Tuesday, March 15, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

கந்தரநுபூதி - 10
9.
'இன்னைக்குப் பாக்கப்போற பாட்டு, நான் முந்தியே சொன்ன நாலு பாட்டுல கடைசிப் பாட்டு. இந்த மனசு இருக்கே... அது ரொம்ப ரொம்பப் பொல்லாதுது. அது பண்ற அளும்பாலத்தான் ஒரு வளியுல நெலைச்சு நின்னு, மனசொப்பிப் போவ முடியாம தடுக்குது. அதைத்தான் இந்த நாலு பாட்டுலியும் ஒண்ணொண்ணா சொல்லிக்கினே வராரு அருணகிரியாரு.

நீ எம்மனசு மேல ஒங்காலை வைச்சியானா அல்லா வெனையும் தீந்துரும்னு மொதப் பாட்டுல கொஞ்சலாக் கெஞ்சினாரு.
அடுத்த பாட்டுல, இன்னும் ஒரு படி மேல போயி, முருகனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதுனால அவன் வந்து காலை வைக்கறதுக்காவ 'வெயிட்' பண்ணாம, நீயே போயி அவனோட ரெண்டு காலையும் கெட்டியாப் புடிச்சுக்கோன்னாரு.
மூணாவது பாட்டுல, இந்த வம்புப் பேச்சையெல்லாம் வுட்டுட்டு, பேசாமக் கம்முன்னு கெடன்னு கந்தன் சொன்னதால, என்னோட ஊரு, என்னோட வூடு, என்னோட சொந்தக்காரங்கன்ற அல்லாமே அத்துப் பூட்டதாச் சொல்லி, அத்தச் சொன்னது ஆருன்னும் சொன்னாரு.
இப்ப இதுல, இன்னோரு விசயத்தப் பத்திச் சொல்றாரு. ம்ம்ம்... பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.
நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.


மட்டூர் குழன்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே.


நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.

மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.


ஊரு, வூடு, சொந்தபந்தம்னு அல்லாத்தியும் வுட்டுட்டாக்கூட, இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் தீரலை அருணையாருக்கு! இந்த விசயத்துல அருணகிரியாரு ஒரு காலத்துல 'ஆசைகிரியாரா' இருந்தாரு. அதான் பொண்ணாசை!
'மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்'னு கதர்றாரு.

மட்டு ஊருதாம் குழல் மேல!
மட்டுன்னா இன்னா? தேன், வாசனைன்னு ரெண்டு விதமாவும் சொல்லலாம். ஆனா, தல நெறைய பூவை வைச்சுக்கினு, இருட்டற நேரத்துல ரோட்டாரமா நின்னுக்கினு, சொகம் குடுக்கறதுக்காவக் காத்துக்கினு நிப்பாங்களே, அவங்களைத்தான் சொல்றாரு இந்த வரியுல.
அவங்க வைச்சுக்கினு க்கீற பூவுலேர்ந்து தேனா வடியுதாம் . அதுனால, அவங்க தலைமயிர்லேர்ந்து அப்பிடி ஒரு வாசனை கெளம்பிக் கெறங்கடிக்குதாம். அந்த வாசனை இவரை இளு[ழு]க்க, இவுரும் அவங்க பின்னாடியே போயிடுறாராம். அவங்க விரிக்கற ஆசை வலையுல இவுரு மாட்டிக்கினு அல்லாடுறாராம். எப்பிடி? ஒரு படகு கணக்கா! இப்பிடியும், அப்பிடியுமா துடுப்பு இல்லாம தண்ணியுல தத்தளிக்கற ஒரு படகு மாரி, இவுரு மனசும் ஆடுதாம். பரிசுன்னா, படகுன்னு அர்த்தம். இந்த சங்கடத்த நான் என்னிக்கு ஒளி[ழி]க்கறதுன்னு அளுவுறாரு. அல்லாம் இந்தப் பாளும் மனசு பண்ற கூத்து! பொண்ணுங்களப் பத்தித் தப்பாச் சொல்லலை இந்தப் பாட்டுல அவுரு! ஒன்னியத்தான்... ஒம் மனசத்தான் குத்தம் சொல்றாரு. நல்லாப் புரிஞ்சுக்க!


அப்பத்தான், இவுருக்கு 'சட்'டுன்னு நெனைப்புக்கு வருது!
சூரனோட சண்டை போடப் போறப்ப, வளியுல ஒரு மாய மலை நின்னுக்கினு அல்லாரியும் உள்ளே இளுத்துக்கினு போச்சுன்னு சொன்னேன்ல! அப்ப முருகன் இன்னா பண்ணினாரு. தன்னோட வேலை எடுத்து வுட்டாரு. அது கரீட்டா எங்க எந்தெந்த இடத்துல ஓட்டைங்க இருக்குன்னு பார்த்து, அந்த மலையையே தூள் தூளாக்கிருச்சு.

'அட! இன்னா 'ஐஸாலக்கடி' வேலை பண்ணினேப்பா ! பொல்லாத பய நீ! ஒரு செகண்டுல கவலையையெல்லாம் போக்கடிச்சு, அல்லாரோட பயத்தியும் தீத்துக்கட்டின வீரன் நீ! ஒன்னால என்னோட இந்த சின்னூண்டு கவலையையா போக்கடிக்க முடியாது?'ன்னு 'நைஸு' பண்றாரு!

'சாமி! அந்தக் கடைசி வரியுல வர்ற சமஸ்கிருதத்துக்கு கொஞ்சம் வெளக்கம் குடுங்க!' என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்துச் சொன்னான் மயிலை மன்னார்.


"தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே."


'சைலம்னா மலை, கிரவுஞ்ச மலை. நிட்டூரன்னா பொல்லாத பயன்னு அர்த்தம். செல்லமாக் கொஞ்சறார் அருணகிரியார்! ஆகுலம்னா கவலை; நிராகுலன்னா கவலையே இல்லாதவன்னு அர்த்தம். நிர்ப்பயன்னா பயமே இல்லாம யுத்தம் பண்றவன்னு சொல்லுவா!'

வளைவும், நெளிவுமா இருக்கற அந்த மலைக்குள்ள நுழைஞ்சு, அதைச் சல்லடை சல்லடையாப் பொடிப்பொடியாக்கின வேலைக் கையிலேர்ந்து துளிக்கூட பயமில்லாம எறிஞ்சு நிர்மூலம் பண்ணினவனே, அப்பனே முருகா!ன்னு ஸ்தோத்ரம் பண்றார் என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'இந்த நாலு பாட்டுலியும் சொன்னதக் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, இந்த மனசுன்ற ஒண்ணப் பத்திக் கவலியே படத் தாவல்ல! சரி, அடுத்த வாரம் பாப்பம். நான் வரேன் சாமி! ' எனச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான் மயிலை மன்னார்!
'எண்ட தெய்வமே! முருகா!' என கோபுரத்தைப் பார்த்து வணங்கினான் நாயர்.
*************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP