Saturday, October 04, 2008

"விநாயகர் அகவல்" -- 16

"விநாயகர் அகவல்" -- 16



நான் வணங்கும் பெரியவர் மேலும் சொல்கிறார்!

///...சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே! ///

சொல் ப‌த‌ம் = சொல்லும், பொருளும்
சொல் ப‌த‌ம் = நாத‌ம் (ச‌த்த‌ம்) , ஒளி
சொல் ப‌த‌ம் = ஒலி, பாட்டில் ஒரு வ‌கை
சொல் ப‌த‌ம் = ம‌ந்திர‌ம், காலம்
சொல் பதம் = பிரணவம், திருவடி

சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; திகைக்கிறான்.


சொல் என்ற‌ சொல்லிற்கு நாத‌ம் (ச‌த்த‌ம்) எனும் பொருளும் உண்டு. ப‌த‌த்திற்கு ஒளி என்ற‌ பொருள் உண்டு. ஆக‌ சொற்ப‌த‌ம் க‌ட‌ந்த‌ என்றால் நாத‌ம், விந்து(கலை) க‌ட‌ந்த‌ இட‌ம் என்று பொருள். விந்து என்றால் ஒளி. நாத‌த்தை கட‌ந்து நின்ற‌ இட‌ம் நாதாந்த‌ம். விந்து க‌லை என‌ப்ப‌டும் விந்தை க‌ட‌ந்த‌ இட‌ம் க‌லாந்த‌ம். நாத‌ விந்து க‌லாதீ ந‌மோ ந‌ம‌ என்னும் பாட‌லும் இவ்விட‌த்தையே குறிக்கிற‌து.
யோகிய‌ர் புருவ‌ம‌த்தியில் பிராணனும், சக்தியும் போய் சேரும்போது நாத‌த்தையும், ஓளியையும் அனுப‌விக்கின்ற‌ன‌ர்.

அத‌ற்கு மேல் போகும்போது ஓளி ம‌றைகிற‌து. ஒளியின் எல்லை நிலம் அது. அந்த‌ இட‌மே க‌லாந்த‌ம் என‌ப்படும் ஒளிப்பாழ்! அத‌ற்கும் மேலே போகும்போது ஒலியின் எல்லை வ‌ருகிற‌து. அதுவே வெளிப்பாழ் என‌ப்ப‌டும் நாதாந்த‌ம்.
அத‌ற்கும் மேலே உண‌ர்வோடு பிராண‌னும்,அம்மையான குண்ட‌லினியும் போகும் போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து.
துரிய‌ நிலை அடைந்த‌வ‌னுக்கு சில‌ அடையாள‌ங்க‌ள் இருக்கும். இய‌ல்பில் குழ‌ந்தை போலவோ, பித்த‌ன் போலவோ, ஜ‌ட‌ம் போலவோ இருப்பான். இந்த‌ மூன்று இய‌ல்புமே காண‌ ம‌ன‌திற்கு இத‌மாக‌ இருக்கும். ம‌ன‌திற்கு எரிச்ச‌ல் மூட்டுவ‌தாக‌ இருக்காது.

சொல் என்றால் ஒலி; ப‌த‌ம் என்றால் அந்த‌ ஒலிக‌ளின் வ‌கை. ஒலியும் ஒலியின் ப‌லவித‌ வ‌கைக‌ளான‌ சின்சின், சின், ம‌த்த‌ள‌ம், க‌ண்டாம‌ணி, வ‌ண்டு, வீணை,புல்லாங்குழ‌ல், ச‌ங்கு, அலையோசை, இடி என‌ப்ப‌டும் த‌ச‌வித‌ நாத‌ங்க‌ளும் முடிவ‌டையும் இட‌ம் அது. சுழுமுனை வ‌ழியே பிராண‌னும், ச‌க்தியும் மேலெழுவ‌தால் இத்த‌கு இசைவ‌கைக‌ள் எழும். இந்த‌ இசை ஒவ்வொன்றையும் உன்ன‌ உன்ன‌, ஒவ்வொரு த‌ளைக‌ளாக‌ அறும். ஜீவ‌ன் சிவ‌த்த‌ன்மையை ப‌டிப்ப‌டியாக‌ப் பெறுகிறான். அத்த‌கைய‌ இந்த‌ ஒலியும்,ஒலியின் வ‌கைக‌ளும் முடிவ‌டையும்போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து. அப்போது தான் உண்மையில் யார் என்ற‌ விஷ‌ய‌ம் அவ‌னுக்கு பிடிப‌டுகிற‌து!

சொல் எனப்ப‌டுவ‌து ம‌ந்திர‌ம்; ம‌ந்திர‌ம் என்றால் சூரிய‌ன். ஆக‌ நாத‌மும் விந்தும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் போது அது ம‌ந்திர‌மாகிற‌து. அதாவ‌து ஒலியும் ஒளியும் ஒன்றாக‌ ஆகும்போது இந்த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து. ஆக‌ ஒலி ஒளி க‌ல‌ந்த நிலைக்கு ஒளிவெளி பாழ் என்று சொல்லப்படும்.

பதம் என்ற சொல்லுக்கு காலம் என்ற பொருளும் உண்டு. கால‌த்தை க‌ட‌ந்த‌வ‌ளாக‌ அன்னை குண்டலினி அங்கே சென்று மாறும் போது காலினீ என்னும் த‌ன்மை கொண்ட‌வ‌ளாகிறாள். இப்ப‌டி ஒளிவெளிப்பாழையும், கால‌த்தையும் கட‌ந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும் அந்த‌ இட‌ம். இட‌ம், நிலை என்ப‌த‌ற்கு அவ‌ஸ்தை எனும் சமஸ்க்ருத சொல்லால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அங்கு ஒன்றை ஒருவ‌ன் ஒளியாலோ ஒலியாலோ ஜீவ‌ அறிவாலோ உண‌ராம‌ல், உண‌ர்வு எனும் நிலையில் அனைத்தையும் உண‌ர்கிறான்.

சொல் என்ப‌து பிர‌ண‌வ‌ம் எனும் பொருள்ப‌டும்; ப‌த‌ம் என்றால் திருவ‌டி எனும் பொருளும் உண்டு. பிர‌ண‌வ‌த்தின் முடிவும், திருவ‌டியைக் க‌ட‌ந்துமான‌ அந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும். அத‌னால் திருவ‌டி மீது அன்புக் கொண்ட‌ அன்ப‌ர்க‌ள் துரிய‌த்தின் எல்லையிலேயே இருப்ப‌து உண்டு. திருவ‌டி என்னும் இடம் தூலத்தில் ம‌ண்டையின் உச்சி! ஆனால் நுண் உட‌ல், கார‌ண உட‌லை க‌ட‌ந்தே உண்மையில் திருவ‌டி அறிய‌ப்ப‌டுகிற‌து. அங்கிருந்தே இறைவ‌ன‌து வ‌ழிக்காட்ட‌ல் கிட்டுகிற‌து. பிராண‌னும், குண்ட‌லினியும் பிரிக்க‌முடியாத‌ப்ப‌டிக்கு க‌ல‌ந்து அவ்விட‌த்தை அடையும் போது துரிய‌த்தின் எல்லை நில‌த்தை அடைகின்ற‌ன‌ர். திருவ‌டியில் க‌ல‌ப்ப‌வ‌ர் துரிய‌ நிலையை அடைகின்ற‌ன‌ர். அதாவ‌து ஜீவ‌ உண‌ர்வு அடியோடு ம‌றைந்து சிவ‌ உண‌ர்வாகி விடும். அந்நிலையை அடைந்த‌வ‌ர் அத‌ன்பிற‌கு த‌ன்னிச்சையால் ஏதும் செய்யார். கார‌ண‌ம் அவ‌ரும் இல்லை அவ‌ர‌து இச்சை என்று ஒன்றும் இருப்ப‌தில்லை. அந்நிலை அடைந்த‌வ‌ரையே பெரியோர், அடியார் என்கிறோம்.

அவ‌ர் வ‌ழி செய்ய‌ப்ப‌டும் செய‌ல் யாவும் ஈச‌ன் செயலாக‌ ஆகும். இவ‌ரே அவ‌ன‌ருளால் அவ‌ன்தாள் வ‌ண‌ங்கி எனும் நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே அவ‌னே அனைத்து செய‌லிற்கும் கார‌ண‌ம் என்ற‌ நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே த‌ன் செய‌லினால் ஏற்ப‌டும் வினைப்ப‌லனினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ர். ஆக‌வே இவ‌ர்க‌ளையே ம‌ஹாத்மாக்க‌ள், பெரியோர், குரு, அடியார் என்று சொல்லி வ‌ண‌ங்குவ‌து வ‌ந்த‌து. இவ‌ர்க‌ளை வ‌ண‌ங்குவ‌து ஈச‌னையே வ‌ண‌ங்குவ‌தாகும். இங்கே உள்ளே ஈச‌ன‌ன்றி வேறொருவ‌ர‌து இச்சையோ, செயலோ, இருப்போ இல்லாத‌தால் இத்த‌கைய‌ பெரியோர‌து உட‌ல் இறைவ‌ன் உறையும் ஆல‌ய‌மாகிற‌து. அத‌னால்தான் இத்த‌கையை பெரியோர‌து பூத‌வுட‌ல் மீது ச‌மாதி அமைத்து கோவிலாக்குவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌து.

துரிய‌ம் என்றால் என்ன‌? அந்த‌ பெய‌ர் எதை குறிக்கிற‌து? அந்த‌ நிலை என்ன‌? அது எந்த நிலை என்று சொல்வ‌தை விட‌ அது எந்த‌ நிலையெல்லாம் இல்லை என்று சொல்வ‌து சுல‌ப‌ம். நாம் விழித்திருக்கும்போது உண‌ரும் நிலை அல்ல‌; தூங்கும்போது க‌னாக்காணும்போது உண‌ரும் நிலை அல்ல‌; க‌ன‌வே இல்லாது ஆழ்ந்துற‌ங்கும் நிலையும் அல்ல‌. இந்த‌ மூன்று நிலையில் மாறி மாறி பய‌ணிப்ப‌வ‌ர‌து நிலை எதுவோ அதுதான் அந்த‌ நிலை.

அதை அறியும்போது மாத்திர‌மே அது அதுதான் என்று புரியும். அங்கு ம‌ன‌மில்லாதாத‌ல் சொல்லும் பொருளும் அதை குறிக்க‌ உத‌வாது. அத‌னால்தான் அறிந்த‌வ‌ரால் அதை சொல்ல‌ முடிவ‌தில்லை. அதை சொல்ல‌ முடியும் என்று சொல்ப‌வ‌ர் அதை அறிய‌வில்லை என‌ அறிய‌லாம்.
கார‌ண‌ம் அந்நிலையை அடைந்த‌வ‌ர் திரும்ப‌ உட‌ல் உண‌ர்வுக்கு திரும்பும்போது முத‌லில் அடையும் திகைப்பே அதுதான். என்ன‌வென்று த‌ன‌க்குத்தானே கூட‌ எந்த‌ சொல்லாலும் அதை விளக்க‌ முடியாம‌ல், அந்த‌ உண‌ர்வை எண்ண‌ முடியாம‌ல் திகைப்பார். ஆக‌வே அறிந்த‌வ‌ர் இந்த‌ விஷ‌யத்தில் மாத்திர‌ம் மௌனியாகிறார். இப்ப‌டி மௌனியாகிற‌வரே முனிவ‌ர் என‌ப்ப‌டும் நிலையை அடைந்த‌வ‌ராவ‌ர்.

துரிய‌ம் என்றே சொல்லிற்கே நான்காவ‌து ப‌குதி என்றுதான் பெய‌ர். ஜாக்ர‌த் எனும் சொல்லான‌ விழிப்பு நிலைக்கு விள‌க்க‌மாக‌ அந்த‌ பெய‌ர் இருப்ப‌தை காணுங்க‌ள். ஜாக்ர‌ம் என்றால் விழிப்பு. ஸ்வ‌ப்ன‌ எனும் நிலை க‌ன‌வு நிலை. ஸ்வ‌ப் என்றால் தூக்க‌ம். அதிலிருந்து வ‌ந்த‌ சொல் ஸ்வ‌ப்ன‌ம். சுஷூப்தி என்ப‌து மூன்றாவ‌து சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'ந‌ன்றாக‌ முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க‌ நிலை ந‌ன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த‌ நிலையின் த‌ன்மையை வைத்தே இருக்கும் சொல்.
ஆனால் துரிய‌த்திற்கு என்ன‌ பொருள் என்றால் நான்காவ‌து நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க‌ முடியாததால், இத‌ன் பெய‌ரையே நான்காவ‌து நிலை என்று வைத்து விட்டார்க‌ள்.

மெய் ஞான‌ம்
ம‌ன‌ம் இருக்கும் வ‌ரை, சிற்ற‌றிவு இருக்கும் வ‌ரை ஏற்ப‌டும் ஞான‌ம் பொய்ஞான‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து. கார‌ணம் என்னவென்றால் ஆண‌வ‌ ம‌ல‌த்தினால் த‌ன்னுடைய‌ விருப்பு வெறுப்புக்கேற்ப‌ உண்மை திரித்து க‌ண்ட‌றிய‌ப்ப‌டுகிற‌து. ம‌ன‌ம் ம‌றைந்த‌ நிலையில் அறியாத‌ ஒன்றினால் அறிய‌ப்ப‌டுகிற‌ அந்த‌ ஞான‌ம் கொஞ்ச‌மும் பொய் க‌லப்பில்லாத‌து. ருத்ர‌ க்ர‌ந்தி என‌ப்படும் மூணாவ‌து முடிச்சை அறுத்து பிராண‌னும், குண்ட‌லினியும் உச்சியை நோக்கி போகும்போது ம‌னதுட‌ன் கூடிய‌ ஆண‌வ‌ம‌ல‌ம் ம‌றைந்து, சிவ‌னோடு கூடிய ஆத்ம‌ த‌ன்மையை பெறுகிறான். அப்போது அவ‌ன் அறியும் அறிவே மெய்ய‌றிவு. ஆணவமலம் மாத்திரம் மறைந்து, அதே சமயம் ஆத்ம தன்மையும் பெறாமல் வெளியில் நிற்கும் நிலையில் நின்ற‌வ‌ன் சுத்த‌போத‌ம் எனும் த‌ன்மையை பெறுவ‌தால் புத்த‌ன் என‌ப்ப‌டுகிறார்.

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
என்ன‌வென்று விள‌க்கத் தெரியாது அதே ச‌ம‌யம் முழு உண‌ர்வோடு இருந்த‌னுப‌விப்ப‌தால் அந்த‌ விள‌க்க‌ முடியாத‌ நிலையை அற்புத‌ம் என்கிறோம். க‌ண்ணால் ச‌ரிவ‌ர‌ காண‌முடியாது திகைக்க‌ கூடிய‌ ஒளி ப‌டைத்த‌த‌னால் சூரிய‌னுக்கும் அற்புத‌ன் என்ற‌ பெய‌ருண்டு. அற்புத‌ம் என்ப‌து ஒரு ந‌ல்ல‌ நிலையை குறிக்கும் சொல். ஏனென்றால், சொல்லாலும் பொருளாலும் விள‌க்க‌ முடியாத‌ இட‌ம், ம‌ன‌ம் க‌ட‌ந்த‌ இட‌மாக‌ இருப்ப‌தால் அந்த‌ இட‌த்தில் நேருவ‌து பெருந்துன்ப‌மாக‌ இருந்துவிட்டால் எனும் ஒரு ஐய‌ம் ஜீவ‌ உண‌ர்வில் எழும். அத‌னால் தான் 'ப‌ய‌ம் வேண்டாம், அவ்வுண‌ர்வு மிக‌ அருமையான‌ உண‌ர்வு' என்று உறுதி த‌ர‌ அற்புத‌ம் எனும் சொல்லை ஔவையார் கூறுகிறார்.


அந்த‌ துரிய‌த்தின் வாயிலோடு சிவ‌த்த‌ன்மை, ஜீவ‌த்த‌ன்மை முடிவ‌டைந்து விடும். அந்த‌ வாயிலில் மாறாது நிற்கும் த‌ன்மையினானாய் இறைவ‌ன் இருக்கிறார். அவ‌ர் ஒன்றிற்கும், இர‌ண்டிற்கும் இடையே நிற்கிறார். அதாவ‌து அவ‌ரை ஒன்றென‌வும் சொல்ல‌முடியாது. இர‌ண்டென‌வும் சொல்ல‌ முடியாது. மொத்த‌த்தில் ப‌குத்து பார்க்க‌ இய‌லாத‌வ‌ர். த‌ந்த‌ம் கொண்ட‌தை க‌ளிறு என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம். அங்கே அனைத்தையும் தாங்கும் இர‌ண்டு த‌ந்த‌மாகிய‌ ச‌க்தியுட‌ன், இறைவ‌ன் இருப்ப‌தை த‌ரிசிக்கிறான். எல்லை நில‌த்தில் நிற்கும் அவ்விறைவ‌னுக்கு ஈசுவ‌ர‌ன் என்று பெய‌ர். அவ‌னின் விருப்ப‌த்தால்தான் அனைத்தும் தோன்றி, ந‌ட‌ந்துக்கொண்டிருப்ப‌தை காண்கிறான். அதே ச‌ம‌யம் இச்செயல் விருப்ப‌த்தாலோ,ம‌ன‌தின் செயலாலோ ந‌ட‌க்க‌வில்லை என‌ காண்கிறான். அங்கு நினைப்ப‌வை யாவும் செயல் கூடுவதை நேர‌டியாக‌ க‌ண்ணுறுகிறான். ஆக‌வே க‌ற்ப‌க‌ம் என்று அந்த‌ நிலை சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

இப்போது நான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்டேன்!
>இதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாமா?

இம்மூன்று நிலைகளிலும் மாறி மாறிப் பயணம் செய்தாலும், இவை மூன்று அனுபவங்களுமே வெவ்வேறு என்பதை உணர்ந்தாலும், இவை மூன்றுமே இந்த 'ஜாக்ரத் அவஸ்தை' நிலைவழியே தான் உணரப்படுகிறது.

அதாவது சங்கர்குமாராகிய நான் விழித்து, கனவுகண்டு ஆழ்நிலை ஆழ்வதாக ஒன்றுகிறேன்.
இதுவல்லாமல், இந்த மூன்று நிலைகளிலும் பயணிக்கும் ஒன்றை உணர்ந்து அதில் ஆழ்வதே அந்த நான்காம் நிலை.

கொஞ்சமாவது சரியா ஐயா?< //

ச‌ங்க‌ர் குமார் ஐயா! இதை எப்ப‌டியும் சொல்ல‌வே முடியாது! எது அது இல்லை என்று மாத்திர‌மே சொல்ல‌ முடியும்! எது அது என்று சொல்ல‌ முடியாது! புல‌ன்க‌ளின் வ‌ழியே அறிந்ததைக் கொண்டு தீர்மான‌த்திற்கு வரும் ஜீவ அறிவின் துணையால் இதை புரிந்துக் கொள்ள‌ முய‌ற்சித்தால், புரிந்துக் கொண்ட‌து மிக‌ த‌வ‌றான‌ ஒன்றாகி விடும். இத‌ற்கு விப‌ர்ய‌யா என்று பெயர். அத‌வாது உள்ள‌த‌ற்கு மாறாக‌ ஒன்றை த‌வ‌றாக‌ புரிந்துக் கொள்ளுத‌ல். கார‌ண‌ம், இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரிய‌ம் ம‌ன‌ம், புத்தி, அஹ‌ங்கார‌த்தாலோ, புலன்களாலோ (இந்திரியங்கள்) புரிந்துக் கொள்ள‌ முடியாது. எப்ப‌டியென்றால் நிற‌ம் என்றால் என்ன‌ என்று ருசித்து உண‌ர‌ த‌லைப்ப‌டுவ‌தை போல‌! இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரியம், ம‌ன‌ம் ம‌றைந்த‌ போது, புத்தி ம‌றைந்த‌ போது, ஆண‌வ‌ம் ம‌றைந்த‌ போது, புல‌ன்க‌ள் ம‌றைந்த‌ போது அறியப்ப‌டுவ‌து! அதை முறையான‌ முய‌ற்சியினால் மாத்திர‌ம் அறிய‌ முடியும்; புரிந்துக் கொள்ள‌ முடியும். அதை ஒருபோதும் ம‌ன‌திருக்கும் போது ம‌ன‌தின் வ‌ழியாக‌ சொல்ல‌வே முடியாது. அத‌னால்தான் அதை எச்சில் ப‌டாத‌ நிலை என்ப‌ர். அப்ப‌டி ஒன்று இருக்கிற‌து என‌ அறிய‌வே பெரியோர் சொல்கின்ற‌ன‌ரே த‌விர‌ அதை யாரும் விளக்க‌ இய‌லாது. >>>
சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; <<< --------------------

திவாகர் எனும் என் நண்பர் கேட்டார்:
//சித்தம் பற்றிய விளக்கமாக எடுத்துகொள்கிறேன்
. //

இல்லை! திவாக‌ர் ஐயா! இது சித்த‌ம் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் அல்ல‌! சித்த‌ம் உறைந்து, செய‌லற்று போகும் போது ஏற்ப‌டும் நிலை! சித்த‌ விருத்தி நிரோத‌: என்று ப‌த‌ஞ்ச‌லி யோக‌ சூத்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நிலை. இங்கு சித்த‌ம் காண‌ப்ப‌டுவ‌தில்லை!

அஹ‌ங்கார‌ம், புத்தி, ம‌ன‌ம் இம்மூன்றும் எங்கெங்கே இருக்கிற‌து என்று அறிந்த‌ குரு இருப்பிட‌த்தை காட்டுவார். அவை மூன்றிற்கும் கடிவாள‌ம் அவ‌ர் இடுவார். இட்டு விட்டு அக்க‌டிவாள‌த்தை கொண்டு அம்மூன்றை எப்ப‌டி ந‌ம‌க்கேற்ப‌ ந‌ட‌த்துவ‌து என்று சொல்லித்த‌ருவார். அந்த‌ நிலையில்தான் இந்த‌ ம‌ன‌ம்,புத்தி,அஹ‌ங்கார‌ம் மூன்றும் எதிரி என்னும் நிலையிலிருந்து மாறி ந‌ண்ப‌ன் என்னும் நிலைக்கு வ‌ந்து நாம் அடைய‌ வேண்டிய‌தை அடைய‌ உத‌வும்.

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து துரிய‌த்திலிருந்து வ‌ரும் போது எப்ப‌டி ஒன்றொன்றாக‌ மீண்டும் எங்கிருந்தோ தோன்றுகின்ற‌ன என்ப‌தை குறித்த‌ பெரியோர் விள‌க்க‌த்தை சொல்ல‌ முய‌ன்றிருக்கிறேன்.

***************************************************************


அவ்ளோதாங்க! இது போதுண்டான்னு போயிட்டார் நான் வணங்கும் அந்தப் பெரியவர்! இது கிடைச்சதே பெருசு! இதைப் புரிய முற்பட்டு, இதைப் பயின்றாலே ஒரு தெளிவு கிடைக்கும் என அவர் உணர்த்தியதாக நான் புரிகிறேன்.

அனைவருக்கும் நலம் சூழ்க!
இதுவரை இதைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி! படித்த அனைவரும் இப்போதாவது வந்து ஏதாவது ஒரு கருத்து சொன்னால் மகிழ்வேன்!
************************************
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

முற்றிற்று!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP