"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]
"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]
[மழை வந்ததும் இன்னொரு ஆசை பிறக்கிறது இப்பெண்டிருக்கு! பூம்புனலில் பாய்ந்து நீரில் துழாவி,அடிப்பக்கம் வரை செல்ல! மேலே வெளிச்சம்; கீழே இருள்! இடையினில் இரண்டும் கலந்த ஒரு தோற்றம்! கற்பனைச் சிறகு விரிந்து பறக்கிறது! இறைவனை இம்மூன்றாகவும் பாடி மகிழ்கின்றனர்!
எங்கும் இறைவன்! எதிலும் இறைவன்! என்னே இவர் மாண்பு!]
இத் திருவாதிரைத் திருநாளில் நாமும் அவன் கழலடி பணிவோம்!!
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18
திருவண்ணாமலையினிலே நம் இறைவன்
பேரொளிப் பிழம்பாய் நிற்கின்றான்!
அவன் திருவடித் தாமரை பணிந்து
வணங்கிடும் விண்ணவரின் மகுடங்களில்
விளங்கிடும் அணிமணி வைரங்கள்
எம்பிரானின் திருவடிப் பேரொளிமுன்
ஒளியிழந்து, தம் பெருமை இழந்து
மங்கித் திரிதல் போல,
காரிருள் நீங்கிடும் வண்ணம்
கதிரவன் எழுந்ததும் இங்கே
விண்மீன்கள் எனும் தாரகைகள்
தம் ஒளியிழந்து மறைந்தன!
பொழுதும் விடிந்து விட்டது!
பெண்ணென்றால் பெண் எனவும்,
ஆண் என்றால் ஆண் எனவும்,
இரண்டுமற்ற அலி எனவும்
அவன் இங்கே விளங்கிடுவான்!
[எப்படி இது சாத்தியமெனின்],
இடையறாது ஒளிவீசும் ஆதவனும்
வெண்மதியும், ஒளிர்தாரகையும்
விளங்கிடும் வானம் போலவும்,
அவற்றால் பயன்பெறும் நிலம் போலவும்,
இவை இரண்டிற்கும் வேறான அனைத்துமாகவும்
விளங்கி நின்று, நம் கண் முன்னே
காட்சி தரும் நிறையமுதமாகவும்
நிற்கின்ற, எம் தலைவனின் கழல் பூண்ட
திருவடிகளினைப் பாடிப் பாடி
மலர் நிறைந்து விளங்குகின்ற
இந்த நீரினில் நீயும் மேலும் கீழும்
பாய்ந்து ஆடடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.