Tuesday, February 19, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"


புதன்கிழமை!

மாடவீதியில் நல்ல கூட்டம்!

'அடடா! இன்றைக்குப் போய் வந்தோமே! இன்னிக்கு பூம்பாவைத் திருநாளாச்சே! சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது! இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்!

முதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்!
'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப் பாக்காம போயிருவியோ?' என்றபடி சிரித்துக்கொண்டே மயிலை மன்னார்!

அடித்தது வலித்தாலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த அன்பை உணர்ந்த நான், 'உன்னைப் பார்க்காமல் போயிடுவேனாக்கும்! கூட்டமா இருக்கே! உன்னைப் பார்க்க முடியுமோன்னு நினைச்சேன்!' எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டேன்~!

'அடிச்சது ரொம்ப வலிச்சிருச்சா? இன்னிக்கு திருநாளாச்சே! செத்த பொண்ணை சாம்பல்லேர்ந்து ஒருத்தரு... அவரு பேரு இன்னா... ஆங்... யாரோ சம்பந்தராம்.. அவரு பாட்டுப் பாடி உசிரைக் கொணாந்தாராம்! நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி! அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம்! படா கில்லாடிய்யா அந்த ஆளு! ஆனாலும் அவரோட அன்பு இருக்கே, அத்தப் பாராட்டியே ஆவணும்' என மன்னார் என் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

கூடவே, 'இந்த அன்பு இருக்கே.... அதாம்ப்பா லவ்வு! அதுக்கு இன்னா வலு தெரியுமா? அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு! வேணுமின்னா எளுதிக்கோ!' என்று கண்ணைச் சிமிட்டினான்!

கரும்பு தின்னக் கூலியா என ஒரு கணம் நினைத்தவன், முதுகில் விழுந்த அடியின் வலி இன்னமும் உறைக்க, சிரித்துக் கொண்டே பேப்பர் பேனாவை எடுத்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-8 "அன்புடைமை"

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்." [71]

இந்தக் குறளை மட்டும் நீ சரியாப் புரிஞ்சுகிட்டியானா, மத்த எதையும் நீ படிக்க வேணாம்! அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா! கவனமாக் கேளு!

ஒனக்கு ரொம்பவே பிடிச்ச ஒருத்தரு! அவருக்கு ஒரு துன்பம் வந்திருது! உங்கிட்ட சொல்றாரு அதை! நீ ஒண்னும் பண்ணலை! சும்மா கேட்டுக்கினுதான் இருக்கே! ஆனா, அவரு சொல்லச் சொல்ல ஒன் கண்ணுல நீரு தளும்புது! நீ கவனிக்கலை அத்த! கொஞ்சங்கொஞ்சமா அது உருண்டு ஒங்கண்ணுல்லேர்ந்து வளியுது! ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே! அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல! தானா கண்ணு தண்ணி வுடுது! இருக்கற அடைப்பயும் தாண்டிக்கினு!

சரி! அத்த வுடு! நீ இந்த தண்ணியெல்லாம் தேக்கற இடத்தைப் பாத்துருக்கியா? ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க! அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும்! ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது! இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும்? தடுக்க முடியுமா அதால? அதையும் தாண்டி இப்ப இந்த வெள்ளம் ஓடி வந்திரும்!

அப்படித்தான் இந்த அன்புன்றது!

அணையெல்லாம் போட்டு இதைத் தடுக்க முடியாது! எந்தத் தடையையும் தாண்டி வெளிய வந்திருமாம்!

வேற எதையும் சொல்லாம, இந்த தாழைச் சொல்லி ஐயன் இன்னாமா சொல்லிருக்காரு பாத்தியா?!! இதுக்கு மேல அன்பைப் பத்தி இன்னா சொல்ல முடியும்ண்ற?

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு" [72]

இந்த அன்புன்றது எம்மாம் பெரிய விஷயம்னு இதுல சொல்றாருன்னு கேளு.
இந்த அன்புன்றது இல்லாதவங்க எல்லாம், எந்தப் பொருளைப் பாத்தாலும் தனக்கே தனக்குன்னு அலையுவாங்களாம். ஒண்ணையும் பிறத்தியாருக்குத் தராம தன்கிட்டயே வைச்சுப்பாங்களாம்.
அதே நேரம், ஒடம்புல மட்டுமில்லாம, மனசு பூரா அன்பை வைச்சிருக்கறவங்க, எதைப் பத்தியும் கவலைப்படாம, தன்னோட எலும்பைக்கூட கொடுப்பாங்களாம்.. அதாவது தங்களோட உடலையும் உசிரையும் கூட!
இதுக்கு மேல இன்னா வோணும்?

"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]

இப்ப, நீ இருக்கே! உன்னிய நான் பாக்கறேன். எதுனால? இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால! அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான்! சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம்! இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத! ஒனக்குப் புரியணுமேன்னுதான் சொல்றேன்!
ஒடம்புக்கு உசிரு எவ்ளோ முக்கியமோ அது மாரி, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அன்போட இருக்கறது!
இதான் ஐயன் சொல்றது!

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு." [74]


இந்த அன்புங்கற விசயம் எப்பிடீன்னா, நீ இன்னாதான் செஞ்சாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாம எப்பவுமே உங்கிட்ட கொஞ்சங்கூடக் குறையாத அளவுல விருப்பமாவே, இது வைச்சுகிட்டு இருக்கறவங்ககிட்டே இருக்கும்.
இப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்!
இதனால இன்னா ஆவுது?
இன்னாடா! இந்தாளைப் போட்டு இப்பிடி தட்டிட்டோமேன்னு என்னிய நினைக்க வைக்குது!
இதுனால, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற நட்பு இன்னமும் உறுதியாவுதில்ல?
அதேதான்!:))

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு." [75]


இப்ப இங்க இருக்கறப்ப முழுசா அன்பு காட்டி நீ இருந்தேன்னா, அதுவே நீ அடுத்த பிறவியிலியும் அன்பாவே இருக்கற மாரி வைச்சு ஒனக்கு பெரிய பெருமையைக் கொடுக்குமாம்!
[சில பேரு இந்த அடுத்த பிறவியை நம்புறாங்கள்ல... அதுல ஐயனும் ஒருத்தருன்றதை நெனைப்புல வைச்சுக்கோ!]

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" [76]

இதுவரைக்கும் சொல்லாத ஒரு விசயத்தை ரொம்ப அசால்ட்டா சொல்றாரு ஐயன் இந்தக் குறள்ல!
அன்புதான் நல்லவங்க அல்லாரும் செய்யற ஒரு தனி சமாச்சாரம்னுதானே இதுவரைக்கும் நீ நினைச்சுகிட்டு இருந்தே!
அப்டியில்லியாம்!
ஒனக்கு ஒருத்தன் கெடுதி பண்றான்னு வைச்சுக்கோ! திருப்பி அவனை அடிக்கணும்னுதானே தோணும்?
அப்டி பண்ணாம அன்பா இருந்து பாரு!
இந்த அன்பு மூலமாவே அது மாரி கெட்டதுக்கும் இந்த அன்பே துணையா இருக்கும்னு ஐயன் சொல்றாரு.


"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." [77]


இவ்ளோ சொல்லியும் இன்னும் நீ இந்த அன்போட மகிமையைப் புரிஞ்சுக்கலியேன்னு இப்ப ஐயன் கொஞ்சம் வேகப்படறாரு! இன்னா சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ!

மண்புழு நெளியுறத நீ பாத்திருக்கேதானே! அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு! இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு! நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது! கொஞ்ச நேரம் களிச்சுப் பத்தியான, காஞ்சு கருவாடாப் போயிருக்கும்!
அது மாரி ஒன்னியப் போட்டு இந்த அறக்கடவுள் வாட்டுவாராம், அன்புன்ற ஒண்ணு ஒங்கிட்ட இல்லாங்காட்டி!

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." [78]


கோவம் இன்னமும் தீரலை ஐயனுக்கு!

இப்பிடி மனசுல அன்பில்லாத ஆளுங்க இந்த ஒலகத்துல சந்தோசமா இருக்கறதுன்றது எப்பிடி இருக்குன்னா, துளிக்கூட தண்ணியே இருக்காத பாலைவனத்துல, ஒரு மரம் நல்லா துளிரு வுட்டு தளைச்சு வளந்திருக்குன்ற மாரியாம்! இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும்! நடக்காத காரியம்ண்றாரு!


"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." [79]

உள்ளுக்குள்ள அன்பு இல்லாத ஆளுங்களுக்கு வெளியில கையி, காலு, கண்ணுன்னு எல்லா உறுப்புகளும் ஒயுங்கா இருந்தாலும் அதுனால ஒரு பயனும் இல்லியாம்!

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு." [80]

இவ்ளோ நேரம் சொன்னேனே, இந்த அன்புன்ற ஒண்ணு இருக்கறவங்க ஒடம்புதான் உசிரோட பொருந்தி நிக்கற ஒடம்பாகும்.
மத்த ஒடம்பெல்லாம் சும்மா உள்ள இருக்கற எலும்பை தோலால போத்தி இருக்கற ஒடம்புதான் அப்பிடீன்னு ஐயன் சொல்றாரு!


இதையெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறியா? விசயம் இருக்கு! இன்னிக்கு இன்னா நாளு?
பூம்பாவை திருநாளு! சம்பந்தர் மேல அன்பை வைச்சுகிட்டே செத்துப்போன ஆத்மா! இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா! இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன்! நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால! போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு! அல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு! சரி வா! நாயர் கடையாண்ட போயி டீ, மசால்வடை துன்னுட்டு போலாம்!"
என அன்புடன் என் தோளில் கை போட்டு இழுத்தவாறு சென்றான், மயிலை மன்னார்!
மகிழ்வுடன்.... இல்லை இல்லை!.... அன்புடன் அவனுடன் நானும் நடந்தேன்!
**********************************************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP