Sunday, June 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

18.

ரொம்ப அருமையா முருகனோட பெருமையைச் சொல்ற இந்தப் பாட்டை சொல்றதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்! எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான்! இருந்தாலும் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். பாட்டைப் படிடாப்பா' என ஆரம்பித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
வதிகா வலசூ ரபயங் கரனே.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல சூர பயங் கரனே.


"உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா"

இன்னாரோட புத்ரன்னா தானா ஒரு பெருமை வந்து ஒட்டிக்கும் இல்லியா? காந்தியோட புள்ளை; நேருவோட பொண்ணுன்னாலே தனியா ஒரு மரியாதை வரும். அதுமாரித்தான் இந்தப் பாட்டோட மொதல் ரெண்டு வரில முருகனோட தோப்பனார் பெருமையைப் பத்திச் சொல்லியிருக்கார் அந்த மஹானுபாவன்!

உதியா, மரியான்னு மொதல் ரெண்டு வார்த்தை.


இதுவரைக்கும் ஜனனம்னோ, மரணம்னோ இல்லாத ஒர்த்தர் ஆருன்னா அந்த சாக்ஷாத் சிவபெருமான் மட்டுந்தான். இதுவரைக்கும் உதிச்சதில்லை; மரிச்சதுமில்லை! 'ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி'தான் இந்த உதியா, மரியா!


அடுத்ததா, உணரா, மறவான்னு ஒரு ரெண்டு !


லோகத்துல இருக்கறவாளுக்கு இந்த ரெண்டும் இருக்கும். உணரத் தெரியும்; மறக்கத் தெரியும்! சிலபேருக்கு உணர மட்டுந்தான் தெரியும்; மறக்க முடியாம அல்லல்படுவா!
சிலபேருக்கு இந்த உணர்ச்சின்றதே இருக்காது; ஏன்னா, எல்லாத்தியும் மறந்துடுவா!


ஆனா, இந்த மறந்துணர்தலும், உணர்ந்து மறத்தலும் இல்லாத ஒரே தெய்வம் அந்தப் பரமேஸ்வரன் தான்! அன்னைக்கு ஒருநாள் வந்தாரே, அந்த சிவசிவாவைக் கேட்டியானா, வரிசையா தேவாரப் பாடலா எடுத்து விடுவார் இதுக்கு!


ஜடம் மாரி உணர்ச்சியே இல்லாம இருக்கார்னு நெனைச்சுண்டாலும், இல்லைன்னா, என்னை மறந்துட்டாரேன்னு நெனைச்சுண்டாலும், அவர் செய்ய வேண்டிய கார்யங்களைச் செஞ்சுண்டுதான் இருப்பர்! அதான் சிவனோட விசேஷ குணம்!


அடுத்தாப்பல சொல்லியிருக்கறது நம்ம எல்லாருக்குமே நன்னாத் தெரிஞ்ச அந்த அண்ணாமலையான் ஸ்தலபுராணம்! 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை! அவா ரெண்டு பேராலியும் கூட அறிஞ்சுக்க முடியாத பரஞ்சோதியேன்னு சொல்றார்.


இதையெல்லாம் சொல்றது ஆரைப் பத்தின்னா மின்னாடியே சொன்னமாரி, அந்தப் பரமேஸ்வரனைப் பத்தித்தான்! அவர்தான் 'விமலன்'! எந்தவிதமான மலங்களும் இல்லாதவர்! பரிசுத்தமானவர்!


அவரோட 'புதல்வா'ன்னு, புத்ரனேன்னு ஸுப்ரமண்ய ஸ்வாமியைக் கூப்பிடறார்.


இந்த வரியுல ரெண்டு விசேஷம் இருக்கு!


'உதியா, மரியா, உணரா, மறவா'ன்னு ஒரு நாலு வர்றதோன்னோ! அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா! அந்த நாலும் இந்தப் புதல்வான்னு ஒரு பேர்ல முடிஞ்சு இவருக்கு அடைமொழியா அமையறது ஒண்ணு.


ரெண்டாவதா, நடுவுல 'விதி மால் அறிய விமலன்'ன்னு சொன்னதால, இது எல்லாமே சிவனுக்கானதுதான்னும் தெளிவாச் சொல்லிடறார். இப்பிடியாப்பட்ட தோப்பனோரோட புள்ளைன்னு சொல்றப்பவே ஒரு தனி கெர்வம் வர்றதோன்னோ! அதான் இதோட விசேஷம்! அப்பிடிச் சொல்றப்பவே, இவருக்கும் அதே அளவுக்கு குணங்கள் இருக்குன்னும் சொல்லாமச் சொல்லி ஒசத்தி வைக்கறார் முருகனை!

"அதிகா அநகா அபயா அமராவதி காவல சூர பயங் கரனே"

இனிமே வர்றதுல்லாம் குமரனைச் சிலாகிச்சு சொல்றது! இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார்? என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை? அதுக்காக!


'அதிகா'ன்னா, தலைவனேன்னு அர்த்தம். இவருக்கும் மேலான தெய்வம் வேற ஆருமில்லைன்னு கொண்டாடறார் அருணகிரியார். இவரை மதிக்காம நடந்துண்ட சூரனாகட்டும், சின்னப்பையன் நீன்னு சொன்ன ஔவையாராகட்டும், அவாவாளுக்குத் தகுந்தமாரி பாடம் புகட்டினவர் முருகப் பெருமான்.
சூரனோடையும் விளையாட்டாவே யுத்தம் பண்ணி, ஜெயிச்சுக் காட்டினார்! ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார்! அப்படிப்பட்ட பெரிய நேதா, தலைவன் தான் இந்த அதிகன்!


'அநகன்' இது அடுத்தாப்ல சொல்ற வார்த்தை! 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா! ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது! ஏன்னா, இவர்தான் அந்த விமலனோட புள்ளையாச்சே1 இவர்கிட்ட எப்படி குத்தமோ, பாபமோ இருக்கமுடியும்?


தேவலோகத்தோட தலைநகருக்கு அமராவதிப் பட்டணம். தேவர்கள்லாம் வசிக்கற இடம் அமராவதி. அந்த பட்டணத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனுக்கும் தேவாளுக்கும் காப்பாத்திக் கொடுத்ததுனால 'அமராவதி காவல'ன்னு புகழ்றார்.


'சூர பயங்கரன்'.... பயங்கரமான ஆளு சூரபத்மன்! தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ? இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது?'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்!' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார்! ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான்! அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே!' எனச் சொல்லி நிறுத்தினார் சாம்பு சாஸ்திரிகள்!


'தன்னோட மனசைப் பாத்து அநுபூதின்னா இன்னான்னு சொல்லிக்கினே வந்தவரு திடீர்னு நடுவுல இப்பிடி ஒரு பாட்டை... அதுவும் முளு[ழு]க்க முளு[ழு]க்க முருகனோட பெருமையைப் பத்தி ஏன் சொல்லணும்னுதானே 'டவுட்டு]ப்படறே' என்றான் மயிலை மன்னார், என்னைப் பார்த்து!


'ஆம்' என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!


'இன்னாரைப் பர்த்தேன்; அவரு எனக்கு இன்னின்னது....காரு, பங்களா, ஒரு கோடி ரூபா.... குடுத்தாரு'ன்னு நான் சொல்லிக் காட்டினா, மொதல்ல ஒம்மனசுல இன்னா நெனைப்பு வரும்? ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே! இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே? அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும்! நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும்! சர்த்தானே நா சொல்றது?


இப்ப, தனக்குக் கிடைச்ச அநுபூதி அனுபவத்தைப் பத்தி வெலாவாரியா சொல்லிக்கினே வந்தாரு அருணகிரியாரு. அதுக்கு நடுவுல முருகன், கந்தன்னு பேரு அடிபட்டுக்கினே வந்திச்சில்ல? அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ! இப்பேர்ப்பட்ட ஆளா அவுரு? அப்போ இவர் சொல்றது உண்மையாத்தான் இருக்குமின்னு நமக்கெல்லாம் ஒரு தெம்பைக் குடுக்கத்தான் இந்தப் பாட்டுல முருகனோட அப்பாவோட பெருமையைச் சொல்லி, இவுரும் ஒண்ணும் அவுருக்குக் கொறைஞ்ச ஆளில்லைன்னு சொல்லிக் காட்றாரு!' எனச் சிரித்தான் மன்னார்! சாஸ்திரிகளும் கூடச் சேர்ந்து மந்தஹாஸமாகச் சிரித்தார்!


கபாலி கோவில் மணியோசையும் கூடவே ஒலித்துச் சிரித்தது!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

Wednesday, June 08, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

17.
வடை டீ சாப்பிட்டானதும், அடுத்த பாட்டை உடனே படித்தேன்.

யாமோ தியகல் வியுமெம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே/னடவீர் நடவீ ரினியே.

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

"யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்"

படிக்கறது வேற ஓதறது வேற. படிக்கறதுன்னா, சும்மா மெலெளுந்தவாரியா கண்ணை ஓட்டறது. கவனமாப் புரிஞ்சுக்காம, வேணுங்கறதை மட்டும் அப்படியே படிச்சுகிட்டுப் போறது! பரிட்சைக்கு சிலபேர் படிப்பாங்களே, முக்கியமான கேள்விங்களுக்கான பதிலை மட்டும்... அதும்மாரின்னு வைச்சுக்கலாம். படிச்சதுல பாதிய மறந்திருவான்!

ஆனா, ஓதறதுன்னா, ஒ[உ]ணர்ந்து சொல்றது. ஒவ்வொரு வார்த்தையையும் அப்பிடியே நெஞ்சுல அடிச்சமாரி வாங்கிக்கினு சொல்றதுக்கு ஓதறதுன்னு பேரு. நம்ம தருமபுரம் சாமிநாதன் தேவாரம் பாடறப்ப கவனிச்சியானா, இந்த ஓதறதுன்னா இன்னான்னு ஒனக்குப் புரிஞ்சிரும்! அதுனாலத்தான், அவங்களையெல்லாம் 'ஓதுவார்'னு சொல்றோம்.

சரி, அப்பிடி நல்லா மனசுல வாங்கிக்கினு படிச்ச படிப்பும், அதுனால வந்த அறிவையும் கொடுத்தவன் முருகன். அவனோட அருள் இல்லாம இப்பிடிப் படிக்கவோ, படிச்சதைப் புரிஞ்சுக்கவோ, அறிவைப் பெருசாக்கவோ முடியாது! அப்பிடிக் கிடைச்ச படிப்பையும், அறிவையும் வைச்சுக்கினு இன்னா பண்ணனும்? மேகத்துலேர்ந்து ஊத்தற மளை[ழை] கடலுக்குப் போயி, திரும்பவும் மேகமா மாறுறமாரி, அவங்கிட்டேர்ந்து வந்தது, திரும்பவும் அவனுக்கே போறமாரி நடந்துக்கணும்!

அவர்கிட்டியே திருப்பித் தந்திறணும்னு சொல்றாரு. எப்பிடித் திருப்பித் தர்றது? அந்த அறிவை வைச்சு அவனை மட்டுமே பாடுன்றாரு. ஏன்னா, இது அவர் குடுத்தது! அவர்கிட்டியே அவருக்கு அலங்காரமாத் திருப்பிக் குடு! அதாங்காட்டிக்கு, மத்த எதுலியும் சிந்தனை போவாம, முருகன் மேலியே நெனைப்பாக் கெடக்கணும்!
இதான் இந்த ரெண்டு வரியுல சொல்றது!

"பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர் நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே"

அதுக்கான வளி[ழி]யை இப்ப சொல்லிக் காமிக்கிறாரு!
போன பாட்டுல சொன்னாரே, ஆசையை ஒளி[ழி]க்கணும்னு! அதுக்கும் இதுல வளி காமிக்கிறாரு!


இந்த ஒலகத்தும் மேல க்கீற ஆசையையெல்லாம் கெடுறத்துக்கு சதா சர்வ காலமும் அந்த முருகனைப் பத்தி மட்டுமே பேசறது, பாடறது, படிக்கறது, நெனைப்புல வைச்சுக்கறதுன்னு மாத்திக்கினியானா, தானா மத்ததுல்லாம் ஒன்னிய வுட்டுக் கள[ழ]ண்டுக்கும். எது உண்மையான சமாச்சாராம்னு புரிஞ்சு போயிறும்!

'பூ'ன்னா இந்த ஒலகம். இந்தப் 'பூ'வை வைச்சு இன்னோரு அர்த்தமும் சொல்லலாம். ஆனா, அது இப்ப வேணாம்! இந்த ஒலகத்தும் மேல ஒனக்கு இருக்கற அல்லா ஆசையும் அத்துப் போவணும்னா, நீ எது மெய்யுன்னு புரிஞ்சுக்கினு, அத்தோட போய்ச் சேரணும். அத்தோட மட்டுந்தான் சேரணும்!
அப்பிடிப் பண்ணினியானா, அப்பறம் இன்னாடா கவலை ஒனக்குன்றமாரி, 'நாம் ஏன்?'னு சொல்லி ஒரு 'டொக்கு வைக்கறாரு.


"நாம் ஏன்"னா நமக்கு இனிமே இன்னா பயம்னு அர்த்தம்!

அப்போ இன்னாத்துக்கு ரெண்டு தபா 'நடவீர் நடவீர்'னு போட்டிருக்காரு?
இதான் படிக்கறதுக்கும், ஓதறதுக்குமான வித்தியாசம்!


சாதாரணமாப் படிச்சியானா, 'நடவீர்; நடவீர்'னு அளு[ழு]த்திச் சொல்றாரோன்னு தோணும். ஆனா, அது அப்பிடி இல்லை!
அத்த நீ எப்பிடிப் படிக்கணும்னா, 'நடவீர்; நடவீர் இனியே'ன்னு!


மொதல்ல சொல்லியிருக்கற 'நடவீருக்கு' நடங்கப்பா, போங்கப்பா, அந்த உண்மையான கந்தனை தேடிக்கினு'ன்னு பொருளு.

ரெண்டாவது நடவீரை "இனியே"வோட சேர்த்துப் படிக்கணும்.
அப்பிடி நீ குமரனைத் தேடிப் போனியானா, இனிமே நீ பொ[பி]றவி எடுத்து இந்த ஒலகத்துல நடக்கவே மாட்டேன்னு அர்த்தம்!
வெளங்குதா?

முருகனைத் தேடிப் போ! ஆசையெல்லாம் அத்துறும்! அந்த மெய்யான தெய்வத்தைக் கண்டுபிடிச்சிட்டேன்னா, அங்கயிங்கன்னு அலையாம அவரையே கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, அவனே தொணையா கூடவருவான்; அதுக்கப்புறமா, இனிமே ஒனக்குப் பொறப்புன்றதே கெடையாதுன்னு இன்னோரு உண்மையைப் புட்டுவைக்கறாரு அருணகிரியாரு!

இத்தயே, இன்னொருவிதமாச் சொல்றதானா, 'நா மேல் நடவீர்; நடவீர் இனியே'ன்னும் பிரிச்சு அர்த்தம் சொல்லலாம்.


அதாங்காட்டிக்கு, அவர் குடுத்த கல்வியயும், அறிவையும் வைச்சுக்கினு, இந்த ஒலக ஆசையையெல்லாம் ஒளிச்சு அவரையே அடையணும்னா, "முருகா, நீ வந்து எப்பவும் என்னோட நாக்குமேலியே நடமாடணும்ப்பா! அத்த விட்டு வேற எங்கியும் போவாம என்னோட நாக்குலியே குடியிருக்கணும்ப்பா!... நான் எப்பவும் ஒன்னியே பாடறதுக்குத் தோதா'ன்னு முருகங்கிட்ட வேண்டறதாவும் புரிஞ்சுக்கலாம்!

அப்பிடியாப்பட்ட அந்த முருகனோட பெருமையைச் சொல்றதுதான் அடுத்த பாட்டு. அத்த நம்ம ஐயரு சொல்வாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!


சாம்பு சாஸ்திரிகள் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Wednesday, June 01, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

16.
சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணை வழக்கம்போல நிரம்பியிருந்தது. அவரது மனைவியும், வந்தமர்ந்தார்.

"ஆசைப்படலாம், தப்பில்லை. அதுக்காகப் பேராசைப்படலாமோ? இருக்கற நகைகள் போறாதா? இப்ப எதுக்கு அதை அழிச்சு, புதுசு பண்ணணும்னு கெடந்து துடிக்கறே? ம்ம்ம்... நான் சொன்னா நீ கேழ்க்கவாபோறே?' எனச் சிரித்தார் சாஸ்திரிகள்.


மன்னாரும் லேசாகப் புன்னகைத்தான்.

'ஆசை, பேராசை... இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க சாமி' என்றான்.

'நான் என்னடாப்பா சொல்றது? இதென்ன ஆருக்கும் தெரியாத சமாச்சாரமா என்ன? அந்த பகவான் ஒர்த்தனைத் தவர, வேற எதுக்கு ஆசைப்படறதுமே தப்பு! சரி, லோகத்துல பொறந்துட்டோம். நமக்குன்னு இல்லைன்னாலும், கூட இருக்கறவாளுக்காகவாவது கொஞ்சம் ஆசைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கு. ஆனா, எல்லா ஆசையுமே கடைசியில துன்பத்துலதான் போயி முடியறது! 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்'னு அந்த புத்தரே சொல்லியிருக்காரோன்னோ! அதே தான்! ஆனா, பேராசை?? அது ரொம்ப ரொம்பத் தப்பு! அதுல மட்டும் சிக்கிண்டுட்டோம்னா, அப்பறமா, அதுலேர்ந்து வெளியுல வர்றதுக்கே முடியாது. சர்வ நாசம்தான்! ஆசை துன்பத்தைக் கொடுக்கும்னா, பேராசை ஆளையே அழிச்சுடும்! இதான் நாம லோகத்துல காலங்காலமா பார்த்துண்டு வர்ற சமாச்சாரம். அது சரி, இப்ப எதுக்கு என் வாயைப் புடுங்கறே? அடுத்த பாட்டைப் படிக்கச் சொல்லு!' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு காரணமாத்தான் கேட்டேன் சாமி! இந்தப் பாட்டும் அதைப் பத்தித்தான்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்! நான் படித்தேன்.

16.
பேரா சையெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா! முது சூர் படவே லெறியுஞ்
சூரா! சுர லோக துரந்தரனே.


பேராசையெனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா! முது சூர் பட வேல் எறியும்
சூரா! சுர லோக துரந்தரனே.


"பேராசையெனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?"

இப்ப நீங்க சொன்ன பேராசையைப் பத்தி நல்லாவே புரிஞ்ச ஒர்த்தர் பாடின பாட்டு இது! ஒரு பொதைமணல்மாரி, இதுக்குள்ள ஆம்ப்ட்டுகிட்டா, வெளியவே வர முடியாம அதுக்குள்ளாறியே பொதைஞ்சு போயிருவோம்னு புரிஞ்சவர் சொன்ன சத்திய வாக்கு இது!

இது ஒரு நோய் மட்டுமில்ல. அதாலியே சாவடிக்கற நோயி! எப்டின்றியா?
ஒரு சில வியாதிங்க இருக்கு. சக்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, அல்ஸர்னு. இதுங்க ரொம்பவே தீவிரமான நோய்தான். ஆனாக்காண்டிக்கும், ஒயுங்கா மருந்து மாத்தரை சாப்ட்டுக்கினு வந்தியானா, ஒடம்பைக் கவனமாப் பார்த்துக்கினியானா, இது இருக்கறதே தெரியாதமாரி வாள[ழ]முடியும். ஆனா, இப்ப கேன்சர், எய்ட்ஸுன்னு வருதுன்னு வைச்சுக்கோ, அந்த நோயே கொஞ்சங்கொஞ்சமா ஆளைக் காவு வாங்கிறும். அவஸ்தையும் படணும்; ஆளையும் கொண்டுபோயிறும். இதான் ஆசைக்கும் பேராசைக்குமான வித்தியாசம்!


ஆசைப்படலாம் ; தப்பில்ல. நல்லாப் படிக்கணும்; நல்ல வேலைக்குப் போவணும், குடும்பத்தை மானமாக் காப்பாத்தணும்னு தாராளமா ஆசைப்படலாம். ஏன்னா, இதெல்லாம் ஒரு கடமையா ஆயிருச்சு. அதைச் செய்யாம இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. அதுவே, ரொம்பப் பேராசைப் பட்டேன்னு வையி. அது கொஞ்சங்கொஞ்சமா அரிச்சு உன்னையே பலி வாங்கிறும்.

அதைத்தான் இந்த மொத ரெண்டு வரியுல சொல்றாரு.

'அப்பா! முருகா! இதும்மாரி இந்தப் பேராசைன்ற பெரிய வியாதிகிட்ட விவரம் புரியாம மாட்டிக்கினு, நான் அணுவணுவா சித்திரவதைப் படறது நியாயமா'ன்னு பொலம்பறாரு.

அடுத்த ரெண்டு வரியுல இன்னா சொல்றாருன்னு கெவனி!

"வீரா! முது சூர் பட வேல் எறியும் சூரா! சுர லோக துரந்தரனே."ன்னு கூப்புடறாரு!

இந்த வரியுல முக்கியமாக் கவனிக்க வேண்டியது அந்த முது சூருன்ற வார்த்தைதான்!

தேவருங்களோட ஒலகத்தைக் காப்பாத்தறதுக்காவ, வேலெடுத்து வீசி, அந்தப் பளை[ழை]ய சூரனைக் கொன்ன சூராதி சூரனே! பெரிய வீரனே!ன்னு முடிக்கறாரு.


அதென்னாது பளைய சூரன்? அப்படீன்னா, புது சூரன் இருக்கானா?ன்னுல்லாம் ஒனக்கு ஒரு சந்தேகம் நியாயமா வரணும்' என்றான்.


'ஞான் விளிக்க நெனைச்சு! மன்னார் சொல்லிட்டல்லோ!' எனக் குதூகலித்தான் நாயர்!... என்னை முந்திக்கொண்ட ஆனந்தத்தில்!

'சூரன் எப்பிடியாப்பட்ட ஆளு? என்னல்லாம் சக்தி அவனுக்கு இருந்திச்சு? ஆனாக்க, அவனோட பேராசை... இருக்கறது போறாதுன்னு, தேவலோகத்தும் மேலியே கை வைச்சான். அத்தோட விட்டானா? அவங்களை ஜெயிச்சு, 'தரதர'ன்னு இஸ்த்துக்கினு வந்து ஜெயில்ல போட்டுட்டான். அல்லாரையும் அடிமைங்கமாரி நடத்திக் கொடுமைப் படுத்தினான். இது அல்லாத்துக்கும் காரணம் அவங்கிட்ட இருந்த பேராசைதான்!


அப்ப முருகன் வந்து இன்னா பண்ணினாரு?

இவன் கெட்டவன்னு அவனைக் கொன்னா போட்டாரு? இல்லைதானே? வேலால அவனை ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாத்திகிட்டுத் தங்கிட்டியே வைச்சுக்கினாரு! அதுனால, சூரன் இப்பவும் இருக்கான்! ... சேவலும், மயிலுமா முருகனோடயே! அந்தப் பளைய சூரன் காணாமப் பூட்டான்! அதாங்காட்டிக்கு, அவனோட பேராசையை மட்டும் அளி[ழி]ச்சிட்டாரு. அதைத்தான் நாசூக்கா இதுல சொல்லி, அந்தாளைப் பண்ணினமாரியே, எங்கிட்ட க்கீற இந்தப் பேராசைன்ற கெட்ட கொணத்த மட்டும் கள[ழ]ட்டிவிட்டுட்டு, என்னியையும் ஒன்னோடவே வைச்சுக்கப்பான்னு, சொல்லாம சொல்லி வேண்டுறாரு!


எதுன்னாலும் முருகன்கிட்ட வேண்டு. அவனுக்குத் தெரியும், எதை எப்பிடி செய்யணும்னு! எடுக்க வேண்டியதை எடுத்து, வெட்ட வேண்டியதை வெட்டி, சேர்க்க வேண்டியதை சேர்த்து அருள் பண்ணுவாருன்ற தத்துவத்தை இந்தப் பாட்டுல அருணகிரியாரு பொடி வைச்சு சொல்லியிருக்காரு!


போன பாட்டுல முருகனை "குருவா எம்முன்னாடி மனுச ஒடம்புல வாப்பா"ன்னு சொன்னாருதானே! அப்பிடி வண்ட்டா, அவர் எத்த எடுக்கணும், இன்னா பண்ணணும்னு அவருக்கே இவுரு ரூட்டு சொல்லிக் குடுக்கறாரு இந்தப் பாட்டுல!


அடுத்த பாட்டு இத்த விடவும் இன்னும் படா ஷோக்கா க்கீறும் பாரேன்' என ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

நாயர் கடையிலிருந்து வந்த சூடான மசால் வடையும், 'டீ'யும் எங்களைச் சற்று ஓய்வெடுக்க அழைத்தன!
சாஸ்திரிகளின் மனைவியார், 'சரின்னா, நீங்க சொன்னமாரியே ஆகட்டும்! எனக்கொண்ணும் இப்போ புது நகை போட்டுக்கணும்னு ஆசை இல்லை' என்றவாறே உள்ளே சென்றார்!

"நாலே வரில அவ மனசையே மாத்திட்டியேடாப்பா! "என வியந்தார் சாஸ்திரிகள்!


"நானா? நான் இன்னா பண்ணினேன்? அல்லாம் அந்த அருணகிரியாருதான்!" எனக் கையெடுத்துக் கும்பிட்டான் மயிலை மன்னார்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்!
*****************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP