Monday, February 20, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49


45.

‘நம்மகிட்ட எந்த ஒளிவு மறைவுமில்லைப்பா! நம்மகிட்ட இருக்கற சரக்கை நம்ம சிஸ்யப் புள்ளைங்ககிட்ட அல்லாத்தியும் சொல்லிக் குடுத்திருவேன். அதான் நம்மளோட ஸ்பெசலு’ என்றவாறே வந்து அமர்ந்தான் மயிலை மன்னார்.


‘அது சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றே மன்னார்?’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'பின்ன இன்னா ஐயரே! இந்தக் கோவாலுப் பய நேத்து நம்ம வூட்டாண்டை வந்து அளுதுக்கினே நிக்கறான். இன்னாடா சமாச்சாரம்னு கேட்டா, ‘அண்ணே! எனக்கு ஒன்னிய வுட்டா ஆருமேயில்ல. எனக்கு ஒரு தொளி[ழி]ல் கத்துக்கொடு’ன்னு கெஞ்சறான். எங்கிட்ட வந்தவனுக்கு இதுவரைக்கும் எதுனாச்சும் மறுப்பு சொல்லிருக்கேனா? சரி, வாடான்னு சேத்துக்கினேன்’ எனச் சிரித்தவாறே சொன்னான் மயிலை மன்னார்.


‘அதான் எனக்கு நல்லாவே தெரியுமே மன்னார்! நான் எப்ப வந்து எதைக் கேட்டாலும், உனக்குத் தெரிஞ்சதைத் தயங்காம எனக்கு சொல்லிகிட்டே இருக்கியே! இன்னிக்கு நேத்துப் பழக்கமா நம்மளுது? உன்னோட குணம்தான் எனக்கும் தெரியுமே’ என்றேன் நான்.


அன்புடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, ‘இப்ப வரப்போற பாட்டும், இதைத்தான் சொல்லுது. எங்கே நீ பாட்டைப் படி’ என்றான் மன்னார்.

‘ஓ! அதுக்குத்தான் இப்படி ஒரு பீடிகையா!’ என மனதுக்குள் சிலாகித்தபடியே பாட்டைப் படித்தேன்.

கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.


“கரவாகிய கல்வியுளார் கடை சென்று இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ?”

இதுவரைக்கும் வந்த பாட்டுங்களைப் புரிஞ்சுக்கிட்ட ஒர்த்தன், நாயமா இன்னா பண்ணுவான்?


இந்த முருகன்றது ஆரு? அவன் எப்பிடியாப்பட்டவன்? அவனை பக்தி பண்றது எப்பிடி?ன்னு தேடுவான்.


இதுவரைக்கும் சொன்னாப்பல, ஒரு குருவைத் தேடி, அவர் கையுல்லேர்ந்து, ஒரு ஞானத்தை அடையறதுக்கு, அவரோட வூட்டாண்டை போயி நிப்பான்!


ஆனாக்காண்டிக்கு, இந்த வரியுல ஒரு முக்கியமான சமாச்சாரத்தை அருணகிரியாரு சொல்லிக் காமிக்கறாரு.


நாம தேடிப் போயி அடையுற அல்லாக் குருமாரும், நமக்கு அல்லாத்தியும் சொல்லிக் குடுக்க மாட்டாங்களாம்!


தனக்குத் தெரிஞ்ச அல்லாத்தியும், தன்னோட சிஸ்யனுக்குச் சொல்லித் தர்ற குருமாருங்க ரொம்பவே கம்மி!


எங்கே அல்லாத்தியும் தெரிஞ்சுக்கினு, இவன் நமக்கும் மேலியும் போயிருவானோன்னு, ஒரு கிலி பிடிச்சு, உள்ளத மறைச்சுச் சொல்ற குருமாருங்கதான் பெரும்பாலுமா இருக்காங்களாம்.


‘கரவு’ன்னா, உள்ளத மறைக்கறதுன்னு பொருளு!


நீகூட கேட்டிருப்பியே, காக்கா கரவுதுன்னு! அதுக்கு இன்னா அர்த்தம்?


ஒரு பண்டம் திங்கறதுக்குக் கிடைச்சிருச்சுன்னா, ஒரு காக்கா இன்னா பண்ணும்?
‘கா..கா’ன்னு கத்தி தன்னோட கூட்டத்தியே கூட்டிரும்.


‘காக்கா – நரி’ கதையுல கூட இன்னா ஆச்சு?
தன்னோட கூட்டம் இல்லேன்னு தெரிஞ்சுங்கூட, ஒரு நரி ‘கா…கா’ன்னு கத்தினதும் வடையைக் கீளே[ழே] போட்டிருச்சு!


ரொம்பப் பேரு சொல்லுவாங்க காக்கா ஏமாந்து போயிருச்சுன்னு!
ஆனா, அது அப்பிடி இல்ல!
தங்கிட்ட இருக்கறத மறைக்க நெனைச்சாலுங்கூட, அதால முடியாது. அதோட கொரலு காட்டிக் கொடுத்திரும். அதான் காக்காவோட கொணம்!


இந்தக் காலத்துல, இதும்மாரி இருக்கற குருமாருங்க ரொம்பவே கம்மியாப் பூட்டாங்க!
அதுமாரி க்கீற ஆளுங்களப் பத்திதான் இந்த வரியுல சொல்றாரு அருணையாரு.


‘கரவாகிய கல்வியுளார்’னா, தனக்குத் தெரிஞ்சத, புரிஞ்சத, அறிஞ்சத, மத்தவங்க முளு[ழு]சாத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு பயப்படறவங்க!


அதுக்கு இன்னா வோணும்னாலும் காரணம் அவங்களுக்குள்ள இருக்கலாம்.
இவன் இதுக்குத் தகுதியானவானா, இவன் இத்தத் தெரிஞ்சுக்கினு இன்னா பண்ணுவானோ, இவன் வேற ஏதோ நம்பிக்கையுல இருக்கறவனாச்சே, இவனுக்கு இத்தச் சொல்லலாமான்னு இன்னான்னாமோ காரணம்லாம் இருக்கலாம்.
ஆனாக்காண்டிக்கு, இவங்க அல்லாருமே ‘கரவாகிய கல்வியுளார்’தான்னு நமக்குக் காமிச்சுக் குடுக்கறாரு அருணகிரியாரு.


இவங்க வூட்டு வாசல்ல, அதான் ‘கடை’ …. கடைன்னா வூட்டு வாசல்னு அர்த்தம்…. போயி நிக்காம, எனக்குச் சொல்லிக் குடுப்பான்னு கெஞ்சாம… ‘இரவா’ன்னா, கெஞ்சறது….. எனக்கு ஒரு உண்மைய ஒன்னோட பிச்சையா எனக்குப் போடுவியா… ‘ஈகுவையோ’ன்னு… இந்த வரியுல புட்டுப் புட்டு வைக்கறாரு அந்த மகாப் பெரியவரு.


நீயும் எத்தினியோ ஆளுங்ககிட்ட போயிருப்பே!
இவர்தான் என்னோட குருன்னு அவர் சொல்ற வார்த்தையுல நம்பி மயங்கியிருப்பே.


ஆனாக்காண்டிக்கு, இத்தயெல்லாம் வுட்டு, நீ எப்பவும் நம்பற முருகனையே வேண்டினியானா, அவரே ஒனக்கு அல்லாத்தியும் புரிய வைப்பாருன்றத இதுல சொல்றாரு.


அதுக்காவ, நீ பாக்கற அல்லாக் குருமாருங்களயுமே தப்பு சொல்றேன்னு நெனைச்சுக்காத!


ஒம்மேல அன்பு வைச்சு, ஒனக்கு அல்லாத்தியும் சொல்ற அல்லாருமே முருகந்தான்! அப்பிடியாப் பட்டவங்களும் நெறையவே க்கீறாங்க.
அந்த முருகன் தான் இவங்க ரூபத்துல வந்து, ஒனக்கு ஒரு நல்ல வளி[ழி]யைக் காட்டித் தரான்
அத்த நல்லாப் புரிஞ்சுக்கோ!!~ சரியா!’ என்று நிறுத்தி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


‘அப்போ, அந்த அடுத்த இரண்டு வரி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், மன்னார்?’ என்றேன் நான் வெள்ளந்தியாக.

“குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே.”

‘இதானே அடுத்த ரெண்டு வரி?
ஒண்ணொண்ணித்தியும் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்காரு அந்த ஞானி!


‘குரவா’ன்னா மகாப் பெரிய குருவேன்னு அர்த்தம்!


இது வரைக்கும் ஒரு ஒரு குருவோட தகுதியைப் பத்திச் சொன்னவரு மொத மொதலாப் போட்டது, இந்த வார்த்தை!


பிரம்மனைப் பார்த்து ‘ஓம்’முன்றதுக்கு அர்த்தம் சொல்லிக் கேட்டு, அவருக்குத் தெரியலைன்னதும், அவரைத் தலையுல நல்லாக் குட்டி, ஜெயில்ல தள்ளினதும், நைனா கபாலி வந்து கேக்கக் கொள்ள, ‘எனக்கு அதோட அர்த்தம் தெரியும்! ஒனக்கு வோணும்னா, ஒளுங்கு மரியாதியா வந்து கேட்டாச் சொல்வேன்’னு சொன்னதோட நிக்காம, தன்னோட வூட்டு வாசல்ல.. சாமிமலைல…. வந்து கேட்ட சிவனுக்கு அதோட அர்த்தத்தச் சொன்னவரு நம்ம கந்தன்!


தனக்குத் தெரிஞ்சத மறைக்காமச் சொன்னவரு இவரு!
அதைத்தான், ‘குரவா’ன்னு மொத வார்த்தையாப் போடறாரு’

‘இப்ப நான் ஒண்ணு சொல்லியே ஆகணும்!’ என மறித்தார் சாம்பு சாஸ்திரிகள்.
நாயர் கடை மசால் வடையைக் கடித்தபடியே, ‘சொல்லுங்க சாமி’ என டீயை உறிஞ்சினான் மயிலை மன்னார்.


‘அந்தக் குரு சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை விளக்கினதால சிவகுரு ஆனார். அது மட்டுமில்லாம, அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும், தசரத ராமனுக்கும், வாமதேவ முனிவருக்கும், நாரதருக்கும், பராசர முனிவரோட புத்திரர்கள் ஆறு பேருக்கும் கூட குருவா வந்து உபதேசம் பண்ணினதால, ‘பரமகுரு’ன்னும் ஒரு பேரு இவருக்கு உண்டு’என்றார் சாஸ்திரிகள்.

‘அட! ‘குரவா’ன்றதுக்கு இத்தினி அர்த்தம் இருக்கே! ரொம்ப நல்லாச் சொன்னீங்க சாமி!’ எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.


‘அடுத்த வார்த்தை ‘குமரா’


இத்த அந்த மொத வார்த்தையோட சேத்துப் பாத்தீன்னா, 'குமரகுரவா’ன்னு புரியும்!
அதாவுது, சின்னப் பையனா இருக்கறப்பவே, இத்தையெல்லாம் பண்ணி, பரமகுருவா ஆனவன்னு அர்த்தம்.


இதுல இன்னா சொல்றாருன்றதக் கெவனி!
ஒரு ஆளோட வயசை வைச்சு, இவரு என்னிய விட சின்னவராச்சே. இவுரு எப்பிடி எனக்கு குருவாக முடியும்னு மயங்காதே!
வயசுக்கும், ஞானத்துக்கும் சம்பந்தமில்ல.
புரிஞ்சுக்கோ!


‘குலிசாயுத குஞ்சரவா’ன்னு அடுத்த வார்த்தை!


‘குலிசாயுதம்’னா இன்னா?
இந்திரன் கையுல வைச்சுக்கினு க்கீற வச்சிராயுதம்!
ரெண்டாயிரம் நுனி க்கீதாம் அதுக்கு! வைரத்தால ஆயுதம் இந்த வச்சிராயுதம்!


அந்த இந்திரனுக்கு ஒரு ஆனை!
அயிராவதம்னு பேரு அதுக்கு.


அது வளத்த பொண்ணுதான் தேவசேனையம்மா.
அதான் தெய்வானை.


சூரனை அளி[ழி]ச்சு தேவருங்களையெல்லாம் காப்பாத்தினதால, இந்திரன் தன்னோட மகளான தெய்வயானையை முருகனுக்குக் கண்ணாலம் பண்ணி வைச்சாரு.
அதுனல, 'குலிசாயுத குஞ்சரவா’ன்னு பாடறாரு’ என்றான் மன்னார்.

‘இப்போழ் இதுக்கும் இந்தப் பாட்டுக்கும் எந்தா சம்பந்தம்?’ எனக் கேட்டான் நாயர்!

‘சரியாக் கேட்டே நாயரே! சொல்றேன் கேளு!


வள்ளி இச்சா சக்தி, தேவானையம்மா கிரியா சக்தின்னு முன்னாடியே சொன்னேன்ல.
நாமல்லாம் இச்சா சக்திங்க! இந்த அனுபவம் புரியணும்னு ஒரு இச்சையுல அலையறவங்க! ஆனா, அத்த நடத்திக் குடுக்க ஒரு கிரியா சக்தி வோணும்!
எந்த ஒரு ஆசையையுமே நடத்தறதுக்கு ஒரு கிரியா சக்தியோட தொணை வோணும்!
நாம அந்த முருகன் வூட்டு வாசல்ல போயி ஏதோ ஒரு ஆசையோட நிக்கறச்ச, அத்த நடத்திக் கொடுக்கறவந்தான் முருகன்! ஏன்னா, அவன் இச்சா, கிரியான்னு ரெண்டையுமே தன்னோட வைச்சுக்கினு க்கீறான்!


அதுக்காவத்தான், இதுவரைக்கும் வள்ளியைப் பத்தியே சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப தேவானையம்மாவை இந்தப் பாட்டுல மொத மொதலாக் கொண்டு வர்றாரு.


இப்ப கடைசி வார்த்தையைக் கெவனி!


‘சிவயோக தயாபரனே’


இந்த ஒலகத்துக்கே ஆதியானவன் அந்த சிவந்தான்!
ஆரு இன்னா பண்ணினாலும், அந்த சிவயோகம் வர்றதுதான் ரொம்ப முக்கியம்.
அது கிடைக்கறதுக்கு கருணை பண்றவந்தான்… “தயாபரந்தான்”…. நம்ம கந்தக் கொ[கு]மரன்!


அவனே நமக்குல்லாம் குருவா வந்து, எத்தயும் ஒளிச்சு மறைக்காம, அல்லாத்தியும் சொல்லிக் குடுத்து, நம்மளக் கரையேத்தணும்னு நமக்காவ வேண்டிக்கறாரு அருணகிரியாரு!


அனுபூதின்னா இன்னா, அது வரணும்ன்னா, நாம எத்தயெல்லாம் விட்டொளி[ழி]க்கணும், அதுக்காவ, ஆருகிட்ட வேண்டணும், ஆரு காலைப் பிடிக்கணும்னு இதுவரைக்கும் சொன்னவரு, இந்தப் பாட்டுல, ஆரு குருவா வரணும், அத்துக்கு அந்தக் குருவுக்கு இன்னாத் தகுதி இருக்கணும்னும் சொல்லிக் காட்டியிருக்காரு!


ஆகக்கூடி, இந்தப் பாட்டை, தான் ஒரு குருன்னு நெனைச்சுக்கினுக் க்கீற அல்லாக் குருமாருமே ஒரு தபா தன்னை ஒரு சுயவிமரிசனம் பண்ணிக்கணும்ன்றதியும் பூடகமாச் சொல்லிருக்காரு அருணையாரு’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘ரொம்ப நன்னாச் சொன்னேடா மன்னார்! தேடறவனுக்கு மட்டுமில்லாம, தேடறவனுக்குக் குருவா வர்றவருக்கும் என்ன தகுதி இருக்கணும்னு இந்தப் பாட்டுல அருணகிரியார் சொல்லியிருக்கார்!


இப்பிடி, ஒளிச்சு மறைச்சு சொல்லிக் கொடுக்கறவாளுக்கு என்ன நடக்கும்னு அப்பர் ஸ்வாமிகள் ஒரு பாட்டுல ரொம்பத் தெளிவாச் சொல்லியிருக்கார்!


‘இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்’


கேட்டவனுக்கெல்லாம் கொடுக்க வைச்சாராம். கொடுக்கறவனுக்கெல்லாம், அப்பிடிக் கொடுக்கறதுக்கான அருளைக் கொடுத்தாராம்; அப்பிடிக் கொடுக்காம ஒளிச்சு, மறைச்சு வைச்சவனுக்கெல்லாம், கொடுமையான நரகங்களை வைச்சாராம். ஒண்ணு ரெண்டு இல்லை, நரகங்கள்னு எண்ணிக்கையே இல்லாமச் சொல்லியிருக்கார் அப்பரடிகள்.


இதைப் புரிஞ்சுண்டு, தனக்குத் தெரிஞ்சதெல்லாம், லோக க்ஷேமத்துக்குத்தான்னு பாகுபாடில்லாம, அள்ளியள்ளிக் கொடுக்கறவாதான் குருன்னு இதுல ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கார்டா!’ என்றார் சாம்பு சாஸ்திரிகள் .


‘ஓம்’ என்பதுபோல், கபாலி கோயில் மணியோசை ஒலித்தது!
நாயரின் ‘ஓம் சரவணபவ’ தொடர்ந்தது!

[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP