Thursday, August 03, 2006

கூடா நட்பு!

கூடா நட்பு!


அனைவருக்கும் நட்பு வார வாழ்த்துகள்!

நட்பைப் பற்றி நண்பர் சிறில் ஒரு அருமையான பதிவிட்டிருந்தார்.
http://theyn.blogspot.com/2006/08/blog-post_03.html

அதைப் பார்த்ததும், கூடாநட்பைப் பற்றி ஐயன் சொன்னதை இங்கு போட்டிருக்கிறேன்!

விளக்கம் என்னவென்று என் நண்பன் மயிலை மன்னாரைக் கேட்ட போது அவன் உதிர்த்த முத்துகள் அடைப்புக்குறிக்குள்!!

கூடா நட்பு! [அதிகாரம் 83]

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. [821]


[நல்லா பதமா பழுத்த இரும்பை கரீட்டா அந்தக் கல்லுல அடிக்கற மாதிரி, மன்சுல வஞ்சம் வெச்சுக்கிட்டு வெளில ஃப்ரெண்டு மாரி இருக்கறவன் நட்பு, சமயம் பாத்து நம்மை அடிச்சுரும். உசாரா இருக்கணும்!
நம்ம வைகோவைக் கேட்டுப்பாரு, எப்பிடீன்னு சொல்லுவாரு!]

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [822
]

[உள்ளே ஒண்ணு, வெளில ஒண்ணுன்னு சினேகம் பண்றது வேசி உம்மேல காதல்னு சொல்ற மாரிதான்.
நம்ம தந்திரியக் கேட்டா இன்னும் விளக்கமா சொல்வாரு!]

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது. [823]


[உள்ளுக்குள்ள சுத்தமா இல்லைன்னா, நீ எத்தினி பொஸ்தவம் படிச்சாலும், உன்னால நல்ல மன்சோட பளக முடியாது.]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். [824]


[உள்ளுக்குள்ளார கெருவம் வெச்சுக்கிட்டு, வெளில சிரிக்கறவனைப் பாத்தா பய்ந்து ஓடியே பூடு!]

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. [825
]

[மெய்யாவுமே உம்மேல நட்பா இல்லாதவன் சொல்றான்னு எந்த ஒரு காரியத்திலியும் எறங்காதே!]

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். [826]


[ஒன் எதிரி இன்னாதான் நைச்சியமாப் பேசினாலும், அதெல்லாம் ஆவாத கதைன்னு வெரசலாவே தெரிஞ்சுரும்!]

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். [827]


[வில்லு வளையறது ஒம்மேல அம்பு எறியறதுக்குத்தான்! அதுபோல, ஒன் எதிரி வளைஞ்சு 'அண்ணே, வணக்கம்'னு சொல்றது ஒன் காலை வார்றதுகுத்தான்னு புரிஞ்சுக்கோ!]

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. [828]


[அதே ஆளு, [827-ல சொன்ன அதே ஆளு,] கையக் கூப்பி வணக்கம்னு சொல்றப்போ, அதுக்குள்ளே ஒரு கத்தி வெச்சுருப்பான்! அவன் அளுது கண்ணிரு வுடறது கூட அத்தே மாரித்தான். நம்பிராதே!]

மிகச்செய்து தம் எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. [829]


[ஒங்கிட்ட மூஞ்சில சிரிப்பக் காட்டிக்கினு, உள்ளார பொருமிக்கிட்டு இருக்கறவன்ட்ட, நீயும் அதே மாரி, சிரிச்சுக்கினே, அதே சமயம் உள்ளார அவன் இன்னார்னு கவனம் வெச்சுக்கோ!]

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். [830]


[அதேக்காண்டி, அவனோட நட்பா இருக்கணும்னு ஒரு நேரம் வந்துச்சின்னா, பொறத்தால மட்டும் ஃப்ரெண்டா இரு! மன்சை அவன்ட வுட்டுறாதே!]

நா வர்ட்டா! அப்பால பாக்கலாம்! எதுனாச்சும் டவுட்டு வந்திச்சின்னா கூப்ட்டனுப்பு! சரியா!


[பி.கு.: இதுபோல வேறொரு அதிகாரத்தை எடுத்து ஒருவர் தொடரலாமே, அவருக்குப் பிடித்த பாணியில்!
திருக்குறளும் படித்த மாதிரி இருக்கும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP