Thursday, October 08, 2009

"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"

"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"


அடுத்து எதை எழுதலாம் என எண்ணியபோது திரு. ராமச்சந்திரன் என்னும் அன்பர் ஒருவரிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாடலுக்கு பொருளெழுத எண்ணி அதை எழுதியும் முடித்த பின்னர், ஏதோ ஒரு நினைவில் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, இதற்கு ஏற்கெனவே பொருள் எழுதியது தெரிந்தது!
அதுவும் எனது நண்பர் ரவி கேட்டதன் பேரில்தான் எழுதியிருக்கிறேன்!
ஆனால், அதையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதில் இன்னும் விவரித்துச் சொல்லியிருப்பது தெரிய வந்தது!
இதுவும் முருகன் திருவுளம் என மகிழ்ந்து, சுவாமிமலை நாதன் புகழ் பாடும் இந்தப் பதிவை இடுகிறேன்.
நானே[!!] சுருக்கமாகச் சொன்னது அவனுக்குப் போதவில்லை போலும்!

ரவி அன்புடன் அனுப்பிய ஒளிப்பேழை இதோ!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************

******* பாடல் ********

தான தனதன தான தனதன

தான தனதன ...... தனதான


பாதி மதிநதி போது மணிசடை

நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா


காது மொருவிழி காக முற அருள்

மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

காலில் வழிபட அருள்வாயே


ஆதி அயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

சூழ வரவரு மிளையோனே


சூத மிகவளர் சோலை மருவுசு

வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட

வேலை விடவல பெருமாளே.


**********************************


****** பொருள் *******

[வழக்கம்போல் பின் பார்த்து முன் பாதி பார்க்கலாம்!]

ஆதி அயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு சிறைமீளா


ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறைமீளா


தன்னை மதியா தருக்கினராகி
மமதை கொண்ட பிரம தேவனை
ஓமெனும் பொருளின் உண்மை கேட்டிட
விழித்திட்ட பிரமனின் தலையில் குட்டித்
தரையினில் தள்ளிச் சிறையினில் இட்டுப்
படைப்புத் தொழிலும் தான் கையெடுக்க,
பிரமனைச் சிறைவிட வேண்டிய சிவனார்
மனமகிழும்படிப் பொருளும் உரைத்து
அயனை அன்று சிறை விடுத்தாய்!

சூரனின் கொடுமையால் சிறையில் வாடிய
தேவரின் குறையைத் தீர்த்திட வேண்டி
சிவனார்கண்ணின் தீப்பொறி கிளம்பி
கங்கையடைந்து அதுவும் வறளச்
சரவணப்பொய்கையில் கமலங்கள் நடுவே
ஆறுகுழந்தைகள் அவதரித்திருக்கக்
கார்த்திகைப் பெண்டிர் முலைப்பால் அருந்தி
அன்னை பார்வதி அணைப்பினில் சேர்ந்து
ஆறுமுகத்தான் திருவுருக் கொண்டு
அன்னை தந்த சக்திவேல் தாங்கி
சூரனை அழித்து இருகூறாய்ப் பிளந்து
அமரர்கள் அனைவரைச் சிறையும் விடுத்தாய்!

பிரமனும் தேவரும் தேவருலகினை
மீண்டும் ஆண்டிட அருளும் செய்தாய்!

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே


ஆடுமயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே


ஆடிவரும் அழகுமயில் மீதேறி
அமரர்கள் அனைவரும் கூட்டமாகச்
சூழ்ந்துவர பவனி வரும் இளமைகுன்றா
எழிலுடையவரே! கணபதிக்கு இளையவனே!

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூதம் மிகவளர் சோலைமருவு சுவாமிமலைதனில் உறைவோனே


மாமரங்கள் மிக வளர்ந்து
அடர்த்தியான சோலையாகி
அத்தகு சோலைகள் சூழ்ந்திருக்கும்
சுவாமிமலை என்னும் திருத்தலத்தில்
வாழுகின்ற முருகப் பெருமானே!

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.


சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே.


அடாது செய்த சூரனுடல்
விடாது கொன்றழிக்க
தொடர்ந்து துரத்திவந்து
காணாது சென்றொளிந்த
கடலையும் வற்றிடச்செய்து
சூரனுயிர் மாளச்செய்யும்
வல்லமை படைத்திட்ட
வீரவேலைக் கையிலேந்திய
பெருமைக்குரிய தலைவனே!

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா


பாதிமதி நதி போதும் அணிசடை நாதர் அருளிய குமரேசா


முழுநிலாய்ச் சந்திரன் பொலிந்திருந்த முன்னொருநாள்!
எழுமாலைப் பொழுதினிலே கண்டவரும் காமுறுவர்!
அப்படித்தான் கொண்டனரே இருபத்து எழுமரெனும் குமரியரும்!
பெருமைமிகு தக்கனின் அருந்தவப் புதல்வியவர்!
சேர்ந்திணைந்து வாழ்கவெனச் சந்திரனை மணமுடித்தார்!
சேர்ந்தவரும் மகிழ்வுடனே சிலகாலம் இருந்திட்டார்!
ஒருவர்மீது மட்டுமவன் பேரன்பு செலுத்துதலால்
மனங்கொதித்த தக்கராஜா சந்திரனைச் சபித்திட்டார்!
கலையெல்லாம் அழிந்துபோய் கருநிலவாய் ஆகவென!
பயங்கொண்ட நிலவரசன் சிவனாரை அண்டிநின்றான்!
அண்டிவந்து நின்றவரின் அடுதுயரம் தீர்ப்பவனாம்
சிவானரும் மனமிரங்கி அவன் குற்றம் பொறுத்திட்டார்!
தலைமீது சூடியவன் பெரும்பயத்தை நீக்கிவிட்டார்!
பிறைமதியைத் தலைசூடிய பெம்மான் எனும் பெயர் பெற்றார்!

பெற்றவர்க்குச் செய்கடனாய் கங்கைநதி வேண்டுமெனப்
பகீரதன் எனுமரசன் கடுந்தவமும் செய்திருந்தான்
தேவலோக மங்கையிவள் கங்கையெனும் புண்ணியளைப்
பூலோகம் வரச்சொல்லி விண்ணவரும் வரம் தந்தார்!
மனமில்லாக் கங்கயன்னை மாறாத கோபங்கொண்டு
அலைகடலெனப் புரண்டுவர அண்டமெலாம் நடுங்கியதே!
அமரரெலாம் பதைபதைத்து அரன்பாதம் பணிந்திட்டார்!
அன்புகொண்ட அரனாரும் கங்கையளைத் தலைக் கொண்டார்
தம்சடையில் எடுத்தணிந்தார் கங்கையளும் மறைந்துபோனாள்!
போகுமிடம் தெரியாமல் கங்கையன்னை அலைந்திட்டாள்
அகமழிந்து அடிபணிந்து காத்தருள வேண்டிட்டாள்
அன்புருவாம் அருட்சிவனும் அவள்மீது கருணைகொண்டார்
தம்சிரசில் என்றென்றும் இருந்திடவே அருள்செய்தார்!
ஒருசடையைப் பிரித்தங்கே சிறுநதியாய் செல்லவிட்டார்
பகீரதன் பின்னாலே அடக்கமுடன் கங்கை சென்றாள்!
கங்கையினைச் சடையணிந்த புனிதனெனச் சிவனானார்!

கொன்றையெனும் மலர்க்கொத்தும் சிவனாரின் தலையிருக்கும்!

நிலவையும், கங்கையையும், கொன்றை மலரும் தலைக்கணியும்
சிவனாரின் குமரனாக வந்துதித்த குமரேசக் கடவுளே!


பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா


பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

தேனினும் இனியவள் தினைப்புனம் காத்தவள்
வள்ளியெனும் குற நல்லாள் - அவள்
வடிவும் தேனே குணமும் தேனே
குரலும் தேனின் இனிமையொக்கும்

குரலின் இனிமையைக் கேட்டிட்ட குமரன்
குமரியின் பாதம் வருடுகிறான் - அவள்
சிலிர்த்திடும் சிரிப்பினில் சிந்திடும் தேனைக்
காதால் கேட்டு மகிழுகிறான்

கன்னியொருத்தியின் பாதம் எவரும் பற்றுவதில்லை
மகளிர் ஆடவர் காலில் விழுந்து பணிவது உண்டு
திருமணநாளில் மிஞ்சி அணிந்திட மெல்லக் குனிந்து
கணவன் ஒருவனே கால்களைப் பற்றுவான்

குமரியின் பாதம் தொட்டிடும் உரிமை
கணவர்க்கு மட்டுமே உரியதெனும்
சீரிய கருத்தினை இங்கே சொன்னார்
மணவாளன் எனும் சொல்லின் மூலம்!

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே


காதும் ஒருவிழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே


அன்னையைக் கண்டுபிடிக்கும் அண்ணலவன் ஆணையேற்று
தென்புலத்தை நோக்கிச்சென்ற அங்கதனின் சேனையரும்
அன்னையைக் காணாமல் அகம்குலைந்து அல்லலுற
சம்பாதி சொற்கேட்டு விண்ணிலேறிக் கடல்தாண்டி
இலங்கையினுள் புகுந்திட்டு எங்கெங்கும் தேடி
அசோகவனத்தினிலே அன்னையவள் வீற்றிருக்கும்
அருட்கோலம் கண்டவுடன் அகம்களித்து அடிபணிந்து
கணையாழி தான்கொடுத்து அடையாளம் சொன்னவுடன்
அன்னையவள் அன்புடனே அனுமனவன் முகம்பார்த்து
அன்றோர்நாள் நிகழ்வொன்றை அவனுக்குச் சொல்லலானாள்:

'தாய்சொல் தவறாமல் தம்பியுடன், தாரத்துடன்
கானகம் சென்றராமன் சென்றடைந்தான் சித்திரகூடம்
வனத்திடை படர்ந்திருக்கும் மலையடிவாரம்
முனிவரும் சித்தரும் தவம்செயும் காடு

மந்தாகினி நதியங்கு மலைவளத்தைக் கொண்டுவந்து
சோலைவனம் என்றாக்கிப் புள்ளினத்தைச் சேர்த்திருக்கும்
கண்ணுக்கு விருந்தாகக் காட்சிக்கு அருமையதாய்
நல்லதோர் இடத்தினிலே நாங்களெல்லாம் தவமிருந்தோம்.

நல்லதோர் மாலைப் பொழுது நாயகனும் களைப்புற்றான்
என்மடியில் தலைவைத்து கண்ணுறங்கத் தொடங்கிவிட்டான்
தலைவனவன் கண்ணுறங்கத் தனியளாக நானிருந்தேன்
கண்ணுறக்கம் கொள்ளாதுப் பதுமையென அமர்ந்திருந்தேன்

வான்வழியே சென்றிருந்த சயந்தனெனும் இந்திரனும்
என்னழகைக் கண்டங்கே கணப்பொழுதில் காமுற்றான்
காகமாக உருவெடுத்து எனைத் தீண்ட எண்ணங்கொண்டான்
கூரானத் தன்னலகால் என் தனங்கள் கொத்திவந்தான்

சீராகக் குருதிபொங்கி என் தலைவன் முகத்தில்விழ
துணுக்குற்று எழுந்தவனும் என்நிலையைக் கண்டிட்டான்
எவரிழைத்த கொடுமையெனச் சீற்றம்மிகக் கொண்டிட்டான்
காகத்தை நான்காட்டி நடந்தனைத்தும் கூறிநின்றேன்

ஏனென்னை எழுப்பவிலையென வருந்தியவன் கேட்கத்
தேவரீர் உறங்குகையில் தொல்லைசெய்யக் கூடாதென்றேன்
ஆறாத கோபத்துடன் காகத்தை நோக்கினான்
படுத்திருந்த பாயினின்று புல்லொன்றைக் கிள்ளினான்

'காதும்' [கொல்லும்] எனச்சொல்லி அப்புல்லை வீசினான்
வல்லவன் கையினிலே புல்லும் ஆயுதமெனும்
சொல்லுக்குக் காரணமாய் அப்புல்லும் அஸ்திரமாகி
காகத்தைவிரட்டியது! சயந்தன் வெருண்டோடினான்

மூவுலகும் சுற்றியங்கு கடவுளரிடம் வேண்டினான்
ஏதும் செய்ய இயலாதென அனைவருமே கைவிரித்தார்
சிவனடியில் அவன்பணிந்து காத்தருள வேண்டினான்
எய்தவர்க்கே மன்னிக்கும் மரபுண்டு எனச்சொல்லி

இராமனிடம் சென்றங்கு மண்டியிடச் சொல்லிவிட்டார்
சித்திரகூடம் சென்றடைந்து என்பதியின் அடிவீழ்ந்து
இராமா அபயம்! இரகுவீரா அபயம்! தாசரதே அபயம்!
காத்தருள வேண்டுமெனக் காகமும் கதறியது!

தஞ்சமென வந்தவரைக் காப்பதெங்கள் குலவழக்கம்
அபயமெனக் கேட்டதனால் நின்னுயிரைக் காத்திடுவேன்
ஆயினும் ராமபாணம் வீணாகிப் போவதில்லை
பிறன்மனை நோக்கிட்ட நின்கண்ணொன்றைக் கொண்டுசெல்லும்

எனச்சொல்லி அருள்சுரக்கக் காகமொரு கண்ணிழந்தது
அருங்குற்றம் செய்தவர்க்கும் அபயமளிக்கும் அண்ணலவன்
இக்கதையைச் சொல்லியென்றன் பதியின் துன்பம் போக்கிடுவாய்'
எனச் சொன்னாள் அன்னை! அனுமனும் விரைந்தான்!

இத்தகைய பெருமைபெற்ற இராமனின் மருகனே
என்குற்றம் பொறுத்தென்னைக் காத்தருள்க முருகனே!


கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே


காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழிபட அருள்வாயே


அடைக்கலமாய் வந்தாலும் அகங்காரம் கொண்டாலும்
அபயமெனச் சொன்னாலும் அன்புடனே அருள்புரியும்
பரமசிவன் மைந்தனே! திருமாலின் மருகோனே!
தக்கன்சாபம் சந்திரனை, ராமபாணம் காகத்தைத்
துரத்திவந்து பேரழிவாய்த் தாக்குதல்போல் இங்கென்றன்
உயிர்கொண்டு செல்லவரும் காலன் என்னைக் குறிவைத்து
அச்சுறுத்தும் வடிவினிலே வந்திடாமல் காத்திருந்து
நின் திருவடித் தாமரையில் அடைக்கலமாய் எனையேற்று
தொழுதுய்ய அருள்புரிய வேண்டுகிறேன்! காத்தருள்வாய்!

********************

அருஞ்சொற்பொருள்:

போதும் - கொன்றை முதலிய மலர்களையும்
காதும் = கொல்லும்
அரி = ஹரி
காலன் = எமன்
ஆதி அயன் = அனைத்துக்கும் முதலான படைப்புத் தொழில் புரியும் பிரமன்
சுரர் உலகு = தேவ லோகம்
சூதம் = மாமரம்
வாரி = கடல்
சுவறிட = வற்றிப் போகுமாறு
வல = வலிமை பொருந்திய

****************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*****************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP