Monday, January 28, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"

தை ஒண்ணாந்தேதி! பொங்கல் திருநாள்! சென்ற முறையை விட சென்னை இப்போது அதிகமாகவே கூட்டமாயிருந்தது! அதிலும் மயிலைப்பகுதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கமான நாயர் கடை கூட இப்போது டேபிள் பெஞ்ச் எல்லாம் போட்டு பெரிதுமாக மாறியிருந்தது. நாயர் மட்டும் 'வா சேட்டா!' என அழைத்திரா விட்டால் என்னாலேயே அடையாளம் கண்டிருக்க முடியாது. 'சா குடிச்சோ' என்ற அந்த அன்பான அழைப்பை மறுக்க மனமில்லாமல் உட்கார்ந்து குடித்தபடியே மன்னாரைப் பற்றி விசாரித்தேன். 'ஞான் கண்டிட்டில்லா! கொறைச்சு நாளாச்சு' எனற நாயரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே நடந்தேன். வடக்கு மாடவீதியில் வஸந்த பவன் தாண்டி நடக்கையில், முதுகில் பளாரென ஒரு அறை விழ, திடுக்கிட்டுத் திரும்பினால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நம்ம மயிலை மன்னார் சிரித்தபடி, 'இன்னா! நம்ம பேட்டைக்கு வந்திட்டு நம்மளைப் பாக்காமியே போயிருவியா?' எனக் கேட்டான். 'உன்னைப் பார்க்கத்தான் மைலாப்பூருக்கே வந்தேன்' எனச் சொன்னவுடந்தான் கொஞ்சம் சமாதானமானான். 'சரி! வா! எதுனாச்சும் சாப்பிடலாம்! இன்னிக்கு பொங்கல் மொத நாளு' என்றவனை மறித்து, இன்னிக்கு தமிழ் புத்தாண்டு கூட என அரசாணை வந்ததை நினைவு படுத்தினேன். 'எல்லா நாளும் ஒண்ணுதான்! அடுத்த ஆட்சி வந்தா இன்னாமோ பெரிய வேலை மாரி மொதக்காரியமா இதை ரத்து பண்ணப் போறாங்க! இதுக்கெல்லாம் அலட்டிக்காதே! இந்த ஒலகத்துல எல்லாம் நெலையில்லாது. இதைப் பத்தி நம்ம ஐயன் சொன்னதை சொல்றேன் கேளு' என்று மன்னார் சொன்னதும், 'அட! வந்ததுக்கு ஒரு நல்ல விஷயமும் கிடைக்குதே' என்ற ஆவலுடன் வஸந்த பவனுக்குள் அவனுடன் நுழைந்தேன்!
இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-34 "நிலையாமை"

"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை." [331]



இப்ப, இந்த ஒலகத்துல எதுனாச்சும் நிலையா நின்னுருக்கா? ஆனாக்காண்டி, எவனை வேணுமின்னாலும் கேட்டுப்பாரு! இன்னாமோ தான் தான் அல்லாத்தையும் கடந்து போயி நெலைச்சு நிக்கற மாரி பேசுவான். இங்க இருக்கற எதுவும் சாசுவதமில்லை! எல்லாமே ஒருநா இல்லாட்டி ஒருநா அளிஞ்சுதான் பூடும்! இதை உணராம நிலையில்லாததையெல்லாம் நிலைச்சு நிக்கறதுன்னு பம்மாத்து பண்றவனோட அறிவு ரொம்பவே அல்பமானது; மட்டமானதுன்றாரு.

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளைந் தற்று. [332]


பில்லா படம் பார்க்க ஒரு தியேட்டருக்குப் போறே! "ஆ! இன்னா கூட்டம்"னு மலைச்சுப் போறே! படம் விட்டதும் இன்னா ஆவுது? அவனவன் தன் சோலியைப் பாக்கப் போயிருவான்! 'அவ்ளோதான்! ஆட்டம் க்ளோசு'ன்னு! அது மாரித்தான் ஒருத்தன்கிட்ட வர்ற பணமும்! இருக்கற வரைக்கும் இருந்திட்டு, ஒருநா அப்பிடியே சொல்லாம கொள்ளாமப் போயிரும்! பணமெல்லாம் நிலையே இல்லை! புரிஞ்சுக்கோ!

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். [333]


பணம்ன்றது நிலையில்லாததுன்னு புரிஞ்சுகிட்டேல்ல? இப்ப நீ இன்னா பண்ணணும்? அது கையில இருக்கறப்பவே நல்ல காரியங்க செஞ்சுறணும்! நாலு பேருக்கு படிப்புக்கு ஒதவறது, இல்லாத ஏழைங்களுக்கு தானதருமம் பண்றது அப்படீன்னு! நிலையில்லாத செல்வத்தை வைச்சு, நிலையான தருமங்களைப் பண்ணணும்னு ஐடியா குடுக்கறாரு ஐயன்!

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈறும்
வாளது உணர்வார்ப் பெறின். [334]

'இன்னிக்கு பொளுது போச்சா, சரி, நாளைக்கு மறுபடியும் ஆட்டையைத் தொடங்கலாம்'னு படுக்கப் போறோம் தெனமும்! ஆனா, விசயம் அறிஞ்சவங்க இன்னா செய்வாங்கன்னா, 'அடடா! இன்னிக்கு நாளு பூடுச்சே! நம்ம ஆயுசுன்ற காலண்டர்ல ஒருநாளை வெட்டிட்டாம்ப்பா எமன்'னு புரிஞ்சுகிட்டு, இந்த நாளுன்றதுல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வாழ்நாளை அறுக்கற வாளுன்னு தெளிவா நடந்துக்குவாங்க!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். [335]

இப்ப கையில துட்டு இருக்குன்னு குஜாலா ஆட்டம் போடாதே! வயசானப்பறம் இந்த நல்ல காரியமெல்லாம் பண்ணிக்கலாமின்னு ஒத்திப் போடாதே! சாவு எப்ப வருமின்னு எவனுக்கும் தெரியாது! அப்பிடி, ஒனக்கு நாவெல்லாம் தள்ளி, விக்கல் வந்து தொண்டையிலியே நின்னுகிட்டு, மேலியும் வராம, கீளேயும் போவாம நெஞ்சுக்குளியை அடைக்கற நேரம் வர்றதுக்கு முந்தியே, செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஜரூரா செஞ்சுறணும்!

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. [336]


'அட! நேத்துக்கூடப் பாத்தேனே! இன்னிக்கு செத்துப்பூட்டான்னு தகவல் வருதே'ன்னு எத்தினி தபா சொல்லக் கேட்டிருப்போம்! ஒர்த்தொருத்தனும் போறப்ப சொல்லிக்கினு போறதில்லை! அதான் இந்த ஒலகத்தோட பெருமையே! அவ்ளோ நிலையில்லாததாம்!

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. [337]

மேல சொன்னமாரி, நாளைக்கு இருப்போமான்றதே தெரியாத... நாளைக்கு இன்னா நாளைக்கு?... அடுத்த நொடி நாம இருப்போமான்றதே நிச்சயமில்லாத நமக்கு மனசுல மட்டும் பாரு! கோடிக்கோடியா நெனைப்பு இருந்துகினு இருக்கும்! அத்தைப் பண்ணலாமா? இத்தை நிறுத்தலாமா? அப்படீன்னு! இன்னமோ போ!

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. [338]

ஆசை ஆசையா ஒரு குருவி சுள்ளியெல்லாம் பொறுக்கி ஒரு கூடு கட்டும். கொஞ்ச நாளு களிச்சுப் பார்த்தியானா, முட்டையெல்லாம் பொறிச்சு குஞ்சுங்கல்லாம் பறந்திடுச்சின்னா, இதுவும் அந்தக் கூட்டைக் காலி பண்ணிட்டு பறந்திரும். அது போலத்தானாம் இந்த உயிருக்கும், ஒடம்புக்கும் நடுவுல இருக்கற தொடர்பு! வேலை ஆச்சுன்னா ஆட்டம் காலி!

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339]


சாவறதுன்றது தூங்கிப் போற மாரி. பொறக்கறதுன்றது அப்பிடி தூங்கிமுளிச்சுக்கறது மாரின்னு ஐயன் இதுல சுளுவா சொன்ன மாரி இருந்தாக்காட்டியும், இதுக்குள்ள ஒரு டக்கரு தத்துவத்தை அப்டியே அசால்ட்டா சொல்லிட்டுப் போயிருக்காரு. இப்போ தூங்கறது முளிச்சுக்கறது ரெண்டு பேரும் ஆரு? ஒரே ஆளுதானே! அதுபோல, செத்துப்போறதும், திரும்பிப் பொறக்கறதும் ஒரே ஆத்மாதான். அப்ப தூங்கக்கொள்ள இது எங்க போயிருந்திச்சு? அதைத்தான் ஒவ்வொருத்தரும் ஆராயணும். இத்தப் புரிஞ்சுகிட்டியானா, நாம ஆரு? எதுக்காவ வந்தோம்? எங்க போறோம்ன்றது தெளிவாயிடும்! இதைத்தான் சூட்சுமமா ஐயன் சொல்லிக் காட்டியிருக்காரு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. [340]


போன பாட்டுல சொன்ன விசயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தற மாரி இதுல சொல்றாரு. இந்த ஒடம்புல உசிரு இருக்கறது ஒர்த்தன் வாடகைவூட்டுல குடக்கூலிக்கு இருக்கறமாரி. நெரந்தரம் இல்லை. வாடகை வூடு சொந்த வூடாகுமா எப்பனாச்சும்? ஆவாதுல்ல? அதேமாரி, உசிரும் இந்த ஒடம்புக்கு சொந்தமாவாது! அப்ப அது இன்னா பண்ணும்? இன்னோரு வூட்டைத் தேடிகிட்டுப் போவும். ஒடம்பு மாத்தி ஒடம்புன்னு சும்மா பூந்து பூந்து பொறப்பட்டு வருது. உசிரும் சரி, ஒடம்பும் சரி எதுவும் நெலையில்லைப்பா! இதைப் புரிஞ்சுக்க'

என்று சொல்லியபடியே பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் மன்னார். தொடர்ந்து அவன் சொன்ன கருத்துகள் இவை!

"இப்பிடி பணம், காசு, ஒடம்பு, உசிரு இப்பிடி எதுவுமே நெலையில்லாதப்ப, மத்ததெல்லாம் இன்னா ஆவும்ன்றே? நமக்கெல்லாம் எப்ப புத்தாண்டு தெரியுமா? சித்திரையிலியும் இல்லே; தையிலியும் இல்ல! எப்ப 'போனசு' வருதோ, எப்ப டயத்துக்கு சோறு கிடைக்குதோ, கடனெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கோமோ, மனசுக்குப் பிடிச்ச ஆளைக் கட்டிகிட்டு சண்டையில்லாம இருக்கோமோ அப்பத்தான்! மத்தபடி இந்த புத்தாண்டு உத்தரவெல்லாம் அதை வைச்சு பொளைப்பு நடத்துறவங்களுக்குத்தான். நீ போயி ஆவற கதையைப் பாரு! ஆரையும் திட்டாம, ஆருக்கும் கெடுதி பண்ணாம இருக்கப் பாரு! அதுதான் இந்த மன்னாருக்கு வேணும். வர்ட்டா!" என்றபடி அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிப் பறந்துவிட்டான் மயிலை மன்னார்.

அவன் சொன்னதை அசை போட்டுக் கொண்டே நானும் வீடு திரும்பினேன்.

Read more...

Friday, January 25, 2008

பத்திரமாய்க் காத்திடம்மா!


பத்திரமாய்க் காத்திடம்மா!

இன்று தை இரண்டாம் வெள்ளிக்கிழமை! சென்ற வாரம் இதே வெள்ளியன்று அன்னை காமாக்ஷியின் அருள் தரிசனம் காஞ்சியில் எனக்கு கிடைத்தது! அந்த நினைவுடன் அவளை நினைத்தபோது என் மனதில் தோன்றிய சில வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! அனைவரும் அன்னை அருள் பெறுக! இன்புற்று வாழ்க!

பத்திரமாய்க் காத்திடம்மா!

அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியான சக்தியிவள்
பிண்டங்கள் சமைத்திங்கு உலவிடவே உயிர்தருவாள்
கண்டவரும் இங்கில்லை விண்டவரும் எவருமில்லை
அண்டிவரும் அடியாரின் அருந்துணையாய்த் தானிருப்பாள்
கற்பனைக்கும் எட்டாத காமகோடி பீடமதில்
அற்புதமாய்த் தானமர்ந்து அருள்மழையைப் பொழிகின்றாள்
சொற்பதங்கள் கோர்த்துவொரு பாமாலை சூட்டிடுவேன்
கற்பகமாம் கணபதியின் தாளடிகள் தான் பணிந்து. [1]

பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எதுவுமின்றி இருந்தவேளை
ஆழமைதி தான்கலைந்து சிவனாரும் கண்விழித்தார்
அசைவின்றி நின்றிருந்த பெருவெளியும் அக்கணத்தில்
இசைவாக உருப்பெற்று மெதுவாக ஆடியது
வேறியக்கம் ஏதுமில்லை ஓருயிரும் அசையவில்லை
சக்தியவள் கருணையின்றி தன்னியக்கம் தொடராது
என்றறிந்த சிவனாரும் மோனத்தில் கண்மூடி
தாயவளைத் தியானித்தார் அவளருளை நாடிநின்றார். [2]

அன்னையவள் அருள் சுரந்தாள் அன்புடனே சிரித்திட்டாள்
கடைக்கண்ணால் பார்த்ததிலே கோடியண்டம் தான் பிறக்க
கைவிரலை அசைத்ததிலே காற்றுமங்கே ஓமென்க
புருவங்கள் உயர்த்துகையில் புள்ளினங்கள் பொலிவுபெற
புன்னகைத்த வேளைதனில் பல்லுயிரும் பிரசவிக்க
கால்விரலின் அசைவினிலே ஐம்பொறிகள் உருவாக
சிற்றிடையின் நெளிவினிலே சீரலைகள் ஆர்ப்பரிக்க
கண்ணசைவில் இயக்கங்கள் களிப்புடனே தொடக்கி வைத்தாள் [3]

உடுக்கை ஒலியினிலே ஓங்காரம் பிறந்ததம்மா
பம்பை ஒலியினிலே பாற்கடலும் பிறந்ததம்மா
செண்டை ஒலியினிலே நானிலங்கள் பிறந்ததம்மா
கைவளையின் கலகலப்பில் தாரகைகள் பிறந்ததம்மா
முத்துப்பல் சிரிப்பினிலே மன்னுயிரும் பிறந்ததம்மா
கண்ணிரண்டின் ஒளிகளிலே ரவிமதியும் பிறந்ததம்மா
கால்மெட்டி அசைவினிலே காவினங்கள் பிறந்ததம்மா
அன்னையிவள் நினைத்துவிட்டால் ஆகாதது எதுவுமுண்டோ [4]

தலையினிலே பொற்கிரீடம் நெற்றியிலே சுட்டிமணி
காதுகளில் கருகமணி கண்விழியில் அஞ்சனங்கள்
நாசியிலே மூக்குத்தி செவ்வாயில் தாம்பூலம்
அலையலையாய்க் கூந்தலிலே அகில்புகையின் நறுமணங்கள்
கழுத்தினிலே பொற்றாலி ரத்தினத்தால் பதக்கங்கள்
கைகளிலே பொன்வளையல் கைவிரலில் மோதிரங்கள்
இடுப்பினிலே ஒட்டியாணம் கால்களிலே கொலுசொலிக்க
கால்விரலில் மெட்டியுடன் பட்டாடை புனைந்திருப்பாள் [5]

சங்கடங்கள் செய்திட்ட சண்டமுண்டரை யழித்தாய்
பாதகங்கள் தான் புரிந்த பண்டனையும் போர்முடித்தாய்
காளியாக நீ மாறி காலரையும் தான் வதைத்தாய்
சூலியாக வந்தங்கு சும்பநிசும்ப வதம் செய்தாய்
மஹிஷாஸுரமர்த்தினியாய் அவதாரம் செய்திட்டாய்
சிங்கமதில் தானமர்ந்து வெஞ்சமர்கள் நீ செய்தாய்
சூலமதைக் கையிலேந்தி வீணர்களை அழித்திட்டாய்
அத்தனையும் சொல்லப்போமோ அறியாத சிறுமகனால் [6]

காத்யாயினி காமாக்ஷி கருமாரி கல்யாணி
வேதாயினி விசாலாக்ஷி வடிவுடையாள் வாராஹி
மங்களாம்பா மீனாக்ஷி மகமாயி மதுரவல்லி
சுகுணவதி சுந்தரியாள் சுகுமாரி சரசுவதி
திரிசூலி திலகவதி திரௌபதியாள் திகம்பரி
படவேட்டு மாரியம்மா பார்வதியாள் பவானி
கமலாம்பா தேனாம்பா நீலாம்பா கௌமாரி
ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரி நாயகியே! [7]

அடியவரைக் காப்பதிலே அன்னையவள் அபிராமி
கொடியவரைத் தொலைப்பதிலே கோபமான மாகாளி
வேண்டும் வரம் தருவதிலே வாஞ்சையான வரலக்ஷ்மி
தண்டனைகள் தருவதிலே துடுக்கான துர்க்கையிவள்
குற்றங்கள் பொறுப்பதிலே கருணையுள்ள காமாக்ஷி
வெற்றிகள் குவிப்பதிலே வளமான விஜயலக்ஷ்மி
எத்திசைக்கும் காவலாக என்றுமென்னைக் காத்திருப்பாள்
பத்திமலர் பாடுகிறேன் பத்திரமாய்க் காத்திடம்மா! [8]
****************************************************************

Read more...

Wednesday, January 23, 2008

அருள் செய்ய வா முருகா!


தைப்பூச நன்நாளில் ஒரு முருகன் பதிவு இட்டு உங்கள் புதுக் கணக்கைத் துவங்கலாமே என என் அன்பு நண்பர் திரு.ரவி கண்ணபிரான் சொன்னதிற்கிணங்க இதோ என் முருகன் மீதான ஒரு சுய பதிவு. படித்தவர்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

அருள் செய்ய வா முருகா!

பாராளும் மன்னனிவன்
சீராளன் செல்வனிவன்
கார்போலப் பொழிந்துவரும்
கருணைமழை நாதனிவன்
வேதனைகள் யாவினையும்
வேரறுக்கும் விநாயகனை
பாதமலர் நான் தொழுது
குமரன்புகழ் பாடிடுவேன்

சிவனாரின் தீப்பொறியில்
சுயமாக தோன்றிநின்றான்
கார்த்திகையில் தான்பிறந்தான்
கமலத்தில் உருவெடுத்தான்
அறுவர்முலைப் பால்குடித்தான்
சரவணத்தில் தான்மிதந்தான்
அன்னைவந்து அணைத்திடவே
அறுமுகனாய் அவதரித்தான்!

அண்ணனிடம் தோற்றதனால்
அருங்கனியைத் தவறவிட்டான்
அறுமலையில் முதல்மலையாய்
ஆவினன்குடி
சென்றுநின்றான்
ஆண்டிக்கோலத்தில் தண்டெடுத்து
ஆங்கவனும் தான்நிற்க
தண்டபாணி என்றபெயர்
தாங்கியவன் சிரித்திருந்தான்!

நான்முகனின் செருக்கடக்க
பிரணவத்தின் பொருள்கேட்டு
விடைதெரியா பிரமனையும்
வெஞ்சிறையில் தானடைத்தான்
விடுவிக்க வேண்டிநின்ற
விடையனார் விடைகேட்க
தந்தைக்கே குருவானான்
ஏரகத்தில் தானமர்ந்தான்!

தேவர்குறை நீக்கிடவே
தான்பிறந்த காரணத்தை
நாதனவன் நயமுரைக்க
மாதரசி வேலளிக்க
சூரனவன் துடுக்கடக்கி
மாமரத்தைக் கூர்பிளந்து
சேவலும் மயிலுமாய்
சீரலைவாயில் சிரித்து நின்றான்!

இந்திரனும் மனமகிழ்ந்து
குஞ்சரியை குலமகளைக்
குமரனுக்கு மணமுடிக்க
தேவரெலாம் வாழ்த்திவர
மாதேவன் உமையவளும்
மங்கலமாய் நாணெடுத்து
மைந்தனவன் கைகொடுக்க
பரங்குன்றில்
மணமுடித்தான்!

சூரனவன் கதைமுடித்த
கோபமது தானடங்க
ஒருகுன்றில் வந்தமர்ந்தான்
தனித்தங்கு நின்றிருந்தான்
தணியாத கோபமது
தணித்தவொரு மலையதனால்
நரமுனிவர் வாழ்த்திவரும்
தணிகைமலை தானமர்ந்தான்!

தினைப்புனத்தைக் காத்துவந்த
குறவள்ளி தனைமணக்க
வேடனாய், விருத்தனாய்
வேங்கைமர வித்தகனாய்
பலவேடம் தானணிந்து
மனவள்ளி மாலைசூட
சோலையெலாம் தவழ்ந்துவந்தான்
குன்றுதோறும் ஆடிநின்றான்!

தைப்பூச நன்நாளில்
பக்தரெலாம் கூடிநின்று
பால்காவடி பன்னீர்க்காவடி
புஷ்பக்காவடி சந்தனக்காவடி
பலவிதமாய்க் காவடிகள்
தெருவெல்லாம் ஆடிவர
மயில்மீது நீயமர்ந்து
அருள் செய்ய வா முருகா!

பாலாலே அபிஷேகம்
பன்னீரால் அபிஷேகம்
சந்தனத்தால் அபிஷேகம்
பஞ்சாமிர்த அபிஷேகம்
வெண்ணீறால் அபிஷேகம்
அத்தனையும் தாங்கிநின்று
அழகாக நீ சிரித்து
அருள் செய்ய வா முருகா!
முருகனருள் முன்னிற்கும்!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP