Tuesday, April 24, 2007

"முன்னமொரு காலத்திலே!"


"முன்னமொரு காலத்திலே!"

அது ஒரு பெரிய காடு!

மணம் பொருந்திய காடு!

காட்டில் மரங்கள் உண்டு!

செடிகொடிகள் உண்டு!

சிங்கம், புலி, கரடி, ஓநாய், யானை, மான், எருது எனப் பல மிருகங்கள் உண்டு!

சிங்காரப் பறவைகளும் உண்டு!

அழகிய ஓடைகள் அங்குமிங்குமாய் குதித்தோடும்.

வவ்வால்கள் தலைகீழாய்த் தொங்கும் ஒரு சில மரக்கிளைகளில்!

அவ்வப்போது வேட்டைக்காரர்கள் வந்து சில தோட்டாக்களை வீசிச் செல்வார்கள்.

இத்தனையையும் தாண்டி, அங்கு இதமான காற்று வீசிக்கொண்டுதான் இருந்தது.

பறவைகள் காலையில் கீசுகீசுசென்று பேச்சரவம் பேசிக்கொண்டிருந்தன.

மிருகங்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

புலிகள் பசியெடுக்கும் போது, ஒரு மான் அல்லது எருமைக் கூட்டத்தைப் பார்க்கும்.

தனக்குத் தேவையான இரையைக் கவ்விக் கொல்லும்.

சிங்கம்... பெண்சிங்கம்... இரையைக் கொண்டுவர, ஆண்சிங்கங்கள் அதனை உண்டு பசியாறும்.

யானைகள் கூட்டங்கூட்டமாகச் சென்று இலை, தழைகளை உண்டு, ஓடையில் நீர் பருகிப் பசியாறும்.

மான்கள் மருண்டு பார்க்கும்.... எங்கேனும் வல்லிய மிருகங்கள் இருக்கின்றனவா என்று!

கண்டதும், வெருண்டு ஓடும்.

காடு நன்றாகவே இருந்தது!

ஒரு சில நரிகள் வந்தன காட்டுக்குள்!

இந்த அமைதியான காட்டைப் பார்த்ததும், மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது அவைகளுக்கு!

இந்த அமைதியைக் குலைத்து, அலங்கோலம் பண்ண எண்ணியன அவை!

யானையிடம் சென்று, புலியைப் பற்றி, .....சிங்கத்திடம் சென்று, காட்டெலியைப் பற்றி, .....கழுகிடம் சென்று, குருவியைப் பற்றி...... தப்புத் தப்பாக, ......இல்லாதது, பொல்லாதது எல்லாம் பேச ஆரம்பித்தன.

காட்டின் அமைதி குலைந்தது!

ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தன.

திடீர் திடீரெனத் தாக்குதல்கள் தொடங்க ஆரம்பித்தன.

எவர் எவரைத் தாக்குகிறார்கள் என எவருக்கும் தெரியவில்லை.

இதுவா, அதுவா எனத் தெரியாமல் எல்லா ஜீவராசிகளும் திகைத்தன.

ஓடைகள் வறண்டன.

மலர்கள் மலர மறந்தன.

வண்டுகளின் ஓட்டம் குறைந்தது.

காடு மணம் இழந்தது.

இது தீர என்ன வழி?

நரிகளை முதலில் துரத்துவோம் என சில மிருகங்களும், பறவைகளும் முடிவெடுத்தன.

நரிகளைப் பற்றிக் கவலைப் படாமல் அவரவர் வேலையை முன் போல் தொடரலாமே எனச் சில ஆலோசனை சொன்னன!

முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!

காடு மீண்டும் தன் மணத்தைப் பெறுமா?

காலம் பதில் சொல்லும்!



Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP