Monday, March 12, 2007

"திருமுருகாற்றுப்படை"

"திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!

ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.

கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"

எனச் சொல்லி,

ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,

இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"

தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!

என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?

பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.

அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.

"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],

தாளையும்[4],

கையையும் [5], உடையனாகித்

தெய்வயானைக்குக் கணவனாகி[6],

மாலை அசையும் மார்பனாகிக்[11],

காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],

சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],

அவன் தங்குமிடத்துக்கு[[63],

வழியை விரும்பினையாகில்[64],

உன்னுடைய ஆசைப்படியே[65],

இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],

இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],

அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],

அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],

அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],

அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],

அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],

அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],

வெறியாடும் இடங்களிலும்[222],

காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],

இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],

முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],

ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],

கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],

என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],

நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],

நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],

பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],

அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],

தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],

"அஞ்சவேண்டாம் புலவரே[291],

நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],

உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],

அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],

என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.

முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]


"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP