"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்" -- 14
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 14
முந்தைய பதிவு இங்கே!
12.
"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்." [611]
கிட்டத்தட்ட 15 நாள் ஆகிவிட்டது கந்தன் அங்கு வேலை செய்ய ஆரம்பித்து.
வேலை ஒன்றும் அவ்வளவு கடுமையாயில்லை.
அதேசமயம் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாகவும் இல்லை எனப் பட்டது கந்தனுக்கு.
கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களைத் தவிர, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இங்கு வருவதில்லை என்பதைக் கவனித்தான்.
உள்ளே ஸ்டோர் ரூமில் கிடந்த கரும்பலகையைத் தூசி தட்டி, "இன்றைய ஸ்பெஷல்; டிபன் ரெடி, அளவு சாப்பாடு 10 ரூபாய் மட்டுமே" என
கவர்ச்சிகரமாக எழுதி வெளிவாசலில் போவோர், வருவோர் கண்ணில் படும்படி வைத்தான்.
கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது.
சரக்கு மாஸ்டரிடம் போய், அவருக்கு சில தெக்கத்தி உணவுவகைகளை ருசிகரமாகச் செய்வது எப்படி என தான் தன் தாயிடமிருந்து
கற்றுக் கொண்டு, ஆனால், செய்யமுடியாமல் போன, சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தான்.
"வாசலில் ஒரு சின்ன பெட்டிக்கடை போட்டு, கூல்ட்ரிங்ஸ், மிட்டாய் வகைகள், வாழைப்பழம், பீடி சிகரட், வெத்தலை பாக்கு புகையிலை,
என வைத்து வியாபார செய்தால் கூட்டம் அதிகமா வருமே!" அண்ணாச்சியிடம்.... ஓட்டல்காரரை இப்போதெல்லாம் அப்படித்தான்
அழைக்கிறான் கந்தன்!.....ஒருநாள் இரவு கடை அடைத்துவிட்டு சாப்பிடுகையில் சொன்னான்.
"ரொம்ப செலவளியும் கந்தா அதுக்கெல்லாம். பார்த்துக்க வேற ஆளு போடணும்! இருக்கற நிலைமையில அதெல்லாம் தேவையா?" எனத்
தயங்கினார் அண்ணாச்சி.
'நான் ஆடு மேய்க்க கோயிலாண்டை போகச் சொல்ல, எதுனாச்சும் பாம்பு கடிச்சு சில சமயம் ஆடுங்க ஏதோ ஒண்ணு செத்துக் கூடப் போயிருக்கலாம்
அதுக்காவ, அங்க போகாம இருக்க முடியுமா?. கொஞ்சம் துணிஞ்சுதான் எறங்கணும். ஊர்ல உங்க அக்கா மகன் ஒருத்தன் இருக்கான்.
அவனுக்கு ஒரு வளி பண்ணனும்னு ஆர்கிட்டயோ போனவாரம் சொல்லிகிட்டு இருந்தீங்களே. காதுல விழுந்திச்சு. அவரைக் கொண்டாந்து
வைக்கலாமே'
"அதுக்கில்லப்பா. இப்போ பிசினஸ் கூட கொஞ்சம் பரவாயில்லைதான். இதுவே போறுமோன்னு நினைக்கறேன். இப்படியே ஓடட்டுமே. நீகூட
சீக்கிரமே ஒனக்குத் தேவையான பணத்தை சேர்த்திரலாம். எதுக்கு அதிகமா ஆசைப்படணும்?" என்றார் அண்ணாச்சி.
நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டியதைச் செஞ்சிறணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்காரு! நாம் புதுசா ஒண்னு
செய்யறப்ப, நம்ம வாழ்க்கையும் நமக்கு உதவுமாம்"
கந்தனை வியப்புடன் பார்த்தார் அண்ணாச்சி! 'இவன் சொல்றதுல கூட விசயம் இருக்கு போலிருக்கே! காத்துள்ளபோதே தூத்திக்கோன்னு
ஆத்தாகூட அடிக்கடி சொல்றது இதான் போல. இப்ப இவன் வந்தது கூட ஒரு நல்ல சகுனந்தானே. இப்பத்தானே யாவாரம் கொஞ்சம் சூடு
பிடிச்சிருக்கு' என எண்ணியபடியே, அவனைப் பார்த்து,
"ஆமா, நீ எதுக்காவ சென்னைக்குப் போவணும்னு இருந்தே? ஆரு இருக்கா அங்க?" என வினவினார்.
"சும்மாத்தான். சுத்திப் பாக்கலாமேன்னுதான்!" இல்லாத புதையலைத் தேடி, இருந்த ஆடுகளையும், கைப்பணத்தையும் இழந்த அந்த நினைவை
மறக்க வேண்டி, உண்மையைச் சொல்வதைத் தவிர்த்தான் கந்தன்.
'அப்பச்சரி! ரொம்பப் பேருங்க அப்பிடித்தான் சொல்லிகிட்டு போறானுவ' என்று சிரித்தார் அண்ணாச்சி.
'நா ஒண்ணும் அந்த சோமு அண்ணாச்சி மாரி பெரிய மொதலாளி இல்லே! இருக்கற கொஞ்சநஞ்ச காசையும் பொட்டிக்கடைல போட்டு,
நட்டமாகிப் போச்சுன்னா, என்ன பண்றதுன்னுதான் யோசிக்கறேன். இப்ப ஏன் இவ்ளோ குறியா இருக்கே நீ இதுல?' என்றார்.
" எவ்வளவு சீக்கிரமா கொஞ்சம் ஆடு வாங்க பணம் கிடைக்குதோ, அதை நம்ம நேரம் நல்லா இருக்கறப்பவே சேத்துறணும்னு நினைக்கறேன்."
அண்ணாச்சி சற்று நேரம் மௌனமாயிருந்தார். தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
"ஆறு வயசுல இந்த ஊருக்கு வந்தேன் நான். கையில காலணா காசு கிடையாது.என்னென்னமோ வேலைல்லாம் செஞ்சு, ஒரு ஓட்டல்ல சேந்து,
அங்கேயே தொழில் கத்துகிட்டு, 20 வருசத்துக்கு முந்தி இந்த ஓட்டலை ஆரம்பிச்சேன். மீனாட்சி அருளால ஏதோ பொளப்பு ஒடிகிட்டிருக்கு.
அவளைக் கேக்காம, அவகிட்ட சொல்லாம நான் எதுவும் செய்யறதில்ல. அவதான் எம்மேல இரக்கப்பட்டு, ஒன்னிய இங்க அனுப்பி
வெச்சிருக்கான்னு நினைக்கறேன். ஏன்னா, ஆரும் இதுக்கு முந்தி இதுமாரி எனக்கு சொன்னதில்லை. எனக்கு கூட ஆசை இருக்கு!
ஒருதரம் காசிக்கு போவணும்னு. எங்க பரம்பரைல ஒருத்தரு அங்கே போயி மடமெல்லாம் கட்டிருக்காராம். அதை ஒருதரம் போயிப் பாக்கணும்னு
எங்க அப்பாரு சொல்லிகிட்டே இருப்பாரு. அவரு சொல்லச் சொல்லி,எனக்கும் மனசுல அந்த ஆசை இருக்கு. ஆனா போக முடியல. கடைய
ஆரு பாத்துப்பாங்க நான் போனா? போனவன்லாம் வந்து சொல்லுவான்...'சுந்தரம், உங்க மடத்துக்கும் போயிட்டு வந்தேன். நல்லா நம்ம
ஊரு சாப்பாடு போட்டாங்க புண்ணியவானுங்கன்னு! கேக்கறப்ப மனசு துடிக்கும். எல்லாம் கனவாவே முடிஞ்சிரும்னு நெனக்கிறேன்.
நானாவது... அங்க போவப் போறதாவுது! அதெல்லாம் ஆவற காரியம்னு தோணல. ஆனா நீ... வாளவேண்டிய புள்ள. நாலு எடம்
பாக்கணும் நீ! என்னிய மாரி இருந்திடக் கூடாது! சரி, சரி! மீனாட்சி சொல்லிட்ட! கடை போட்டுறலாம்! போய்ப் படு" என்றபடியே எழுந்தார்.
சொன்னபடியே பத்து நாளில் ஒரு சின்ன பெட்டிக்கடை வாசலை அலங்கரித்தது.
ஊரில் இருந்து அக்கா மகன் வந்து பெட்டிக்கடையைப் பார்த்துக் கொண்டான்.
ஒரு 10 பேரு எப்பவும் நின்னு, பார்த்துவிட்டு, கடையில் எதையாவது வாங்கினார்கள்.
அப்படியே வாசம் பிடித்து, உள்ளேயும் வந்து சாப்பிட்டார்கள்!
இந்த கடையை இத்தினி நாளு விட்டுட்டோமேன்னு சொல்லிக் கொண்டே சென்றார்கள்.
சென்றவர்கள் அடுத்தவருக்கும் சொன்னார்கள்.
அவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டே சந்தோஷமாகச் சென்றார்கள்.
கோவில் பார்க்க வருபவர்களும் கூட்டம் அதிகமா இருக்கே என இந்தக் கடைக்கு வர ஆரம்பித்தார்கள்!
வியாபாரம் சூடு பிடித்தது.
அண்ணாச்சிக்கு கவனிக்கக் கூட நேரமில்லாமல் போனது!
கூட 3 ஆட்களை வேலைக்குச் செர்த்தார்.
'எலே! அண்ணாச்சியக் கவனி! ஐயாவுக்கு என்ன வேணும்? ஏய்! பராக்கு பாத்துகிட்டு நிக்காத! டேபிளை தொடை!'
அதிகாரம் பண்ணவே நேரம் சரியாக இருந்தது.
கந்தனும் அயராது வேலை செய்தான்.
அண்ணாச்சிக்கு பக்கபலமாக இருந்து கடையின் பெரும்பாலான பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டான்.
பெரியவர் கொடுத்த கற்களை மறந்தே போனான்!
புதையல் ஒரு கனவாகவே போனபின்னர், இனி அதற்கு என்ன வேலை இருக்கு எனவோ, என்னவோ!
"கடைக்கு கூட்டம் ஜாஸ்தியா வருது இப்பல்லாம். எடம் பத்தலை. பக்கத்து கடை மூடறாங்களாம். அதையும் வாங்கிப் போட்டு,
நம்ம கடையை கொஞ்சம் பெருசாக்கினா, நெறயப் பேரு வருவாங்க"
மெதுவாக ஒரு நாள், அண்ணாச்சியிடம் ஆரம்பித்தான்.
அவன் வந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது!
"வாங்கலாந்தான்! எடம் பெருசானா அதுக்கேத்த மாரி, நிர்வாகம் பண்ணனும். செலவு இன்னமும் அதிகமாவும். ஆளுங்களும் கூட
வேலைக்கு வைக்கணும். 20-22 வருசமா இப்பிடியே ஓட்டிப் பளகிட்டேன். இப்பம் போயி, இத்தெல்லாம் செய்யணுமான்னு யோசிக்கறன்."
"நல்லதுதானே! காலம் மாற்ரப்ப, நாமளும் மாறலாமே!"
"நான் பாத்துகிட்டு இருக்கறப்பவே எதுத்த கடை சோமு பெரிய ஆளா கிடுகிடுன்னு வளந்து, இன்னிக்கு சோமு அண்ணாச்சி ஆயிட்டான்.
இதேமாரி, இன்னும் எத்தினியோ பேரு. நாந்தேன், நமக்கு எதுக்கு இதெல்லாம்னு பயந்து, பயந்தே, ஒண்ணும் பண்ணாம இருந்திட்டேன்.
இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சலே வந்திருக்கு. அன்னிக்கு ஒன்னிய அந்தக் கேடிப்பய கூட்டிகிட்டு போறப்பவும் அப்பிடித்தேன்.
நமக்கு எதுக்கு வம்புன்னு சும்மா இருந்திட்டேன். ஆனா, அதுகூட எனக்கு நல்லதாத்தான் ஆயிருக்கு... ஒருவகையில! ஒண்ணு மட்டும் நிச்சயம்.
நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்! இருக்கறது போதும்னு இதுவரைக்கும் இருந்திட்டேன்.
இல்லேடா!இதுக்கு மேலியும் ஒனக்கு நான் கொடுக்கப் போறேன்னு அம்மன் சொல்லுறா... ஒன் ரூபத்துல வந்து! இதையும் ஒதுக்கினேன்னா,
நாந்தேன் பெரிய முட்டாள் இந்த ஒலகத்துல. தேடிப் போக வேணாம்னாலும், வர்றத விடறது முட்டாத்தனம்தான்னு எனக்கு நீ புரிய வைக்கற"
அண்ணாச்சி பேசிக் கொண்டே போக, 'நல்லவேளை நான் பேசாததும் நல்லதுக்குத்தான்' என மனதில் நினைத்துக் கொண்டான் கந்தன்.
"வைகைல வர்ற வெள்ளத்த, எவனாலேயும் தடுத்து நிறுத்த முடியாது"ன்னு எங்க அப்பச்சி சொல்லுவாரு. எல்லாம் விதிப்படி நடக்கட்டும்'
என்றவாறு சந்தோஷமாகச் சிரித்தார்.
[தொடரும்]
****************************
அடுத்த அத்தியாயம்
25 பின்னூட்டங்கள்:
உங்கள் பார்வைக்கு!
:))
காத்துள்ள போதே ..
இதை படிக்கும் போது நான் சிங்கை வருவதற்கு முன்பு என் தந்தையுடன் நடத்திய விவாதம் தான் ஞாபகம் வருகிறது.
aajaar.
attendance marked!
//நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்//
ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.
இப்போதைக்கு மனசில் இருக்கும் ஒரு
குழப்பத்துக்கு இதுலே விடை கிடைக்குதான்னு தேடறேன்.
இதுபோல நீங்க சின்னச் சின்னதா சொல்றதைப் பார்க்கும் போது, உங்க அனுபவங்களையெல்லாம் நீங்க தொடர்ந்து வழங்கணும் என வேண்டிக் கொள்கிறேன், திரு. குமார்!
//ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.//
இதுபோல 'எதிர்பாராமல் சில விஷயங்கள்' நடக்கும் போது நமக்குத் தெரியும் ஒரு உணர்வு இதுவென நினைக்கிறேன்.
மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன் ஒரு வருஷமா ஒட்டிக்கிட்டு இருக்கானா? சீக்கிரம் இடத்தைக் காலி பண்ண வையுங்க.
//மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன் ஒரு வருஷமா ஒட்டிக்கிட்டு இருக்கானா?//
கந்தன் ஒரு சாதாரண மனிதன்.
அவன் கனவை அவன் சீக்கிரமே அடையணும் என்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் தெரியுது, கொத்ஸ்!!
ஒரு கனவை மட்டுமே குறியாக வைத்திருக்க வில்லை, பணத்தைப் பறி கொடுத்த பின் இவன்.
ஊருக்குப் போயிரலாம் கொஞ்சம் பணத்தைத் தேத்திகிட்டு எனத்தான் அவன் முடிவு இப்போதைக்கு.
அதே சமயம், ஊருக்குப் போகவும் தயக்கமா இருக்கு.[தன்மானம்?!!]
சேர்ந்திருக்கும் புதுவேலையில் மனதை ஈடுபடுத்தி, அதன் வழியில் செல்கிறான்.
நாளை ஒரு தெளிவு பிறக்கும் என நம்புவோம்!
//இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சலே வந்திருக்கு//
SK...பாத்தீங்களா!
கந்தனும் சரி, அண்ணாச்சியும் சரி...தனித்தனியா இருந்த வரைக்கும் பெருசா ஒன்னும் நடக்கல!
சேர்ந்தாப்புறம் தான் சோபிக்குது!
இது போல, காலத்தால் சேர்க்கை பற்றிச் சித்தர் சொல்லும் தத்துவமும் நடுவே போல்ட் பண்ணிச் சொல்லுங்க!
படிச்சுகிட்டுதான் இருக்கீங்கன்னு தெரியும் ரவி!
ஆனாலும், இப்போ வந்தீங்க பாருங்க ஒரு கமேண்ட்டோட!
அங்கத்தான்... அதுதான்... ரவி டச்!
கந்தனும், அண்ணாச்சியும் சேர்ந்ததை ஒரு புதிய கோணத்தில் பார்த்து சொன்னீங்களே, அது டாப்!
ஒரு நொடியில, அப்படியே வள்ளி திருமணத்தை நினைவு படுத்தீட்டீங்க!
நன்றி!
:))
//
//நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்//
//
ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.
//
ரிப்பீட்டேய்
:-)))))
கந்தன் என்ன, அவன் கனவை மறந்துட்டு, துட்டு சம்பாதிக்க வழி சொல்லிகிட்டு இருக்கான்..
கதை மாறி, கந்தன் கடைய பாத்துக்க, முதலாளி காசிக்கு போக போகறாரா??
ஹ்ம்ம்.. அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்போம்..
//கதை மாறி, கந்தன் கடைய பாத்துக்க, முதலாளி காசிக்கு போக போகறாரா??
ஹ்ம்ம்.. அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்போம்..//
கனவை மறக்கவில்லை ஐயா!
போகும் வழி தெரியவில்லை.
கைப்பணமும் தொலைந்துவிட்டது.
அண்ணாச்சி ஆதரவு கொடுக்கிறார்.
அவருக்கு உண்மையாய் இருக்க முயல்கிறான்.
கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்கே போய்விடலாம் என.
கனவு மெய்ப்படாமல் திருன்பிப் போக, தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
இங்கேயே காலம் தள்ளுகிறான்.
அதாவது, நிகழ்வில் வாழ்கிறான்...
கனவு என்பதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு...
தற்போதைக்கு!
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!
அட! கதை வேற பாதைல ஒரு வருசம் ஒடிடுச்சே... அப்ப நாளைக்கு விட்ட பாதையில் பயணம் தொடரும் போல இருக்கே....
கந்தா
காசு வந்தா
கனவு மறந்ததா!
யோசிச்சிப் பாரப்பா!
சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்குக் கிளைமாக்ஸ் வெச்சிருக்காரு.
அங்கே செல்.
கந்தா!
ஜி.ரா. கூட வந்து சொல்லிட்டாரு!
கிளம்புப்பா!
:))
நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டியதைச் செஞ்சிறணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்காரு! நாம் புதுசா ஒண்னு
செய்யறப்ப, நம்ம வாழ்க்கையும் நமக்கு உதவுமாம்"//
எத்தனை உண்மையான வார்த்தைகள்.!!
இதைப் புரிந்து கொள்ள பக்குவத்தையும் கொடுக்கிறார்.புத்தியைக் கொடுத்த நேரம் அது நடக்கவிடாமல் ஒரு துளி நெகடிவ் எண்ணமும் வந்துவிடுகிறதே. இந்த இரண்டு மனசை ஏன் கொடுக்கிறார்?
இதுதான் புரிவதில்லை. துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே பாடல்தான் ஞாபகம் வருகிறது.
கந்தன் கனவு பலிக்கட்டும்.
//அப்ப நாளைக்கு விட்ட பாதையில் பயணம் தொடரும் போல இருக்கே....//
நீங்களும் வந்து சொல்லீட்டிங்க!
கிளப்பிருவோம் கந்தனை!
:))
//புத்தியைக் கொடுத்த நேரம் அது நடக்கவிடாமல் ஒரு துளி நெகடிவ் எண்ணமும் வந்துவிடுகிறதே. இந்த இரண்டு மனசை ஏன் கொடுக்கிறார்?//
கொஞ்சம் ஆழ்ந்து கவனிச்சோம்னா, இது ஒரு காரணமற்ற பயம், நம்ம உள்மனசு சொல்றதில்லை இது, நாமே நமக்குக் கற்பித்துக் கொண்ட அறிவு என்னும் ஆணவம்னு புரிஞ்சிரும்
அப்போ ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான், வல்லியம்மா!
//கந்தன் கனவு பலிக்கட்டும்.//
உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும்!
ஜி,ரா,
\\சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்குக் கிளைமாக்ஸ் வெச்சிருக்காரு.\\
இவ்வளவு தத்துவங்களும், உள்ளார்ந்த மறைபொருளும் வச்சு அகப்பயணத்துக்கு மாபலிபுரம் தான் கிளைமாக்ஸா இருந்தா சப்பன்னு போயிருமே. விஎஸ்கே வேறங்காவது தான் பொடி வச்சு இருப்பார். பாக்கலாம்.
//விஎஸ்கே வேறங்காவது தான் பொடி வச்சு இருப்பார். பாக்கலாம்//
பெரிய திருப்பமாச் சொல்றீங்க சத்தியா!
பார்க்கலாமே என்னதான் ஆவுதுன்னு!
:))
இப்பகுதியில் தத்துவங்கள் அள்ளித் தெளிக்கப் பட்டிருகின்றன. கந்தனுக்கும் ஹோட்டல் முதலாளிக்கும் நல்லதொரு உறவு ஏற்பட்டிருக்கிறது. எவ்வழி செல்லப் போகிறான் கந்தான்.
It accidentally happens to go through your blog hmmm The story is good but don't forget to give credits to Paul coelho, the real author of "The Alchemist"
Get more details here:
http://en.wikipedia.org/wiki/The_Alchemist_(book)
Good localization of the story. Keep sharing . . . ..
Dear Mr. Arvind,
I have given the due credit for the original author at the end. Hope you see it. I have mentioned about this in the opening chapter also. Thanks.
Post a Comment