”உந்தீ பற!” -- 25
”உந்தீ பற!” -- 25’பகவான் ரமணரின் திருவுந்தியார்’
[முந்தைய பதிவு]
உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ்
சடமசத் தானதா லுந்தீபற
சத்தான நானல்ல வுந்தீபற. [22]
உடல் பொறி உள்ளம் உயிர் இருள் எல்லாம்
சடம் அசத்து ஆனதால் உந்தீ பற
சத்தான நான் அல்ல உந்தீ பற.
உடலென அமைவதும், பார்த்தல் கேட்டல்
ருசித்தல் நுகர்தல் தொடுதல் என்னும்
ஐவகை உணர்வும், பிராணன் என்னும்
உள்ளமும், உயிரும், தெளிதல் என்னும்
புத்தியும், அறியாமை என்னும் இருளும்
தன்னால் இயங்கும் பொருளிலை ஆதலின்
அசத்து என்னும் சடப்பொருளாகும்
‘நான்’எனும் நிலைத்த பொருளிவை அல்லவே.
“நான் யார்?” என்கின்ற ஆதாரக் கேள்விக்கான விடையைச் சொல்ல முனைகிறார் பகவான் ரமணர்.
இதற்கு முதல்படியாக, ‘நான்’ என நாமெல்லாம் நினைக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரித்துத் தெளியச் சொல்கிறார்.
நம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போது, முதலில் தான் இன்னார் என நம் பெயரைத் தான் பொதுவாகச் சொல்வோம்.
இந்த உடலா நான்?
அடுத்து, இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆன ஒன்று. எனவே, இது தானாகச் செயல்படும் திறன் கொண்டதல்ல என்பது புரியவரும்.சடப்பொருள்களான இந்த ஐந்தும், தன்னையும் பிறரையும் அறியும் திறன் கொண்டவை அல்ல. ஆனால், எனக்கோ பொருட்களை இன்னதென்றும், என்னிலிருந்து வேறுபடுத்தியும் அறிய/உணர முடிகிறது. ’நான் தட்டிக்கொண்டிருக்கும் கணினி நான் அல்ல’ என்பது எனக்குத் தெரிகிறது.
ஐம்புலன்களால் நாம் உணரும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் இவையெல்லாமும் கூட நம்மை சலனப்படுத்துகிறது. பிராணன் எனச் சொல்லப்படும் மூச்சுக்காற்று, புத்தி என்கின்ற தெளிந்த அறிவு, அறியாமை என்கின்ற அஞ்ஞானம் இவையெல்லாமும் கூட இதேவகையில்தான்.
பார்க்கவேண்டியது கண்ணின் தொழில். அது அதனைச் செய்யாதபோது, ‘நான் ஒரு குருடன்’ எனச் சொல்கிறேன். பசியும் தாகமும் உயிரின் தொழில். ‘எனக்குப் பசிக்கிறது’ என அதைச் சொல்கிறேன். ஒரு மருத்துவருக்கு வேண்டிய படிப்பைப் படித்தவுடன் ‘நான் ஒரு வைத்தியன்’ என்கிறேன். அப்படியானால், அதற்கு முன் நான் யாராக இருந்தேன்? அப்போதும் இந்த ‘நான்’ இருந்ததே! அதையும் உடனே இந்த ‘நானுடன்’ தொடர்பு படுத்தி, ‘மருத்துவ அறிவு இல்லாதவனாக இருந்தேன்’ எனச் சொல்கிறேன்.
இப்படி ஒரே சமயத்தில், ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, மருத்துவனாக, எதுவுமே அறியாதவனாக என்னால் இருக்க முடியுமா? அப்படி உணர்வதன் காரணம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெவ்வேறாக உணர்வதே இதன் காரணம்.
ஒரே சமயத்தில் ஒருவனே அரசனாகவும், மந்திரியாகவும், பிச்சைக்காரனாகவும் இருக்க முடியாது.
நடித்து முடிந்ததும் தன் இயல்பு நிலை என்னவென அறிந்து அதனில் தானாகத் திரும்பவும் அவனால் முடியும்.
இப்படி, பல்வேறு நிலைகளில் இருந்தாலும், தனது இயல்பு நிலை என்ன என அறிந்தவன் சலனமின்றி இருப்பான்.
அப்படியென்றால், இந்த ‘நான் எனும் ஆணவம்’ எங்கிருந்து பிறக்கிறது?
உள்ளிருக்கும் நிலையான ஒன்று என நான் நினைக்கும் ஒன்று, மேற்கூறிய ஏதோ ஒன்றுடன் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போது இந்த ஆணவம் பிறக்கிறது.
அதாவது, நிலையான ‘நான்’ என நான் நினைக்கும் ஒன்று, நிலையற்ற சடப்பொருட்களான உடல், ஐம்புலன்கள், பிராணன், புத்தி, அறியாமை என்கிற எவற்றுடனாவது இணையும் போது ‘ஆணவம்’ பிறக்கிறது. [இங்கு சொல்லப்படும் ஆணவம், வேதாந்தத்தில் சொல்லப்படுகின்ற ஆணவம் என முன்னரே சொன்னதை நினைவு கூறவும்!]
இப்போது இன்னொரு கேள்வி உடனே எழுகிறது.
அதெப்படி நிலையான ஒன்றையும், நிலையில்லாத ஒன்றையும் இணைக்க முடியும்?
ரமணர் பதில் சொல்கிறார்!
‘உண்மை’ அறிவு இல்லாத நிலையிலேயே இது சாத்தியமாகும்.
ஒரு கயிற்றைப் பாம்பு என எண்ணிப் பயப்படும்போது, கயிறு பற்றிய நம் அறியாமையே இதற்குக் காரணமாகிப் போகிறது!
‘உண்மையான நான்’ பற்றிய தெளிவு இல்லாதபோது, நாமாக நினைத்துக் கொண்டிருக்கும் ‘நான்’ ஏற்படுத்துகிற மாயமே ’ஆணவம்’ பிறக்கக் காரணமாகிறது.
‘அசத்து’ எனச் சொல்லப்படும் நிலையில்லாத, தானாக இயங்கமுடியாத பொருட்களை ‘நான்’ என நம்பும் அறியாமையத் தொலைத்து, ‘உண்மையான நான்’ எது எனத் தெளிய முற்படுவதே ‘ஆணவம்’ அழிக்கச் சிறந்த வழி என்கிறார்.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட வழிகளின் மூலம், ஒரு தெளிந்த, தூய்மையான மனத்தின் உதவியால், தக்கதொரு குருவின் துணை கொண்டு, தொடர்ந்த பயிற்சியின் மூலமே இதனை அறிய முடியும்.
நிலையான இதனை அறிவது எங்ஙனம்?
நாளை பார்க்கலாம்!
“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்”
****************************************
[தொடரும்]