Sunday, October 14, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15



முந்தைய பதிவு இங்கே!


13.



"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]



இரண்டு மாதம் போனது.

"மீனாட்சி பவன்" என்ற இரண்டு மாடி ஓட்டல் ஜங்ஷனுக்குப் பக்கத்தில் புதிதாக எழுந்தது.

மேல்மாடி ஏ/சி செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.

பெட்டிக்கடை இப்போது பெரிதாக விரிவாக்கப் பட்டு, தினசரிப் பத்திரிக்கைகள், கல்கி, குமுதம், விகடன் குங்குமம் என வாரப்பத்திரிக்கைகள்,
எனப் பெரிதாகியது.

ஓட்டலில் எப்போதும் அலை மோதும் கூட்டம்.

இப்படியே தொடர்ந்தால், இன்னும் ஆறு மாதத்தில் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு, ஊர் திரும்பலாம் என கந்தன் முடிவு செய்தான்.

"உனக்கு என்ன வேண்டுமோ, அது எப்போதும் உனக்குத் தெரிய வேண்டும்" பெரியவரின் வாக்கு கேட்டது!

'இங்கு வந்து ஒரு ஆண்டாகியும் இந்தக் கல்லுங்களைக் கேட்க வேண்டிய நிலைமையே வரலை! ஒருவேளை, ஒத்தைக்காசு செலவில்லாம, நாம்
ஒண்ணுமே பண்ணாம, என்கிட்ட இருந்ததைவிட, ரெட்டைப்பங்கு பணக்காரனா ஊரு திரும்பி, முன்னே இருந்ததைவிட அதிகமா ஆடு மாடுங்களை
வாங்கணும்னுதான் விதி இருந்திருக்கோ என்னமோ!' கந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

'ஏங்க! கோவில்ல அம்மனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஒரு பிரார்த்தனை. ஆரைப் பாக்கணும் அதுக்கு?' பதட்டத்துடன் ஒரு யாத்ரீகர் கேட்டார்.

'அதுக்கென்ன! செஞ்சிருலாம்!' எனக் கந்தன் சொன்னான்.

கடை ஆள் ஒருவனை அழைத்தான். ' ஐயாவைக் கூட்டிகிட்டுப் போயி, அவருக்கு வேணும்ன்றதைச் செஞ்சு கொடு' என அனுப்பிவைத்தான்.

அவர் சந்தோஷமாகத் திரும்பி வந்து கந்தன் கையில் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து, அவனைப் பாராட்டிச் சென்றார்.

'இங்க வர்றவங்களுக்கு நாம் தேவையான வசதி செஞ்சு கொடுக்கணும்.'நம்ம லாட்ஜுக்கு வர்றவங்களுக்கு, திரும்பிப் போறவரைக்கும் எல்லா
வசதியும் செஞ்சு கொடுக்கணும்.' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

2 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை! கந்தன் கண் விழித்தான்.

பெட்டியில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்!

'அம்பது ஆடு வாங்கலாம். பத்து எருமை மாடுகூட வாங்கலாம். அவ்ளோ பணம் சேர்ந்திருக்கு.' என நினைத்தான்.

அண்ணாச்சி எழுந்து வந்து ஒரு பீடி பத்த வைத்தார்.

இவனைப் பார்த்தார்.

'என்ன இன்னிக்கு வெள்ளனவே எளுந்தாச்சு போல! எதுனாச்சும் வேலையா?' என்றார் அன்பாக.

'இன்னிக்கு நான் கிளம்பறேன். ஆடு மாடு வாங்கத் தேவையான பணம் சேந்திருச்சு. நீங்களும் எப்ப வேணும்னாலும் காசிக்குப் போவலாம்.
மாணிக்கம் இப்ப நல்லாவே தேறிட்டான். கடையப் பாத்துக்குவான்' என்றான் கந்தன்.

அண்ணாச்சி ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தார்.

'எனக்கு ஆசி சொல்லி அனுப்புங்க! நீங்க இல்லேன்னா, நான் என்ன பண்ணியிருப்பேன்னே தெரியாது!' எனக் கலங்கினான் கந்தன்.

'நாந்தேன் உனக்கு நன்றி சொல்லணும். என்னையே எனக்குப் புரிய வெச்சவன் நீ! ஒனக்கே தெரியும்... நா காசிக்கெல்லாம்
போவப் போறதில்லன்னு! என் காலம் இங்கியே இந்த மதுரைலதான்! அதேமாரி, நீயும் ஆடு மாடெல்லாம் வாங்கப் போறதில்லைன்னும்
எனக்குத் தெரியும்'
என்றார் அண்ணாச்சி!

'ஆரு சொன்னாங்க உங்களுக்கு?' என ஆச்சரியத்துடன் வினவினான்.

'ம்ம்ம்!...ஒரு ராசா கனவுல வந்து சொன்னாரு' எனச் சிரித்தார் அண்ணாச்சி!

தன் கண்கள் கலங்குவதைக் கந்தன் பாராத வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்!
***********

கந்தன் தன் துணிமணிகளை ஒரு பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

ஒரு மூலையில் கிடந்த பழைய துணிப்பை அவன் கண்களில் பட்டது!

ஆவலோடு அதை எடுத்துப் பிரித்தான்.

உள்ளே ஒரு பழைய வேட்டியும்.... ஒரு கசங்கிய துண்டில் சுற்றி வைத்திருந்த இரண்டு கற்களும்!!!

பெரியவர் கொடுத்த கருப்பு வெள்ளைக் கற்கள்!

இத்தனை நாட்களாய் மறந்தே போயிருந்தான் இந்தக் கற்களை!

'உன் கனவை ஒரு நாளும் மறக்காதே' பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'கனவா? எல்லாம் கனவாவேப் போச்சு! எங்கேருந்து வந்தேனோ, அங்கியே திரும்பவும் போகப் போறேன். இந்தக் கல்லுங்களை
தெருவுல ஆருக்காச்சும் கொடுத்திறணும்' என முடிவெடுத்து மீண்டும் அவைகளை ஒரு முறை பார்த்தான்.

......"நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."....... கிழவர் சொன்னது காதில் கேட்டது.


'ஆமா! உன் ஆடுங்களை வித்து வர்ற பணத்தை ஒர்த்தன் திருடிட்டு போயிருவான். சோறு போட ஒர்த்தன் வருவான். அவனோட சேர்ந்து
நீ பெரிய ஆளா வருவே! முன்னே இருந்த ஆடுங்களை விட இன்னும் அதிகமா வாங்கற அளவுக்குப்
பணம் கிடைக்கும்னு கூடத்தான் அவரு சொல்லலை!' என்று முணுமுணுத்தான்!

'எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி!' என்றபடியே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

அண்ணாச்சியைப் பார்த்தான்.

யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருந்தார்!

அவரைப் பார்த்ததும், ஏனோ பெரியவரின் நினைவு வந்தது கந்தனுக்கு!

........"அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.
அவனுக்கா ஒரே கோவம்!
வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.
சிப்பி உடைஞ்சுது.
உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!
இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!
இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றர் கிழவரின் சொற்கள் மனதில் கேட்டது!

அண்ணாச்சியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியில் வந்தான்.

இன்னுமொரு முறை பார்த்தால், அழுது விடுவொமெனத் தோன்றியது அவனுக்கு.

திரும்பி, மீனாட்சி பவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்!

இதையெல்லாம் விட்டுப் போகிறோமே எனத் துக்கமாக வந்தது!

'இப்ப எங்கே போகப் போறேன்? நான் பொறந்து வளர்ந்த எடத்துக்குத்தானே! மறுபடியும் ஆடு மாடுங்களை மேய்ச்சுகிட்டு!'
ஒரு தீர்மானத்துடன் நடந்தான்.

ஆனால், மனதில் ஒரு திருப்தி இல்லை!

'எதுக்காவ வந்தேனோ, அது நடக்கலை. அண்ணாச்சி காசிக்குப் போகப் போறதில்லைன்ற மாரி, நானும் புதையலைப் பாக்கப் போறதுஇல்லை!'

யோசித்துக் கொண்டே நடந்தவன் மீது எவனோ மோதினான்!!



[தொடரும்]
*******************************


அடுத்த அத்தியாயம்

22 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் Monday, October 15, 2007 10:39:00 PM  

'இங்கே எல்லாரும்' அவசரப்படுத்தினதும் 'சட்'னு கிளம்பியாச்சா கந்தன்?

VSK Monday, October 15, 2007 11:17:00 PM  

அப்படியெல்லாம் இல்லை டீச்சர்!

கதையை அதன் ஓட்டத்திலேயேதான் செலுத்த நினைக்கிறேன்.

இங்கு நடந்த நிகழ்வுகள் சுருக்கமாக இருந்தால் போதும் என நினைத்தேன்.

எனக்கும் அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற ஆவல்தான்!
:))

இலவசக்கொத்தனார் Monday, October 15, 2007 11:34:00 PM  

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? அப்படின்னு கவிஞர் கேட்டார். ஆனா நம்ம கந்தன் அதுதான் தன் வழின்னு கிளம்பறானே!! அடுத்து என்ன நடக்கப் போகுதோ!!

VSK Monday, October 15, 2007 11:42:00 PM  

//அடுத்து என்ன நடக்கப் போகுதோ!!//

நாளை பார்க்கலாம்!

திமிறாமப் போறான் கந்தன்.

திமிரோடு போகலை!

அதுவரைக்கும் சந்தோஷப் படுங்க சாமி! :))

வடுவூர் குமார் Monday, October 15, 2007 11:45:00 PM  

எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி
இங்குள்ள வாழ்கை, அப்படித்தானே?

Subbiah Veerappan Monday, October 15, 2007 11:47:00 PM  

வந்துட்டேன்....!!!!
VSK சார் ஒருவாரமாக கடுமையான வேளைப் பளு.
உங்கள் பதிவுகளை உடனுக்குடன் படிக்க முடியவில்லை!
விட்டுப்போன பதிவுகளைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

VSK Tuesday, October 16, 2007 12:16:00 AM  

//இங்குள்ள வாழ்கை, அப்படித்தானே?//

இது புரியத்தான் இதெல்லாம் நடக்குதோ என்னமோ!

சரியான பாயிண்ட்டைப் பிடிச்சு சொல்லிகிட்டே வரீங்க!

:)

VSK Tuesday, October 16, 2007 12:18:00 AM  

//விட்டுப்போன பதிவுகளைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!//

பொறுமையாப் படிச்சிட்டு வாங்க்க ஆசானே!

ஆனா, சீக்கிரமா வந்திடுங்க!

அப்படியே உங்க சிபியாருகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க!
:))

மங்களூர் சிவா Tuesday, October 16, 2007 1:09:00 AM  

//
யோசித்துக் கொண்டே நடந்தவன் மீது எவனோ மோதினான்!!
//
நல்ல வேளை லாரி பஸ் எதுலயும் இல்லை.
:-)))

எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி

நல்ல தத்துவம்

நாகை சிவா Tuesday, October 16, 2007 1:50:00 AM  

விதி வழியது... அது நினைப்பதை நம் மூலம் நடத்தி விட்டு தானே விடும்... மோதியது விதியின் மீது தான் இருக்கும்... :)

வல்லிசிம்ஹன் Tuesday, October 16, 2007 6:58:00 AM  

@துளசி நாம அவசரப் படுத்தி என்ன வேலை நடந்து இருக்கு:))))

விஎஸ்கெ சார், ரொம்ப சுருக்கமாப் போச்சே இந்த அத்தியாயம்!!!!

VSK Tuesday, October 16, 2007 8:55:00 AM  

//நல்ல வேளை லாரி பஸ் எதுலயும் இல்லை.
:-)))

எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி

நல்ல தத்துவம்//


என்னங்க! கதையை சீக்கிரம் முடிக்கப் பாக்கறீங்களே திரு. ம. சிவா!!
:))

VSK Tuesday, October 16, 2007 8:57:00 AM  

//மோதியது விதியின் மீது தான் இருக்கும்... :)//


விதிப்படிதான் எல்லாமே நடந்தாலும், நம்ம உள்மனசு சொல்றதையும் கேட்டா கொஞ்சம் தப்பிக்கலாம்னு நினைக்கிறேன், நாகைப்புலியாரே!

VSK Tuesday, October 16, 2007 9:00:00 AM  

//@துளசி நாம அவசரப் படுத்தி என்ன வேலை நடந்து இருக்கு:))))

விஎஸ்கெ சார், ரொம்ப சுருக்கமாப் போச்சே இந்த அத்தியாயம்!!!!//


டீச்சருக்கு அப்படி ஒரு பதில் சொல்லிட்டு, எனக்கு ஒரு சின்ன குட்டு வைச்சிட்டீங்களே வல்லியம்மா!

இங்கு நடந்ததை இன்னும் ஒரு ஒரு வாரத்துக்கு இழுத்திருக்கலாம்தான்.

ஆனால், முக்கியக் கதையுடன் இது ஒன்றாது, தேவையில்லை என நினைத்தேன்.


அதான் சொன்னேனே, மெகா சீரியல் மாதிரில்லாம் இழுக்க மாட்டேன்னு!
:))

G.Ragavan Saturday, October 20, 2007 4:36:00 AM  

அடடா! என்ன வளர்ச்சி. அருமையான வளர்ச்சி. உழைப்பு உயர்வு தருங்குறது சரிதான்.

cheena (சீனா) Saturday, October 20, 2007 4:48:00 AM  

ம்ம்ம்ம் கந்தனைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. புதையலைத் தேடி சென்னை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை விட்டு தடம் மாறிச் செல்கிறான். தொடர்ந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று

VSK Saturday, October 20, 2007 5:38:00 PM  

//அடடா! என்ன வளர்ச்சி. அருமையான வளர்ச்சி. உழைப்பு உயர்வு தருங்குறது சரிதான்.//

முழுமனசோட ஒரு காரியத்துல ஈடுபட்டா கண்டிப்பா பலன் தரும் ஜி.ரா.

VSK Saturday, October 20, 2007 5:41:00 PM  

//நோக்கத்தை விட்டு தடம் மாறிச் செல்கிறான்//

தொடங்கிய காரியம் சுணங்கிப் போய், மீண்டும் தொடங்கும் போது, முதலில் இருந்த வேகம் உடனேயே இருக்காது!
அதுதான் இப்ப வாத்தியார் சொன்னதை நினைச்சுகிட்டு கிளம்பறான்.. ஊர் ஊரா!

குமரன் (Kumaran) Sunday, November 11, 2007 6:56:00 PM  

அதுக்குள்ள எங்க ஊரை விட்டு கிளப்பியாச்சா? இது சரியா? இது முறையா? ஓ மீனாட்சி பவனை விட்டுத் தான் கிளம்பியிருக்காரு இன்னும் எங்க ஊரை விட்டு கிளம்பலை. :-)

VSK Sunday, November 11, 2007 7:21:00 PM  

நீளமா சொல்ல ஆசைதான்.

இதுக்கே எல்லாரும் கத்தறாங்க குமரன்!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP