Wednesday, August 27, 2008

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"


"ஸோட்ஸி"

ஒரு இளைஞன்!

தந்தை தாயற்ற அநாதை!

தவறான கும்பலுடன் சேர்ந்து தனக்கென ஒரு தவறான வழியையும் தேர்ந்தெடுக்கிறான்.

இவன் பின்னாலும் ஒரு நாலு பேர்!

சின்னச் சின்னத் திருட்டுகள், அடிதடிகள் செய்து தானும் ஒரு 'தாதா'வெனப் பெயரெடுக்கிறான்!

ஒருமுறை ஒரு கொலை எதிபாராதவிதமாக நிகழ்ந்துவிடுகிறது.

ஸோட்ஸி இதை நியாயப்படுத்தி கொலைசெய்த நண்பனுக்காகப் பரிந்து பேசுகிறான்.

நண்பர்களுக்குள் இதில் வேறுபாடு ஏற்பட்டு, ஆத்திரத்தில், தன் முடிவை எதிர்த்த நண்பனை நையப்புடைக்கிறான்.

தன் செயலில் தானே நொந்து போய், தனியே கிளம்புகிறான்.

ஒரு தனித் திருட்டை நிகழ்த்துகிறான்.

தனியே இருக்கும் அந்த ஆளை அடித்துப் போட்டுவிட்டு கிடைத்த பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான்.

வீட்டு வாசலில் கதவைத் திறக்கச் சொல்லி,அந்த வீட்டுக்காரரின் மனைவி ஒரு காரிலிருந்து இறங்கி, மணியை அழுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளைத் துப்பாக்கி முனையில் தள்ளிவிட்டு, அவள் காரில் ஏறித் தப்பிக்கிறான்.

கொஞ்ச தூரம் சென்றதும், பின் இருக்கையில் இருந்து ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான்!.....

ஒரு குழந்தையின் அழுகை ஒலி!

திடுக்கிட்டு காரை நிறுத்திப் பார்க்கிறான்!

ஆம்!

ஒரு சின்னக் குழந்தை பின்னிருக்கையில்!

திகைத்துப்போய், உடனே தன் வீட்டுக்குச் செல்கிறான்.

அந்தக் குழந்தையை ஒரு செய்தித்தாளில் சுற்றி, படுக்கைக்கு அடியில் ஒளித்து வைக்கிறான்!

பசிக்கு அது அழும்போது என்ன செய்வதெனத் தெரியாமல், பாலை அதன் வாயில் ஊற்ற, அது அதைத் துப்ப, செய்வதறியாது திகைக்கிறான்.

கூடவே ஆயும் போய் அது அழுகிறது!

ஒரு செய்தித்தாளில் அதை வாங்கி சுருட்டி வைக்கிறான்!

வெளியே சென்று திரும்புகிறான்.

குழந்தை வீறிட்டு அழுதுகொண்டிருக்கிறது.

படுக்கையின் அடியில் வைத்திருந்த அந்தக் குழந்தையை வெளியே இழுத்துப் பார்த்தால்.....

குழந்தையைச் சுற்றி ஒரே எறும்புக்கூட்டம்!

தித்திப்புப் பாலுக்காக வந்த எறும்புகள் மொய்த்து குழந்தையைக் கடித்துக் கொண்டிருக்கின்றன.

பதறிப்போய், உடனே தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான்.

அவள் ஒரு குழந்தைக்குத் தாய் என்பதை கடைத்தெருவில் பார்த்திருக்கிறான் இவன்!

அவளிடம் விவரத்தைச் சொல்லி, குழந்தையை அவளிடம் விட்டுச் செல்கிறான்.

அவளும் இவன் [முரட்டுக்]குணமறிந்து அதைப் பராமரிக்க ஒப்புக்கொள்கிறாள்.

குழந்தையைப் பறிகொடுத்தவர் போலீஸில் புகார் கொடுக்கிறார். மனைவியோ ஒரு தள்ளுவண்டியில்!

குழந்தைக்காக மீண்டும் அந்தக் குழந்தையின் வீட்டுக்கே சென்று, அதற்குத் தேவையான பொருள்களைத் தன் நண்பர்களுடன் சென்று திருடுகிறான்.

அப்போது, குழந்தைக்குத் தேவையானதைத் தவிர, மேலும் சில பொருள்களைத் திருட முற்படும் தனது நண்பனையே ஒரு சண்டையில் கொன்றும் விடுகிறான்.

இவனது இந்த "திருந்திய" போக்கு பிடிக்காத இன்னொரு நண்பனும் விலகுகிறான், இவனை விட்டு!

ஒரு பெரும் தொகையை இந்தக் குழந்தையைப் பராமரிக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க, அவள் அதை ஏற்க மறுத்து, குழந்தையையும் திருப்பிக் கொடுக்கிறாள்.

போலீஸ் கொடுத்த துப்பின் மூலம் உண்மை அறிந்த குழந்தையின் தாய், எடுத்த இடத்திலேயே ..... தன் வீட்டிலேயே குழந்தையை விட்டு விட்டு வந்தால் உன்னைக் காப்பாற்ற முயலுவேன் எனச் சொல்ல,
குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்கிறான்.


அதற்குள் போலீஸுக்கு விஷயம் தெரியவர, வீட்டைச் சூழ்கிறார்கள்.

'இவன் தன் தவறை ஒப்புக்கொண்டு குழந்தையைத் திரும்பவும் தந்துவிட்டான்' என அந்தத் தந்தை அலறிக்கொண்டு ஓடிவரும் வேளையில்,
ஸோட்ஸி போலீஸால் சுட்டுக் கொல்லப் படுகிறான்!


படம் முடிகிறது!

கலங்க வைக்கும் படம் இது!

சிறப்பான நடிப்பு, இயக்கம், காட்சித் தொகுப்பு, பின்னணி இசை!

மிகச் சிறந்த படங்களில் ஒன்று இது!

2005க்கான சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற படம் இது!

தென்னாப்பிரிக்கக் களம் இதன் இன்னுமொரு சிறப்பு!

தவறாமல் பாருங்கள்!


"ஸோட்ஸி!"

Read more...

Tuesday, August 26, 2008

"கண்ணா வா!"

"கண்ணா வா!"
[க்ருஷ்ண ஜயந்தி அன்றே எழுதி வைத்தது! வேறு சில பதிவுகள் இடையில் பதிந்ததால் தள்ளிப் போனது! அதனால் என்ன! கண்ணன் வர ஒரு நாள் வேண்டுமா? இதோ!...வருகிறான்!]

கண்ணன் என்னும் எந்தன் மன்னன் என்னில் வந்தான்
முன்னம் வந்த வினைகள் எல்லாம் தீர்த்து வைத்தான்
கண்ணில் அன்பைக் காட்டி என்னைக் கட்டிக் கொண்டான்
எண்ணம் முழுதும் அவனே என்னுள் பொங்கி நின்றான்!

இன்பம் என்னும் சொல்லின் பொருளின் காட்சி தந்தான்
துன்பம் இல்லா வாழ்வைக் காணும் வழியைத் தந்தான்
புல்லாங்குழலின் ஓசைமூலம் கீதை சொன்னான்
என்றும் சுகமாய் வாழும் வழியைச் சொல்லிச் சென்றான்!

வெண்ணையுண்ண கோதைப்பெண்டிர் இல்லம் சென்றான்
கண்ணில் கள்ளம் காட்டிக் கொண்டு புன்னகை செய்தான்
மண்ணையுண்டு வாயைத் திறந்து மாயம் செய்தான்
எண்ணவொண்ணா உலகைத் தன்னில் காட்டி நின்றான்!

காதல் செய்த ராதை உள்ளம் தன்னில் நின்றான்
கோதை ஆண்டாள் உள்ளில் தன்னின் மாலை தந்தான்
ஏதும் இல்லா காதல் என்னும் எண்ணம் தன்னை
தீதும் இன்றி என்னில் தந்த மன்னன் கண்ணன்!

வேதம் சொன்ன கண்ணன் என்றும் என்னில் என்னில்
கீதை சொன்ன கண்ணன் அந்தப் புல்லாங் குழலில்
ஓதும் எந்த வேதம் எல்லாம் இவனின் சொல்லில்
போதும் இந்தப் பிறவி இனிமேல் உந்தன் கையில்!

ஆவணி மாதம் ரோஹிணியில்நீ இல்லம் வந்தாய்
தேவகித் தாயின் கருவில் வந்து கீதை தந்தாய்
கோகுலம் வந்து கோபியர் நெஞ்சில் கோயில் கொண்டாய்
மாநிலம் வாழ என்றும் உந்தன் அருளைத் தந்தாய்!

சின்னச் சின்னக் குறும்புகள் செய்தென் நெஞ்சம் கொண்டாய்
வண்ண வண்ணக் கோலம் காட்டியென் சிந்தை நின்றாய்
என்னவென்ன சொல்லி உன்னைப் பாடுவேன் கண்ணா
சின்னக்கண்ணா நீயே என்றன் சொந்தம் மன்னா!

கண்ணன் என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்
கண்ணன் பேரைச் சொன்னால் கலியின் தாகம் தீரும்
கண்ணன் என்னும் சொல்லே வாழ்வின் பொருளைச் சொல்லும்
கண்ணன் என்னும் ஒன்றே என்றும் என்றன் இன்பம்!
************************************************


["கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல" பாடல் ராகத்தில் பாடிப் பாருங்கள்!]

Read more...

Monday, August 25, 2008

"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"

"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"
இனியவளே! என்னவளே!
எனக்கெனவே இங்குவந்து பிறந்தவளே!

ஓராயிரம் நல்மாந்தர் பூவுலகில் பிறந்தாலும்
எனக்கெனவே விதித்திட்ட இன்பப் புத்தகமே!

யான் முன்னம் அறியுமுன்னே என்னுள்ளில் வந்துநின்றாய்!
நீயெனக்கு வேண்டுமென யான் நினைக்கப் பொலிந்திருந்தாய்!

யார் முதலில் கேட்டதென நினைத்தின்று பார்க்கின்றேன்!
யார் முதலில் கேட்டாலென்ன நீதானே எனக்கானவள்!

என்னுடனே கூடவர இசைவாக உடன்பட்டாய்
தன்னுடைமை எனவிங்கு என்னிடமும் கேட்டதில்லை!

பொன்பொருளைக் கேட்டதில்லை பிடிவாதம் பிடித்ததில்லை!
மென்பொருளாய் நீயியங்க என்காலம் ஓடுதிங்கு!

காலைமுதல் மாலைவரை என்னுடனே இருக்கின்றாய்!
சோலைக்கிளியாக சுகராகம் பாடுகின்றாய்!

மாலையிட்ட நாள்முதலாய் என்நலனைப் பேணி நின்றாய்!
காலையிளங்கதிரே! கண்மணியே வாழ்த்துகிறேன்!

ஆயிரம் நிலவுகள் வந்தாலும் அவரவர்க்கு
ஓர்நிலவே ஒளிவீசும் அதுவாக நீவந்தாய்!

பிறந்தநாள் காணுமிந்த பொன்னான நாளினிலே
சிறந்துன்னை வாழ்த்துகிறேன் செம்மீனே வாழியென்று!

வீசுகின்ற தென்றலாக என்வாழ்வின் வசந்தம் சேர்த்தாய்
கூசாமல் என்னுள்ளில் முழுநிலவாய் ஒளிர்கின்றாய்!
வாசங்கள் நிறைந்திருக்கும் மணமுல்லை அதுபோல
நேசமெனும் மணம்பரப்பும் நேரிழையே நீ வாழி!
*****************************************************

Read more...

Sunday, August 24, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"


12 பி பேருந்தில் இருந்து மயிலாப்பூர் குளத்தருகில் இறங்கி நாயர் கடையை நோக்கி நடை போடும்போது, அடிநெஞ்சில் ஒரு பயமும், குற்றவுணர்ச்சியும் கூடவே வந்தது!

மன்னாரைப் பார்த்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. என்ன சொல்லுவானோ என்ற எண்ணம் அடிவயிற்றைக் கலக்கியது.

'வாங்க சேட்டா! கண்டு கொறச்சு நாளாயிட்டே! சுகந்தன்னே' என நாயர் வரவேற்றதுகூட மனதில் பதியவில்லை. 'நல்லாத்தான் இருக்கேன் நாயர்! மன்னாரைப் பார்த்தீங்களா?' என ஒரு பதட்டத்துடன் கேட்டேன்.

'ஆ! வரும்! இப்ப வரும்' என்றார் நாயர்.

சொன்னதுபோலவே, சில நிமிடங்களில் மயிலை மன்னார் தன் சகாக்களுடன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்.

'என்ன நாயரே! விருந்தாளிங்கள்லாம் புதுசா வந்திருக்காங்க போல' எனக் கிண்டலுடன் கேட்டுக்கொண்டே சட்டென என்னருகில் வந்து என்னைக் கட்டிக் கொண்டான்.

திட்டப்போகிறான் என நினைத்திருந்த என்னை 'நல்லாருக்கியா கண்ணு! பார்த்து ரொம்ப நாளாச்சில்ல. ரொம்பவே வேலையா' என்ற கனிவான குரல் கொஞ்சம் கண்கலங்க வைத்தது.

'நல்லாவே இருக்கேன் மன்னார்! நீ எப்படி இருக்கே? கொஞ்சம் வேலை மும்முரம். அதான் வந்து பார்க்க முடியலை. மன்னிச்சுக்கோ!' என்று தழுதழுத்தேன்.

'அட இன்னாபா நீ! ஒன்னியத் தெரியாதா எனக்கு!' இதுக்கெல்லாமா கோவிச்சுப்பாங்க. சரி சொல்லு. இன்னிக்கு இன்னா வேணும்?" எனக் கண் சிமிட்டினான்.

'இப்ப நீ பண்ணினியே! அதையே வைச்சு சொல்லேன்!' எனப் பதிலுக்கு அவனை மடக்கினேன்.

ஒரு நிமிடம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தவன் உடனே கடகடவெனச் சிரித்தவன், 'படா கில்லாடிப்பா நீ! சரி அதியே சொல்லிறலாம். எளுதிக்கோ' என்றான்.

'நான் சொன்னது என்னன்னு புரிஞ்சிடுச்சா?' என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'58-ல ஒரு பத்துப் பாட்டு சொல்லிருக்காரு ஐயன். தலைவனா இருக்கறவனோ, இல்ல, ஒர்த்தரை புரிஞ்சுகிட்டவனோ, அடுத்தவங்ககிட்ட எப்படி இருக்கணும்னு சொன்ன இந்த பத்து பாட்டுங்கள புரிஞ்சுகிட்டா, முக்காவாசி வெவகாரங்கள தீர்த்துரலாம். சொல்லி முடிச்சதும் நீயே புரிஞ்சுப்பே' எனச் சொல்லத் தொடங்கினான்.

இனி வருவது குறளும் அதற்கான மயிலை மன்னாரின் விளக்கங்களும்!

"அதிகாரம் 58" -- "கண்ணோட்டம்"

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. [571]

இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி, இந்தக் கண்ணோட்டம்னா இன்னான்னு சொல்றேன் கேட்டுக்கோ! ஒரு ரெண்டு மூணு விசயத்தைச் சொல்லணும்னு ஐயன் முடிவு பண்ணினாரு. அதாவது, இந்தக் கண்ணு பண்ற சில வேலைங்களையெல்லாம் புரிய வைக்கணும்னு நெனைச்சு, அதெல்லாத்தியும் இந்தப் பத்து குறள்ல சொல்லிட்டாரு. இன்னா முளிக்கறே? புரியலியா? இந்தக் கண்ணு இன்னால்லாம் பண்ணுது? இங்கியும் அங்கியுமா ஓடும்; ஆரு வந்திருக்கான்னு ஓரக்கண்ணால நோட்டம் வுடும்; கோவமாப் பாக்கும்; .அன்பாவும் பாக்கும்; கண்ணாலியே பேசக்கூட செய்யும்; ஆரு இன்னாமாரி ஆளுன்னு ஒரு முடிவு கூட பண்ணும். இப்பிடி கண்ணு ஓடறது கண்ணு ஓட்டம்! இன்னொண்ணு கண்ணு நோட்டம்! இதெல்லாம் சேத்துத்தான் இந்த அதிகாரத்துல சொல்றாரு! ஒரு தலைவனுக்கு இதெல்லாம் ரொம்பவே அவசியம்! இத்தையெல்லாம் மனசுல வைச்சுகிட்டு, இந்தக் குறளுங்களையெல்லாம் இப்ப பாக்கலாம் சரியா!
சரி, இப்ப, மொதக் குறளப் பாப்பம்.

காரிகைன்னா அழகுன்னு அர்த்தம். பொதுவா காரிகைன்ன ஒடனியே ஒரு அளகான பொண்னு நெனப்புத்தான் வரும். அவ அளகா இருக்கறதாலத்தேன் காரிகைன்னே பேரு வந்திச்சின்னு புரிஞ்சுக்கோ!

இந்தக் கண்ணோட்டம்ன்ற ஒரு அளகான ஒண்ணு ஒரு உண்மையான தலைவன்ட்ட இருக்கறதாலத்தான், இந்த ஒலகமே இன்னமும் அளிஞ்சுபோகாம இருக்குன்னு ஐயன் சொல்றாரு. எதெதை எப்பப்ப செய்யணும்னு சரியான கண்ணோட்டம் வைச்சுகிட்டு தீர்மானம் பண்ணி இவன் செய்யறதால, அல்லாமே ஒரு ஒயுங்கா நடக்குது. இதுல உண்மையான்னு சொல்லி ஒரு கொக்கி போட்டிருக்காரு ஐயன். தலைவனா இருந்தா மட்டும் பத்தாது! அவன் உண்மையான தலைவனா இருக்கணும். நாலு பேரு ஒர்த்தனுக்குப் பின்னாடி நிக்கறவன்லாம் தலைவன் இல்ல! தனக்குப் பின்னாடி நிக்கறவங்களப் பத்தி மட்டும் இல்லாம, அல்லாரையும் பத்தி அக்கறையாக் கவலைப் படறவந்தான் தலைவன். சரி, வுடு! இதுக்கு மேல நா சொன்னேன்னா அது வெவகாரமாயிப் போயிரும். அடுத்ததுக்குப் போவோம்!

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை. [572]


இந்த ஒலகத்துல நடக்கறதுக்கெல்லாமே இந்தக் கண்ணோட்டந்தான் காரணம். அதை ஒயுங்காச் செய்யறதாலதான் அல்லாமே சரியா வருது. அது மட்டும் இல்லாங்காட்டி அந்த ஆளு உசுரோட இருக்கறதுலியே அர்த்தம் இல்ல. அது மாரி ஆளுங்கள்லாம் இந்த ஒலகத்துக்கே பெரிய பாரமாம்! அட! நா சொல்லலைப்பா ... ஐயன் சொல்றாரு.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். [573]


இப்ப ஒரு பாட்டு நீ பாடு! நெசமாப்பா.. பாடு! ..[பாடத் துவங்குகிறேன்!] ஐயய்யோ.... போறும் போறும்... நிறுத்து! ராகம் இல்லாம இப்படிப் பாடினா அதுக்குப் பேரு பாட்டா? இதைக் கேக்க முடியுதா? இப்பிடி பாட்டோட பொருந்தலைன்னா இசையால இன்னா பிரயோஜனம்?
அதே போல, ஒரு சரியான பார்வை.... அதாம்ப்பா... கண்ணோட்டம் இல்லைன்னா இந்தக் கண்ணு இருந்துகூட ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சொல்றாரு.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். [574]

சரியான அளவுக்கு இன்னின்னாருன்னு கண்ணோட்டம் செய்யமுடியாத கண்ணு ஒருத்தனோட மொகத்துல இருந்தாலும், அதால அந்த மொகத்துக்கு இன்னாப் பயனைச் செய்யும்? ஒண்ணுமில்ல!

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். [575]

இப்ப ஐயன் கொஞ்சம் ரூட்டை மாத்தி, கண் ஓட்டம்ன்றதுலேர்ந்து, கண் நோட்டம்னா இன்னான்னு சொல்ல ஆரம்பிக்கறாரு!
ஒரு ஆளுக்கு கண்ணுங்க இருக்குதுன்னா, அதுல கொஞ்சமாவது தாட்சண்யம்னு சொல்லுவாங்களே.. அதான்... இந்தக் கருணை ... இதைக் காட்டாத கண்ணுங்க ஒரு புண்ணுன்னு தான் சொல்லணும். அப்படித்தான் என்னியப் போல அறிவாளிங்கள்லாம் சொல்லுவோம்! .... இது வள்ளுவர் சொல்றது!!

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். [576]


இந்தக் கண்ணுல எல்லாவிதமான காட்சியையும் காட்ட முடியும்னு சொன்னேன்ல? அதாம்ப்பா நவரசம்னு சொல்லுவாங்களே அதெல்லாந்தான்! அதுல முக்கியமானது அடுத்தவனைப் பாத்து, இரக்கத்தை காட்றது! இது அல்லாராலியும் செய்ய முடியற ஒண்ணுதான். அத்தக் காட்டாம இருந்தியானா, ஒனக்குக் கண்ணு ரெண்டு இருந்தாக்காட்டியும், தோ... அங்க அந்த மண்ணுலேருந்து மொளைச்சு நிக்குதே.... அந்த மரத்துக்கும் ஒனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு காட்டமாவே சொல்றாரு.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். [577]


திரும்பவும் அதேதான்! கண்ணுல இரக்கத்தைக் காட்டாதவங்க கண்ணு இருக்கறவங்கன்னே கருதப்பட மாட்டாங்க. அதே மாரி, உனக்கு உண்மையிலேயே கண்ணு இருக்குன்னா இரக்கம்ன்றது இல்லாம இருக்கவும் முடியாதுன்னு அடிச்சுச் சொல்றாரு.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு,. [578]


செய்ய வேண்டிய காரியம்லாம் கெடாம, கண்ணாலியே அத்தினியும் நடத்திகிட்டுப் போற தெறமையான ஆளுங்களுக்கு இந்த உலகமே சொந்தமாயிருமாம்! "இந்தா..... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் காரியத்த சீக்கிரமே முடிச்சுடறேன்; நீ அப்பறமா வந்து என்னியப் பாரு; யோவ், யாருப்பா இவன்? கொஞ்சம் நகத்து அவனை; சீக்கிரம் பேசி முடிப்பா" இப்பிடி பலவிதமா கண்ணாலியே பேசி தன் வேலையைப் பாத்துக்கறவந்தான் தலைவனா ஆகி, ஊரையே ஆளக்கூடிய தகுதி வரும்னு கோடி காட்டறாரு.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. [579]


"இப்ப இன்னும் கொஞ்சம் மேல போயி, இந்த கண்ணோட்டத்தோட பெருமையைச் சொல்லப்பாக்கறாரு ஐயன். இது கொஞ்சம் கஸ்டமான விசயம்ன்றத மொதல்லியே சொல்லிடறேன். இருந்தாலும் எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே ஒருத்தன் வாள்க்கை பெருமையாப் பேசப்படுது! அதுனால, இதைக் கேட்டுக்கோ! செஞ்சியானா ரொம்ப நல்லது! முடியலேன்னாலும், அதைச் செய்யறவனை ஏமாளின்னு மட்டும் கிண்டல் பண்ணாம இரு! அதுவே பெருசு!" என ஒரு நீண்ட முன்னுரை முழக்கிவிட்டு மேலும் தொடர்ந்தான் மன்னார்!

இப்ப ஒருத்தனைப் பாக்கறே! அவன் செய்யற காரியம் தப்புன்னு தெரியுது. தண்டிச்சு அடக்கணும்னு நினைக்கறே! அப்பிடியாப்பட்ட ஆளுகிட்டயும், இரக்கம் காட்டி அவனோட குத்தத்தையும் பொறுத்துக்கறதே ஒரு தலைவனுக்கு ரொம்பவும் முக்கியமான கொணம். "புரிதலுக்கு நன்றி"ன்னு சாந்தமா சில பேரு சொல்லிட்டுப் போறாங்கள்ல.. அதுமாரின்னு வைச்சுக்கோயேன்!!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். [580]


இதான் அல்ட்டிமேட்டு! அதாவது ரொம்ப ரொம்ப ஒசந்தது!
எல்லாருக்கும் இஸ்டமான கண்ணோட்டத்தை வேணும்னு நினைக்கறவன், தன்னோட பளகினவன் விஷத்தைக் கலந்து கொடுக்கறான்னு தெரிஞ்சாலும், அமைதியா அதை வாங்கிக் குடிச்சிட்டு, அவனோட சேந்து உக்காந்துகிட்டு சிரிச்சுகிட்டு இருப்பானாம்.

இந்த மேட்டரை அப்பிடியே எடுத்துகிட்டேன்னா அதுக்கும் ஒதாரணம் இருக்கு.... பொராணத்துல சிவன் மாரி... ஜீஸஸ் மாரி, கதைங்கள்ல சீஸர் மாரி!

இத்ஹியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, .....சிலபேரு பக்கத்துல இருந்துகிட்டே நஞ்சு மாரி பேசுவாங்க ...இதுக்கு ஒதாரணமே தேவையில்ல! அவனவனுக்குப் புரியும்!... அவங்களையும் கூட அன்பாவே நடத்தினா, அவனும் ஒருநாளைக்கு மாறி, நல்லபுத்தி வந்து, ஒன்னிய விரும்ப ஆரம்பிச்சிடுவான்னும் எடுத்துக்கலாம்!


"சொன்னதெல்லாம் வெளங்கிச்சா சங்கரு! இப்ப திரும்பவும் இந்தப் பத்துக் குறளையும் படிச்சுப்பாரு. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமா இருந்து ஒவ்வொருத்தனையும் படிப்படியா ஒசத்திக்கினே போறது புரியும்."
என முடித்தான் மயிலை மன்னார்.

"நான் இந்த அதிகாரத்தைத்தான் சொன்னேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது??" என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'அட! இது பெரிய கம்பசித்திரமாக்கும்! என்னைப் பாக்கலியேன்னு நான் கோவிச்சுப்பேன்னு நீ நெனைச்சுகிட்டு பயந்துகினே ஒரு ஓரத்துல பம்மிக்கினு இருந்தே! வந்து ஏறங்கினதுமே நோட்டம் வுட்ட்டுட்டேன்! அதான், நான் அதைப் பத்தியே கேக்காம நேரா ஒங்கிட்டவந்து, அன்பாப் பேசினதும், ஒனக்கு ஆச்சரியம் தாங்கலை! அதான் 'இப்ப பண்ணினதைப் பத்தி சொல்லு'ன்னு நீ கொக்கி போட்டதும் புரிஞ்சுகிட்டேன்!
இப்பப்பாரு! நாயர் நமக்கெல்லாம் விஷம் கொடுக்கப்போறாரு! நாம அதியும் சிரிச்சுக்கிட்டே சாப்பிடத்தானே போறோம்! என்ன நா சொல்றது சரிதானே நாயர்? டீ, வடை ரெடியா? ' என நாயரைப் பார்த்துச் சிரித்தான் மன்னார்!

'போப்பா மன்னார்! நினிக்கு எப்பவும் வெளையாட்டுத்தான்' எனச் சொல்லியவாறே, மசால் வடையை எடுத்துக் கொடுத்துவிட்டு, டீ ஆற்றத் தொடங்கினார் நாயர்!

நான் அவர்களிருவரையும் கண்ணோட்டினேன், வடையைச் சுவைத்தபடியே!

**********************

கண்ணோட்டம் (கண்+ஓட்டம் or நோட்டம்), glance; 2. regard, kindness, favour; 3. guess by the eye.

Read more...

Sunday, August 17, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3




முந்தைய பதிவு இங்கே!

17.
எந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல்,
ஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும்
ஒளியூட்டப் படுகின்றனவோ
அந்த ப்ரஹ்மன் "நான்" என அறிவாய்
இப்படி அறிந்தவர் எல்லா துயரிலிருந்தும்
விடுபடுகின்றார்

18.
"நானே" சாட்சியும், தூய்மையான தன்னிலை உணர்வும்
என்றும் புனிதமான சதாசிவமாய் இருக்கிறேன்
மகிழ்பவன், மகிழ்வு, மகிழ்வின் பொருள் என்னும்
மூன்றுமாய் மூன்று நிலைகளில் இருப்பதிலிருந்து
வேறுபட்டு இருப்பதுவும் "நானே"!

19.
எல்லாம் பிறந்தது என்னில் இருந்தே
எல்லாம் இருப்பதும் என்னுள் மட்டுமே
எல்லாம் ஒடுங்குவதும் என்னுள்தானே
பன்மை இல்லாத ப்ரஹ்மன் "நானே"!

20.
அணுவிலும் சிறியவன் "நான்"
பிரபஞ்சத்தை விடவும் பெரியவன் "நான்"
மிகவும் அதிசயத் தக்கவன் "நான்"
மிகவும் பழைமையானவன் "நான்"
'புருஷன்' எனச் சொல்லப்படும் ஆண்மை "நான்"
பொன்னார் மேனியனான "நானே" சிவனின் வடிவும் ஆவேன்!

21.
கைகளும் இல்லை; கால்களும் இல்லை எனக்கு!
ஆயினும், எனது சக்தியோ அளப்பரியது!
கண்கள் இல்லாமல் பார்ப்பவன் "நான்"
செவிகள் இன்றியே கேட்பவனும் "நான்"
எல்லாம் தெரிந்தவன் "நான்"
வடிவே இல்லாதவன் "நான்"
எப்போதும் தூய்மையான தன்னிலை உணர்வு "நான்"!

22.
எத்தனையோ மறைகள் இருப்பினும்
அவற்றுள் உணரும் பொருள் "நானே"!
உபநிடதங்களை எழுதியவன் "நானே"!
மறைகளின் பொருளும் "நானே"
மஹிமையோ, இழிவோ "என்னை" ஒன்றும் செய்வதில்லை!
அழிக்க முடியாதவன் "நான்"
பிறப்பு, இறப்பு, உடல், உணர்வு, புத்தி
இவை எதுவுமே "நான்" இல்லை!

23.
நிலம், நீர், தீ, காற்று, வெளி
இவை எதுவுமே "நான்" இல்லை!
இதயக் குகைக்குள் உலாவுகின்ற
அழுக்குகள் எதுவும் இல்லாத,
இரட்டைத்தன்மை இல்லாத,
பிரபஞ்சத்தின் சாட்சியாய்,
இருப்பும், இல்லாததும் இல்லாத,
உயரிய ப்ரஹ்மனை இப்படி அறிவோர்
'அதனை" அடைகிறார்

24.
இப்படி இதனை அறிவதால்,
அடுக்கடுக்காக அலைகடல்போல் வரும்
பிறப்பு, இறப்பு என்னும் துயரம் களைந்து,
"தனியே.. தன்னந்தனியே" என்பதை உணரலாம்!

கைவல்ய உபநிடதம் முற்றிற்று.
****************************

ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதி3
ப்ரபஞ்சம் யத் ப்ரகாஷதே
தத்3ப்ரஹ்ம அஹம் இதி ஞாத்வா
ஸர்வ ப3ந்தை4: ப்ரமுச்யதே [17]

த்ரிஷு தா4மஸு யத்3 போ4க்3யம்
போ4க்தா போ4க3ஷ்ச யத்3ப4வேத்
தேப்4யோ விலக்ஷண: ஸாக்ஷீ
சின்மாத்ரோஹம் ஸதா3ஷிவ: [18]

மய்யேவ ஸகலம் ஜாதம்
மயி ஸர்வம் ப்ரதிஷ்ட்டி2தம்
மயி ஸர்வம் லயம் யாதி
தத்3ப்3ரஹ்மாத்3வயம் அஸ்ம்யஹம் [19]

'த்2விதீய க2ண்ட3:'

அணோரணீயான் அஹம் ஏவ தத்3வன்
மஹானஹம் விஷ்வம் அஹம் விசித்ரம்
புராதனோஹம் புருஷோ ஹமீஷோ
ஹிரண்மயோஹம் ஷிவரூபம் அஸ்மி [20]

அபாணிபாதோ3 அஹம் அசிந்த்ய ஷக்தி:
பஷ்யாம்ய சக்ஷு: ஸ ஷ்ருணோம்ய கர்ண:
அஹம் விஜானாமி விவிக்தரூபோ
ந சாஸ்தி வேத்தா மம சித்ஸதா3ஹம் [21]

வேதை3ர் அனேகைர் அஹம் ஏவ வேத்3யோ
வேதா3ந்தக்ருத்3 வேத3 விதே3வ சாஹம்
ந புண்யபாபே மம நாஸ்தி நாஷோ
ந ஜன்ம தேஹேந்த்ரிய பு3த்3தி4ர் அஸ்தி [22]

ந பூ4மிர் ஆபோ ந ச வஹ்னிர் அஸ்தி
ந சாநிலோ மேஸ்தி ந ச அம்பரம் ச
ஏவம் விதி3த்வா பரமாத்மரூபம்
குஹாஷயம் நிஷ்கலம் அத்விதீயம் [23]

அனேன ஞானம் ஆப்னோதி ஸம்ஸாரார்ணவ நாஷனம்
தஸ்மாதே3வம் விதி3த்வைனம் கைவல்யம் பத3மஷ்னுதே
கைவல்யம் பதமஷ்னுத இதி [24]

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

இதி அத2ர்வ வேதே3 கைவல்யோபநிஷத் ஸமாப்தா
*****************************************************

Read more...

Wednesday, August 13, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

முந்தைய பதிவு

7.
தொடக்கமும் நடுவும் இறுதியும் இல்லா
ஒன்றேயாகி, எங்கும் நிறைந்து
ஆனந்தமான அற்புத நிலையாய்
உருவம் என்று எதுவும் இலாதாய்
உமையுடன் இணைந்து அமர்ந்திருக்கும்
உயரிய கடவுளாம், எவர்க்கும் அரசனாம்,
மூன்று கண்களும், நீலநிறக் கழுத்தும்,
எப்பொழுதும் அமைதியாய் இருக்கும்
'அவனை' மனதில் கொண்டே முனிவரும்
படைப்பின் ரகசியத்தை அறிவரோ,
எது எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருப்பதோ
எல்லா இருளுக்கும் அப்பால் இருப்பது "அது"!

8.
'அது'வே ப்ரம்மா, 'அது'வே சிவனும், 'அது'வே இந்திரனும்,
அழிவில்லாதது, எதனினும் உயர்ந்தது, ஒளிமிகு தெய்வம்,
'அது'வே திருமால், 'அது'வே உயிரளிக்கும் மூச்சு,
'அது'வே காலமும், தீயும், நிலவும் ஆகும்.

9.
'அது'வே இருப்பதும், இருந்ததும், இருக்கப்போவதும்,
இனி என்றுமிருப்பதும் ஆகும்
'அது'வை அறிபவன் மரணத்தை வெல்கிறான்
விடுதலைக்கு 'அதை'த் தவிர வேறு வழி இல்லை.

10.
தன்னில் அனைத்தையும் கண்டு
அனைத்திலும் தன்னைக் கண்டே
அனைத்தையும் கடந்த ப்ரஹ்மனை அடைவர்
வேறெந்த வழியிலும் அல்ல!

11.
"தான்" எனும் ஆத்மாவை மத்தாகவும்
"ஓம்" எனும் பிரணவத்தை அதன் தடியாகவும் கொண்டு
"ஞானம்" எனும் அறிவைக் கடைவதன் மூலம்
பிறக்கும் தீயில் ஞானியர் பந்தம் துறக்கின்றனர்.

12.
இதையறியா மயங்கிய "தான்" மாயையின் வசப்பட்டு
உலகியல் இனபத்தில் அடிமைப்படுகிறது
விழிப்பின் நிலையில் பெண், உணவு, கள் இவற்றால்
அது எல்லாம் பெற்றதாய் மகிழ்கிறது.

13.
தானே உருவாக்கிய மாயையின் உலகில்
தானே எழுப்பும் உணர்வின் வழியே
'தான்" எனும் ஜீவன் தூங்கும் நிலையில்
கனவில் மகிழ்வையோ, துயரையோ உணர்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில், எல்லாம் இழந்த நிலையில்,
இருளெனும் ஒன்றில் ஆழ்ந்த ஜீவன்
சுகமெனும் அனுபவம் ஒன்றில் [தற்காலிகமாக] ஆழ்கிறது.

14.
முன்பிறப்பு நிகழ்வுகளால் ஆட்பட்ட ஜீவன்
மீண்டும் மீண்டும் இந்த விழித்தல், உறங்குதல்
என்னும் செயல்களில் ஈடுபடுகிறது
விழித்தல், கன்வு நிலை, ஆழ்துயில் என்னும்
முப்பெரும் நகரில் வாசம்செய்து மகிழ்கிறது
இதனிடம் இருந்தே எல்லாப் பிறழ்வும் பிறக்கிறது
இதுவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகி.
எல்லா மகிழ்வையும் தனக்குக் கொடுத்து,
பிரிக்கவொண்ணா தன்னிலை உணர்வைக் கொண்டதாய்
தன்னுள்ளே இந்த மூன்று நிலைகளையும் கலக்கிறது

15.
இதனின்றே மூச்சுக்காற்றும், மனமும், எல்லாப் புலன்களும்
ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் துணைகளும் பிறக்கின்றன.

16.
உன்னில் ஒளிரும் ஒரு பொறி
இவ்வுலகுக்கே ஆதரமான அந்தப் பொறி
அணுவுக்கும் சிறிதாய் விளங்கும் பொறி
அந்தப் பொறியே உயரிய ப்ரஹ்மன்
'அது'வே நீ! நீயே 'அது'வென அறிவாய்

*****************************

“கைவல்ய உபநிஷத்” [தொடர்ச்சி]

உமாஸஹாயம் பரமேஷ்வரம் ப்ரபு4ம்
த்ரிலோசனம் நீலகண்ட2ம் ப்ரஷாந்தம்
த்4யாத்வா முனிர்க3ச்ச2தி பூ4தயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் [7]

ஸ ப்3ர-ம்மா ஸ ஷிவ: ஸேந்த்3ர:
ஸோக்ஷர: பரம: ஸ்வராட்
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண:
ஸ காலோக்3னி: ஸ சந்த்ரமா: [8]

ஸ ஏவ ஸர்வம் யத்3பூ4தம்
யச்ச ப4வ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யுமத்யேதி
நான்ய: பந்தா2 விமுக்தயே [9]

ஸர்வபூ4தஸ்த2மாத்மானம்
ஸர்வபூ4தானி சாத்மனி
ஸம்பஷ்யன் ப்3ரஹ்ம பரமம்
யாதி நான்யேன ஹேதுனா [10]

ஆத்மானம் அரணிம் க்ருத்வா
ப்ரணவம் சோத்தராரணிம்
ஞான நிர்மத2னாப்4யாஸாத்
பாஷம் த3ஹதி பண்டித: [11]

ஸ ஏவ மாயா பரிமோஹிதாத்மா
ஷரீரமாஸ்தா2ய கரோதி ஸர்வம்
ஸ்த்ரியன்னபானாத்3 விசித்ரபோ4கை3:
ஸ ஏவ ஜாக்3ரத் பரித்ருப்திமேதி [12]

ஸ்வப்னே ஸ ஜீவ: ஸுக2து3:க்க2 போ4க்தா
ஸ்வ மாயயா கல்பித ஜீவலோகே
ஸுஷுப்திகாலே ஸகலே விலீனே
தமோபி4 பூ4த: ஸுக2ரூபமேதி [13]

புனஷ்ச ஜன்மாந்தர கர்மயோகா3த்
ஸ ஏவ ஜீவ ஸ்வபிதி ப்ரபு3த்3த4:
புரத்ரயே க்ரீடதி யஷ்ச ஜீவஸ்
ததஸ்து ஜாதம் ஸகலம் விசித்ரம்
ஆதா4ரம் ஆனந்தம் அக2ண்டபோ3த4ம்
யஸ்மின் லயம் யாதி புரத்ரயம் ச [14]

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ
மன: ஸர்வேந்த்ரியாணி ச
க்க2ம் வாயுர் ஜ்யோதிர் ஆப:
ப்ருதி2வீ விஷ்வஸ்ய தா4ரிணீ [15]

யத்பரம் ப்3ரஹ்ம ஸர்வாத்மா
விஷ்வஸ்யா யதனம் மஹத்
ஸூக்ஷ்மாத் ஸூக்ஷ்மதரம் நித்யம்
தத்வமேவ த்வமேவ தத் [16]

**********************

[அடுத்த பதிவில் முடியும்]

Read more...

Monday, August 11, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1

"தனியே... தன்னந்தனியே!"
"கைவல்ய உபநிஷத்" - 1

[உபநிடதங்களைப் பற்றிய இரண்டாவது பதிவு இது! முதல் பதிவான "கேனோபநிடதத்தை" மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு இதைப் படித்தால், இன்னும் நன்றாகப் புரியுமென நம்புகிறேன்! நான்கு பதிவுகளாக இது வரும்! இதன் மூலநூலை இறுதியில் அளிக்கிறேன்.]

"தன்னை எழுப்பும் துதி"

எனது கைகால் உறுப்புகள் வலிமை பொருந்தியதாகட்டும்!
எனது சொற்கள் வலிமை மிகுந்து சக்தியுடன் வெளிவரட்டும்!
எனது நாசி, கண்கள், செவிகள் மற்றும் இதர அவயவங்களும்
சக்தியடைந்து வலிமை பெற்றதாகட்டும்!
உபநிடதங்கள் யாவும் ப்ரஹ்மனைப் போன்றதே
அளப்பரிய உண்மை!
ப்ரஹ்மனை நான் மறவாதிருப்பேனாக!
ப்ரஹ்மன் என்னை மறக்காதிருக்கட்டும்!
நான் என்றுமே மறக்கப்படாதவனாகக் கடவன்!
ப்ரஹ்மனில் உறைந்து, உபநிடதங்களில் மிகவும் உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கும், இயற்கையானதும், இவ்வுலகின் அழியாக்கட்டளையாகிய அறத்தை நான் உணரக் கடவேனாக!
ஓம்! அமைதி! அமைதி! அமைதி!
*************************************


நூல்

1.
முனிவரில் பெருந்தகை அஷ்வலாயனன்
அடக்கத்துடன் நெருங்கி மிகப்பெரும் தேவனாம்
பிரமனைக் கேட்கலானார்:

"மிகப்பெருந்தேவனே! பிரமனே!
மிகவும் உயரியதும், மறைபொருளாய் இருப்பதும்,
அறிவிற் பெரியோரால் எப்போதும் பின்பற்றப்படுவதும்,
எந்த ஒன்றால் தங்களது பாவங்களைக் கழுவி
உயர் நிலையை அடைகிறார்களோ அந்த
ப்ரஹ்மனைப் பற்றிய அறிவை எனக்கு உபதேசிக்க வேண்டும்!

2.
அவரைப் பார்த்து மிகப்பெரும் தந்தையான
பிரமன் சொல்லலானார்:

உயரிய உண்மையை உணர்ந்திட
நம்பிக்கை, ஈடுபாடு, தியானம், யோகம்
இவற்றின் தேவை வேண்டும்.
செயல்களோ, பிள்ளைகளோ, பணமோ உதவாது
இவைகளைத் துறப்பதன் மூலமே
அழியாநிலை அடையக்கூடும்!

3.
சுவர்க்கத்தையும் விட உயர்ந்தது
ஒரு குகையில் மறைந்திருப்பது
மறைந்தும், ஒளிர் வீசி இருப்பது
அதிக முயற்சி எடுப்பவரே
இதனில் நுழைவார்!

4.
அனைத்தையும் துறந்தவர் எவரோ
உண்மை அறிவைத் தேடுபவர் எவரோ
அவரே விடுதலை என்னும் உயரிய நிலையை
துறத்தல், யோகம் என்பதன் மூலம்
அழியாநிலையினை அடைகின்றார்.

"5.
யாருமில்லா தனித்தொரு இடத்தில்
உடலினைத் தளர்த்தி எளிமையுடனே
வசதியாய் அங்கே அமர்ந்தபடி,
தூய்மை ஒன்றைத் துணைக்கொண்டு,
சிரசு, கழுத்து, உடல் மூன்றும்
ஒருநிலைப்பாடாய் வைத்தபடி,
அனைத்தையும் துறந்த இறுதிநிலையிலே,
புலன்கள் யாவையும் ஒருநிலைகொண்டு,
நம்பிக்கை, உறுதி கொண்டமனத்துடன்
குருவைவணங்கி, தனிநிலை கொள்வாய்.

6.
இதய நடுவினில் மலரும் கமலம்
அதனைத் தேடி அதனுள் ஆழ்ந்தால்
தூய்மையானதும், ஆசையற்றதும்,
துன்பமற்றதும், எண்ணமுடியாததும்,
படைப்பையும் தாண்டிய பரம்பொருள் ஒன்றை,
முடிவேயிலாது வடிவுமிலாது
புனிதமானதும், அமைதியானதும்
என்றுமிருப்பதும் எங்குமிருப்பதும்
அனைத்துக்கும் காரணமான
ப்ரஹ்மனை உள்ளில் இருத்திடுவாயே.
************************************
“கைவல்ய உபநிஷத்”

‘ப்ரத2ம க2ண்ட3:’

ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஷ்ருணுயாம தே3வா:
ப4த்3ரம் பஷ்யேமா க்ஷபி4ர் யஜத்ரா:
ஸ்தி2ரைர் ரங்கை3ர் துஷ்ட்டுவாக்3ம் ஸஸ்தனூபி:4
வ்யஷேம தே3வஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஷ்ரவா:
ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா3:
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர் த3தா4து:
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி:

ஓம் அதா2ஷ்வலாயனோ ப4க3வந்தம் பரமேஷ்டினம் உபஸமேத்ய உவாச --

அதீ4ஹி ப4க3வன் ப்3ரஹ்மவித்3யாம் வரிஷ்ட்டா2ம்
ஸதா3 ஸத்3பி4: ஸேவ்யமானாம் நிகூ3டா4ம்
யயாசிராத் ஸர்வபாபம் வ்யபோஹ்ய
பராத்பரம் புருஷம் யாதி வித்3வான் [1]

தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹஸ்ச
ஷ்ரத்3தா4 ப4க்தி த்4யான யோகா3த3வைஹி
ந கர்மணா ந ப்ரஜயா த4னேன
த்யாகே3னைகே அம்ருதத்வ மானஷு: [2]

பரேண நாகம் நிஹிதம் கு3ஹாயாம்
விப்4ராஜதே யத்3யதயோ விஷந்தி
வேதா3ந்த விஞ்ஞான ஸுநிஷ்சிதார்தா2:
ஸந்யாஸ யோகா3த்3யதய: ஷுத்3த4ஸத்வா: [3]

தே ப்3ரஹ்மலோகேஷு பரான்தகாலே
பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே
விவிக்த தே3ஷே ச ஸுகா2ஸனஸ்த2:
ஷுசி: ஸமக்ரீவஷிர: ஷரீர: [4]

அத்யாஷ்ரமஸ்த2: ஸகலேந்த்3ரியானி
நிருத்4ய ப4க்த்யா ஸ்வகு3ரும் ப்ரணம்ய
ஹ்ருத்புண்டரீகம் விரஜம் விஷுத்3த4ம்
விசிந்த்ய மத்4யே விஷத3ம் விஷோகம் [5]

அசிந்த்யம் அவ்யக்தம் அனந்தரூபம்
ஷிவம் ப்ரஷாந்தம் அம்ருதம் ப்3ரஹ்மயோனிம்
ததா2தி3 மத்3யாந்த விஹீனமேகம்
விபு4ம் சிதா3னந்த3ரூபம் அத்3பு4தம் [6]
*********************************
[தொடரும்]

Read more...

Thursday, August 07, 2008

"என்னுள்ளே வா!"

"என்னுள்ளே வா!"

ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!
தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்
கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றது
நாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்!

நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியது
ஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்தது
விருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்
வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்!

காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமா
மோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மா
நாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்
ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்!

என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்
முன்நின்ற மக்கள்தலை அதனை மறைத்தது
என்னெதிரே அப்போதொரு குழந்தை வந்தது
என்னைப் பார்த்துச் சிரித்தபடி அருகில் நின்றது!

பெண்ணழகைப் பார்த்துநின்றேன் கண்நிறைந்தது
வண்ணமுக வடிவினிலே உளம் நிறைந்தது
மீன்விழிகள் தேனிதழ்கள் பட்டுக்கன்னம்
பால்போலும் சிரிப்பலைகள் பட்டுப்பாவாடை!

அலைபாயும் கூந்தலையே அளவாக முடிந்திருந்து
விலையில்லாப் பொன்நகைகள் கைகளிலே அணிந்திருந்து
பிஞ்சுமலர்ப்பாதங்களில் கொஞ்சுகின்ற கொலுசணிந்து
வட்டநிறைப் பொட்டிட்டு கைகட்டி எதிரில்நின்றது!

தேவமகள் இவள்தானோ என்றொருகணம் நினைத்திட்டேன்
பூவினைப்போல் பொலிந்தவளைப் பார்த்தே சிரித்திட்டேன்
'சாமி பாக்கப் போகலியா'வென எனைப் பார்த்துக் கேடது
'கூட்டம் சற்று குறைந்தபின்னர்..' என இழுத்தேன்! பெண் சிரித்தாள்!

'உள்ளேயா? வெளியிலா?' என்றவளின் சொல்கேட்டு அதிர்ந்துபோனேன்
'என்னவிங்கு சொல்லுகிறாய்?' என ஒன்றும் புரியாமல் கேட்டேன்
'கூட்டமிங்கு குறையாது! நீதான் குறையணும்' என்று மேலும் சொன்னாள்
'நானெப்படிக் குறைவது?' மீண்டும் அவளைப் பார்த்துக் கேட்டேன்!

'பார்க்கணும்னு ஆசைவைச்சா, கூட்டமெல்லாம் ஒண்ணுமில்ல!
நோக்கமிங்கு ஒண்ணானா பாக்கறதும் ஒண்ணாயிடும்!
சேர்த்ததெல்லாம் தொலைச்சுபுட்டு சீக்கிரமா வந்துசேரு!'
சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள்! விக்கித்து நின்றேன் நான்!

எனைத் தேற்ற என்னன்னை என்முன்னே வந்தாளா?
எனைக் காட்டி எனைக் காட்ட என்னையேதான் தந்தாளா?
எனைக் குறையச் சொல்லியிவள் என்னவிங்கு சொல்லிப்போனாள்?
பிறர்குறையைப் பார்ப்பதிங்கு உனக்கெதுக்கு என்றாளா?

ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து
வேசமேதும் போடாமல் வீம்பெதுவும் செய்யாமல்
அசையாத மனத்துள்ளே அவளை வைத்திருந்தால்
பூசனைகள் தேவையில்லை தேவியவள் வந்திருப்பாள்!

ஆடிவெள்ளி நன்நாளில் அன்னையவள் அருள்வேண்டி
ஆலயத்துள் செல்லுகையில் அனைத்தையுமே மறந்திருப்போம்
அடிமனத்தில் அன்போடு அனுதினமும் நினைத்திருந்தால்
ஆலயமும் செல்லவேண்டா! அன்னையிவள் ஓடிவருவாள்!

படித்ததெல்லாம் பயிற்சியினால் மட்டுமே பயனாகும்
படித்ததுவும் பிடித்ததுவும் இத்தோடு போதுமிங்கு
படித்ததெல்லாம் பயின்றிடுவோம் நலிந்தவரை வாழவைப்போம்
அவரெல்லாம் சிரிக்கையிலே அங்கேநாம் அன்னையைக் காண்போம்!

ஏதோ ஒன்று புரிந்ததுபோல் இருந்தது
தலையைத் திருப்பி சன்னதியைப் பார்த்தேன்
கூட்டம் குறைந்திருந்தது! கர்ப்பக்கிரகம் தெரிந்தது!
அன்னை சிரித்திருந்தாள்! அன்போடு எனைப்பார்த்து!

அனைவருக்கும் [நாலாம்] ஆடிவெள்ளி வாழ்த்துகள்!

[பலநூல் படித்து நீயறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!]
இந்த வரிகளின் உந்தலே இக்கவிதை!

********************

Read more...

Wednesday, August 06, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3


முந்தைய பதிவு

காட்சி - 6

[சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை மறைத்தபடி! கண்ணன் தனியே உட்கார்ந்திருக்கிறான். கதிரவன் இன்னும் வரலை!]

ச: அவன் எப்போ டயத்துக்கு வந்திருக்கான். இப்பிடித்தான் லேட்டா வருவான். அதான் அவன் வழக்கமா செய்யற வேலை.

க: அப்பிடில்லாம் சும்மா பேசக்கூடாது. ஏதோ ஒரு தடவை உன் வீட்டுக்கு லேட்டா வந்ததை வைச்சுகிட்டு இப்பிடில்லாம் பேசாதேடா!

ச:: என் வீட்டுக்கு மட்டுமா? அவன் வீட்டுக்குப் போனபோதும்தான் அவன் இல்லை! திருடன்! திருடன்! சரி, சரி! எங்களைப் பார்க்காதே! அதோ அவன் வர்றான்! எங்களைக் கண்டுக்காத! விஷயத்தை ஒழுங்காப் போட்டு வாங்கு!

[கதிரவன் வந்து அமர்கிறான்.]

க: சொல்லுடா! எப்படி அந்த பொம்மை உன் வீட்டுக்கு வந்திச்சு?

கதி: எந்தப் பொம்மை! ஓ! அதுவா! ஒரு கடையில பார்த்தேன். பிடிச்சுது. வாங்கிட்டேன்.

சுகு: [மெல்லிய குரலில்] புளுகிறான். புளுகிறான்!!

க: எந்தக் கடை? எப்போ வாங்கினே?

கதி: அது... அது.. சௌக்கார்பேடையில ஒரு கடை.

க: அட்ரெஸ் கொடு.

கதி: எதுக்கு? நான் சொல்றதுல நம்பிக்கை இல்லியா?

க: அதுக்கில்லைப்பா. இதே மாதிரி ஒரு பொம்மையை நான் இன்னொரு இடத்துல பார்த்தேன். அதான்.

கதி: அப்போ என்ன? நான் அங்கேருந்து சுட்டுட்டேன்றியா? நல்லாருக்குடா! இவ்ளோதானா நீ என்னை நம்பறது? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

க: இதுக்குப் போயி நீ ஏண்டா வருத்தப் படணும்? அட்ரெஸைக் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்தானே! அதுல உனக்கு ஏன் தயக்கம்?

கதி: அதில்லேடா. அட்ரெஸ் மறந்துபோயிடுச்சு. கடையும் ஞாபகம் இல்லை. இதுக்காகவா என்னை வரச் சொன்னே! நல்ல ஆளுப்பா நீ! சரி, நான் கிளம்பறேன்.
[எழுந்து விரைகிறான்]

[பின் டேபிளில்]
மூ: செமத் திருடன்ப்பா இவன்! ஊரையே முழுங்கி ஏப்பம் விட்டுருவான் போலிருக்கே!

ச: எனக்கும் அப்பிடித்தான் தோணுது. இப்ப என்ன செய்யறது? இது என்னுதுதான்னு என்னால நிரூபிக்க முடியாது. அவன் சொல்லுதான் நிலைக்கும். போலீஸுக்கும் போக முடியாது.

மூ: நானே விட்டுக் கொடுத்த பொம்மை, இப்ப நம்ம யாருக்குமே இல்லாமப் போயிருச்சேன்னு நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்குப்பா. எதுனாச்சும் பண்ணனும்.

சு: என்ன பண்ண முடியும்? எனக்கு கிடைச்சது அவ்ளோதான். ஏதோ இப்ப கிடைச்ச இந்த பொம்மையை வைச்சு ஒப்பேத்தாலாம்னு பார்த்தேன்! எங்க அப்பனை இந்த ஜென்மத்துல நான் திருப்தி பண்ணப் போறதில்ல.

[சுகுமார் முகம் வருத்தமாக மாறுவதைப் பார்த்து நண்பர்களும் வருந்துகிறார்கள்.]

மூ: கவலைப்படாதேடா! எதுனாச்சும் பண்ணுவோம்! டேய் சுகு! அந்த பொம்மை உனக்குத்தான்!

[திரை]

காட்சி - 7


[கதிரவன் வீடு. கதவு தட்டும் ஓசை. கதிரவன் மனைவி எழுந்து சென்று திறக்கிறார். வெளியே ஒரு காவல்துறை அதிகாரி!]

கா.அ.: இது கதிரவன் வீடுதானே!

கதி.ம.: [பதறியபடி]ஆமாம். அவர் என்ன தப்பு பண்ணினாரு? எதுக்கு அவரைத் தேடுறீங்க? என்னங்க... இங்க வாங்களேன்!

கதி: யாரது? எதுக்கு இப்படி அலர்றே? யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?

கா.அ.: ஓ! நீங்கதன் கதிரவனா? சத்தம் போடாதீங்க! உங்களை நான் கைது செய்யப் போறேன்.

கதி: ஏன்?... எதுக்கு... வாரண்ட் இருக்கா? என்ன காரணம்?

கா.அ.: அதெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம். கொள்ளையடிச்ச, திருட்டுப்போன, பொருள்களை எல்லாம் நீங்க பதுக்கி வைச்சிருக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. இதோ.. இந்தக் கடிகாரம். அதோ.. அந்த தந்தப் பதுமை.... ஆ..ஆ! இதோ.. இந்தப் பொம்மை! இதே! இதே! இதுவேதான். இதைப் பத்தின விவரமான வர்ணனையோட எங்களுக்குத் தகவல் வந்திருக்கு! கொலை கிலையெல்லாம் கூட பண்ணுவீங்களோ! ரொம்பப் பயங்கரமான ஆளுப்பா நீ! இதுக்குள்ளா ஏதாவது வெடிகுண்டு வைச்சிருக்கியா நீ? உன்னை ஜெயில்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினாத்தான் உனக்கு புத்தி வரும்.

கதி.ம.: ஸார் ஸார்! ஸார்! கொஞ்சம் தயவு பண்ணுங்க. இவரு அப்படிப் பட்டவர் இல்லை. ரொம்ப நல்லவருங்க. அவரை விட்டிருங்க ஐயா! கெஞ்சிக் கேட்டுக்கறேன் உங்களை! என் அண்ணாவாட்டம் நினைச்சுக் கேக்கறேன் அண்ணா!

கா.அ.: என்னம்மா! இப்படி ஸெண்டிமெண்ட்டாப் போட்டுத் தாக்கறீங்க! சரி, நீங்க சொல்றீங்களேன்னு விடறேன். சரி! இந்தப் பொம்மையை மட்டும் நான் எடுத்துக்கறேன். மத்ததுக்கெல்லாம் இன்னும் ஆதாரம் இல்லை. உங்களுக்கு ஆட்சேபணைன்னா சொல்லுங்க. இல்லியா...ஸ்டேஷனுக்குப் போயி தீர்த்துக்கலாம்.

கதி.: சரிங்க! அதை நீங்களே எடுத்துக்கோங்க! எங்களை விட்டுருங்க!

கதி.ம.: ஆமாங்க! அதை எடுத்துகிட்டு எங்களை விட்டிருங்க!

கா.அ.: உங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. நல்லவங்க மாரி தெரியுது. உங்க முகத்துக்காக விடறேன். இனிமேலாவது ஒழுங்கா இருங்க!

[பொம்மையை லாவிக்கொண்டு செல்கிறார் காவல் துறை அதிகாரி]


[திரை]

காட்சி - 8

[சங்கர் வீடு. சங்கர், சுகுமார் உட்கார்ந்திருக்கிறார்கள். கதவைத் திறந்துகொண்டு மூர்த்தி போலீஸ் உடையுடன் உள்ளே நுழைகிறான். அவன் கையில் அந்தப் பொம்மை!!]

மூ: டட்டடைய்ங்கேய்!

சு:[ஆவலுடன் எழுந்து] டேய்! எப்பிடிடா!!!!!!!!!!!!!!

மூ: அதான் மூர்த்தி வேலை! சொல்ல மாட்டான்! செஞ்சிருவான்!

ச: சொல்லுடா! எப்பிடிடா இந்த பொம்மை கிடைச்சுது?

மூ: [சந்த்ரமுகி ரஜினி குரலில்] என்னைப் பார்! என் ட்ரெஸ்ஸைப் பார்! போலீஸா மாறியிருக்கும் மூர்த்தியைப் பார்! லக்கலக்கலக்கலக்கலக்கா!

ச: புரியுதுடா! புரியுது! அட்டகாச வேலைடா இது! எப்பிடிடா இதை செய்ய முடிஞ்சுது?

மூ: அதுக்கு..... உங்க தாத்தாவுக்கு நீ நன்றி சொல்லு! அவரோட ட்ரெஸ்தான் இதுக்கு உதவி செஞ்சுது! அவரோட ஆத்மா இன்னிக்குத்தான் சாந்தி அடைஞ்சிருக்கும்!

சு: [பொம்மையை மூர்த்தி கையில் இருந்து வாங்கியபடி] உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைடா! நண்பன்னா நீதாண்டா நண்பன்!

மூ: அட! இதுக்குப் போய் இப்படிப் பாராட்டறேயேடா! உனக்கு ஒண்ணுன்னா நாங்க விட்டுருவோமா?

[சொல்லியபடியே சுகுமார் முதுகில் பலமாகத் தட்டுகிறான்! சுகுமார் கையில் இருந்த பொம்மை அவன் கையில் இருந்து தவறி கீழே விழுந்து நொறுங்கி உடைகிறது!]

பெரிய நிசப்தம்!~ அனைவர் முகத்திலும் திகைப்பு!

[திரை]

---------------


இந்த நாடகத்தை உங்கள் தமிழ்ச் சங்கத்தில் நடிக்க விரும்பினால், எனக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, தாராளமாக நடியுங்கள் எனச் சொல்லிக் கொள்கிறேன்]

Read more...

Tuesday, August 05, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]
முன் பதிவு இங்கே!

காட்சி - 2

[சனிக்கிழமை காலை. மணி 8.10. சங்கர் பரபரக்கிறான். ரயிலைப் பிடிக்கணும் அவனுக்கு. இன்னும் கண்ணனும் அவன் நண்பனும் வரவில்லை. கிளம்ப நினைக்கிறான். அப்போது கண்ணன் இன்னொரு ஆளுடன் நுழைகிறான்.]

ச: [சற்று கோபத்துடன்] என்னடா, இவ்ளோ லேட் பண்ணிட்டே! சரி, சரி, இந்தா சாவியைப் பிடி. இதான் உன் ஃப்ரெண்டா? வீட்டை ஒழுங்கா பார்த்துக்கோங்க ஸார்.

மூ: மன்னிச்சுக்கோடா. இவனைக் கூட்டிகிட்டு வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இவன் பேரு கதிரவன். என்னமோ சிறுதொழில்னு சொல்றாங்களே! அதைப் பண்ணிகிட்டு இருக்கான். சேலையூர் தாண்டி இருக்கு இவன் வீடு. நாளைக்கு ஒரு ரெண்டு மூணு பேரை இங்கே சென்னையில பார்க்கணுமாம். அதுக்குத்தான் இங்கியே ஒரு இடம் இருந்தாத் தேவலைன்னு சொன்னான். நீதான் ஊருக்குப் போறியேன்னு தான் உன்னைக் கேட்டேன். கதிரவன், இவந்தான் சங்கர். என்னோட நெருங்கிய நண்பன். இதை உங்க வீடாட்டமே நீங்க நினைச்சுக்கலாம்.

ச: [மனத்துக்குள்] அடப் பாவி! விட்டா, வீட்டையே எழுதிக் கொடுத்திருவான் போலிருக்கே!]
[முகத்தில் ஒரு சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு]
அ..அ.. ஆமாம். தாராளமாத் தங்குங்க. உங்க வீடாட்டமே நினைச்சுக்கோங்க, கதிரவன்.

கதி: உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க கவலையே படாதீங்க. கண்ணன் சொன்னான். நான் இங்க தங்கறதோட மட்டுமில்லாம, போறப்ப, உங்க வீட்டையும் சுத்தப் படுத்தி திங்கள்கிழமை நீங்க வரும்போது பளபளன்னு வைச்சிடறேன்.

ச: அதெல்லாம் தேவையில்லை. எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம். எனக்கு இப்பிடி அலங்கோலமா இருந்தாத்தான் பிடிக்கும்!

கதி: ஹ!ஹ! நல்லா ஜோக் அடிக்கறீங்க ஸார்! எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. நான் என்னால முடிஞ்ச உதவியைச் செய்துதான் ஆகணும். எனக்கும் இதெல்லாம் செய்யப்பிடிக்கும்.

ச: சரி! உங்க இஷ்டம். இந்தாங்க சாவியைப் பிடிங்க.

கதி: நம்ம வீட்டுக்கு ஒரு நாளு நீங்க சாப்பிட வரணும். உங்களுக்கு வேற ஒண்ணும் ப்ரொக்ராம் இல்லேன்னா, வர்ற செவ்வாய்கிழமை வாங்களேன். கண்ணன் நீங்க உங்க நண்பரைக் கூட்டிகிட்டு வாங்க. இது என்னோட அன்புக் கட்டளை. சரியா?

க: அவ்ளோதானே! கவலையை விடு. நான் கூட்டிகிட்டு வரேன்.




ச: அப்போ நான் வர்ட்டா! பாக்கலாண்ண்டா கண்ணா! வறேன் மிஸ்டர் கதிரவன்!

[சங்கர் கிளம்புகிறான்.]

[திரை]

காட்சி - 3

[சங்கர் வீடு. திரும்பி வந்தவன், ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்து அதிசயிக்கிறான். சுகுமார் உடன் இருக்கிறான்.]

ச: டேய்! என் வீடா இது? அந்த ஸோஃபாவைப் பாரேன். எவ்ளோ சுத்தமா இருக்கு? இந்த சமையலறையைப் பாரேன்! இது என்னுதான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!

சு: ஆமாண்டா! ஃப்ரிட்ஜ் கூட சுத்தமா இருக்கு! வேண்டாதையெல்லாம் தூக்கியெறிஞ்சு, ரொம்ப நல்லா அடுக்கி இருக்கு! என்னாலியே நம்ப முடியலை. கதிரவன் ரொம்......ப நல்லவண்டா!

ச: வீட்டை இது மாதிரி அப்பப்ப கொடுக்கறது கூட நல்லதுதான்னு நினைக்கற மாதிரி பண்ணிட்டுப் போயிட்டாண்டா கதிரவன்! நீங்களும் இருக்கீங்களே!

சு: உலகத்துல எங்களைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்றதுக்கு உதாரணம் நம்ம கண்ணனோட கதிரவன்.

ச: நீ!...... நீ சொல்றே.... நல்லவன்னு! மேல ஒரு வார்த்தை பேசினே, கொலை விழும் இங்க! ஒரு துரும்பை எடுத்துப் போட்டிருப்பீங்களாடா நீங்கள்லாம்! சரி, சரி! செவ்வாய்கிழமை சாப்பிட வரச் சொல்லி இருக்கான் அவன்! கண்டிப்பா போய் நன்றி சொல்லணும். அதுக்காகவே போகணும்.

சு: போயிட்டு வாடா! இது மாரி ஆளுங்க ரொம்பவே அபூர்வமாத்தான் கிடைப்பாங்க! விட்டுராதே! [மனசுக்குள்] சீக்கிரமா அந்த ஆளைத் திருத்தணும். இதெல்லாம் நல்லால்லே! நம்ம பொழைப்பைக் கெடுத்துருவான் போலிருக்கே! ஏதாவது பண்ணனும்.


[திரை]

காட்சி - 4

[கதிரவன் வீடு. கண்ணனும் சங்கரும் நுழைகிறார்கள். கதிரவன் மனைவி அவர்களை வரவேற்கிறார்]

கதி.மனைவி: வாங்க வாங்க! உங்களைப் பத்தித்தான் அவர் சொல்லிக்கிட்டிருந்தாரு. நீங்க செஞ்ச உதவியை எங்களால மறக்கவே முடியாது. இந்தக் காலத்துல யாருங்க தன்னோட வீட்டை அப்டி 'டக்'குன்னு கொடுப்பாங்க! நீங்க கொடுத்தீங்களே! ரொம்பப் பெரிய மனசுங்க உங்களுக்கு!

ச: [சற்று கூச்சத்துடன்] அப்படி என்னங்க நான் செஞ்சிட்டேன்? என் நண்பன் சொன்னான். நான் சரின்னேன். இதுக்குப் போயி இவ்ளோ புகழறீங்களே! கதிரவன் எங்கே காணும்?

கதி.ம: இல்லீங்க! இதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய மனசு வேணும்! அவரு இப்ப வந்திருவாரு. சரி, உட்காருங்க. நான் போய் டீ போட்டு கொண்டு வரேன்.
[கதிரவன் மனைவி செல்கிறார். சங்கர் எழுந்து வரவேற்பறையைப் பார்வையிடுகிறான். அவன் பார்வை ஒரு இடத்தில் குத்திடுகிறது! அங்கே......... அதே பொம்மை!!!!!!!!!!!!!!]

ச: கண்ணா!........... இதோ பார்த்தியா?

க: என்னடா? என்ன ஆச்சு? மறுபடியும் எதுனாச்சும் அதிசயம் நிகழ்ந்திருக்கா? எதுக்கு இப்படி குதிக்கறே!

ச: அதோ... அதோ... பார்த்தியா? அதே பொம்மை!

க: எந்த பொம்மை? எனக்கு ஒண்ணும் புரியலை நீ சொல்றது!

ச: ஓ! நீ அப்ப இல்லேல்ல! அதான் உனக்குத் தெரியலை! இந்தப் பொம்மையைத்தான் சுகுமார் தனக்கு வேணும்னு சொன்னான். நானும் ஒரு தப்பாட்டம் ஆடி, மூர்த்தி கிட்டேருந்து பிடுங்கி, அதை அவனுக்குக் கொடுத்தேன். இப்போ அது இங்க! இரு.. இரு! இதுதான் அதுவான்னு இப்பவே செக் பண்ணிடறேன்.

[அலைபேசியை எடுத்து மூர்த்தியை அழைக்கிறான்.]

ச: ஹலோ! மூர்த்தி???

மூ: என்னடா? என்ன விஷயம்?

ச: நீ இப்பவே என்னோட வீட்டுக்குப் போய்....

[கதிரவன் மனைவி தேநீர்த்தட்டுடன் உள்நுழைகிறார்! சங்கர் பேச்சை மாற்றுகிறான்]

ச: சரிடா! நாளைக்குப் போகலாம் சினிமாவுக்கு. இப்ப நான் கதிரவன் வீட்டுல கண்ணனோட இருக்கேன். அப்புறமாப் பேசலாம் சரியா! என்ன? சரி. சரி. அம்மாவைக் கேட்டதாச் சொல்லு. நாளைக்குப் பேசலாம். பை!

[அவசர அவசரமாக அணைக்கிறான் அலைபேசியை!]

கதி.ம: யாருங்க?

ச: ஒண்ணுமில்லை. என்னோட நண்பன் மூர்த்தி. இப்ப பிஸியா இருக்கேனு சொல்லிட்டேன். இந்த டீயை மிஸ் பண்ண முடியுமா? [அசடு வழிகிறான்!]

: [கண்ணனிடம் மெலிய குரலில்] இதேதாண்டா! திருடிட்டாண்டா உன்னோட நண்பன்!

க: பிரச்சினை பண்ணாதேடா~! உண்மையைத் தெரிஞ்சுக்காம எதுவும் சொல்லாதே! எனக்கு அவனால கொஞ்சம் காரியம் ஆக வேண்டியிருக்கு. ஏதாவது சொல்லி கெடுத்துறாத.

கதி.ம: சாப்பிட வாங்க! எல்லாம் தயாரா இருக்கு!

ச: இல்லீங்க! எனக்கு ஒரு அவசர வேலை வந்திருச்சு. நான் உடனே போகணும். மன்னிச்சுக்கங்க. இன்னொரு நாளைக்கு வரேன்.

[கண்ணன் தடுத்தும் கேளாமல் விரைவாக வெளிச் செல்கிறான் சங்கர். கண்ணனும் கூடவே செல்கிறான்!]

[திரை]

காட்சி - 5

[சங்கர் வீடு. சுகுமார், மூர்த்தி, கண்ணன் எல்லாரும் இருக்கிறார்கள்.]

ச: திருடிட்டான்யா..... திருடிட்டான்! வேணும், வேணும். .வீட்டை அவங்கிட்ட கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! ச்சே! இப்பிடிப் பண்ணுவான்னு நினைக்கலியே நான்.

க: எதையும் ஆராயாம சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரக் கூடாது!

சு: என்னடா நீ! இங்க இருந்திச்சு ஒரு பொம்மை. நானும் மூர்த்தியும் அதுக்காக ஆக்கு பாக்கு ஆட்டம் கூட ஆடினோம்! இப்ப அது இங்க இல்லை! அது அங்க இருக்குன்றான் சங்கர்! இதுக்கு என்னடா அர்த்தம்?

க: ஒரு அர்த்தமும் இல்லை. இங்க இருந்திச்சுன்னுதுக்கு என்ன ஆதாரம்? இதுக்கு முன்னாடி நான் இங்க ஒரு பொம்மையும் பர்த்ததில்லை. அது அங்க எப்படி இருக்குன்னு அவனைக் கேட்காம நாமளா எப்படி ஒரு முடிவுக்கு வர்றது? எதுக்கும் ஒரு நியாயம் வேணாமா?

மூ: நீ சொல்றது நல்லா இருக்குடா! நானும் சுகுவும் ஆக்கு பாக்கு போட்டதெல்லாம் உனக்கும் இப்பத் தெரியுந்தானே! நானே பெரிய மனசா விட்டுக் கொடுத்தது இப்ப அங்கே இருக்குன்னா அதுக்கு என்னடா அர்த்தம். சங்கர் சொல்றது சரிதான். இது ஒரு அப்பட்டமான திருட்டு. வீட்டுல தங்க வந்தவன், வீட்டைக் க்ளீன் பண்றேன்னு சொல்லிட்டு, இப்ப க்ளீனே பண்ணிட்டுப் போயிட்டான்னுதானே அர்த்தம்?

க: அப்படியெல்லாம் அபாண்டமா ஒருத்தன் மேல பழி போடக்கூடாது. அவன் ரொம்ப நல்லவன். இப்படியெல்லாம் செஞ்சிருப்பான்னு எனக்குத் தோணலை!

ச: ஓ! உனக்குத் தோணலைல்லை? அவனுக்கு ஒரு ஃபோன் போடு! என்னன்னு கேட்டுருவோம்!

[கண்ணன் ஒரு வருத்தமான முகத்துடன் கதிரவனைக் கூப்பிடுகிறான்]

க: ஹலோ! கதிரவன்!

கதி: என்ன கண்ணன்? என்ன விசேஷம்?

க: ஒண்ணுமில்லை. உன்னை ஒரு கேள்வி கேட்கணும்.

கதி: கேளுப்பா!

க: உங்க வீட்டுல ஒரு பொம்மை ஷோகேஸுல புதுசா இருக்கே. அதைப் பத்தித்தான்.

கதி: ஓ! அதுவா! நானே சொல்லணும்னு நினைச்சேன். நாம இதைப் பத்தி தனியாப் பேசலாமா! நாளைக்கு சவேராவுக்கு வாயேன். சொல்றேன்.

க: சரி. நாளை மாலை 6 மணிக்கு சவேராவுல சந்திக்கலாம். சரியா.

கதி: சரி. பை.

க: பை

க: [சங்கரைப் பார்த்து] நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு சவேராவுக்கு வரச் சொல்றான். இதைப் பத்திச் சொல்லுவானாம்.

சு: [ஆவேசத்துடன்] நாங்களும் வருவோம். என்ன சொல்றான்னு ஒளிஞ்சிருந்து கேப்போம்!

க: எனக்கென்னப்பா இதுல? தாராளமா வாங்க! ஏன் சுகு இப்படி ஆவேசப்படறான்னு எனக்குப் புரியலை!

ச: நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே கண்ணா! அவனுக்கு அந்தப் பொம்மை மேல ஒரு கண்ணு. அதுல ஒரு பெரிய கதை இருக்கு. அதான் இப்படில்லாம் பேசறான்.

மூ: எனக்கென்னவோ இது திருட்டுன்னுதான் தோணுது.

ச: எல்லாம் நாளைக்குத் தெரிஞ்சிடப் போவுது. எல்லாம் என் தலைவிதி! எனக்குன்னு வந்து வாய்ச்சீங்களே!

[திரை]
*******************

[நாளை நிறைவடையும்!]

Read more...

Monday, August 04, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [1]

"பொம்மலாட்டம்"
[நகைச்சுவை நாடகம்]
[முதல் பகுதி]


"பிரவாகம்" ஆண்டு மலருக்காக நான் எழுதிய நாடகத்தை இங்கு அளிக்கிறேன்.

காட்சி-1

[இடம்: சங்கர் வீடு]

[சங்கர் உட்கார்ந்திருக்கிறான். அவனது நண்பன் சுகுமார் எதையோ கொறித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு சுகுமார் எழும் முன், தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்துகொண்டு, மூர்த்தி வேகமாக உள்ளே நுழைகிறான்!]


மூ: டேய், சங்கர், என்னடா இது? இப்படி நீ பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை.

ச: [ஒன்றும் புரியாமல்] என்ன பண்ணினேன் நான்? ரெண்டு நாளா வேலைக்கே போகாம இங்கியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கேனே, அதையா சொல்றே?

மூ: அதான் நீ வழக்கமா செய்யற வேலையாச்சே! உனக்கு போய் இவ்ளோ சம்பளம் கொடுத்து ஒருத்தன் வேலை கொடுத்தானே! அவனை நினைச்சா எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்குடா! சிலைதான் வைக்கணும் அவனுக்கு.

ச: போறும், போறும், நிறுத்து! விட்டா ஒரேயடியா அளந்துகிட்டே போவியே! இப்ப நான் என்ன பண்ணினேன்? அதைச் சொல்லு சொல்லு.

மூ: மேட்ச் நடக்குதில்ல. ஏற்பாடா எல்லாம் தயார் பண்ணிட்டு, சுகுவை மட்டும் கூப்பிட்டு ரெண்டுபேரும்.... தோ.. தோ பாரு! முந்திரிப்பருப்பு, சிப்ஸ், பியர்... அடுக்குமாடா இது!.... என்னை ஏண்டா கூப்பிடலை!

[அவன் பார்வை ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டி மேல் விழுகிறது.]

மூ: இதென்ன பெட்டி? இதுல என்ன இருக்கு?

சு: ஓ! அதுவா? அதுல சில பழைய துணிங்க இருக்கு. எங்க தாத்தா காலத்துது அது! தூக்கிப் எறியப் போறேன். உனக்கு எதுனாச்சும் வேணும்னா எடுத்துக்கோ! தொந்தரவு பண்ணாதே! டெண்டுல்கர் பேட்டிங்!

[மூர்த்தி அவைகளை அலசுகிறான். அந்தக்கால போலீஸ் உடை ஒன்றை எடுக்கிறான்!]

மூ: அட! இது ரொம்ப நல்லாருக்கே! நான் எடுத்துக்கறேன்.

ச: [அவனைப் பார்க்காமலே] சரி, எடுத்துக்கோ! இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பண்ணினே! இந்த ஆட்டத்தைப் பாருடா! அதை விட்டுட்டு...!

மூ: ஏன் சொல்ல மாட்டே! புது மாதிரியா பழைய ட்ரெஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு! ரொம்ப நன்றிப்பா!

[இன்னும் கிளறுகிறான். ஒரு பழைய பொம்மை கிடைக்கிறது. ஆவலுடன் அதை கையில் எடுக்கிறான். ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுகுமார் தற்செயலாக அதைப் பார்க்கிறான்.]

சு: ஆ.......! டேய்! அதைக் கொடு! நான் பார்க்கிறேன்.

மூ: [அவனிடம் கொடுக்காமல், தன் கையில் வைத்தபடியே] கொடுக்க மாட்டேன்! இதோ இப்பிடியே நல்லா பாத்துக்கோ!

சு: என்னால நம்பவே முடியலை! அதே மாதிரி இருக்கே!

[சொல்லியபடியே அதை மூர்த்தி கையில் இருந்து பிடுங்கி அதைப் பார்க்கிறான்]

ச: எதே மாதிரி? நீ ஜொள்ளு விடற எத்தனையோ பொண்ணுங்கள்ல ஒண்ணு மாதிரியா? சொல்லித் தொலைடா!

சு: இல்லைடா. சின்ன வயசுல எங்க வீட்டுல இதே மாதிரி ஒரு பொம்மை இருந்திச்சு. ஒருநாளு நான் அதை எடுத்து விளையாடிக்கிட்டிருந்தேன். அப்போ கைதவறி கீழே விழுந்து அது உடைஞ்சு போச்சு. அதுக்கு என்னை எங்க அப்பா அடிச்ச அடி இருக்கே... அப்பப்பா... இப்ப நினைச்சாலும் வலிக்குதுடா! என்னமோ வீனஸ் சிலைய நான் உடைச்ச ரேஞ்சுக்கு என்னை இப்பவும் குத்திக் காட்டுவாரு. டேய்! டேய்! எனக்கு அதைக் கொடுறா! எங்க அப்பா மூஞ்சியில அதை விட்டெறிஞ்சு என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கணும். இதை நான் எடுத்துக்கறேன்.

[மார்போடு அணைத்துக் கொள்கிறான். மூர்த்தி பதறுகிறான்.]

மூ: அதெல்லாம் நடக்காது. நான்தான் முதல்ல பார்த்தேன். எனக்குத்தான் அது!

[சுகுமார் கையிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறான்.]

சு: தர மாட்டேன்! எனக்குத்தான் இது ரொம்பவே வேணும்.

மூ: தாடா!

சு: முடியாது!

மூ: தாடான்னா! [தள்ளுகிறான்]

சு: முடியாதுடா! [திமிறுகிறான்]

ச: [அலுப்புடன்] டேய்! டேய்! என்னடா இது சின்னப் புள்ளைங்க மாதிரி! கொஞ்சம் விவேகமா உங்க வயசுக்குத் தகுந்த பெரிய ஆளுங்க மாதிரி நடங்கப்பா!

மூ: அப்போ சரி! உனக்கும் எனக்கும் பந்தயம்! ஈனா மீனா டீக்கா வரியா?

ச: வெளங்கிருவேடா நீ~!

சு: அதெல்லாம் வேண்டாம்! ஆக்கு பாக்கு வேணா ஆடலாம்!

ச: நீ அவனை விட ரொம்பவே மோசம்ண்டா! எனக்கென்ன! ஏதோ ஒரு முடிவுக்கு வாங்க! உங்களைத் திருத்தவே முடியாது! இதன் பெரிய ஆளுங்க ஆடற விளையாட்டா? உங்களைத் திருத்தவே முடியாது! இதோ சிக்ஸர் அடிச்சுட்டான் டெண்டுல்கர்!

[மேட்சைப் பார்க்கிறான்]

மூ: சொல்லு! நான் ரெடி! கையை நீட்டு! ஆனா, ஒரு கண்டிஷன்! என் கையிலதான் முதலில் நீ தட்டணும்! சரியா!

சு: நான் ரெடி!

ச: அட! இது இந்த மேட்ச்சை விடவும் நல்லாயிருக்கே! நான் தன் அம்ப்பையர்! என் முடிவுதான் ஃபைனல்! தொடங்குங்கடா!

சு: சரி! [மூர்த்தி கையைத் தொட்டு] ஆக்கு

மூ: [சுகுமார் கையைத் தொட்டபடியே] பாக்கு

சு: வெத்திலை

மூ: பாக்கு

சு: டாம்

மூ: டூம்

சு: டைய்யா

மூ: இஸ்கனக்கற

சு: கோக்கனக்கற

மூ: ஹைய்யா

[சுகுமாரின் கையில் தட்டுகிறான்! குதிக்கிறான்!]

மூ: ஹைய்யா! நான் தன் கெலிச்சேன்! எனக்குத்தான் பொம்மை!

[சுகுமாரின் தேவையையும், அவன் முகம் வாடுவதையும் பார்த்த சங்கர், தனது 'நடுநிலைமை'த்தன்மையை நிலை நாட்டும் விதமாக]

ச: இங்கே நான் தான் அம்ப்பையர் என்பதை ரெண்டு பேரும் மறந்திட்டு ஆளாளுக்கு என்னமோ சொல்லிகிட்டு இருக்கீங்களே! டேய்! மூர்த்தி, நீ யார்கிட்ட முடிச்சே?

மூ: 'ஹைய்யா'ன்னு சுகு கையில.

ச: அப்ப, அவன் தான் ஜெயிச்சான். பொம்மை அவனுக்குத்தான். இதான் நாட்டாமை தீர்ப்பு!

மூ: [பரிதாபமாக] இது அளுகுணி ஆட்டம். யார்கிட்ட முடியுதோ, அவங்கதானே அவுட்டு? அப்பிடித்தானே இந்த ஆட்டம் நாங்க ஆடுவோம்.

ச: அது எங்கே ஆடுவேன்னு எனக்குத் தெரியாது. இங்க... இந்த வீட்டுல... இதான் தீர்ப்பு. நீ இதுக்கு அப்புறம் வரவேண்டிய மூணு வார்த்தையைச் சொல்லலை.கொடுறா பொம்மையை அவன்கிட்ட!

மூ:என்னடா அது?

ச: "என்... பேரு.... கொய்யா"...! அதை நீ சொல்லலை. அதும்படி பார்த்தா அது உன்கிட்ட தான் முடியுது. சுகுதான் ஜெயிச்சான். நீ அவுட்டு!

மூ: ரெண்டு பேரும் சேர்ந்து என்னமோ தப்பாட்டம் ஆடுறீங்க! சரி, சரி, இதோ, எடுத்துகிட்டு ஒழி!

[பொம்மையை வீசுகிறான் சுகுமாரிடம். கீழே விழுந்து உடையப்போகும் முன், சுகுமார் அதை லாவகமாகப் பிடித்து, மூர்த்தியை கோபத்துடன் பார்க்கிறான்.]

சு: திரும்பவும் உடைக்கப் பார்த்தியேடா! நல்லவேளை தப்பிச்சுது. மறுபடியும் எங்க அப்பாகிட்ட போய் கொடுக்கலாம்னு இருந்ததை, கெடுக்கப் பார்த்தியே!

ச: சரி விடு! என்னமோ தனக்குக் கிடைக்கலியேன்னு ஒரு ஆத்திரத்துல செஞ்சுட்டான். அதான் உடையலியே!
[மூர்த்தியை சமாதானப்படுத்தும் விதமாக] சரிடா, மூர்த்தி, பொம்மைக்குப் பதிலா, இன்னும் வேற எதுனாச்சும் வேணும்னாலும் எடுத்துக்கோ. நான் எப்படியும் அதையெல்லாம் தூக்கித்தான் போடப்போறேன். என்னை கொஞ்சம் மேட்ச் பார்க்கவிடுறீங்களா, இப்பவாவது? நல்லா விளையாடினீங்கடா ரெண்டு பேரும், பெரிய ஆளுங்க விளையாட்டு... ஆக்கு பாக்கு! வேற அறிவுபூர்வமா ஒண்ணுமே கிடைக்கலியா உங்க ரெண்டு பேருக்கும்!

[சிரிக்கிறார்கள் மூவரும்.]

ச: [சுகுமாரைப் பர்த்து மெல்லிய குரலில்] போனாபோவுதுன்னு உனக்கு சரி பண்ணினேன். மறந்துறாதே!

சு: தெரியுண்டா! ரொம்ப நன்றிடா!

[மீண்டும் கதவு தட்டும் ஓசை. கண்ணன், இன்னொரு நண்பன், நுழைகிறான்.]

க: என்னடா? வீடு இவ்ளோ களேபரமா இருக்கு! துணிமணில்லாம் சிதறிக் கிடக்குது! க்ளீன் பண்ணமாட்டியோ! நீங்கள்லாம் பார்த்துகிட்டுத்தானெ இருக்கீங்க? எடுத்து வைக்க மாட்டீங்களாடா?

[சொல்லியவாறே, துணிகளை எடுத்து வைக்கிறான்.]

ச: பார்த்தீங்களாடா! எவ்ளோ பொறுப்பா பண்றான். நீங்களும் இருக்கீங்களே, தண்டத் தடிமாடாட்டம்.

சு: [பொறாமையுடன்] உன் வீடுதானே! நீயே செய்யலாமே! கண்ணன் ஏன் இப்பிடிப் பண்றான்னு கொஞ்சம் விசாரி. சும்மானாச்சும் எவனும் இப்படிச் செய்யமாட்டான்! டேய்! இன்னாடா சமாச்சாரம்? எதுக்கு இப்போ திடீர்னு இவ்ளோ அக்கறை உனக்கு? எத்தினி தபா இங்க வந்திருப்பே? எப்பவாவது இப்டி பண்ணியிருக்கியாடா? எதுக்கு இந்த ஐஸ் வைக்கறே?

க: [அசடு வழிந்தபடியே] அதெல்லாம் ஒண்ணுமில்லை, மாம்ஸ்!. ம்ம்,... எதுக்கு நீ எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படறே ? அதிருக்கட்டும், சங்கர்... நீ இந்தவாரம் சனி, ஞாயிறு எங்கியோ வெளியே போறேன்னு சொன்னியே! போறேதானே!

சு: அதானே பார்த்தேன்! சோழியன் குடுமி சும்மா ஆடாதே! மச்சி, இதுல ஏதோ விவகாரம் இருக்கு! நிதானமா ஆடு!

ச: நீ சும்மா இருடா! எல்லாத்துலியும் எதாவது சொல்லிகிட்டு! [கண்ணனைப் பார்த்து] ஆமாம். திருச்சி வரைக்கும் ஒரு வேலையப் போகவேண்டியிருக்கு. திங்கள்கிழமைதான் வருவேன். அதுக்கென்ன இப்ப?

: [தயங்கியபடியே] இல்லை. உன்னோட வீடு காலியாத்தானே இருக்கும்?

ச: [சற்றே எரிச்ச்சலுடன்] ஆமா. உனக்கு என்ன வேணும்? சொல்லித் தொலைடா.

க: என்னோட நண்பன் ஒருத்தனுக்கு இந்த வாரம் தங்கறதுக்கு ஒரு இடம் தேவைப்படுதாம். என்னைக் கேட்டான். உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா....!!!

சு: அப்டி வா வழிக்கு! எனக்குத் தெரியும் இவன் நுழைஞ்சவுடனேயே ரொம்ப ஜரூரா க்ளீன் பண்றானே, என்னடா ஏதுன்னு! . சும்மா ஆடமாட்டியே நீ! அதுக்குத்தான் வீடு சுத்தமா இல்லைன்னு பீலா விட்டியா? உன் நண்பன் தங்கறதுக்காக இப்பவே க்ளீன் பண்றியா? [சிரிக்கிறான்]

[கண்ணன் அசடு வழியச் சிரிக்கிறான்]

ச: தப்புதண்டா பண்றதுக்கு இல்லைதானே!?

க: சேச்சே! அதெல்லாம் இல்லைடா! அப்படியெல்லாம் செய்ய நான் விடுவேனா? அவனுக்கு கல்யாணம்லாம் ஆகி, ஒரு அழகான மனைவியும் இருக்காடா! அவன் அப்பிடில்லாம் பண்ற ஆளு இல்லை. இல்லை. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? அது மாதிரி ஆளுங்களைத்தான் இங்க அழைச்சுகிட்டு வருவேனா? ரொம்ப நல்லவண்டா அவன்! வேணும்னா, அவனை விட்டே இந்த வீட்டையும் சுத்தம் பண்ணிவைக்கச் சொல்றேன்... வாடகைக்குப் பதிலா. எனக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கு. அதுக்குத்தான் கேட்டேன்.

ச: நீங்கள்ல்லாம் கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன். சரி, சரி, நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நான் கிளம்புவேன். அதுக்கு முன்னால உன்னோட நண்பனைக் கூட்டிகிட்டு வா. நானும் அவனை ஒரு தடவை பார்த்திடறேன்.

க: ரொம்ப நன்றிடா! நாளைக்கு அவனையும் இங்கே வரச் சொல்றேன்.

ச: சரி. இப்ப கிளம்புறீங்களா? நான் சாப்பிடப் போகணும்.

சு: நானும் வரேன்!

ச: [சுகுமாரிடம்] உன் பொம்மையை எடுத்துக்கோ!

சு: இப்ப வேணாம். இங்கியே இருக்கட்டும். 2 நாள் கழிச்சு வந்து எடுத்துகிட்டு போறேன். ஊருக்குப் போறப்ப எடுத்துகிட்டுப் போறேன். திடீர்னு கொண்டுபோய் அவரை ஸர்ப்ரைஸ் பண்ணனும்.

ச: சரி, அப்ப கிளம்பு.

க: நானும் வரேன்!

மூ: நான் வரலை. எனக்கு கொஞ்சம் வெளிவேலை இருக்கு.

[கிளம்புகிறார்கள்.]

[திரை].
*****************

[அடுத்த பகுதி வியாழனன்று வரும்]

Read more...

Friday, August 01, 2008

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"




அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,

வணக்கம்!
நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.
முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே!


உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும் எனக்குப் பிடிக்கும்.


இப்போதெல்லாம் உங்க படங்கள் அடிக்கடி வருவதில்லை.
அதுவே என்னைப் போன்ற பல கோடி ரசிகர்களுக்கு, உங்க படம் வந்தவுடனேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலையும், ...ஏன்?...சிலருக்கு வெறியையே!.... உண்டாக்குகிறது என்பது உங்களுக்கும் தெரியும்.


அதற்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்
உங்களோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் பரிசு தந்த இந்த அப்பாவி, மடத்தனமான ரசிகர்களை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா?
"குசேலன்" பார்த்துவிட்டு இப்பத்தான் வந்தேன்.

இதன் மூலமான 'கத பறையும் போள்' என்ற மலையாளப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.
இதில் நீங்கள் நடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது இது இன்னமும் சிறப்பாக வரும் என நம்பினேன்.
ஏனென்றால், இது ஒரு கெடுக்க முடியாத கதை.
அப்படி எதுவும் கிடையாது... மனது வைத்தால் அதுவும் முடியும் என டைரக்டர் பி. வாசு நிரூபித்திருக்கிறார்.
உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர, வேறு எதைப் பற்றியும் நீங்களோ, அவரோ கவலைப்படவில்லையோ எனத் தோன்றுகிறது!

படமா சார் இது?
நீங்க நடிக்கிறீங்களேன்னு பார்க்க வரும் அத்தனை பேரையும் மனதில் வைத்தாவது, நீங்கள் இதன் தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதை ஆலோசனையாக அல்ல; ஒரு குற்றச்சாட்டாகவே உங்கள் மீது சுமத்துகிறேன்!

தயாரிப்பாளர், இயக்குநர் சம்பந்தப்பட்ட விஷயம் இது என நீங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது.
உங்களுக்கு கொட்டித்தரக் காத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை இது.
அதை செய்யத் தவறி விட்டீர்கள், ரஜினி சார்!

நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
அதுவும் அந்தக் கடைசி பதினைந்து நிமிடங்கள்!!
அடடா! மிகச் சிறந்த நடிப்பைக் காட்டி, இதற்காகவே ஒரு விருது கொடுக்கலாம் என்னும் அளவுக்கு நடித்திருக்கிறீர்கள்.
ஸ்டைலிலும் ஒன்றும் குறைவு வைக்கவில்லை!
அசத்தியிருக்கிறீர்கள்!

ஆனால், இது மட்டும் போதுமா?
வருவதே வெறும் அறுபது நிமிடங்கள் என முன்னரே சொல்லி விட்டதால், என்னைப் போன்றவர்கள் அதிகமாக உங்களிடமிருந்து எதிர்பாக்கவில்லை.
ஆனால், நீங்கள் இல்லாத நேரங்களுக்கான கதையமைப்பில் சுத்தமாக சொதப்பி விட்டார் பி.வாசு!

அவரவர் கடமையை அவரவர் செய்யவேண்டும், என் வேலையை ஒழுங்காக நான் செய்துவிடுகிறேன் என நினைக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுவதா, இல்லை, என்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு, என் நடிப்புக் காலம் முடியப்போகிற இந்த நேரத்தில் பெருமைப்படும் விதமாய் படம் கொடுக்கணும் என்ற நினைப்பு துளியும் இல்லாத உணர்வை... அதை அலட்சியம் என்றும் சொல்லலாம்... எண்ணிக் கோபப்படுவதா எனப் புரியவில்லை.

படம் முடித்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு வெளிவந்தேன்.
அந்தக் கடைசி காட்சிகளில் நீங்கள் காட்டிய நடிப்பால் மட்டுமல்ல!
இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்ற ஆதங்கத்தாலும்!

ஏதோ கொஞ்ச நேரம் சொதப்பலாக இருந்தால் பரவாயில்லை.
இரண்டரை மணி நேரப் படத்தில், முதல் இரண்டு மணி நேரத்துக்கா இப்படி பாழாக்குவது! ? :(


நட்பைப் போற்றும் ஒரு கதையை எப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியும்!

இல்லை, அது வேண்டாம் என்றால், ஒரு காட்சி எடுக்க எவ்வளவு உழைக்க வேண்டும் திரைப்படங்களில் என்ற செய்தியைக் காட்டி இருக்கலாமே!

செய்யாமல் விட்டுவிட்டார்களே!

சம்பந்தமே இல்லாத காட்சிகள், திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வை அரைத்த மாவை அரைப்பது போல வரும் நிகழ்வுகள், செயற்கையான நடிப்பு, 'என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்கப்பா! ரஜினி இருக்கார் படத்துல! போட்ட பணம் கிடைச்சிரும்'ன்னு விட்டுவிட்டது போன்ற இயக்குநரின் அலட்சியம், கே. பாலச்சந்தர் போன்ற அனுபவம் மிக்க ஒருவரின் தயாரிப்பா இது! என்ன செய்து கொண்டிருந்தார் அவர் எனக் கேட்க வைக்கும் கோபம், எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததே இல்லை எனச் சொல்லவைத்துவிட்டது என்பதை வருத்தத்துடனும், கோபத்துடனும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இசை, ஒளிப்பதிவு எல்லாம் தரமாக இருந்தது. பசுபதி ஏமாற்றினாரா? ஏமாற்றப் பட்டாரா? மீனா, நயன்தாரா, வடிவேலு,விஜயகுமார், லிவிங்ஸ்டன், சந்தானம், பாஸ்கர், என ஒரு நட்சத்திரப் பட்டாளம்! வடிவேலு சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார்! என்ன பிரயோஜனம்? எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போயிற்று.


கடைசியாக ஒரு வேண்டுகோள்!
இன்னமும் உங்கள் படங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்!

ஆனால், இது போலத்தான் படம் தருவீங்கன்னா, ...வேண்டாம் சாமி! பேசாம இமயமலைக்கே போயிடுங்க! ஒருதுளிக்கு ஒரு பவுன் கொடுக்கும் உங்கள் தமிழ் ரசிகர்களை வாழவிடுங்கள்!

இறுதியாக, படத்தைப் பற்றி ஒரு வரி விமரிசனம்!
"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார்! இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்!"

நன்றி.

இப்படிக்கு,
மனம் நொந்த
உங்கள் ரசிகன்.

[இதை யாராவது ரஜினிக்கு அனுப்பி வைத்தால் நன்ன்றியுடையவனாக இருப்பேன்!!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP