Tuesday, July 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 20

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 20


19.

'இப்பிடில்லாம் முருகனைப் பத்திப் பேசினதும், 'டக்'குன்னு ஒரு நெனைப்பு அருணகிரியாரு மனசுல வந்து குதிக்குது.

'இன்னாத்துக்காவ இத்தினி நாளா நாம இந்த முருகனை நெனைக்காமலே போயிட்டோம்னு!'  அப்பத்தான் அவுருக்கு ஒ[உ]றைக்குது,... இந்தத் தும்பத்துக்கெல்லாம் எது ஆதாரம்னு. அதைப் பத்தி இந்தப் பாட்டுசொல்லுது. எங்கே பாட்டைப் படி' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார். புத்தகத்தைப் பிரித்துப் பாட்டைப் படித்தேன்!

வடிவுந் தனமும் மனமுங் குணமும்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடியென்றொருபா விவெளிப் படினே

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

எனப் பதம் பிரித்துச் சொன்னவன், 'இந்தப் பாட்டை இப்பிடிப் படிச்சீன்னா, இன்னும் நல்லாப் புரியும் எனச் சொல்லிக் காட்டினான்.

மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகிய ஆ
அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே.


'மிடி என்றொரு பாவி வெளிப்படினே, வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகிய ஆ'

இன்னா சொல்றாருன்னு பாப்பம்! 'மிடி'ன்னா வறுமைன்னு அர்த்தம். 'ஏளை[ழை]மைன்னு அன்னைக்கு ஒன்னோட தோஸ்த்து சிவசிவா சொன்னாரே அதான் மிடி.

அது மட்டும் வந்திருச்சின்னா, இன்னால்லாம் ஆவும்னு ஒரு பட்டியலே போடுறாரு. அதுல இன்ன விசேசம்னா, அதை அவுரு சொல்லியிருக்கற வரிசைதான்!


மொதல்ல போறது ஒன்னோட அள[ழ]கு! ஒன்னோட வடிவு கொறைய ஆரம்பிக்கும். ஒரு பவுடர் வங்கக்கூட காசு இல்லைன்னா, அப்பொறமா
இன்னாத்த அவன் சிங்காரிச்சுக்கறது? அளகா காமிச்சுக்கறது.?

வறுமை வந்தாலே கையுல இருந்த பணமெல்லாம் போயிருச்சுன்னுதானே அர்த்தம்! அதான் அடுத்ததா 'தனம்'னு சொல்றாரு.

அளகும், பணமும் பூடுச்சுன்னா, கூடவே அவனோட நல்ல மனசும் காணாமப் பூடும்! நல்ல மனசு இல்லாதப்ப, இன்னா பண்றதுன்னே தெரியாம புத்தி தடுமாறும். அதான் 'மனம்'னு சொல்லிருக்காரு.

நல்ல மனசு இல்லைன்னா, நல்ல 'கொணமும்' இல்லாமப் போயிறும்! சோத்துக்கே சிங்கி அடிக்கறப்ப, தாராளமா அள்ளிக் குடுக்கறதுக்கு எங்கே போறது? ஆரைப் பாத்தாலும் ஒரு வெறுப்பு, எத்த நெனைச்சாலும் ஒரு கோவம், அவமானம், ஆத்தரம்னு வரிசையா எல்லாம் வந்து அவனோட நல்ல கொணத்தையே சீரளி[ழி]ச்சிரும்.

இத்தினியும் ஆச்சுன்னா, குடும்பம் செதறிப் போவும். அதான் 'குடி'ன்னு சொல்லிருக்கற வார்த்தை.

சரி, இத்தினிக்குப்புறமும் நீ ஏதோ கொஞ்சம் மானமா இருக்கலாம்னு முயற்சி பண்ணினாக்கூட, ஒன்னோட குடும்பத்துல க்கீற சின்னஞ்சிறுசுங்க, அதான் ஒன்னோட கொ[கு]லம், சும்மா இருக்குமா?

அதுங்க பசி தாங்கம, எங்கியாச்சும் போயி, திருடியோ, இல்லைன்னா வேற வளி[ழி[யிலியோ, தப்புக் காரியங்க பண்ணி ஒன்னோட கொ[கு]லப் பெருமையையே அளி[ழி]ச்சிரும்.

எட்டாவது பாட்டுல சொன்ன அதே'ஆ'வை இங்க வைச்சு இந்த வரியை முடிக்கறாரு. 'ஆ'ன்னா 'இந்த வகை என்ன'ன்னு பொருளு.

இந்த வறுமைன்ற ஒண்னு வந்ததால, இன்னால்லாம் நடக்குது பாருன்னு சொல்றதுதான் அந்த 'ஆ'

வடிவு, தனம், மனம், குணம், குடி குலம்னு எல்லாம் ஒர்த்தனை விட்டுப் போயிறுதே! இது இன்னாப்பா இதுன்னு கேக்கறாரு.


ஆரை?
வேற ஆரை? அல்லாம் அந்த கந்தன்ட்டதான்!


போன பாட்டுல அவரோட நைனாவைப் பத்திச் சொல்றப்ப சொன்ன அதே பெருமையை இந்தப் பாட்டுல முருகனுக்கும் சொல்லி ஆரம்பிக்கறாரு.


'அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே'


ரெண்டு தபா 'அரசே'ன்னு சொல்லலைன்னாலும், இப்பிடிப் படிச்சியானா, அர்த்தம் நல்லாப் புரியும்.

ஒன்னோட நைனாவைப் போலவே நீயும் 'ஆதியும் அந்தமும் இல்லாதவன்'னு கொண்டாடறாரு.

'அயில்'னா கூர்ப்பா க்கீறது.

கூரான வேலைக் கையுல வைச்சிக்கினு க்கீற என்னோட செல்ல ராசாவே'ன்னு பாடறாரு.

இதாம்ப்பா காரணம் நான் ஒன்னிய இத்தினி நாளா நெனைக்காததுக்குன்னு சொல்லாம சொல்லி முடிக்கறாரு.


இதுவரைக்கும் தனக்குக் கெடைச்ச அநுபூதியப் பத்திச் சொன்னவரு, இப்ப ஏன் இப்பிடி ஒரு பாட்டுப் படிக்கறாருன்னு கேக்கணுமேன்னு தோணுமே? வேற ஒரு ரூட்டுல இப்பப் போறாருன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.மிச்சப் பாட்டையெல்லாம் பாக்கறப்ப புரியும்' எனச் சிரித்தான் மயிலை மன்னார்.
*********************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP