Monday, January 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [40-முதல் பகுதி]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [முதல் பகுதி]
40.

ஓடி, ஓடிப் போனாலும், ஒன்னோட நிலையை நீ மறக்கக் கூடாது. எவ்ளோதான் நீ ஓடினாலும், ஒன்னோட நோக்கம் மாறக் கூடாது! இதைத்தான் இப்ப வரப்போற பாட்டு சொல்லப் போவுது! மொதல்ல பாட்டைப் படி' என்றான் அமர்த்தலாக மயிலை மன்னார்!


நாயர் கண்மூடி ஜெபித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒன்று நமக்குக் கிடைக்கப் போகிறது எனும் ஆர்வத்துடன் சாம்பு சாஸ்திரிகள் என்னைப் பார்த்துக் கண்ஜாடை காட்டவும், வேறொன்றும் பேசாமல் நான் பாடலைப் படிக்கலானேன்!

வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதணோ டுதிரிந் தவனே.


வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

'நாலாம் பாட்டுல ஒரு விசயம் வந்தது, நெனைப்பிருக்கா?!' என மன்னார் கேட்க, அவசர அவசரமாக பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.


'வளை பட்ட கைமாதொடு மக்களெனும்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ'
எனப் படித்தவுடன், தன் கையைக் காட்டி எனை நிறுத்திவிட்டுப் பேசலானான் மயிலை மன்னார்!


'இந்தப் பாட்டுக்கு ஒனக்குத் தெரிஞ்ச ஒர்த்தர் வந்து இன்னா சொன்னாருன்னு நெனைப்பிருக்கா?' என என்னைப் பார்க்க நான் எப்போதும் போல விழித்தேன்.


உடனே, என் உதவிக்கு வருவதுபோல சாம்பு சாஸ்திரிகள் வந்து, 'என்னடா சங்கர்! ஒனக்கு ஞாபகம் இல்லையா? தாரேஷணை, புத்திரேஷணைன்னு சொன்னாரே!' என்றதும், சட்டென நினைவுக்கு வர, 'ஆமாம், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?' எனப் பரிதாபமாகக் கேட்டேன்!


இரக்கத்துடன் என்னைப் பார்த்த மன்னார், சாஸ்திரிகளைப் பார்த்து, 'ஐயரே! இவனுக்கு இன்னும் புரியல! நீங்க கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க' என்றான்.


'ரெண்டு பாட்டுக்கு முன்னாடிதானே சொன்னேன், 'ஏஷணா'ன்னா, ஆசைன்னு. அப்போ, தார ஏஷணான்னா, பொண்டாட்டி மேலே இருக்கற ஆசைன்னு அர்த்தம். அதேபோலத்தான் புத்திர ஏஷணாவும்' எனச் சொல்லிவிட்டுத் தன் தலையில் அடித்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

'அதுக்குத்தான் இதுல பதில் சொல்றாரு அருணகிரியாரு. எப்பிடி இந்த மாயையிலேர்ந்து வெளியே வரமுடியும்னு ஒரு வளி[ழி] சொல்லித் தர்றாரு அந்தப் பெரியவரு. அதான் இந்தப் பாட்டு!' எனத் தொடர்ந்தான் மன்னார்!

"வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்"

எனக்குன்னு இருக்கற, என்னால வந்த, நான் கொண்டு வந்த அல்லா வெ[வி]னையுமே முருகனோட கையுல க்கீற வேல் பட்டா 'பட்'டுன்னு தீ[ர்]ந்து பூடும்னு எனக்குத் தெரியறதால அந்த வேல நான் என்னிக்குமே மறக்க மாட்டேன்னு மொதல் வரியுல சொல்றாரு.


வூடு, புள்ளகுட்டிங்க, சொத்து சொகம், சோகம் இன்னும் அல்லாமே, என்னோட வெனையால வந்தது.
இந்த வெனையையெல்லாம் என்னால எத்தினி சென்மம் எடுத்தாலும் தீ[ர்]க்க முடியாது!
ஆனாக்காண்டிக்கு, கந்தன் கையுல வைச்சிருக்கற வேலு இத்தயெல்லாம் ஒரு நொடியுல 'பொட்'டுன்னு தீ[ர்]த்துரும்.
அதுனால, எப்பவும் அந்த வேலையே நான் மறக்காமப் பாடிக்கினே இருப்பேன்னு சொல்றாரு.' என்றான் மன்னார்.

'கந்தரலங்காரத்துல ஒரு அற்புதமான பாட்டு இதையே சொல்றது! ' என்ற சாம்பு சாஸ்திரிகள் அதைப் பாடியும் காட்டினார்.


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கல் வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப்போது மறவாதவர்க்கு ஒரு தாழ்விலையே'


இதைக் கேட்டதும் சட்டென்று எனக்கு ஒரு வரி நினைவில் வர, ''அப்போ, ஔவையார்,
'சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை'
ன்னு சொன்னதும் இதைத்தானே!' என்றதும்,
மூவரும் எதோ ஒர் அதிசயத்தைப் பார்ப்பது போல, என்னைப் பார்த்தனர்!


மேலொன்றும் பேசாமல் மன்னார் தொடர்ந்தான்.

"மனையோடு தியங்கி மயங்கிடவோ"

இதுல. இப்பச் சொன்ன சொத்து, சொகம் சோகம் புள்ளைகுட்டிங்க, இது அல்லாத்துலியுமே, ஏதோ ஒரு வகையுல ஒன்னோட சம்பந்தப்பட்டவங்க ஒன்னோட பொண்டாட்டி!
இது அல்லாமே போனாக்கூட, அவங்க மட்டும் ஒங்கூட இருந்தாங்கன்னா, இது அத்தினியுமே ஒன்னால திரும்ப அடையமுடியும்!


ஏன்னா, அவங்க அத்தினி ஒசத்தி!


அல்லாத்தியுமே கொடுக்கற காமதேனுதான் பொண்டாட்டி!


இந்த ஒலகத்துல ஒனக்கு வேணும்ன்றதயெல்லாம் அவங்க தொ[து]ணையோட ஒன்னால சம்பாதிச்சிற முடியும்ன்றதுதான் உண்மை!
ஆனா, இதானா ஒனக்கு இப்ப முக்கியம்?
இந்த மயக்கத்துல சிக்கிக்கினு, இதான் சதம்னு நம்பி, இப்பிடியே ஒன்னோட
வாள்[ழ்]க்கையை நீ தொலைச்சுறப் போறியா?


அவங்க தொ[து]ணை ஒனக்கு இதுக்கும் மேலியும் ஒ[உ]தவி பண்ணும்!


நீபாட்டுக்கு, 'ஆகா! நமக்காக்காண்டி இப்ப்டி ஒரு பொண்டாட்டி வந்துட்டாளேன்னு, தலை தெறிக்க ஆடி, அவங்க பின்னாடியே சுத்தி, 'இதான் ஒலகம்! இதுக்காவத்தான் நான் பொறந்திருக்கேன், இத்தோட என் 'சென்மசாபல்யம்' ஆயிருச்சுன்னு மயங்கிராம, இவங்களோட 'இயங்கி'யே, இந்த ஒலகத்து மாயையுல சிக்கிக்காம, இவங்கள வைச்சுக்கினே, நீ தேடுற அனுபூதியை அடையப் பா[ர்]க்கணும்!னு ஒனக்கு சொல்லித் தர்றாரு அருணகிரியாரு.'என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

மந்தஹாஸமாய்ச் சிரித்தபடியே, 'அப்போ, இதுக்கும், அடுத்தாப்பல வர்ற ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்ம்னும் சொல்லேன் மன்னார்!' எனக் கேட்டார் சாம்பு சாஸ்திரிகள்!


'அதே ஞானும் விளிக்கு' என்றான் நாயர், சற்றே தன் கண்களைத் திறந்தபடி!


வழக்கம் போல நான் மன்னார் முகத்தையே பார்த்தேன்.
**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP