Wednesday, July 04, 2007

"கலங்க வைத்த காவல்காரர்"


"கலங்க வைத்த காவல்காரர்"

இன்று ஜூலை 4 - ம் தேதி

அமெரிக்க சுதந்திர தினம்.

காலை 4 மணிக்கே எழுந்து, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் 75 வயது அக்காவையும், 78 வயது அத்தானையும் டெக்ஸாஸ் அனுப்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.

என் மனைவியையும் உடனழைத்துச் சேன்றேன், கடைசி நேர முடிவாக!

விமான நிலையத்தில் வழக்கமான கெடுபிடிகள்.

காரை நிறுத்தியதும், கீழிறங்கி, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "ஒரு 5 நிமிடங்கள் இந்த வயதான தம்பதியரை உள்ளழைத்துச் சென்று, விட்டு வரலாமா?" என் பணிவுடன் கேட்டேன்.

அப்போது அவர் ஒரு ஆளில்லா காரின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து, சற்று கடுப்பாக, "இங்கு நிறுத்தக் கூடாது. காரை எடுங்க!" என்றார்.

நானும் சற்று ஏளனமாக அந்த ஆளில்லாக் காரைக் காட்டினேன்.

"ஆம்! அதற்கு ஒரு டிக்கட் கொடுக்கப் போகிறேன். உனக்கும் வேண்டுமா?" என்றார் அவர்!

எனக்குச் சற்று கோபம் வந்தது.

"நிறுத்தக்கூடாது என்றதும் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்து 'டிக்கட் தரட்டுமா?' எனக் கேட்பது சற்று அதிகமாய் இருக்கு! இது முறையல்ல! எனச் சொன்னேன்.

அதற்கு அவரும் கோபமாக, "இங்கு நின்றுகொண்டு வாதம் செய்தால் அதுதான் கிடைக்கும்" எனச் சொல்ல, நான் அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, என் மனைவியை இறங்கச் சொல்லி என் உறவினருடன் அனுப்பி, அவர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, காரை விருட்டென ஓட்டி ஒரு வலம் வந்தேன், விமானநிலையத்தை.

இன்னமும் என் மனைவி வெளியில் வரவில்லை.

அதே போலீஸ்காரர் தன் டார்ச் லைட்டைக் காட்டி என்னை புறப்படச் சொல்ல, என் மனதில் வேகம் அதிகரித்தது.

இந்த முறை ஒரு பெரிய வட்டமடித்து வந்தேன்!

அப்போது மனதில் ஒரு எண்ணம்.

அவர் தன் கடமையைச் செய்கிறார்.

நான் தான் அவரிடம் முறையின்றி நடந்திருக்கிறேன்.

இப்போது கோபம் கூட படுகிறேன்.

திரும்ப அங்கு செல்லும் போது, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு எண்ணியவாறு, மீண்டும் வெளிவாயிலுக்கு வந்தேன்.

இன்னமும் என் மனைவி வரவில்லை.

சரி, அவரிடம் பேச்சு கேட்க வேண்டாம் என நினைத்து, காரைக் கிளப்ப ஆரம்பிக்கையில், என் பக்க கண்ணாடியை யாரோ தட்டுவதை உணர்ந்து, பார்க்க,.... மீண்டும் அதே காவல்காரர்!

என் மனதில் ஒரு உதறல்!

சரி, என்னைப் புள்ளி வைத்துவிட்டார், ஏதோ ஒரு டிக்கெட் நிச்சயம்! என நினைத்து, சற்று பயத்துடனேயே கண்ணாடியை இறக்கினேன்.

"நான் சற்று அதிகக் கடுமையாகப் பேசிவிட்டேன். நீங்க நல்லவராயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஒரு தவறான கார் போதும், பிரச்சினையைக் கிளப்ப. இருந்தாலும் நான் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது.என்னை மன்னிக்கவும்." என்றார் அந்தக் காவல்காரர்.

எனக்கு வார்த்தையே வரவில்லை.

நாத்தழுதழுக்க, "நான் செய்ததுதான் தவறென உங்களீடம் நான் மன்னிப்பு கேட்க இருந்தேன். உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்களும் என்னை மன்னிக்கவும்." என்றேன்.

"இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும்" எனச் சொல்லி அகன்றார் அவர்.

என் மனதில் பாரம்.

அவரது பண்பையும், அதை அவருக்கு அளித்த இந்த நாட்டின் மாண்பையும் எண்ணி வியந்தவாறே, மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.

இப்போது என் மனைவி காத்திருந்தார்.

காரில் அவர் ஏறியதும் இன்னொரு ஆச்சரியம்.

எங்கிருந்தோ அந்தக் காவல்காரர் அங்கு தோன்றி, வருகின்ற கார்களை நிறுத்தி, என் காரை வெளியே செல்ல கை காட்டி, சிரித்த வண்ணம் அனுப்பி வைத்தார்!

பெருமையுடனும், பெருமிதத்துடனும் நான் என் மனைவியிடம் நடந்த நிகழ்வைச் சொல்லியபடியே வீடு திரும்பினேன்.

அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!

உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக!


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP