"ஆறு மனமே ஆறு!"
ஆறு மனமே ஆறு!
ஆறு மனமே ஆறு!--அந்த
சுகாவின் கட்டளை பாரு!
ஆறுமுகன் சோதரனாம்
ஆனைமுகன் அருளாலே
ஆருக்கும் தெரியாத
ஆறு நிகழ்வுகள் கேளு!
"ஆறு"தல் அளித்த ஆறு!
1. நினைவறியாக் காலத்தே
நினைவாகத் தான் வந்து
நித்தமெனைத் தாலாட்டி
நித்திரையில் ஆழ்த்திவைத்து
நிலாச்சோறு காட்டி எனை
நேசமுடன் வளர்த்த தாய்!
2. நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!
3. சாயாமல், சரியாமல்
பாய்கின்ற மனத்தினையே
பேயாகிப் போகாமல்
தாயாக தந்தையாக
நேயனாகத் துணை வந்த
சாயிபாபாவுக்கு வந்தனம்!
4. காலத்தின் கோலத்தால்
பாழாகவிருந்தவெனை
மாளாத் துயரினின்று
மீளச்செய்து வழிகாட்டி
காலமெல்லாம் களிப்புடனே
வாழச்செய்த என் மனையாள்!
5. நன்மக்கட்பேறே நலமென்று
மண்மகனாம் வள்ளுவனும்
அன்றே சொல்லியதுபோல்
இன்பத்தை நான் சுவைக்க
இன்றெனெக்கு வாய்த்திட்ட
நன்மக்கள் நான்கு பேர்!
6. தாயகம் தாண்டி
தனிவழியே வந்தவெனை
தயங்காமல் தாங்கிக்கொண்ட
அயல்நாட்டு மண்ணின்
பெயரறியாப் பல மனிதரை
வியந்து ஒரு பெருவணக்கம்!
"ஆறு" பெருமைகள்
1. என் போல இங்கொருவன்
என் தொழிலை எடுத்தாண்டு
என் பேரைச் சொல்லியெனை
இன்பமுறச் செய்யானோ
என எண்ணிய தந்தையின்
மனமகிழ நான் முடித்த
மருத்துவப் படிப்பு!
2. கண்டவர்கள் பலரெனினும்
காமுற்றது சிலரெனினும்
காதலித்ததுஒரு பெண்ணை!
கரம் பிடித்ததும் அவளையே!
களிப்போடு பலகாலம்
கழித்ததுவும் நிறைவன்றோ!
3. பெற்றவர் ஈன்றதோ ஒன்பது பேர்!
மற்றவருக்கிடையே நான் "ஆறாவது"!
நற்றவ வானினும் நனிசிறந்தவரும்
உற்றவரைப் பிரிந்து சென்றதினால்
பெற்றவன் அன்று போனது இந்த
சிற்றவன் மடியினில்! என் சொல்வேன்!
4. செய்யும் தொழிலைச் சிறப்புறச் செய்து
ஐயம் இன்றி அரும்பணி ஆற்றி
வையம் போற்ற வளமுடன் வாழ்ந்து
கையில் வந்ததை பையினில் வைக்காமல்
உய்யும் வழியாய் மற்றவர்க்கீன்று
தெய்வம் நினைந்து வாழ்ந்திடும் வாழ்க்கை!
5. பிறந்த நாட்டிலும்
புகுந்த நாட்டிலும்
பண்ணும் தொழிலைப்
பண்புறச் செய்து
பயனுற வாழும்
பரிமள வாழ்க்கை!
6. ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது
"ஆறு"தல் சொன்ன ஆறு நூலகள்!
1. உலகப் பொதுமறையாம் திருக்குறள்
2. உண்மைக்காட்சியான் கம்பனின் காவியம்
3. உறுதுணையாய்வந்திடும் சித்தார்த்தா
4. உள்ளத்தை அள்ளும் சிலப்பதிகாரம்
5. உசுப்பிவிடும் ஸ்டெயின்பெக்கின் 'தி விண்டெர் ஆஃப் அவர் டிஸ்கண்டென்ட்
6. உன்மத்தமாக்கிடும் ரூமியின் காவியம்
"ஆரது" போறது!
1. பச்சோந்தி
2. முகமூடி
3 மாயவரத்தான்
4. முத்து தமிழினி
5. சிவபாலன்
6. துளசி கோபால்
இவர்கள் அனைவருமே நான் மிக ரசிக்கும், மதிக்கும், விரும்பும் பதிவாளர்கள்!
இன்னும் பலருண்டு!
அவர்களை ஏற்கெனவெ அடுத்தவ்ர்கள் அழைத்துவிட்டார்!
இவர்களின் ஆர்வமும், திறமையும் யாருக்கும் குறைந்ததல்ல1
வருவார்கள் என நம்புகிறேன்.
தனி மடல் அனுப்பி அழைக்க வேண்டுமா எனத் தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்!
பொறுமையுடன் இதுவரை படித்து வந்தீர்களெனில்,......
நன்றி! கோடானு கோடி நன்றி!!