Thursday, August 06, 2009

"காட்டுவழிக் காவலன்!"

"காட்டுவழிக் காவலன்!"


பாதை மிகக் கடினம் பக்கதுணை யாருமில்லை
ஆதரவாய்ப் பேசிடவோ அக்கம்பக்கம் யாருமில்லை

காரிருளும் கவிஞ்சாச்சு சூரியனும் மறைஞ்சாச்சு

பறவைகளின் சத்தமெல்லாம் அப்படியே அடங்கியாச்சு

ஆந்தைகள் அலறுவதும் அங்கங்கே கேட்டிருக்கு

மந்தைமாடு அத்தனையும் வீடுவழி போயாச்சு

பாதிவழி வந்திருக்கு மீதிவழி போகணுமே
ஏதுசெய்வேன் யானிங்கே எனவஞ்சி வாடுகையில்

ங்கிருந்தோ வந்தார் என்னப்பா என்றிட்டார்
மங்கிவரும் வேளையிலே செல்வதெங்கே கூறென்றார்

வந்தவனோர் கள்ளனென்று பயத்தாலே கண்மூட

கள்ளனல்ல காவலன்யான் என்னவேணும் சொல்லென்றார்

வழியில்லாக் காடுஇது வந்தவரும் தவறிடுவார்

விழிபார்த்து நடந்தாலும் வழிதப்பிப் போய்விடுவார்

எத்தனையோ பேரிங்கே இன்னமும் அலைந்திருக்க

நீயுமதில் ஒருவனாகப் போய்விடவோ சொல்லென்றார்

நம்பிக்கை மனங்கொண்டு வந்தென்றன் கையைப்பிடி
தும்பிக்கை பகவானின் துணையிருக்கும் பாரென்றார்

காட்டுவழி செல்கையிலே காலநேரம் பார்க்கவேணும்

கூட்டுவார் துணையின்றிச் செல்லுதலும் இயலாதென்றார்
அன்போடு அவர்சொன்ன மொழியங்கே எனைத்தேற்ற

அவர்தந்த கோல்பற்றி அவருடனே நடந்திட்டேன்

வழிதெரிந்த பளிங்கரைப்போல் விறுவிறுவென நடந்திட்டார்

மொழியேதும் பேசாது அவர்பின்னே யான் சென்றேன்

மணித்துளிகள் நினைவில்லை களைப்பெதுவும் தெரியவில்லை

துணிச்சலுடன் அவர்சொன்ன வழியினிலே நான் சென்றேன்

நேரம்சற்றுச் செல்லச்செல்ல வழியெல்லாம் தெளிவாச்சு

தூரம் ஏதும் தெரியாமல் நடைப்பயணம் எளிதாச்சு
வழிகாட்டும் துணையிருக்க வழியினிலே ஏதுபயம்

விழிதிறந்த பின்னாலே காட்சிக்கும் ஏது தடை!

ஒவ்வொருவர் வாழ்வினிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும்

அவரவரை வழிகாட்ட ஒருவரிங்கே வந்திடுவார்

சரியான துணையெதுவென சட்டென்று புரிந்துவிடும்

அறியாமை நீங்கிடவே அவர் எமக்குத் துணையிருப்பார்

நல்லதோர் குருநாதன் வரும்வரையில் காத்திருந்தால்

நம்பிக்கை கைகொண்டு நாமவரைத் தேடிநின்றால்

தானாக வந்திடுவார் தயவுடனே காத்திடுவார்

ஏனென்ற கேள்விக்கெல்லாம் விடையாக அருள்புரிவார்!


"குருவடி சரணம்! குருவே சரணம்!"

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP