"உந்தீ பற!" -- 35
"உந்தீ பற!" -- 35

'பகவான் ரமணரின் திருவுந்தியார்'
[முந்தைய பதிவு]
"வாழ்த்து"
[திரு. முருகனார் எழுதியது]
[வழக்கம்போல், இந்தப் பாடல்களையும் பதம் பிரித்துத் தந்திருக்கிறேன். படித்தாலே எளிதாகப் புரியும் பாடல்கள் இவை. எனவே விளக்கம் தவிர்த்திருக்கிறேன். நன்றி.]
இருடிக ளெல்லா மிறைவனடியை
வருடி வணங்கின ருந்தீபற
வாழ்த்து முழங்கின ருந்தீபற. [1]
உற்றார்க் குறுதி யுபதேச வுந்தியார்
சொற்ற குருபர நுந்தீபற
சுமங்கள வேங்கடனுந்தீபற. [2]
பல்லாண்டு பல்லாண்டு பற்பன்னூ றாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு முந்தீபற
பார்மிசை வாழ்கவே யுந்தீபற. [3]
இசையெடுப் போருஞ் செவிமடுப் போரும்
வசையறத் தேர்வோரு முந்தீபற
வாழி பலவூழி யுந்தீபற. [4]
கற்கு மவர்களுங் கற்றுணர்ந் தாங்குத்தா
நிற்கு மவர்களு முந்தீபற
நீடூழி வாழியே யுந்தீபற. [5]
இருடிகள் எல்லாம் இறைவன் அடியை
வருடி வணங்கினர் உந்தீ பற
வாழ்த்து முழங்கினர் உந்தீ பற. [1]
உற்றார்க்கு உறுதி உபதேச உந்தியார்
சொற்ற [சொல்லிய] குருபரன் உந்தீ பற
சுமங்கள வேங்கடன் [பகவான் ரமணரின் இயற்பெயர்] உந்தீ பற. [2]
பல்லாண்டு பல்லாண்டு பல பன்னூறு ஆயிரம்
பல்லாண்டு பல்லாண்டும் உந்தீ பற
பார்மிசை வாழ்கவே உந்தீபற. [3]
இசையெடுப்போரும் செவிமடுப்போரும்
வசையறத் [குற்றமில்லாமல்] தேர்வோரும் உந்தீ பற
வாழி பல ஊழி உந்தீ பற. [4]
கற்கும் அவர்களும் கற்று உணர்ந்து ஆங்கு தா[ம்]
நிற்கும் அவர்களும் உந்தீ பற
நீடூழி வாழியே உந்தீ பற. [5]
******************************
“நிறைவுரை”
"அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை
தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை"
'மாரியம்மன் தாலாட்டு' என்னும் தோத்திரப் பாடலில் மேற்கூறிய வரிகள் வரும்.
அதுதான் என் நிலையும்!
இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களை முறையாகப் பயின்றவன் அல்லேன் நான்! அப்படி இருந்தும், இதனை எழுதப் புகுந்தது குருவருளாலேயே !
தெய்வாதீனமாக ரமணரின் பாடல் தொகுப்பு எனக்குக் கிடைக்கப் பெற்றதும், அதில் இந்த குறிப்பிட்ட 'திருவுந்தியார்' என் மனதைத் தொட்டதும் அவனருளாலே!
விமானத்தில் சென்னை செல்லுகையில், இன்னும் சற்று ஆழ்ந்து படிக்க முறபட்டபோது, மனதில் பட்ட கருத்துகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில், எட்டு வரிக் கவிதைகளாக எழுத முற்பட்டேன். [அவையே ஒவ்வொரு பாடலுக்கு அடியிலும் இட்டிருக்கும் 8 வரிகள்!]
சென்னை சென்ற மறுநாளே நான் மிகவும் வணங்கும் இறையன்பரைச் சந்திக்க காண நேர்ந்தபோது, அவர் கூறிய பல கருத்துகள், இந்நூலில் சொல்லியதற்கான மேல்விளக்கம் போல அமைந்தது கண்டு நெகிழ்ந்து போனேன்.
திரும்பி வந்ததும் இதனை அப்படியே போடலாம் என நினைத்து, முதல் பதிவையும் இட்ட நிலையில், எனது நண்பர் ஒருவர் [மங்களூரைச் சேர்ந்தவர் இவர்!] என்னை அழைத்தார்.
அவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அது எனக்குப் பயன்படும் எனத் தான் நினைப்பதாகவும் கூறியதோடு அல்லாமல், அன்று மாலையே என் வீட்டிற்கு வந்து அதைத் தந்துவிட்டும் போனார்.
பகவான் ரமணர் எழுதிய 'உபதேச சாரா' என்னும் வடமொழி நூலின் ஆங்கில உரைவிளக்கம் அது! திரு. தேஜோமயானந்தா அவர்கள் எழுதியது! புரட்டிப் பார்த்தவுடன், முதல் இரு பாடல்களிலேயே புரிந்தது, இது 'உபதேச உந்தியாரின் வடமொழி ஆக்கம்' என!
என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
குருவருள் தேடிவந்து, நான் எழுத நினைத்ததற்கு ஆசியும், வழிகாட்டலும் அளித்ததாக நம்புகிறேன். இதில் அவர் கருணையின்றி வேறேதும் இல்லை!
அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விளக்கம், கிட்டத்தட்ட நான் எழுதிவைத்திருந்த பாடல்களுடன் ஒத்திருந்தது இன்னொரு ஆச்சரியமான விஷயம்.
முழுத் தெம்புடன் எழுதி முடித்து, இங்கு பதிந்து முடிக்கும் இந்நேரத்தில்,.... சமயத்தில் வந்து அருளிய அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"மலையளவு நூலறிவு இருப்பினும், கூடவே கடுகளவாவது பயிற்சியும் நிகழ்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்" என நான் வணங்கும் அந்த இறையன்பர் சொன்னதை இந்த நேரத்தில் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு,
இங்கு நான் எழுதியதில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பின், அவற்றுக்கு முழுப் பொறுப்பும் என் அறியாமையே காரணம் எனச் சொல்லி, அனைவரையும் வணங்கி இதனை இத்துடன் முடிக்கிறேன்.
அனைவர்க்கும் பகவான் ரமணரின் திருவருள் சித்திக்க வேண்டுகிறேன்.
நன்றி! வணக்கம்!
"நன்றாக குரு வாழ்க!"

**************************