Wednesday, October 17, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 18

முந்தைய பதிவு இங்கே!


18.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று


சூழினுந் தான்முந் துறும். " [380]

'டிக்கெட், டிக்கெட்' கண்டக்டரின் குரல் கேட்டது.

'சேலம் போக எவ்ளோ நேரம் ஆகும்?'

'ஆறு மணி நேரம். வழியில ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னா!' கண்டக்டர் சிரித்தார்.

தமாஷான ஆளுதான் போல என நினைத்தான் கந்தன்.

ஒரு வெள்ளரிப் பிஞ்சை எடுத்துக் கடித்தான்.

ராபர்ட்டிடம் ஒன்றை நீட்டினான்.

'தேங்க்ஸ்' என்றபடி வாங்கிய அவனும் அதைச் சுவைக்க ஆரம்பித்தான்.

'சித்தர்னா யாரு?' மீண்டும் வினவினான் கந்தன்.

'சித்தர்கள் எல்லாம் பெரிய ஆளுங்க!தான் யாருன்னு தெரிஞ்சவங்க! ஆனா, தன்னைக் காட்டிக்க மாட்டாங்களாம்.
அவங்களுக்காகத் தோணினா, நம்மகிட்ட வருவாங்க. அதுக்கு நம்மளைத் தயார் பண்ணிக்கணும் நாம.' ராபர்ட் சொன்னான்.

'அவங்க எதுக்கு நமக்குத் தெரியணும்? என்ன பிரயோஜனம் அவங்களால?' அப்பாவியாய்க் கேட்டான்.

'எதுக்குத் தெரியணுமா? என்ன பிரயோஜனமா? நம்ம நேரம் நல்லா இருந்தா, அவங்க நம்மகிட்ட வருவாங்க! அவங்களால எந்தப் பொருளையும்
தங்கமாக் கூட மாத்த முடியும். அதைத் தெரிஞ்சுக்கத்தான் நான் அலையறேன்!' என்றான் ராபர்ட்.

'என்னமோ விஷயமுள்ள ஆளா இருப்பான்னு பார்த்தா, விளங்காத எதையோ சொல்றானே. ஆருக்கு வேணும் இந்த தங்கம் பண்ற வேலையெல்லாம். இவன் கூட பேசாம இருக்கறதே மேலு'

என நினைத்துக் கொண்டு, இருக்கையில் இருந்து எழுந்து, முன்னே சென்றான்.

டிரைவர் அருகில் ஒரு சீட் காலியாயிருந்தது.

அங்கே உட்கார்ந்து கொண்டு, டிரைவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

'சேலம் பெரிய ஊருங்களா?'

'தம்பி இதுக்கு முன்னே போனதில்லியா? பெரிய ஊருதான் தம்பி. ஆன ஊருல ஒரு அதிசயமும் இல்ல. ஊரைச் சுத்தித்தான்!
அதென்னமோ அந்த மண்ணுக்கு ஒரு மகிமை இருக்கு போல. பெரிய பெரிய சித்தருங்கல்லாம் இருந்திருக்காங்க!'

கந்தன் திடுக்கிட்டான்.

'ராபர்ட் சொன்ன சித்தர் பேச்சு வேண்டாமின்னு இங்க வந்தா, இவரும் அதையே சொல்றாறே' என நினைத்தான்.

'உங்களுக்கு சித்தருங்களைப் பத்தி என்ன தெரியும்? நீங்க பார்த்திருக்கீங்களா?' என்றான்.

'அதில்லேப்பா. நான் இன்னும் அதுமாரி ஒருத்தரையும் பார்த்ததில்ல. என் கதையே வேற' என்றவாறே,எதிரில் வந்த ஒரு சைக்கிள்காரனை 'ஏ! சாவுக்கிராக்கி! பாத்து ஓட்டக் கூடாது' எனச் சொல்லியபடியே வண்டியை ஒடித்துத் திருப்பினார்.

'நல்லாப் படிச்சு பெரிய வேலைல சேரணும்னு தான் இருந்தேன். ஆனா, ஒரு குடும்ப சூழ்நிலை. வேலைக்கு போவணும்னு ஆயிருச்சு.
இந்த வேலைல இப்ப இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். ஆண்டவன் ஒண்ணு சொல்லிக் கொடுத்திருக்கான் எனக்கு.
ஒனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு போச்சுன்னா, எதைப் பத்தியும் நீ கவலைப் படவே வேணாம்.நம்மகிட்ட இருக்கறது, அது உசிரோ, இல்லை சொத்துபத்தோ, எதுவானாலுன்னாலும் சரி, போயிருமோ, போயிருமோன்னு,
பயந்து பயந்து சாவறோம். நம்ம தலையெழுத்தை எழுதினவந்தான், நாம இருக்கற இந்த உலகத்தோட தலையெழுத்தையும் எழுதியிருக்கான்னு
புரிஞ்சு போச்சுன்னா, இந்த பயத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லேன்னு புரிஞ்சிரும்!'

கந்தன் ஒருவித மரியாதையுடன் டிரைவரைப் பார்த்தான்.

'இவர் சொல்வதுதான் எத்தனை உண்மை! என் விதிதான் எப்படியெல்லாம் மாறிடுச்சு! அதே மாரி, இதுவரைக்கும் நான் பார்த்த உலகமும்தான்
எவ்வளவோ மாறிடுச்சு?


முட்டத்துக்குப் பக்கத்துல இருந்த என் கிராமத்தை மட்டுமே பார்த்துகிட்டு இருந்த நான், இந்த ரெண்டு வருஷத்துக்குள்ள எத்தனை ஊரைப்
பார்த்துட்டேன்! எத்தனை மனுஷங்களைப் பாத்துட்டேன். என்னவெல்லாம் நடந்திருச்சு. நான் மாறின மாரியே இந்த உலகமும்தான் மாறிடுச்சு.
என் விதியை எளுதின மாரியே, என் பணத்தைப் புடுங்கினவன் விதியும், அண்ணாச்சி விதியும், இன்னும் எத்தினியோ பேரோட
விதியுந்தான் மாறிப் போச்சு! இந்தப் பெரிய விஷயத்தை எவ்வளவு சுளுவா சொல்லிட்டாரு' என ஒரு எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ஒன்றும் பேசாமல், எழுந்து தன் இருக்கைக்கு வந்தான்.

ராபர்ட் தூங்கிக் கொண்டிருந்தான்.

பையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

'பாண்டவர்களைக் கொல்ல எண்ணி ஒரு அரக்கு மாளிகையை நிர்மாணித்து, அதில் இவர்களைத் தங்கச் சொல்லி, விதுரரை அனுப்புகிறான்
துரியோதனன்.'


'ஒருத்தனை ஒருத்தன் ஏன் இப்படி அடிச்சுக்கிறானுங்க! அந்தக் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இதே கதைதானா? சே!' என அலுத்துக் கொண்டே புத்தகத்தை மூடினான்.

ஜன்னல் வழியே வெளியில் பார்த்தான்.

காற்று சூடாக வீசியது.

வெக்கையாக இருந்தது.

என்னவோ கெட்டது நடக்கப் போகுது எனத் தோன்றியது, கந்தனுக்கு.

பஸ் சட்டென பிரேக் போட்டு நின்றது!
[தொடரும்]
********************************

அடுத்த அத்தியாயம்

19 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Thursday, October 18, 2007 11:54:00 PM  

சேலம் போக எவ்ளோ நேரம் ஆகும்?
இப்படி யாராவது கேட்டா டென்ஷன் ஆகிற ஆசாமிகளை பார்த்திருக்கேன்.இப்படி கேட்டா போய் சேர வேண்டிய இடத்துக்கு சரியாக போய் சேர முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு.
அது போலவே சடன் பிரேக்,கன்டக்டர் சூசகமான பேச்சு இருக்கிறதே!!

VSK Thursday, October 18, 2007 11:56:00 PM  

முகப்பில் கொண்டுவர உதவியமைக்கு மிக்க நன்றி, கொத்ஸ்!

:))

VSK Thursday, October 18, 2007 11:59:00 PM  

நானும் இதுபோல சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன், திரு. குமார்!

இதையெல்லாம் ஒரு அபசகுனமாகக் கருதுவார்கல் இவர்கள்.

நம் வீடுகளில் கூட 'போகும் போது எங்கே போறே'ன்னு கேட்கக்கூடாது எனச் சொல்லுவார்கள்!
:))

Anonymous,  Friday, October 19, 2007 12:10:00 AM  

Present as usual

VSK Friday, October 19, 2007 12:13:00 AM  

marked PRESENT as usual!
:))

மங்களூர் சிவா Friday, October 19, 2007 1:19:00 AM  

//
நம்ம தலையெழுத்தை எழுதினவந்தான், நாம இருக்கற இந்த உலகத்தோட தலையெழுத்தையும் எழுதியிருக்கான்னு
புரிஞ்சு போச்சுன்னா, இந்த பயத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லேன்னு புரிஞ்சிரும்!'
//
ம்
புரியமாட்டிங்குதே!!

VSK Friday, October 19, 2007 2:00:00 PM  

//இந்த பயத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லேன்னு புரிஞ்சிரும்!'
//
ம்
புரியமாட்டிங்குதே!!//

நமக்கென சில உணர்வுகள் இயல்பாய் வருகின்றன.
கோபம், மகிழ்ச்சி, வேதனை, கவலை என!
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறோம்.

இந்த உலகமும் அதே போல இந்த உணர்வுகளைக் கொண்டதே!

அதுதான், புயலாக, இதமான காற்றாக, வெப்பமாக, சுனாமியாக, விளையும் பயிராக, தரிசான பொட்டலாக பலவிதங்களில் காட்டுகிறது. நமக்கு என் ஒரு விதி இருப்பது போலவே, இந்த உலகத்திற்கும் ஒரு விதி இருப்பதால்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது.

இந்த விதியை எழுதியவன் ஒருவன்.
எல்லாவற்றிற்கும் மேலிருந்து ஆட்டுவிக்கும் பரம்பொருள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாய் அழைக்கிறார்கள்... உணர்கிறார்கள்... அதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை.

நாம் எப்படி இந்தத் தலைவிதியின் வாயிலாக இயக்கப் படுகிறோமோ, அப்படியே இந்த உலகமும் இயக்கப்படுகிறது.

நமக்கு எவ்வளவு வருமானம், பிள்ளை குட்டிகள், சொத்து சுகங்கள், இன்ப துன்பங்கள் கொடுக்க வேண்டும் என விதி இருக்கிறதோ, அப்படியே, எவ்வளவு பேரை இது தாங்கணும், என்னவெல்லாம் செய்து இதைச் சமப்படுத்தணும், என இந்த உலகமும் அந்த விதியால் இயங்குகிறது என்பது என் கருத்து.

எனக்குத் தெரிந்த அளவுக்கு சொல்லியிருக்கிறேன்.
மிச்சத்தை நீங்களே உங்களுக்குள் கேளுங்கள் விடை கிடைக்கும், திரு. ம. சிவா.
நன்றி!

VSK Friday, October 19, 2007 2:02:00 PM  

//:)

உள்ளேன் ஐயா!//

ஆயுத பூஜையை முன்னிட்டு எல்லாரும் அவசரமா போறீங்க போல இருக்கு!
அதான் அட்டெண்டன்ஸை மட்டும் கொடுத்திட்டு போறீங்க!
செய்யுங்க சாமி.. செய்யுங்க!
:))

நாகை சிவா Friday, October 19, 2007 3:03:00 PM  

இது வரை நல்லதே அல்லது நல்லதிலே முடிந்த கந்தனுக்கு முதல் முறையாக கெட்டது நடக்கும் என படுகிறதோ...

நல்லதும் கெட்டதும் கலந்தது தானே வாழ்க்கை...

VSK Friday, October 19, 2007 4:12:00 PM  

//நல்லதும் கெட்டதும் கலந்தது தானே வாழ்க்கை...//
அதானே!
சரியாச் சொன்னீங்க, நாகைப்புலியாரே!

விஜயதசமி வாழ்த்துகள்!
:))

jeevagv Friday, October 19, 2007 11:43:00 PM  

//சே!' என அலுத்துக் கொண்டே புத்தகத்தை மூடினான்.//
இதே அலுப்பு எல்லோருக்கும் வந்துவிட்டால்...?!

ஊழிற் பெருவலி யாவுள ???

VSK Friday, October 19, 2007 11:50:00 PM  

//இதே அலுப்பு எல்லோருக்கும் வந்துவிட்டால்...?!//

அவங்களும் மூடிருவாங்க!
:))

cheena (சீனா) Saturday, October 20, 2007 5:04:00 AM  

அய்யோ ! கந்தனுக்கு கெட்டது நடக்கப் போகிறது என்பதையே நம்ப முடியவில்லை. நல்லதும்ம் கெட்டதூம் நிறைந்த உலகம் என்றாலும் நல்லதே நடக்க விரும்புகிறோம்.

G.Ragavan Saturday, October 20, 2007 9:15:00 AM  

சேலத்துக்குப் போறதுக்குள்ள ஒரு தடையா....தடை உடைபடாமலாப் போயிரப் போகுது.

VSK Saturday, October 20, 2007 5:54:00 PM  

//நல்லதும்ம் கெட்டதூம் நிறைந்த உலகம் என்றாலும் நல்லதே நடக்க விரும்புகிறோம்.//

உங்கள் வாழ்த்துகள் பலிக்கட்டும் திரு. சீனா!

ஒரே மூச்சில் அத்தனை பதிவுகளையும் [18] படித்து, ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி!

VSK Saturday, October 20, 2007 5:55:00 PM  

//சேலத்துக்குப் போறதுக்குள்ள ஒரு தடையா....தடை உடைபடாமலாப் போயிரப் போகுது.//

தடையே நாம் நினைத்தால் தான்!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்!!
:))
நன்றி, ஜி.ரா.

வல்லிசிம்ஹன் Sunday, October 21, 2007 2:39:00 AM  

ஏதோ கெட்டது நடக்கப் போகிறது' என்று கந்தன் நினைக்க எது காரணமோ அதுவே தடங்கலையும் விலக்கி வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
ஸ்கந்தாஸ்ரமம் வேற இருக்கிறதே:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP