"என்" வலது கை
"என்" வலது கை
அயர்ந்து உறங்கிய நடுநிசியில்
அடி ஒன்று விழுந்தது போல் உணர்வில்
சட்டென்று கண் விழித்தேன்.
கனமாக ஏதோ ஒன்று எனை அழுத்த
உறக்கம் கலைந்த சினத்துடன் பார்த்தால்
என்னவளின் வலது கை என் மீது!
எரிச்சலுடன் அதை விலக்க முனைகையில்
கட்டையான கையைத் தள்ளுகையில்
விலக மறுத்து இன்னும் அழுத்தியது!
என் மனதில் ஏதோ நினைவுகள்!.......
கணநேரச் சலனத்தில் ஆவலுடன் பற்றிய கை
இனி என்றும் விடமாட்டேன் என வாக்களித்த கை
மணம் புரிந்தபோது மனமாரப் பிடித்த கை
தினமும் காலையில் தலை கோதி எனை எழுப்பிய கை
சனிக்கிழமை எனை அமர்த்தி எண்ணை தேய்த்த கை
வட்டிலிலே சோறெடுத்து ஆசையுடன் பரிமாறிய கை
கட்டிலிலே என்னோடு சாகசங்கள் பல செய்த கை
வீட்டினிலும் வெளியினிலும் என்னுடன் இணைந்த கை
எப்போதும் பாசத்துடன் எனை அணைத்த கை
அவ்வப்போது கோபத்துடன் எனை நோக்கி சுட்டிய கை
எப்போதாவது என்கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை
ஆதரவாய்ப் பலருக்கும் பிரசவம் பார்த்த கை
ஆசையாய் அனைவருக்கும் அன்னமிட்ட கை
விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை.
சற்றேனும் தளராமல், குறையென்று கருதாமல்
பிறர் உதவி நாடாமல், தன் செயலைத் தான் செய்து
எதிர் நீச்சல் போட்டுவரும் அவளது வலது கை!
அடியென உணர்ந்தது இனித்தது
ஆதரவாய்ப் பற்றினேன்
ஆசையாய்த் தடவினேன்
என்னவளின் வலது கையை!
........அப்படியே உறங்கிப் போனேன்!