Saturday, October 20, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

முந்தைய பதிவு இங்கே!

17.
"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்." [540]

முன்னே ஒரு போலீஸ் ஜீப்! கைகளை ஆட்டியபடியே பஸ்ஸை நிறுத்த சைகை செய்தார்!

'இதுக்கு மேல போகமுடியாது. யாரோ சில ஆளுங்க ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்க! மூணு பொண்ணுங்க அதுல எரிஞ்சு செத்துட்டாங்க!
பெரிய கலவரமா இருக்கு. போற வர்ற பஸ் மேலயெல்லாம் கல்லெறியுறாங்க. ஏற்கெனவே 10-15 பஸ்ஸுங்களைத் தாக்கிட்டாங்க. எங்க பாத்தாலும் தீ வைச்சுக் கொளுத்தறாங்க. அது வேற பெரிய மதக் கலவரமா மாறிக்கிட்டு இருக்கு. திரும்பியும் போக முடியாது. எல்லா ஊருக்கும் பரவுது இந்தக் கலவரம்.
நல்ல வேளையா நீங்க இந்தக் காட்டுப் பக்கமா இருக்கீங்க. பஸ்ஸை இப்படியே ஓரம் கட்டி, மறைவா நிறுத்துங்க. கொஞ்ச நேரத்துல
எதுனாச்சும் ஏற்பாடு பண்ணி உங்களையெல்லாம் பத்திரமா அனுப்பி வைக்கிறோம்.' என்றார் காவல் அதிகாரி.

பஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி ஒரு மரத்துக்குப் பின்னால் நிறுத்தப் பட்டது.

கந்தனும், ராபர்ட்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.

'உனக்கு பயமாயிருக்கா?' கந்தன் கேட்டான்.

ராபர்ட் சிரித்தான்.

'பயமிருந்தா இவ்ளோ தூரம் வந்திருப்பேனா? எல்லாத்தையும் ஒரு விதி தீர்மானம் பண்ணுது. என்னுதை என்னன்னு முடிவு பண்ணும் போதே,
அது எங்கே எப்படி நடக்கணும்னும் அது தீர்மானம் பண்ணிடுது. நான் முன்னமேயே சொன்னது மாரி, என் தலையெழுத்தை எழுதினவன் தான்
இந்த உலகத்தோட தலைவிதியையும் எழுதியிருக்கான். அதை நான் நம்பறேன்னா, நான் இங்கே இருக்கறதும் அவன் எழுதினதுதான்.
இதுலேர்ந்து என்ன நடக்கணும்னும் அவன் முடிவு பண்ணிட்டான். இதான் சிததர் சொல்றதும். உலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு. நீ என்ன
விரும்பறியோ, அதையே அதுவும் நடத்தித் தரும்.... நீ தீர்மானமா அதுல நம்பிக்கை வெச்சியேன்னா!


அதோ பாரு, அந்த ஆளு... நீலசட்டை போட்டிருக்கானே, அவந்தான்... செல்ஃபோனை எடுத்து ஆருக்கோ தகவல் அனுப்பறான்.
இந்த அம்மா தன் புள்ளைங்களை பக்கத்துல வெச்சுகிட்டு, அளுவுது. இப்படியே, இங்க இருக்கற ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மனநிலைல
இருக்காங்க. அவங்க அவங்க நினைப்பு போலத்தான், அவங்க விதி நடக்கும்.'

'என்ன சொல்ற நீ? அப்படீன்னா, இங்க இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரி நடக்காதா?'கந்தன் அவன் பேசுவதை மேலும் கேட்கும் ஆவலுடன்,
அவனைத் தூண்டி விடுகிறாற்போல் கேட்டான்.

'கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஒரு சுனாமி வந்துது. ரொம்பப் பேரு செத்துப் போனாங்க. சில பேரு பொளைச்சாங்க. சில பேரு
எங்கியோ போயி அம்மா அப்பாவை இன்னமும் பாக்காம இருக்காங்க. அல்லாருமே சாவக்கூடாதுன்னுதான் நினைச்சிருப்பாங்க. ஆனாக்க,
அவங்க மனசுல அதையும் தாண்டி, அந்த நேரத்துல ஒரு எண்ணம் ஓடியிருக்கும். நாம செத்துருவோம், நம்ம அம்மா அப்பாவைப்
பாக்க மாட்டோமின்னு. அது ஒனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனா, இந்த அடிப்படையில நினைச்சுப் பார்த்தியானா, ஒனக்கு
விளங்கும்.

இப்போ உன் கதையையே எடுத்துக்க. அதான் பஸ்ஸுல சொன்னியே அந்தக் கதைதான்! யாரோ சொன்னாங்கன்னு, இருக்கற ஆடுங்களை
வித்திட்டு, கிளம்பினே! ஆனா, நடுவுல, உன்னை நம்பாம, உன் லட்சியத்துமேல நம்பிக்கை இல்லாம, எவனோ சொன்னதை நம்பி
அவன் பின்னால போயி, பணத்தைப் பறி கொடுத்தே! அப்பால, உன்னைப் பாத்துப் பரிதாபப்பட்ட ஒருத்தருக்காக இன்னென்னவோ செஞ்சே!
முழு மனசோட! அது பலன் கொடுத்துது.
இப்பக்கூட எடுத்துக்கோ! பணத்தை எடுத்துகிட்டு நீ என்ன பண்ணியிருக்கணும்? நேரா மஹாபலிபுரம் போயிருக்கனும்...
ரயில் புடிச்சு. நடுவுல ஒரு ஆசை. இன்னும் கொஞ்சம் ஊரைப் பார்க்கணும்னு! அதைத்தான் நான் சொன்ன அந்த உலக ஆத்மாவும் செய்யுது இப்ப!
இப்ப நீ இந்த நடுக்காட்டுல! பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!'

'இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?' என்றான் கந்தன்.

'சித்தருங்க எழுதின புக்கெல்லாம் படிச்சுத்தான். அதுல என்னன்னமோ பெரிய விஷயமெல்லாம் சூட்சுமமா சொல்லியிருக்காங்க. ஆன்மீக
விஷயத்தோட கூட அபூர்வமான மூலிகைங்க, இன்னும் சில உலோகங்களைப் பத்தியெல்லாம் கூட சொல்லியிருக்காங்க.
செம்பைத் தங்கமாக்கறது எப்படின்னு ஒரு புக்குல வருது. ஒண்ணுமே புரியலை எனக்கு. அதான் யாராச்சும் சித்தரோட பார்வை என் மேல
விழாதா; அவரோட அருளால இதைக் கத்துக்க மாட்டோமான்னு ஒரு ஆசை. அதான் அலையறேன்.... ஊர் ஊரா! இதோ இதெல்லாம் அது
சம்பந்தமான புஸ்தகங்கதான்' என்றவாறு தன் பையைத் திறந்தான்.

பாதி புரியாமலும், பாதி விருப்பமில்லாமலும், கைக்கு வந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஒன்றும் புரியவில்லை!
போகர், இலுப்பைக்குடி ஸ்வர்ணாகர்ஷண வைரவர், எனப் பல பெயர்கள் இருந்தன. ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது அவன் கவனத்தை ஈர்த்தது.

"எந்தவொரு உலோகத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவில் சூடுபடுத்தினால், சில பச்சிலைகளோடு சேர்த்து பதப்படுத்தினால், தன்னிடமுள்ள
தனிப்பட்ட குணங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஒரு இறுதி நிலையை அடைகிறது, இரு பகுதிகளாக. ஒன்று திரவமாகவும்,
மற்றொன்று திடப்பொருளாகவும்!
அப்போது அது இந்த உலக ஆத்மாவுடன் ஒன்றுகிறது.
அதைக் கையில் வைத்திருந்தால், இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும்,நடந்தது, நடப்பது, நடக்கப்போவது இவையனைத்தையுமே
அறிந்து கொள்ளமுடியும்."


'இதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? எனக்கு ஒரு பெரியவர் சொன்னமாதிரி, சுத்தி இருக்கறவங்களையும், ஒரு சில சகுனங்களையும் மட்டுமே
பார்த்தா போறாதா?' தனக்குத் தெரிந்ததை வைத்து ராபர்ட்டிடம் பேச்சுக் கொடுத்தான்.

'எல்லாத்தையுமே ஈசியாக் கத்துக்கலாம்னு நினைக்கறே நீ! சித்துவேலைன்றது அவ்வளவு சுலபமில்லை. ரொம்ப கடினமானது.பல நிலைகளைத்
தாண்டிப் போகணும் அதுக்கு. கரணம் தப்பினா மரணம்ன்ற மாதிரி. ஒவ்வொரு படியிலியும் பல கட்டுப்பாடுகள் இருக்காம். கொஞ்சம் கவனப்பிசகா
இருந்தாக் கூட அவ்வளவுதான். சர்ருன்னு கீழே தள்ளி விட்டுருமாம். குரு என்ன சொல்றாரோ, அதை அப்படியே இம்மி பிசகாம ஃபால்லோ
பண்ணனுமாம்.'


'இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமின்னுதானே பாக்கறே! 12 வருஷமாச்சு நான் இங்க வந்து! யார் யார் பின்னாலியோ போயி, எங்கெங்கியோ
அடிபட்டு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதுனாலியும் ஒரு பிரயோஜனம் இருக்கு. அசல் யாரு, போலி யாருன்னு இப்ப டக்குன்னு
கண்டுப்பிடிச்சுருவேன்!'

'இப்பிடியே சுத்தினப்பத்தான் எனக்கு ஒண்ணு புரிஞ்சுது. எதுல உன் குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்கன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் அடுத்தவனை யூஸ் பண்ணிக்கறான்.
அப்போதான் முழிச்சுகிட்டேன். சரி, இதுவரைக்கும் நமக்குக் கிடைச்ச அறிவை வெச்சுகிட்டு, இனிமே நாமளே தனியாத் தேடணும். நம்ம நேரம் சரியா இருந்தா தானே குரு ஒருத்தர் வருவாரு. நமக்கு வழி காட்டுவாரு.' என்றான் ராபர்ட்.

'அவரை எப்படிக் கண்டுபிடிக்கறது?' அப்பாவியாய்க் கேட்ட கந்தனை சற்று இரக்கத்துடன் பார்த்தான் ராபர்ட்.

[தொடரும்]
******************************


அடுத்த அத்தியாயம்

24 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Sunday, October 21, 2007 8:24:00 PM  

குருவை எப்படி கண்டுபிடிக்கிறதா?அது சித்தரை கண்டுபிப்பதைக் காட்டிலும் கஷ்டம். :-)
அதென்ன ஐயா,சித்தர் என்றாலே தங்கமாக மாற்றும் வித்தை தான் வருகிறது.அல்டிமேட் என்பதாலா?இல்லை அது தான் அவருடைய குவாலிபிகேஷனை நிரூபிக்கிறதா?

VSK Sunday, October 21, 2007 8:30:00 PM  

மனிதர்களின் தேவைகலை வைத்து இவ்வாறு அளக்கிறார்கள் திரு.குமார்!

ஆனால், இவர்களெல்லாரும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.
எதையும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இல்லை.

சில சமயங்களில் இப்படிக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.... !

அதுவும் ஒரு காரணத்துக்காகவே!

போகப் போகத் தெரியும்!

VSK Sunday, October 21, 2007 8:34:00 PM  

அம்புட்டுத்தானா, கொத்ஸ்!

வெள்ளிக்கிழமை வேணா 'பிஸி'ன்னு ஒத்துக்கலாம்..
இன்னிக்கு....????/
:)

இலவசக்கொத்தனார் Sunday, October 21, 2007 9:09:00 PM  

நாங்களும் பதிவு எழுதிக்கிட்டு இருக்கோமில்ல!!

VSK Sunday, October 21, 2007 9:33:00 PM  

அப்பச்சரி, கொத்ஸ்!
:))

VSK Sunday, October 21, 2007 9:35:00 PM  

முகப்பில் வர உதவி செய்யும் இம்மாதிரி 'உள்ளேன் ஐயா' பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன!
:))

[அவ்வப்போது!]
:)

Anonymous,  Sunday, October 21, 2007 9:36:00 PM  

//சித்தர் என்றாலே தங்கமாக மாற்றும் வித்தை தான் வருகிறது.அல்டிமேட் என்பதாலா?இல்லை அது தான் அவருடைய குவாலிபிகேஷனை நிரூபிக்கிறதா?//

குமார் சார்,
சாய்பாபாவின் பக்தரான எஸ்கேவுக்கு உதாரணம் காட்ட தங்கம் கிடைப்பது கஷ்டமா ? சரியா சொன்னீர்கள். அதுதான் குவாலிபிகேசன்.
:)

VSK Sunday, October 21, 2007 9:53:00 PM  

//சாய்பாபாவின் பக்தரான எஸ்கேவுக்கு உதாரணம் காட்ட தங்கம் கிடைப்பது கஷ்டமா ? சரியா சொன்னீர்கள். அதுதான் குவாலிபிகேசன்.//

யாருடைய பெயரை இப்பதிவில் தவிர்க்க வேண்டுமென்று எண்ணினேனோ அவர் தானே இப்படி வருவதை, [அதுவும் ஷீர்டி சாயிபாபாவின் மஹாசமாதி தினமான இன்று வந்ததை,] ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொள்கிறேன்ன்.
:)
ஜெய் சாயிராம்!

வல்லிசிம்ஹன் Sunday, October 21, 2007 10:15:00 PM  

குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்ககன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் //
உண்மை உண்மை எக்காலத்திலும் உண்மை என்கிற வசனம் ஞாபகத்திற்கு வரது.

கந்தன் வாழ்க்கை பெரிய படிப்பினை.

VSK Sunday, October 21, 2007 10:30:00 PM  

//உண்மை உண்மை எக்காலத்திலும் உண்மை என்கிற வசனம் ஞாபகத்திற்கு வரது.

கந்தன் வாழ்க்கை பெரிய படிப்பினை.//

கதையை ஆழ்ந்து படித்து, நல்ல விஷயங்கலை மீண்டும் இதுபோல வெளிக்கொணர்வதற்கு மிக்க நன்றி, வல்ல்லியம்மா!

cheena (சீனா) Sunday, October 21, 2007 11:29:00 PM  

புதையலைத் தேட வேண்டியவன் இப்போது தான் குருவைத் தேடுகிறான். எப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று யார் தீர்மாணிக்கிறார்கள் ? கால் போன போக்கிலே மனம் போகிறதா ? அல்லது மனம் காட்டும் வழியிலே கால் போகிறதா ? நட்ட நடுக் காட்டில் புதிர்கள் அவிழ்க்கப் படுகின்றன.

காத்திருப்போம் கதையின் ஓட்டத்தோடு - முடிவு எப்படி என்று பார்ப்பதற்கு.

நாமக்கல் சிபி Sunday, October 21, 2007 11:32:00 PM  

//குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்ககன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் //
//

அதென்னவோ வாஸ்தவம்தானுங்க்!

நாமக்கல் சிபி Sunday, October 21, 2007 11:33:00 PM  

//குருவை எப்படி கண்டுபிடிக்கிறதா?அது சித்தரை கண்டுபிப்பதைக் காட்டிலும் கஷ்டம்.//

கந்தன் எப்படிக் கண்டு பிடிக்கப் போறானோ!

VSK Sunday, October 21, 2007 11:51:00 PM  

//காத்திருப்போம் கதையின் ஓட்டத்தோடு - முடிவு எப்படி என்று பார்ப்பதற்கு.//

நிகழ்வுகள் எல்லாமே ஒரு திட்டப்படித்தான் நடக்கின்றன என நம்புகிறேன், திரு. சீனா.

பல விஷயங்கள் இப்படித்தான் என் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன.

நன்றி.

VSK Sunday, October 21, 2007 11:54:00 PM  

//அதென்னவோ வாஸ்தவம்தானுங்க்!//

நாமும் கூட அப்படி போகும்போதும் நம் ஆதாயத்துக்காகத்தான் போகிறோம். பிறகுதான் தெரிகிறது, அது எவர்க்கு ஆதாயமென!
சில சமயம் நமக்கு!
சில சமயம் அடுத்தவர்க்கு!
:)

VSK Sunday, October 21, 2007 11:55:00 PM  

//கந்தன் எப்படிக் கண்டு பிடிக்கப் போறானோ!//

விடை விரைவில்!

ஏன்?... நாளையே கூட இருக்கலாம், சிபியாரே!

நாகை சிவா Monday, October 22, 2007 2:53:00 AM  

/'உனக்கு பயமாயிருக்கா?' கந்தன் கேட்டான்.//

கந்தனும் ராப்ர்ட் போல பல வருடங்கள் அலைந்து பிறகு தான் பக்குவம் அடைவான இல்லை விரைவிலே நடக்குமா?

MSATHIA Monday, October 22, 2007 3:28:00 PM  

\\குருவை எப்படி கண்டுபிடிக்கிறதா?அது சித்தரை கண்டுபிப்பதைக் காட்டிலும் கஷ்டம். :-)\\

இல்லை. ரொம்ப சுலபம் சிஷ்யன் தயாராகும்போது குரு தோன்றுவார் !! ;-)

VSK Monday, October 22, 2007 8:05:00 PM  

//கந்தனும் ராப்ர்ட் போல பல வருடங்கள் அலைந்து பிறகு தான் பக்குவம் அடைவான இல்லை விரைவிலே நடக்குமா?//

சிபியாருக்குச் சொன்னதை பாருங்கள் நாகை நண்பரே!
:))

VSK Monday, October 22, 2007 8:07:00 PM  

//இல்லை. ரொம்ப சுலபம் சிஷ்யன் தயாராகும்போது குரு தோன்றுவார் !! ;-)//

அட! ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்களே, சத்தியா!

உங்கள் 'இந்தியத் திரும்பல்' வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!

மங்களூர் சிவா Thursday, October 25, 2007 12:36:00 AM  

//குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்ககன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் //
//

Correct

VSK Thursday, October 25, 2007 11:06:00 AM  

//Correct//

இந்த அத்தியாயத்தில் பொதுவாக அனைவருக்கும் பிடித்திருந்த வரிகள் உங்களுக்கும் பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி. ம.சிவா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP