"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]
"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [10]
"தேவராலும், வேறு எவராலும் நெருங்கவும் முடியா
சிவனை, இப்பூவுலகில் வாழ்ந்திடும் அடியவரோ
மிக எளிதில் அடைதலைக் கண்டு, மண்ணுலகின்
வழியாகவே இவரை அடைதல் கூடும்" என உணர்ந்து
பூதலத்தில் பிறக்காமல் நாட்களை வீணாகக்
கழிக்கிறோமே என ஏங்கி, மீண்டும், மீண்டும்
திருமாலும் இப்பூவுலகில் அவதரித்து வருகின்றார்!
நான்முகனும் அவ்வண்ணமே ஆசைப் படுகின்றார்!
[மீனாகவும், ஆமையாகவும்,வராகமாகவும், வாமனனாகவும்,
நரசிம்மமாகவும், பரசுராமனாகவும், இராமனாகவும்,
பலராமனாகவும், கண்ணனாகவும் ஒன்ப்தவதாரம் எடுத்து
பாரிதனில் மீண்டும் மீண்டும் பிறந்தும், பக்தரை உய்வித்தாலும்,
மீண்டும் ஒருமுரை கல்கியாய் அவதரிக்க
எண்ணம் கொண்டிருப்பதும் இதனாலோ! ]
மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!
திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!
அருஞ்சொற்பொருள்:
புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.
[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]
"திருச்சிற்றம்பலம்"