Wednesday, January 17, 2007

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

திருவெம்பாவைப் பதிவொன்றில், "ஷைலஜா" அவர்கள் சேந்தன் கதை பற்றிக் கேட்டிருந்தார்.
நானும், திருவெம்பாவையை முழுதும் இட்ட பின்னர் போடுவதாக வாக்களித்திருந்தேன்!

இப்போது அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்
!

பன்னிரு திருமுறைகளால் ஆன தேவாரத்தில், ஒன்பதாம் திருமுறை "திருவிசைப்பா" என வழங்கும் தித்திக்கும் தேமதுரத் தெய்வீகப் பாடல்கள்!
ஒன்பது அடியவர்கள் இதனைப் பாடியிருக்கின்றனர் இத்திருமுறையில்.
இதில் இரண்டாம் அடுக்கில் இருக்கும் பாடல்களின் சொந்தக்காரர்தான் நமது சேந்தனார்.

இவரைப் பற்றிச் சொல்லப்புகுமுன், நீங்கள் நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த பெயரான பட்டினத்தாரைப் பற்றிய கதையையும் சற்று அறிந்து கொள்ள வேண்டும்!
ஏனெனில்,
பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாய் இருந்தவர்தான் சேந்தனார்!

பட்டினத்தாரின் இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் ஒரு பெரிய செல்வந்தராக வாழ்ந்து வருகையில், தனக்குப் பிள்ளை இல்லையே என ஏங்க,
இறைவன் அவருக்கு ஒரு ஆண்மகவை அருள,
அவன் இளவயதில் வியாபாரத்துறையில் ஈடுபாடில்லாமல் இருக்கிறானே என தந்தை வருந்த,
பொருளீட்ட கடல் கடந்து கப்பலில் தன் மகனை அனுப்ப,
கொள்ளையர் நடுக்கடலில் மற்றெல்லாரின் எல்லா செல்வத்தையும் கவர்ந்து செல்ல,
இந்த தெய்வப்பிள்ளை மட்டும் வரட்டி மூட்டைகளாக,
தான் சம்பாதித்தது எனச் சொல்லி சாக்கு மூட்டைகளை வீட்டில் அடுக்க,
தந்தை திருவெண்காடர் மகனைக் கடிந்து கொள்ள,
ஓர் ஓலையைத் தந்தை கையில் அளித்து மகவு மறைய,
உள்ளே சென்று வரட்டிகளை உடைத்துப் பார்க்கையில்,
அவற்றினுள் நவமணிகளும் நிறைந்திருக்க,
வெளியே வந்து மகனைத் தேடி அரற்ற,
மகன் தந்த ஓலை நினைவுக்கு வர,
அதனைப் பிரித்துப் படிக்க,
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"
என அதில் எழுதியிருப்பதைக் கண்டு,
அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,
அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து,
"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு"
எனச் சொல்லி துறவறம் மேற்கொண்டது தான்,
சுருக்கமாக பட்டினத்தார் கதை!

இந்த சேந்தன் அப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களை, முதலாளிக்குத் துரோகம் இழைக்காமல் காப்பாற்றி வரும் வேளையில், அவர் இட்ட கட்டளைப்படியே, கருவூலத்தை ஏழைகளுக்கென திறந்து விடுகிறார்.
செல்வம் போய்விடுமே என்ற அச்சத்தில், திருவெண்காடரின் உறவினர்கள், சோழ மன்னரிடம், இல்லாது பொல்லாது எல்லாம் சொல்லி, சேந்தனார் சிறையில் தள்ளப்படுகிறார்!

சிலகாலம் சென்று, ஒற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரிடம், சேந்தனாரின் மனைவி, மக்கள் சென்று நடந்ததைக் கூறி முறையிட, பட்டினத்தார் இறைவனை வேண்டுகிறார். சேந்தனாரும் விடுவிக்கப் படுகிறார்!

பட்டினத்தாரின் காலடியில் வந்து விழும் சேந்தனாரைப் பார்த்து, "நீவிர் சிலகாலம் தில்லை [சிதம்பரம்] சென்று அங்கு விறகு விற்று, இறைவனை வணங்கி, இறையடியார்க்குத் தொண்டு செய்யுமாறு" பணிக்கிறார்.

அவ்வறே, சேந்தனாரும், குருவின் கட்டளையை மனதில் ஏற்று, தில்லைக்கு வந்து, விறகு வெட்டி, அதனை விற்று, தினம் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்து வாழ்ந்து வருகிறார்.
இவரது சைவத்தொண்டினைக் கண்டு மகிழும் ஈசன், அம்பலவாணன், ஒரு நாள் தானே சிவனடியாராக வந்து, சேந்தனார் செய்து படைத்த "களியை" உண்டு மகிழ்கிறார்!
இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், தன் திருமேனி முழுதும் அந்த மிகுதியான "களியை" பூசி மறுநாள் அம்பலத்தில் காட்சி தருகிறார்!

அது மட்டுமா!

சேந்தனார் மேல் தனக்கிருக்கும் கருணையினைக் காட்டுமுகமாக, ஒரு திருவாதிரைத் தேர்த்திருநாள் அன்று, தேரை ஓடமுடியாமல் நிறுத்திவிடுகிறார் நடராசப் பெருமான்!
அனைவரும் என்ன செய்தும் கொஞ்சம் கூட நகரவில்லை தேர்!
சேந்தனார் வருகிறார்!
"திருப்பல்லாண்டு" பாடுகிறார்!
ஓடாத தேர் உருண்டு ஓடத் துவங்குகிறது, யாரும் வடம் இழுக்காமலேயே!!
இப்படியே நிலைக்கு வந்தும் சேர்கிறது!

இப்படி இறைவன் புகழ் பாடி இருந்த சேந்தனார், தில்லையிலிருந்து கிளம்பி, "திருவிடைக்கழி" என்னும் தலத்தை அடைந்து, அங்கு ஒரு மடம் நிறுவி, அங்கிருக்கும் முருகனை[....ஆம்!....தகப்பன்சாமியான முருகனேதான்!...]வழிபட்டு ஒரு நிறைவான தைப்பூச நன்நாளில் இறைவனுடன் சோதியாய்க் கலந்ததாக வரலாறு சொல்லுகிறது.


அந்த ஊர் இப்போது "சேந்தமங்கலம்" என வழங்கப்படுகிறது!

இதுதான் சேந்தன் கதை!

அவர் கண்ட தரிசனத்தை நமக்கும் இந்த "காணும் பொங்கல்" நாளில் அருள இறைவனை வேண்டி, அவன் "திருப்பல்லாண்டு" நாமும் பாடுவோம்!

திருச்சிற்றம்பலம்!

"சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு"
"கோயில் மன்னுக!" [தேரோட்டம் முடித்து கோவிலுக்கு திரும்பு ராஜா!]

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக

னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

சேவிக்க வந்தயன் இந்திரன்

செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக்

குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7

சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12

எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.

-------

திருச்சிற்றம்பலம்


[அருணையாரும், மயிலை மன்னாரும் தினம் வந்தூ கேட்கிறார்கள், "இனி நாங்கள் வரலாம் அல்லவா" என!
இனிமேல் அவர்கள் ராஜ்ஜியம்தான்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP