Thursday, February 09, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”




42. [இரண்டாம் பகுதி] [அருள்கூர்ந்து முதல் பகுதியைப் படித்தபின்னர் இதனைப் படிக்கவும். வணக்கம்.]


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

"செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே."

மொதல் ரெண்டு வரிக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்பந்தத்தை வைச்சே பாடினவரு இதுலியும் அத்தயேதான் பண்ணியிருக்காரு..... இன்னா ... கொஞ்சம் மாறுதலா! அவ்ளோதான்!

இதுவரைக்கும் சொன்னது அல்லாத்தியுமே நெனைச்சுப் பார்த்தியானா, அப்பப்ப நடுவுல நடுவுல இதுக்கான 'குறி'யைக் கொடுத்துக்கினே வந்திருக்காருன்றது புரியும்! அது இன்னான்னு சொல்றேன் கேளு!

'செறிவு'ன்னா இன்னா?
அது 'அத்து'ப்போறதுன்னா இன்னா?

'செறிவு'ன்னா கலப்பு.

இது ரொம்பவே பெரிய விசயம்.
சைவ சித்தாந்தத்துல இதுக்கு ஒரு பெரிய வெளக்கமே க்கீது!

இந்த உடம்புல உசிரு வந்து கலந்தவொடனியே, மனசுன்னு ஒண்ணு வந்திருது.

அதுனால வர்றது வாக்கு!

ஒடம்புன்னா காயம்!

இந்த மனசு, வாக்கு, காயம் இதெல்லாமே ஒரு மாயையால உசிரை... ஆத்மாவை.... வந்து பிடிச்சுக்குது!

இத்தப் பாரு, கேளு, ரசின்னு மனசு சொல்லுது.
அதுக்கு வாக்கு கொஞ்சம் தூபம் போடுது.
இத்தக் கேட்டு இந்த ஒடம்பு..காயம்.. கண்டபடிக்கும் ஆடுது!
இத்தயெல்லாம் மாயைன்ற ஒண்ணுதான் ஆட்டிவைச்சு நம்மளை அல்லாட வைக்குது.
இந்த மூணோட கலப்புனாலத்தான் நாம இத்தனை ஆட்டம் போடறோம்.

இதான் செறிவுன்றது!

இப்பிடி, மனசு, வாக்கு, காயம்,ன்னு நமக்கு, ... இந்த ஒடம்புக்கு.... இருக்கற கலப்பைப் புரிஞ்சுக்கினு, அதெல்லாமே இல்லாமப் போறதுதான்,
'செறிவத்து'ன்னு அருணகிரியாரு சொல்றாரு.

அத்தினிக் கலப்பும் அத்துப் போயிருச்சாம்!... முருகனைப் பாத்ததுமே!

அடுத்தாப்பல வர்றது, 'உலகோடு உரை சிந்தையும் அற்று'.

இந்த ஒடம்போட இருக்கற சிந்தனை இல்லாமப் போச்சுன்னா, நீ ஆரு, நான் ஆருன்றதே இல்லாமப் போயிறும். ஒடம்பைப் பத்தின சிந்தனை இல்லைன்னா, இந்த ஒலகத்தப் பத்தின சிந்தனையுந்தானே இல்லாமப் போயிறும்?


நான் இருக்கேன்றது தெரியுது.

ஆனாக்காண்டிக்கு, நான் எங்கே இருக்கேன்ற நெனைப்பே இல்லாமப் போயிருச்சாம் அருணகிரியாருக்கு, இந்த முருகனோட காலைப் பிடிச்சு, அவருகிட்டேர்ந்து அந்த அநுபூதி கெடைச்சதும்!


அதத்தான் இந்த 'உலகோடு உரை சிந்தையும் அற்று'ன்றதுல சொல்லிக் காட்றாரு.

சரி, இதெல்லாம் இந்த உடலுக்குன்னு வந்தது.

உடலு மட்டும் இன்னா பண்ண முடியும்?
அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வந்ததாலத்தானே இத்தினியும் நடக்குது!

அந்த உசிருக்குன்னு ஒரு ரெண்டு கொணம் க்கீது!

அறிவு, அறியாமைன்னு!
அதத்தான் அடுத்த வார்த்தை சொல்லுது!

"அறிவற்று அறியாமையும் அற்றதுவே"

இதான் இதுன்னு தெரிய வைக்கறது அறிவு.
இதான் இதுன்னு தெரிய வைக்காம நம்மளை மயங்க வைக்கறது அறியாமை!

ஒரு ஒதாரணம் சொல்றேன் கேளு!

சாமிதான்... ஒன்னோட முருகந்தான்... சத்தியமான பொருளுன்னு ஒனக்குத் தெரியும்.
இது அறிவு!
அதே சமயத்துல கண்டதையும் பார்த்து மயங்கிப்போயி, அவங்க சொல்ற ஆசை வார்த்தையுல மயங்கி, அவங்க பின்னாடி சுத்தி, அவங்க காரியம் ஆனவொடனே ஒன்னியக் கள[ழ]ட்டி வுட்டுட்டு, நீ, 'நாம இன்னா பண்ணினோம்னு இப்பிடி ஆயிருச்சு'ன்னு மயங்கறது ஒன்னோட அறியாமை.

சரி, போ, நாம செய்ய வேண்டியத, செய்யவேண்டிய நேரத்துல செய்யவேண்டியவங்களுக்கு சரியா செஞ்சோம்னு நெனைச்சு, நீ மேல நடந்தியானா அது அறிவு!
அதில்லாம, ஏன் இப்பிடி எனக்கு ஆச்சுன்னு அவங்க பின்னாடியே போயி அலைஞ்சியானா அது அறியாமை!
சரியா?

இந்த அநுபூதி நெலை வந்ததுமே, அருணகிரியாருக்கு இந்த ரெண்டுமே இல்லாமப் போயிருச்சாம்! முருகன் ஒர்த்தனே கதின்னு அவனைக் கெட்டியாப் பிடிச்சுக்கினாரு. அதுனால அநுபூதி கெடைச்சதும், இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே தொலைஞ்சிருச்சு அவருக்கு!

ஒண்ணைப் புரிஞ்சுக்கணும் நீ தெளிவா!
அவரு பண்ணின புண்யத்துனால, இன்னான்னமோ தப்பு பண்ணியிருந்தாலும், அருணகிரியாரைத் தாங்கிப் பிடிச்சான் முருகன்!
அப்போ அநுபூதி கொடுக்கலை அந்த முருகன்!

'முத்தைத்தரு'ன்னு ஒரு வார்த்தையைக் குடுத்து, 'இத்த வைச்சுக்கினு என்னியப் பத்திப் பாடு'ன்னு சொல்லிட்டுப் பூட்டான் அவன்!

அதுக்கப்புறமா, இவரு ஊரூராத் திரிஞ்சு, அல்லாக் கோவிலுக்கும் போயி, முருகன்மேல ஆயிரமாயிரமாப் பாட்டுப் பாடி, அதுக்கப்பறந்தான் இவருக்கே அநுபூதி கெடைச்சதுன்னு கதை சொல்லுது!

இதுலேர்ந்து இன்னா தெரியுது?

ஒரு குரு வந்து ஒங்கிட்ட ஒண்ணைச் சொன்னாருன்னா அத்தக் 'கப்'புன்னு புடிச்சுக்கினு அப்பிடியே பண்ண ஆரம்பிக்கணும்!

அப்பிடிப் பண்ணினியான்னா, ஒனக்கு மேலே மேலே நல்லதே நடக்கும்!
அதுக்கு நடுவுல நீ இன்னான்னமோ தப்புத்தண்டால்லாம் கூடப் பண்ணுவே!

ஆனா, அதையே நெனைச்சு மருகாம, அதுவா ஒன்னிய வுட்டு வெலகறப்ப, நீ அதும்பின்னாடியே போயி அலையாம, சரி, இது இத்தோட வுட்டுதுன்ற மனசாந்தியோட, ஒன்னோட வளி[ழி]யுலியே....ஒனக்குன்னு வந்து சொன்ன குரு காட்டின நெறியுலியே நடந்தியானா,... ஒனக்கும் ஒரு நல்லத்த அந்த முருகனே வந்து நடத்திக் குடுப்பான்றதத்தான் இதுல சொல்லாம சொல்லிக் காட்டியிருக்காரு அருணகிரியாரு.

அப்பிடி வர்ற அந்த அநுபூதி நெலை எப்பிடி இருக்குன்றதியும் சொல்லிட்டாரு.

இதுக்கும்மேல புரிஞ்சுக்கறதும், அதும்படிக்கா நடக்கறதும் அவங்கவங்க விதிப்படி நடக்கும். அவ்ளோதான் நான் சொல்லுவேன்' எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

கண்களை மூடியபடியே அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாம்பு சாஸ்திரிகள்,

'இதே மாதிரி ஒரு 'சித்தியார்' பாட்டை எப்பவோ படிச்சிருக்கேன். இப்பவும் நெனைப்புல இருக்கு. அதைச் சொல்றேன் கேளு' எனப் பாடினார்.

'அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே
அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து

குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்
கூடாதே வாடாதே குழைந்து இருப்பையாகில்

பிரியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய்த் தோன்றி

நெறியாலே இவையெல்லாம் அல்லன் ஆகி
நின்று என்றும் தோன்றிடுவன் நிராதரனாயே'

'அப்பிடியே சொல்லிட்டீங்களே சாமி! இங்க சிவன், அங்கே அருணையாருக்கு முருகன்! இன்னோர்த்தருக்கு பெருமாளு!
சாமிங்கள்ல பேதமில்லை! எத்தப் பத்திக்கிறியோ, அதுவே ஒனக்கு ஒரு வளி[ழி] காட்டும்! அதான் முக்கியம்' என்றான் மயிலை மன்னார்!

நாயர் தீவிரமாக தனது 'ஓம் சரவணபவ' மந்திர உச்சாடனத்தைத் தொடர ஆரம்பித்தான்!

குறியைக் குறியாது குறித்து அறியும்


நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்


செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]


********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP