Tuesday, January 09, 2007

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இனிய நாதம் ஒலிக்கும் வீணையும், யாழும்
ஏந்தி இன்னிசைக்கும் கூட்டம் ஒரு புறம்;

வேத மந்திரங்களுடன் பல்வேறு
துதிப்பாடல்களை ஓதிடும் கூட்டம் ஒரு புறம்;

நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை
கையில் ஏந்தி நின்றிடும் கூட்டம் ஒரு புறம்;

அன்பு மிகக்கொண்டு அழுது கண்ணீர்விடுபவரும்
மெய்மறந்து தள்ளாடுபவரும் கூட்டம் ஒரு புறம்;

இருகை கூப்பி தலை மேல் உயர்த்தி அரகரவென
அஞ்சலி செய்திடும் கூட்டம் ஒரு புறம்;

அருள்மிகு திருப்பெருந்துறையினில்
அழகுற வீற்றிருக்கும் சிவபெருமானே!

இவ்வண்ணம் பெருமை வாய்ந்த அடியவர்
உன் திருச்சந்நிதி முன் கூடியுள்ளார்!

தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!

பள்ளி எழுந்தருள்வாயே!

['தகுதி சிறிதும் இலாத நான்' எனச் சொல்லி, அதே கையோடு, இத்தனை தகுதி வாய்ந்தவரையும் புறந்தள்ளி, எனக்காக எழுந்திரு எனக் கேட்கும் உரிமை! இவனன்றோ 'எமக்கெளியன்!']

அருஞ்சொற்பொருள்:
துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP