Thursday, January 26, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43. 40.[இரண்டாம் பகுதி]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43
40.[இரண்டாம் பகுதி]

'இன்னா கேட்டீங்க சாமி? அடுத்த ரெண்டு வரியா?

இந்தப் பாட்டுல ஒரு விசேசம் இன்னான்னு கெவனிச்சீங்களா?
ஓரோரு வரியிலியும் ஒரு 'ஓடு' வருது!
வினையோடு, மனையோடு, சுனையோடு, தினையோடுன்னு!

'ஓடு'ன்னா ஓடறது இல்ல!
எ[இ]லக்கணத்துல சொல்லிக்கீற 'ஓடு'!
ஏளா[ழா]ம் வேத்துமை உருபுன்னு சொல்வாங்களே, அதான் இது!

அல்லாம் எப்பவோ சின்ன வயசுல படிச்சது! இன்னா சாமி? நான் சொல்றது சர்த்தானே?' என சாஸ்திரிகளை மன்னார் பார்க்க, தன் தலையை ஆட்டியபடியே அதை ஆமோதித்தார் சாஸ்திரிகளும்!


'சரி, அத்த வுடுவோம்! இப்ப பாட்டுக்குள்ளாற போலாம்!
மொத ரெண்டு வரியுல சொன்னதுக்கும், இந்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்மந்தம் க்கீது!
அது இன்னான்னு எனக்குத் தெரிஞ்சவரைக்குமா சொல்றேன்.
இதான் அதுன்னு நா சொல்ல வரல!
ஆனாக்காண்டிக்கு, இப்பிடியும் சொல்லியிருப்பாரோன்னு எனக்குப் பட்டதத்தான் இப்ப சொல்லப் போறேன். சரியா?' என்ற பீடிகையுடன் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

"சுனையோடு அருவித் துறையோடு பசுந்தினையோடு இதணோடு திரிந்தவனே."

ஒரு அள[ழ]கான காதல் கதையை ஒரு 'பெயிண்டிங்'மாரி கோடு போட்டுக் காட்டறாரு இங்க!

வள்ளியக் கண்ணாலம் பண்ணிக்கோன்னு நாரதர் வந்து திருத்தணியுல முருகன் கையுல சொன்னதும், தேவானையம்மா சம்மதத்தோட முருகன் கெளம்பி வராரு.

ஏன்னா, தேவானையம்மாவுக்கு முன்னாடியே தெரியும், அங்க க்கீறது நம்ம தங்கச்சிதான்னு!

அம்ருதவல்லி, சுந்தரவல்லின்னு ரெண்டு பொண்னுங்க, பிரம்மாவுக்கு!
அவங்க ரெண்டு பேருமே, முருகந்தான் எங்களுக்குப் புருசனா வரணும்னு தவம் பண்றச்சே, கந்தசாமி அவங்க முன்னாடி வந்து, 'அப்பிடியே ஆவட்டும். னு சொல்லி வரம் தந்ததால, ஒருத்தங்க இந்திரனுக்கு மவளா ஆனை வள[ர்]த்த தேவானையாவும், இன்னொருத்தங்க வேடக்கொலத்துப் பொண்ணா, நம்பிராசனுக்கு மவளா, வள்ளியம்மாவாவும் பொறந்த கதை இவங்களுக்குத் தெரியும்!


இப்ப, முருகன் கெளம்பி வராரு.


இந்தம்மா, வள்ளியம்மா, காட்டுல வள[ர்]ந்து, தெனைப்புனத்தைக் காவல் காக்கறதுக்காவ, ஆலோலம் பாடிக்கினு க்கீறாங்க!

இப்ப நீ ஒண்ணப் புரிஞ்சுக்கணும் நல்லா!
தேவானையம்மா கிரியா சக்தி!
வள்ளியம்மா இச்சா சக்தி!
கிரியா சக்தி தூண்டுதலால, இச்சா சக்தியைத் தேடிக்கினு முருகன் வராரு!


ஏன்னா, இச்சா சக்தியாலத்தான் இந்த ஒலகமே நடக்குது!
அவங்க தொ[து]ணை இல்லாம எதுவுமே நடக்க ஏலாது!

தானே அல்லாத்தியும் பண்ண முடியும்னு நடத்திக் காட்டின முருகன், இப்ப இந்த இச்சா சக்தியைத் தேடிக்கினு வராரு!
எதுக்காவன்னா, ஒலகம் நல்லபடியா நடக்க, ஒரு பொண்ணோட தொணை எப்பவுமே வேணும்ன்றதக் காட்றதுக்காவத்தான்!


ஒரு ஆம்பளை ஒதவியோடத்தான் ஒரு பொண்ணு கெர்ப்பம் அடைஞ்சாலும், அத்தப் பொத்திக் காப்பாத்தி, பத்து மாசம் தன்னோட வவுத்துல வள[ர்]த்து, அந்த உசிரை உருவாக்கி, அத்த வெளியே கொணாந்து, அதுக்கு மொத மொதலாப் பாலைக் குடுக்கறது ஒரு பொண்ணுதான்!


இந்தத் தாய்மைன்ற ஒரு பெரிய விசயத்த மதிக்கறதக் காட்டறதுக்காவத்தான், முருகன் வள்ளியத் தேடிக்கினு போறாரு.
அதுக்காவ, எத்தினி எத்தினி கஸ்டம்லாம் படறாருன்றதத்தான் இந்த ரெண்டு வரி சொல்லுது.


கெள[ழ]வனா ஒரு வேசம் போட்டுக்கினு, அந்தம்மா கையப் புடிச்சுக்கினு, தண்ணி குடிக்கறதுக்காவ, ஒரு சொ[சு]னையாண்ட போறாரு.

அங்க ஒரு அருவி கொட்டிக்கினு க்கீது!
அது வளி[ழி]ஞ்சு தேங்கிக் கெடக்கற சொனையிலேர்ந்து தண்ணி குடிக்கறாரு!
அதான், 'சொ[சு]னையோடு, அருவித் துறையோடு'

அதுக்கும் முன்னாடி அவர் பட்ட பாட்டைச் சொல்றதுதான், 'பசுந்தினையோடு, இதணோடு'ன்ற வார்த்தைங்க!

முன்னாடியே சொன்னேனே, இந்தம்மா தெ[தி]னைப்புனத்தக் காவல் காக்கறாங்கனு.
அதுக்காவ, ஒரு பெரிய பரணு கட்டி, அதும்மேல இந்தம்மா நின்னுக்கினு, போற வர்ற காக்கா, குருவிங்களையெல்லாம் 'சோ' 'சோ'ன்னு கவண்கல்ல வீசித் தொறத்தறாங்க!

'இதண்''னா பரணுன்னு அர்த்தம்!

அங்கியும் வந்து கந்தன் பாடாப் படறாரு!


'நீ ஆரு'ன்னு அந்தம்மா கேக்க, 'நான் ஒரு வேடன்'னு இவரு சொல்ல,
'எதுக்காவ இங்க வந்தே'ன்னு அவங்க கேக்க,
'ஒரு மானைத் தேடிக்கினு வந்தேன்'ன்னு இவர் பதில் சொல்ல,
'அப்பிடி ஒரு மானும் இங்க தெம்படலியே'ன்னு வள்ளியம்மா எடக்கா பதில் சொல்றாங்க!


இவரு சும்மா இருப்பாரா?


'அது காயாத மான், தேயாத மான்'னு ஒரு பெரிய பாட்டாப் படிச்சு வள்ளியம்மாவக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.

அதுக்கு அந்தம்மா கோவிச்சுக்கினு, 'இரு, இரு! என்னோட அண்ணம்மாரக் கூப்புடறேன்'ன்னு அவங்க கூப்பாடு போட, அவங்களும் ஓடி வர்றாங்க!

ஒடனே நம்மாளு இன்னா பண்றாருன்னா, ஒரு மரமாத் தன்னை மாத்திக்கினு இந்தம்மாவைக் கட்டின கையோட நிக்கறாரு!

வந்த அண்னம்மாருங்க, 'எங்கேடா, இங்க ஒர்த்தரியும் காணுமே'ன்னு சொல்லிட்டுப் பூடறாங்க!

இப்பிடில்லாம் கஸ்டப்பட்டுத்தான் வள்ளியம்மாவை கண்ணாலம் பண்ணிக்கறாரு கந்தன்!

எதுக்காவ?
இந்த ஒலகத்துல நம்மளை நம்பியிருக்கற அடியாருங்களக் காப்பாத்த, இச்சா சக்தியான இந்தம்மாவும் கூட வேணும்ன்றதுக்காவ!
அதுக்குத்தான் இப்பிடில்லாம் திரியுறாரு!

அப்பிடித்தான் நாமளும் நம்ம பொஞ்சாதிங்கள மதிச்சு, அவங்க ஒதவியோட மத்தவங்களுக்கு எதுனாச்சும் நல்லது பண்ண முடியுமான்னு பாக்கணுமே தவிர, அவங்ககிட்ட மயங்கிப் போயி வாள்[ழ்]க்கையத் தொலைச்சுறக் கூடாதுன்றத இந்தப் பாட்டு மூலமா நமக்கெல்லாம் சொல்லிக் காட்டறாருன்றதப் புரிஞ்சுக்கணும்' எனச் சொல்லிவிட்டு,
'இன்னா சாமி! நீங்க எதுனாச்சும் சொல்லணுமா' என சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்.

'இவ்வளவு விஸ்தாரமா நீ சொன்னதுக்கப்புறமா, நான் சொல்ல என்ன இருக்கு! கந்த புராணத்துல கச்சியப்ப சிவாச்சாரியாரும் இதையேதான் சொல்றார். அதை நீயும் சொல்லிட்டே! மனைவின்றவ ஒரு சுமை இல்லை. அதை ஒரு படகாப் பயன்படுத்திண்டு, பகவான் ராமகிருஷ்ணர் - மாதா சாரதாதேவி ரெண்டு பேரும் வாழ்ந்துகாட்டினதுமாதிரி, இந்த சம்ஸார ஸாகரத்தைக் கடந்து, பரப்ரும்மத்தை அடையற வழியைத்தான் நாம தேடணும்ன்றதை இந்தப் பாட்டும் மூலமா ரொம்ப திவ்யமாச் சொல்லிட்டார் அந்த மஹானுபாவர்! அந்த முருகனை எப்பவும் தியானிச்சுண்டே இருந்தா இதையெல்லாம் சுலபமாக்கிடுவன் அவன்!' என்றார் சாஸ்திரிகள்!


இதைக் கேட்ட மறுகணமே, நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் தொடரலாயிற்று!

வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதணோ டுதிரிந் தவனே.
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, January 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [40-முதல் பகுதி]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [முதல் பகுதி]
40.

ஓடி, ஓடிப் போனாலும், ஒன்னோட நிலையை நீ மறக்கக் கூடாது. எவ்ளோதான் நீ ஓடினாலும், ஒன்னோட நோக்கம் மாறக் கூடாது! இதைத்தான் இப்ப வரப்போற பாட்டு சொல்லப் போவுது! மொதல்ல பாட்டைப் படி' என்றான் அமர்த்தலாக மயிலை மன்னார்!


நாயர் கண்மூடி ஜெபித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒன்று நமக்குக் கிடைக்கப் போகிறது எனும் ஆர்வத்துடன் சாம்பு சாஸ்திரிகள் என்னைப் பார்த்துக் கண்ஜாடை காட்டவும், வேறொன்றும் பேசாமல் நான் பாடலைப் படிக்கலானேன்!

வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதணோ டுதிரிந் தவனே.


வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

'நாலாம் பாட்டுல ஒரு விசயம் வந்தது, நெனைப்பிருக்கா?!' என மன்னார் கேட்க, அவசர அவசரமாக பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.


'வளை பட்ட கைமாதொடு மக்களெனும்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ'
எனப் படித்தவுடன், தன் கையைக் காட்டி எனை நிறுத்திவிட்டுப் பேசலானான் மயிலை மன்னார்!


'இந்தப் பாட்டுக்கு ஒனக்குத் தெரிஞ்ச ஒர்த்தர் வந்து இன்னா சொன்னாருன்னு நெனைப்பிருக்கா?' என என்னைப் பார்க்க நான் எப்போதும் போல விழித்தேன்.


உடனே, என் உதவிக்கு வருவதுபோல சாம்பு சாஸ்திரிகள் வந்து, 'என்னடா சங்கர்! ஒனக்கு ஞாபகம் இல்லையா? தாரேஷணை, புத்திரேஷணைன்னு சொன்னாரே!' என்றதும், சட்டென நினைவுக்கு வர, 'ஆமாம், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?' எனப் பரிதாபமாகக் கேட்டேன்!


இரக்கத்துடன் என்னைப் பார்த்த மன்னார், சாஸ்திரிகளைப் பார்த்து, 'ஐயரே! இவனுக்கு இன்னும் புரியல! நீங்க கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க' என்றான்.


'ரெண்டு பாட்டுக்கு முன்னாடிதானே சொன்னேன், 'ஏஷணா'ன்னா, ஆசைன்னு. அப்போ, தார ஏஷணான்னா, பொண்டாட்டி மேலே இருக்கற ஆசைன்னு அர்த்தம். அதேபோலத்தான் புத்திர ஏஷணாவும்' எனச் சொல்லிவிட்டுத் தன் தலையில் அடித்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

'அதுக்குத்தான் இதுல பதில் சொல்றாரு அருணகிரியாரு. எப்பிடி இந்த மாயையிலேர்ந்து வெளியே வரமுடியும்னு ஒரு வளி[ழி] சொல்லித் தர்றாரு அந்தப் பெரியவரு. அதான் இந்தப் பாட்டு!' எனத் தொடர்ந்தான் மன்னார்!

"வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்"

எனக்குன்னு இருக்கற, என்னால வந்த, நான் கொண்டு வந்த அல்லா வெ[வி]னையுமே முருகனோட கையுல க்கீற வேல் பட்டா 'பட்'டுன்னு தீ[ர்]ந்து பூடும்னு எனக்குத் தெரியறதால அந்த வேல நான் என்னிக்குமே மறக்க மாட்டேன்னு மொதல் வரியுல சொல்றாரு.


வூடு, புள்ளகுட்டிங்க, சொத்து சொகம், சோகம் இன்னும் அல்லாமே, என்னோட வெனையால வந்தது.
இந்த வெனையையெல்லாம் என்னால எத்தினி சென்மம் எடுத்தாலும் தீ[ர்]க்க முடியாது!
ஆனாக்காண்டிக்கு, கந்தன் கையுல வைச்சிருக்கற வேலு இத்தயெல்லாம் ஒரு நொடியுல 'பொட்'டுன்னு தீ[ர்]த்துரும்.
அதுனால, எப்பவும் அந்த வேலையே நான் மறக்காமப் பாடிக்கினே இருப்பேன்னு சொல்றாரு.' என்றான் மன்னார்.

'கந்தரலங்காரத்துல ஒரு அற்புதமான பாட்டு இதையே சொல்றது! ' என்ற சாம்பு சாஸ்திரிகள் அதைப் பாடியும் காட்டினார்.


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கல் வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப்போது மறவாதவர்க்கு ஒரு தாழ்விலையே'


இதைக் கேட்டதும் சட்டென்று எனக்கு ஒரு வரி நினைவில் வர, ''அப்போ, ஔவையார்,
'சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை'
ன்னு சொன்னதும் இதைத்தானே!' என்றதும்,
மூவரும் எதோ ஒர் அதிசயத்தைப் பார்ப்பது போல, என்னைப் பார்த்தனர்!


மேலொன்றும் பேசாமல் மன்னார் தொடர்ந்தான்.

"மனையோடு தியங்கி மயங்கிடவோ"

இதுல. இப்பச் சொன்ன சொத்து, சொகம் சோகம் புள்ளைகுட்டிங்க, இது அல்லாத்துலியுமே, ஏதோ ஒரு வகையுல ஒன்னோட சம்பந்தப்பட்டவங்க ஒன்னோட பொண்டாட்டி!
இது அல்லாமே போனாக்கூட, அவங்க மட்டும் ஒங்கூட இருந்தாங்கன்னா, இது அத்தினியுமே ஒன்னால திரும்ப அடையமுடியும்!


ஏன்னா, அவங்க அத்தினி ஒசத்தி!


அல்லாத்தியுமே கொடுக்கற காமதேனுதான் பொண்டாட்டி!


இந்த ஒலகத்துல ஒனக்கு வேணும்ன்றதயெல்லாம் அவங்க தொ[து]ணையோட ஒன்னால சம்பாதிச்சிற முடியும்ன்றதுதான் உண்மை!
ஆனா, இதானா ஒனக்கு இப்ப முக்கியம்?
இந்த மயக்கத்துல சிக்கிக்கினு, இதான் சதம்னு நம்பி, இப்பிடியே ஒன்னோட
வாள்[ழ்]க்கையை நீ தொலைச்சுறப் போறியா?


அவங்க தொ[து]ணை ஒனக்கு இதுக்கும் மேலியும் ஒ[உ]தவி பண்ணும்!


நீபாட்டுக்கு, 'ஆகா! நமக்காக்காண்டி இப்ப்டி ஒரு பொண்டாட்டி வந்துட்டாளேன்னு, தலை தெறிக்க ஆடி, அவங்க பின்னாடியே சுத்தி, 'இதான் ஒலகம்! இதுக்காவத்தான் நான் பொறந்திருக்கேன், இத்தோட என் 'சென்மசாபல்யம்' ஆயிருச்சுன்னு மயங்கிராம, இவங்களோட 'இயங்கி'யே, இந்த ஒலகத்து மாயையுல சிக்கிக்காம, இவங்கள வைச்சுக்கினே, நீ தேடுற அனுபூதியை அடையப் பா[ர்]க்கணும்!னு ஒனக்கு சொல்லித் தர்றாரு அருணகிரியாரு.'என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

மந்தஹாஸமாய்ச் சிரித்தபடியே, 'அப்போ, இதுக்கும், அடுத்தாப்பல வர்ற ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்ம்னும் சொல்லேன் மன்னார்!' எனக் கேட்டார் சாம்பு சாஸ்திரிகள்!


'அதே ஞானும் விளிக்கு' என்றான் நாயர், சற்றே தன் கண்களைத் திறந்தபடி!


வழக்கம் போல நான் மன்னார் முகத்தையே பார்த்தேன்.
**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP