அவனோட தம்பி தாரகன்னு ஒரு ராட்சசன். ஒரு பெரிய மலையாத் தன்னை மாத்திக்கினு, அதுக்குள்ளாற போறவங்களைல்லாம், மனசு மயங்கப் பண்ணி, மயக்கம் போட வைச்சிருவான்.


அவனைக் கொல்றேன் பேர்வளி[ழி]ன்னு வீரவாகுத் தேவரு கெளம்பறாரு. அவரு பின்னாடியே இந்த பூதங்கல்லாம் கூட கும்மாளம் போட்டுக்கினு பொறப்பதுங்க! அப்பத்தான், முருகன் தேவரைப் பார்த்து சொல்றாரு,' கெவனமாப் போங்கப்பா'ன்னு.


அத்தெல்லாம் நான் பார்த்துகறேன்னு சொல்லிட்டு, அல்லாரோடியும் போயி, மலைக்குள்ள மாட்டிக்கினு, இப்ப அல்லாரும் மயங்கிக் கெடக்கறாங்க!


அல்லாம் தெரிஞ்ச கந்தன், சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கினே, தன்னோட வேலை எடுத்து வுடறாரு. அது நேராப் போயி, அந்த கிரவுஞ்ச மலையோட வாயைக் கிளி[ழி]ச்சுக்கினு, அந்த மலையையே சுக்கு நூறாக்கிருது.

தம் பேச்சைக் கேக்கலைன்னாலும், தன்னோட ஆளுங்கன்றதால, கருணை பண்ணின முருகனோட அடியாருங்களுக்கு அத்தினிப் பெருமை க்கீது!


இப்ப நாம இன்னா பண்றோம்னா, நேரா அவங்களோட காலுல போயி விளணும். விளுந்து, என்னியயும் உங்க கூட்டத்துல ஒரு வேலைக்காரனாவவாது சேத்துக்கோங்க சாமிங்களான்னு கெஞ்சிக் கதறணும்.


இப்ப இன்னாத்துக்கு அத்தப் போயி ஒங்கையுல வந்து கேக்கறேன்னு பாக்கிறியா?


நீ மனசு வைச்சாத்தான் அந்தக் காரியமே நடக்கும்! நீதானே என்னோட மனசு? அதுனால நீதான் ஒதவி பண்ணணும்.'னு மனசுக் கையுல போயிக் கெஞ்சறாரு.

" பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே"

[பொறையாம் அறிவால் அடியோடும் அகந்தையையே அரிவாய்]

'இந்த மனசைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காரு அருணகிரியாரு! இன்னாதான் கெஞ்சினாலும், திமிரு நெறைய க்கீற இந்த மனசு அத்தயெல்லாம் கேக்காதுன்னும் தெரியும்! அதுக்காவ, ஒரு ஐடியா குடுக்கறாரு மனசுக்கு!


இது கஸ்டந்தான்; ஒன்னால அவ்வளோ சுளுவா இந்த அகங்காரத்தயெல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு அடியாருங்க காலுல போயி விள[ழ]றது முடியாதுன்னு எனக்குத் தெரியும்.


அதுனால, நீ இன்னா பண்ணணும்னா, ஆண்டவன் ஒனக்குக் கொடுத்த புத்தியை கொஞ்சம் 'யூஸ்' பண்ணணும். அதுலியும், கன்னா பின்னான்னு திரியுற அறிவைப் பத்தி நான் சொல்லலை. பொறுமையா இருக்கணும்னா அதுக்கு அறிவு ரொம்பவே வோணும். 'தாட்-பூட்'டுன்னு எகிர்றதுக்கு அறிவே தாவ[தேவை]யில்ல. அத்த ஆர் வோணும்னாலௌம் செஞ்சிறலாம். ஆனாக்காண்டிக்கு, பொறுமையா க்கீறதுக்குத்தான் புத்தி அவசியம்.


இந்தப் பொறுமை வரணும்னா, அதுக்கு மொதல்ல நீ ஒண்ணை கண்டிப்பாப் பண்ணியே தீரணும்!


ஒனக்குள்ள [மனசுக்குள்ள] ஒளிஞ்சுக்கினு க்கீதே இந்த ஆணவம்,.. அகந்தை,... அகங்காரம்,... அத்த சுத்தமா, வெட்டிச் சாய்ச்சிறணும். அத்த வெட்றதுன்றது அவ்ளோ 'ஈஸி'யான சமாச்சாரம் இல்லை! அங்கதான் நீ பொறுமைன்ற அறிவை வைச்சு, ஆணவத்தை வெட்டணும்... அரிஞ்சு தள்ளணும்.


அதும் மட்டும் நீ பண்ணிட்டியானா, அப்பாலிக்கா, ஒனக்கே அல்லாமும் புரிஞ்சிரும். அப்பத்தான், நாம ரெண்டு பேருமாப் போயி, அவங்க பாதத்துல சரணடைய முடியும்'னு சொல்லிக் குடுக்கறாரு. போன பாட்டுல அடக்கமா இருக்கணும்னு சொன்னவரு, அதுக்கு மொதல்ல ஆணவத்தை வெட்டணும்னு இந்தப் பாட்டுல சொல்லிக் குடுக்கறாரு.


இப்பப் புரியுதா? நான் இன்னாத்துக்காவ அப்பிடிப் பேசினேன்னு' என என்னைப் பார்த்தான்.


பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!


முருகனருள் முன்னிற்கும்!

[தவறுதலாக போன வாரம் 37-ம் பாடலை இடாமல், 38-ஐ இட்டுவிட்டேன். அருள்கூர்ந்து இந்தப் பதிவைப் படிக்கவும். முமு!]

Read more...

Friday, December 02, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37
36.

'இப்ப ஒரு விசயம் ஒனக்குத் தெரியணும்னு வைச்சுக்க! அது பலான பலான ஆளுகிட்டதான் இருக்குன்னும் தெரியுதுன்னு வைச்சுக்க! அத்தக் கேக்க நீ போறப்ப இன்னாமாரி கேக்கணும்ன்றதுக்கு ஒரு வளி[ழி] காமிச்சுத் தர்றதுதான் அடுத்த பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.' என்றவாறே என்னைப் பார்க்க, நானும் உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.


நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோதி யதெப் பொருடான்
வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே


நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே

'அரனார், "நாதா குமரா நம" என்று ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?'

'இன்னான்னமோ வளி[ழி]யுல 'நைஸ்' பண்ணிப் பாக்கறாரு அருணகிரியாரு. ஒண்ணும் நடக்கலை! முருகன் ஒண்ணும் இவருக்கு சொல்றமாரித் தெரியல.

சரின்னுட்டு, இப்ப இன்னொரு ரூட்டுக்கா வராரு!

'ஆமா, நீ இன்னாமோ ஒங்க நைனா கையுல ஏதோ சமாச்சாரம் சொன்னியாமே? நீ கூட இன்னாமோ ரொம்ப முறுக்கிக்கினு, 'இப்பிடில்லாம் கேட்டாக்க நான் சொல்ல மாட்டேன். அடக்க ஒடுக்கமா வந்து எங்கையுல குந்திக்கினு பதவிசா கேட்டாத்தான் சொல்வேன்'னு சொல்லக்காண்டி, அவரும் வேற வளியில்லாம, 'என்னப்பனே, முருகா! ஞான பண்டிதா, என் ராசா! நாதமா க்கீறவனே! ஒனக்குக் கோடி புண்ணியமாப் போவட்டும். 'அத்த' எனக்குந்தான் கொஞ்சம் சொல்லு ராசா!'ன்னு கேக்கக்கொள்ள, நீயும் இன்னாமோ அவர் காதுல ஓதினியாமே! அது இன்னான்னு எங்கையுலியும் கொஞ்சம் சொல்லக்கூடாதாப்பா'ன்னு கெஞ்சறாரு.

அது இன்னான்னும் இவர் சொல்லிக் கேக்கலை! .... தெரிஞ்சுக்கினமாரியும் காட்டிக்கலை! கொஞ்சம் 'ஐஸ்' வைச்சுக் குளிப்பாட்டிப் பாக்கறாரு.

ஆனாக்காண்டிக்கு, கொஞ்சம் சூசகமா தனக்கும் இத்தப் பத்தித் தெரியுமின்னு கோடி காட்டறாரு!
அதுக்குத்தான் 'நாதா'ன்னு ஒரு வார்த்தையைப் போட்டிருக்காரு!

'நாதம்'னா இன்னா?

சத்தம்! ஓசை!

ஒலகத்துலியே மொத மொதலா வந்த நாதம் இன்னாது?

ஓம்!

'நாதா'ன்னா தலைவான்னும் ஒரு அர்த்தம் க்கீது.

அப்பிடிக் கூப்படறமாரிக் கூப்ட்டுட்டு, கூடவே, அந்தப் பிரணவத்துக்குத்தான் கந்தன் பொருள் சொன்னாருன்றது தனக்கும் தெரியும்னு சொல்லாம சொல்லி வெள்ளாடறாரு அருணகிரியாரு.

"வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே"

'இப்ப முருகனைக் கொஞ்சம் தானும் தூக்கி ஒசத்திக் கொண்டாடணுமேன்னு நெனைக்கறாரு! ஏன்னா, அவங்க நைனாவே அப்பிடிப் பண்ணதுக்கு அப்பாலதான் அவருக்கே பொருள் சொன்னாரு முருகன்! அதுனால, இவரும் எதுனாச்சும் சொல்லணுமேன்னு நெனைச்சுப் பாக்கறாரு!

இவுரு மனசுல ஒரு 'ஸீன்' ஓடுது! சிரிப்பு வந்துருது இவுருக்கு!

அது இன்னான்னா, இந்த ஓம்'முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியாம ஜெயில்ல கிடந்தாரே,....அவர் ஞாபகம் வருது!

 அந்த பிரம்மாலேர்ந்து ஊருல ஒலகத்துல க்கீற அல்லாரும், இவரோட காலைப் புடிச்சுக்கினு அவங்க தலை மேல வைச்சுக் கொண்டாடிக்கினு க்கீறாங்க!

இவரு இன்னா பண்றாருன்னா, நம்ம வள்ளியம்மாவோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறாரு! அந்தம்மாவோட பாதத்தை எடுத்து தன்னோட தலை மேல பூமாரி வைச்சு அள[ழ]கு பாத்துக்கினு க்கீறாராம்!

'வேதா'ன்னா பிரம்மா.
'சேகரன்'ன்னா தலையுல வைச்சு சூடிக்கறவன்னு அர்த்தம்.

இப்ப 'சந்திர சேகரன்'னா நெலாவை எடுத்து தன்னோட தலையுல வைச்சுக்கற சிவன்ற மாரி, இவரு 'குறமின் பத சேகரன்'!!

'கொறக்குலத்துல பொறந்தாக்கூட மின்னல்மாரி ஜொலிக்குதாம் வள்ளியம்மாவோட ஒடம்பு!

இதுல இன்னா விசேசம்னா, இந்த அகில ஒலகத்துலியும் க்கீற நாதமே அந்தம்மாவோட, அந்த இச்சா சக்தியோட பாதத்துலேர்ந்துதான் பொறக்குதுன்னு முருகன் காட்டறமாரி இவருக்குத் தோணுது. அந்தம்மா பராசக்தியோட அம்சம்! அப்பிடீன்னா, அந்த சக்திலேர்ந்துதான் இந்த ஆதி நாதமே கெளம்புதுன்றதை சொல்லாம சொல்லி விளக்கறாரு அருணகிரியாரு!

இது அல்லாத்தியும் தாண்டி, இன்னொரு சமாச்சாரமும் இந்தப் பாட்டுல க்கீது! அதான் ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்கணும் நீ!

ஒண்ணு வேணும்னு ஆசைப்படறப்ப, அதுவும் அந்த 'ஒண்ணு' ஒலகத்துலியே ரொம்ப ரொம்பப் பெரிய விசயமா இருக்கக்கொள்ள, அத்தக் கேக்கறப்ப ஒடம்புலியும், மனசுலியும் ரொம்பவே பணிவு வேணும்!
சிவனாரு எப்பிடிக் கேட்டாரு தம் புள்ள கையுல? 'நாதா, குமரா நம'ன்னு குனிஞ்சு காதைக் கொடுத்துக் கேக்கறாரு.

பிரம்மாவும், தேவருங்களும் முருகனோட காலை எடுத்துத் தலைமேல வைச்சுக் கொண்டாடிக் கேக்கறாங்க!

அந்த முருகனே கூட இப்ப இன்னா பண்றாரு பாரு! இத்தினிக்கும் காரணமான வள்ளியம்மாவோட பாதத்தை எடுத்து தலையுல வைச்சுக்கறாரு.

அதுனால... பெரியவங்க ஒரு சமாச்சாரம் சொல்றப்ப அடக்கமா, பணிவாக் கேட்டுக்கணும்! அசால்ட்டா கெடந்துறக் கூடாது! நாம பண்ணின புண்ணியந்தான், இதும்மாரி விசயம்லாம் நம்ம காதுல விள[ழ]ப் பண்ணியிருக்கு. அத்தப் புரிஞ்சுக்கினு, பணிவை எப்பவும் வளர்த்துக்கணும். இன்னா வெளங்கிச்சா?' எனக் கேட்டபடியே அவசர அவசரமாக எங்கோ கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனம் நாதம் தொடர்ந்து நாயரிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது!
**************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP