Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"


அன்புள்ள கலைஞர் அவர்களே!
வணக்கம்.

இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, 'ஆஹா! ஈழத்தமிழர் விடிவு இப்படித்தான் வர வேண்டியிருக்கிறதே!'
என மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!

நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு விதித்த கெடுவும், அதைக் கண்டு தமிழகமே தங்கள் பின் அணிவகுத்து மனிதச் சங்கிலியாய்த் திரண்டதும் நீங்கள் ஒரு செயல்வீரர் தான் என என்னை எண்ண வைத்தது.

நீங்கள் விதித்த கெடு முடியும்வரை இதை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனிக்கலாம் என இருந்தேன்.

ஆனால், இன்று........!!??!!

நடந்ததெல்லாமே ஒரு நாடகம்தான் என எண்ண வைக்கிறது!

ராஜிநாமாக் கடிதங்கள் போன இடம் தெரியவில்லை!

போர் நிறுத்தம் நடந்ததாகத் தெரியவில்லை!

ராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

நேற்று கூட ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டு அப்பாவி மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமரசப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப் பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நீங்கள் ஒன்றும் நடக்காதது போல நிவாரண நிதித் திரட்ட தீவிரமாக முனைந்து விட்டீர்கள்!

இதுவா ஈழ மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது?

நீங்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டும் என்பதா அவர்களின் எதிர்பார்ப்பு,... நம்பிக்கை?

இதற்காகவா இத்தனை நாள் நீங்கள் காத்திருந்தீர்கள்?

அங்கு ஆட்சி போனால், அடுத்த நொடியே இங்கும் ஆட்சி போகும் என்பது எனக்குத் தெரியும்.

முதல் அறிக்கை விடும்போது உங்களுக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், ...அல்லல் படும் மக்களின் அவலத்தை நிறுத்த உங்கள் செல்வாக்கு உதவும் என மிகுந்த ஆவலுடன் நம்பினேன்.

ஏமாற்றி விட்டீர்கள்!

என்னை மட்டுமல்ல!

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே!

இதெல்லாம் நாடகம் எனக் கூவிக் கொண்டிருந்தவர்களின் கூற்றை உண்மையாக்கி விட்டீர்கள் என வருத்தத்துடன் சொல்லிக்
கொள்கிறேன்!

இப்போது கூட இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த முறை போட்டி இடுவேனோ எனத் தெரியாது! எனச் சொல்லி முதல்வர் ஆனவர் நீங்கள்!

உங்கள் கூற்றை மதித்து, உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை அங்கு அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நம் தமிழர்கள்!

அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கவனமும் [ஒரு சிலரைத் தவிர்த்து!!] ஈழத்தமிழர்களின் விடியலை நோக்கியே இருக்கிறது என்பதே உண்மை!

'மறப்போம்! மன்னிப்போம்!' எனச் சொல்லும் அண்ணா வழியில் அயராது பாடுபட்டு வரும் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கால கட்டம் இன்று!

இலங்கை அதிபர் கூட உங்களை அழைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஈழத் தமிழரும் கூட, நீங்கள் நல்ல முடிவு கொடுப்பீர்கள் என நம்புகின்றனர்!

உணமை நிலவரத்தை அறிய நீங்கள் ஈழம் செல்ல வேண்டும்.

இரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை உங்களால் பெற்றுத் தர முடியும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்!

இந்த நேரத்தில், ஒரு வரலாற்று உண்மையையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிங்கப்பூர் என்ற நாடு முதலில் மலேசிய நாட்டுடன் இணைந்து, அதன் தனித்தன்மை தங்கள் நலனுக்கு ஊறு விளைக்கும் என பெருவாரியான மலேசிய மக்கள் நினைத்ததால், பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்து, சிங்கப்பூரை தனி நாடாக சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

இன்று அந்த இரு நாடுகளும் ஒருவர்க்கொருவர் இணக்கமாகவே இருந்து வருகின்றன!

இந்த அமைப்புதான் இன்றிருக்கும் நிலையில் சிங்களவர்க்கும், ஈழத் தமிழர்க்கும் நன்மை பயக்கும் செயல் முடிவாக இருக்கக்
கூடும் என நான் எண்ணுகிறேன்.

இதையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகினால் நலமாயிருக்கும்.

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது என்றாலும், மனதில் தோன்றுவதை
துணிவுடன் சொல்லிவிட எண்ணியே, இதைச் சொல்கிறேன்.

ஆனால், உங்களால் முடியும்!

'உன்னால் முடியும் தம்பி!' என அண்ணா அன்று தங்களைப் பார்த்துச் சொன்ன சொல் இதற்காகத்தான் என நம்பி இதில் முழுமனதுடன், முழு மூச்சுடன் ஈடுபட்டு நல்முடிவு தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்!

'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'
என அழைப்பு விடுத்தவர் நீங்கள்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

'தமிழர் தலைவா வருக! தமிழீழம் பெற்றுத் தருக!'

நடப்பது நடக்கும்!
நல்லதே நடக்கும்!

எனது அடுத்த கடிதம் தங்களைப் பாராட்டும் கடிதமாக இருக்க எல்லாம் வல்ல என் முருகனை வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!

Read more...

Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

முந்தையப் பதிவு

'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

நமது மூதாதையர் [நாற்பதிற்றாண்டின்]

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ? ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராணம் ஆக்கிய காலமோ?

சைவரோ? வைணவ சமயத்தாரோ?

இந்திரன்தானே தனி முதற் கடவுள்

என்று நம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத்தவரோ? கருத்திலாதவர்தாம்

எமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு;

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்

கலி தடை புரிவன். கலியின் வலியை

வெல்லல் ஆகாது என விளம்புகின்றனரால்,

நாசங் கூறும் 'நாட்டு வயித்தியர்'

இவராம்.'



இன்னொரு சாராரோ, தம்முடைய பண்டைப் பெருமையை

பலவாறும் விரித்துக் கூறி, அதுவே சிறந்தது எனவும் சொல்லி,

ஆயின், அது’ நீயெல்லாம் அடைய இயலாத ஒன்று’ எனக் கலியைக்

காரணமாகக் காட்டி நம் நம்பிக்கையைக் குலைப்பார்.

ஒரு சாரார் சீமை மருத்துவர்போல் வந்து 'ம்ஹூம்' என உதட்டைப்

பிதுக்கிச் சென்றால், இன்னொரு சாராரோ, நாட்டுவைத்தியர் போல

நாடி பிடித்து, 'தேறாது' எனச் சொல்லி நோயை அதிகமாக்குவார்

என்கிறான் பாரதி!

நமக்குத் தெரியாத நாகரிகத்தைச் சொல்பவரை சீமை மருத்துவர் எனச் சொன்ன பாரதி, நமக்கெல்லாம் ஓரளவு தெரிந்த ஒன்றையும் நம்மை அடையவிடாமல் செய்யும் இவரை நாட்டு வயித்தியர் எனச் சொல்லி கோபப்படுகிறான்!


'இங்கு இவ்விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்?'


எனக் கோபத்துடன் கேட்கிறான் விதியை நோக்கி!

'விதியே! விதியே! தமிழச் சாதியை

என் செயக் கருதி இருக்கின்றாயடா?
'

அனுதாபத்துடன் பாரதியைப் பார்த்து விதி சொல்கிறது!

'விதி:

மேலே நீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்,

அச்சமொன்று இல்லை!'


நீ பார்க்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

இந்த தலைவர்கள் சொல்வதையெல்லாம்

அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாமல்,,

எது உனக்கு நன்மை என்பதை அறிவோடு சிந்தித்து

அது எவர் சொன்னதாக இருந்தாலும் அதனைக் கொண்டு

வாழ்வீராயின், தமிழச் சாதிக்கு அச்சம் என்பதே இல்லை!

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்

நாளென்ன பொழுதென்ன?

எனச் சொல்லி விதி தன் வழியே சென்றது!

இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்லும்

இந்தப் பாடல் வரிகளை நன்குணர்ந்து செயல் புரிந்தால்

நம் தமிழர் உயர்வர்!

இப்போது பாரதி இந்தக் கவிதை எழுதும் முன் சொன்ன வரிகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்!

"தமிழ்மொழி வாழ்த்து!"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

********************************

[நல்லதே நடக்கும்!]

Read more...

Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

முந்தையப்பதிவு

'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்

அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--

இவர்தாம்.

உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்,

மற்றிவர்.

சாத்திரம்--[அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்]--

ஈங்கிதில் கலக்கம் எய்திடுமாயின்

மற்றதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
.'


எல்லாச் செயல்களுக்கும் ஒரு பரிகாரம் உண்டு என ஒரு சாராரும்,

பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைத் தள்ளாவிடின் பின் மருந்தே கிடையாது

என இன்னொரு சாராரும் செய்துவரும் குழப்பத்தில் தமிழச்சாதி

குலைந்துபோகின்ற அபாயத்தைச் சுட்டுகிறான் பாரதி.

இதனை இன்னமும் விரித்துச் சொல்ல விழைகிறான்.



'இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே

அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;

ஒருசார்.

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்,

தமிழச் சாதி தரணி மீது இராது.

பொய்த்தழி வெய்தல் முடிபு' எனப் புகலும்.


நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ

'ஏ ஏ! அஃது உமக்கு இசையா' தென்பர்;

'உயிர்தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை

பல அவை நீங்கும் பான்மைய வல்ல;

என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர்'

என்பதேயாகும்; இஃதொரு சார்பாம்.'



மேலை நாகரிகத்தைத் தழுவினாலன்றி

தமிழருக்கு வாழ்வில்லை எனச் சொல்லி, அதே சமயம்

அவையெல்லாம் தழுவுவது உமக்கு வராது என

சிலபல தடைகளையும் போட்டு

ஒருசாரார் நம்மைக் குழப்புவர்!

இவர்களைச் சீமை மருத்துவருடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறான்.

நமக்குத் தெரியா மருந்துகளைத் தான் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு,

அவற்றை நமக்கு விளக்காமல், தலை அசைத்துச் செல்லுவர் என!

அப்படியானால், அந்த இன்னொரு சாரார் எவர்?

நாளை வரும்!
****************

Read more...

Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

முந்தைய பதிவு

2. "தமிழச் சாதி" [தொடர்கிறது]

"ஏனெனில்,

'சிலப்பதிகாரச்' செய்யுளைக் கருதியும்,

'திருக்குறள்' உறுதியும், தெளிவும், பொருளின்

ஆழமும், விரிவும், அழகும் கருதியும்,

'எல்லையொன்றின்மை' எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக்கருதியும் முன்பு நான் தமிழச்

சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று

உறுதி கொண்டிருந்தேன். ஒரு பதினாயிரம்

சனி வாய்ப்பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்;

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள

பற்பல தீவினும்பரவி இவ்வெளிய


தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்


இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார்'

என்பது என் உளத்து வேர் அகழ்ந்து இருத்தலால்!


பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதனைத் தெளிவுறக் காட்டும் வரிகள் இவை

என்பதைத் தவிர இதில் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

இன்றைக்கும் பொருந்தும் இவ்வரிகளைப் படிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள்
ஒரு கணம் நம் கண்முன் நிழலாடித்தான் செகின்றன.

இத்தனையையும் மீறி, ஒரு நம்பிக்கை வரியையும் சொல்லித்தான் செல்கிறான் பாரதி!

என்னதான் நடந்தாலும், கடவுளை நம்பி, நேர்மைச் செயல்கள் செய்து வரின், வெற்றி நிச்சயம்!

இப்படிச் சொன்ன பாரதியை விதி பார்த்துச் சிரிக்கிறது!

'எதனால் இப்படி ஒரு நிலைமை என அறிவாயா?' என்கிறது!

'தெரியும் எனக்கு! சொல்கிறேன் கேள்' எனத் தொடங்குகிறான் பாரதி.

எனினும்,

இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடாது இருந்த எனைக் கலக்குறுத்தும்

செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய்!

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து,

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி,

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;

சாத்திரமின்றேல் சாதியில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்;


இரு பிரிவினராய்த் தமிழச்சாதி பிரிந்து நிற்பதைக் காண்கிறான் பாரதி

சாதிக்குள்ளே சாத்திரம் புகுந்து அது பொய்யாகத் திரிக்கப்பட்டு

மக்களை அலைக்கழிப்பதைப் பார்த்து மனம் பொருமுகிறான்.

நால்வகையாகச் சாதிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சாதியிலும்

தானே அறிவாளி எனச் சொல்லுகின்ற தலைவன் ஒருவன் புகுந்து

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதை மேலும் விவரிக்கின்றான்:

**************************************

[தொடரும்]

Read more...

Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"பாரதி கண்ட சில காட்சிகள்"

மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் இது!

ஈழம் பற்றி எரிகிறது!

தமிழகம் கொந்தளிக்கிறது!

உலகெங்கிலும் தமிழக மக்களின் குரல் உச்சமிட்டு ஒலிக்கிறது!

இந்தியத் தலைநகரிலும் கூட இன்று தமிழரல்லாத மாணவ சமுதாயம் ஆர்ப்பரித்து நிற்கிறது!

தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து தமிழக பாரரளுமன்ற உறுப்பினர்களும் இருவார காலகட்டத்தில்

பதவி விலகுவார்கள் என அதிரடியாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாரதி என்ன சொல்லி இருக்கிறான் எனப் புரட்டிப் பார்த்தேன்!

என்னமோ தீர்க்கதரிசிக் கவிஞன் எனச் சொல்லுகிறார்களே, இவன் இதைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பானே என்ற நம்பிக்கையுடனே அவனிடம் கேட்டேன்!

சிரித்தான் பாரதி!

பாரடா எனச் சொல்லி ஒரு பக்கத்தை என்னிடம் காட்டினான்!

படித்தேன்!

சிலிர்த்தேன்!

தொழுதேன்!

கொஞ்சம் அழுதேன்!

கலைஞர் கொடுத்த இருவார அவகாசத்தில் இதைப் பற்றி உங்களுடன் பகிர எண்ணம் கொண்டேன்!

இதோ அது உங்கள் பார்வைக்கு!

இதில் வரும் பல வரிகள் விளக்கம் இல்லாமலே புரியப்படுபவை!

தேவைப்படும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களுக்குச் சொல்ல எண்ணம்!

இதோ பாடல்!

பாரதியின் அனுமதியோடு, அவன் வரிகளைச் சற்று பதம் பிரித்து இங்கு இடுகிறேன்.

"தமிழச் சாதி"

'எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ?'


என்னடா, இப்படி ஒரு தொக்கில் ஆரம்பிக்கிறானே என நிமிர்ந்தேன்!

விநாயகர் நான்மணிமாலை நினைவுக்கு வந்தது!

சட்டென முந்தைய பாடலைப் பார்த்தேன்!

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி"

எனத் தொடங்கி ஒரு எட்டு கண்ணிகள் எழுதி,

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே"

என முடித்திருந்தான் பாரதி!

இப்படிப் பெருமையெல்லாம் பெற்று, வளர்ந்து, சிறந்த தமிழ்மொழி நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து,

எவருக்கும் பயன்படாத நீராக ஆகி, அது மட்டுமல்லாமல், ஒரு நோய்க்களமாகி அழிந்து போகவோ உனது நோக்கம் எனக் கேட்கிறான்!

யாரைப் பார்த்து இப்படி கேட்கிறான்?

அதை அடுத்த வரியிலேயே சொல்கிறான்!



'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று

உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்

சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே! தமிழ்ச் சாதியை எவ்வகை

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.'



வாழும் நிலைகளுடன் வைக்கப்போகிறாயா?

இல்லை அழிந்துபோகும் பொருள்களுடன் சேர்க்கப் போகிறாயா? என

விதியைப் பார்த்து ஒரு கேள்வி வைக்கிறான் பாரதி!

விதி திகைக்கிறது!

என்ன சொல்கிறான் இவன்?

நிகழ்வதைத்தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்!

இதில், நிலைப்பது, அழிவது என்கின்ற வேறுபாடு எனக்குக் கிடையாதே!

பின் எதைக் குறித்து இப்படிச் சொல்கிறான் என பாரதியைப் பார்க்கிறது!

சற்றும் தயங்காமல், அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறான் பாரதி.

நீரில் தோன்றிய இவ்வுலகு மீண்டும் நீரிலேயே முடியும் என்னும்

அறிவியலாளரின் கருத்துக்கொப்ப, எம் தமிழ் அழியாக் கடல் போல இருக்குமா?

அல்லது, ஒரு அழுத்தமான, கனமான மலர்மாலை தோளில் புரண்டதால் ஏற்பட்ட

அணிமலர்த் தடம், சிறிது நேரத்தில் மறைந்து போவதுபோல் போய்விடுமா?

பகலவன், மேகமூட்டம், இவற்றினால் இல்லாதது போலத் தோன்றினாலும்,

எப்போதும் மறையாத நட்சத்திரங்கள் போல அழியாமலா?

இல்லை, வெளிச்சம் வேண்டுமே என்பதற்காக ஏற்றப்பட்டு,

இயற்கை வெளிச்சம் வந்தவுடன் அணைக்கப்படும் ஒரு மாளிகை விளக்கு போலவா?

எவர் எது கேட்டாலும் தயங்காமல் தருகின்ற கற்பத்தருபோலவா?

அல்லது, எவருக்குமே பயனில்லாது தன் பெருமை மட்டுமே பேசி

தனிக்காட்டின் நடுவினில் நிற்கின்ற ஒரு காட்டுமரம் போலவா?

இப்படி எதுவாக வேண்டி எங்கள் தமிழச் சாதியை நீ விதித்திருக்கிறாய்? சொல்!

என அதிரடிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்!

விதி இன்னமும் புரியாமலேயே விழிக்கிறது!

பாரதி தொடர்கிறான்!

****************************

[நாளை தொடரும்]

Read more...

Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!


கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

Read more...

Wednesday, October 15, 2008

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"



அன்புள்ள கலைஞர் அவர்களே!

வணக்கம்.


வருபவர் வரட்டும்; வராதவர் பற்றிக் கவலை இல்லை; நம் நோக்கமும், அதன் அவசரமுமே முக்கியம் எனக் கருதி, நீங்கள் கூட்டிய
அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து மகிழ்கிறேன்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என உங்கள் தலைவர் அறிஞர் அண்ணா சொன்னதுபோலச்
செய்து காட்டியிருக்கிறீர்கள்.
அதற்காக என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.க.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன; செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

பலம் பொருந்திய ஒரு அண்டைநாடு, அங்குள்ளவர் நலனில் அக்கறையும் கொண்ட நாடு என்ற முறையில் இந்த முடிவுகளைத்தான் நம்மால் சொல்ல முடியும்.

இவை நிறைவேற்றப் பட்டாலே, ஒரு சுமுகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் வரமுடியும்.

தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல், இவை செயல்பட,உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லல்படும் நம் தமிழர் வாழ்வை மலரச் செய்யுங்கள்.

கூட்டத்திற்கு வராதவர் குறித்த உங்கள் கருத்துகள் உங்கள் அரசியல் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

எவர் இதை எப்படி விமரிசித்தாலும், தங்களுக்கு வெற்றி என சிலர் நினைத்தாலும், இது போதாது என எதிர்க்கட்சிகள் சொன்னாலும், இது அல்லற்படும் தமிழர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக அமையவேண்டும் என விரும்புகிறேன்.



அடுத்த இரு வாரங்களுக்கு, ஒட்டுமொத்தத் தமிழினமே உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும்.

உங்களை மட்டுமல்ல!

இந்த முடிவுகளை ஏற்று, மத்திய அரசு என்ன முடிவுகள் எடுக்கப் போகின்றன என்பதையும் கூடத்தான்!

பிரதமர் இன்று சொல்லியிருக்கும் கருத்துகள் சற்று நம்பிக்கையை வரவழைக்குமாறு இருக்கிறது.


இருப்பினும், கூடவே வந்த மற்ற கருத்துகள் ஏமாற்றத்தை உண்டுபண்ணியது.
நல்லது நடக்கும்.... விரைவில்..... அதுவும் தங்களது ஆட்சிக் காலத்திலேயே என உறுதியாக நம்புகிறேன்.

நீங்களும் உறுதியாக இதை நடத்திக் காட்டுங்கள்!


காலம் கடந்து இது நிகழ்ந்தாலும், இப்போதாவது நிகழ்கிறதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

அவர்கள் கனவைத் தகர்த்துவிடாதீர்கள்!


நன்றி. வணக்கம்.
*************************
[கடிதங்கள் தொடரும்!...... இரு வாரங்களுக்குப் பின்!!]

அது வரையில்.........
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, October 14, 2008

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"


என் அன்பு தமிழக மாணவர்களே!

மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை நன்கு உணர்ந்தவன் நான்!

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டவன் நான்!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்துத் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தபோது நேரடியாகப் பாதிக்கப்பட்ட முதல் அறை என்னுடையது!

மாணவர் நினைத்தால், என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும், எந்த ஒரு சக்தியையும் அசைக்கமுடியும் எனத் தெளிவாகத் தெரியும் எனக்கு.

அது ஒரு காலம்!

சமீப காலமாக நாம் காண்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாணவர் ஒரு காரணத்துக்காக ஒரு போராட்டம் தொடங்குவர்.

அது அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ நிகழும்.

பள்ளியை விட்டு வெளியேறி, ஒரு ஊர்வலம் நடத்துவார்கள்.

செல்லும் வழியில், சில தீயசக்திகள் இதற்குள் ஊடுருவுவார்கள்!

சில கடைகளை அடைக்கச் சொல்லி வம்பு செய்வார்கள்.

சில கற்கள் பறக்கும்!

சில மண்டைகள் உடையும்!

என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே, மாணவர்களும் இதில் உட்புகுவார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறை, கூட்டத்தை விலக்க முற்பட்டு, தடியடி நடத்தி, தானும் அடிபட்டு, பிறகு துப்பாக்கிச்சூடு வரை நடக்கும்.

எவன் சாகிறானோ, அவனுக்கு வீரவணக்கம் எனத் தொடங்கி, போராட்டம் வலுக்கும்.

'அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்தில் அரசின் அடக்குமுறை' என எதிர்க்கட்சிகள் இதை மேலும் வளர்க்கும்.

இதுதான் இப்போது நடைபெறும் காட்சிகள்.

இந்த நிலையில், இன்று தமிழ் ஈழ மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்தப் போவதாகச் செய்திகளில் படிதேன்.

வேண்டாம் ஐயா! வேண்டாம்!

படிக்கும் வேலையை விட்டு இதில் ஈடுபட வேண்டாம்!

உங்கள் உதவி அவசியம் அவருக்குத் தேவை.

அது போராட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் பள்ளி நாட்களில் வேண்டவே வேண்டாம்!

ஒரு விடுமுறை நாளில், பள்ளிவாசலில், அல்லது ஒரு முக்கிய வீதியில் கூடி, வருவோர் போவோர்க்கெல்லாம் நம் தமிழர் படும் அவலத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

நிவாரண உதவி கேட்டுக் கையேந்துங்கள்.

அதைவிட்டு, இது போல, சாலை மறியல் அது இது என ஆவேசச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனத் தாழ்மையுடன் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் படிப்பு முக்கியம்.

தமிழீழம் கிடைக்கும்.

அது நிச்சயம்!

அப்போது நீங்கள் சென்று தேவையான கல்வி உதவிகளைச் செய்து தாருங்கள்!

இப்போது...............
போய்ப் படியுங்கள்!

நேரம் வரும்போது அழைப்பு வரும்!

அப்போது......
தவறாமல் வாருங்கள்!
*******************************

[கடிதங்கள் தொடரும்!]

Read more...

Monday, October 13, 2008

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"
அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு,

வணக்கம்.

தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது!

பலவித அடக்குமுறைகளைச் சந்த்தித்த தமிழ் ஈழ மக்கள் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்க நேர்ந்ததும், அதற்கு நீங்கள் ஒரு தலைமை தாங்க நேரிட்டதும் சரித்திர உண்மைகள்!

20 ஆண்டுகளுக்கும் மேலாய், ஒரு இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக நடத்திவரும் உங்கள் தலைமையின் மீது தமிழீழ மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவன் நான்!

என்ன சொன்னாலும், அது தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு செயல் என்றாலும், தலைவன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அதை அப்படியே சிர மேற்கொண்டு நடத்தி வருவது, நிகழ்ந்த, நிகழ்கின்ற பல செயல்பாடுகளின் மூலம், நிறைவாகவே உணர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் உங்களுக்கு இந்த மடலை எழுதத் துணிந்தேன்.

இரு தலைமுறைகள் அழிந்து போயின அல்லது புலம் பெயர்ந்து போயின!
இயக்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தாலும், அவர்களின் வாழ்க்கை ஈழத்தோடு ஒன்றமுடியாமல் போனதுதான் பெரிய அவலம்.

புலம் பெயர்ந்த மக்களின் குழந்தைகள் வேறொரு வாழ்க்கை முறையில் ஒன்றிப் போய், நீங்கள் நடத்தும் போராட்டத்தின் கருப்பொருளை முழுதுமாக உணர முடியாமல், தார்மீகமாக ஆதரிக்கும் நிலையையே இப்போது காண்கிறேன்.

அவர்களின் அடுத்த தலைமுறை இதை உணரக் கூட முடியுமா என்பதே என் அச்சம்.

விடுதலைப் புலிகளின் சில செயல்பாடுகளை அவர்களில் சிலர் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு விலகிப் போகும் அபாயம் இருப்பதை நான் காண்கிறேன்.

இதை ஒப்புக்கொள்ள நீங்களோ, அல்லது உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ மறுக்கலாம்.

ஆனால், ஒரு மூன்றாவது மனிதனாக, இதன் மேல் நம்பிக்கை வைத்து, இது விரைவிலேயே வெற்றி பெற வேண்டும் என வேண்டும் என் போன்ற பலரின் விருப்பமும், நீங்கள் உங்களது வழிமுறைகளை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.

உங்கள் நோக்கம் நியாயமானது.
அது நிறைவேற வேண்டும்.

அதற்கான வழிமுறைகளைக் கொஞ்சம் மாற்ற முயலலாமே!

வன்முறை என்றுமே வென்றதில்லை!
இதை சிங்களவர்க்குப் புரிய வையுங்கள்!

சொல்லிச் செல்வது சுலபம்; அனுபவிப்பவர்க்குத்தான் அது தெரியும்.
இருப்பினும், ஒரு இனம் அழிய நீங்களும் காரணமானீர்கள் என வரலாறு உங்களைப் பேச வேண்டாம் என்பது என் விருப்பமும், ஆசையும்!

என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல எனக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை!

ஆனால், தமிழர் வாழவேண்டும் எனச் சொல்ல உரிமை இருக்கிறது!

தமிழர்களைக் காக்கும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் ஈடுபடும் அதே நேரத்தில், ஈழத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு சிறிய நடவடிக்கைக்கும் உங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்னும் ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் உங்களுக்கு விடுக்கிறேன்.

சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்!
செய்வது உங்கள் கையில்!

தமிழீழம் கிட்ட என் முருகனை வேண்டுகிறேன்!

வணக்கம். நன்றி.
*******************************
[நாளை.... இந்தியப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஒரு கடிதம்]

Read more...

Sunday, October 12, 2008

"அன்னைக்கு ஒரு கடிதம்"

"அன்னைக்கு ஒரு கடிதம்"
மதிப்பிற்குரிய சோனியா அன்னையாருக்கு,

வணக்கம்.

இந்தியாவின் முடிசூடா மஹாராணியாக தற்போது இருப்பவர் நீங்கள்.

தன் நாட்டை விட்டு எங்கள் மண்ணுக்கு மருமகளாக வந்து, இப்போது அனைவராலும் 'அன்னை' எனப் போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தது உங்கள் பெருமை.

இந்த நாட்டுக்காக நீங்கள் இழந்தது கொஞ்சம் அதிகமே!

சொந்தக் கணவனையே இந்நாட்டுக்காகப் பறி கொடுத்த உங்கள் சோகமும், அதனைத் தொடர்ந்து, நேரு குடும்ப வாரிசுகளை உருவாக்க நீங்கள் செய்த தியாகமும் எப்போதும் எங்கள் நன்றியை உங்கள் பால் காட்டி, உங்களை 'அன்னை' எனவே மதிக்கும் அளவுக்கு வந்திருப்பவர் நீங்கள்.

பொருளாதாரம், பாதுகாப்பு, அடுத்த தேர்தல் என பல விஷயங்கள் உங்கள் கவனத்தில் தற்போது இருப்பினும், ஒரு வேண்டுகோளை உங்கள் முன் கொண்டுவரவே இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்!

சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்படும் அவலம்!

இருக்க இடம் இல்லாது, அப்பாவி மக்கள் படும் துயரம் உங்கள் பார்வைக்கும் வராமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்துக்கு, அதன் சில தவறுகளால் நிகழ்ந்த , நிகழ்கிற சம்பவம் என அலட்சியப் படுத்தாதீர்கள்.

உங்களுக்கு இதில் தனிப்பட்ட முறையிலும் பாதிப்பு இருப்பதையும் உணர்வேன்.

அதை மனதில் கொள்ளாமல், ஒட்டுமொத்த தமிழினமே அங்கு அழிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நிலைமையை ஒரு சீருக்குக் கொண்டுவர முன்வாருங்கள்.

சொந்த நாட்டிலேயே மூன்றாந்தர அகதிகள் போல் நடத்தப்படும் தமிழ் மக்களின் அவலத்தைப் போக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நினைத்தால் இது முடியும்.

விரும்பினால், தமிழீழமே கூடப் பெற்றுத் தரமுடியும்.

இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என இதனைத் தள்ளிவிட வேண்டாம்.

பங்களா தேஷில் அன்று இந்தியா எடுத்த பொறுப்பான செயலைத் தங்கள் கவனத்துக்கு இப்போது கொண்டுவர விரும்புகிறேன்.

இதைச் செய்தால் பல கோடி தமிழ் மக்கள் தங்களை நன்றியுடன் நினைவு கூருவார்கள்.

'இன்னா செய்தரை ஒறுத்தல்' எனும் வள்ளுவனின் மொழிக்கு உருக் கொடுத்த பெருமை வரலாற்றில் உங்களை வந்து சேரும்!

செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி. வணக்கம்.
****************************
[நாளை.... 'கேப்டனுக்கு ஒரு கடிதம்']

Read more...

Saturday, October 11, 2008

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"


அன்புள்ள ஜெயலலிதா அம்மா!

தமிழகத்தின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் நீங்கள்!

இப்போதும் ஒரு வலுவான எதிர்க் கட்சியாக இருப்பவரும் நீங்கள்!

தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் உங்கள் கருத்தைத் தமிழகம் ஆவலுடன் எதிபார்க்கிறது.

உங்களுக்கும், கலைஞருக்கும் இருக்கும் பகைமை உணர்வு அனைவரும் அறிந்ததே!

அவர் எடுக்கும் அனைத்தையுமே எதிர்ப்பதுதான் ஒரு எதிர்க் கட்சித் தலைமையின் அழகு என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், இப்போது நிகழ்வது அதுவல்ல!

ஈழம் பற்றி எரிகிறது அம்மா!

கண்ணில் கண்ட தமிழரெல்லாம் புலிகள் எனச் சுட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்!

பெண்கள் மானபங்கப் படுத்தப் படுகிறார்கள்.

சிறு குழந்தைகள் அழிக்கப் படுகின்றார்கள்.

எங்கேயோ ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்குத் தெரிந்த இந்தச் செய்திகள் உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

இப்போது கலைஞர்... தமிழக முதல்வர் ....... ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதைக் கூட்டாமலேயே, மத்திய அரசில் தன் பலத்தைக் காட்டியே அவர் ஒரு தீர்வு கண்டிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

ஆனால், இது ஒன்றைக் காரணம் காட்டி. இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் உங்கள் முடிவை முழுதுமாக எதிர்க்கிறேன்.

நீயா நானா எனப் பலப்பரிட்சை செய்யும் நேரம் இது அல்ல!

ஒட்டு மொத்தமாக ஒரு இனம் முறையாக அழிக்கப் படுகிறது உங்கள் கண்ணில் படவில்லையா!

கலைஞர் உங்கள் எதிரி!

தெரியும் எனக்கு!

ஆனால், அவர் தான் இப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் ஒரு முதல்வர்!

அவர் விடுக்கும் அழைப்பைப் புறக்கணிப்பதின் மூலம் ஒரு பெரும் தவறு செய்கிறீர்கள் நீங்கள்!

நம் தமிழர் படும் அவலத்தை உணர்ந்து, உடனடியாக உங்கள் முடிவை மாற்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நீங்களும் ஒரு தமிழர் தான் என நிரூபியுங்கள்!

தமிழர் நலனைக் காப்பதுதான் என் தலைமை என தரணிக்குச் சொல்லுங்கள்!

வரலாறு உங்களைப் பேசும்!

******************

நாளை "அன்னை"க்குஒரு கடிதம்!

Read more...

Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

"கலைஞருக்கு ஒரு கடிதம்"



அன்புள்ள ஐயா!
தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் என்கிற முறையில் இந்த மடலை வரைகிறேன்.

தமிழுக்கும், தமிழருக்கு பல நல்ல செயல்களைச் செய்யும் மனமும் உங்களுக்கு இன்னமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், தமிழர் என்பவர் தமிழகம் தாண்டியும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துபோய் விட்டீர்களோ என் ஒரு சந்தேகம்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் ஐயா!

உங்களுக்கும் தெரியும்தானே!?

கண்ணில் பட்ட எல்லாரும் குண்டுக்கு இரை ஆகிறார்கள்.

சாகாமல் பிழைத்தவர் அல்லல் படுகிறார்கள்.

ஒரு சாதாரண தமிழனான எனக்கு, அதுவும் ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்கே தெரியும்போது, உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதுவும் தமிழக முதல்வராக!

அது மட்டுமல்ல!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசையே நடுங்க வைக்கும் பலம் கொண்டவராகவும் இருக்கிறீர்காள்.

ஒரு சில துறைகள் தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி, அதையும் பெற்றவர் நீங்கள்!

இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் நீங்கள் இப்போது செய்யும் நிகழ்வுகள் உங்களது தலைமையையே சந்தேகப் பட வைக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

குறைந்த பட்சமாக, பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களுக்கு, நம் தமிழருக்கு, அடிப்படை நிவாரண உதவி கிடைக்கக் கூட நீங்கள் செய்யக் குரல் கொடுக்காமல்,
அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என நேரம் கடத்துவது கலக்கம் அளிக்கிறது.

இப்போது உடனடித் தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவி.

1987-ல் எம்ஜியார் செய்தார்!....செயலிழந்த

நிலையிலும்!!

கப்பல் மறிக்கப்பட்ட நிலையிலும், விமானம் மூலம் இந்திய அரசு உதவி அளிக்க முன்னின்றார்.

அதைச் செய்யுங்கள் இப்போது!

தமிழீழம் கிடைப்பது கடவுள் விட்ட வழி!

அது நிச்சயம் கிடைக்கும்!

ஆனால், அதைக் காண மக்கள் இருக்க வேண்டும்!

நம் தமிழர் உயிரோடு இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது....

அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல!
உங்கள் பலத்தைப் பயன்படுத்தி, வருந்தும் தமிழருக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மட்டுமே!

பதவியில் இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது அல்ல!
முதல்வர் பதவியை விட்டு விலக அறிக்கை அளிப்பதே, மத்திய அரசைக் கலங்க வைக்கும்!

செய்வீர்களா!

வருந்தும் நம் ஈழத் தமிழரை வாழ வைப்பிர்களா?

செய்வீர்கள் என நம்புகிறேன்!

நன்றி!
வணக்கம்!

Read more...

Tuesday, October 07, 2008

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

"இது ஒரு மனிதநேய ஓலம்!"


"நிறுத்துக!"



இலங்கை அரசே.....,
கண்மூடித்தனமாய்க் கொலைகள் செய்வதை....
எண்ணிக்கை பாராமல் இனத்தை அழிப்பதை.....
மண்கேட்ட மனிதரை மண்ணுக்கே அனுப்புவதை.....
புண்பட்ட மக்களைப் பலிகடா ஆக்குவதை.....
கண்ணில் பட்ட எவரையும் புலி எனச் சுடுவதை.....
அப்பாவி மக்களை அடியோடு அழிப்பதை.....
பெற்றவர் கண்ணெதிரே தமிழ்மானம் பறிப்பதை.....
கதறக் கதறக் கழுத்தை அறுப்பதை.....
அமைதிவழி காணாமல் அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதை....
அன்புவழி புத்தன் பெயரால் அக்கிரமங்கள் செய்வதை....!


விடுதலைப் புலிகளே....,
அன்புவழி நிச்சயம் வெல்லும் ஓர்நாள்
என்பதை இன்னமும் நம்ப மறுப்பதை....


அறவழி விடுத்து மறவழி தொடரும்

ஒருநிலை வெல்லும் என நம்புவதை......


இந்திய அரசே...........,
அண்டையில் ஓர் இனப்படுகொலை நிகழ்கையில்
அக்கறையின்றி வாளாவிருப்பதை....
சொந்தத் தமிழர் செத்து மடிகையில்
ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதை
அநீதிகள் சிலபல முன்பு நிகழ்ந்தபோதிலும்
அதை மனதில் கொண்டு இப்போது வேடிக்கைபார்ப்பதை....
அகதிகளாய் வருபவரின் நிலைகண்டும்
அக்கடா என ஒதுங்கி நிற்பதை.....
வல்லரசாய் இருந்து கொண்டும் ஒரு
நல்லரசாய்ச் செயல்படச் சுணங்குவதை....!

விரைவில் நம் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல விடிவு வர எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.

இது ஒரு மனிதநேய ஓலம்!

Read more...

Saturday, October 04, 2008

"விநாயகர் அகவல்" -- 16

"விநாயகர் அகவல்" -- 16



நான் வணங்கும் பெரியவர் மேலும் சொல்கிறார்!

///...சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே! ///

சொல் ப‌த‌ம் = சொல்லும், பொருளும்
சொல் ப‌த‌ம் = நாத‌ம் (ச‌த்த‌ம்) , ஒளி
சொல் ப‌த‌ம் = ஒலி, பாட்டில் ஒரு வ‌கை
சொல் ப‌த‌ம் = ம‌ந்திர‌ம், காலம்
சொல் பதம் = பிரணவம், திருவடி

சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; திகைக்கிறான்.


சொல் என்ற‌ சொல்லிற்கு நாத‌ம் (ச‌த்த‌ம்) எனும் பொருளும் உண்டு. ப‌த‌த்திற்கு ஒளி என்ற‌ பொருள் உண்டு. ஆக‌ சொற்ப‌த‌ம் க‌ட‌ந்த‌ என்றால் நாத‌ம், விந்து(கலை) க‌ட‌ந்த‌ இட‌ம் என்று பொருள். விந்து என்றால் ஒளி. நாத‌த்தை கட‌ந்து நின்ற‌ இட‌ம் நாதாந்த‌ம். விந்து க‌லை என‌ப்ப‌டும் விந்தை க‌ட‌ந்த‌ இட‌ம் க‌லாந்த‌ம். நாத‌ விந்து க‌லாதீ ந‌மோ ந‌ம‌ என்னும் பாட‌லும் இவ்விட‌த்தையே குறிக்கிற‌து.
யோகிய‌ர் புருவ‌ம‌த்தியில் பிராணனும், சக்தியும் போய் சேரும்போது நாத‌த்தையும், ஓளியையும் அனுப‌விக்கின்ற‌ன‌ர்.

அத‌ற்கு மேல் போகும்போது ஓளி ம‌றைகிற‌து. ஒளியின் எல்லை நிலம் அது. அந்த‌ இட‌மே க‌லாந்த‌ம் என‌ப்படும் ஒளிப்பாழ்! அத‌ற்கும் மேலே போகும்போது ஒலியின் எல்லை வ‌ருகிற‌து. அதுவே வெளிப்பாழ் என‌ப்ப‌டும் நாதாந்த‌ம்.
அத‌ற்கும் மேலே உண‌ர்வோடு பிராண‌னும்,அம்மையான குண்ட‌லினியும் போகும் போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து.
துரிய‌ நிலை அடைந்த‌வ‌னுக்கு சில‌ அடையாள‌ங்க‌ள் இருக்கும். இய‌ல்பில் குழ‌ந்தை போலவோ, பித்த‌ன் போலவோ, ஜ‌ட‌ம் போலவோ இருப்பான். இந்த‌ மூன்று இய‌ல்புமே காண‌ ம‌ன‌திற்கு இத‌மாக‌ இருக்கும். ம‌ன‌திற்கு எரிச்ச‌ல் மூட்டுவ‌தாக‌ இருக்காது.

சொல் என்றால் ஒலி; ப‌த‌ம் என்றால் அந்த‌ ஒலிக‌ளின் வ‌கை. ஒலியும் ஒலியின் ப‌லவித‌ வ‌கைக‌ளான‌ சின்சின், சின், ம‌த்த‌ள‌ம், க‌ண்டாம‌ணி, வ‌ண்டு, வீணை,புல்லாங்குழ‌ல், ச‌ங்கு, அலையோசை, இடி என‌ப்ப‌டும் த‌ச‌வித‌ நாத‌ங்க‌ளும் முடிவ‌டையும் இட‌ம் அது. சுழுமுனை வ‌ழியே பிராண‌னும், ச‌க்தியும் மேலெழுவ‌தால் இத்த‌கு இசைவ‌கைக‌ள் எழும். இந்த‌ இசை ஒவ்வொன்றையும் உன்ன‌ உன்ன‌, ஒவ்வொரு த‌ளைக‌ளாக‌ அறும். ஜீவ‌ன் சிவ‌த்த‌ன்மையை ப‌டிப்ப‌டியாக‌ப் பெறுகிறான். அத்த‌கைய‌ இந்த‌ ஒலியும்,ஒலியின் வ‌கைக‌ளும் முடிவ‌டையும்போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து. அப்போது தான் உண்மையில் யார் என்ற‌ விஷ‌ய‌ம் அவ‌னுக்கு பிடிப‌டுகிற‌து!

சொல் எனப்ப‌டுவ‌து ம‌ந்திர‌ம்; ம‌ந்திர‌ம் என்றால் சூரிய‌ன். ஆக‌ நாத‌மும் விந்தும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் போது அது ம‌ந்திர‌மாகிற‌து. அதாவ‌து ஒலியும் ஒளியும் ஒன்றாக‌ ஆகும்போது இந்த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து. ஆக‌ ஒலி ஒளி க‌ல‌ந்த நிலைக்கு ஒளிவெளி பாழ் என்று சொல்லப்படும்.

பதம் என்ற சொல்லுக்கு காலம் என்ற பொருளும் உண்டு. கால‌த்தை க‌ட‌ந்த‌வ‌ளாக‌ அன்னை குண்டலினி அங்கே சென்று மாறும் போது காலினீ என்னும் த‌ன்மை கொண்ட‌வ‌ளாகிறாள். இப்ப‌டி ஒளிவெளிப்பாழையும், கால‌த்தையும் கட‌ந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும் அந்த‌ இட‌ம். இட‌ம், நிலை என்ப‌த‌ற்கு அவ‌ஸ்தை எனும் சமஸ்க்ருத சொல்லால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அங்கு ஒன்றை ஒருவ‌ன் ஒளியாலோ ஒலியாலோ ஜீவ‌ அறிவாலோ உண‌ராம‌ல், உண‌ர்வு எனும் நிலையில் அனைத்தையும் உண‌ர்கிறான்.

சொல் என்ப‌து பிர‌ண‌வ‌ம் எனும் பொருள்ப‌டும்; ப‌த‌ம் என்றால் திருவ‌டி எனும் பொருளும் உண்டு. பிர‌ண‌வ‌த்தின் முடிவும், திருவ‌டியைக் க‌ட‌ந்துமான‌ அந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும். அத‌னால் திருவ‌டி மீது அன்புக் கொண்ட‌ அன்ப‌ர்க‌ள் துரிய‌த்தின் எல்லையிலேயே இருப்ப‌து உண்டு. திருவ‌டி என்னும் இடம் தூலத்தில் ம‌ண்டையின் உச்சி! ஆனால் நுண் உட‌ல், கார‌ண உட‌லை க‌ட‌ந்தே உண்மையில் திருவ‌டி அறிய‌ப்ப‌டுகிற‌து. அங்கிருந்தே இறைவ‌ன‌து வ‌ழிக்காட்ட‌ல் கிட்டுகிற‌து. பிராண‌னும், குண்ட‌லினியும் பிரிக்க‌முடியாத‌ப்ப‌டிக்கு க‌ல‌ந்து அவ்விட‌த்தை அடையும் போது துரிய‌த்தின் எல்லை நில‌த்தை அடைகின்ற‌ன‌ர். திருவ‌டியில் க‌ல‌ப்ப‌வ‌ர் துரிய‌ நிலையை அடைகின்ற‌ன‌ர். அதாவ‌து ஜீவ‌ உண‌ர்வு அடியோடு ம‌றைந்து சிவ‌ உண‌ர்வாகி விடும். அந்நிலையை அடைந்த‌வ‌ர் அத‌ன்பிற‌கு த‌ன்னிச்சையால் ஏதும் செய்யார். கார‌ண‌ம் அவ‌ரும் இல்லை அவ‌ர‌து இச்சை என்று ஒன்றும் இருப்ப‌தில்லை. அந்நிலை அடைந்த‌வ‌ரையே பெரியோர், அடியார் என்கிறோம்.

அவ‌ர் வ‌ழி செய்ய‌ப்ப‌டும் செய‌ல் யாவும் ஈச‌ன் செயலாக‌ ஆகும். இவ‌ரே அவ‌ன‌ருளால் அவ‌ன்தாள் வ‌ண‌ங்கி எனும் நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே அவ‌னே அனைத்து செய‌லிற்கும் கார‌ண‌ம் என்ற‌ நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே த‌ன் செய‌லினால் ஏற்ப‌டும் வினைப்ப‌லனினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ர். ஆக‌வே இவ‌ர்க‌ளையே ம‌ஹாத்மாக்க‌ள், பெரியோர், குரு, அடியார் என்று சொல்லி வ‌ண‌ங்குவ‌து வ‌ந்த‌து. இவ‌ர்க‌ளை வ‌ண‌ங்குவ‌து ஈச‌னையே வ‌ண‌ங்குவ‌தாகும். இங்கே உள்ளே ஈச‌ன‌ன்றி வேறொருவ‌ர‌து இச்சையோ, செயலோ, இருப்போ இல்லாத‌தால் இத்த‌கைய‌ பெரியோர‌து உட‌ல் இறைவ‌ன் உறையும் ஆல‌ய‌மாகிற‌து. அத‌னால்தான் இத்த‌கையை பெரியோர‌து பூத‌வுட‌ல் மீது ச‌மாதி அமைத்து கோவிலாக்குவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌து.

துரிய‌ம் என்றால் என்ன‌? அந்த‌ பெய‌ர் எதை குறிக்கிற‌து? அந்த‌ நிலை என்ன‌? அது எந்த நிலை என்று சொல்வ‌தை விட‌ அது எந்த‌ நிலையெல்லாம் இல்லை என்று சொல்வ‌து சுல‌ப‌ம். நாம் விழித்திருக்கும்போது உண‌ரும் நிலை அல்ல‌; தூங்கும்போது க‌னாக்காணும்போது உண‌ரும் நிலை அல்ல‌; க‌ன‌வே இல்லாது ஆழ்ந்துற‌ங்கும் நிலையும் அல்ல‌. இந்த‌ மூன்று நிலையில் மாறி மாறி பய‌ணிப்ப‌வ‌ர‌து நிலை எதுவோ அதுதான் அந்த‌ நிலை.

அதை அறியும்போது மாத்திர‌மே அது அதுதான் என்று புரியும். அங்கு ம‌ன‌மில்லாதாத‌ல் சொல்லும் பொருளும் அதை குறிக்க‌ உத‌வாது. அத‌னால்தான் அறிந்த‌வ‌ரால் அதை சொல்ல‌ முடிவ‌தில்லை. அதை சொல்ல‌ முடியும் என்று சொல்ப‌வ‌ர் அதை அறிய‌வில்லை என‌ அறிய‌லாம்.
கார‌ண‌ம் அந்நிலையை அடைந்த‌வ‌ர் திரும்ப‌ உட‌ல் உண‌ர்வுக்கு திரும்பும்போது முத‌லில் அடையும் திகைப்பே அதுதான். என்ன‌வென்று த‌ன‌க்குத்தானே கூட‌ எந்த‌ சொல்லாலும் அதை விளக்க‌ முடியாம‌ல், அந்த‌ உண‌ர்வை எண்ண‌ முடியாம‌ல் திகைப்பார். ஆக‌வே அறிந்த‌வ‌ர் இந்த‌ விஷ‌யத்தில் மாத்திர‌ம் மௌனியாகிறார். இப்ப‌டி மௌனியாகிற‌வரே முனிவ‌ர் என‌ப்ப‌டும் நிலையை அடைந்த‌வ‌ராவ‌ர்.

துரிய‌ம் என்றே சொல்லிற்கே நான்காவ‌து ப‌குதி என்றுதான் பெய‌ர். ஜாக்ர‌த் எனும் சொல்லான‌ விழிப்பு நிலைக்கு விள‌க்க‌மாக‌ அந்த‌ பெய‌ர் இருப்ப‌தை காணுங்க‌ள். ஜாக்ர‌ம் என்றால் விழிப்பு. ஸ்வ‌ப்ன‌ எனும் நிலை க‌ன‌வு நிலை. ஸ்வ‌ப் என்றால் தூக்க‌ம். அதிலிருந்து வ‌ந்த‌ சொல் ஸ்வ‌ப்ன‌ம். சுஷூப்தி என்ப‌து மூன்றாவ‌து சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'ந‌ன்றாக‌ முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க‌ நிலை ந‌ன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த‌ நிலையின் த‌ன்மையை வைத்தே இருக்கும் சொல்.
ஆனால் துரிய‌த்திற்கு என்ன‌ பொருள் என்றால் நான்காவ‌து நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க‌ முடியாததால், இத‌ன் பெய‌ரையே நான்காவ‌து நிலை என்று வைத்து விட்டார்க‌ள்.

மெய் ஞான‌ம்
ம‌ன‌ம் இருக்கும் வ‌ரை, சிற்ற‌றிவு இருக்கும் வ‌ரை ஏற்ப‌டும் ஞான‌ம் பொய்ஞான‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து. கார‌ணம் என்னவென்றால் ஆண‌வ‌ ம‌ல‌த்தினால் த‌ன்னுடைய‌ விருப்பு வெறுப்புக்கேற்ப‌ உண்மை திரித்து க‌ண்ட‌றிய‌ப்ப‌டுகிற‌து. ம‌ன‌ம் ம‌றைந்த‌ நிலையில் அறியாத‌ ஒன்றினால் அறிய‌ப்ப‌டுகிற‌ அந்த‌ ஞான‌ம் கொஞ்ச‌மும் பொய் க‌லப்பில்லாத‌து. ருத்ர‌ க்ர‌ந்தி என‌ப்படும் மூணாவ‌து முடிச்சை அறுத்து பிராண‌னும், குண்ட‌லினியும் உச்சியை நோக்கி போகும்போது ம‌னதுட‌ன் கூடிய‌ ஆண‌வ‌ம‌ல‌ம் ம‌றைந்து, சிவ‌னோடு கூடிய ஆத்ம‌ த‌ன்மையை பெறுகிறான். அப்போது அவ‌ன் அறியும் அறிவே மெய்ய‌றிவு. ஆணவமலம் மாத்திரம் மறைந்து, அதே சமயம் ஆத்ம தன்மையும் பெறாமல் வெளியில் நிற்கும் நிலையில் நின்ற‌வ‌ன் சுத்த‌போத‌ம் எனும் த‌ன்மையை பெறுவ‌தால் புத்த‌ன் என‌ப்ப‌டுகிறார்.

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
என்ன‌வென்று விள‌க்கத் தெரியாது அதே ச‌ம‌யம் முழு உண‌ர்வோடு இருந்த‌னுப‌விப்ப‌தால் அந்த‌ விள‌க்க‌ முடியாத‌ நிலையை அற்புத‌ம் என்கிறோம். க‌ண்ணால் ச‌ரிவ‌ர‌ காண‌முடியாது திகைக்க‌ கூடிய‌ ஒளி ப‌டைத்த‌த‌னால் சூரிய‌னுக்கும் அற்புத‌ன் என்ற‌ பெய‌ருண்டு. அற்புத‌ம் என்ப‌து ஒரு ந‌ல்ல‌ நிலையை குறிக்கும் சொல். ஏனென்றால், சொல்லாலும் பொருளாலும் விள‌க்க‌ முடியாத‌ இட‌ம், ம‌ன‌ம் க‌ட‌ந்த‌ இட‌மாக‌ இருப்ப‌தால் அந்த‌ இட‌த்தில் நேருவ‌து பெருந்துன்ப‌மாக‌ இருந்துவிட்டால் எனும் ஒரு ஐய‌ம் ஜீவ‌ உண‌ர்வில் எழும். அத‌னால் தான் 'ப‌ய‌ம் வேண்டாம், அவ்வுண‌ர்வு மிக‌ அருமையான‌ உண‌ர்வு' என்று உறுதி த‌ர‌ அற்புத‌ம் எனும் சொல்லை ஔவையார் கூறுகிறார்.


அந்த‌ துரிய‌த்தின் வாயிலோடு சிவ‌த்த‌ன்மை, ஜீவ‌த்த‌ன்மை முடிவ‌டைந்து விடும். அந்த‌ வாயிலில் மாறாது நிற்கும் த‌ன்மையினானாய் இறைவ‌ன் இருக்கிறார். அவ‌ர் ஒன்றிற்கும், இர‌ண்டிற்கும் இடையே நிற்கிறார். அதாவ‌து அவ‌ரை ஒன்றென‌வும் சொல்ல‌முடியாது. இர‌ண்டென‌வும் சொல்ல‌ முடியாது. மொத்த‌த்தில் ப‌குத்து பார்க்க‌ இய‌லாத‌வ‌ர். த‌ந்த‌ம் கொண்ட‌தை க‌ளிறு என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம். அங்கே அனைத்தையும் தாங்கும் இர‌ண்டு த‌ந்த‌மாகிய‌ ச‌க்தியுட‌ன், இறைவ‌ன் இருப்ப‌தை த‌ரிசிக்கிறான். எல்லை நில‌த்தில் நிற்கும் அவ்விறைவ‌னுக்கு ஈசுவ‌ர‌ன் என்று பெய‌ர். அவ‌னின் விருப்ப‌த்தால்தான் அனைத்தும் தோன்றி, ந‌ட‌ந்துக்கொண்டிருப்ப‌தை காண்கிறான். அதே ச‌ம‌யம் இச்செயல் விருப்ப‌த்தாலோ,ம‌ன‌தின் செயலாலோ ந‌ட‌க்க‌வில்லை என‌ காண்கிறான். அங்கு நினைப்ப‌வை யாவும் செயல் கூடுவதை நேர‌டியாக‌ க‌ண்ணுறுகிறான். ஆக‌வே க‌ற்ப‌க‌ம் என்று அந்த‌ நிலை சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

இப்போது நான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்டேன்!
>இதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாமா?

இம்மூன்று நிலைகளிலும் மாறி மாறிப் பயணம் செய்தாலும், இவை மூன்று அனுபவங்களுமே வெவ்வேறு என்பதை உணர்ந்தாலும், இவை மூன்றுமே இந்த 'ஜாக்ரத் அவஸ்தை' நிலைவழியே தான் உணரப்படுகிறது.

அதாவது சங்கர்குமாராகிய நான் விழித்து, கனவுகண்டு ஆழ்நிலை ஆழ்வதாக ஒன்றுகிறேன்.
இதுவல்லாமல், இந்த மூன்று நிலைகளிலும் பயணிக்கும் ஒன்றை உணர்ந்து அதில் ஆழ்வதே அந்த நான்காம் நிலை.

கொஞ்சமாவது சரியா ஐயா?< //

ச‌ங்க‌ர் குமார் ஐயா! இதை எப்ப‌டியும் சொல்ல‌வே முடியாது! எது அது இல்லை என்று மாத்திர‌மே சொல்ல‌ முடியும்! எது அது என்று சொல்ல‌ முடியாது! புல‌ன்க‌ளின் வ‌ழியே அறிந்ததைக் கொண்டு தீர்மான‌த்திற்கு வரும் ஜீவ அறிவின் துணையால் இதை புரிந்துக் கொள்ள‌ முய‌ற்சித்தால், புரிந்துக் கொண்ட‌து மிக‌ த‌வ‌றான‌ ஒன்றாகி விடும். இத‌ற்கு விப‌ர்ய‌யா என்று பெயர். அத‌வாது உள்ள‌த‌ற்கு மாறாக‌ ஒன்றை த‌வ‌றாக‌ புரிந்துக் கொள்ளுத‌ல். கார‌ண‌ம், இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரிய‌ம் ம‌ன‌ம், புத்தி, அஹ‌ங்கார‌த்தாலோ, புலன்களாலோ (இந்திரியங்கள்) புரிந்துக் கொள்ள‌ முடியாது. எப்ப‌டியென்றால் நிற‌ம் என்றால் என்ன‌ என்று ருசித்து உண‌ர‌ த‌லைப்ப‌டுவ‌தை போல‌! இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரியம், ம‌ன‌ம் ம‌றைந்த‌ போது, புத்தி ம‌றைந்த‌ போது, ஆண‌வ‌ம் ம‌றைந்த‌ போது, புல‌ன்க‌ள் ம‌றைந்த‌ போது அறியப்ப‌டுவ‌து! அதை முறையான‌ முய‌ற்சியினால் மாத்திர‌ம் அறிய‌ முடியும்; புரிந்துக் கொள்ள‌ முடியும். அதை ஒருபோதும் ம‌ன‌திருக்கும் போது ம‌ன‌தின் வ‌ழியாக‌ சொல்ல‌வே முடியாது. அத‌னால்தான் அதை எச்சில் ப‌டாத‌ நிலை என்ப‌ர். அப்ப‌டி ஒன்று இருக்கிற‌து என‌ அறிய‌வே பெரியோர் சொல்கின்ற‌ன‌ரே த‌விர‌ அதை யாரும் விளக்க‌ இய‌லாது. >>>
சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; <<< --------------------

திவாகர் எனும் என் நண்பர் கேட்டார்:
//சித்தம் பற்றிய விளக்கமாக எடுத்துகொள்கிறேன்
. //

இல்லை! திவாக‌ர் ஐயா! இது சித்த‌ம் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் அல்ல‌! சித்த‌ம் உறைந்து, செய‌லற்று போகும் போது ஏற்ப‌டும் நிலை! சித்த‌ விருத்தி நிரோத‌: என்று ப‌த‌ஞ்ச‌லி யோக‌ சூத்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நிலை. இங்கு சித்த‌ம் காண‌ப்ப‌டுவ‌தில்லை!

அஹ‌ங்கார‌ம், புத்தி, ம‌ன‌ம் இம்மூன்றும் எங்கெங்கே இருக்கிற‌து என்று அறிந்த‌ குரு இருப்பிட‌த்தை காட்டுவார். அவை மூன்றிற்கும் கடிவாள‌ம் அவ‌ர் இடுவார். இட்டு விட்டு அக்க‌டிவாள‌த்தை கொண்டு அம்மூன்றை எப்ப‌டி ந‌ம‌க்கேற்ப‌ ந‌ட‌த்துவ‌து என்று சொல்லித்த‌ருவார். அந்த‌ நிலையில்தான் இந்த‌ ம‌ன‌ம்,புத்தி,அஹ‌ங்கார‌ம் மூன்றும் எதிரி என்னும் நிலையிலிருந்து மாறி ந‌ண்ப‌ன் என்னும் நிலைக்கு வ‌ந்து நாம் அடைய‌ வேண்டிய‌தை அடைய‌ உத‌வும்.

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து துரிய‌த்திலிருந்து வ‌ரும் போது எப்ப‌டி ஒன்றொன்றாக‌ மீண்டும் எங்கிருந்தோ தோன்றுகின்ற‌ன என்ப‌தை குறித்த‌ பெரியோர் விள‌க்க‌த்தை சொல்ல‌ முய‌ன்றிருக்கிறேன்.

***************************************************************


அவ்ளோதாங்க! இது போதுண்டான்னு போயிட்டார் நான் வணங்கும் அந்தப் பெரியவர்! இது கிடைச்சதே பெருசு! இதைப் புரிய முற்பட்டு, இதைப் பயின்றாலே ஒரு தெளிவு கிடைக்கும் என அவர் உணர்த்தியதாக நான் புரிகிறேன்.

அனைவருக்கும் நலம் சூழ்க!
இதுவரை இதைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி! படித்த அனைவரும் இப்போதாவது வந்து ஏதாவது ஒரு கருத்து சொன்னால் மகிழ்வேன்!
************************************
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

முற்றிற்று!

Read more...

Friday, October 03, 2008

"விநாயகர் அகவல்" -- 15

"விநாயகர் அகவல்" -- 15
முந்தைய பதிவு

நான் வணங்கும் பெரியவர் சொன்னது!

"பெரியோர்களை மெய்யாக பணிந்து தெரிந்ததை சொல்கிறேன்.

சீதக் களபச் செந்தாமரை பூம்பாதச் சிலம்பு பலஇசை பாட...

சீதம் (seetham) எனும் சொல் பொதுவாக குளிர்ச்சியை குறிக்கும். சீதம் எனும் சொல் சந்தனத்தையும் குறிக்கும். களபம் என்றால் கலவை; வாசனையுடன் கூடிய கலவை எனும் பொருளைத் தரும். ஆக சந்தனகலவை பூசப்பெற்ற செந்தாமரை பூ போன்ற திருவடிகளில் உள்ள சிலம்பு பல இசையை பாட...என்னும் நேரடி பொருள் வருகிறது.

ஒரு யோகியரின் ஒவ்வொரு சொல்லும் பெரிய விளக்கத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும். காரணம் ஒரு சொல் இங்கே தவறினாலும், சங்கேதமாக இருக்கும் இவற்றின் பொருளை சிந்திக்கும் யோக‌ மாணவன் திசை தடுமாறி விடக்கூடும். ஆகவே அத்தனை சொற்களும் எந்த அர்த்தத்தை ஒரு சேர காண்பிக்கின்றவோ அதுவே சரியானதாக ஆகும்.

சீதா எனும் சொல்லிற்கு ஏர்க்காலினால் உழும் போது நிலத்தில் ஏற்படும் உழுத அடையாளம் எனும் பொருளுண்டு. அதில்தான் விதையை தூவுவார்கள் அல்லது நீர் பாய விடுவார்கள். அதனால்தான் சீதா என்று ஜனகரின் மகளுக்கு பெயர் வந்தது. நிலத்தில் உழுத போது அந்த பிளவில் அவள் கிடைத்ததால் அவளுக்கு அந்த பெயர்.

மூலாதாரம் பிருத்வி தத்துவமாகும். அதாவது நிலத்தின் தன்மை கொண்டது. நிலத்தின் தன்மையை உள்ளும்,புறமும் அறிவதற்கு, ஆள்வதற்கு உதவும் இடம். அதற்கு கீழே குல குண்டம் எனும் இடமே குண்டலினியின் இடம். பிராணனால் அங்கு உழுது கீறப்படும் போது அவள் விழித்தெழுகிறாள் அல்லது வெளிப்படுகிறாள். ஆக யோக மார்க்கத்தில் சீத எனும் சொல் வரும்போது சங்கேதமாக குலகுண்டம் சுட்டிக் காட்டப்படுகிறது. ஜனன உறுப்பிற்கும், குதத்திற்கும் இடையே சற்று உட்புறம் அமைந்திருப்பதாக பெரியோர் கண்டறிந்து சொல்கின்றனர்.ஆங்கிலத்தில் Perineum என்பார்கள்.

களபம் என்றால் கலவை! சரி என்ன கலக்கிறது? அந்த குலகுண்டத்தில் (perineum) குண்டலினியுடன் பிராணவாயு கலக்கிறது. இரண்டும் சேர்ந்து மேலே ஒன்றாக எழும்புவதால் இங்கு களபம் என்ற சொல் பயன்படுகிறது.

சரி! வேறு என்ன பொருள் இந்த சொற்களுக்கு வருகின்றன? அவையும் இதே பொருளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த சங்கேத குறிகளை கண்டறிந்தது சரியென்று ஆகும்.

சீத‌ம் என்றால் ச‌ந்த‌ன‌ம், க‌ள‌ப‌ம் என்றால் க‌ல‌வை! ச‌ந்த‌ன‌ம் என்ப‌து வாச‌னையை குறிக்கும். நாற்றம் (வாசனை) என்ப‌து பிருத்வி த‌த்துவ‌த்தின் த‌ன்மாத்திரையாகும். அதாவ‌து மூலாதார‌த்தின் வேலை. க‌ள‌ப‌ம் என்றால் வ‌ழ‌க்க‌ம் போல் க‌ல‌வை! ஆக‌ வாச‌னை என்றாலே வாயு இல்லாம‌ல் இல்லை! காற்று இல்லாம‌ல் ம‌ண‌த்தை உண‌ர‌முடியாது. ஆக‌ இங்கே ச‌ந்த‌னம் என்ப‌து மூலாதார‌த்தில் வ‌ந்த‌ வாயுவை குறிக்கும். எது க‌ல‌க்கிற‌து? குண்ட‌லினி! ஆக‌ இந்த‌ முறையிலும் சீத‌ க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள் வ‌ருகிற‌து.

சீத‌ம் என்றால் ம‌து என்று ஒரு பொருள் உண்டு! க‌ள‌ப‌ம் என்றால் யானைக்க‌ன்று என்று ஒரு பொருள் உண்டு! ம‌துவை போன்ற‌ ம‌தநீரால் ம‌த‌மான‌ யானைக்க‌ன்று என்று பொருள் வ‌ருகிற‌து. ச‌ஹ‌ஸார‌ர‌த்தில் முழு க‌ட‌வுளாய் விள‌ங்குப‌வ‌ர் இங்கே முத‌ற்க‌ட‌வுளாயும் இருக்கிறார்.

மேலே இருப்ப‌வ‌ர் ம‌ஹாக‌ண‌பதி என்றால் இவ‌ர் பால‌க‌ண‌பதி. எல்லா ஆதார‌ தெய்வ‌ங்க‌ளுக்கும் மிக‌ இளைய‌ தெய்வ‌மாய் இருப்ப‌தால் பால‌விநாய‌க‌ன் ஆகிறார். மேலே இருக்கும் ம‌ஹாகணப‌தி முழுமுத‌ற்க‌ட‌வுளின் சிர‌சு என்றால் மூலாதார‌ க‌ண‌பதி பாத‌ம் ஆகிறார். ஆகவே சீத‌க் க‌ள‌ப‌ப் பூம்பாத‌ம் இங்கேயும் பொருந்துகிற‌து. இங்கே ம‌து போன்ற‌ ம‌த‌நீராக‌ ஆவ‌து கீழே வ‌ந்த‌ வாயுவே! குண்டலினி மூலாதார‌த்தை தொடும்போது ஒரு விளைவு ஏற்பட்டு அங்கு குண்ட‌லினியே விநாய‌க‌ராய் காட்சி அளிக்கிறாள். என‌வே இங்கும் சீத‌க்க‌ள‌ப‌ என்றால் வாயுவுட‌ன் சேர்ந்த‌ குண்ட‌லினி எனும் பொருள் வ‌ந்துவிடுகிற‌து.


சீத‌ம் என்றால் மேக‌ம் என்றும் ஒரு பொருளுண்டு. குளிர்ச்சியினால் அத‌ற்கும் அந்த‌ பெய‌ருண்டு. மேக‌ம் என்ப‌து வாயுநிலையை தொட்ட‌ நீரே! ஆக‌ இங்கும் மேக‌ம் வாயுவை குறிக்கும் சொல்லாக‌ யோக‌ம் சொல்லும். அத‌னால்தான் ப‌ல‌ யோக‌ நூல்க‌ளில் ம‌ஹாவாயுவை மேக‌ம் என்று குறியீடாக‌ சொல்லும் வ‌ழ‌க்க‌ம் உண்டு. பின் க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள்! யானைக்க‌ன்று என்று வைத்துக் கொண்டாலும், கலவை என்று வைத்துக்கொண்டாலும் குண்ட‌லினியுட‌ன் சேருவ‌தையே குறிக்கும்.
சீத‌ம் என்றால் நீர்!
வாயுவே கீழே இற‌ங்கும் போது அட‌ர்த்தியினால் நீர்த‌ன்மை பெறுகிற‌து. என‌வேதான் வாயு மூலாதார‌த்தை நோக்கி இற‌ங்குகிற‌து. அங்கே மூல‌க்க‌ன‌லால்தான் மீண்டும் சுத்த‌ வாயுவாக‌ ஆகிற‌து. திரும்ப‌ க‌ள‌ப‌த்துட‌ன் சேர்த்தால் அதே பொருள் வ‌ரும்.

சீத‌ம் என்றால் பிர‌திப்ப‌லிக்க‌க்கூடிய‌ என்ற‌ பொருளும் உண்டு. நீரை சீத‌ம் என்று சொன்ன‌தால்தான் இந்த‌ பொருள் வ‌ந்த‌து என்றாலும். உண்மையில் ம‌ஹாவாயு நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப‌லிப்ப‌தால் அத‌னை அந்த‌ பெய‌ரில் சில‌ யோக‌ நூல்க‌ளில் சொல்லுவ‌துண்டு!
நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப்ப‌லிப்ப‌து என்றால்?
சூரிய‌னை நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ போது க‌ண்ணாடியில் அத‌னை பிர‌திப‌லிக்க‌ செய்து காண்ப‌தை போல‌.
ம‌ஹாவாயு ஆத்ம‌ த‌ன்மையை பிர‌திப‌லித்து காட்டும் த‌ன்மை கொண்ட‌து. என‌வே அதை க‌ண்ணாடி என்றும் சொல்வ‌ர். ம‌ஹாவாயு ச‌ரி வ‌ர‌ ஏறாத‌ யோகிக‌ள் என‌க்கு இன்னும் க‌ண்ணாடி போட‌வில்லைய‌ப்பா என்று ப‌ரிபாஷையில் சொல்வ‌தை கேட்டிருக்கிறேன்.

செந்தாம‌ரை பூம்பாத‌ சில‌ம்பு ப‌ல‌ இசை பாட‌

செந்தாம‌ரை போல‌ சிவ‌ந்த‌ நிற‌த்தில் இருப்ப‌து மூலாதார‌ம் மாத்திர‌மே! பாத‌ம் என்ப‌தை கால் என்றும் சொல்வ‌ர். கால் என்றால் காற்று! பாத‌ம் என்றாலே யோக‌ முறையில் காற்றுதான். மூல ஆதாரமாகிய‌ பாத‌த்தில் விழுவ‌து காற்று. அத‌ன்பிற‌கு அது ம‌ஹாவாயுவாக‌ ஆகிவிடும். சில‌ம்புத‌லால் சில‌ம்பு என்ற‌ பெய‌ர் அத‌ற்கு வ‌ந்த‌து. இங்கே வாயுவான‌து சுழுமுனை வ‌ழியே நுழைய‌ ஆர‌ம்பித்த‌தில் இருந்து செவியில் சின்சின் எனும் ஒரு ஒலி எழும்ப‌ ஆர‌ம்பிக்கிற‌து. சுவ‌ற்றுகோழி க‌த்துவ‌தை போல‌. சில் வ‌ண்டு ச‌த்த‌ம் எழுப்புவ‌தை போல‌. சில்வ‌ண்டின் ச‌த்த‌த்தை கொலுசு ச‌த்த‌ம் என்றெண்ணி ப‌யந்த‌வ‌ர் ப‌ல‌ருண்டு அல்ல‌வா?

மூலாதார‌த்தில் வாயு நுழைந்த‌ அக்க‌ண‌ம் அந்த‌ கொலுசு ச‌த்த‌ம் போன்ற‌ சின்சின் எனும் ஒலி கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. அதன் பின் வாயுவின் நகர்தலால் ஒவ்வொரு இசை கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. சின் எனும் ஒலி, ம‌த்த‌ள‌ம், புல்லாங்குழ‌ல், க‌ண்டா மணி, வ‌ண்டு,வீணை, ச‌ங்கு, அலையோசை, இடி போன்ற‌ ச‌த்த‌ங்க‌ளும் கேட்கின்ற‌ன‌. இதையே ப‌ல‌ இசை பாட‌ என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

பூ என்ற‌ சொல் பூவாகிய‌ ஆதார‌த்தையும் குறிக்கும்; பூ ஆகிய‌ பூமி எனும் மூலாதார‌த்தையும் குறிக்கும்.

இப்ப‌டி சிந்தித்து அறியும் மாணாக்க‌ன் த‌ன் அனுப‌வ‌த்தின் மூல‌மாக இவை உண்மை என்னும் ஊர்ஜித‌ப்ப‌டுத்திக் கொள்கிறான்.

இறைவன் அருளால் தவறின்றி சொல்ல முயல்கிறேன். வழக்கம் போல் பெரியோர்களும், நண்பர்களும் காணும் தவறுகளை பொறுத்து விடுங்கள்."


மேலே சொன்னது அனைத்தும் நான் வணங்கும் பெரியவர் சொன்னவை!

**************************

[தொடரும்]

Read more...

Wednesday, October 01, 2008

"விநாயகர் அகவல்" -- 14

"விநாயகர் அகவல்" -- 14



முந்தைய பதிவு

பல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.

இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி அன்னைக்கு ஒரு ஆலயம் எழுப்பி, மிகச் சிறந்த இறைப்பணி செய்துவரும் சைதன்யானந்தா என்னும் ஒரு பெரியவரின் அருளுரையில் இதற்கான பொருள் விளக்கம் கேட்க நேர்ந்தது..... முருகனருளால்.

இதன் ஆர்வமாய் மேலும் இதைப் படிக்கத் தொடங்க எண்ணித் தேடியபோது மதுரைத் திட்டத்தின் கீழ் திரு ரஜபதி ஐயா எழுதிய உரைவிளக்கம் கிடைத்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் பிரமிப்பூட்டின.

நான் வணங்கும் ஒரு பெரியவரின் ஆசியுடன், அவர் தந்த சில விளக்கங்களுடனும், இதற்கு எனது பாணியில் ஒரு எளிய விளக்கம் கொடுக்க எண்ணினேன்.

அதன் விளைவுதான் சென்ற 13 பதிவுகளாய் வந்த விநாயகர் அகவல் உரை விளக்கம்!

இந்த மூன்று பெரியவர்களுக்கும் எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

நான் சொன்னது மிக, மிக ஆரம்பநிலை விளக்கம் மட்டுமே!

இதனைப் படித்து, நன்கு உள்வாங்கிக் கொண்டு, உள்ளில் ஏதேனும் உந்தல் புறப்பட்டால், ஒரு குருவைத் தர விநாயகனை வேண்டுங்கள்!

அவர் காட்டித் தருவார்! வளம் தருவார்!

மதுரைத் திட்டச் சுட்டி இதோ!

விநாயகர் அகவல் இசைவடிவில் இங்கே!

இனி நான் வணங்கும் பெரியவர் எழுதிய முதல் ஓரிரு வரிகளுக்கான சில யோக விளக்கங்களைக் காணலாம். இது சற்று ஆழ்நிலை விளக்கமாக இருக்கும். பிடிப்பவர்க்குப் பிடிக்கும்! புரிபவர்க்குப் புரியும்! நன்றி.

"சங்கர் ஐயா கேட்டுக் கொண்டதற்கேற்ப எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

விநாயகர் அகவல் முழுக்கவே யோக நெறியின்படி எழுதப்பட்ட நூல்! யோகத்தில் முழுமைப்பெற்றவரது துணையும், அவர் காட்டும் தெளிவும் இல்லாமல் இருந்தால் மிக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு விடலாம்! கொஞ்சம் ஆபத்து தான்!


யோக நெறியில் உள்ளது என்ன என்ற ஒரு மேலெழுந்தவாரியான அறிவை வேண்டுமானால் இதனால் பெறலாம். இந்த யோகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதற்கு இந்த [vsk இன்] விளக்கம் உபயோகமாகும். தன் பணிகளுக்கு இடையில் நேரம் கிடைத்து இப்படி ஒன்றை [vsk] எழுதுவது பெரிய விஷயம்தான். பணிவுடன் வணங்குகிறேன்.

யோகத்தில் குறியீடுகள்தான் முக்கியம். ஏன்? வெளிப்படையாக சொன்னால் என்ன என்று தோன்றலாம். யோகத்தில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்.

1.இந்த பாதையை உள்ளப்படிக்கு உணர்ந்தவரது வழிக்காட்டல்;
2.சாதகன் எதையும் ஆழ்ந்து சிந்தித்து தானாக அறியும் ஞானம்.


இந்த பாதையை உள்ளப்படிக்கு முழுதும் சென்று அறிந்தவர் இதில் உள்ள ஆபத்துக்களையும், இடையூறுகளையும், நுணுக்கங்களையும் அறிந்திருப்பார். அவருக்கு அவர் குரு உதவி இருப்பார். ஆதியில் இறைவனே நேரடியாக குருவாக வந்து வழிக்காட்டியதாக சான்றோர் சொல்லால் அறிகிறோம். நானும் அப்படியே நேரடியாக இறைவனின் வழிக்காட்டுதலையே பெற்றுக் கொள்கிறேன் என்பவர் உண்மையில் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் முயன்றால் நிச்சயம் இப்போதுக் கிட்டும் என்று பெரியோர் ஆணித்தரமாக சொல்லுகின்றனர்.

சாத‌க‌ர் என‌ப்ப‌டும் யோக‌ ப‌யிற்சியாள‌ருக்கு குரு சில‌ அடிப்ப‌டைக‌ளை மாத்திர‌ம் சொல்லித்த‌ந்து எப்ப‌டி அறிய‌ வேண்டும் என்று க‌ற்றுத் த‌ருவார்! அதை வைத்துக் கொண்டு சீட‌ரே ஆராய்ந்து அறிய‌ வேண்டும். ப‌க‌வ‌த்கீதை, சித்த‌ர் பாட‌ல்க‌ள், உப‌நிஷ‌த் எல்லாமே இப்ப‌டி தான் அறிய‌ வேண்டும். அத்த‌னையும் இப்ப‌டி தான் என்று யோகிக‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். என‌வே குறியீடாய் சொல்வ‌தை க‌ண்ட‌றியும் திற‌னை ப‌யிற்சி மூல‌மாக‌வும், வ‌ழிக்காட்டுத‌ல் மூல‌மாக‌வும் சீட‌ன் அறிகிறான். திரும்ப‌ என்ன‌ வ‌ழிக்காட்டுத‌ல் என்று சொல்கிறேனே என்றால், ப‌யிலும் சீட‌ன் யோசித்து அறிந்த‌தை குருவிட‌ம் வ‌ந்து சொல்லும் போது குரு அதை ச‌ரி என்றோ த‌வ‌று என்றோ சொல்லுவார். த‌வ‌றாய் இருந்தால் மீண்டும் சீட‌ன் தியான‌த்தில் சிந்தித்து ஆராய்வான்.

உதார‌ண‌ம் தைத்திரீய‌ உப‌நிஷ‌த்தில் வ‌ருண‌ண் பிருகுவுக்கு சொல்வ‌தை காண‌லாம்.
"எதிலிருந்து எல்லாம் தோன்றிய‌தோ, எதனால் எல்லாம் இருக்கிற‌தோ, எத‌னால் எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டைகிற‌தோ அது எதுவென‌ அறிவாய்!" என்பார் வ‌ருண‌ன்.
பிருகு வெகுகால‌ம் தியானித்து அறிந்து வ‌ந்து "அன்ன‌ம்" என்பார்.
"ந‌ன்று! இன்னும் போய் ஆராய்வாய்!" என்பார் வ‌ருண‌ன்.
திரும்ப‌ ஆராய்ந்து நேர‌டியாக‌ அறிந்து வ‌ந்து "பிராண‌ன்" என்பார் பிருகு.
"ந‌ன்று! இன்னும் சிந்தி!" என்பார் வ‌ருண‌ன்.

இப்ப‌டியே போகும்!
ஆக‌ சீட‌னை சிந்திக்க‌ வைத்து, அதே ச‌ம‌ய‌ம் த‌வ‌றாக‌ போகும் போது மீண்டும் வழிக்குத் திருப்புவார் குரு. அப்படி சீட‌ன் சிந்திக்க‌வே யோக‌ முறையில் எல்லாம் குறியீடுக‌ளாக‌ இருக்கும். இத‌னால் அறிய வேண்டிய தாகத்தில் இருக்கும் ஒருவன், க‌ண்டிப்பாக‌ ஒரு முழுமைய‌டைந்த‌வ‌ரை தேடி அடைவான். அடுத்து அவ‌ன் சிந்திக்க‌ வாட்ட‌மாக‌, உப‌யோக‌மாக‌ இந்த‌ குறியீடுக‌ள் இருக்கும். இத‌னால் மொழியை க‌ட‌ந்து மொழியின் உள்ளே ம‌றைந்து இருக்கும் உண‌ர்வினை அறியும் வ‌ல்ல‌மையை பெறுகிறான்.

ஒரே ம‌ட‌லில் எல்லாம் இருந்தால் ப‌டிப்ப‌வ‌ருக்கு க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். அடுத்த‌ மட‌லில் விநாய‌க‌ர் அக‌வலின் முத‌ல் வ‌ரியில் இருக்கும் குறீயீடு (allegory) எதை குறிக்கிற‌தென்று ஒரு மாதிரிக்கு (sample) தெரிவிக்க முயலுகிறேன். அதுவும் ஓரளவிற்கு எனக்கு புரிய வைக்கப்பட்டதை, பெரியோர் அங்கீகரித்ததையே எழுத முயல்வேன்.
*********************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP